அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சீர்சிறக்கும் மேனி
(பழமுதிர்சோலை)
சோலைமலை முருகா!
மாதர் மயலால் மயங்கும்போது,
திருவடி காட்டித் தடுத்து, ஆண்டு அருள்.
தானதத்த
தான தனாதனா தன
தானதத்த தான தனாதனா தன
தானதத்த தான தனாதனா தன ...... தனதானா
சீர்சிறக்கு
மேனி பசேல் பசே லென
நூபுரத்தி னோசை கலீர் கலீ ரென
சேரவிட்ட தாள்கள் சிவேல் சிவே லென ..... வருமானார்
சேகரத்தின்
வாலை சிலோர் சிலோர் களு
நூறுலக்ஷ கோடி மயால் மயால் கொடு
தேடியொக்க வாடி யையோ வையோ வென ......
மடமாதர்
மார்படைத்த கோடு பளீர் பளீ ரென
ஏமலித்தெ னாவி பகீர் பகீ ரென
மாமசக்கி லாசை யுளோ முளோ மென ......
நினைவோடி
வாடைபற்று
வேளை யடா வடா வென
நீமயக்க மேது சொலாய் சொலா யென
வாரம்வைத்த பாத மிதோ இதோ என ......
அருள்வாயே
பாரதத்தை
மேரு வெளீ வெளீ திகழ்
கோடொடித்த நாளில் வரைஇ வரைஇ பவர்
பானிறக்க ணேசர் குவா குவா கனர் ......
இளையோனே
பாடல்முக்ய
மாது தமீழ் தமீ ழிறை
மாமுநிக்கு காதி லுணார் வுணார் விடு
பாசமற்ற வேத குரூ குரூ பர ...... குமரேசா
போர்மிகுத்த
சூரன் விடோம் விடோ மென
நேரெதிர்க்க வேலை படீர் படீ ரென
போயறுத்த போது குபீர் குபீ ரென ......
வெகுசோரி
பூமியுக்க
வீசு குகா குகா திகழ்
சோலைவெற்பின் மேவு தெய்வா தெய்வா னைதொள்
பூணியிச்சை யாறு புயா புயா றுள ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
சீர்சிறக்கும்
மேனி பசேல் பசேல் என,
நூபுரத்தின் ஓசை கலீர் கலீர் என,
சேரவிட்ட தாள்கள் சிவேல் சிவேல் என, ..... வரு மானார்,
சேகரத்தின்
வாலை சிலோர் சிலோர்களும்
நூறுலக்ஷ கோடி மயால் மயால் கொடு,
தேடிஒக்க வாடி ஐயோ ஐயோ என, ...... மடமாதர்
மார்
படைத்த கோடு பளீர் பளீர் என,
ஏமலித்து என்ஆவி பகீர் பகீர் என,
மாமசக்கில் ஆசை உளோம் உளோம் என, ......நினைவுஓடி
வாடைபற்று
வேளை அடா அடா என,
நீ மயக்கம் ஏது சொலாய் சொலாய் என,
வாரம் வைத்த பாதம் இதோ இதோ என ......
அருள்வாயே.
பாரதத்தை
மேரு வெளீ வெளீ திகழ்,
கோடு ஒடித்த நாளில் வரைஇ வரைஇ பவர்,
பால் நிறக் கணேசர் குவா குவாகனர் ...... இளையோனே!
பாடல்முக்ய
மாது தமீழ் தமீழ் இறை
மாமுநிக்கு காதில் உணார் உணார் விடு,
பாசம் அற்ற வேத குரூ! குரூபர! ...... குமரஈசா!
போர்மிகுத்த
சூரன் விடோம் விடோம் என,
நேர் எதிர்க்க வேலை படீர் படீர் என,
போய் அறுத்த போது குபீர் குபீர் என, ...... வெகுசோரி
பூமி
உக்க வீசு குகா! குகா! திகழ்
சோலை வெற்பின் மேவு தெய்வா! தெய்வானைதொள்
பூணி இச்சை ஆறு புயா புயா ஆறுஉள ......
பெருமாளே.
