திருவண்ணாமலை - 0573. பாண மலரது





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பாண மலரது (திருவருணை)

திருவருணை முருகா!
உன்னை விரும்பும் பெண்ணாகிய என்னைத் தழுவி அருள்

தான தனதன தத்தம் ...... தனதான


பாண மலரது தைக்கும் ...... படியாலே

பாவி யிளமதி கக்குங் ......       கனலாலே

நாண மழிய வுரைக்குங் ......     குயிலாலே

நானு மயலி லிளைக்குந் ......    தரமோதான்

சேணி லரிவை யணைக்குந் ...... திருமார்பா

தேவர் மகுட மணக்குங் ......     கழல்வீரா

காண அருணையில் நிற்குங் ......கதிர்வேலா

காலன் முதுகை விரிக்கும் ......   பெருமாளே.


பதம் பிரித்தல்


பாண மலர் அது தைக்கும் ......   படியாலே,

பாவி இளமதி கக்கும் ......        கனலாலே,

நாணம் அழிய உரைக்கும் ......   குயிலாலே,

நானும் மயலில் இளைக்கும் ...... தரமோ தான்?

சேணில் அரிவை அணைக்கும் ...... திருமார்பா!

தேவர் மகுடம் மணக்கும் ......    கழல்வீரா!

காண அருணையில் நிற்கும் ......கதிர்வேலா!

காலன் முதுகை விரிக்கும் ......   பெருமாளே.


பதவுரை


         சேணில் அரிவை அணைக்கும் திருமார்பா --- விண்ணுலகத்தில் வளர்ந்த தெய்வயானை அம்மை தழுவுகின்ற அழகிய மார்பினரே!

         தேவர் மகுடம் மணக்கும் கழல்வீரா --- தேவர்களுடைய மகுடங்கள் நறுமணம் வீசும் திருக்கழலை உடைய வீரமூர்த்தியே!

         காண அருணையில் நிற்கும் கதிர்வேலா --- அடியார்கள் கண்டு தொழ அருணாசலத்தில் எழுந்தருளி உள்ள ஒளி மிகுந்த வேலாயுதரே!

         காலன் முதுகை விரிக்கும் பெருமாளே --- அடியார் பொருட்டு இயமனை அவன் முதுகு விரிய அடித்து விரட்டும் பெருமையில் மிகுந்தவரே!

         பாணம் மலர் அது தைக்கும் படியாலே --- மன்மதனுடைய மலர்க்கணைகள் தைக்கும் காரணத்தாலும்,

         பாவி இளமதி கக்கும் கனலாலே --- பாவியாகிய இளம் பிறைச் சந்திரன் பொழிகின்ற நெருப்பாலும்,

         நாணம் அழிய உரைக்கும் குயிலாலே --- என்னுடைய நாணம் அழியுமாறு கூவுகின்ற குயிலாலும்,

         நானும் மயலில் இளைக்கும் தரமோ தான் --- அடியவளாகிய நான் காம மயக்கத்தால் இளைத்துப் போவது தகுதியாகுமோ?


பொழிப்புரை


         விண்ணுலகத்தில் வளர்ந்த தெய்வயானை அம்மை தழுவுகின்ற அழகிய மார்பினரே!

         தேவர்களுடைய மகுடங்கள் நறுமணம் வீசும் திருக்கழலை உடைய வீரமூர்த்தியே!

         அடியார்கள் கண்டு தொழ அருணாசலத்தில் எழுந்தருளி உள்ள ஒளி மிகுந்த வேலாயுதரே!

         அடியார் பொருட்டு இயமனை அவன் முதுகு விரிய அடித்து விரட்டும் பெருமையில் மிகுந்தவரே!

         மன்மதனுடைய மலர்க்கணைகள் தைக்கும் காரணத்தாலும், பாவியாகிய இளம்பிறைச் சந்திரன் பொழிகின்ற நெருப்பாலும், என்னுடைய நாணம் அழியுமாறு கூவுகின்ற குயிலாலும், அடியவளாகிய நான் காம மயக்கத்தால் இளைத்துப் போவது தகுதியாகுமோ?


விரிவுரை


இத் திருப்புகழ் அகப் பொருள் துறையில் அமைந்தது.  முருகனை விரும்பிய ஒரு தலைவி வருந்துகின்றாள்.

பாண மலர் --- 

தலைவனை நாடும் தலைவிக்கு மன்மதனுடைய கணையும், நிலாவும், குயிலும் மிகுந்த துயரத்தை விளைவிக்கும்.

