திருவண்ணாமலை - 0574. பாலாய் நூலாய்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பாலாய் நூலாய் (திருவருணை)

திருவருணை முருகா!
அடியேன் வீணே அழியாமல் ஆண்டு அருள்


தானா தானா தானா தானா
     தானா தானத் ...... தனதான


பாலாய் நூலாய் தேனாய் நீளாய்
     பாகாய் வாய்சொற் ...... கொடியார்தாம்

பாடா வாடா வேடா வாலே
     பாடா யீடற் ...... றிடைபீறுந்

தோலா லேகா லாலே யூனா
     லேசூழ் பாசக் ...... குடில்மாசு

தோயா மாயா வோயா நோயால்
     சோர்வாய் மாளக் ...... கடவேனோ

ஞாலா மேலா வேதா போதா
     நாதா சோதிக் ...... கிரியோனே

ஞானா சாரா வானாள் கோனே
     நானா வேதப் ...... பொருளோனே

வேலா பாலா சீலா காரா
     வேளே வேடக் ...... கொடிகோவே

வீரா தாரா ஆறா தாரா
     வீரா வீரப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பாலாய், நூலாய், தேனாய், நீள்ஆய்
     பாகுஆய், வாய்சொல் ...... கொடியார்தாம்,

பாடா ஆடா வேள் தாவாலே
     பாடாழ் ஈடு அற்று, ...... இடை பீறும்

தோலாலே, காலாலே, ஊனா
     லே, சூழ் பாசக் ...... குடில், மாசு

தோயா, மாயா ஓயா நோயால்
     சோர்வாய், மாளக் ...... கடவேனோ?

ஞாலா மேலா! வேதா போதா!
     நாதா! சோதிக் ...... கிரியோனே!

ஞானா சாரா! வான்ஆள் கோனே!
     நானா வேதப் ...... பொருனோனே!

வேலா! பாலா! சீல ஆகாரா!
     வேளே! வேடக் ...... கொடிகோவே!

வீர ஆதாரா! ஆறு ஆதாரா!
     வீரா! வீரப் ...... பெருமாளே.


பதவுரை

         ஞாலா மேலா --- பூமியில் உயர்ந்தோர்கட்கு எல்லாம் உயர்ந்தவரே!

         வேதா போதா --- பிரமதேவருக்கு உண்மையை உபதேசித்தவரே!
    
         நாதா --- தலைவரே!

         சோதிக் கிரியோனே --- சோதி மலையாகிய அருணகிரிப் பெருமானே!

         ஞான ஆசாரா --- ஆறிவு மயமான ஆசார மூர்த்தியே!

         வான் ஆள் கோனே --- வானுலகை ஆளுகின்ற முதல்வரே!
    
       நானா வேதப் பொருனோனே --- பலவகைப்பட்ட வேதங்களுக்கும் உட்பொருளாய் விளங்குபவரே!

       வேலா --- வேலாயுதத்தை உடையவரே!

       பாலா --- குழந்தையே!

       சீல ஆகாரா --- தூய வடிவினரே!
    
       வேளே --- செவ்வேள் பரமனே!

       வேடக் கொடி கோவே --- வேடர் மகளாகிய வள்ளிநாயகியின் கணவரே!

       வீர ஆதாரா --- வீர்த்துக்கு ஆதாரம் ஆனவரே!

      ஆறு ஆதாரா --- ஆறு ஆதாரங்கட்கும் உரியவரே!

       வீரா --- வீரமூர்த்தியே!

      வீரப் பெருமாளே --- வீரத்தைத் தரும் பெருமையில் சிறந்தவரே!

      பாலாய் --- பால் போலவும்,

     நூலாய் ---  இனிய தமிழ்நூல் போலவும்,

     தேனாய் ---  தேன் போலவும்,

     நீள் ஆய் பாகு ஆய் --- நீண்டு வருகின்ற ஆய்ந்த சர்க்கரைப் பாகு போலவும்

     வாய் சொல் கொடியார் தாம் --- தித்திக்கின்ற வாய்ச் சொல்லை உடைய கொடி போன்ற மாதர்கள் தாம்

     பாடா ஆடா வேள் தாவாலே பாடு ஆய் ஈடு அற்று ---  பாடி ஆடி வேட்கின்ற வலிமையினாலே, வேதனை அடைந்தவனாய், என் வலிமை அற்று,

