திரு மருகல்
சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
திருவாரூர், நன்னிலம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை முதலிய ஊர்களிலிருந்து
இத்திருத்தலத்திற்குப் பேருந்துகள் உள்ளன.
நன்னிலத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் நாகூர் செல்லும் சாலை
வழியில் இத்திருத்தலம் உள்ளது.
கும்பகோணத்தில் இருந்து நாகப்பட்டினம்
செல்லும் சாலை வழியாகவும் திருமருகல் திருத்தலத்தை அடையலாம்.
திருமருகலில் இருந்து அருகில் உள்ள
திருசாத்தமங்கை, திருசெங்காட்டங்குடி, திருப்புகலூர் ஆகிய மற்ற
திருத்தலங்களையும் வழிபடலாம்.
இறைவர்
: மாணிக்க வண்ணர், இரத்தினகிரீசுவரர்
இறைவியார்
: வண்டுவார் குழலி,
தல
மரம் : மருகல் (ஒரு வகை வாழை)
தீர்த்தம் : இலட்சுமி தீர்த்தம், மாணிக்க தீர்த்தம்
தேவாரப்
பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. அங்கமும் வேதமும்,
2.
சடையா
யெனுமால்.
2. அப்பர் - பெருகலாம் தவம்
ஆலய
முகவரி
அருள்மிகு
இரத்தினகிரீசுவரர் திருக்கோயில்
திருமருகல்
திருமருகல்
அஞ்சல்
நன்னிலம்
வட்டம்
திருவாரூர்
மாவட்டம் - 609702
கோச்செங்கட் சோழ நாயனார் கட்டிய, யானை ஏற முடியாத மாடக்கோயில்களில்
திருமருகல் ஆலயமும் ஒன்றாகும். மருகல் என்பது ஒருவகை கல்வாழையைக் குறிக்கும்.
இதைத் தலமரமாகக் கொண்டதாதலின் இத்தலம் "திருமருகல்" என்று பெயர்
பெற்றது. கிழக்கு திசையிலுள்ள 68 அடி உயரமான கோபுரமே
பிரதான நுழைவாயிலாகும். கோயிலுக்கு வெளியே எதிரில் இத்தலத்தின் தீர்த்தமான மாணிக்க
தீர்த்தம் நீராழி மண்டபத்துடன் உள்ளது. தீர்த்தக் கரையில் முத்து விநாயகர்
சந்நிதியைக் காணலாம். தென் திசையில் ஒரு சிறிய கோபுரம் உள்ளது. 4 புறமும் மதில்களை உடைய இக்கோவிலில்
இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன. இடதுபுறம் மேடையுடன் வன்னி
மரம் உள்ளது. இம்மரத்தினடியில் தான் ஞானசம்பந்தர் விஷம் தீர்த்து எழுப்பிய செட்டி
மகனுக்கும், செட்டிப்
பெண்ணுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார் என்று சொல்லப்படுகிறது.
திருச்சுற்றில் கொடிமர மண்டபத்தின்
மேற்கே அம்பாள் சந்நிதி அமைந்திருக்கிறது. மூலவர் இரத்தினகிரீசுவரர்
(மாணிக்கவண்ணர்) சந்நிதி ஒரு கட்டுமலை மேல் அமைந்திருக்கிறது. மூலவர் சுயம்பு
மூர்த்தியாக சிவலிங்க உருவில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். உள்பிராகாரத்தில் அறுபத்துமூவர்
மூலத்திருமேனிகள், பராசரலிங்கம், விநாயகர், சுப்பிரமணியர் முதலிய சந்நிதிகள் உள்ளன.
கோயிலின் உட்பிரகாரத்தில் வடக்கு மதில் ஓரமாக தல விருட்சம் இருக்கிறது. கோஷ்ட
மூர்த்தங்களாகக் கணபதியும், தட்சிணாமூர்த்தியும், லிங்கோத்பவரும், பிரம்மாவும், துர்க்கையும் உள்ளனர். நவக்கிரக
சந்நிதியும், பைரவர், சூரியன் திருவுருவங்களும், ஒரே பீடத்தில் அமைந்துள்ள செட்டி மகன், செட்டிப் பெண் மூலத்திருவுருவங்களும், பக்கத்தில் ஞானசம்பந்தர் மூலமேனியும்
அடுத்தடுத்துள்ளன.
திருஞானசம்பந்தப்
பெருமான் விடம் தீண்டியவனை உயிர்ப்பித்தது
திருமருகல் திருக்கோயில் புறத்தே ஒலு
மடம் உண்டு. அந்த மடத்தில் ஒரு நாள் ஒரு வணிகன் ஒரு கன்னியோடு வந்தான். அன்று இரவு
அவன் துயிலும்போது பாம்பு தீண்டி இறந்தான். அருகில் இருந்த கன்னிப் பெண் அவனைத்
தீண்டாமலே கதறலானாள். அவள் கதறலைக் கேட்டு, மாந்திரிகரில் சிலர் மனம் பொறாமல் ஓடி
வந்தனர். அவர்கள் மணி, மந்திரம், மருந்து ஆகியவற்றைக் கையாண்டு பார்த்தார்கள்.
விடம் நீங்கப் பெறவில்லை.
கன்னியானவள், "வணிகர் குலமணியே, அன்னையையும் அத்தனையும் பிரிந்தேன். உன்னையே
அடைவாகக் கொண்டு உடன் வந்தேன். நீயோ பாம்பு தீண்டி இறந்துபட்டாய். இனி நான் என்
செய்வேன், எப்படி உயிரோடு
வாழ்வேன்" என்று புலம்பினாள். அதற்கு மேல் என் செய்வாள். திக்கு அற்றவர்க்கு தெய்வமே
துணை. அவள் திருக்கோயிலை நோக்கியவாறு, "ஆண்டவனே, இந்த ஏழையைக் காவாயோ. பால்கடலில் எழுந்த
நஞ்சை உண்டாய். தேஙர்களைக் காத்தாய். அயன் திருமாலுக்கும் அறிய பரம்பொருளே.
மன்மதனை எரித்து நீறாக்கினாய். அவன் மனைவி இரதி வேண்ட, அவனுக்கு உயிரை நல்கினாய். மார்க்கண்டருக்காக இயமனை உதைத்து அருளினாய்.
ஏழைக்கு அருள மாட்டாயா? கருணைக் கடலே, திருமருகல் பெருமானே!" என்று
வேண்டிப் புலம்பினாள்.
அந்தப் புலம்பல் ஓசை திருஞானசம்பந்தப்
பெருமான் திருச்செவியில் சார்ந்தது. கருணைக் கடலாகிய காழிவள்ளலார், அந்தக் கன்னியின் துயர் தீர்க்கத்
திருவுள்ளம் கொண்டார். அவளைப் பார்த்து, "நீ சிறிதும் அஞ்சாதே, அம்மா, நிகழ்ந்ததைச் சொல்" என்றார். அவள், பிள்ளையாரை வணங்கிக் கூறினாள். "அடிகளே!, என் தகப்பன் வைப்பூருக்குத் தலைவன். அவன்
தாமன் என்னும் பெயருடையவன். அவனுக்கு மகள்கள் எழுவர். இவன் அவனுடைய மருமகன். மூத்த
மகளை இவனுக்கு மணமுடித்துத் தர என் தந்தை உறுதி சொல்லி, பின் வேறு ஒருவரிடம் பொருள்
பெற்றுக்கொண்டு, உறுதி தவறினான். இரண்டாவது
மகளை இவனுக்கே தருவதாகச் சொல்லி,
அவளையும்
அயலானுக்கே கொடுத்தான். இவ்வாறு ஏமாற்றி ஏமாற்றி, மற்ற நான்கு மகள்களையும் அயலாருக்கே
மணம் முடித்தான். இவன் நிலை கண்ட நான், இவனோடு
வந்தேன். தாய் தந்தையருக்குத் தெரியாமல். இவனோ பாம்பு தீண்டி மாண்டான். நடுக்கடலில்
கப்பல் கவிழ்ந்தது போல என் நிலைமை. சுற்றத்தார் என வந்து தோன்றி, என் துயரமெல்லாம் நீங்க அருள்
செய்தீர்" என்று கூறினாள்.
திருஞானசம்பந்தப் பெருமான், திருமருகல் பெருமானை நோக்கி, "சடையாய்
எனுமால்" என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடியருளினார். மேல் நிகழ்ந்தது
என்ன. தெய்வச் சேக்கிழார் பெருமான் திருவாக்கால் காண்போம்...
