அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
தோதகம் மிகுத்த (பொது)
முருகா!
நோய்கள் சற்றும் அணுகாத வகையில் அருள் புரிவாய்.
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ...... தனதான
தோதகமி குத்த பூதமருள் பக்க
சூலைவலி வெப்பு ...... மதநீர்தோய்
சூழ்பெருவ யிற்று நோயிருமல் குற்று
சோகைபல குட்ட ...... மவைதீரா
வாதமொடு பித்த மூலமுடன் மற்று
மாயபிணி சற்று ...... மணுகாதே
வாடுமெனை முத்தி நீடியப தத்தில்
வாழமிக வைத்து ...... அருள்வாயே
காதல்மிக வுற்று மாதினைவி ளைத்த
கானககு றத்தி ...... மணவாளா
காசினிய னைத்து மோடியள விட்ட
கால்நெடிய பச்சை ...... மயில்வீரா
வேதமொழி மெத்த வோதிவரு பத்தர்
வேதனைத விர்க்கு ...... முருகோனே
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
மீளவிடு வித்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
தோதகம் மிகுத்த பூதம் மருள்,பக்க
சூலை, வலி,வெப்பு,...... மதநீர்தோய்,
சூழ்பெரு வயிற்று நோய், இருமல்,குற்று
சோகை, பல குட்டம் ...... அவை, தீரா
வாதமொடு,பித்தம்,மூலம் உடன் மற்றும்
ஆய பிணி சற்றும் ...... அணுகாதே,
வாடும் எனை முத்தி நீடிய பதத்தில்
வாழ மிக வைத்து ...... அருள்வாயே.
காதல்மிக உற்று மாதினை விளைத்த
கானக குறத்தி ...... மணவாளா!
காசினி அனைத்தும் ஓடி அளவு இட்ட
கால் நெடிய பச்சை ...... மயில்வீரா!
வேதமொழி மெத்த ஓதி வரு பத்தர்
வேதனை தவிர்க்கும் ...... முருகோனே!
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி,
மீள விடுவித்த ...... பெருமாளே.
பதவுரை
காதல் மிக உற்று மா தினை விளைத்த கானக குறத்தி மணவாளா --- நல்ல தினை விளைவித்த காட்டில் இருந்த குறத்தியாகிய வள்ளிநாயகியின் மீது மிக்க காதல் கொண்டு அவரைத் திருமணம் புணர்ந்த மணவாளரே!
காசினி அனைத்தும் ஓடி அளவிட்ட கால் நெடிய பச்சை மயில் வீரா --- உலகம் முழுதும் ஓடி அளவிட்டு வந்த, நீண்ட கால்களை உடைய பச்சை மயில் ஏறும் வீரரே!
வேத மொழி மெத்த ஓதி வரு(ம்) பத்தர் வேதனை தவிர்க்கும் முருகோனே --- வேதமொழிகளை எப்போதும் ஓதி வழிபட்டு வருகின்ற அடியார்களின் துயரங்களைத் தீர்க்கும் முருகப் பெருமானே!
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே --- முன்னாள் சூரபதுமனாதி அரக்கர்கள் தேவர்களை அடைத்துவைத்த சிறைகளை உடைத்தெறிந்து அவர்கள் மீண்டும் தமது பொன் நாட்டுக்குச் செல்லும்படி விடுதலை செய்வித்த பெருமையில் மிக்கவரே!
தோதகம் மிகுத்த பூதம் மருள் --- மிக வருத்துகின்ற மண், நீர், தீ, காற்று, வான் என்னும் பஞ்சபூதங்களின் மயக்கத்தால் உண்டாகும்,
பக்க சூலை வலி வெப்பு மதநீர் தோய் --- விலாப் பக்கங்களை வருத்துகின்ற சூலை நோய், வலிப்பு நோய்கள், சுரம், நீர் சம்பந்தமான நோய் சேர்ந்து,
சூழ்பெரு வயிற்று நோய், இருமல், குற்று, சோகை, பல குட்டம் அவை --- எங்கும் பரவும் பெருவயிற்று நோய், இருமல், தலைக் குத்தல், இரத்தக் குறைவு, குட்ட நோய்கள் ஆகியவைகளோடு,
தீரா வாதமொடு பித்தம் மூலமுடன் மற்று(ம்) ஆய பிணி சற்றும் அணுகாதே --- தீர்க்க முடியாத வாயு சம்பந்தமான நோய்கள், பித்த நோய், மூலநோய்,பின்னும் பல வகையான நோய்கள் சிறிதேனும் அடியேனை அணுகாதவண்ணம்,
வாடும் எனை முத்தி நீடிய பதத்தில் வாழ மிக வைத்து அருள்வாயே --- அவற்றை எண்ணி வருந்தி நிற்கும் அடியேன முக்தி விளங்கும் உனது திருவடியில் நான் வாழும்படியாக நன்கு வைத்து அருள்புரிவாயாக.
