சந்திரன்
இல்லா வானம், தாமரை இல்லாப்
பொய்கை,
மந்திரி
இல்லா வேந்தன், மதகரி இல்லாச் சேனை,
சுந்தரப்
புலவர் இல்லாத் தொல்சபை, சுதர்இல் வாழ்வு,
தந்திகள்
இல்லா வீணை, தனம் இலா மங்கை போல்
ஆம்.
இதன் பொருள் ---
சந்திரன் இல்லா வானம் --- சந்திரன் ஒளி இல்லாத
வானமும்,
தாமரை இல்லாப் பொய்கை --- தாமரை மலர் இல்லாத
குளமும்,
மந்திரி இல்லா வேந்தன் --- நன்மை தீமைகளை ஆராய்ந்து
அறிவுறுத்தும் நல்லறிவு படைத்த அமைச்சர் இல்லாத அரசனும்,
மதகரி இல்லாச் சேனை --- மதம் பொருந்திய யானைகள்
இல்லாத சேனையும்,
சுந்தரப் புலவர் இல்லாத் தொல்சபை --- சிறந்த புலவர்கள் இல்லாத
பழமையான சபையும்,
சுதர் இல் வாழ்வு --- நல்ல மக்கள் பேறு இல்லாத
வாழ்வும்,
தந்திகள் இல்லா வீணை --- இசையை மீட்டுவதற்கு உரிய
நரம்புகள் இல்லாத வீணையும்,
தனம் இலா மங்கை போல் ஆம் --- பெண்மை இன்பத்தை
விழையும் கொங்கைகள் இல்லாத மங்கையைப் போலப் பயன் அற்றவையே ஆகும்.
விளக்கம் --- "காசினியை ஒரு குடையில் ஆண்டாலும் வாசலில் கருத்துள்ள
மந்த்ரி வேண்டும்" என்பது
அறப்பளீசுர சதகம்.
"மிக்க சற்புத்திரன்
இலாததே நலமான வீறுசேர் கிருக சூனியம்"
என்கிறது அறப்பளீசுர சதகம்.
படைப்புப்
பலபடைத்துப் பலரோடு உண்ணும்
உடைப் பெரும் செல்வர்
ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்,
நெய்உடை அடிசில்
மெய்பட விதிர்த்தும்,
மயக்கு உறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத்
தாம்வாழு நாளே.
என்பது புறநானூற்றுப்
பாடல்.
இதன் கருத்து --- பல செல்வ வளங்களைப்
பெற்று இருந்தாலும், பலருடனே கூடி இருந்து
உண்ணுகின்ற சுற்றம், நட்பு ஆகிய பல செல்வங்கள் இருந்தாலும், தத்தித் தவழ்ந்து, தடுமாறி நடந்து, தனது அழகிய சிறிய
கையை நீட்டி,
உண்கலத்தில்
உள்ள உணவைத் தொட்டு எடுத்து, வாயில் போட்டும், கையால் துழாவியும், நெய்யால் ஆன அந்தச்
சோற்றை அள்ளித் தன் உடம்பு எல்லாம் வாரி இறைத்துக் கொண்டு விளையாடி, தன்னைப் பெற்றவரை
அன்பால் மயங்கச் செய்யும் பிள்ளைகள் இல்லாதவர்க்குப் பிறவியால் பெற்ற பயன் இல்லை. அவர்கள்
வாழும் நாள் வீணானதே ஆகும்.
"கல்லாதான் சொல் காமுறுதல், முலை இரண்டும் இல்லாதாள் தமியள் மூத்து
அற்று" என்பது திருக்குறள். நூல்களைக் கல்லாத ஒருவன் கற்றவர் அவையில்
சொல்லுதலை விரும்புதல், கொங்கைகள் இரண்டும் இல்லாதவள் ஒருத்தி, பெண்மை நலத்தை
விரும்புதலைப் போன்றது என்பது இதன் கருத்து.
No comments:
Post a Comment