திருவண்ணாமலை - 0575. புணர்முலை மடந்தை




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

புணர்முலை மடந்தை (திருவருணை)

திருவருணை முருகா!
அடியேனது பிறவித் துன்பம் தீ,
மயில் மீது வந்து அருள்.


தனதன தனந்த தான தனதன தனந்த தான
     தனதன தனந்த தான ...... தனதான


புணர்முலை மடந்தை மாதர் வலையினி லுழன்ற நேக
     பொறியுட லிறந்து போன ...... தளவேதுன்

புகழ்மறை யறிந்து கூறு மினியென தகம்பொ னாவி
     பொருளென நினைந்து நாயெ ...... னிடர்தீர

மணமுணர் மடந்தை மாரொ டொளிர்திரு முகங்க ளாறு
     மணிகிரி யிடங்கொள் பாநு ...... வெயிலாசை

வரிபர வநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து போத
     மயில்மிசை மகிழ்ந்து நாடி ...... வரவேணும்

பணைமுலை யரம்பை மார்கள் குயில்கிளி யினங்கள் போல
     பரிவுகொ டுகந்து வேத ...... மதுகூறப்

பறைமுர சநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர்
     படைகட லிறந்து போக ...... விடும்வேலா

அணிசுக நரம்பு வீணை குயில்புற வினங்கள் போல
     அமளியில் களங்க ளோசை ...... வளர்மாது

அரிமகள் மணங்கொ டேகி யெனதிட ரெரிந்து போக
     அருணையின் விலங்கல் மேவு ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


புணர்முலை மடந்தை மாதர் வலையினில் உழன்று, அநேக
     பொறி உடல் இறந்து போனது, ...... அளவு ஏது? உன்

புகழ்மறை அறிந்து கூறும் இனி எனது அகம் பொன் ஆவி
     பொருள் என நினைந்து, நாயென் ...... இடர்தீர,

மணம் உணர் மடந்தை மாரொடு, ஒளிர் திருமுகங்கள் ஆறும்,
     மணிகிரி இடங்கொள் பாநு ...... வெயில் ஆசை

வரிபரவு அநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து போத,
     மயில் மிசை மகிழ்ந்து நாடி ...... வரவேணும்.

பணைமுலை அரம்பை மார்கள் குயில்கிளி இனங்கள் போல
     பரிவு கொடு உகந்து வேதம் ...... அதுகூற,

பறைமுரசு அநந்த பேரி முறைமுறை ததும்ப, நீசர்
     படைகடல் இறந்து போக ...... விடும்வேலா!

அணி சுக நரம்பு வீணை குயில் புறவு இனங்கள் போல
     அமளியில் களங்கள் ஓசை ...... வளர்மாது,

அரிமகள் மணம் கொடு ஏகி, எனது இடர் எரிந்து போக,
     அருணையின் விலங்கல் மேவு ...... பெருமாளே.


பதவுரை

      பணைமுலை அரம்பை மார்கள் --- பருத்த முலைகளை உடைய தேவமாதர்கள்,

     குயில் கிளி இனங்கள் போல --- குயில் கிளி இவைகளின் கூட்டம் போல் நின்று,

     பரிவு கொடு உகந்து வேதம் அது கூற --– அன்பு கொண்டு மகிழ்ந்து வேதங்களை ஓதவும்,

      பறை முரசு அநந்த பேரி முறைமுறை ததும்ப --- பறையும் முரசும் கணக்கில்லாத பேரி வாத்தியங்களும் முறை முறையே பேரொலி எழுப்பவும்,

     நீசர் படை கடல் இறந்து போக விடும் வேலா --- இழிந்தோர்களாகிய அசுரர்களின் சேனைக் கடல் மடிந்து போகுமாறு செலுத்திய வேலாயுதரே!

      அணி சுகம் --- அழகிய கிளி,

     நரம்பு வீணை --- நரம்புள்ள வீணை,

     குயில் புறவு இனங்கள் போல --- குயில், புறாக் கூட்டம் போல

     அமளியில் களங்கள் ஓசை வளர் மாது --- படுக்கையின் மீது கண்டத்தின் ஓசையை எழுப்பும் பெண்மணியும்,

     அரிமகள் மணம் கொடு ஏகி --- திருமாலின் புதல்வியும் ஆகிய வள்ளி பிராட்டியை திருமணம் செய்துகொண்டு சென்று,

     எனது இடர் எரிந்து போக --- அடியேனுடைய துன்பங்கள் எரிந்து அழிய,

     அருணையின் விலங்கல் மேவு பெருமாளே --- அருணை நகரின் மலையில் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

      புணர்முலை மடந்தை மாதர் --- நெருங்கி உள்ள கொங்கைகளை உடைய பெண்களின் அழகாகிய

     வலையினில் உழன்று --- வலையில் அளைபட்டு,

     அநேக பொறி உடல் இறந்து போனது அளவு ஏது --- வித வசப்பட்ட அநேக உடல்கள் மாய்ந்து போனவைகளுக்குக் கணக்கு உண்டோ?

