செயற்கு அரும் செயல்




15. செய்தற்கு அரிய செயல்

நீர்மேல் நடக்கலாம்! எட்டியும் தின்னலாம்!
     நெருப்பைநீர் போல் செய்யலாம்!
  நெடியபெரு வேங்கையைக் கட்டியே தழுவலாம்!
     நீள்அர வினைப்பூ ணலாம்!

பார்மீது மணலைச் சமைக்கலாம் சோறெனப்
     பட்சமுட னேஉண்ண லாம்!
  பாணமொடு குண்டுவில கச்செய்ய லாம்! மரப்
     பாவைபே சப்பண் ணலாம்!

ஏர்மேவு காடியும் கடையுற்று வெண்ணெயும்
     எடுக்கலாம்! புத்தி சற்றும்
  இல்லாத மூடர்தம் மனத்தைத் திருப்பவே
     எவருக்கும் முடியாது காண்!

ஆர்மேவு கொன்றைபுனை வேணியா! சுரர்பரவும்
     அமலனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

          இதன் பொருள் ---

     மேவு ஆர் கொன்றை புனை வேணியா --- விரும்பிய ஆத்தி மலரையும் கொன்றை மாலையையும் புனைந்துள்ள சடைமுடியை உடையவனே!

     சுரர் பரவும் அமலனே --- தேவர்கள் போற்றுகின்ற தூயவனே!,

     அருமை மதவேள் --- அருமை பொருந்திய மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- சதா காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே ---- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,

     நீர் மேல் நடக்கலாம் --- தண்ணீரின்மேல் நடந்து செல்லலாம்,

     எட்டியும் தின்னலாம் --- மிகுந்த கசப்புச் சுவையை உடைய எட்டிக் காயையும் தின்னலாம்,

     நெருப்பை நீர் போல் செய்யலாம் --- நெருப்பைத் தண்ணீர் போல் குளிரச் செய்யலாம்,

     நெடிய பெரு வேங்கையைக் கட்டியே தழுவலாம் --- நீண்ட பெரிய வேங்கையைக் கட்டித் தழுவலாம்

     நீள் அரவினைப் பூணலாம் --- நஞ்சு உடைய  நீண்ட பாம்பை, அது கடிக்காமல் பண்ணி, தோள் மேலே அணிந்து கொள்ளலாம்,

     பார் மீது மணலைச் சோறு எனச் சமைக்கலாம் --- உலகத்திலே உள்ள மணலைச் சோறாகச் சமைக்கலாம்

     பட்சமுடனே உண்ணலாம் --- அப்படிச் சமைத்ததை அன்புடன் உண்ணலாம்,

     பாணமொடு குண்டு விலகச் செய்யலாம் --- அம்பையும் துப்பாக்கி, பீரங்கி ஆகியவற்றின் குண்டுகளையும் நம் மீது படாமல் விலகும்படிச் செய்யலாம்,

     மரப்பாவை பேசப்பண்ணலாம் --- மரத்தால் செய்யப்பட்ட பதுமையைப் பேசும்படி செய்யலாம்,

     ஏர் மேவு காடியும் கடையுற்று வெண்ணெயும் எடுக்கலாம்
--- அழகிய காடியையும் கடைந்து  அதிலிருந்து வெண்ணெயையும் எடுக்கலாம்,

     புத்தி சற்றும் இல்லாத மூடர்தம் மனத்தைத் திருப்பவே எவருக்கும் முடியாது --- சிஅறிவு என்பது சிறிதும் இல்லாத பேதையரின் மனத்தைத் திருத்த யாவராலும் முடியாது.

     காண் --- இதை நீ அறிவாயாக.

      நீர்மேல் நடத்தல், நெருப்பை நீர்போற் குளிர வைத்தல் ஆகிய சித்திகளை அரிதில் ஒருவன் முயன்று பெறலாம். கொடிய விலங்கும் நஞ்சுடைய பாம்பும் கூட வசியத்தால் வசமாகும். இவை எல்லாம் உலகிலே நாம் காணக் கூடிய வித்தைகளே. ஆனால், ஒருவன் செய்தற்கு அரிய செயல் அறிவற்ற ஒருவனின் மனத்தைத் திருத்துவது ஆகும். அதுதான் யாராலும் முடியாத ஒன்று.


No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...