பதவுரை
பாரதத்தை --- பாரதமென்ற சிறந்த
இதிகாசத்தை,
மேரு வெளீ --- மேருகிரியின் பரந்த இடத்திலே,
வெளீ திகழ் --- வெண்மையாக விளங்குகின்ற,
கோடு ஒடித்த நாளில் வரை --- கொம்பை கஜமுகாசுர
வதத்தின் போது ஒடித்த நாளிலேயே இது மீண்டும் அசுர சம்மாரத்திற்கும், எழுதுவதற்கும் ஆகுமென்று முடிவு
செய்துகொண்டபடி,
வரைபவர் --- எழுதியவரும்,
பால் நிறக் கண ஈசர் --- சூரியனைப் போன்ற
சிவந்த நிறமுடையவரும், கணங்கட்குத் தலைவரும்,
குவ ஆகுவாகனர் --- திரண்டிருக்கின்ற
பெருச்சாளியை வாகனமாக வுடையவரும் ஆகிய விநாயகமூர்த்தியின்,
இளையோனே --- இளைய சகோதரரே!
பாடல் முக்ய மாது --- சிறந்த பாடல்களோடு
கூடிய கலைமடந்தைக்கு,
தமிழ் இறை --- இனிய மொழியாகிய தமிழ்
மொழிக்குத் தலைவராகிய,
மாமுனிக்கு --- அகத்திய முனிவருக்கு,
காதில் உணார் --- செவியில் ஞான உணர்ச்சியை,
உணார் விடு --- உணர்த்திவிட்ட,
பாசம் அற்ற வேத குரு --- இயல்பாகவே
பாசங்களினின்றும் நீங்கிய ஞான குருமூர்த்தியே!
குருபர --- குருமூர்த்திகளுக்கெல்லாம்
முதன்மையானவரே!
குமர ஈசா --- குமாரக்கடவுளே!
போர் மிகுந்த சூரன் --- போர்த்திறத்திலே
மிகுந்த சூரபன்மன்,
விடோம் விடோம் என நேர் எதிர்க்க --- தேவர்கள்
சிறையை விடமாட்டோம் என்று வீரவசனங்களைக் கூறி எதிராக வந்து எதிர்த்துப்
போர்புரிதலும்,
வேலை படீர் படீர் என --- கடல் படீர் என்று
கதறவும்,
போய் அறுத்த போது --- போய் ஆறுத்த சமயத்தில்,
குபீர் குபீர் என வெகுசோரி பூமி உக்க வீசு
குகா --- குபீர் குபீர் என்று மிகுந்த உதிரம் பூமியிற் சிந்தும்படி வேலை
விடுத்தருளிய குகக்கடவுளே!
குகா திகழ் சோலை வெற்பின் மேவு தெய்வா --- குகைகள் திகழ்கின்ற பழமுதிர்சோலை
என்னும் மலையில் விரும்பி வாழ்கின்ற தெய்வமே!
