அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
தோதகப் பெரும்
(திருவருணை)
திருவருணை முருகா!
இனிய தமிழ்ப் பாடல்களால் உன்னைத் துதிக்க அருள்
தான
தத்த தந்த தான தத்த தந்த
தான தத்த தந்த ...... தனதான
தோத
கப்பெ ரும்ப யோத ரத்தி யங்கு
தோகை யர்க்கு நெஞ்ச ...... மழியாதே
சூலை
வெப்ப டர்ந்த வாத பித்த மென்று
சூழ்பி ணிக்க ணங்க ...... ளணுகாதே
பாத
கச்ச மன்தன் மேதி யிற்பு குந்து
பாசம் விட்டெ றிந்து ...... பிடியாதே
பாவ
லற்கி ரங்கி நாவ லர்க்கி சைந்த
பாடல் மிக்க செஞ்சொல் ...... தரவேணும்
வேத
மிக்க விந்து நாத மெய்க்க டம்ப
வீர பத்ர கந்த ...... முருகோனே
மேரு
வைப்பி ளந்து சூர னைக்க டிந்து
வேலை யிற்றொ ளைந்த ...... கதிர்வேலா
கோதை பொற்கு றிஞ்சி மாது கச்ச ணிந்த
கோம ளக்கு ரும்பை ...... புணர்வோனே
கோல
முற்றி லங்கு சோண வெற்பு யர்ந்த
கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
தோதகப்
பெரும் பயோதரத்து, இயங்கு
தோகையர்க்கு நெஞ்சம் ...... அழியாதே,
சூலை,
வெப்பு, அடர்ந்த வாத, பித்தம், என்று
சூழ் பிணிக் கணங்கள் ...... அணுகாதே,
பாதகச்
சமன் தன் மேதியில் புகுந்து,
பாசம் விட்டு எறிந்து ...... பிடியாதே,
பாவலற்கு
இரங்கி, நாவலர்க்கு இசைந்த
பாடல் மிக்க செஞ்சொல் ...... தரவேணும்.
வேதம்
மிக்க விந்து நாத! மெய்க் கடம்ப!
வீர பத்ர கந்த! ...... முருகோனே!
மேருவைப்
பிளந்து, சூரனைக் கடிந்து,
வேலையில் தொளைந்த ...... கதிர்வேலா!
கோதை, பொன் குறிஞ்சி மாது, கச்சு அணிந்த
கோமளக் குரும்பை ...... புணர்வோனே!
கோலம்
உற்று இலங்கு சோண வெற்பு உயர்ந்த
கோபுரத்து அமர்ந்த ...... பெருமாளே.
பதவுரை
வேதம் மிக்க --- வேதங்களால்
மிகுதியாகப் பாராட்டப்பட்ட
விந்து நாத --– விந்து நாதத்தின்
மூலப் பொருளே!
மெய்க் கடம்ப --– உடம்பில் கடப்ப
மாலை அணிந்தவரே!
வீர பத்ர கந்த –-- வீரவாளை உடைய
கந்தக் கடவுளே!
முருகோனே --- முருகப் பெருமானே!
மேருவைப் பிளந்து --- மேரு மலையைப்
பிளந்து,
சூரனைக் கடிந்து --- சூரபன்மனை
அழித்து,
வேலையில் தொளைந்த கதிர்வேலா ---
கடலில் குளித்து எழுந்த ஒளிமிகுந்த வேலாயுதத்தை உடையவரே!
கோதை --- பெண்மணியும்,
பொன் குறிஞ்சி மாது --- அழகிய
குறிஞ்சி நிலப் பெண்ணுமாகிய வள்ளிநாயகியின்
கச்சு அணிந்த கோமளக் குரும்பை புணர்வோனே
--- ரவிக்கை அணிந்த அழகிய இளநீரை ஒத்த தனங்களை அணைந்தவரே!
கோலம் உற்று இலங்கு --- அழகு நிறைந்து
விளங்கும்
சோண வெற்பு --- திருவண்ணாமலையில்
உயர்ந்த கோபுரத்து அமர்ந்த பெருமாளே ---
உயர்ந்துள்ள கோபுரத்தின்கண் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!
தோதக --- மன நோயைத் தரும்
பெரும் பயோதரத்து இயங்கும் --- பெரிய
கொங்கைகளைக் கொண்டு நடக்கும்
தோகையர்க்கு நெஞ்சம் அழியாதே ---
விலைமாதர்கள் பொருட்டு என் உள்ளம் அழிவுறாமல்,
சூலை --- சூலைநோய்,
வெப்பு --- சுரநோய்,
அடர்ந்த வாதம் --- மிகுந்த வாதநோய்,
பித்தம் என்று --- பித்தநோய் என்ற
பேர்களுடன்
சூழ் பிணிக் கணங்கள் அணுகாதே ---
சூழுகின்ற நோய்க் கூட்டங்கள் அடியேனை நெருங்காமல்,
பாதகச் சமன் --- பாவியாகிய இயமன்
தன் மேதியில் புகுந்து --- தனது எருமை
வாகனத்தில் ஏறி வந்து,
பாசம் விட்டு எறிந்து பிடியாதே ---
பாசக் கயிற்றை என் மீது வீசி என் உயிரைப் பற்றாமல்,
பாவலற்கு இரங்கி --- பாவலனாகிய
நக்கீரர்க்கு இரக்கம் காட்டியவரே!
நாவலர்க்கு இசைந்த --- புலவர்கள்
ஒப்பத்தக்க
பாடல் --- பாடலையும்,
மிக்க செஞ் சொல் தரவேணும் --- இனிமை
மிகுந்த செவ்விய சொற்களையும் அடியேனுக்குத் தந்தருள வேண்டும்.
