அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சீலமுள தாயர்
(பழமுதிர்சோலை)
சோலைமலை முருகா!
உலக மயக்கில் ஆழும் மாயவினையைத்
தீர்த்து,
உனது திருவடியைப் பணிய
அருள்.
தானதன
தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த ...... தனதான
சீலமுள
தாயர் தந்தை மாதுமனை யான மைந்தர்
சேருபொரு ளாசை நெஞ்சு ...... தடுமாறித்
தீமையுறு
மாயை கொண்டு வாழ்வுசத மாமி தென்று
தேடினது போக என்று ...... தெருவூடே
வாலவய
தான கொங்கை மேருநுத லான திங்கள்
மாதர்மய லோடு சிந்தை ...... மெலியாமல்
வாழுமயில்
மீது வந்து தாளிணைகள் தாழு மென்றன்
மாயவினை தீர அன்பு ...... புரிவாயே
சேலவள
நாட னங்கள் ஆரவயல் சூழு மிஞ்சி
சேணிலவு தாவ செம்பொன் ...... மணிமேடை
சேருமம
ரேசர் தங்க ளூரிதென வாழ்வு கந்த
தீரமிகு சூரை வென்ற ...... திறல்வீரா
ஆலவிட
மேவு கண்டர் கோலமுட னீடு மன்று
ளாடல்புரி யீசர் தந்தை ...... களிகூர
ஆனமோழி
யேப கர்ந்து சோலைமலை மேவு கந்த
ஆதிமுத லாக வந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
சீலம்உள
தாயர், தந்தை, மாது, மனை, ஆன மைந்தர்,
சேருபொருள் ஆசை, நெஞ்சு ...... தடுமாறி,
தீமை
உறு மாயை கொண்டு, வாழ்வு சதமாம் இது என்று,
தேடினது போக என்று, ...... தெருவூடே,
வாலவயது
ஆன கொங்கை, மேரு நுதல் ஆன திங்கள்
மாதர் மயலோடு சிந்தை ...... மெலியாமல்,
வாழும்
மயில் மீது வந்து, தாள் இணைகள் தாழும்
என்தன்
மாயவினை தீர அன்பு ...... புரிவாயே.
சேலவள
நாடு அனங்கள் ஆரவயல் சூழும் இஞ்சி
சேண் நிலவு தாவ செம்பொன் ...... மணிமேடை
சேரும்
அமரேசர் தங்கள் ஊர் இது என வாழ்வு உகந்த
தீரமிகு சூரை வென்ற ...... திறல்வீரா!
ஆலவிடம்
மேவு கண்டர், கோலமுடன் நீடு
மன்றுள்
ஆடல் புரி ஈசர் தந்தை ...... களிகூர,
ஆன மோழியே பகர்ந்து, சோலைமலை மேவு கந்த!
ஆதிமுதல் ஆக வந்த ...... பெருமாளே.
பதவுரை
சேல வள நாடு --- சேல் மீன்கள் நிறைந்த
வளப்பமான நாடு,
அன்னங்கள் ஆர --- அன்னங்கள் நிரம்பிய,
வயல் சூழும் இங்சி --- வயல்கள் சூழ்ந்துள்ள
மதில்கள்,
சேண் நிலவு தாவ --- ஆகாயத்தில் உள்ள நிலாவை
எட்ட,
செம்பொன் மணி மேடை சேரும் --- செம்பொன்னாலாகிய
மணி ஊர் இது என்று சொல்லும்படி,
வாழ்வு உகந்த --- தத்தம் ஊர் வாழ்வின்
மகிழ்ச்சி கொண்ட,
தீர மிகு சூரை வென்ற --- தைரியம் மிகுந்த
சூரனை வென்ற
திறல் வீரா --- வலிமை மிக்க வீர மூர்த்தியே!
ஆலவிடம் மேவு கண்டர் --- ஆலவிடம் பொருந்திய
கண்டத்தை உடையவரும்,
கோலமுடன் நீடு மன்று உள் --- அழகுடன் நீண்ட
சபையில்,
ஆடல் புரி --- நடனம் புரிகின்றவருமாகிய,
ஈசர் தந்தை களிகூர --- தலைவராகிய தந்தை
மகிழ்ச்சி மிகவும் அடைய,
ஆன மொழியே பகர்ந்து --- சிறந்ததான உபதேச
மொழியை உபதேசித்து
சோலைமலை மேவு கந்த --- சோலைமலையில்
வீற்றிருக்கும் கந்தவேளே!