தெய்வானை தொள் பூண் இச்சை ஆறு புயா உள --- தெய்வயானை அம்மையாருடைய தோள்களை
விருப்பத்துடன் அணிகின்ற ஆறு புயங்களையுடைய பெருமையிற் சிறந்தவரே! ("தோள்" என்னும் சொல் பாடலை நோக்கி, "தொள்" என வந்தது)
சீர் சிறக்கு மேனி பசேல் பசேல் என ---
அழகிலே சிறந்த மேனி பசுமையாக ஒளி செய்யவும்,
நூபுரத்தின் ஓசை கலீர் கலீர் என ---
பாதத்திலுள்ள நூபுரமென்னும் ஆபரத்தின் ஒலி கலீர் கலீர் என்று சத்திக்கவும்,
சேரவிட்ட தாள்கள் சிவேல் சிவேல் என ---
நெருங்க விடுகின்ற கால்கள் சிவந்து தோன்றவும்,
வருமானார் --- ஒய்யாரமாக வருகின்ற விலைமகளிர்,
சேகரத்தின் வாலை சிலோர் சிலோர்களும் ---
கூட்டமாக இளம்பெண்களில் சிலரும்,
நூறு
லக்ஷ கோடி மயால் மயால் கொடு --- எண்ணமுடியாத அளவில் மயக்கத்தையடைந்து,
தேடி ஒக்க வாடி ஐயோ ஐயோ என --- விருப்பத்தினால் தேடித் திரிந்து வாடி
ஐயோ ஐயோ என்று வருந்தும்,
மடமாதர் --- மடமைக் குணம் பொருந்திய
மாதர்களின்,
மார் படைத்த கோடு பளீர் பளீர் என ---
மார்பகத்தில் உள்ள முலைகள் பளீர் என்று இருக்கவும்,
ஏமலித்து என் ஆவி பகீர் பகீர் என ---
மிகுந்த மகிழ்ச்சியடைந்து என் உயிர் பகீர் பகீர் என்று பதறவும்,
மா மசக்கில் ஆசை உளோம் உளோம் என --- பெரிய
மயக்கினால் ஆசைகொண்டிருக்கின்றோம் என்று கூற,
நினைவு ஓடி ---- அவர்களிடம் எனது எண்ணம்
விரைந்து செல்ல,
வாடை பற்றும் வேளை --- அம்மகளிரினது மயல்
காற்று என்னைப் பற்றுகின்ற காலத்து,
அடா அடா என --- அடாது அடாது என்றும்,
நீ மயக்கம் ஏது சொல்வாய் சொல்வாய் என ---
“உனக்கு ஏன் மயக்கம்? சொல்வாய் சொல்வாய்”
என்றும்,
வாரம் வைத்த பாதம் இதோ இதோ என --- நீ அன்பு வைத்த
திருவடி இதோ இருக்கின்றது‘ என்றும்,
அருள்வாயே --- திருவருள் புரிவீர்.
பொழிப்புரை
பாரதமென்ற பெருங்காவியத்தை வியாசமுனிவர்
சொல்ல மேருகிரியில், வெண்மையாக திகழும்
கொம்பை கஜமுக சம்மர காலத்தில் ஒடித்த அக்காலத்திலேயே முடிவு செய்தவாறு எழுதியவரும், சூரியனைப்போல சிவந்த நிறமுடையவரும்
கணங்கட்குத் தலைவரும், திரண்ட பெருச்சாளியை
வாகனமாக யுடையவருமாகிய விநாயகப் பெருமானுடைய இளைய சகோதரரே!
சிறந்த பாடல்களோடு கூடிய கலைமடந்தைக்கு
இனிய மொழியாகிய தமிழ் மொழிக்குத் தலைவராம் அகத்திய மாமுனிவருக்கு அவருடைய செவியில்
ஞான உணர்ச்சியை உணரவிட்டவரும், இயல்பாகவே
பாசங்களினின்றும் நீங்கியவருமாகிய மெய்ஞ்ஞான குருமூர்த்தியே!
போர்த்திறத்தில் மிகுந்த சூரபன்மன்
தேவர்கள் சிறையை ஒருபோதும் விடமாட்டோம் என்று கூறி எதிராக வந்து போர் புரிதலும், கடல் படீர் படீர் என்று கதறவும், வேற்படை சென்று அவுணர்களது உடலை
அறுத்தபோது மிகுந்த உதிரம் குபீர் குபீர் என்று கொப்பளித்து பூமியில் சிந்த வேலை
விடுத்தருளிய குகப் பெருமாளே!
குகைகளுடன் கூடிய பழமுதிர் சோலையென்னும்
திருத்தலத்தில் விரும்பி வாழுகின்ற தெய்வமே!
தெய்வயானை யம்மையாருடைய தோள்களை
அன்புடன் பூணுகின்ற ஆறு புயங்களையுடையவரே!
மற்றைய ஆறு புயங்களையுடைய பெருமிதத்தின்
மிகுந்தவரே!
