அந்தணர் இயல்பு




2.  அந்தணர் இயல்பு

குறையாத காயத்ரி யாதிசெப மகிமையும்,
    கூறுசுரு திப்பெருமையும்,
கோதுஇலா ஆகம புராணத்தின் வளமையும்,
    குலவுயாக ஆதிபலவும்,

முறையா நடத்தலால் சகலதீ வினைகளையும்
     முளரிபோ லேதகிப்பார்;
முதன்மைபெறு சிலைசெம்பு பிருதுவிக ளில்தெய்வ
     மூர்த்தம்உண் டாக்குவிப்பார்;

நிறையாக நீதிநெறி வழுவார்கள்; ஆகையால்,
     நீள்மழை பொழிந்திடுவதும்,
நிலமது செழிப்பதும், அரசங்செங் கோல்புரியும்
     நிலையும், மா தவர்செய்தவமும்,

மறையோர்க ளாலே விளங்கும், இவ்வுலகத்தின்
     மானிடத் தெய்வம்இவர் காண்,
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

          இதன் பொருள் ---

     மயிலேறி விளையாடு குகனே!

     புல் வயல் நீடுமலை மேவு குமர ஈசனே!

     குறையாத காயத்திரி ஆதி செப மகிமையும் --- குற்றமில்லாத காயத்திரி முதலான மந்திரங்களை செபிக்கும் பெருமையும்,

     கூறு சுருதிப் பெருமையும் --- சொல்லப்படும் வேதங்களின் பெருமையும்,

     கோது இலா ஆகம புராணத்தின் வளமையும் --- குற்றம் இல்லாத ஆகமங்களின் சிறப்பையும் புராணங்களின் சிறப்பையும்,

     குலவு யாக ஆதி பலவும் --- விளங்கும் வேள்வி முதலான பல கிரியைகளையும்,

     முறையா நடத்தலால் --- ஒழுங்காகச் செய்து வருவவதனால்,

     சகல தீவினைகளையும் --- எல்லா வகையான கொடிய வினைகளையும்,

     முளரி போல தகிப்பார் --- நெருப்பைப் போலே எரித்து, இல்லாமல் செய்து விடுவார்,

     முதன்மை பெறு சிலை செம்பு பிருதுவிகளில் --- சிறப்புப் பொருந்திய கல்லிலும் செம்பிலும் மண்ணிலும்,

     தெய்வ மூர்த்தம் உண்டாக்குவிப்பார் --- தெய்வத் தன்மையை பொருந்திய மூர்த்தங்களை உண்டாக்கி வைப்பார்,

     நிறையாக நீதிநெறி வழுவார்கள் --- நீதியிலும், ஒழுக்கத்திலும் வழுவாமல் ஒழுங்காக இருப்பார்கள்,

     ஆகையால் --- இப்படி இவர்கள் விளங்குவதனாலே,

     நீள் மழை பொழிந்திடுவதும் --- மிகுதியாக மழை பெய்வதும்,

     நிலம் அது செழிப்பதும் --- அதன் காரணமாக மண் வளம் பெறுவதும்,

     அரசர் செங்கோல் புரியும் நிலையும் --- மன்னவர்கள் நல்ல ஆட்சியை நிலையாகச் செய்வதும்,

     மாதவர் செய் தவமும் --- பெரிய தவசிகள் செய்யும் தவமும்,

     மறையோர்களாலே விளங்கும் --- மறையை ஓதும் அந்தணர்களாலே விளக்கம் உறும்,

     இவர் மானிடத் தெய்வம் --- இவர்கள் மக்களிலே தெய்வம் என்று மதிக்கப்படுபவர்கள்.

         
          கருத்து --- அந்தணர்கள் நிலத் தேவர்கள் எனப்படுவர்.   சுரர் - தேவர். பூ சுரர் - நிலத் தேவர். "பூசுரன் ஞானசம்பந்தன்" என்று திருஞானசம்பந்தப் பெருமான் அருளியதைக்  குறிக்கொள்க. இவர்கள் முறையாக தமது குலமுறைப்படி நடந்தால் மழை மிகுதியாகப் பொழியும்.  மண் வளம் பெறும். நல்லாட்சி நடைபெறும். தவமும் தானமும் சிறக்கும்.

No comments:

Post a Comment

25. காதவழி பேர் இல்லாதவன் கழுதைக்குச் சமம்

"ஓதரிய தண்டலையார் அடிபணிந்து      நல்லவன்என் றுலகம் எல்லாம் போதம்மிகும் பேருடனே புகழ்படைத்து      வாழ்பவனே புருடன், அல்லால் ஈதலுடன் இரக...