அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
பரியகைப் பாசம்விட்டு
(திருவருணை)
திருவருணை முருகா!
உன்னையே ஓதி உய்ய அருள்
தனதனத்
தானனத் தனதனத் தானனத்
தனதனத் தானனத் ...... தனதான
பரியகைப்
பாசம்விட் டெறியுமக் காலனுட்
பயனுயிர்ப் போயகப் ...... படமோகப்
படியிலுற்
றாரெனப் பலர்கள்பற் றாவடற்
படரெரிக் கூடுவிட் ...... டலைநீரிற்
பிரியுமிப்
பாதகப் பிறவியுற் றேமிகப்
பிணிகளுக் கேயிளைத் ...... துழல்நாயேன்
பிழைபொறுத்
தாயெனப் பழுதறுத் தாளெனப்
பிரியமுற் றோதிடப் ...... பெறுவேனோ
கரியமெய்க் கோலமுற் றரியினற் றாமரைக்
கமைவபற் றாசையக் ...... கழலோர்முன்
கலைவகுத் தோதிவெற் பதுதொளைத் தோனியற்
கடவுள்செச் சேவல்கைக் ...... கொடியோனென்
றரியநற்
பாடலைத் தெரியுமுற் றோற்கிளைக்
கருணையிற் கோபுரத் ...... துறைவோனே
அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற்
றயருமச் சேவகப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
பரிய
கைப் பாசம் விட்டு எறியும் அக் காலனுள்
பயன் உயிர்ப் போய் அகப் ...... பட, மோகப்
படியில்
உற்றார் எனப் பலர்கள் பற்றா, அடல்
படர் எரிக் கூடுவிட்டு, ...... அலைநீரில்
பிரியும்
இப் பாதகப் பிறவி உற்றே, மிகப்
பிணிகளுக்கே இளைத்து ...... உழல் நாயேன்,
பிழை பொறுத்தாய் என, பழுது அறுத்து ஆள் எனப்
பிரியம் உற்று ஓதிடப் ...... பெறுவேனோ?
கரிய
மெய்க் கோலம் உற்ற, அரியின் நல் தாமரைக்கு
அமைவ பற்று ஆசை அக் ...... கழலோர்முன்,
கலை
வகுத்து ஓதி, வெற்பு அது தொளைத்தோன், இயல்
கடவுள், செச் சேவல் கைக் ...... கொடியோன்
என்று
அரிய
நல் பாடலைத் தெரியும் உற்றோர் கிளைக்கு
அருணையில் கோபுரத்து ...... உறைவோனே!
அடவியில்
தோகை பொன் தடமுலைக்கு ஆசை உற்று,
அயரும் அச் சேவகப் ...... பெருமாளே.
பதவுரை
கரிய மெய்க் கோலம்
உற்ற
--- உடல் கரிய நிறம் கொண்ட
அரியின் நல் தாமரைக்கு அமைவ பற்று ஆசை ---
திருமாலின் நல்ல தாமரைக்கு ஒப்பான கண்ணையே மலராகக் கொள்வதற்கு ஆசை கொண்ட
அக் கழலோர் முன் --- அந்தத்
திருவடியை உடையவராம் சிவபெருமான் சந்நிதானத்தில்,
கலை வகுத்து ஓதி --- கலை நூல்
கருத்தை எடுத்து ஓதினவன்,
வெற்பு அது தொளைத்தோன் --- கிரவுஞ்ச
மலையைத் தொளை செய்தவன்,
இயல் கடவுள் --- தகுதி வாய்ந்த கடவுள்,
செச் சேவல் கைக் கொடியோன் என்று ---
சிவந்த சேவல் கொடியைக் கையில் கொண்டவன் என்று,
அரிய நல் பாடலைத்
தெரியும் உற்றோர் கிளைக்கு --- அருமையான நல்ல தமிழ்ப் பாடல்களைத் தெரிந்து கூறி
அடைவோர்களை, தெரிந்து கூறி
அடைவோர் கூட்டத்துக்கு அருள் பாலிக்க
அருணையில் கோபுரத்து உறைவோனே ---
திருவண்ணாமலையில் கோபுரத்தில் வீற்றிருப்பவரே!
அடவியில் தோகை --- கானகத்தில்
வசித்த மயில் போன்ற வள்ளி பிராட்டியின்
பொன் தடமுலைக்கு --- அழகிய பெரிய முலைகளின்
மீது
ஆசை உற்று அயரும் அச் சேவகப் பெருமாளே
--- விருப்புற்று அயர்ச்சி அடைந்த,
ஆற்றலுடைய, பெருமையில் சிறந்தவரே!
