உண்மை நட்பு




மங்குல் ஐம்பதினாயிரம் யோசனை
     மயில்கண்டு நடமாடும்,
தங்கும் ஆதவன் நூறாயிரம் யோசனை
     தாமரை முகம் விள்ளும்,
திங்கள் ஆதவற்கு இரட்டி யோசனை உறச்
     சிறந்திடும் அரக்கு ஆம்பல்,
எங்கண் ஆயினும் அன்பராய் இருப்பவர்
     இதயம் விட்டு அகலாரே.

இதன் பொருள் ---

     மங்குல் ஐம்பதினாயிரம் யோசனை --- ஐம்பதினாயிரம் யோசனை தொலைவில் உள்ளது மேகம்.
    
     மயில் கண்டு நடம் ஆடும் --- மயிலானது அதைக் கண்டு மகிழ்ந்து தோகையை விரித்து நடம் புரியும்.

     தங்கும் ஆதவன் நூறு ஆயிரம் யோசனை --- கதிரவன் இலட்சம் யோசனை தூரத்தில் உள்ளது.

     தாமரை முகம் விள்ளும் --- தாமரை அரும்பு அதைக் கண்டு மலரும்.

     திங்கள் ஆதவற்கு இரட்டி யோசனை உற --- சந்திரன் ஆனவன் மதிரவனுக்கு இரண்டு மடங்கு அதிகமான தொலைவில் இருக்க,

     சிறந்திடும் அரக்கு ஆம்பல் --- அவனைக் கண்டு செம்மை நிறமுடைய ஆம்பல் அரும்பு மலர்ந்திடும்.

     எங்கண் ஆயினும் அன்பராய் இருப்பவர் இதயம் விட்டு அகலாரே --- ஒருவருக்கு ஒருவர் அன்பு உடையவராய் இருந்தால், அவர் எவ்விடத்தில் இருந்தாலும் மனத்தை விட்டு நீங்கமாட்டார்.

     விளக்கம் --- உண்மையான நட்பு பூண்டு இருப்போர் எங்கு இருந்தாலும் ஒருவர் உள்ளத்தை விட்டு ஒருவர் நீங்கமாட்டார். "புணர்ச்சி பழகுதல் வேண்டா, உணர்ச்சி தான் நட்பாம் கிழமை தரும்" என்னும் திருவள்ளுவ நாயனாரின் திருக்குறள் கருத்தை இதனோடு வைத்து எண்ணுக.


No comments:

Post a Comment

28. குளிர் காய நேரம் இல்லை

  "உருவெடுத்த நாள்முதலா ஒருசாணும்    வளர்க்கஉடல் உழல்வ தல்லால், மருவிருக்கும் நின்பாத மலர்தேடித்    தினம்பணிய மாட்டேன்! அந்தோ! திருவிரு...