சிறந்த அழகியமேனி பசுமையாக ஒளி
செய்யவும், காலிலுள்ள நூபுரங்கள்
கலீர் என்று ஒலி செய்யவும், நெருங்கி விடுகின்ற
கால்கள் சிவந்து அழகு செய்யவும்,
ஒய்யாரமாக
வருகின்ற விலைமகளிரில் இளம் பெண்களிற் சிலர் மிகுந்த மயக்கத்தையடைந்து என்னைத்
தேடி வந்து, “ஐயோ! மிகுந்த
விருப்பத்தால் மயங்கியிருக்கின்றோம்” என்று கூறவும், அது கண்டு என் உயிர் பகீர் என்று
துடிக்கவும், அவர்களிடத்தில் எனது
எண்ணம் விரைந்து செல்லவும், அம்மகளிரது மயல் காற்று
என்னைப் பற்றுகின்ற காலத்து, “அன்பனே! இது உனக்கு
அடாது! உனக்கு என்ன மயக்கம்? சொல்வாய், நீ அன்பு வைத்த பாதம் இதோ இருக்கின்றது”
என்று திருவருள் புரிவீர்.
விரிவுரை
வாடை
பற்றும் வேளை அடா அடா என ---
பெண்கள்
மயலை வாடைக் காற்றாக உருவகம் புரிந்தனர்.
வாடைக் காற்று குளிர் நடுக்கம் முதலிய துன்பம் புரிவது போல் பெண்மயலும் பெருத்த
துன்பத்தைத் தரும்.
“காமம் இல்லை எனில்
கடுங்கேடு எனும்
நாமம் இல்லை நரகமும் இல்லையே” --- இராமாயணம்.
அடாது
அடாது என்பது அடா அடா என கடைக் குறையாக நின்றது.
நீ
மயக்கம் சொலாய் சொலாய் என ---
“சுவாமீ! தேவரீர் மகமாயை
களைந்திட வல்ல பிரானாதலின்
பெண்மயலால்
பீடித்து, வருந்துகின்ற அடியேனை, ‘அன்பனே! உனக்கு என்ன மயக்கம் சொல்லக் கடவாய்”
என்று தடுத்து என் மயலை அயலாக்கி அருள் புரியவேண்டும்.
வாரம்
வைத்த பாதம் இதோ என அருள்வாயே ---
வாரம்
- அன்பு.
“நீ
அன்பு வைத்த திருவடி இதோ இருக்கின்றது
என்று காட்டி திருவடிப்பேற்றை அருள்வீர்” என்று பிரார்த்திக்கின்றனர்.
இதோ இதோ என்று இரண்டில் முன்னையதைச்
சுட்டாகவும், பின்னையதை இது ஓ எனப்
பிரித்தும் இத்திருவடியே ஓகார மந்திரம் என்று கூறுவாரும் உளர். அறிவித்தாலன்றி
ஆன்மா அறியாது. பசுத்தன்மை தானே யறியாது. இறைவன் அறிவு அறிவிக்க அறியுமியல்புடையது.
கண் கதிரொளி துணை புரிந்தாலல்லது தானே காணாது. கண்ணொளி போல் ஆன்ம அறிவு; கதிரொளிபோல் இறைவனுடைய அறிவு. ஆதலின், “பாதம் இதோ” என்று இறைவன் தனது
திருவடியைக் காட்ட அவனருளே கண்ணாகக் கொண்டு காணவேண்டும்.
மைப்படிந்த
கண்ணாளும் தானும் கச்சி
மயானத்தான் வார்சடையான் என்னின் அல்லால்,
ஒப்பு
உடையன் அல்லன்; ஒருவன் அல்லன்;
ஓர் ஊரன் அல்லன்; ஓர் உவமன் இல்லி;
அப்படியும்
அந்நிறமும் அவ் வண்ணமும்
அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்,
இப்படியன்
இந்நிறத்தின் இவ்வண்ணத்தன்
இவன் இறைவன் என்று எழுதிக் காட்ட ஒணாதே. ---
அப்பர்.
அங்ஙனம்
இறைவன்காட்டக் கண்டவர் அப்பமூர்த்திகள்.
“கண்டேன் அவர்திருப்
பாதம் கண்டறியாதன கண்டேன்” --- அப்பர்.
