திருவண்ணாமலை - 0570. தேதுஎன வாசம்உற்ற





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தேதென வாசமுற்ற (திருவருணை)

திருவருணை முருகா!
உன்னையே விரும்பும் இந்தப் பெண்ணைத்
தழுவிக் கொள்ள வரவேணும்.

தானன தான தத்த தானன தான தத்த
     தானன தான தத்த ...... தனதான


தேதென வாச முற்ற கீதவி நோத மெச்சு
     தேனளி சூழ மொய்த்த         ...... மலராலே

சீறும ராவெ யிற்றி லூறிய காளம் விட்ட
     சீதநி லாவெ றிக்கு             ...... மனலாலே

போதனை நீதி யற்ற வேதனை வாளி தொட்ட
     போர்மத ராஜ னுக்கு       ...... மழியாதே

போகமெ லாநி றைத்து மோகவி டாய்மி குத்த
     பூவையை நீய ணைக்க         ...... வரவேணும்

மாதினை வேணி வைத்த நாதனு மோது பச்சை
     மாயனு மாத ரிக்கு             ...... மயில்வீரா

வானவர் சேனை முற்றும் வாழம ராப திக்குள்
     வாரண மான தத்தை      ...... மணவாளா

மேதினி யோர்த ழைக்க வேயரு ணாச லத்து
     வீதியின் மேவி நிற்கு      ...... முருகோனே

மேருவை நீறெ ழுப்பி நான்முக னார்ப தத்தில்
     வேலடை யாள மிட்ட          ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


தேது என வாசம் உற்ற கீத விநோத மெச்சு,
     தேன் அளி சூழ மொய்த்த      ...... மலராலே,

சீறும் அரா எயிற்றில் ஊறிய காளம் விட்ட
     சீத நிலா எறிக்கும்             ...... அனலாலே,

போதனை, நீதி அற்ற வேதனை, வாளி தொட்ட
     போர் மத ராஜனுக்கும்          ...... அழியாதே,

போகம் எலா நிறைத்து, மோக விடாய் மிகுத்த
     பூவையை நீ அணைக்க         ...... வரவேணும்.

மாதினை வேணி வைத்த நாதனும், ஓது பச்சை
     மாயனும் ஆதரிக்கும்           ...... மயில்வீரா!

வானவர் சேனை முற்றும் வாழ் அமராபதிக்குள்
     வாரணம் ஆன தத்தை          ...... மணவாளா!

மேதினியோர் தழைக்கவே அருணாசலத்து
     வீதியின் மேவி நிற்கும்         ...... முருகோனே!

மேருவை நீறு எழுப்பி, நான்முகனார் பதத்தில்
     வேல் அடையாளம் இட்ட      ...... பெருமாளே.


பதவுரை


      மாதினை வேணி வைத்த நாதனும் --- கங்காதேவியைச் சடையில் வைத்துள்ள தலைவராகிய சிவபெருமானும்,

     ஓது பச்சை மாயனும் --- பச்சை நிறமுள்ள நாராயணரும்

     ஆதரிக்கும் மயில்வீரா --- விரும்புகின்ற, மயிலின் மீது வருகின்ற வீரமூர்த்தியே!

      வானவர் சேனை முற்றும் வாழ் அமராபதிக்குள் --- தேவர்களின் சேனைகள் அனைத்தும் வாழ்கின்ற அமராவதி என்கின்ற இந்திரனுடைய நகரில் இருந்த

     வாரணம் ஆன தத்தை மணவாளா --- ஐராவதம் என்னும் யானையால் வளர்க்கப் பெற்ற கிளி போன்ற தெய்வயானை அம்மையாரின் கணவரே!

       மேதினியோர் தழைக்கவே --- உலகில் உள்ளோர் செழிப்புற்று ஓங்கும் பொருட்டு,

     அருணாசலத்து வீதியின் மேவி நிற்கும் முருகோனே --- திருவண்ணாமலையின் திருவீதியில் விரும்பி வீற்றிருக்கும் முருகக் கடவுளே!

      மேருவை நீறு எழுப்பி --- மேரு மலையைப் பொடியாக்கி,

     நான்முகனார் பதத்தில் --- பிரமதேவனுடைய காலில்

     வேல் அடையாளம் இட்ட பெருமாளே --- வெற்றிக்கு அடையாளமாக விலங்கு பூட்டிய பெருமையில் சிறந்தவரே!