சேணில் அரிவை ---

சேண் - ஆகாயம். விண்ணுலகில் தெய்வ யானையால் வளர்க்கப் பெற்ற தேவசேனையை முருகன் தழுவி அருள் புரிந்தார்.

தேவர் மகுடம் மணக்கும் கழல் வீரா ---

முப்பத்து முக்கோடி தேவர்களும் முருகப் பெருமானே முழுமுதற் கடவுள் என்று வீழ்ந்து வணங்குவதனால், முருகன் திருவடியாகிய மலர் தோய, அவர்கள் மகுடங்கள் நறுமணம் வீசுகின்றன.

இமையவர் முடித்தொகையும் வனசரர் பொருப்பும் எனது
இதயமும் மணக்கும் இருபாதச் சரோருகனும்.         --- திருவகுப்பு.

வீடும் சுரர் மாமுடி வேதமும், வெம்
காடும் புனமும் கமழும் கழலே …        --- கந்தர் அநுபூதி.


காண அருணையில் நிற்கும் கதிர்வேலா ---

"காண அரிவை முன் நிற்கும்" என்றும் பாடம். இந்த வண்ணம் பாடம் என்று கொண்டால் இதில் ஒரு வரலாறு உள்ளது.  அரிவை - முருகம்மையார்.

முருகம்மையார் இடையறாது 'முருகா' 'முருகா' என்று ஓதிக் கொண்டு இருந்தார். அவருடைய கணவன் அம்மையின் அருமை பெருமைகளை உணராது, அடுத்த வீட்டுக்காரன் பேரைக் கூறுகின்றார் என்று பிழைபடக் கருதி ஐயுற்றான். "முருகா என்று கூறாதே" என்று தடுத்தான். நாப் பழக்கத்தால் அம்மையார் மீண்டும் மீண்டும் "முருகா! முருகா!” என்று ஒதினார்.  வெகுண்ட கணவன் வாள் எடுத்து வீசி, தடுத்த அம்மையார் கரத்தை வெட்டினான். உதிரம் ஒழுக அம்மையார் ஒருமுறை "முருகா" என்றார். முருகவேள் மயிலின் மீது வந்து காட்சி தந்தருளினார். மறுமுறை "முருகா" என்றார். கரம் வளர்ந்தது.  மூன்றாம் முறை "முருகா" என்றார். முருகன் அம்மையாரை மயிலின் மீது ஏறச் செய்து கந்தலோகம் சேர்ப்பித்து அருளினார்.

ஒருமுருகா என்று என் உள்ளம் குளிர, உவந்து உடனே
வருமுருகா என்று வாய்வெருவா நிற்ப, கை இங்ஙனே
தரு முருகா என்று தான் புலம்பா நிற்பத் தையல்முன்னே
திருமுருகாற்றுப் படை உடனே வரும் சேவகனே.

அரிவை முருகா என்று அழைக்கும் முன்னே வந்து
கரம் உதவி நின்ற கருணைப் பெரும் தேவா.
                                                               --- திருப்போரூர்ச் சந்நிதிமுறை.

முருகா அயில் முருகா என மொழியும் ஒரு மாதின்
ஒருகாதலன், அவள் கையினை உதிரம் பெருக அரிகால்,
அருளால் அது வளரும்படி அயர் தண் அளி ஆளா!
மரு மாலைகொள் மார்பா! எனை மறவேல் எனை மறவேல். --- பாம்பன் சுவாமிகள்.

 
காலன் முதுகை விரிக்கும் ---

அடியவர்கள் உயிரைப் பற்றும் பொருட்டு இயமன் வருவானாயின், கந்தவேள் கருணையுடன் கானமயில் மீது தோன்றி, அவன் ஓட அவன் முதுகு விரிய அடித்து விரட்டி விலக்கி அருள் புரிவான்.

"கான மயிலை நடத்தும் பெருமாளே" என்றும் பாடம்.


கருத்துரை 

அருணைத் தேவே, உன்னை விரும்பும் பெம்ணாகிய என்னைத் தழுவுவாயாக.



No comments:

Post a Comment

28. குளிர் காய நேரம் இல்லை

  "உருவெடுத்த நாள்முதலா ஒருசாணும்    வளர்க்கஉடல் உழல்வ தல்லால், மருவிருக்கும் நின்பாத மலர்தேடித்    தினம்பணிய மாட்டேன்! அந்தோ! திருவிரு...