      இடைபீறும் தோலாலே --- இடையிலே கிழிந்து போகும் தோலினாலும்,

     காலாலே ---  காற்றினாலும்,

     ஊனாலே --- மாமிசத்தாலும்

     சூழ் பாசக்  குடில் --- சூழப்பட்டுள்ளதும் பற்றுக்களுக்கு இடமானதும் ஆன குடிசை,

     மாசு தோயா --- குற்றங்கள் தோய்ந்ததும்,

     மாயா ஒயா நோயால் சோர்வாய் --- ஒளி மழுங்கியும், ஒழியாத நோயினால் தளர்ச்சி உற்றும்

     மாளக் கடவேனோ --- அடியேன் இறந்துபடக் கடவேனோ?


பொழிப்புரை


      பூமியில் உயர்ந்தோர்கட்கு எல்லாம் உயர்ந்தவரே!

     பிரமதேவருக்கு உண்மையை உபதேசித்தவரே!

     தலைவரே!

     சோதி மலையாகிய அருணகிரிப் பெருமானே!

     அறிவு மயமான ஆசார மூர்த்தியே!

     வானுலகை ஆளுகின்ற முதல்வரே!

     பலவகைப்பட்ட வேதங்களுக்கும் உட்பொருளாய் விளங்குபவரே!

     வேலாயுதத்தை உடையவரே!

     குழந்தையே!

     தூய வடிவினரே!

     செவ்வேள் பரமனே!

     வேடர் மகளாகிய வள்ளிநாயகியின் கணவரே!

     வீர்த்துக்கு ஆதாரம் ஆனவரே!

     ஆறு ஆதாரங்கட்கும் உரியவரே!

     வீரமூர்த்தியே!

     வீரத்தைத் தரும் பெருமையில் சிறந்தவரே!

         பால் போலவும், இனிய தமிழ்நூல் போலவும், தேன் போலவும், நீண்டு வருகின்ற ஆய்ந்த சர்க்கரைப் பாகு போலவும் தித்திக்கின்ற வாய்ச் சொல்லை உடைய கொடி போன்ற மாதர்கள் தாம் பாடி ஆடி வேட்கின்ற வலிமையினாலே, வேதனை அடைந்தவனாய், என் வலிமை அற்று, இடையிலே கிழிந்து போகும், தோலினாலும், காற்றினாலும், மாமிசத்தாலும் சூழப்பட்டுள்ளதும் பற்றுக்களுக்கு இடமானதும் ஆன குடிசை, குற்றங்கள் தோய்ந்ததும், ஒளி மழுங்கியும், ஒழியாத நோயினால் தளர்ச்சி உற்றும் அடியேன் இறந்துபடக் கடவேனோ?


விரிவுரை


பாலாய் நூலாய் தேனாய் நீள் ஆய் பாகு ஆய் வாய்சொல் கொடியார் ---

கொடியார் - கொடி போன்ற மாதர்கள்.  பெண்களின் வாயில் இருந்து வரும் சொற்கள் காமுகர்க்குப் பால் போலவும், இனிய தமிழ் நூல் போலவும், தேன் போலவும், சர்க்கரைப் பாகு போலவும் தித்திக்கும்.

நீராடாவிடில் நாறுகின்ற உடம்பு கூடக் காமுகர்க்கு கரும்புபோல் இனிக்கும்.

பாடா வாடா வேடா வாலே ---

பாடா வாடா வேள் தாவாலே. வேள் - விருப்பம்.  தாவு - வலிமை.  பொதுமாதர்கள் ஆடவர் முன் ஆடியும் பாடியும் விரும்பச் செய்கின்ற சமர்த்தினால் ஆடவர் மயங்கித் தியங்குவர்.

பாடு ஆய் ஈடு அற்று ---

பாடு - துன்பம்.  ஈடு அற்று - வலிமை அற்று.  பெரிதும் துன்புற்று வலிமையற்றுப் போவார்கள்.

இடை பீறும் தோலாலே ---

தோல் இடையில் கிழியும் தன்மை உடையது.  இந்த உடம்பு தோலால் மூடப்பட்டது.

தோல்படுத்து உதிர நீரால் சுவரெடுத்து        ---  அப்பர்.