பரிய கைப் பாசம்
விட்டு எறியும் அக் காலன் உள் --- பருத்த கையில் உள்ள பாசக் கயிற்றை
விட்டு வீசும் அந்தக் காலனிடத்தே
பயன் உயிர்ப் போய் அகப் பட --– பயன்
தரும் இந்த உயிர் போய் அகப்பட்டுக் கொள்ள,
மோகப் படியில் --- இப்பூதலத்தில் ஆசை
வைத்து,
உற்றார் எனப் பலர்கள் பற்றா --- சுற்றத்தார்
எனப் பலரும் என் உடலைப் பற்றி,
அடல் படர் எரிக் கூடுவிட்டு ---
வலிமையாகப் படர்ந்து எரியும் நெருப்பிலே போட்டு விட்டு,
அலை நீரில் பிரியும் --- அலை வீசும்
நீரில் குளித்து பாசத்தினின்றும் பிரிந்து போவார்கள்.
இப் பாதகப் பிறவி உற்றே --- பாவத்துக்கு
இடமான இந்தப் பிறவியை அடைந்து,
மிகப் பிணிகளுக்கே இளைத்து உழல் நாயேன்
--- மிகுந்த நோய்களினால் இளைத்துத் திரிகின்ற நாயேனுடைய,
பிழை பொறுத்தாய் என --- பிழையைப்
பொறுத்தவனே என்றும்,
பழுது அறுத்து ஆள் என --- என்
குற்றங்களைக் களைந்து ஆண்டருள் என்றும்
பிரியம் உற்று ஓதிடப் பெறுவேனோ ---
அன்பு கொண்டு, அடியேன் தேவரீரைப்
புகழும் பேற்றைப் பெறுவேனோ?
பொழிப்புரை
உடல் கரிய நிறம் கொண்ட திருமாலின் நல்ல
தாமரைக்கு ஒப்பான கண்ணையே மலராகக் கொள்வதற்கு ஆசை கொண்ட அந்தத் திருவடியை
உடையவராம் சிவபெருமான் சந்நிதானத்தில், கலை
நூல் கருத்தை எடுத்து ஓதினவன், கிரவுஞ்ச மலையைத்
தொளை செய்தவன், தகுதி வாய்ந்த கடவுள், சிவந்த சேவல் கொடியைக் கையில் கொண்டவன்
என்று, அருமையான நல்ல
தமிழ்ப் பாடல்களைத் தெரிந்து கூறி அடைவோர்களை, தெரிந்து கூறி அடைவோர் கூட்டத்துக்கு
அருள் பாலிக்க திருவண்ணாமலையில் கோபுரத்தில் வீற்றிருப்பவரே!
கானகத்தில் வசித்த மயில் போன்ற வள்ளி
பிராட்டியின் அழகிய பெரிய முலைகளின் மீது விருப்புற்று அயர்ச்சி அடைந்த, ஆற்றலுடைய, பெருமையில் சிறந்தவரே!
பருத்த கையில் உள்ள பாசக் கயிற்றை
விட்டு வீசும் அந்தக் காலனிடத்தே பயன் தரும் இந்த உயிர் போய் அகப்பட்டுக் கொள்ள, இப்பூதலத்தில் ஆசை வைத்து, சுற்றத்தார் எனப் பலரும் என் உடலைப்
பற்றி, வலிமையாகப் படர்ந்து
எரியும் நெருப்பிலே போட்டு விட்டு,
அலை
வீசும் நீரில் குளித்து பாசத்தினின்றும் பிரிந்து போவார்கள். பாவத்துக்கு இடமான
இந்தப் பிறவியை அடைந்து, மிகுந்த நோய்களினால்
இளைத்துத் திரிகின்ற அடியேனுடைய, பிழையைப் பொறுத்தவனே என்றும், என் குற்றங்களைக் களைந்து ஆண்டருள்
என்றும் அன்பு கொண்டு, அடியேன் தேவரீரைப்
புகழும் பேற்றைப் பெறுவேனோ?
விரிவுரை
பரிய
கைப் பாசம் விட்டு எறியும் அக் காலன் ---
காலன்
என்பவன் இயமனுடைய அமைச்சன். அவனுடைய கை மிகவும் பருத்திருக்கும். அத்தகைய பருத்த
கையில் உள்ள பாசக் கயிற்றை எடுத்து வீசி உயிரைப் பற்றுவான்.
பயன்
உயிர் போய் அகப்பட ---
இந்த
உயிர் இயமனிடம் பயன்படுமாறு போய் அகப்பட்டுக் கொள்ளும்.