பாரதத்தை
மேருவெளீ...............வரைபவர் ---
இதிகாசங்கள்
மூன்றனுள் ஒன்று பாரதம். பரத வமிசத்தார் சரித மாதவின் பாரதம் எனப்பட்டது; தத்திதாந்த நாமம். வடமொழியில் விரிந்த
விழுமிய காவியம். அதனை வியாசர் கூற விநாயகர் எழுதினார் எனில் அதன் பெருமையை அளவிட
வல்லார் யாவர்?
பாரதம் எழுதிய வரலாறு
கிருஷ்ணத்வைபாயனர் என்னும் வேதவியாசர்
இமாசலத்தில் மூன்று ஆண்டுகள் யோகத்தில் அசைவற்றிருந்தனர். அந்த யோகக் காட்சியில்
கண்ட பாரத வரலாற்றைச் சுலோக வடிவாகப் பாட வேண்டுமென்று துணிந்தனர். பாடுகின்ற
கவிவாணன் பக்கலில் எழுதுகின்றவன் வேறு இருத்தல் அவசியம். பாடுகின்றவனே எழுதினால்
பாடுகின்ற கவன சக்தி தடைப்படும். எழுதுகின்றவர் சிறந்த மதி நலம் வாய்ந்தவராக
இருத்தல் அதனினும் அவசியம். பதங்களிலுள்ள எழுத்துக்களைச் சிறிது இடம் பெயர்த்து
நிலை மொழியின் ஈற்றெழுத்தை வருமொழியோடு சேர்த்துவிட்டால் பேராபத்தாக
முடிந்துவிடும். உதாரணமாக;
"மாதேவா சம்போ கந்தா" என்ற பதங்களை
எழுதுகின்றவன்
"மாதே
வா சம்போகந் தா" என்று எழுதினால் எவ்வளவு பெரிய விபரீதமாக ஆகின்றது என்று
பாருங்கள்.
ஆதலினால் விநாயகராகிய ஐந்துகர பண்டிதரே
எழுதவல்லாரென்று வியாசர் நினைத்தனர். விநாயகமூர்த்தியை வேண்டிய தவம் இழைத்தனர்.
ஆனைமுகத்து அண்ணல் ஆகு வாகனமீது தோன்றி அருளினார். விநாயகர் விரை மலரடி மேல்
வியாசர் வீழ்ந்து பன்முறை பணிந்து,
“எந்தையே!
அடியேன் பாரதம் பாட மேற்கொண்டிருக்கிறேன். அதனைத் தேவரீர் மேருகிரியில் எழுதி உதவிசெய்தல்
வேண்டும்” என்று வேண்டி நின்றனர். விநாயகர் புன்னகை புரிந்து, “அன்பனே! நன்று நன்று. நின் எண்ணம்
நன்று. நான் உன்னிடம் பாரதம் எழுத ஒப்புக் கொண்டேனாயின் எத்தனையோ அன்பர்களின்
காரியங்களில் இடர் கெடுத்து உதவுதல் வேண்டியதற்குத் தடைபடுமல்லவா? அதுவும் நீ நூதனமாகப்
பாடிக்கொண்டிருந்தால் பாரதம் பாடி முடிய எத்துணை ஆண்டுகள் செல்லுமோ? ஆதலின் இதற்கு நாம் உடன்பட மாட்டோம்”
என்றனர்.
வியாசர், “ஆண்டவரே! அருட்கடலே! தேவரீரைத் தவிர
இதனை எழுத வல்லார் வேறு இல்லை. வேண்டிய வரங்கொடுக்கும் கருணை வள்ளலாகிய நீர் இதனை
மன்பதைகட்கெல்லாம் நலன் விளையும் பொருட்டு எழுதல் வேண்டும்” என்று வேண்டி
வணங்கினார்.
விநாயகர், “அன்பனே! அங்ஙனமே நின் கருத்தின்படி நாம்
எழுதுவோம். ஆனால் உனக்கும் எமக்கும் ஓர் உடன்படிக்கை இருத்தல் வேண்டும். அதாவது
நாம் மிக்க வேகமாக எழுதுவோம். எமது எழுத்தாணி ஒழியாமல் நீ சொல்ல வேண்டும். சிறிது
தடைபட்டாலும் நாம் எழுதுவதை நிறுத்திவிடுவோம்” என்றனர்.