       உன் புகழ் மறை அறிந்து கூறும் --- தேவரீருடைய புகழைச் சொல்லும் வேதாகமங்களை உணர்ந்து,

     இனி எனது அகம் பொன் ஆவி பொருள் என நினைந்து நாயென் இடர்தீர --– இனிமேல் என் உள்ளம் துதிசெய்யும், பொன் ஆவி பொருள் என்ற இம்மூன்றையும் விரும்பித் திரியும் அடியேனுடைய வருத்தங்கள் ஒழிய,

       மணம் உணர் மடந்தை மாரொடு --- உம்மைக் கூடுதலையே தமது உணர்ச்சியாகக் கொண்ட தேவசேனை வள்ளியுடன்

     ஒளிர் திருமுகங்கள் ஆறு மணிகிரி இடம் கொள் பாநு வெயில் --- விளங்குகின்ற ஆறுதிருமுகங்களில் திகழ்கின்ற மணிக் கிரீடங்களில் கொண்ட சூரிய ஒளி,

      ஆசை வரி பரவு --- திசைகளில் எல்லாம் ரேகைகளைப் பரப்பி வீச,

     அநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து போத --- எண்ணில் கோடி முனிவர்கள் புகழ்ந்து வர,

     மயில்மிசை மகிழ்ந்து நாடி வரவேணும் --- மயிலின் மீது மகிழ்ந்து என்னிடம் நாடி தேவரீர் வரவேண்டும்.


பொழிப்புரை


         பருத்த முலைகளை உடைய தேவ மாதர்கள், குயில் கிளி இவைகளின் கூட்டம் போல் நின்று, அன்பு கொண்டு வேதங்கலை ஓதவும்,  பறையும் முரசும் கணக்கில்லாத பேரி வாத்தியங்களும் முறை முறையே பேரொலி எழுப்பவும், இழிந்தோர்களாகிய அசுரர்களின் சேனைக் கடல் மடிந்து போகுமாறு செலுத்திய வேலாயுதரே!

         அழகிய கிளி, நரம்புள்ள வீணை, குயில், புறாக் கூட்டம் போல படுக்கையின் மீது கண்டத்தின் ஓசையை எழுப்பும் பெண்மணியும், திருமாலின் புதல்வியும் ஆகிய வள்ளி பிராட்டியை திருமணம் செய்துகொண்டு சென்று, அடியேனுடைய துன்பங்கள் எரிந்து அழிய, அருணை நகரின் மலையில் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

         நெருங்கி உள்ள முலைகளை உடைய பெண்களின் அழகாகிய வலையில் அளைபட்டு, வித வசப்பட்ட அநேக உடல்கள் மாய்ந்து போனவைகளுக்குக் கணக்கு உண்டோ?

         தேவரீருடைய புகழைச் சொல்லும் வேதாகமங்களை உணர்ந்து, இனிமேல் என் உள்ளம் துதிசெய்யும், பொன் ஆவி பொருள் என்ற இம்மூன்றையும் விரும்பித் திரியும் அடியேனுடைய வருத்தங்கள் ஒழிய, உம்மைக் கூடுதலையே தமது உணர்ச்சியாகக் கொண்ட தேவசேனை வள்ளியுடன் விளங்குகின்ற ஆறுதிருமுகங்களில் திகழ்கின்ற மணிக் கிரீடங்களில் கொண்ட சூரிய ஒளி,  திசைகளில் எல்லாம் ரேகைகளைப் பரப்பி வீச, எண்ணில் கோடி முனிவர்கள் புகழ்ந்து வர, மயிலின் மீதி மகிழ்ந்து என்னிடம் நாடி தேவரீர் வரவேண்டும்.

விரிவுரை


புணர்முலை மடந்தை ---

இளமைத் தன்மையால் நெருங்கி உள்ள தனபாரங்களை உடைய பெண்கள்.

கச்சுஅற நிமிர்ந்து, கதிர்த்து, முன்பணைத்து,
எய்த்து இடை வருந்த எழுந்து, புடைபரந்து,
ஈர்க்கு இடை போகா இளமுலை மாதர்...      ---  திருவாசகம்.

மாதர் வலையினில் உழன்று ---

மாதர் - அழகு. மாதர் பிறைக் கண்ணியானை என்பார் அப்பர் பெருமான்.

பெண்களின் அழகாகிய வலையில் சிக்கி வறிதே அலைந்து திரிந்து.