பொங்குவிடம்
தீர்ந்து, எழுந்து நின்றான், சூழ்ந்த
பொரு இல் திருத்
தொண்டர்குழாம் பொலிய ஆர்ப்ப,
அங்கையினை
உச்சியின்மேல் குவித்துக் கொண்டுஅங்கு
அருட்காழிப்
பிள்ளையார் அடியில் வீழ்ந்த
நங்கை அவள்
தனை, நயந்த நம்பி யோடு
நானிலத்தில்
இன்புற்று வாழும் வண்ணம்,
மங்குல் தவழ்
சோலைமலி புகலி வேந்தர்
மணம் புணரும்
பெருவாழ்வு வகுத்து விட்டார்.
திருஞானசம்பந்தப் பெருமான் திருமருகலில்
வணிகன் விடம் தீர்த்து அத்தலத்தில் தங்கியிருந்த போது, சிறுத்தொண்ட நாயனார் வந்து மீண்டும் தம் பதிக்கு எழுந்தருள வேண்டும் என்று
விண்ணப்பித்தார். திருஞானசம்பந்தரும் அடியார்களுடன் திருமருகல் ஆலயத்திற்குச்
சென்று இறைவனை வணங்கினார். திருமருகல் இறைவன் ஆளுடைய பிள்ளையாருக்கு திருமருகல்
கோயிலிலேயே திருசெங்காட்டங்குடி கணபதீச்சரத்துக் கொண்ட அருட்கோலத்தைக் காட்டி
அருள் புரிந்தார். திருஞானசம்பந்தரும் அங்கமும் வேதமும் ஓதும் நாவர் என்று
தொடங்கும் (திருமருகல், திருசெங்கட்டாங்குடி
இரண்டு திருத்தலத்திற்கும் பொதுவான) பதிகம் பாடினார்.
காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
வள்ளல் பெருமான்தானம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "ஏச்சு அகல விண்
மருவினோனை விடம் நீக்க நல் அருள் செய் வண்மருகல் மாணிக்க வண்ணனே" என்று
போற்றி உள்ளார்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 472
திருமருகல்
நகரின்கண் எழுந்துஅருளி,
திங்களுடன் செங்கண்
பாம்பு
மருவுநெடும்
சடைமவுலி மாணிக்க
வண்ணர்கழல் வணங்கிப்
போற்றி,
உருகியஅன்பு
உறுகாதல் உள்அலைப்ப,
தெள்ளும் இசையுடனே
கூடப்
பெருகுதமிழ்த்
தொடைசார்த்தி அங்குஇருந்தார்
பெரும்புகலிப் பிள்ளை
யார்தாம்.
பொழிப்புரை : `திருமருகல்' என்ற நகரத்திற்கு எழுந்தருளிப் பிறைச்
சந்திரனுடன் சிவந்த கண்களுடைய பாம்பு தங்குவதற்கு இடமான நீண்ட சடையையுடைய
மாணிக்கவண்ண நாதரின் திருவடிகளை வணங்கிப் போற்றி, உருகிய அன்பு பெருகிய ஆசையானது
உள்ளத்தில் பொருந்தி அலைக்க, தெளிந்த இசையுடன்
பொருந்தப் பெருகும் தமிழ் மாலையைச் சாத்தி, அப்பதியில் சீகாழித் தலைவர்
எழுந்தருளியிருந்தார்.
இதுபோது அருளிய
பதிகம் கிடைத்திலது. மாணிக்கவண்ணர் - இறைவரின் பெயர்.
பெ.
பு. பாடல் எண் : 473
அந்நாளில்
ஒருவணிகன் பதிகன் ஆகி
அணைவான், ஓர் கன்னியையும் உடனே
கொண்டு,
பொன்ஆர்மே
ருச்சிலையார் கோயில் மாடு
புறத்தில்ஒரு
மடத்துஇரவு துயிலும் போது,
மின்ஆர்வெள்
எயிற்றுஅரவு கவ்வுதலும்,
கிளர்ந்த
விடவேகம் கடிதுதலை
மீக்கொண்டு ஏற,
தன்ஆவி
நீங்கும்அவன் தன்மை கண்டு,
சாயல்இளம் கன்னிநிலை
தளர்ந்து சோர்வாள்.
பொழிப்புரை : அந்நாள்களில் வணிகன்
ஒருவன் நடந்து செல்பவனாய்த் தன்னுடன் ஒரு கன்னிப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு
செல்பவன், பொன்மலையான மேருவை
வில்லாக உடைய சிவபெருமானின் கோயிலின் அருகில் உள்ள ஒரு மடத்தில் இரவில் தங்கி
உறங்கும் போழ்தில், ஒளிபொருந்திய
பற்களையுடைய பாம்பு அவனைத் தீண்டியதால், நஞ்சின்
வேகமானது விரைவாய்த் தலையில் ஏறிடத் தன் உயிர் நீங்கும் அவனுடைய நிலைமையைப்
பார்த்து, அவனுடன் வந்த
மென்மையான சாயலைக் கொண்ட இளங்கன்னி நிலை கலங்கித் தளர்ந்து சோர்பவளாய்,
பெ.
பு. பாடல் எண் : 474
வாள்அரவு
தீண்டவும்தான் தீண்ட கில்லாள்,
மறுமாற்றம்
மற்றுஒருவர் கொடுப்பார் இன்றி,
ஆள்அரியேறு
அனையானை அணுக வீழ்ந்தே,
அசைந்தமலர்க்
கொடிபோல்வாள் அரற்றும் போது,
கோள்உருமும்
புள்அரசும் அனையார் எல்லாக்
கொள்கையினாலும்
தீர்க்கக் குறையாது ஆக,
நீள்இரவு
புலர்காலை மாலை வாச
நெறிகுழலாள்
நெடிதுஅயர்ந்து புலம்பு கின்றாள்.
பொழிப்புரை : ஒளியுடைய பாம்பானது
அவனைத் தீண்டவும், தான் தீண்டாதவளாகிய
அப்பெண், தனக்கு ஆறுதல்
கூறுவார் எவரும் இல்லாதவளாய், ஆண்சிங்கம் போன்ற
அவ்வணிகனை அணுகிய நிலையில், அருகில் விழுந்து, அசைந்து வீழ்ந்த மலர்க்கொம்பைப்
போல்வாள் ஆன அவள் புலம்பும் போது,
வலிய
இடியையும் பறவை மன்னனான கருடனையும் போன்ற மந்திரவாதிகள் எல்லாவகையான கொள்கையின்
மூலமாகவும் தீர்க்க முயலவும், அந்நஞ்சு குறையா தாக, நீண்ட அவ்விரவில் விடியற்காலம்
வரையிலும் மணமுடைய மாலைசூடிய நெறிந்த கூந்தலையுடைய அப்பெண், பெரிதும் தளர்ந்து புலம்புகின்றவள்,
பெ.
பு. பாடல் எண் : 475
"அன்னையையும்
அத்தனையும் பிரிந்து, நின்னை
அடைவுஆக உடன்போந்தேன், அரவால் வீடி
என்னைஉயிர்
விட்டுஅகன்றாய், யான்என் செய்கேன்,
இவ்இடுக்கண்
தீர்க்கின்றார் யாரும் இல்லை,
மன்னியசீர்
வணிகர்குல மணியே, யானும்
வாழேன்" என்று
என்றுஅயர்வாள், மதியினாலே
சென்னிஇளம்
பிறையணிவார் கோயில் வாயில்
திசைநோக்கித்
தொழுதுஅழுதாள், செயல்ஒன்று இல்லாள்.
பொழிப்புரை : `அன்னையையும் தந்தையையும் பிரிந்து
உன்னையே சார்வாய் அடைந்து உன்னுடனே வந்தேன், பாம்பு தீண்டப் பெற்று உயிர் நீங்க
என்னை விட்டு அகன்றாய்! நான் என் செய்வேன்? இத் துன்பத்தைத் தீர்ப்பார் எவரும்
இல்லையே! நிலை பெற்ற சிறப்பையுடைய வணிகர் குலமணியே! நானும் இனி வாழேன்!' என்று பலவாறாக வருந்தும் அப்பெண், தன் அறிவால், தலையில் இளம்பிறையை அணிந்த இறைவரின்
திருக்கோயில் வாயில் திசையை நோக்கி,
வேறு
செயல் ஒன்றும் இல்லாதவளாய்க் கைகூப்பித் தொழுது அழுவாளாய்,
பெ.