வியாசர், “எம்பெருமானே! அங்ஙனமே மிக்க விரைவுடன்
கூறுவேன்; ஆனால் அடியேன் கூறும்
சுலோகங்களுக்குப் பொருள் தெரிந்து கொண்டு எழுதுதல் வேண்டும்” என்றார். விநாயகரும்
அதற்கு உடன்பட்டனர்.
வியாசர் விநாயகரைத் தியானித்துப் பாடத்
தொடங்கினார். திருவருள் துணைசெய்ய வேகமாகப் பாடுவாராயினார். இடையில் மிக்கக்
கடினமான பதங்களுடைய ஒரு சுலோகத்தைச் சொன்னார். விநாயகர் சற்று அதன் பொருளைச்
சிந்திப்பதற்குள் பல்லாயிரம் சுலோகங்களை மனதில் சிந்தனை செய்து கொண்டனர். அவைகளை
மிக்க விரைவுடன் கூறிய பின் மீண்டும் ஒரு கடின பதங்கள் அமைந்த சுலோகத்தைக்
கூறினார். ஐயங்கரனார் அதன் பொருளைச்
சிந்திப்பதற்குள் பல சுலோகங்களை உள்ளத்தில் ஆவாகனம் பண்ணிக் கொண்டனர். இப்படியாக
விநாயகர் சிந்தித்து எழுதும் பொருட்டு வியாசர் கூறிய சுலோகங்கள் எண்ணாயிரத்து
எண்ணூறு. வியாசர், “இதற்குப் பொருள்
எனக்கு தெரியும்; என் மைந்தன்
சுகனுக்குத் தெரியும்., சஞ்சயனுக்குத்
தெரியுமோ தெரியாதோ” என்று அநுக்கிரமணிகா பர்வதத்தில் கூறியிருக்கின்றனர், வியாசர் மொத்தம்பாடிய சுலோகங்கள் 60 லட்சம்.
“பகைகொள் துரியோதனன்
பிறந்து
படைபொருத பாரதந்தெரிந்து
பரியது
ஒரு கோடு கொண்டு சண்ட வரைமீதே
பழுதுஅற வியாசன்அன்று இயம்ப
எழுதிய விநாயகன் சிவந்த
பவளமத யானை பின்பு வந்த முருகோனே”
--- (குகையில்
நவ) திருப்புகழ்.
பாடன்
முக்ய மாது........................பாசமற்ற வேதகுரு ---
சிறந்த
பாடல்களோடு கூடியது தமிழ்; தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி, திருமந்திரம் முதலிய மிகச் சிறந்த
பாடல்களால் அலங்கரிக்கப் பெற்ற மொழி தமிழ் மொழியேயாம். “வேதப் பாடலினும் விழுமியது
திருவாசகப் பாடல்” என்றார் சிவப்பிரகாச சுவாமிகள்.
“விளங்கிழை பகிர்ந்த
மெய்உடை முக்கண்
காரணன்
உரையெனும் ஆரண மொழியோ,
ஆதிசீர்
பரவும் வாதவூர் அண்ணல்
மலர்வாய்ப்
பிறந்த வாசகத் தேனோ,
யாதோ
சிறந்தது, என்குவீர் ஆயின்,
வேதம்
ஓதின் விழிநீர் பெருக்கி
நெஞ்சம்
நெக்குஉருகி நிற்பவர்க் காண்கிலேம்,
திருவா
சகம்இங்கு ஒருகால் ஓதின்
கருங்கல்
மனமுங் கரைந்துஉக, கண்கள்
தொடுமணல்
கேணியில் சுரந்துநீர் பாய,
மெய்ம்மயி்ர்
பொடிப்ப, விதிர்விதிர்ப்பு எய்தி
அன்பர்
ஆகுநர் அன்றி
மன்பதை
உலகில் மற்றையர் இலரே”
இத்தகைய
பாடல்களையுடைய தமிழ்மொழிக்குத் தலைவர் அகத்திய முனிவர். தமிழ் - இனிமை.