      தேது என -- ஒளியுடையதாய்,

     வாசம் உற்ற --- நறுமணம் கொண்டதாய்,

     கீத விநோதம் மெச்சு --- இசை விநோதங்களை விரும்பி,

     தேன் அளி சூழ மொய்த்த மலராலே --- தேன் உண்ணும் வண்டுகள் மொய்த்துள்ள மலர்களாலும்,

      சீறும் அரா எயிற்றில் ஊறிய காளம் விட்ட --- கோபித்து எழும் பாம்பின் பல்லில் ஊறிய நஞ்சினைக் கக்குகின்றது போல்,

     சீத நிலா எறிக்கும் அனலாலே ---  குளிரந்த சந்திரன் வீசுகின்ற நெருப்பினாலும்,

      போதனை --- பூவில் வாழ்பவனும்,

     நீதி அற்ற வேதனை --- நீதியில்லாதவனும் ஆகிய பிரமதேவன் மீது

     வாளி தொட்ட --- மலர்க்கணைகளைத் தொடுத்த,

     போர் மத ராஜனுக்கும் அழியாதே --- போரில் வல்ல மன்மதராஜனாலும் நான் அழியாத வண்ணம்,

      போகம் எலாம் நிறைத்து --- இன்பங்கள் அனைத்தையும் நிறையத் தந்து,

     மோக விடாய் மிகுத்த --- உம் மீது ஆசை விடாய் மிகுந்துள்ள

     பூவையை நீ அணைக்க வரவேணும் --- இந்தப் பெண்ணைத் தழுவும் பொருட்டு தேவரீர் வரவேணும்.


பொழிப்புரை
 

         கங்காதேவியைச் சடையில் வைத்துள்ள தலைவராகிய சிவபெருமானும், பச்சை நிறமுள்ள நாராயணரும் விரும்புகின்ற, மயிலின் மீது வருகின்ற வீரமூர்த்தியே!

         தேவர்களின் சேனைகள் அனைத்தும் வாழ்கின்ற அமராவதி என்கின்ற இந்தரினுடைய நகரில் இருந்த ஐராவதம் என்னும் யானையால் வளர்க்கப் பெற்ற கிளி போன்ற தெய்வயானை அம்மையாரின் கணவரே!

         உலகில் உள்ளோர் செழிப்புற்று ஓங்கும் பொருட்டு, திருவண்ணாமலையின் திருவீதியில் விரும்பி வீற்றிருக்கும் முருகக் கடவுளே!

         மேரு மலையைப் பொடியாக்கி, பிரமதேவனுடைய காலில் வெற்றிக்கு அடையாளமாக விலங்கு பூட்டிய பெருமையில் சிறந்தவரே!

         ஒளியுடையதாய், நறுமணம் கொண்டதாய், இசை விநோதங்களை விரும்பி, தேன் உண்ணும் வண்டுகள் மொய்த்துள்ள மலர்களாலும், கோபித்து எழும் பாம்பின் பல்லில் ஊறிய நஞ்சினைக் கக்குகின்றது போல், குளிரந்த சந்திரன் வீசுகின்ற நெருப்பினாலும், பூவில் வாழ்பவனும், நீதியில்லாதவனும் ஆகிய பிரமதேவன் மீது மலர்க்கணைகளைத் தொடுத்த, போரில் வல்ல மன்மதராஜனாலும் நான் அழியாத வண்ணம், இன்பங்கள் அனைத்தையும் நிறையத் தந்து, உம் மீது ஆசை விடாய் மிகுந்துள்ள இந்தப் பெண்ணைத் தழுவும் பொருட்டு தேவரீர் வரவேணும்.


விரிவுரை
 

இத் திருப்புகழ் அகப்பொருள் சம்பந்தமானது.

தேதென ---

தேது என.  தேது - ஒளி.

தேதெரி அங்கையில் ஏந்தி ஆடும்        ---  திருஞானசம்பந்தர்.

கீதவிநோத பேச்சு தேன் அளி ---

அளி - வண்டு. வண்டுகள் தேன் உண்ணும் பொருட்டு மலர்களிடம் போய் இதை விநோதங்களைப் பாடும். அந்த இசையால் மலர்கள் விரியும்.