பு. பாடல் எண் : 476
"அடியாராம் இமையவர்தம்
கூட்டம் உய்ய
அலைகடல்வாய் நஞ்சுஉண்ட
அமுதே, செங்கண்
நெடியானும்
நான்முகனும் காணாக் கோல
நீலவிட அரவுஅணிந்த
நிமலா,வெந்து
பொடிஆன
காமன்உயிர் இரதி வேண்டப்
புரிந்துஅளித்த
புண்ணியனே, பொங்கர் வாசக்
கடிஆரும்
மலர்ச்சோலை மருங்கு சூழும்
கவின்மருகல் பெருமானே, காவாய்"
என்றும்.
பொழிப்புரை : `அடியவர்களாகிய தேவர்களின் கூட்டம்
முழுதும் உய்யும் பொருட்டாய் அலைபொருந்திய பாற்கடலினி டத்துத் தோன்றிய
நஞ்சையுண்டருளிய அமுதமே! சிவந்த கண்களையுடைய நீண்ட திருமாலும் நான்கு
முகங்களையுடைய நான்முகனும் காணாத கோலம் உடைய நீலநிறமுடைய நச்சுப்பாம்புகளை அணியாய்
அணிந்த விமலனே! வெந்து சாம்பலாகிவிட்ட காமனின் உயிரை அவன் மனைவியான இரதியின்
வேண்டுதலுக்கு இணங்க மீண்டும் அளித்த புண்ணியனே! மலர்களின் மணம் மிக்க சோலைகள்
எங்கும் சூழவுள்ள அழகுடைய திருமருகலில் வீற்றிருக்கும் இறைவனே! காப்பாயாக!' என்று கூறியவள் பின்னும்,
பெ.
பு. பாடல் எண் : 477
"வந்துஅடைந்த
சிறுமறையோன் உயிர்மேல் சீறி
வரும்காலன் பெருங்கால
வலயம் போலும்
செந்தறுகண்
வெள்எயிற்றுக் கரிய கோலம்
சிதைந்துஉருள
வஉதைத்துஅருளுஞ் செய்ய தாளா,
இந்தவிடக்
கொடுவேகம் நீங்குமாறும்,
யான்இடுக்கண்
குழிநின்றும் ஏறுமாறும்,
அந்திமதிக்
குழவிவளர் செய்ய வேணி
அணிமருகல் பெருமானே, அருளாய்"
என்றும்.
பொழிப்புரை : `உம்மிடம் வந்தடைந்த சிறு மறையவனான
மார்க்கண்டேயனின் உயிர்மீது சினந்து வந்த இயமனின் பெரிய நஞ்சின் வடிவனைய சிவந்த
கொடுங்கண்ணையும், வெண்மையான பற்களையும்
கொண்ட கரிய கோலம் சிதைந்து உருளுமாறு உதைத்தருளிய சிவந்த திருவடியை யுடையவரே! இந்த
நஞ்சின் கொடிய வேகம் நீங்குமாறும்,
நான்
துன்பமான குழியினின்றும் மேல் ஏறுமாறும் பிறைச் சந்திரன் வளர்வதற்கு இடமான சிவந்த
சடையை உடைய அழகிய மருகலில் வீற்றிருந்தருளும் பெருமானே! அருள் செய்வீராக! என்றாள்.
மேலும்,
பெ.
பு. பாடல் எண் : 478
இத்தன்மை
சிவன்அருளே சிந்தித்து ஏங்கும்
இளங்கொடிபோல்
நுடங்கும்இடை ஏழை ஏத்தும்
அத்தன்மை
ஓசைஎழுந்து, எங்கள் சண்பை
ஆண்தகையார்
கும்பிடவந்து அணைகின்றார்தம்
மெய்த்தன்மை
விளங்குதிருச் செவியில் சார
மேவுதலும், திருவுள்ளக் கருணை
மேன்மேல்
வைத்துஅன்னம்
எனஅயர்வாள் மாடுநீடு
மாதவத்தோர்
சூழஎழுந்தருளி வந்தார்.
பொழிப்புரை : இங்ஙனம்
சிவபெருமானின், அருளையே எண்ணிய
வண்ணமாய் வருந்தும் இளங்கொடியைப் போன்ற துவளும் இடைகொண்ட ஏழையான அம்மங்கையின்
துன்பத்தின் வயப்பட்ட முறையீடு,
எம்
இறைவரான சீகாழி ஆண்டகையார் இறைவரைக் கும்பிடும் பொருட்டு வந்து சேர்கின்றவரின்
மெய்த்தன்மையுடைய செவிகளில் சேரப் பொருந்தவும், திருவுள்ளத்தில் கருணை மிகக் கொண்டு, அன்னப் பறவை போன்று வருந்துகின்றவள்
பக்கத்தில், அடியார்கள் சூழ்ந்து
வர எழுந்தருளி வந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 479
சிரபுரத்து
மறையவனார் சென்று நின்று,
சிவபெருமான்
அருள்போற்றி, சிந்தை நைந்து
பரவுறுவாள்
தனைநோக்கி, "பயப்ப டேல்நீ,
பருவுரலும்
நும்பரிசும் பகர்வாய்" என்னக்
கரமலர்கள்
உச்சியின்மேல் குவித்துக் கொண்டு,
கண்அருவி
சொரிந்துஇழிய, காழி வேதப்
புரவலனார்
சேவடிக்கீழ் வீழ்ந்து, தாங்கள்
போந்ததுவும்
புகுந்ததுவும் புகலல் உற்றாள்.
பொழிப்புரை : சீகாழியில் தோன்றிய
அந்தணரான பிள்ளையார், அப்பெண்ணின் அருகே
சென்று, சிவபெருமானின்
அருளையே எண்ணித் துன்புற்று அத்திருவருளையே நினைந்து போற்றும் அப்பெண்ணை நோக்கி, `நீ அஞ்ச வேண்டா! உன் துன்பத்தையும்
அதற்குரிய சூழலையும் கூறுவாயாக!'
என்று
கேட்க, கையாகிய மலர்களைத்
தலைமீது குவித்து வணங்கிக் கண்களினின்று நீர் அருவி சொரிந்து வழியச்
சீகாழியிலிருந்து வந்த அந்தணரின் சேவடியில் விழுந்து வணங்கி, தாங்கள் அங்கு வந்த வரலாற்றையும்
அத்துன்பம் புகுந்தவாற்றையும் கூறுவாளாயினாள்,
பெ.
பு. பாடல் எண் : 480
"வளம்பொழில்சூழ்
வைப்பூர்க்கோன் தாமன் எந்தை,
மருமகன்மற்று இவன், அவற்கு மகளிர்நல்ல
இளம்பிடியார்
ஓர்எழுவர், இவரில் மூத்தாள்
இவனுக்குஎன்று
உரைசெய்தே, ஏதிலானுக்கு
உளம்பெருகத்
தனம்பெற்றுக் கொடுத்த பின்னும்,
ஓர்ஒருவ ராகஎனை ஒழிய
ஈந்தான்,
தளர்ந்துஅழியும்
இவனுக்காத் தகவு செய்து,
அங்கு
அவரைமறைத்து இவன்
தனையே சார்ந்து போந்தேன்".
பொழிப்புரை : வளம் சூழ்ந்த
வைப்பூரின் தலைவரான `தாமன்' என் தந்தையாவான். இவன் அவனுடைய மருமகன்.
என் தந்தைக்கு இளம்பிடி போன்ற ஏழு பெண்மக்கள். அவ்வேழு பெண்களில் மூத்தவளை இவனுக்கு
மணம் செய்வதென்று சொல்லி, அயலவனிடம் இருந்து
நிறையப் பணம் பெற்றுக் கொண்டு, அயலவனுக்கு மணம்
செய்து தந்து, அதன் பின்னரும்
ஒவ்வொருவராய் என்னைத் தவிர மற்றப் பெண்கள் ஐவரையும் அங்ஙனமே மணம் செய்து தந்து
விட்டான். மனம் தளர்ந்து வருந்தும் இவனுக்காக அன்பு பூண்டு அங்கு அவர்களை விட்டு
நீங்கி இவனையே சார்பாகக் கொண்டு நான் வந்தேன்,
பெ.
பு. பாடல் எண் : 481
"மற்றுஇவனும் வாள்அரவு
தீண்ட மாண்டான்,
மறிகடலில்
கலம்கவிழ்த்தார் போல நின்றேன்,
சுற்றத்தார்
எனவந்து தோன்றி, என்பால்
துயரம்எலாம்
நீங்கஅருள் செய்தீர்" என்னக்
கற்றவர்கள்
தொழுதுஏத்துங் காழி வேந்தர்
கருணையினால்
காரிகையாள் தனக்கு நல்கப்
பற்றியவாள்
அரவுவிடம் தீரு மாறு
பணைமருகல் பெருமானைப்
பாடல் உற்றார்.