அநேக பொறி உடல் இறந்து போனது அளவு ஏது ---

பொறி - எழுத்து. அயன் எழுத்துடன் கூடிய உடம்பு. மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகட்கு இடமாகிய உடல் எனினும் பொருந்தும். இந்த உடம்புகள் தோன்றி மறைந்ததற்கு எண்ணிக்கையே இல்லை.

எழுகடல் மணலை அளவிடின் அதிகம்
எனதிடர்ப் பிறவி அவதாரம் ….            ---  திருப்புகழ்.

உன் புகழ் மறை அறிந்து கூறும் இன் எனது அகம் ---

இனி எனது அகம் உன் புகழ் மறை அறிந்து கூறும்.

என் உள்ளமானது உமது புகழைக் கூறும் வேதாகமங்களை இனி உணர்ந்து துதி செய்யும்.

பொன் ஆவி பொருள் என நினைந்து நாயென் இடர் தீர ---

பொன் உயிர் பொருள் என்ற மூன்றையும் விரும்பித் திரிந்த அடியேனுடைய இடர் தீர தேவரீர் வரவேணும்.

மணம் உணர் மடந்தைமார் ---

முருகனையே மணம் புணர வேண்டித் தவம் செய்து அடைந்தவர்கள் தேவயானையும், வள்ளிபிராட்டியும்.

மணிகிரி இடம் கொள் ---

கிரீடம் என்ற சொல் சந்தத்தை நோக்கி, கிரியிடம் என வந்தது.

பாநுவெயில் ---

முருகனுடைய ஆறு மணிமகுடங்கள் சூரிய ஒளி வீசுகின்றன.

ஆசை வரி பரவ ---

ஆசை - திசை. முருகவேளின் மணிமகுடங்களின் பேரொளி திசைகள் முழுவதும் பரவி விளங்குகின்றது.

அநந்தகோடி முனிவர்கள் புகழ்ந்து போத ---

கந்தவேள் எழுந்தருளி வரும்போது எண்ணில் கோடி முநிவரர்கள் அப்பெருமானைப் புகழ்ந்து கொண்டு உடன் வருவார்கள்.

மயில்மிசை மகிழ்ந்து நாடி வரவேணும் ---

மயிலின் மீது மகிழ்ந்து ஆரோகணித்து, அடியேனை விரும்பி என்முன் வந்து காட்சி தந்து ஆட்கொள்ள வேண்டும்.

சதகோடி இருடியர்கள் புகழ்ஞான பெருமாளே....  --- (சுடரனைய) திருப்புகழ்.

பணைமுலை அரம்பை மாதர் குயில் கிளி இனங்கள் போல பரிவுகொடு உகந்து வேதம் அது கூற ---

முருகப் பெருமான் சூராதி அவுணர்கள் மீது போருக்குப் புறப்பட்ட போது, குயில்கள் கிளிகளின் குழாம் போன்ற அழகிய தேவமாதர்கள் அன்பும் ஆனந்தமும் கொண்டு வேதமொழியால் முருகனைப் புகழ்ந்து பாடினார்கள்.

அணி சுக நரம்பு வீணை குயில் புறவு இனங்கள் போல
அமளியில் களங்கள் ஓசை வளர்மாது ---

வள்ளி நாயகி பஞ்சணையில் முருகனிடம் இருந்தபோது அவருடை கண்டத்தில் கிளி, வீணை, குயில், புறா முதலிய ஓசைகள் ஒலித்தன.

தமிழ் ஓதிய குயிலோ, மயில் ஆண்டலையாம் புறவம்
கிளி காடையின் அணில் ஏர்அளி வாய்ந்து அதி
செந் தகுமாமிடறு ஒலியார்.....                 --- திருப்புகழ்.

எனதிட றெரிந்து போக ---

இது அருணகிரியாருக்குத் திருவருணையில் முருகன் அருள் புரிந்த வரலாற்றைக் குறிக்கின்றது.

"அடிமை கொடுநோய் பொடிகள் படவே
அருணகிரி வாழ் பெருமாளே"

என்று மற்றொரு திருப்புகழிலும் கூறுகின்றார்.

அருணையின் விலங்கல் –--

விலங்கல் - மலை.  அருணாபுரியில் திகழும் திருமலை.

கருத்துரை

அருணை முருகா, என் இடர் தீர மயில்மீது வந்து அருள் செய்.

No comments:

Post a Comment

28. குளிர் காய நேரம் இல்லை

  "உருவெடுத்த நாள்முதலா ஒருசாணும்    வளர்க்கஉடல் உழல்வ தல்லால், மருவிருக்கும் நின்பாத மலர்தேடித்    தினம்பணிய மாட்டேன்! அந்தோ! திருவிரு...