பொழிப்புரை
நல்ல தினை விளைவித்த காட்டில் இருந்த குறத்தியாகிய வள்ளிநாயகியின் மீது மிக்க காதல் கொண்டு அவரைத் திருமணம் புணர்ந்த மணவாளரே!
உலகம் முழுதும் ஓடி அளவிட்டு வந்த, நீண்ட கால்களை உடைய பச்சை மயில் ஏறும் வீரரே!
வேதமொழிகளை எப்போதும் ஓதி வழிபட்டு வருகின்ற அடியார்களின் துயரங்களைத் தீர்க்கும் முருகப் பெருமானே!
முன்னாள் சூரபதுமனாதி அரக்கர்கள் தேவர்களை அடைத்துவைத்த சிறைகளை உடைத்தெறிந்து அவர்கள் மீண்டும் தமது பொன் நாட்டுக்குச் செல்லும்படி விடுதலை செய்வித்த பெருமையில் மிக்கவரே!
மிக வருத்துகின்ற மண், நீர், தீ, காற்று, வான் என்னும் பஞ்சபூதங்களின் மயக்கத்தால் உண்டாகும்விலாப் பக்கங்களை வருத்துகின்ற சூலை நோய், வலிப்பு நோய்கள், சுரம், நீர் சம்பந்தமான நோய் சேர்ந்து, எங்கும் பரவும் பெருவயிற்று நோய், இருமல், தலைக் குத்தல், இரத்தக் குறைவு, குட்ட நோய்கள் ஆகியவைகளோடு, தீர்க்க முடியாத வாயு சம்பந்தமான நோய்கள், பித்த நோய், மூலநோய்,பின்னும் பல வகையான நோய்கள் சிறிதேனும் அடியேனை அணுகாதவண்ணம், அவற்றை எண்ணி வருந்தி நிற்கும் அடியேன முக்தி விளங்கும் உனது திருவடியில் நான் வாழும்படியாக நன்கு வைத்து அருள்புரிவாயாக.
விரிவுரை
தோதகம் மிகுத்த பூதம் மருள்---
தோதகம் --- வஞ்சகம், வருத்தம்
பூதம் மருள் --- பஞ்சபூதங்களின் மயக்கத்தால் உண்டாகின்ற
பக்க சூலை வலி வெப்பு மதநீர் தோய் சூழ்பெரு வயிற்று நோய்,இருமல்,குற்று,சோகை,பல குட்டம் அவை தீரா வாதமொடு பித்தம் மூலமுடன் மற்று(ம்) ஆய பிணி சற்றும் அணுகாதே---
மனித உடம்புக்கு நேருகின்ற பலவிதமான நோய்களை அடிகளார் இங்குப் பட்டியல் இட்டு உள்ளார்.
பின்வரும் திருப்புகழ்ப் பாடல்களையும் இங்கு வைத்து எண்ணுதல் நலம்...
இருமல்,உரோக முயலகன்,வாதம்,
எரிகுண,நாசி ...... விடமே, நீர்
இழிவு, விடாத தலைவலி,சோகை,
எழுகள மாலை,...... இவையோடே,
பெருவயிறு, ஈளை,எரிகுலை,சூலை,
பெருவலி,வேறும் ...... உளநோய்கள்,
பிறவிகள் தோறும் எனை நலியாத-
படி, உன தாள்கள் ...... அருள்வாயே.
வரும் ஒரு கோடி அசுரர் பதாதி
மடிய,அநேக ...... இசைபாடி
வரும், ஒரு கால வயிரவர் ஆட,
வடிசுடர் வேலை ...... விடுவோனே
தரு நிழல் மீதில் உறை முகில் ஊர்தி
தரு திரு மாதின் ...... மணவாளா!
சலம் இடை பூவின் நடுவினில் வீறு
தணிமலை மேவு ...... பெருமாளே.--- திருத்தணிகைத் திருப்புகழ்.
எனை அடைந்த குட்டம்,வினை மிகுந்த பித்தம்,
எரி வழங்கு வெப்பு,...... வலிபேசா,
இகலி நின்று அலைக்கும் முயலகன், குலைப்பொடு,
இருமல் என்று உரைக்கும் ...... இவையோடே,
மனைகள் பெண்டிர் மக்கள் தமை நினைந்து,சுத்த
மதி மயங்கி விட்டு ...... மடியாதே,
மருவி இன்று எனக்கு,மரகதம் சிறக்கும்
மயிலில் வந்து முத்தி ...... தரவேணும். --- திருத்தணிகைத் திருப்புகழ்.