பொழிப்புரை : `என்னுடன் வந்த இவனும் கொல்லுதலையுடைய
பாம்பு தீண்டப் பெற்று இறந்தான். மடிந்து விழும் அலைகளையுடைய கடலின் நடுவில்
கப்பல் கவிழ்ந்தது போல் நிற்கின்றேன். என் உறவினர்போல் தோன்றி என்னிடம் உற்ற
துன்பங்கள் எல்லாம் நீங்குமாறு அருள் செய்தீர்!' எனக் கூறினாள். கற்றவர்கள் வணங்கிப்
போற்றும் காழித் தலைவரான பிள்ளையார், அருள்
மிக்கதனால் அப்பெண்ணுக்கு நல்குமாறு, தீண்டிய
பாம்பின் நஞ்சு தீருமாறு வயல்கள் சூழ்ந்த திருமருகல் இறைவரைப் பாடலானார்.
பெ.
பு. பாடல் எண் : 482
சடையானை, எவ்வுயிர்க்கும் தாய்
ஆனானை,
சங்கரனை, சசிகண்ட மவுலி யானை,
விடையானை, வேதியனை, வெண்நீற் றானை,
விரவாதார்
புரம்மூன்றும் எரியச் செற்ற
படையானை, பங்கயத்து மேவி
னானும்
பாம்புஅணையில்
துயின்றானும் பரவும் கோலம்
உடையானை, "உடையானே தகுமோ, இந்த
ஒள்இழையாள்
உள்மெலிவு"என்று எடுத்துப் பாட.
பொழிப்புரை : சடையை உடையவரை, எல்லா உயிர்களுக்கும் தாயானவராகிய
சங்கரரை, பிறைச்சந்திரன்
தங்கும் முடி உடையவரை, ஆனேற்றை ஊர்தியாக
உடையவரை, வேதியரை, திருவெண்ணீற்றை உடையவரை, பகைவரின் முப்புரங்கள் எரியுமாறு அழித்த
படைக்கலமுடையவரை, தாமரையில்
வீற்றிருக்கும் நான்முகனும், பாம்பணையில் துயிலும்
திருமாலும் போற்றுகின்ற கோலம் உடையவரை, திருவாயால்
அழைத்து, `பெருமானே! இந்த ஒளி
பொருந்திய அணிகளை அணிந்த பெண்ணின் உள்ளம் மெலிவதான துன்பம் உனக்குத் தகுதியாமோ?' என்று தொடங்கிப் பாடினார்.
இவ்வமைப்பில் அருளிய
பதிகம் `சடையாய் எனுமால்' (தி.2 ப.18) எனத் தொடங்கும் இந்தளப்
பண்ணிலமைந்ததாகும். இப்பதிகத்தில் வரும் ஒவ்வொரு தொடரும் கருத்துடை அடைமொழியாய்
நின்று, அப்பெண்ணின்
துயரத்தையும், அதனை அகற்றுதற்குரிய
குறிப்பையும் கொண்டு நிற்கின்றன. முதற்பாடலின் நான்காவது அடியையே இங்கு எடுத்து
மொழிந்துள்ளார்.
பெ.
பு. பாடல் எண் : 483
பொங்குவிடம்
தீர்ந்துஎழுந்து நின்றான் சூழ்ந்த
பொருஇல்திருத்
தொண்டர்குழாம் பொலிய ஆர்ப்ப
அங்கையினை
உச்சியின்மேல் குவித்துக் கொண்டுஅங்கு
அருட்காழிப்
பிள்ளையார் அடியில் வீழ்ந்த
நங்கைஅவள்
தனைநயந்த நம்பி யோடு
நானிலத்தில்
இன்புஉற்று வாழும் வண்ணம்
மங்குல்தவழ்
சோலைமலிபுகலி வேந்தர்
மணம்புணரும்
பெருவாழ்வு வகுத்து விட்டார்.
பொழிப்புரை : அவ்வளவில், வணிகன் நஞ்சு நீங்கப்பெற்று எழுந்து
நின்றான். சூழ இருந்த ஒப்பில்லாத அடியவர்களின் கூட்டம் மிகுந்த மகிழ்வொலி செய்தது.
கைகளை உச்சிமீது குவித்துக் கொண்டு அங்கு அருளுடைய பிள்ளையாரின் திருவடிகளில்
வீழ்ந்த நங்கையான அப்பெண்ணை, அன்பு செய்த நம்பியான
அந்த வணிகனோடும் இவ்வுலகத்தில் இன்பம் பொருந்தி வாழுமாறு, மேகம் தவழும் சோலை மிகச் சூழ்ந்த
சீகாழித் தலைவர், மணம் புணர்கின்ற
பெருவாழ்வைச் செய்து இல்வாழ்வில் இயைவித்தார்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிகம்
2.018 திருமருகல் பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
சடையாய்
எனுமால், சரண்நீ எனுமால்,
விடையாய்
எனுமால், வெருவா விழுமால்,
மடைஆர்
குவளை மலரும் மருகல்
உடையாய், தகுமோ இவள்உள்
மெலிவே.
பொழிப்புரை :நீர் நிலைகளில் குவளை
மலர்கள் மலர்ந்து மணம் செய்யும் திருமருகலைத் தனக்குரிய ஊராக உடைய பெருமானே!
இப்பெண், சடையாய் என்றும் விடையாய்
என்றும் நீயே எனக்குப் புகலிடம் என்றும் கூறி அஞ்சி மயங்கி விழுகின்றாள். உன்னையே
நினைந்து புலம்பும் இவள் மனவருத்தத்தைப் போக்காதிருத்தல் உன் பெருமைக்குத் தக்கதோ?
பாடல்
எண் : 2
சிந்தாய்
எனுமால், சிவனே எனுமால்,
முந்தாய்
எனுமால், முதல்வா எனுமால்,
கொந்துஆர்
குவளை குலவும் மருகல்
எந்தாய், தகுமோ இவள்ஏ சறவே.
பொழிப்புரை :பூங்கொத்துக்கள்
குவளை மலர் ஆகியன மலர்ந்து மணம் பரப்பும் திருமருகலில் எழுந்தருளிய எம் தந்தையே!
இவள் உன்னை நினைந்து, `சிந்தையில்
நிறைந்துள்ளவனே! என்றும் சிவனே என்றும், எல்லோர்க்கும்
முற்பட்டவனே என்றும், முதல்வனே` என்றும் புலம்பி நைகின்றாள். இவள்
துன்பத்தைப் போக்காதிருத்தல் உன் பெருமைக்குத் தக்கதோ?
பாடல்
எண் : 3
அறைஆர்
கழலும், அழல்வாய் அரவும்,
பிறைஆர்
சடையும் உடையாய், பெரிய
மறைஆர்
மருகல் மகிழ்வாய், இவளை
இறைஆர்
வளைகொண்டு எழில்வவ் வினையே.
பொழிப்புரை :ஒலிக்கின்ற
வீரக்கழலையும், கொடிய விடம்
பொருந்திய வாயினை உடைய பாம்பையும் பிறையணிந்த சடையினையும் உடையவனே! பெருமைக்குரிய
வேதங்களைக் கற்றுணர்ந்த மறையவர் வாழும் திருமருகலில் மகிழ்ந்து உறைபவனே! இப்பெண்ணை
அவள் முன்கையில் அணிந்திருந்த வளையல்களைக் கவர்ந்ததோடு அழகையும் கவர்ந்தாயே!
இதுதகுமோ?
பாடல்
எண் : 4
ஒலிநீர்
சடையில் கரந்தாய், உலகம்
பலிநீ
திரிவாய், பழிஇல் புகழாய்,
மலிநீர்
மருகல் மகிழ்வாய், இவளை
மெலிநீர்
மையள்ஆக் கவும்வேண் டினையே.
பொழிப்புரை :முழங்கிவந்த
கங்கையைத் தன் சடைமிசை மறைத்தவனே! உலகெங்கணும் சென்று பலியேற்றுத் திரிபவனே!
குற்றம் அற்ற புகழாளனே! நீர் நிறைந்த திருமருகலைத் தனது இடமாகக் கொண்டு மகிழ்பவனே!
இப்பெண்ணை மெலியும் நீர்மையள் ஆக்கவும் விரும்பினையோ?
பாடல்
எண் : 5
துணிநீ
லவண்ணம் முகில்தோன் றிஅன்ன
மணிநீ
லகண்டம் உடையாய், மருகல்
கணிநீ
லவண்டுஆர் குழலாள், இவள்தன்
அணிநீ
லஒண்கண் அயர்வுஆக் கினையே.