“இனிமையும் நீர்மையும்
தமிழ் எனலாகும்” --- நிகண்டு
அகத்திய
முனிவருக்குப் பிரணவோபதேசத்தை முருகவேள் புரிந்தருளினார். முருகக் கடவுளுடைய
முக்கிய சீடர்கள் மூவர், சிவபெருமான், அகத்திய முனிவர், அருணகிரிநாதர்.
வேலா!
சரணம் சரணம், என் மேல்வெகுளாமல் இனி
மேல்
ஆயினும் கடைக்கண் பார், பருப்பத வேந்தன் மகள்
பாலா, குறுமுனியார்க்கும், திருப்புகழ்ப் பண்ணவர்க்கும்
ஆலாலம்
உண்டவர்க்கும் உபதேசித்த என்ஆண்டவனே. --- முருகரந்தாதி
போர்மிகுத்த
சூரன்................பூமியுக்க விசு குகா ---
சூரபன்மன்
தேவர்களையும்இந்திரன் மகனாகிய சயந்தனையுந் தேவமாதர்களையும் சிறைப்படுத்தித்
துன்புறுத்தினான். பலயுகங்களாகப் பதைபதைத்த தேவர்கள் “இனி உய்வு உண்டோ” என
ஏங்கினர்.
“தண்தேன் துளிக்கும்
தருநிழல்கீழ் வாழ்கை வெஃகிக்
கொண்டேன், பெருந்துயரம், வான்பதமும் கோதுஎன்றே
கண்டேன், பிறர் தம் பதத் தொலைவும் கண்டனனால்,
தொண்டேன்
சிவனே, நின் தொல்பதமே
வேண்டுவேன்”
என்று
சயந்தன் புலம்பினான்.
முடிவில்
இந்தினாதி இமையவர் இளம்பூரணனாகிய எந்தை கந்தவேள் திருமுன் சென்று, “வால குமார குகா கந்தா வேலா மயிலா” என்று
வழுத்தி வணங்கினார்கள். முருகவேள் படையுடன் புறப்பட்டு செந்திமாநகரம் வந்து
திருக்கோயிலில் வீற்றிருந்தனர். அரசநீதிப்படி தேவர்கள், சிறையை விடுவிக்குமாறு வீரவாகு தேவரைத்
தூது அனுப்பினார். வீரவாகு தேவர் அஞ்சாநெஞ்சுடன் தன்னந்தனியாக தனது தோளும் வாளும்
துணையாகக் கொண்டு சூரபன்மன் பேரவைக்குள் பெருமிதமாகச் சென்றனர்.
நவரத்தின
சிங்காசனத்தை முருகனருளால் தருவித்து அதன் மீதிருந்து முருகன் முழுமுதற்றன்மை
முழுவதும் கூறியருளினார். “அடா சூரபன்மனே! தேவர்களைச் சிறைவிடுமாறு கந்தக்
கடவுளின் கட்டனை. முழுமுதலாகிய முருகவேளின் மொழியைத்தட்டாதே” என்று பலப்பல நீதிகளைப்
பகர்ந்தார் சூரபன்மன் கைகொட்டி நகைத்து,
“எண்ணிலாதது ஒர்
பாலகன் என்னை வெல்வன் என்கை,
விண்ணில்
ஆதவன் தன்னை ஓர் கனியென வெஃகிக்
கண்
இலாதவன் காட்டிடக் கையிலாதவன் போய்
உள்நிலாத
பேராசையால் பற்றுமாறு ஒக்கும்”
என்று
கூறி தேவர் சிறையை விடாது மறுத்துவிட்டான். அதனால் முருகவேள் வேலாயுதத்தால்
அவர்களை அழித்து அமரர் சிறைமீட்டனர்.
கருத்துரை
விநாயகரது
தம்பியே! குருபரரே! சூரபன்மனாதி யவுண குல காலரே! சோலைமலைக் கதிரேசரே! பெண்மயலுற்று
வாடைபற்றும் வேளை தேவரீர் தடுத்தாண்டு காத்தருள்வீர்.
No comments:
Post a Comment