பொழிப்புரை
வேதங்களால் மிகுதியாகப் பாராட்டப்பட்ட
விந்து நாதத்தின் மூலப் பொருளே!
உடம்பில் கடப்ப மாலை அணிந்தவரே!
வீரவாளை உடைய கந்தக் கடவுளே!
முருகப் பெருமானே!
மேரு மலையைப் பிளந்து, சூரபன்மனை அழித்து, கடலில் குளித்து எழுந்த ஒளிமிகுந்த
வேலாயுதத்தை உடையவரே!
பெண்மணியும், அழகிய குறிஞ்சி நிலப் பெண்ணுமாகிய
வள்ளிநாயகியின் ரவிக்கை அணிந்த அழகிய இளநீரை ஒத்த தனங்களை அணைந்தவரே!
அழகு நிறைந்து விளங்கும்
திருவண்ணாமலையில் உயர்ந்துள்ள கோபுரத்தின்கண் வீற்றிருக்கும் பெருமையில்
சிறந்தவரே!
மன நோயைத் தரும் பெரிய கொங்கைகளைக்
கொண்டு மடக்கும் விலைமாதர்கள் பொருட்டு என் உள்ளம் அழிவுறாமல்,
சூலைநோய், சுரநோய், மிகுந்த வாதநோய், பித்தநோய் என்ற பேர்களுடன் சூழுகின்ற
நோய்க் கூட்டங்கள் அடியேனை நெருங்காமல்,
பாவியாகிய இயமன் தனது எருமை வாகனத்தில்
ஏறி வந்து, பாசக் கயிற்றை என்
மீது வீசி என் உயிரைப் பற்றாமல்,
பாவலனாகிய நக்கீரர்க்கு இரக்கம்
காட்டியவரே!
புலவர்கள் ஒப்பத்தக்க பாடலையும், இனிமை மிகுந்த செவ்விய சொற்களையும்
அடியேனுக்குத் தந்தருள வேண்டும்.
விரிவுரை
தோதகம் ---
மனத்துயர். மாதர் ஆசையால் மனத்துயரம் மேலிடும்.
சூலை
---
பல
மாதர்களுடன் உறவு கொள்ளுவதால் சூலை,
வெப்பு
நோய், வாதம், பித்தம் முதலிய நோய்கள் சூழப் பெற்று
மாந்தர் வேதனைப் படுவர்.
பாதகச்
சமன் ---
இரக்கம்
இன்றி யாரையும் பற்றித் துயரம் புரிவதால் பாதகன் என்றார்.
ஏழை, பணக்காரன், இளைஞன், முதியவன் என்ற வேற்றுமை பாராமல்
எல்லாரிடமும் சமமாக நடப்பதனால் இயமன் சமன் எனப் பேர் பெற்றான்.
மேதி
---
மேதி
- எருமை. எருமை எதற்கும் அஞ்சாது நிற்கும் முரட்டுத் தனம் உடையது. அஞ்சா நெஞ்சு
உடைய இயமன், அஞ்சும் இயல்பே
அறியாத எருமையைத் தனக்கு வாகனமாகக் கொண்டு வருவான்.
இயமனுடைய
எருமையின் உக்கிரம் இத் தன்மை உடையது என்று அடிகளார் அடியில் கண்ட பாடலில்
கூறுகின்றார்...
தமர
குரங்களும் கார்இருட் பிழம்பு
மெழுகிய
அங்கமும் பார்வையில் கொளுந்து
தழலுமிழ்
கண்களும் கொளமொத்த கொம்பும்
உளகதக்
கடமாமேல்...... --- திருப்புகழ்.
பாவலற்கு
இரங்கி ---
சிறந்த
பாவலராகிய நக்கீரருக்கு முருகவேள் அருள் புரிந்த அருட்செயலை இந்தச் சொற்றொடர்
கூறுகின்றது.
நாவலர்க்கு
இசைந்த பாடல்மிக்க செஞ்சொல் தரவேணும் ---
புலவர்
பெருமக்கள் மெச்சிப் பாராட்டக் கூடிய பாடலையும், அப் பாடலில் இனிய கணியமுதன்ன செவ்விய
செழுஞ் சொற்களையும் முருகனிடம் அடிகளார் வேண்டுகின்றார்.
அருணகிரி
நாதர் பாடியருளிய பாடல்கள் மதுரம் கனிந்த இன் தமிழ்ப் பாடல்கள் ஆகும்.
வேத
மிக்க விந்து நாத ---
விந்து
--- வரிவடிவம்.
நாதம்
--- ஒலிவடிவம்.
விந்து
--- பீடம்.
நாதம்
--- இலிங்கம்.
இறைவன்
இவைகளின் மூலப் பொருளாக விளங்குகின்றான்.
இவைகளின் நுட்பதிட்பங்களை வேதம் விளம்புகின்றது.
வீர
பத்ர கந்த ---
பத்ரம்
- வாள்.
பத்திரம்
வாங்கித் தான்முன் நினைந்த அப் பரிசே செய்தான்....
--- பெரியபுராணம்.
பத்ரம்
- உயர்வு.
வீரத்தால்
உயர்ந்தவர் என்றும் பொருள்படும்.
மேருவைப்
பிளந்து ---
பாண்டி
நாட்டில் வந்த பஞ்சம் நீங்கும் பொருட்டு உக்கிரப் பெருவழுதி, மேருவைச் செண்டால் எரிந்து நிதி
கொணர்ந்த வரலாற்றைக் குறிக்கும்.
கருத்துரை
அருணைக்
கோபுரத்து அமர்ந்த அண்ணலே, இனிய தமிழ்ப் பாடல்
பாட அருள் செய்.
No comments:
Post a Comment