பொழிப்புரை :தெளிந்த நீல நிறம்
பொருந்திய மேகம் தோன்றினாற் போன்ற அழகிய நீலகண்டத்தை உடையவனே! திருமருகலை
வந்தடைந்த, நீலவண்டுகளின்
தொகுதியோ எனக்கருதக் கூடிய கூந்தலை உடைய இளைய இப்பெண்ணின் ஒளிபொருந்திய கண்கள் கலங்குமாறு
இவளுக்கு அயர்வை உண்டாக்கி விட்டாயே. இது தகுமோ?
பாடல்
எண் : 6
பலரும்
பரவப் படுவாய், சடைமேல்
மலரும்
பிறைஒன்று உடையாய், மருகல்
புலரும்
தனையும் துயிலாள், புடைபோந்து
அலரும்
படுமோ அடியாள் இவளே.
பொழிப்புரை :பலராலும் பரவிப்
போற்றப் படுபவனே! சடையின் மேல் விளங்கித் தோன்றும் பிறை ஒன்றை உடையவனே! திருமருகலை
வந்தடைந்த இப்பெண் விடியும் அளவும் துயிலாதவளாய்த் துயருறு கிறாள். அடியவளாகிய
இவள்மீது பழிமொழி வருவது தக்கதோ?
பாடல்
எண் : 7
வழுவாள்
பெருமான் கழல்வாழ்கு எனா
எழுவாள்
நினைவாள் இரவும் பகலும்,
மழுவாள்
உடையாய், மருகல் பெருமான்,
தொழுவாள்
இவளைத் துயர்ஆக் கினையே.
பொழிப்புரை :மழுப்படையை உடையவனே!
மருகற் பெருமானே! தவறாமல் `பெருமான் திருவடிகள்
வாழ்க` என்று கூறிக் கொண்டே
துயில் எழுந்து இரவும் பகலும் உன்னையே நினைந்து தொழுபவளாகிய இவளைத்
துயருக்குரியவள் ஆக்கினையே! இது தகுமோ?
பாடல்
எண் : 8
இலங்கைக்கு
இறைவன் விலங்கல் எடுப்பத்
துலங்கவ்
விரல்ஊன் றலும்,தோன் றலனாய்
வலங்கொள்
மதில்சூழ் மருகல் பெருமான்,
அலங்கல்
இவளை அலர்ஆக் கினையே.
பொழிப்புரை :இலங்கைக்கு அரசனாகிய
இராவணன் கயிலை மலையைப் பெயர்த்த போது, அவனது
ஆற்றல் அழியுமாறு, விளங்கும் தனது
காற்பெருவிரலை ஊன்றிய அளவில் அவன் செய்வதறியாது இடர்ப்பட்டு மீண்டு, வலமாக வந்து பணிந்து வரம் கொண்ட
மருகற்பெருமானே! மாலைசூடி மணம் கொள்ள இருந்த இவளுக்குத் துன்பம் வரச்செய்தனையே!
இது தக்கதோ?
பாடல்
எண் : 9
எரிஆர்
சடையும் அடியும் இருவர்
தெரியா
ததுஒர்தீத் திரள் ஆயவனே,
மரியார்
பிரியா மருகல் பெருமான்,
அரியாள்
இவளை அயர்வுஆக் கினையே.
பொழிப்புரை :நெருப்புப் போலச்
சிவந்த சடையையும், அடியையும் திருமால்
பிரமன் ஆகிய இருவர் அறியமுடியாதவாறு ஒளிப்பிழம்பாய் உயர்ந்து தோன்றியவனே! பிறவி
நீங்கிய முக்தர்கள் வாழும் திருமருகலில் விளங்கும் பெருமானே! அரியவளாக
இத்தலத்துக்குவந்த இவளைத் துன்புறச்செய்தாயே! இது தக்கதோ?
பாடல்
எண் : 10
அறிவுஇல்
சமணும் அலர்சாக் கியரும்
நெறிஅல்
லனசெய் தனர், நின்று உழல்வார்,
மறிஏந்
துகையாய், மருகல் பெருமான்,
நெறிஆர்
குழலி நிறைநீக் கினையே.
பொழிப்புரை :அறிவற்ற சமணர்களும்
எங்கும் பரவி வாழும் சாக்கியர்களும் நெறியல்லனவற்றைச் செய்து நின்று உழல்பவராவர்.
மான்கன்றை ஏந்திய கையை உடையவனே! மருகற் பெருமானே! உன்னை நினையும் அடர்ந்த
கூந்தலினளாய இப்பெண்ணின் மனத்தைச் சிதறுண்ணச் செய்தீரே, இது தகுமோ?
பாடல்
எண் : 11
வயஞா
னம்வல்லார் மருகல் பெருமான்
உயர்ஞா
னம்உணர்ந்து அடிஉள் குதலால்
இயன்ஞா
னசம்பந் தனபா டல்வல்லார்
வியன்ஞா
லம்எல்லாம் விளங்கும் புகழே.
பொழிப்புரை :தன்மயமாக்கும்
திருவருள் ஞானம் பெற்றார் வாழும் மருகற் பெருமான் திருவடிகளை உயர்ஞானம் உணர்ந்து
நினைதலால் பதி இயல்புற்ற ஞானசம்பந்தன் அருளிய இப்பதிகப் பாடல்களைப் பாடவல்லார்
புகழ், அகன்ற இவ்வுலக
மெல்லாம் விளங்கித்தோன்றும்.
திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 484
மற்றுஅவர்க்கு
விடைகொடுத்து,அங்கு அமரும் நாளில்,
மருகல்நக ரினில்வந்து, வலிய பாசம்
செற்றபுகழ்ச்
சிறுத்தொண்டர் வேண்ட, மீண்டும்
செங்காட்டங்
குடியில்எழுந்தருள வேண்டிப்
பற்றிஎழும்
காதல்மிக மேன்மேல் சென்று
பரமனார்
திறத்துஉன்னிப் பாங்கர் எங்கும்
சுற்றும்
அருந் தவரோடும் கோயில் எய்திச்
சுடர்மழுஆண்டவர்
பாதம் தொழுவான் புக்கார்.
பொழிப்புரை : வணிகனுக்கும்
அப்பெண்ணுக்கும் விடை தந்து, சீகாழித் தலைவர், திருமருகலில் தங்கி இருக்கும் நாள்களில்
வலிய ஆணவமலத் திண்மையினை அழித்த புகழுடைய சிறுத்தொண்ட நாயனார், திருமருகல் நகரில் வந்து வேண்டிக் கொள்ள, மீண்டும் பிள்ளையார்
திருச்செங்காட்டாங்குடியில் எழுந்தருளுவதற்கான, மேன்மேலும் தொடர்ந்து எழுகின்ற
பெருவிருப்புமிக, இறைவரின் திருவருளைப்
பெற எண்ணி, சூழ்ந்திடும் அடியார்
கூட்டத்தோடும் திருக்கோயிலை அடைந்து, ஒளியுடைய
மழுப்படையை உடைய இறைவரின் திருவடிகளைத் தொழுவதற்காக உள்ளே புகுந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 485
புக்குஇறைஞ்சி
எதிர்நின்று போற்று கின்றார்,
பொங்குதிரை
நதிப்புனலும் பிறையும் சேர்ந்த
செக்கர்முடிச்
சடைமவுலி வெண்நீற் றார்தம்
திருமேனி ஒருபாகம்
பசுமை ஆக,
மைக்குலவு
கண்டத்தார் மருகல் கோயில்
மன்னுநிலை மனங்கொண்டு
வணங்கு வார்முன்,
கைக்கனலார்
கணபதீச் சரத்தின் மேவும்
காட்சிகொடுத்து
அருளுவான் காட்டக் கண்டார்.
பொழிப்புரை : கோயிலுக்குள்
புகுந்து வணங்கிப் போற்றுகின்ற பிள்ளையார், பொங்கும் அலைகளையுடைய நீர் நிறைந்த
கங்கையும் பிறைச் சந்திரனும் கூடிய சிவந்த சடையான மகுடமுடைய திருவெண்ணீற்றை அணிந்த
இறைவரின் திருமேனி ஒருபாகம் பசுமையாக, நஞ்சு
விளங்கும் கழுத்தையுடைய இறைவர்,
திருமருகல்
கோயிலில் எழுந்தருளியிருந்த நிலைமையினை உள்ளத்தில் எண்ணிக் கொண்டு வணங்குவாராக
அவர் முன்பு, கையில் தீயையுடைய
இறைவர், கணபதீச்சரத்தில்
பொருந்திய காட்சியை இங்குத் தந்தருளும் பொருட்டுக் காட்டியருளக் கண்டார்.