சில சாதுக்கள் இறைவனுடைய நாமங்களைப் பாடிக்கொண்டே பிச்சைக்கு வருவது கண்கூடு.

தெனத் தெனந்தன எனவரி அளிநிறை
தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்....
                                                               --- (உனைத்தினம்) திருப்புகழ்.

.....           ......நீளும் வரி அளி
சீராகம் ஓதும் நீப பரிமள இருதாளும் --- (சீரான) திருப்புகழ்.


சீறும் அரா எயிற்றில் ஊரிய காளம்விட்ட சீதநிலா எறிக்கும் அனலாலே ---

தலைவன் மீது விரகதாபம் கொண்ட தலைவிக்கு குளிர்ந்த நிலா அனல் வீசுவதுபோல் இருக்கும். சீதளமாக விளங்கும் சந்திரன், பாம்பின் பல்லில் ஊறிய நஞ்சினை ஒத்த அனலை வீசுமாப்போல் இருக்குமாம்.

போதனை நீதியற்ற வேதனை வாளிதொட்ட மாமதராஜன் ---

போதன் - பூவில் வாழ்பவன். போது - மலர். போது அறிந்து மலர்வதனால் மலருக்குப் போது எனப் பேர் அமைந்தது. தானே படைத்த திலோத்தமையைக் கண்டு மயங்கிக் காதல் கொண்டதனால் நீதியற்ற பிரமன் என்றார். மன்மதன் பிரமன் மீது மலர்க்கணை ஏவி தன் ஆட்சியைச் செலுத்துகின்றான்.

தன் உடன் பிறந்த அண்ணன் மீதே கணை சொரிந்த மனமதனுக்கு அபலையான நான் எம்மாத்திரம் ?

போகம் எலா நிறைத்த ---

முருகா, உன்னை விரும்புகின்ற பெண்ணாகிய எனக்கு இன்பங்கள் யாவும் தந்து மகிழச் செய்.

மோகவிடாய் மிகுத்த பூவையை நீ அணைக்க வரவேணும் ---

முருகா, உன் மீது கொண்ட ஆசையின் மிகுதியால் விடாய் கொண்டு தவிக்கின்றேன்.

பூவை போன்ற பெண்ணாகிய என்னை மருவும் பொருட்டு தேவரீர் வந்தருள வேண்டும் என்று அருணகிரிநாதர் இப் பாடலில் முறையிடுகின்றார்.

மாதினை வேணி வைத்த நாதன் ---

மாது - கங்காதேவி.  உமாதேவி இறைவனுடைய திருக்கண்களைப் புதைத்தபோது, பிராட்டியாருடைய திருவிரல்களில் இருந்து கங்கை தோன்றினாள்.  அந்த வெள்ளம் உலகங்களை எல்லாம் அழிக்கலாயிற்று. அப் பெருவெள்ளத்தைச் சிவபெருமான் தன் சடையில் தாங்கி, உலகங்கட்கெல்லாம் அருள் புரிந்தார்.

சிவபெருமான் கங்கையைச் சூடிய தன்மை, அவருடைய ஆற்றலையும் கருணையையும் குறிக்கின்றது.

மேதினியோர் தழைக்கவே அருணாசலத்து வீதியில் மேவி நிற்கும் முருகோனே ---

தத்தம் இடத்தில் இருந்தவாறே காதலாகிக் கசிந்து நினைப்பவர் எல்லோருக்கும் முத்தி அளிக்கும் திருத்தலம் திருவண்ணாமலை. ஆயலத்தில் சென்று சேவிக்கும் முயற்சியும்  ஊக்கமும் இல்லாதவர்களும் தன்னை வணங்கி நலம் பெற விதியிலேயே வேலவன் எழுந்தருளி இருக்கின்றான்.

கருத்துரை
 

திருவருணை மேவும் தேவனே, உன்னை விரும்பும் பெண்ணாகிய என்னைத் தழுவிக்கொள்ள வரவேணும்.


No comments:

Post a Comment

28. குளிர் காய நேரம் இல்லை

  "உருவெடுத்த நாள்முதலா ஒருசாணும்    வளர்க்கஉடல் உழல்வ தல்லால், மருவிருக்கும் நின்பாத மலர்தேடித்    தினம்பணிய மாட்டேன்! அந்தோ! திருவிரு...