திருச் சாத்தமங்கை





திருச் சாத்தமங்கை
(கோயில் சீயாத்தமங்கை, சீயாத்தமங்கை)

        சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

         நன்னிலம் - திருப்புகலூர், திருமருகல் - நாகூர் சாலை வழியில் இத்தலம் அமைந்திருக்கிறது. திருமருகல் தாண்டியவுடன் நாகூர் செல்லும் சாலையில் ஒரு கி.மி. சென்றவுடன் "கோயில் சீயாத்தமங்கை" என்ற வழிகாட்டி கல் உள்ளது. அவ்விடத்திலிருந்து ஒரு கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. திருப்புகலூரில் இருந்து சுமார் 8 கி.மீ.தொலைவில் உள்ளது.

         நாகப்பட்டினம் - நாகூர் - கும்பகோணம் சாலையில், நாகப்பட்டினத்துக்கும் சன்னாநல்லூருக்கும் நடுவே அமைந்துள்ளது சீயாத்தமங்கை. பிரதான சாலையில் இருந்து ஒரு கி.மீ. தொலைவு பயணித்தும் ஸ்ரீஅயவந்தீஸ்வரர் ஆலயத்தை அடையலாம். நாகப்பட்டிணத்தில் இருந்து சுமார் 13 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. ஊருக்கு "சாத்தமங்கை" என்றும், கோயிலுக்கு "அயவந்தி" என்றும் பெயர்.

         திருச்சாத்தமங்கையில் இருந்து அருகில் உள்ள திருமருகல், திருசெங்காட்டங்குடி, திருப்புகலூர், இராமனதீச்சரம் ஆகிய மற்ற திருத்தலங்களையும் தரிசிக்கலாம்.


இறைவர்               : அயவந்தீசுவரர், பிரமபுரீசுவரர்.

இறைவியார்           : உபய புஷ்ப விலோசனி, இருமலர்க்கண்ணம்மை.

தல மரம்                : கொன்றை.

தீர்த்தம்                  : கோயிலுக்கு முன் உள்ள தீர்த்தம்(இதன் மேற்பாதி சந்திர
                                   தீர்த்தம் என்றும், கீழ்ப்பாதி சூரிய தீர்த்தம் என்றும்  
                                    சொல்லப்படுகிறது.)         

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - திருமலர்க் கொன்றைமாலை.


          இத்தலம் திருநீலநக்க நாயனாரின் அவதாரத் தலமாகும். திருநீலநக்க நாயனார், அவருடைய மனைவியின் திருமேனிகள் திருக்கோயிலில் உள்ளன. நாயனாரின் மனைவியின் பெயர் 'மங்கையர்க்கரசி' என்று இங்கு வழக்கில் சொல்லப்படுகிறது.

          அவதாரத் தலம்   : சாத்தமங்கை (கோயில் சீயாத்தமங்கை,                                                                  சீயாத்தமங்கை)
          வழிபாடு             : இலிங்க வழிபாடு.
          முத்தித் தலம்      : ஆச்சாள்புரம் (நல்லூர்ப்பெருமணம்)
          குருபூசை நாள்    : வைகாசி - மூலம்.

திருநீலநக்க நாயனார் வரலாறு

         திருநீலக்கர் காவிரி நாடாகிய சோழநாட்டில் சாத்தமங்கை என்னும் ஊரில் அந்தணர் குலத்திலே தோன்றினார். இவர் வேதத்தின் உள்ளுறையாவது சிவபெருமானையும், சிவனடியார்களையும் அன்பினால் அருச்சித்து வணங்குதலே எனத் தெளிந்து கொண்டார். அதனால் நாள்தோறும் சிவாகம விதிப்படி சிவபூசை செய்வித்தல் முதலாக எவ்வகைப்பட்ட திருப்பணிகளையும் செய்து வந்தார்.

         இவ்வாறு ஒழுகும் திருநீலநக்கர் திருவாதிரை நட்சத்திரம் கூடிய ஒரு நாளிலே சிவபூசை முடித்துக்கொண்டு சாத்தமங்கையில் அயவந்தி என்னும் கோயிலிலே எழுந்தருளியுள்ள பெருமானை அருச்சிக்க விரும்பினார். பூசைக்கு வேண்டும் பொருட்களைத் தம் மனைவியார் எடுத்துக்கொண்டு உடன்வரக் கோயிலை அடைந்து அயவந்தி ஈசரை முறைப்படி பூசித்து இறைவர் திருமுன் இருந்து திருவைந்தெழுத்தினைச் ஓதினார். அப்பொழுது சிலந்தி ஒன்று அயவந்தி ஈசர் திருமேனியில் விழுந்தது. அதுகண்ட நீலநக்கரின் மனைவியார் விரைந்து சென்று அதனைப்போக்க வாயினால் ஊதித் தள்ளினார்.