காலாலே ---

தச வாயுக்களால் சூழப்பட்டது இந்த உடம்பு.

தோலால் சுவர் வைத்து நாலாறு காலில் சுமத்தி...   --- கந்தர் அலங்காரம்.

ஊனாலே சூழ் ---

ஊன் - மாமிசம்.  மாமிசத்தால் ஆள உடம்பு.

ஊனேறெலும்பு சீசீமலங்கள்              ---  திருப்புகழ்.

பாசக்குடில் ---

குடில் - குடிசை.  பாசபந்தங்களுக்கு உறைவிடமான உடல்.

குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி
குலைந்த செயிர்மயிர் குருதியொ டிவைபல கசுமாலம்...     ---  திருப்புகழ்.

மாசு தோயா மாயா ---

குற்றம் பல உடைய உடம்பு.  மாயைக்கு உறைவிடமானது.

ஓயா நோயால் சோர்வாய் மாளக் கடவேனோ ---

ஓய்வில்லாத நோய் முதலிய துன்பத்தால் சோர்ந்து அடியேன் பிறவியின் நோக்கத்தை உணர்ந்து உய்வு பெறாமல் வீணே மாண்டு போகலாமா அவ்வாறு மாய்ந்து போகாமல் சிறியேனை ஆட்கொள்ள வேண்டும்.

ஞாலா மேலா ---

ஞாலம் - உலகம்.  உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்பது தொல்காப்பியம்.  ஆகவே உலகில் உயர்ந்தோர்கட்கெல்லாம் மேலானவர் முருகன் என்பதை உணர்க.

வேதா போதா ---

வேதா - வேதத்தை ஓதுகின்ற பிரமன்.  வேதத்தை உணர்ந்து பிரமதேவருக்கு உண்மைப் பொருளை உபதேசித்தவர் முருகப் பெருமான்.

நாதா ---

நாதன் - தலைவன்.  நாத வடிவானவர் எனினும் பொருந்தும்.

தனிப்பெரும் தலைவன் முருகன்.  அதனால் சிவபெருமான் உபதேசம் கேட்கும்போது, "நாதா குமரா நம" என்று துதி செய்தார்.

சோதிக் கிரியோனே ---

சோதி மலை - திருவண்ணாமலை.  மாலும் அயனும் தம்மில் நான்பரம் நான்பரம் என்று கூறி மலைந்தபோது, இருவருக்கிடையே சிவபரம்பொருள் சோதியாய் நின்றருளினார்.

ஞான ஆசாரா ---

அறிவு மயமான ஆசார முதல்வன் முருகன்.

வான் ஆள் கோனே ---

வான உலகை ஆளுகின்ற அதிபன் முருகன்.

நானா வேதப் பொருளோனே ---

வேதங்கள் பல. ருக்வேதம், யஜூர்வேதம், சாமவேதம், அதர்வணவேதம், தனுர்வேதம், ஆயுள்வேதம், அர்த்த வேதம், காந்தர்வவேதம் என்பனவாதி பல. இவைகள் எல்லாவற்றுக்கும் உட்பொருளாய் விளங்குபவன் முருகன்.



சீல ஆகாரா ---

சீலம் - ஒழுக்கம்.  ஆகாரம் - வடிவு. ஒழுக்க வடிவாகத் திகழ்பவன் முருகன்.

வீர ஆதாரா ---

வீரத்துக்கு ஆதாரமானவன் முருகன்.

ஆறு ஆதாரா ---

ஆறு ஆதாரங்கள்.  மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், ஆநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்ற ஆதாரங்கட்கும் உரியவன் ஆறுமுகப் பெருமான்.  ஆறு ஆதாரங்களிலும் விளங்குபவன்.  ஆறு ஆதாரங்களே ஆறுபடை வீடுகள்.


கருத்துரை


அருணை அண்ணலே, அடியேன் அவமே அழியாவண்ணம் ஆண்டருள்.

No comments:

Post a Comment

28. குளிர் காய நேரம் இல்லை

  "உருவெடுத்த நாள்முதலா ஒருசாணும்    வளர்க்கஉடல் உழல்வ தல்லால், மருவிருக்கும் நின்பாத மலர்தேடித்    தினம்பணிய மாட்டேன்! அந்தோ! திருவிரு...