மோகப்
படியில் உற்றார் எனப் பலர்கள் பற்றா ---
இந்த
உலகில் என்பால் அன்பு வைத்திருந்த சுற்றத்தார்கள் மிகவும் வேதனைப்பட்டு என்
உடம்பைப் பற்றிக் கொண்டு அழுவார்கள்.
அடல்
படர் எரிக் கூடுவிட்டு ---
அழுதபின், இந்த உடம்பை வலிமையாக மண்டி எரியும்
தீயில் சேர்த்து விடுவர்.
அலை
நீரில் பிரியும் ---
சுட்டுச்
சாம்பரான பின் சுற்றி நின்று, அழுத சுற்றத்தார்கள்
குளிர்ந்த நீரில் குளித்து பாசம் கழன்று தத்தம் இருப்பிடம் நோக்கிப் போவார்கள்.
நீரில்
படிந்துவிடு பாசத்து அகன்று --- இத்தாரணி
திருப்புகழ்.
ஊர்
எல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை
நீக்கிப் பணம் என்று பேர் இட்டு
சூரை
அம் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில்
மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே. --- திருமந்திரம்.
பாதகப்
பிறவி உற்றே
---
ஆன்மாக்கள்
செய்த வினையினால் இவ்வுடம்பு வருகின்றது.
தீவினையால் நோய்வாய்ப்பட்ட உடம்பு வருகின்றது.
பிணிகளுக்கே
இளைத்து உழல் நாயேன் ---
ஒவ்வொரு
நோயும் ஒவ்வொரு கன்மத்தினால் வருகின்றது.
பல பிணிகளால் இளைத்துத் திரிகின்ற அடியேனுடைய பிழை பொறுத்து ஆள் என்று
சுவாமிகள் உருக்கமாக வேண்டுகின்றார்.
கரியமெய்க்
கோலம் உற்ற அரியின் நல்தாமரைக்கு அமைவ
பற்றாசை அக் கழலோர் ---
இந்த
அடி திருமால் கண்மலரைச் சாத்திய வரலாற்றைக் குறிக்கின்றது.
சலந்தரனை
வதைத்த சக்கராயுதத்தைப் பெறும் பொருட்டு திருவீழிமிழலையில் நாராயணர் தாமரைக் குளம்
அமைத்து, நாள்தோறும் ஆயிரம்
மலர்களால் அர்ச்சித்து வந்தார். அவருடைய
அன்பின் திறத்தை உலகுக்கு அறிவிக்கவேண்டி, அரனார் ஒருநாள் ஒரு மலரை
மறைத்துவிட்டார்.
அக்
குறையை நோக்கி, நிறைவு
செய்யும்பொருட்டு, திருமால் தமது தாமரை
போன்ற கண்ணை அகழ்ந்து அர்ச்சித்தார்.
நீற்றினை
நிறையப்பூசி நித்தல் ஆயிரம் பூக் கொண்டு
ஏற்றுழி
ஒருநாள் ஒன்று குறைய, கண் நிறைய இட்ட
ஆற்றலுக்கு
ஆழிநல்கி, அவன்கொணர்ந்து இழிச்சும்கோயில்
வீற்றிருந்து
அளிப்பர்வீழி மிழலையுள் விகிர்தனாரே. ---
அப்பர்.
குறிக்கொண்டு
இருந்து செந்தாமரை ஆயிரம் வைகல்வைகல்
நெறிப்பட
இண்டை புனைகின்ற மாலை நிறை அழிப்பான்,
கறைக்கண்ட!
நீ ஒரு பூக் குறைவித்துக் கண் சூல்விப்பதே?
பிறைத்துண்ட
வார்சடையாய்! பெருங் காஞ்சி எம் பிஞ்ஞகனே! ---
அப்பர்.
கலை
வகுத்தோன் ---
திருஞானசம்பந்தராக
வந்து, சிவசந்நிதியில்
தேவாரப் பாடலைப் பாடியவர் என்றும்,
அல்லது
கலைகளின் சாரமான மூலப் பொருளை உபதேசித்தவர் என்றும் பொருள்படும்.
அரியநல்
பாடலைத் தெரியும் உற்றோர் கிளைக்கு ---
சிறந்த
செந்தமிழ்ப் பாடலைப் பாடித் துதித்து வரும் அடியார்களின் கூட்டத்துக்கு
அருள்புரியும் பொருட்டு திருவண்ணாமலை திருக்கோபுர வாசலில் திருமுருகவேள்
எழுந்தருளி இருக்கின்றார்.
கருத்துரை
அருணையில்
மேவும் அண்ணலே, உம்மை ஓதி உய்ய அருள்
செய்யும்.
No comments:
Post a Comment