வலிவாத பித்தமொடு,களமாலை,விப்புருதி
வறள், சூலை,குட்டமொடு,...... குளிர், தாகம்,
மலிநீர் இழிச்சல்,பெரு வயிறு, ஈளை, கக்கு, களை,
வருநீர் அடைப்பின் உடன்,...... வெகுகோடி
சிலைநோய் அடைத்த உடல் புவிமீது எடுத்து உழல்கை
தெளியா எனக்கும்இனி ...... முடியாதே.
சிவம்ஆர் திருப்புகழை எனு நாவினில் புகழ
சிவஞான சித்தி தனை ...... அருள்வாயே! --- திருவருணைத் திருப்புகழ்.
காசினி அனைத்தும் ஓடி அளவிட்ட கால் நெடிய பச்சை மயில் வீரா ---
காசினி --- உலகம்.
முருகப் பெருமான் மயிலின் மீது இவர்ந்து உலகம் முழுதையும் இருமுறை வலமாக வந்து உள்ளார். பழம் வேண்டி வலம் வந்தது ஒருமுறை. சூரனை வெற்றி கொண்ட பிறகு வலமாக வந்தது.இவற்றைக் குறித்து அடிகளார் பிற திருப்புகழ்ப் பாடல்களில் காட்டி உள்ளார்.
திடுக்கிடக் கடல், அசுரர்கள் முறிபட,
கொளுத்து இசைக் கிரி பொடிபட,சுடர் அயில்
திருத்தி விட்டு, ஒரு நொடியினில் வலம்வரும் ...மயில்வீரா! --- திருத்தணிகைத் திருப்புழ்.
எதிர் உற்ற அசுரர்கள் படைகொடு சண்டைக்கு
இடம் வைத்திட, அவர் குல முழுதும் பட்-
டிட, உக்கிரமொடு வெகுளிகள் பொங்க,......கிரியாவும்
பொடிபட்டு உதிரவும்,விரிவு உறும் அண்டச்
சுவர் விட்டு அதிரவும், முகடு கிழிந்து,அப்
புறம் அப் பரவெளி கிடுகிடு எனும் சத் ......தமும்ஆகப்
பொருது, கையில் உள அயில்நிணம் உண்க,
குருதிப் புனல் எழு கடலினும் மிஞ்ச,
புரவிக் கனமயில் நடவிடும் விந்தைக் ...... குமரேசா! --- பழநித் திருப்புகழ்.
அடைவலமும் மாள விடு சர அம்புஉடை
தசரத குமார, ரகுகுல புங்கவன்,
அருள்புனை முராரி மருக! விளங்கிய ...... மயில்ஏறி
அடையலர்கள் மாள, ஒரு நிமிடந்தனில்
உலகை வலமாக நொடியினில் வந்து, உயர்
அழகிய சுவாமி மலையில் அமர்ந்துஅருள் ...... பெருமாளே. --- சுவாமிமலைத் திருப்புகழ்.
வேத மொழி மெத்த ஓதி வரு(ம்) பத்தர் வேதனை தவிர்க்கும் முருகோனே---
முருபக் பெருமான் திருப்புகழை ஓதுகின்ற திருப்புகழ்ப் பாடல்கள் வேதத்துக்கு நிகரானவை. அதன் சிறப்பு குறித்து ஒரு தனிப்பாடலும் உண்டு.
வேதம் வேண்டாம்,சகல வித்தை வேண்டாம், கீத
நாதம் வேண்டாம், ஞானநூல் வேண்டாம், - ஆதி
குருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றும்
திருப்புகழைக் கேளீர் தினம்.
அருள்நூல்கள் அனைத்தும் வேதமொழிக்கு நிகாரனவை. அருட்பாடல்களை எப்போதும் ஓதி வழிபட்டு வருகின்ற அடியார்களின் துயரங்களைத் தீர்க்கும் ஞானவள்ளல் முருகப் பெருமான் என்பதை அடிகளார் இங்குக் காட்டி உள்ளார். "வாழி என நித்தம் மறவாது பரவில்,சரண வாரிசம் அளிக்கும் உபகாரக்காரன்" என்று திருவேளைக்காரன் வகுப்பில் அடிகளார் கூறியருளுமாறு காண்க.
கருத்துரை
முருகா! நோய்கள் சற்றும் அணுகாத வகையில் அருள் புரிவாய்.
No comments:
Post a Comment