ஆதி முதல் ஆக வந்த --- ஆதி முதல்வராய்
விளங்கும்,
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
சீலம் உள்ள தாயர் --- நல்லொழுக்கமுள்ள தாய்,
தந்தை --- பிதா,
மாது --- மனைவி,
மனை --- வீடு
ஆன மைந்தர் --- ஆகிய மக்கள்,
சேரு பொருள் ஆசை --- சேர்ந்துள்ள பொருள் ஆகிய
இவற்றில் ஆசை கொண்டு,
நெஞ்சு தடுமாறி --- மனம் தடுமாற்றம் அடைந்து,
தீமை உறு மாயை கொண்டு --- குற்றத்தைத்
தருவதான மாயை அடைந்து,
வாழ்வு சதம் ஆம் இது என்று --- இவ்வாழ்வே
நிலையானதாம் என்று எண்ணி,
தேடினது போக என்று --- தேடிய பொருள் யாவும் தொலைந்துபோக
வேண்டி,
தெரு ஊடே --- நடுத் தெருவில்,
வால வயது ஆன --- இளம்வயதினராய்,
கொங்கை மேரு --- தனங்கள் மேருமலை போலவும்,
நுதல் ஆன திங்கள் --- வெற்றி பிறைச்
சந்திரனைப் போலவும் கொண்டுள்ள,
மாதர் மயலோடு சிந்தை --- பொது மாதர்களின்
மீதுள்ள ஆசைமயக்கத்தால், அடியேனுடைய மனம்,
மெலியாமல் --- மெலிந்து போகாமல்,
வாழு மயில் மீது வந்து --- என்றும் வாழ்கின்ற
மயிலின் மீது தேவரீர் வந்து,
தாள் இணைகள் தாழும் --- உமது இரு
பாதங்களையும் பணிகின்ற, என்றன்
மாய வினை தீர --- அடியேனுடைய, மாயவினை அழிய,
அன்பு புரிவாயே --- உமது அன்பைத் தருவீராக.
பொழிப்புரை
சேல் மீன்கள் நிறைந்த நீர்வளமுடைய நாடு, அன்னங்கள் நிரம்பிய வயல்கள் சூழ்ந்துள்ள
மதில்கள் விண்ணில் உள்ள சந்திரனைத் தீண்ட, செம்பொன்மயமான மணி மேடைகள் சேர்ந்தனவாய், இந்திரருடைய நகரம் இது என்று
சொல்லும்படி வணங்கும் தத்தம் ஊர் வாழ்வில் மகிழ்ச்சி மிகுந்த, தைரியம் உள்ள சூராதியவுணர்களை வென்ற
விறல் வீரமூர்த்தியே!
ஆலகால விடம் பொருந்திய கண்டத்தை யுடையவரும், அழகிய நீண்ட சபையில் நடனம் புரிகின்ற
ஈசருமாகிய தந்தையர், மகிழ்ச்சி மிகவும்
அடையுமாறு, சிறந்த உபதேச மொழியை உபதேசித்தருளி, சோலைமலையில் எழுந்தருளி இருக்கும் கந்தக்கடவுளே!
ஆதி முதல்வராக விளங்கும் பெருமிதமுடையவரே!
நல்லொழுக்கமுள்ள தாய், தந்தை, மனைவி, மக்கள், வீடு சேர்ந்துள்ள பொருள்கள், இவற்றில் ஆசைகொண்டு, மனம் தடுமாற்றம் அடைந்து, தீமையைத் தரும் மாயையால், இவ்வாழ்வே நிலையானதாம் என்று எண்ணி, தேடிய பொருள் யாவும் தொலைந்து போகவேண்டி, நடுத் தெருவில், இளம் வயதினராய் தனங்கள் மேருமலை போலவும், நெற்றி பிறைச் சந்திரனைப் போலவும்
கொண்டுள்ள, மாதர்களின் மீதுள்ள
காம மயக்கத்தால் எளியேனுடைய சிந்தை மெலிந்து போகாமல், என்றுமுள்ள மயிலின் மீது தேவரீர் வந்து
உமது பாதங்கள் இரண்டையும் பணிகின்ற அடியேனுடைய மாயவினை அழியுமாறு அன்பைத்
தந்தருளுவீராக.
விரிவுரை
சீலமுள
தாயர் ---
சீலம்
- சிறந்த ஒழுக்கம். தாயாரைப் பற்றிக் கூறும் போது, ஒழுக்கமுள்ள அன்னை யென்று கூறுகின்றார்.
பிறிதொரு
திருப்புகழிலும், தாயின் கருணையைக்
கூறுகின்றார்.
“தந்த பசிதனை யறிந்து
முலையமுது
தந்து முதுகுதடவிய தாயார்” --- திருப்புகழ்
சுற்றத்தார்
முதலிய தொடர்களால் மனம் தடுமாறு கின்றது.
வாழ்வு
சதமாம் இது என்று ---
உலகில்
உள்ள பொருள்கள் யாவும் சதமல்ல, சதம் அல்லாதவற்றை
சதம் என்று எண்ணி மாந்தர் அலைகின்றனர்.
ஊரும்
சதம்அல்ல, உற்றார் சதம்அல்ல, உற்றுப்பெற்ற
பேரும்
சதம்அல்ல, பெண்டீர் சதம்அல்ல; பிள்ளைகளும்
சீரும்
சதம்அல்ல, செல்வம் சதம்அல்ல, தேசத்திலே
யாரும்
சதம்அல்ல, நின்தாள் சதம் கச்சி
ஏகம்பனே --- பட்டினத்தார்
அமரேசர்
தங்கள் ஊர் இது என வாழ்வு உகந்த ---
அமரர்கள்
தங்கள் ஊர்கள் இந்திர நகரம் போல் இருக்கின்றன என்று மகிழ்கின்றார்கள்.
கருத்துரை
சோலைமலை
மேவு சிவகுருவே! மாயவினை தீர அன்புதருவீர்.
No comments:
Post a Comment