`ஒருபாகம் பசுமையாக' என்றது அம்மையாரை இடனாகக் கொண்டிருப்பது
பற்றியாம். திருமருகலில் வணங்குவாருக்குத் திருச்செங்காட்டாங்குடியில்
வீற்றிருந்தருளும் திருக்கோலத்தைக் காட்டியது, அவரை அங்கு வருமாறு அருளிய
திருக்குறிப்பாகும்.
பெ.
பு. பாடல் எண் : 486
மருகல்
அமர்ந்து நிறைந்த கோலம்
மல்குசெங் காட்டங்
குடியின் மன்னிப்
பெருகு
கணபதி ஈச்ச ரத்தார்
பீடுஉடைக் கோலமே
ஆகித் தோன்ற
உருகிய
காதலும் மீது பொங்க
உலகர்முன் கொள்ளும்
உணர்வு நீட
அருவிகண்
வார்வுறப் பாடல் உற்றார்
"அங்கமும்
வேதமும்" என்று எடுத்து.
பொழிப்புரை : திருமருகலில்
விரும்பி நிறைந்த கோலமானது, பொருந்திய
திருச்செங்காட்டங்குடியில் நிலைபெற்றுக் காணத்தகும் கணபதீச்சரத்தாரின் பெருமையுடைய
கோலமேயாகித் தோன்ற, உள்ளம் உருகுவதால்
உள்ளதான காதல் மேன்மேலும் பொங்கவும், உலகத்தார்க்கு
அறிவுறுத்தும் கருணை உணர்வு நீடவும், கண்களில்
இருந்து ஆனந்தக் கண்ணீர் அருவி போல வடிய, `அங்கமும்
வேதமும்\' எனத் தொடங்கிப்
பாடுவாராய்,
இத்தொடக்கமுடைய
பதிகம் நட்டபாடைப் பண்ணிலமைந்த பதிகமாகும் (தி.1 ப.6). பாடல்தொறும், `கணபதியீச்சரம் காமுறவே, மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்' என வருவதே இவ்வகையில் ஆசிரியர்
கூறுதற்குக் காரணமாயிற்று. `மைந்த சொல்லாய்' எனப் பதிகம் முழுதும் அமைந்திருத்தலின்
வினாவுரைப் பதிகமாயிற்று.
பெ.
பு. பாடல் எண் : 487
கண்டுஎதிர்
போற்றி வினவிப் பாடிக்
கணபதி ஈச்சரங் காத
லித்த
அண்டர்
பிரானை வணங்கி வைகும்
அப்பதி யில்சில
நாள்கள் போற்றித்
தொண்டர்
உடன்அருள் பெற்று மற்றத்
தொல்லைத் திருப்பதி
எல்லை நீங்கிப்
புண்டரி
கத்தடஞ் சூழ் பழனப்
பூம்புக லூர்தொழப்
போது கின்றார்.
பொழிப்புரை : அவ்வகையில் தோன்றப்
பார்த்து, நேரே போற்றி, இவ்வாறு அருளுதற்குக் காரணம் என்ன? என வினவிய கருத்துப்படப் பாடி, கணபதீச்சரத்தில் விரும்பி
எழுந்தருளியிருக்கும் தேவதேவரைச் சென்று வணங்கி, அத்திருச்செங்காட்டங்குடியில் சில நாள்கள்
தங்கிப் போற்றித் தொண்டர்களுடன் விடைபெற்று, அப் பழைய பதியை நீங்கி, தாமரைப் பொய்கைகள் சூழ்ந்த வயல்களை
யுடைய பூம்புகலூரினைச் சென்று வணங்குதற்கு எழுந்தருளுவாராகி,
திருஞானசம்பந்தர்
திருப்பதிகம்
1.006 திருமருகலும்
திருச்செங்காட்டங்குடியும்
பண் – நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
அங்கமும்
வேதமும் ஓதும்நாவர்,
அந்தணர், நாளும் அடிபரவ,
மங்குல்
மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்த, சொல்லாய்,
செங்கயல்
ஆர்புனல் செல்வமல்கு
சீர்கொள்செங் காட்டங்
குடிஅதன்உள்
கங்குல்
விளங்குஎரி ஏந்திஆடும்
கணபதி ஈச்சரம்
காமுறவே.
பொழிப்புரை :நான்கு வேதங்களையும்
ஆறு அங்கங்களையும் ஓதும் நாவினராகிய அந்தணர்கள் நாள்தோறும் தன் திருவடிகளை வணங்க, வானமண்டலத்திலுள்ள சந்திரன் தவழ்ந்து
செல்லுதற்கு இடமாய் உயர்ந்து விளங்கும் மாடவீதிகளை உடைய திருமருகலில்
எழுந்தருளியுள்ள இறைவனே! செங்கயல்கள் நிறைந்த புனல்சூழ்ந்ததும், செல்வ வளம் நிறைந்ததுமான புகழார்ந்த
திருச்செங்காட்டங்குடியில் எரியைக்கையில் ஏந்தி நள்ளிருளில் நட்டம் ஆடுதற்கு
இடமாய்க் கணபதியீச்சரத்தைக் காமுறுதல் ஏன்? சொல்வாயாக.
பாடல்
எண் : 2
நெய்தவழ்
மூஎரி காவல்ஓம்பும்
நேர்புரி நூல்மறை
யாளர்ஏத்த,
மைதவழ்
மாட மலிந்தவீதி
மருகல் நிலாவிய மைந்த, சொல்லாய்,
செய்தவ
நான்மறை யோர்கள்ஏத்தும்
சீர்கொள்செங் காட்டங்
குடிஅதன்உள்
கைதவழ்
கூர்எரி ஏந்திஆடும்
கணபதி ஈச்சரம்
காமுறவே.
பொழிப்புரை :அவியாக அளிக்கப்
பெறும் நெய் தவழ்ந்து எரியும் முத்தீயைப் பாதுகாப்பாக ஓம்பி வரும் நேர்மையாளரும், முப்புரி நூல் அணிந்த வேத வித்துக்களும்
ஆகிய அந்தணர் ஏத்த, கரிய மேகங்கள் தவழும்
மாட வீடுகள் நிறைந்த வீதிகளை உடைய திருமருகலில் எழுந்தருளிய இறைவனே! தவங்கள்
பலவும் செய்யும் நான்மறையோர் போற்றும் புகழ் பொருந்திய திருச்செங்காட்டங்குடியில், திருக்கரத்தில் மிக்க தீயை ஏந்தி
ஆடுதற்கு இடமாய்க் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் என்ன? சொல்வாயாக.
பாடல்
எண் : 3
தோலொடு
நூல்இழை சேர்ந்தமார்பர்,
தொகுமறை யோர்கள்
வளர்த்தசெந்தீ,
மால்புகை
போய்விம்மு மாடவீதி
மருகல் நிலாவிய மைந்த,சொல்லாய்,
சேல்புல்கு
தண்வயல் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங்
குடிஅதன்உள்
கால்புல்கு
பைங்கழல் ஆர்க்கஆடும்
கணபதி ஈச்சரம்
காமுறவே.
பொழிப்புரை :மான் தோலோடு கூடிய
முப்புரிநூல் அணிந்த மார்பினராய்த் திரளாய்நின்று வேதம் வல்ல அந்தணர்கள் வளர்த்த
செந்தீயிலிருந்து எழுந்த கரிய புகைபோய் மிகவும் மிகுதியாக வெளிப்படும் மாடங்களோடு
கூடிய வீதிகளை உடைய திருமருகலில் விளங்கும் இறைவனே, சேல்கள் நிறைந்த குளிர்ந்த வயல்களை
அடுத்த சோலைகளால் சூழப்பட்ட சிறப்புமிக்க திருச்செங்காட்டங்குடியில் காலில் கட்டிய
கழல்கள் ஆர்க்க ஆடிக்கணபதியீச்சரத்தைக் காமுறுதற்குக் காரணம் என்ன? சொல்வாயாக.
பாடல்
எண் : 4
நாமரு
கேள்வியர், வேள்விஓவா
நான்மறை யோர்வழி
பாடுசெய்ய,
மாமரு
வும்மணிக் கோயில்மேய
மருகல் நிலாவிய மைந்த, சொல்லாய்,
தேமரு
பூம்பொழிற் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங்
குடிஅதன்உள்
காமரு
சீர்மகிழ்ந்து எல்லிஆடும்
கணபதி ஈச்சரம்
காமுறவே.