         நாயனார் அச்செயலைக்கண்டு தன் கண்ணை மறைத்து, "அறிவிலாதாய்! நீ இவ்வாறு செய்தது ஏன்?" என்று சினந்தார். "சிலந்தி விழுந்தமையால் ஊதித்துமிந்தேன்" என்றார் மனைவியார். "நீ சிவலிங்கத்தின் மேல் விழுந்த சிலந்தியை வேறொரு வகையால் விலக்காமல் எச்சில்பட ஊதித்துமிந்தாய். இத்தகைய அருவருக்குஞ் செய்கை செய்த யான் இனித் துறந்தேன். நீங்கி விடு" என்றார். மனைவியரும் அதுகேட்டு அஞ்சி ஒரு பக்கம் ஒதுங்கினார்.

         நீலநக்கர் பூசையை முடித்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினார். மனைவியார் அவருடன் வீடு செல்ல அஞ்சி ஆலயத்தில் தங்கியிருந்தார். அன்று இரவு நீலநக்கர் துயிலும் பொழுது அயவந்திப் பெருமான் கனவில் தோன்றித் தம் திருமேனியைக் காட்டி, "உன் மனைவி ஊதித் துமிந்த இடம் தவிர மற்றைய எல்லா இடங்களிலும் சிலந்தியின் கொப்புளம்" என்று அருளினார். நீலநக்கர் வணங்கி விழித்தெழுந்து ஆடிப்பாடி இறைவனது திருவருளை வியந்து உள்ளமுருகினார். விடிந்த பின் ஆலயத்திற்குச் சென்று இறைவனை இறைஞ்சி மனைவியாரையும் உடனழைத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினார். நீலநக்கரும் முன்னரிலும் மகிழ்ந்து அரன்பூசை நேசமும், அடியாருறவும் கொண்டவராய் வாழ்ந்து வந்தார்.

         அந்நாளில் சீர்காழிப் பிள்ளையாரின் பெருமையை உலகமெல்லாம் போற்றுவதை அறிந்தார். தாமும் திருஞானசம்பந்தரின் திருப்பாதத்தைத் தம் தலைமிசைச் சூடிக்கொள்ள வேண்டுமெனும் விருப்பு உடையவரானார். இவ்வாறு விரும்பி இருந்த வேளையில் சண்பையார் மன்னர் திருத்தலங்கள் பலவற்றையும் வழிபட்டுவரும் வழியில் சாத்தமங்கையை அடைந்தார். ஞானசம்பந்தப் பிள்ளையார் வரும் செய்தி அறிந்த திருநீலநக்கர், அப்பொழுதே மகிழ்ந்தெழுந்து கொடிகள் தூக்கி, தோரணம் நாட்டி, நடைப் பந்தலிட்டு வீதியெல்லாம் அலங்கரித்தார். தாமும் சுற்றமுமாய்ச் சென்று திருசானசம்பந்தரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அழைத்து வருவோமென ஆசை கொண்டார். பிள்ளையார் எழுந்தருளிய பெருமைக்குத் தக்க திருவமுது செய்வித்து மகிழ்ந்திருந்தார். அன்று இரவில் ஞானசம்பந்தர் தம் மனையில் தங்குவதற்கு வேண்டுவதெல்லாம் அமைத்தார். திருஞானசம்பந்தரும், திருநீலகண்ட யாழ்ப்பாணர் தங்குவதற்கோர் இடம் கொடுத்தருளுமாறு பணித்தார். அப்பணிப்பிற்கு இன்புற்றுத் தாம் வேள்வி செய்யும் வேதிகையின் அருகிலேயே பாணருக்கும், பாடினியாருக்கும் இடம் கொடுத்தார் அவ் அந்தணனார். அப்பொழுது வேதிகையிலுள்ள நித்தியாக்கினி முன்னரிலும் மேலாக வலஞ்சுழித்து எரிந்தது. பாணர் மனைவியாருடன் வேதிகையருகில் பள்ளிகொண்டார். (நாயன்மார் காலத்தில் சாதி வேற்றுமையும் தீண்டாமையும் உண்டு. அக் கொடுமைகளை ஒழிக்கவே, இறையருளால் நாயன்மார்கள் தோன்றினார்கள் என்பது உணரத்தக்கது.)

         ஞானசம்பந்தப் பிள்ளையார் மறுநாள் எழுந்து அயவந்திப் பெருமானை வழிபட்டுத் திருப்பதிகம் பாடினார். அத்திருப்பதிகத்திலே நீலநக்கரையும் சிறப்பித்துப் பாடியருளினார்.

         திர்ஞானசம்பந்தப் பெருமான் சாத்தமங்கையின்றும் புறப்பட்டபோது அவரோடு தொடர்ந்து செல்லவே நீலநக்கர் விரும்பினார். ஆனால் பிள்ளையார் அவரை அங்கேயே இருந்து அயவந்திப் பெருமானைப் பூசிக்குமாறு அருளிய வாக்கினை மீறவியலாது தம் உள்ளத்தைப் பிள்ளையாருடன் செல்லவிட்டுத் தான் அயவந்தியில் தங்கினார். திருசானசம்பந்தர் திருப்பாதம் நினைந்த சிந்தையராய் பூசனையை முன்னரிலும் சிறக்கச் செய்தார். முருகனார் ஆளுடைய அரசு, சிறுத்தொண்டர் ஆகிய நாயன்மாருடனெல்லாம் அளவளாவி உடனுறையும் இன்பம் பெற்றார்.

         இவ்வண்ணம் திருஞானசம்பந்தரால் பேரன்பு அருளப்பெற்ற திருநீலநக்கனார் அவர் தம் திருமணத்திற்குப் புரோகிதம் பார்க்கும் பேறு பெற்றார். அந்த நல்லூர்ப் பெருமணத்திலேயே சோதியுட் புகுந்தார்.

ஆலய முகவரி  
அருள்மிகு அயவந்தீசுவரர் திருக்கோயில்
சீயாத்தமங்கை
சீயாத்தமங்கை அஞ்சல் - 609702
நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம்  

         இத்தலம் இக்காலம் சீயாத்தமங்கை என்று வழங்கப் பெறுகின்றது. ஊரின் பெயர் சாத்தமங்கை. இங்குள்ள கோயிலின் பெயர் அயவந்தி. உயர்ந்த சுற்றுமதிலையுடைய பெரிய இவ்வாலயம் சுவாமி அம்பாள் சந்நிதிகள் இரண்டிற்கும் தனித்தனி வாயில்களுடனும், கோபுரங்களுடனும் மேற்கு நோக்கி அமைந்துள்ளன. கோவிலுக்கு வெளியே கோபுர வாயில் எதிரே ஆலயத்தின் திர்த்தக்குளம் உள்ளது. இக்குளத்தில் ஒரு பகுதி சந்திர தீர்த்தம் என்றும், மற்றொரு பகுதி சூரிய தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. தீர்த்தக் குளத்தின் கரையில் சித்திவிநாயகர் சந்நிதியைக் காணலாம். சுவாமி ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் விசாலமான மூற்றவெளி உள்ளது. வெளிச்சுற்றில் வலம் வரும்போது சந்திரன், காகத்தின் மீது ஒரு காலூன்றிய அமைப்பில் உள்ள சனிபகவான், சப்தமாதர்கள், பைரவர், நவக்கிரகங்கள், மகாலிங்கம், விசுவநாதர், விசாலாட்சி, விநாயகர் முதலிய சந்நிதிகள் உள்ளன. பிராகாரத்திலுள்ள தலவிருட்சம் கொன்றை மரத்தின் அடியே விநாயகர், லிங்கத் திருமேனிகள் உள்ளன.

         உள்வாயிலைக் கடந்து முன்மண்டபம் அடைந்து வலம் வரும்போது, வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர், மகாலட்சுமி, நால்வர் சந்நிதிகள் உள்ளன. அடுத்து 63 நாயன்மார்களில் ஒருவரான திரு நீலநக்க நாயனார், அவருடைய மனைவி ஆகியோரின் உருவங்கள் உள்ளன. சோமாஸ்கந்தர், மகாகணபதி சந்நிதிகளைத் தரிசித்துப் படிகளேறி உள்சுற்றில் நீலநக்கர், அவருடைய மனைவி, நடன சுந்தரர் முதலிய உற்சவத் திருமேனிகளைத் தரிசிக்கலாம். நடராச சபையில் அம்பலக்கூத்தர் அம்மை சிவகாமி மணிவாசகருடன் காட்சி தருகின்றார். சனீசுவரன், காகத்தின் மேல் ஒரு காலை ஊன்றியவாறு நின்ற கோலத்தில் உள்ளார்.

         மூலவர் கருவறையில் மேற்கு நோக்கி தரிசனம் தருகிறார். சுயம்பு மூர்த்தியான இந்த அயவந்தீசுவரர் பாணம் முழுவதும் கொப்புளம் போல காட்சி தருவது, நீலநக்க நாயனார் வரலாற்றை நினைவுபடுத்துவாக அமைந்துள்ளது. கோஷ்ட மூர்த்தங்களில் தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் சிற்பக் கலைத்திறனுடன் அமைந்துள்ளது. கருவறை சுற்றுச் சுவர் வெளிப்புறத்தில் நர்த்தனகணபதி, அகத்தியர் ஆகிய இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள கெளரி லீலை உருவத் திருமேனி பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்றாகும்.

         வெளி மண்டபத் தூண் ஒன்றிலுள்ள ஆஞ்சனேயர் வாலில் மணியுடன் காணப்படுகிறார். அருகிலுள்ள மற்றொரு தூண் அருகே உள்ள தவழும் கிருஷ்ணனின் திருமேனியும் காணத்தக்கது.

         அம்பாள் சந்நிதி பக்கத்தில் தனிக்கோயிலாகவுள்ளது. சூரியன் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. நந்தி சற்று உயரத்தில் உள்ளது. படிகளேறிச் சென்றால் கருவறை முன் மூஞ்சூறு வாகனத்தின் மீது அமர்ந்துள்ள விநாயகரையும், தண்டபாணியையும் துவாரமூர்த்திகளாகத் தரிசிக்கலாம். நேரே அம்பாள் நான்கு திருக்கரங்களுடன் கூடிய நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள்.

         காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "திண்மை கொண்ட மா தமம் கை மருவிப்பிரியாத சாத்தமங்கை கங்கைச் சடாமுடியோய்" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 459
மன்னுதிரு நள்ளாற்று மருந்தைவணங்
         கிப்போந்து, வாச நன்னீர்ப்
பொன்னிவளம் தருநாட்டுப் புறம்பணைசூழ்
         திருப்பதிகள் பலவும் போற்றி,
செந்நெல்வயல் செங்கமல முகம்மலரும்
         திருச்சாத்த மங்கை மூதூர்
தன்னில்எழுந்து அருளினார், சைவசிகா
         மணியார், மெய்த் தவத்தோர் சூழ.

         பொழிப்புரை : பின், நிலைபெற்ற திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் மருந்தான இறைவரை வணங்கி, விடைபெற்றுச் சென்று, மணமுடைய நல்லநீர் பொருந்திய காவிரியாறானது பல வளங்களையும் தருகின்ற சோழ நாட்டின் புறம்பணை சூழ்ந்த பல திருப்பதிகளையும் வணங்கி வழிபட்டு, மெய் அடியார்கள் சூழச் சைவசிகாமணியாரான பிள்ளையார் செந்நெல் வயல்களிலே செந்தாமரை மலர்கள் மாதர் முகம் என மலர்தற்கு இடமான `திருச்சாத்தமங்கை\' என்ற பழம் பதியை அணுகினார்.


பெ. பு. பாடல் எண் : 460
நிறைசெல்வத் திருச்சாத்த மங்கையினில்
         நீலநக்கர் தாமும் சைவ
மறையவனார் எழுந்தருளும் படிகேட்டு
         வாழ்ந்து,வழி விளக்கி, எங்கும்
துறைமலிதோ ரணம்கதலி கமுகுநிறை
         குடம்தூப தீபம் ஆக்கி,
முறைமையில்வந்து எதிர்கொள்ள, உடன்அணைந்து
         முதல்வனார் கோயில் சார்ந்தார்.

         பொழிப்புரை : நிறைந்த செல்வத்தையுடைய சாத்தமங்கையில் வாழ்கின்ற திருநீலநக்க நாயனாரும், சைவ அந்தணரான பிள்ளையார் எழுந்தருளும் நற்செய்தியைக் கேட்டுப் பெருவாழ்வு அடைந்தவராய், அவர் வரும் வழி எல்லாம் விளக்கம் செய்து, எங்கும் இடையிடையே நெருங்கிய தோரணங்களையும் வாழை பாக்கு மரங்களையும் கட்டி, அங்கங்கே நிறைகுடம், நறுமணப் புகை, ஒளிவிளக்கு முதலான வற்றையும் அமைத்து, முறையாக வந்து எதிர்கொள்ள, ஞானசம்பந்தர் இறைவரது கோயிலை அடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 461
அயவந்தி அமர்ந்துஅருளும் அங்கணர்தம்
         கோயில்மருங்கு அணைந்து, வானோர்
உயவந்தித்து எழுமுன்றில் புடைவலங்கொண்டு
         உட்புக்கு, ஆறுஒழுகும் செக்கர்
மய, அந்தி மதிச்சடையார் முன்தாழ்ந்து,
         மாதவம் இவ்வையம் எல்லாம்
செயவந்த அந்தணனார், செங்கைமேல்
         குவித்துஎழுந்து, திருமுன் நின்றார்.

         பொழிப்புரை : `அயவந்தி' என்னும் அக் கோயிலில் விரும்பி வீற்றிருக்கும் இறைவரின் திருக்கோயிலின் பக்கத்தைச் சார்ந்து, தேவர்கள் உய்யும் பொருட்டு வழிபாடு செய்து வருகின்ற திருமுன்றிலின் பக்கமாக வந்து, உட்புகுந்து, கங்கையாறு ஒழுகுவதற்கு இடமான, சிவப்பு மயமான அந்தி மாலையில் தோன்றும் மதியினைச் சூடிய சடையையுடைய சிவபெருமானின் திருமுன்பு தாழ்ந்து வணங்கி, இப்பூவுலகம் முழுவதும் பெருந்தவம் செய்ததன் பயனாய், இங்கு வந்து தோன்றிய அந்தணராம் சம்பந்தர் தம் செங்கையினைத் தலைமீது குவித்து வணங்கி எழுந்து நின்றார்.


பெ. பு. பாடல் எண் : 462
போற்றிஇசைக்கும் பாடலினால் பொங்கிஎழும்
         ஆதரவு பொழிந்து விம்ம,
ஏற்றின் மிசை இருப்பவர்தம் எதிர்நின்று
         துதித்துப்போந்து எல்லை இல்லா
நீற்றுநெறி மறையவனார் நீலநக்கர்
         மனையில் எழுந்தருளி, அன்பால்
ஆற்றும்விருந்து அவர்அமைப்ப, அன்பருடன்
         இன்புற்றுஅங்கு அமுது செய்தார்.

         பொழிப்புரை : ஆனேற்றை ஊர்தியாகக் கொண்டு வீற்றிருக்கும் இறைவர் திருமுன்பு நின்று, போற்றிசெய்கின்ற பாடல்களால், மேன்மேலும் பொங்கியெழும் அன்பு பெருகிக் கண்ணீர்விட்டுப் போற்றி செய்து, ஆனேற்றின் மீது இருந்தருளும் இறைவனின் எதிர் நின்று வெளியே வந்து அளவுபடாத திருநீற்று நெறியான சைவ நெறியை விளக்கும் அந்தணரான பிள்ளையார், திருநீலநக்க நாயனாரின் இல்லத்தில் தங்கி இருந்து, அன்பால் செய்யப்படுகின்ற விருந்து இயல்புக்கு உரியவற்றை அவர் அமைக்க, அன்பர்களோடு இன்பம் பொருந்த உண்டருளினார்.


பெ. பு. பாடல் எண் : 463
நீடுதிருநீலநக்கர் நெடுமனையில்
         விருந்துஅமுது செய்து, நீர்மைப்
பாடும்யாழ்ப் பெரும்பாண ரும்தங்க
         அங்குஇரவு பள்ளி மேவி,
ஆடும்அவர் அயவந்தி பணிவதனுக்கு
         அன்பருடன் அணைந்து சென்று,
நாடியநண் புஉடைநீல நக்கடிகள்
         உடன்நாதர் கழலில்தாழ்ந்து.

         பொழிப்புரை : அன்பு நீடும் திருநீலநக்க நாயனாரின் பெரிய இல்லத்தில் விருந்து அமுது உண்டு, நல்ல நீர்மையுடன் பாடும் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் உடன்தங்க அன்று அங்குப் பள்ளி அமர்ந்து, கூத்தியற்றும் இறைவரின் `அயவந்தியினைப்\' பணிவதற்கு, அன்பர்களுடனே சேர்ந்து சென்று, நாடிய நட்பையுடைய நீலநக்க நாயனாருடன் இறைவன் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.


பெ. பு. பாடல் எண் : 464
கோதுஇலா ஆர்அமுதைக் கோமளக்கொம்
         புடன்கூடக் கும்பிட்டு ஏத்தி,
ஆதியாம் மறைப்பொருளால் அருந்தமிழின்
         திருப்பதிகம் அருளிச் செய்வார்,
நீதியால் நிகழ்கின்ற நீலநக்கர்
         தம்பெருஞ்சீர் நிகழ வைத்துப்
பூதிசா தனர்பரவும் புனிதஇயல்
         இசைப்பதிகம் போற்றி செய்தார்.

         பொழிப்புரை : குற்றம் அற்ற அரிய அமிழ்தத்தைப் போன்ற இறைவரை, அழகிய இளம்கொம்பைப் போன்ற அம்மையாருடன் வணங்கி ஏத்தி, பழைய மறைகளின் பொருள் விளங்க அரிய தமிழின் திருப்பதிகம் பாடுவார், மறைவழி ஒழுகும் திருநீலநக்கரின் பெருஞ் சிறப்புகள் விளங்க வைத்து, திருநீற்று நெறியைப் போற்றி வரும் தொண்டர்கள் போற்றுமாறு, தூய இயல் இசை உடைய பதிகத்தை அருளிச் செய்தார்.

         இதுபொழுது அருளிய பதிகம் `திருமலர்க் கொன்றை மாலை' (தி.3 ப.58) எனத் தொடங்கும் பஞ்சமப் பண்ணிலமைந்த பதிகமாகும். `கோமளக் கொம்புடன் கூடக் கும்பிட்டேத்தி' என்றது, இப்பதிகப் பாடல் தொறும் வரும் முன்னிரண்டு அடிகளில் அம்மையுடனாதலைப் போற்றியிருக்கும் குறிப்பை உளங்கொண்டதாகும். `நிறையினால் நீலநக்கன் நெடுமா நகர் என்று தொண்டர் அறையும் ஊர் சாத்த மங்கை' எனவரும் திருக்கடைக் காப்பில் நீலநக்கர் சிறப்பிக்கப் பெறுகின்றார்.



         3. 058    திருச்சாத்தமங்கை          பண் - பஞ்சமம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
திருமலர்க் கொன்றைமாலை
         திளைக் கும்மதி சென்னிவைத்தீர்,
இருமலர்க் கண்ணிதன்னோடு
         உடன் ஆவதும் ஏற்பதுஒன்றே,
பெருமலர்ச் சோலைமேகம்
         உரிஞ் சும்பெரும் சாத்தமங்கை
அருமலர் ஆதிமூர்த்தீ,
         அய வந்தி அமர்ந்தவனே.

         பொழிப்புரை : தெய்வத்தன்மை பொருந்திய கொன்றை மலர்களை மாலையாக அணிந்தவனும் , சந்திரனைத் தலையில் தரித்தவனும் , இரு தாமரை மலர் போன்ற கண்களையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு , நறுமணம் பெருகும் மலர்கள் நிறைந்த சோலைகளிலுள்ள மரங்கள் மேகத்தை உராயும்படி விளங்கும் திருச்சாத்த மங்கை என்னும் திருத்தலத்தில் , உலகிற்கு ஒப்பற்றவனாகி விளங்கும் ஆதிமூர்த்தியும் ஆகிய சிவபெருமான் அயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார் . இத்திருத்தலத்தின் அம்பிகையின் திருப்பெயரான இருமலர்க்கண்ணம்மை என்பது இப்பாடலில் உணர்த்தப்படுகின்றது .


பாடல் எண் : 2
பொடிதனைப் பூசுமார்பில் புரி நூல்ஒரு பால்பொருந்தக்
கொடிஅன சாயலாளோடு உடன்ஆவதும் கூடுவதே,
கடிமண மல்கிநாளும் கம ழும்பொழில் சாத்தமங்கை
அடிகள்நக் கன்பரவ, அய வந்தி அமர்ந்தவனே.

         பொழிப்புரை :சிவபெருமான் திருவெண்ணீற்றினைப் பூசிய திருமார்பில் முப்புரிநூல் அணிந்து , பூங்கொடி போன்ற மெல்லிய சாயலுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குகிறான். நறுமண மலர்கள் நாளும் பூத்து வாசனை வீசும் சோலைகளையுடைய திருச்சாத்தமங்கையில் சிவபெருமான் திருநீலநக்க நாயனார் போற்றி வழிபட அயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .


பாடல் எண் : 3
நல்நலம் தங்குமார்பில் நுகர் நீறுஅணிந்து, ஏறதுஏறி,
மான்அன நோக்கிதன்னோடு உடன் ஆவது மாண்பதுவே,
தான்நலம் கொண்டுமேகந் தவ ழும்பொழில் சாத்தமங்கை
ஆன்நலம் தோய்ந்தஎம்மான் அய வந்தி அமர்ந்தவனே.

         பொழிப்புரை : முப்புரிநூல் அணிந்த திருமார்பில் திருவெண்ணீற்றினைப் அணிந்து , இடப வாகனத்திலேறி , மான் போன்ற மருண்ட பார்வையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவன் சிவபெருமான் . மேகத்தைத் தொடும்படி உயர்ந்த அழகிய சோலைகள் சூழ்ந்த திருச்சாத்த மங்கை என்னும் திருத்தலத்தில் பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் திருமுழுக் காட்டப்படும் சிவபெருமான் திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .


பாடல் எண் : 4
மற்றவில் மால்வரையா மதில் எய்துவெண் நீறுபூசிப்
புற்றுஅரவு அல்குலாளோடு உடன் ஆவதும் பொற்புஅதுவே,
கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழ, செய்தபாவம்
அற்றவர் நாளும்ஏத்த, அய வந்தி அமர்ந்தவனே.

         பொழிப்புரை : பெரிய மேருமலையை வில்லாகக் கொண்டு மும்மதில்களை எய்து அழித்து , திருவெண்ணீற்றினைப் பூசி , புற்றில் வாழ்கின்ற பாம்பு போன்ற அல்குலையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குகிறான் சிவபெருமான் . வேதாகமங்களை நன்கு கற்றவர்கள் வாழ்கின்ற திருச்சாத்தமங்கை என்னும் திருத்தலத்தைக் கைக்கூப்பித் தொழப் பாவம் நீங்கும் . உலகப் பற்றற்ற மெய்யடியார்கள் , தமக்குப் பற்றுக் கோடாக விளங்கும் சிவ பெருமானை நாள்தோறும் போற்றி வழிபட திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில் அவன் வீற்றிருந்தருளுகின்றான் .


பாடல் எண் : 5
வெந்தவெண் நீறுபூசி விடை ஏறிய வேதகீதன்,
பந்துஅண வும்விரலாள் உடன் ஆவதும் பாங்குஅதுவே,
சந்தம்ஆறு அங்கம்வேதம் தரித் தார்தொழும் சாத்தமங்கை
அந்தம்ஆய் ஆதிஆகி அய வந்தி அமர்ந்தவனே.

         பொழிப்புரை : இறைவன் திருவெண்ணீற்றனைப் பூசியவன் . இடபவாகனத்தில் ஏறியமர்பவன் . வேதத்தை இசையோடு பாடியருளி , வேதப் பொருளாகவும் விளங்குபவன் . பந்து வந்தணைகின்ற விரல்களையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டவன் . வேதமும் , அதன் ஆறங்கமும் ஓதுகின்ற அந்தணர்கள் தொழுகின்ற திருச்சாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் உலகத்திற்கு அந்தமும் , ஆதியுமாகிய சிவபெருமான் திருஅயவந்தி என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .


பாடல் எண் : 6
வேதம்ஆய் வேள்விஆகி விளங் கும்பொருள் வீடுஅதுஆகிச்
சோதியாய் மங்கைபாகம் நிலை தான்சொல்லல் ஆவதுஒன்றே,
சாதியால் மிக்கசீரால் தகு வார்தொழும் சாத்தமங்கை
ஆதிஆய் நின்றபெம்மான் அய வந்தி அமர்ந்தவனே.

         பொழிப்புரை : இறைவன் வேதங்களை அருளி வேதப் பொருளாகவும் விளங்குபவன் . எரியோம்பிச் செய்யப்படும் வேத வேள்வியாகவும் , ஞானவேள்வியாகவும் திகழ்பவன் . ஒண் பொருளாகவும் , வீடுபேறாகவும் உள்ளவன் . சோதிவடிவானவன் . உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவன் . இப்பெருமான் இத்தகையவன் என்பதை வாயினால் சொல்லவும் ஆகுமோ ? அத்தகைய சிறப்புடைய பெருமான் , தக்கவர்கள் தொழும் திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் ஆதிமூர்த்தியாய் திருஅயவந்தி என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .


பாடல் எண் : 7
இமயம்எல் லாம்இரிய மதில் எய்துவெண் நீறுபூசி
உமையைஒர் பாகம்வைத்த நிலை தான்உன்னல் ஆவதுஒன்றே
சமயம்ஆறு அங்கம்வேதம் தரித் தார்தொழும் சாத்தமங்கை
அமையவேறு ஓங்குசீரான் அய வந்தி அமர்ந்தவனே.

         பொழிப்புரை :சிவபெருமான் இமயம் முதலான பெரிய மலைகளும் நிலைகலங்குமாறு , முப்புரங்களை எரித்து , திருவெண்ணீற்றினைப் பூசி உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாக வைத்த தன்மை பாராட்டிப் பேசக் கூடிய அரிய செயலாகும் . அவன் சமயநூல்களையும் , வேதத்தையும் , அதன் அங்கங்களையும் ஓதுகின்ற அந்தணர்கள் தொழுகின்ற திருச்சாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் சிறப்புடன் ஓங்கித் திருஅயவந்தி என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .


பாடல் எண் : 8
பண்உலாம் பாடல்வீணை பயில் வான்ஓர் பரமயோகி,
விண்உலா மால்வரையான் மகள் பாகமும் வேண்டினையே,
தண்நிலா வெண்மதியம் தவ ழும்பொழில் சாத்தமங்கை
அண்ணல்ஆய் நின்றஎம்மான் அய வந்தி அமர்ந்தவனே.

         பொழிப்புரை : இறைவன் பண்ணிசையோடு கூடிய பாடலை வீணையில் மீட்டிப் பாடுவான் . பரமயோகி அவன் . மலையரசன் மகளாகிய பார்வதி தேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் . அப்பெருமான் குளிர்ச்சி பெருந்திய வெண்ணிற சந்திரனைத் தொடும்படி ஓங்கி உயர்ந்த சோலைகள் சூழ்ந்த திருசாத்தமங்கையில் தலைவனாய் விளங்கி , திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .


பாடல் எண் : 9
பேர்எழில் தோள்அரக்கன் வலி செற்றதும், பெண்ஓர்பாகம்
ஈர்எழில் கோலம்ஆகி உடன் ஆவதும், ஏற்பதுஒன்றே,
கார்எழில் வண்ணனோடு கன கம்அனை யானும்காணா
ஆர்அழல் வண்ணம் மங்கை அய வந்தி அமர்ந்தவனே.

         பொழிப்புரை : மிகுந்த எழிலுடைய வலிமை வாய்ந்த தோள்களினால் மலையைப் பெயர்த்த இராவணனின் வலிமையை அடக்கிய சிவபெருமான் உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு அம்மையப்பனாகவும் , உடனாகக் கொண்டு அழகிய இரண்டு கோலமாகவும் , கார்மேகம் போன்ற அழகிய வண்ணனான திருமாலும் , பொன்போன்ற நிறமுடைய பிரமனும் , காண முடியாவண்ணம் நெருப்பு வண்ணமுமாகி , திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் , திரு அயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .

 
பாடல் எண் : 10
கங்கைஓர் வார்சடைமேல் அடை யப்புடை யேகமழும்
மங்கையோடு ஒன்றிநின்றஅம் மதி தான்சொல்லல்  ஆவதுஒன்றே,
சங்கைஇல் லாமறையோர் அவர் தாம்தொழு சாத்தமங்கை
அங்கையில் சென்னிவைத்தாய் அய வந்தி அமர்ந்தவனே.

         பொழிப்புரை : சிவபெருமான் கங்கையை நீண்ட சடைமுடியில் தாங்கி , பக்கத்தில் உமாதேவியோடு ஒன்றி நின்ற அறிவுடைமை சொல்லக் கூடிய தொன்றா ? அவன் ஐயமில்லாமல் வேதங்களைக் கற்ற அந்தணர்கள் தொழுகின்ற திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் உள்ளங்கையில் பிரமகபாலம் ஏந்தித் திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .


பாடல் எண் : 11
மறையினார் மல்குகாழித் தமிழ் ஞானசம் பந்தன்மன்னும்
நிறையின்ஆர் நீலநக்கன் நெடு மாநகர் என்றுதொண்டர்
அறையும்ஊர் சாத்தமங்கை அய வந்திமேல் ஆய்ந்தபத்தும்
முறைமையால் ஏத்தவல்லார் இமை யோரிலும் முந்துவரே.

         பொழிப்புரை : நான்மறைவல்ல அந்தணர்கள் வாழ்கின்ற சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் , மனத்தைப் புறவழியோடாது நிறுத்தி , திருநீலநக்கருடைய நெடுமா நகர் என்று தொண்டர்களால் போற்றப்படும் திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்திலுள்ள திருஅயவந்தி என்னும் திருக்கோயிலைப் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் தேவர்களைவிட மேலானவர்கள் ஆவர் .
திருச்சிற்றம்பலம  

No comments:

Post a Comment

28. குளிர் காய நேரம் இல்லை

  "உருவெடுத்த நாள்முதலா ஒருசாணும்    வளர்க்கஉடல் உழல்வ தல்லால், மருவிருக்கும் நின்பாத மலர்தேடித்    தினம்பணிய மாட்டேன்! அந்தோ! திருவிரு...