பொழிப்புரை :நாவிற் பொருந்திய
வாய்ப்பயிலப்பட்டுவரும் வேதங்களை ஓதி உணர்ந்தவர்களும், வேள்விகளை இடைவிடாமல் செய்து
வருபவர்களுமாகிய நான்மறையாளர் வழிபடச் செல்வம் மருவிய மணிக்கோயிலை உடைய மருகலில்
விளங்கும் மைந்தனே! தேன் நிறைந்த அழகிய பொழில்களால் சூழப்பெற்ற சிறப்புமிக்க
செங்காட்டங்குடியில் விளங்குகின்ற அழகும் பெருமையும் மிக்க கணபதியீச்சரத்தைக்
காமுற்று இராப்போதில் நடனம் ஆடுதற்குக் காரணம் யாது? சொல்வாயாக.
பாடல்
எண் : 5
பாடல்
முழவும் விழவும்ஓவாப்
பன்மறை யோர்அவர்
தாம்பரவ,
மாட
நெடுங்கொடி விண்தடவும்
மருகல் நிலாவிய மைந்த,சொல்லாய்,
சேடக
மாமலர்ச் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங்
குடிஅதன்உள்
காடக
மேஇட மாகஆடும்
கணபதி ஈச்சரம்
காமுறவே.
பொழிப்புரை :பாடலும், அதற்கிசைந்த முழவு ஒலியும், திருவிழாக்கள் ஒலியும்,இடைவிடாமல் நிகழ்வதும் மாட வீடுகளில்
கட்டிய கொடிகள் வானைத்தடவுவதும் ஆகிய சிறப்புக்களை உடைய திருமருகலில் வேதங்கள்
பலவும் கற்ற அந்தணாளர் பரவ எழுந்தருளிய இறைவனே! உயரமான மணம் மிக்க மலர்ச்சோலைகளால்
சூழப்பெற்ற சிறப்புமிக்க செங்காட்டங்குடியில், காட்டிடமே நாடகமாடுதற்கு இடமாக
இருக்கவும், ஆடுதற்குரிய இடமாகக்
கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் என்ன? சொல்வாயாக.
பாடல்
எண் : 6
புனைஅழல்
ஓம்புகை அந்தணாளர்
பொன்னடி நாள்தொறும்
போற்றிசைப்ப,
மனைகெழு
மாட மலிந்தவீதி
மருகல் நிலாவிய மைந்த, சொல்லாய்,
சினைகெழு
தண்வயல் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங்
குடிஅதன்உள்
கனைவளர்
கூர்எரி ஏந்திஆடும்
கணபதி ஈச்சரம்
காமுறவே.
பொழிப்புரை :கிரியைகள்
பலவற்றாலும் அழகு செய்யப்பெற்ற முத்தீயை வளர்க்கும் கைகளை உடைய அந்தணர்கள், நாள்தோறும் தன் திருவடிகளைப்போற்ற, இல்லங்களும் விளங்கும் மாடங்களும்
நிறைந்த வீதிகளை உடைய திருமருகலில் விளங்கும் இறைவனே! நெற்பயிர்கள் திளைத்து
வளரும் தண் வயல்களையடுத்த சோலைகளால் சூழப்பெற்ற நீர்வளம் மிக்க
செங்காட்டங்குடியில் எரியேந்திக் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் என்ன? சொல்வாயாக.
பாடல்
எண் : 7
• * * * *
பாடல்
எண் : 8
பூண்தங்கு
மார்பின் இலங்கைவேந்தன்
பொன்நெடுந் தோள்வரை
யால்அடர்த்து,
மாண்தங்கு
நூல்மறை யோர்பரவ
மருகல் நிலாவிய மைந்த, சொல்லாய்,
சேண்தங்கு
மாமலர்ச் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங்
குடிஅதன்உள்
காண்தங்கு
தோள்பெயர்த்து எல்லிஆடும்
கணபதி ஈச்சரம்
காமுறவே.
பொழிப்புரை :கயிலை மலையைப்
பெயர்க்க முற்பட்ட அணிகலன்கள் பொருந்திய மார்பினை உடைய இலங்கை மன்னன் இராவணனின்
அழகிய பெரிய தோள்களை அம்மலையாலேயே அடர்த்து, மாட்சிமை பொருந்திய நான்மறையோர் பரவத்
திருமருகலில் எழுந்தருளி விளங்கும் இறைவனே! வானளாவிய மண மலர்ச்சோலைகளால்
சூழப்பெற்ற சீர்மிக்க செங்காட்டங்குடியில் அழகிய உன் திருத்தோள்களை அசைத்து இரவில்
நடமிடுதற்கு இடனாய்க் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் யாதோ? சொல்வாயாக.
பாடல்
எண் : 9
அந்தமும்
ஆதியும் நான்முகனும்
அரவுஅணை யானும்
அறிவரிய
மந்திர
வேதங்கள் ஓதுநாவர்
மருகல் நிலாவிய மைந்த, சொல்லாய்,
செந்தமி
ழோர்கள் பரவிஏத்தும்
சீர்கொள்செங் காட்டங்
குடிஅதன்உள்
கந்தம்
அகில்புகை யேகமழும்
கணபதி ஈச்சரம்
காமுறவே.
பொழிப்புரை :நான்முகனும்
அரவணையானும் ஆதியாய முடியையும் அந்தமாகிய அடியையும் அறிதற்கு அரியவனாய், மந்திர வடிவான வேதங்களை ஓதும் நாவினரான
அந்தணர் பரவி ஏத்தத் திருமருகலில் விளங்கும் இறைவனே! செந்தமிழ் வல்லோர் பரவித்
துதிக்கும் சிறப்புமிக்க செங்காட்டங்குடியில் அகில் புகை மணமே கமழும்
கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் யாதோ? சொல்வாயாக.
பாடல்
எண் : 10
இலைமரு
தேஅழ காகநாளும்
இடுதுவர்க் காயொடு
சுக்குத்தின்னும்
நிலைஅமண்
தேரரை நீங்கிநின்று,
நீதர்அல் லார்தொழு
மாமருகல்,
மலைமகள்
தோள்புணர் வாய், அருளாய்,
மாசுஇல்செங் காட்டங்
குடிஅதன்உள்
கலைமல்கு
தோல்உடுத்து எல்லிஆடும்
கணபதி ஈச்சரம்
காமுறவே.
பொழிப்புரை :மருத மரத்து இலையின்
சாற்றினால் நிறமூட்டிய ஆடைகளை அணிந்த புத்தர், கடுக்காய், சுக்கு, இவற்றைத் தின்னும் சமணர் ஆகியோரை
விடுத்து, சைவர்கள்
தொழத்திருமருகலில் மலைமகளோடு உறையும் மைந்தனே! குற்றமற்ற செங்காட்டங்குடியில்
மான்தோலை உடுத்தி நள்ளிருளில் ஆடுதற்கு இடனாய்க்கணபதியீச்சரத்தைக் காமுறுதற்குக்
காரணம் யாதோ? சொல்வாயாக.
பாடல்
எண் : 11
நாலும்
குலைக்கமுகு ஓங்குகாழி
ஞானசம் பந்தன், நலம்திகழும்
மாலின்
மதிதவழ் மாடம்ஓங்கும்
மருகலின் மற்றுஅதன்
மேல்மொழிந்த
சேலும்
கயலும் திளைத்தகண்ணார்
சீர்கொள்செங் காட்டங்
குடிஅதன்உள்
சூலம்வல்
லான்கழல் ஏத்துபாடல்
சொல்லவல் லார்வினை
இல்லையாமே.
பொழிப்புரை :தொங்குகின்ற குலைகளோடு
பாக்கு மரங்கள் ஓங்கி வளரும் சீகாழிப்பதியினனாய ஞானசம்பந்தன், நலம் திகழ்வதும், மேகமும் பிறையும் தவழும் மாடங்கள்
ஓங்கியதுமான திருமருகல் இறைவனையும்,
சேல்
கயல் ஆகிய மீன்வகைகளை ஒத்த கண்களை உடைய மகளிர் வாழ்வதும் சிறப்பு மிக்கதும் ஆகிய
செங்காட்டங்குடியில் முத்தலைச் சூலம் ஏந்தியவனாய் விளங்கும் பெருமானையும்
புகழ்ந்து ஏத்திய பாடல்களைச் சொல்லித் துதிக்க வல்லார் வினைகள், இல்லையாகும்.
திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெ.
பு. பாடல் எண் : 240
சீர்தரு
செங்காட் டங்குடி, நீடுந் திருநள்ளாறு,
ஆர்தரு
சோலை சூழ்தரு சாந்தை அயவந்தி,
வார்திகழ்
மென்முலை யாள்ஒரு பாகன் திருமருகல்,
ஏர்தரும்
அன்பால் சென்று வணங்கி இன்புற்றார்.
பொழிப்புரை : அப்பெருமான்
எழுந்தருளியிருக்கும் சிறப்பு உடைய திருச்செங்காட்டங்குடி, செல்வம் மிகும் திருநள்ளாறு, பூமரங்கள் நிறைந்த சோலைகள் சூழந்த
திருச்சாத்தமங்கையிலுள்ள அயவந்தி,
கச்சுப்
பொருந்திய மார்பகங்களையுடைய அம்மையை ஒரு கூற்றில் கொண்டருளும் சிவபெருமானின்
திருமருகல் ஆகிய திருப்பதிகளை எல்லாம் அன்புடன் சென்று வணங்கி இன்பம் அடைந்தார்.
குறிப்புரை : இப்பதிகளில் அருளிய
பதிகங்கள்:
1. திருச்செங்
காட்டங்குடி:
`பெருந்தகையை` (தி.6 ப.84) - திருத்தாண்டகம்.
2. திருநள்ளாறு:
(அ). `உள்ளாறாத` (தி.5 ப.68) - திருக்குறுந்தொகை.
(ஆ). `ஆதிக்கண்` (தி.6 ப.20) - திருத்தாண்டகம்.
3. திருமருகல்: `பெருகலாம்` (தி.5 ப.88) - திருக்குறுந்தொகை.
திருச்சாத்தமங்கைக்குரிய
பதிகம் கிடைத்திலது.
5. 088 திருமருகல் திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
பெருக
லாம்தவம், பேதைமை தீரலாம்,
திருகல்
ஆகிய சிந்தை திருத்தலாம்,
பருக
லாம்பரம் ஆயதுஓர் ஆனந்தம்
மருக
லான்அடி வாழ்த்தி வணங்கவே.
பொழிப்புரை : மருகல் இறைவன்
திருவடி வாழ்த்தி வணங்கினால் தவம் பெருகலாம் ; அறியாமை தீரலாம் ; மாறுபட்டதாகிய சிந்தை திருத்தலாம் ; கடவுண்மயமாகிய ஒப்பற்ற பேரானந்தத்தைப்
பருகலாம் .
பாடல்
எண் : 2
பாடம்
கொள்பனு வல்திறம் கற்றுப்போய்
நாடுஅங்கு
உள்ளன தட்டிய நாண்இலீர்
மாடம்
சூழ்மரு கல்பெரு மான்திரு
வேடம்
கைதொழ வீடுஎளிது ஆகுமே.
பொழிப்புரை : பாடங்கொண்ட நூல்
திறங்களையெல்லாம் கற்றுப்போய் நாட்டில் உள்ளன எல்லாம் பொருந்திய நாணமற்றீரே !
மாடங்கள் சூழ்ந்த மருகற் பெருமானின் திருவேடத்தைக் கைகளால் தொழுதால் வீட்டுலகமும்
உமக்கு எளிதாகும் .
பாடல்
எண் : 3
சினத்தி
னால்வரும் செய்தொழி லாம்அவை
அனைத்து
நீங்கிநின்று, ஆதர வாய்மிக
மனத்தி
னால்மரு கல்பெரு மான்திறம்
நினைப்பி
னார்க்குஇல்லை நீள்நில வாழ்க்கையே.
பொழிப்புரை : கோபத்தினால் வருகின்ற
செய்யப்படுவதான தொழில்களாகிய பிற தீச்செயல்கள் அனைத்தையும் நீங்கி நின்று ஆதரவாகி
உள்ளத்தினால் மருகல் பெருமானாகிய இறைவன் திறத்தை நினைப்பவர்க்கு இவ்வுலக வாழ்க்கை
இல்லை .
பாடல்
எண் : 4
ஓது
பைங்கிளிக்கு ஒண்பால் அமுதுஊட்டிப்
பாது
காத்து, பலபல கற்பித்து,
மாது
தான்மரு கல்பெரு மானுக்குத்
தூது
சொல்ல விடத்தான் தொடங்குமே.
பொழிப்புரை : இப்பெண் சொன்னதைச்
சொல்லும் கிளிப் பிள்ளைக்கு ஒள்ளிய பால் அமுது ஊட்டிப் பின் அதனைப் பாதுகாத்துப்
பலபல வார்த்தைகளை அதற்குக் கற்பித்து மருகற் பெருமானுக்குத் தூது சொல்லிவிடத்
தொடங்குகின்றாள் .
பாடல்
எண் : 5
இன்ன
வாறுஎன்பது உண்டுஅறி யேன்இன்று,
துன்னு
கைவளை சோரக்கண் நீர்மல்கும்,
மன்னு
தென்மரு கல்பெரு மான்திறம்
உன்னி
ஒண்கொடி உள்ளம் உருகுமே.
பொழிப்புரை : நிலைபெற்ற அழகிய
மருகல் இறைவன் திறமே நினைந்து இப்பெண் கொடியாளாகிய தலைவி உள்ளம் உருகுகின்றாள் ; நெருங்கிய கைவளைகள் சோர நின்று கண்ணீர்
மல்குகின்றாள் ; இதனைத் தீர்ப்பது
இன்ன வழி உண்டு என்பது அறியேனாயினேன் யான் .
பாடல்
எண் : 6
சங்கு
சோரக் கலையும் சரியவே
மங்கை
தான்மரு கல்பெரு மான்வரும்
அங்க
வீதி அருகுஅணை யாநிற்கும்,
நங்கை
மீர்இதற்கு என்செய்கேன் நாளுமே.
பொழிப்புரை : பெண்களே ! தன் சங்கு
வளையல்கள் நெகிழவும் , உடை சரியவும்
இம்மங்கைதான் , மருகல் இறைவன்
திருவீதியுலா வருகின்ற அங்க வீதியின் அருகு நாளும் அணைந்து நிற்பாள் ; நான் இதற்கு என்னசெய்வேன் ?
பாடல்
எண் : 7
காட்சி
பெற்றிலள் ஆகிலும், காதலே
மீட்சி
ஒன்றுஅறி யாது மிகுவதே,
மாட்சி
ஆர்மரு கல்பெரு மானுக்குத்
தாழ்ச்சி
சாலஉண் டாகும்என் தையலே.
பொழிப்புரை : என் பெண் மாட்சிகள்
நிறைந்த மருகற்பெரு மானுக்கு மனம் தாழும் விருப்பம் மிகவும் உண்டாயினள் ; அவனைக் காணும் காட்சியைப் பெற்றிலள் ஆயினும்
காதலினின்று மீளுகைக்கு ஒன்றும் அறியாதவள் ஆகி அவ்விருப்பமே மிகுந்தது .
பாடல்
எண் : 8
நீடு
நெஞ்சுள் நினைந்துகண் நீர்மல்கும்,
ஓடு
மாலினோடு ஒண்கொடி மாதராள்
மாடம்
நீள்மரு கல்பெரு மான்வரில்
கூடு
நீஎன்று கூடல் இழைக்குமே.
பொழிப்புரை : நெஞ்சுக்குள் நீள நினைந்து
கண்ணீர் மல்கி ஓடும் மயக்கத்தினோடு இவ்வொண் தொடியணிந்த பெண் , மாடங்கள் நீண்டுயர்ந்த மருகல் இறைவன்
வரின் நீ கூடு என்று கூடல் இழைத்து வருந்துவாள் .
பாடல்
எண் : 9
கந்த
வார்குழல் கட்டுஇலள், காரிகை
அந்தி
மால்விடை யோடும்அன் பாய்மிக
வந்தி
டாய்மரு கல்பெரு மான்என்று
சிந்தை
செய்து திகைத்திடும் காண்மினே.
பொழிப்புரை : மணம் வீசும் நீண்ட
கூந்தலை முடியாதவளாய் இப்பெண் ,
மால்விடையோடும்
மிக்க அன்பாய் ` மருகற்பெருமானே !
வந்திடாய் !` என்று சிந்தித்து
வாராமையாற் பின்னும் திகைப்பாள் ;
காண்பீராக
.
பாடல்
எண் : 10
ஆதி
மாமலை அன்றுஎடுத் தான்இற்றுச்
சோதி
என்றலும் தொல்அருள் செய்திடும்,
ஆதி
யான்மரு கல்பெரு மான்திறம்
ஓதி
வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே.
பொழிப்புரை : ஆதியிற்றோன்றிய
திருக்கயிலாயத் திரு மலையினை அன்று எடுத்தவனாகிய இராவணன் தலை இற்றுச் ` சோதியே ` என்று கூறுதலும் , பழைய அருள் புரிந்திடும் ஆதியானாகிய
மருகற்பெருமான் திறத்தையே ஓதி வாழ்பவர் தேவர்க்கும் தேவராவர் .
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment