வறுமை என்னும் தேவதை
-----
மூதேவி என்னும் தேவதையின் பெயரைச் சொன்னாலே எல்லோரும் நடுங்குகின்றனர். மூதேவி ஒருவனிடத்தில் ஏன் நெருங்குகின்றாள்? இந்த வினாவுக்குத் திருவள்ளுவ நாயனார் விடை பகருகின்றார்.
"அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்"
பிறர் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக அவரிடம் பொறாமை கொண்டு உள்ளவனை, திருமகள் தனது தமக்கையாகிய மூதேவிக்குக் காட்டி விடுவாள் என்கின்றார் நாயனார். பொறாமை என்னும் தீய குணம் ஒருவனிடத்தில் இருந்தால், அவனிடத்தில் திருமகள் தங்கி இராமல், அவனைத் தனது தமக்கை ஆகிய மூதேவிக்குக் காட்டிக் கொடுத்து நீங்கி விடுவாள்.
அதுபோலவே, வறுமை என்னும் தேவதையின் பெயரைச் சொன்னல் யாரும் நடுங்குகின்றனர். பொல்லாதவள் என்று இகழுகின்றனர். வறுமை ஏன் ஒருவனுக்கு வருகின்றது என்பதற்கு விடையை இந்தப் பதிவில் காணலாம். ஆனால் அவள் இருப்பதாலேயே கடவுளை யாரும் கருதுகின்றனர். கடவுள் அருளால் உயர்நிலையும் பெறுகின்றனர்.
இல்லாமை என்பது வறுமைக்கு ஒரு பெயர். பொருள் யாதும் இல்லாத நிலைமையை அது குறித்து வந்தது. நல்குரவு முதலிய பல காமங்களும் காரணக் குறிகளாய் அதற்கு அமைந்து இருக்கிருக்கின்றன. வறுமைக்குப் பலவேறு பெயர்கள் அமைந்து இருக்கின்றன.
"மிசைகுறை,மிடியே,தரித்திரம் ஒற்கம்,இலம்பாடு,
இல்லாமை,நல்குரவும் வறுமை".
என்பது பிங்கலங்தை.
"குறை, இலம்பாடு,மிச்சை,குறுவாழ்க்கை,மிடி, நிரப்புச்
சிறுமையே,ஒற்கம்,இன்மை,தீயநல்குரவே,அல்கல்,
வறுமையின் பெயர் பன்னொன்றும் வரு தரித்திரமும் ஆகும்".
என்று வறுமைக்கு பதினோரு பெயர்கள் உள்ளதாக நிகண்டு கூறுகின்றது.
பரம்பொருளாகிய இறைவனனை ஆன்மாவுக்குக் காட்டி அருள் புரிவது இறைவி என்னும் பராசத்தியே ஆகும். நல்லறிவு உள்ளோர்க்கு இறைவனைக் காட்டியருளும் கருணைத் தாயாய், பராசத்தியாய்வறுமை மருவி நின்கின்றாள். வறுமையில்தான் ஒருவனுக்கு அறிவு செயல்படும். செல்வச் செழிப்பில் ஆறிவு மழுங்கிப் போய் இருக்கும். இதனை அறியாமையால், உலகம் வறுமையைக் கொடியது என்று கூறுகின்றது.
வறுமை பலவகையிலும் மனிதரை வாட்டி வருதலால் உலகம் அதனை வெறுத்து வருகிறது. பசி நோய்க்கு மருந்து ஆகிய உணவையும், உலக வாழ்க்கையில் இனிய பல உல்லாச வசதிகளையும் பொருள் உருவாக்கித் தருகின்றது. அந்தப் பொருள் இல்லாத நிலையே வறுமை. ஆதலால் வறுமை பொல்லாதது என எல்லாரும் அஞ்சி இகழ்கின்றனர். வறுமை என்பது ஒரு குடியில் புகந்துவிட்டால்,எல்லாப் பெருமைகளும் அடியோடு போய்விடும் என்று முடிவு செய்கின்றனர்.
"வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடி போகியவா"
என்று பாடி அருளினார் அருணகிரிநாதப் பெருமான். இறையருள் இல்லாத நிலையில் உண்டாகும் வறுமை குறித்து இவ்வாறு பாடி அருளினார். வறுமையில் அறிவு தெளிவாக வேண்டும். அறிவு தெளிவானால், மனம் வாக்கு காயம் ஆகியவற்றால் நல்லனவே நிகழும். நல்லன நிகழவே புண்ணியம் உண்டாகும். புண்ணியத்தின் பலனாக வளமான வாழ்வு உண்டாகும்.
"கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின்,
எல்லாரும் சென்று அங்கு எதிர் கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்,மற்று ஈன்றெடுத்த தாய்வேண்டாள்,
செல்லாது அவன் வாயில் சொல்".
என்றார் ஔவைப் பிராட்டியார்.
இல்லாமையால் உண்டாகும் இழிவைத் தீர்க்க, மனிதன் முயன்று நல்வழியில் பொருளை ஈட்டவேண்டும் என்பது குறித்து இவ்வாறு சொல்லப்பட்டது என்பதை அறிதல் வேண்டும். வறுமையின் சிறுமையைக் காட்டி, மனித குலத்தை அச்சுறுத்துவதற்கு எழுந்தவை அல்ல மேலோர் அருளிய பாடல்கள்.
"பிறந்த குலம் மாயும்,பேராண்மை மாயும்,
சிறந்த தம் கல்வியும் மாயும் - கறங்கருவி
கன்மேல் கழூஉம் கனமலை நன்னாட!
இன்மை தழுவப்பட் டார்க்கு".
என்று நாலடியார் கூறியதும் கூட, ஒருவன் பிறந்த குலம் மாயாமல் இருக்கவேண்டுமானால், அவனது பேராண்மை மாயாமல் இருக்கவேண்டுமானால், அவனுக்கு உள்ள சிறந்த கல்வியும் அழியாமல் நிலைத்து இருக்கவேண்டுமானால், இல்லாமை என்னும் வறுமை ஒருவனிடத்தில் வந்து சேரக் கூடாது. அதனைப் போக்க, தமது அறிவைக் கொண்டு நல்ல வழிகளில் பொருளை ஈட்டுதல் வேண்டும் என்று இவ்வாறு சொல்லப்பட்டது.
"இன்மை என ஒரு பாவி,மறுமையும்
இம்மையும் இன்றி வரும்"
என்றார் திருவள்ளுவ நாயனார்.
வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும் இம்மையின்பமும் இல்லாமல் போகும் நிலைமை வரும் என்று காட்டி, அந்த நிலை வராமல் காத்துக் கொள்ளும் உபாயங்களை பிற அதிகாரங்களில் வைத்துக் காட்டினார்.
ஒருவனுக்கு வறுமை ஏன் உண்டாகின்றது என்பதைக் கூர்ந்து சிந்தித்தல் வேண்டும். வேண்டுதல் வேண்டாமை இல்லாத பரம்பொருள் ஒருவனை ஏழையாகவும், மற்றொருவனைச் செல்வந்தனாகவும் படைக்க முடியாது. அப்படிப் படைத்தால், அது கடவுள் ஆக முடியாது. அவரவர் செய்த வினையின் பயனை அவர்களுக்கு ஊட்டி, பிறவியைத் தந்து அனுபவிக்கச் செய்து, அதன் பயனாக நல்லறிவு விளங்கச் செய்வதே இறைவன் கருணை.
ஒருவன் ஏன் வறுமையாளனாக ஆனான் என்பதற்கு அருமையான விளக்கத்தை "விவேக சிந்தாமணி"என்னும் நூலில் உள்ள ஒரு பாடலின் வழி அறிந்துகொள்ளலாம்.
"மண்ணார் சட்டி கரத்து ஏந்தி,
மறநாய் கௌவும் காலினராய்
அண்ணாந்து ஏங்கி இருப்பாரை
அறிந்தோம், அறிந்தோம், அம்மம்மா!
பண்ணார் மொழியார் பால் அடிசில்
பைம்பொன் கலத்தில் பரிந்து ஊட்ட
உண்ணா நின்ற போது ஒருவர்க்கு
உதவா மாந்தர் இவர்தாமே!"
இதன் பொருள் ---
களிமண்ணால் செய்யப்பட்ட பிச்சைப் பாத்திரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, கோபம் பொருந்திய தெரு நாய்கள் குரைத்துக் கொண்டு வந்து கடிப்பதற்குப் பாய்கின்ற கால்களை உடையவர்களாய், வீதிகள் தோறும் சென்று, தலையினை உயர்த்திப் பார்த்து, பசியினால் வாடி, யாராவது தமக்குத் தருவார்களா என்று ஏக்கமுற்று, இரந்து நிற்போரை இன்னார் என நாம் அடையாளம் கண்டு கொண்டோம், கண்டு கொண்டோம். அம்ம, அம்மா!, இவர் யார் என்றால், முற்பிறவியில் இசை ததும்பும்படியான இனிமை தரும் சொற்களைப் பேசுகின்ற தமது மனைவியர், பால் சோற்றை பசுமையான பொன்னால் ஆன கலத்தில் வைத்து அன்போடு தமக்கு ஊட்ட, உண்டுகொண்டு இருந்த காலத்தில், முன் சொன்னது போல பிச்சை கேட்டு வந்த ஒருவருக்கும், (தாம் உண்ணுகின்ற சோற்றில் ஒரு பிடியேனும் கொடுத்து) உதவாத மனிதர் தான் இவர்.
எவ்வளவு அருமையான பாடல்! மனிதனாகப் பிறந்தால் அவன் ஆறறிவு உடையவனாக இருக்கவேண்டும். ஆறாவது அறிவு மன அறிவு அல்லது உயிர் அறிவு ஆகும். உயிர் அறிவு உள்ளவன் என்றால், பிற உயிர் படும் துன்பத்தைக் கண்டு பொறுத்திருக்கமாட்டான். அப்படிப்பட்ட அறிவு இல்லாதபோது, ஒருவன் செல்வத்தில் மிதந்து கொண்டு இருப்பதோடு, நூல்களைக் கற்று இருந்தாலும் பயனில்லை.
"அறிவினால் ஆவது உண்டோ, பிறிதின் நோய்
தன் நோய் போல் போற்றாக் கடை"
என்றார் திருவள்ளுவ நாயனார். பிறன் ஒருவனது துன்பத்தைத் தனது துன்பமாக எண்ணும் மனம் இல்லையானால், அவன்எத்தனை நூல்களைப் படித்து எவ்வளவுதான் அறிவைப் பெற்றிருந்தாலும், அவற்றால் பயன் ஒன்றும் இல்லை.
பசி என்பது எல்லா உயிர்க்கும் பொதுவானது. நோய்களோடு ஆண்டுக் கணக்கில் போராடி உயிர் வாழலாம். பசி என்னும் தீய நோயோடு சில மணி நேரமும் போராட முடியாது. பசி நோயை அறியாதவர் யாரும் இல்லை. பிறர் பசியால் துன்புறுவதைக் கண்ணால் பார்த்தும், உள்ளம் பதைத்து, உதவ வேண்டும் என்ற எண்ணம் வராவிட்டால், ஒருவன் படைத்த செல்வத்தால் என்ன பயன்? அவன் கற்ற நூல்களின் அறிவால் என்ன பயன்? "நீடிய பசியால் வருந்துகின்றோர் என் நேர் உறக் கண்டு உள்ளம் பதைத்தேன்"என்றார் வள்ளல்பெருமான்.
பசியினால் துன்பப் படுவோருக்கு தன்னால் முடிந்த உதவியைச் செய்து வாழ்வதே, இந்த உடம்பைக் கொண்டு, உயிரானது பெறுகின்ற பயன் ஆகும். பசித்தோர்க்குச் செய்யும் உதவி, அவரது பசியைத் தணிப்பதே ஆகும். காரணம்,பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்.
"அற்றார் அழிபசி தீர்த்தல், அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்புழி.
என்றார் திருவள்ளுவ நாயனார்.
செல்வத்தை நிரம்பப் படைத்தவன், அதனைச் சேமித்து வைக்கும் இடமே பசித்தவர் வயிறுதான்.
யாராய் இருந்தாலும், தாம் உண்ணுகின்ற வெந்த சோற்றில் ஒரு கைப் பிடியாவது பசித்தவர்க்குக் கொடுத்து உதவ வேண்டும். "யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி" என்றார் திருமூல நாயனார். "பிடி சோறு கொண்டு இட்டு உண்டு இரு, வினையோம் இறந்தால், ஒரு பிடி சாம்பரும் காணாது, மாய உடம்பு இதுவே" என்றார் அருணகிரிநாதப் பெருமான்.
எனவே, இன்று பிச்சை எடுப்பவர் யார் என்றால், முற்பிறவியில் பசித்தவர்க்கு, தாம் உண்ணுகின்ற அன்னத்தில் ஒரு பிடியாவது கொடுத்து உதவாதவர்தான். எனில், இன்று பசித்தோர்க்கு அன்னமிடாதவர் மறுபிறவியில், பிச்சை எடுக்கவேண்டி வரும் என்பது சொல்லாமலே விளங்கும்.
மாடமாளிகை, பொன் பொருள் எல்லாவற்றிலும் மிதந்து கொண்டு இருப்பர். ஒன்றும் இல்லாத வறுமையில் உள்ளவர்,அதுவும் தவத்தைப் புரிபவர் ஒருவர், பசிக்கு உணவு என்று தமது வாயிலில் வந்து நின்று, "ஐயா, பசிக்கிறது. சிறிது அன்னம் படையும்" என்று கேட்டவுடன்,மிகவும் தாராளமாக "மேல் வீட்டில் போய்க் கேள்,கீழ் வீட்டில் போய்க் கேள்" என்று கூறி அவனை விரட்டி அடிப்பர். அந்த இரவலன் தனக்கு உண்டான பசியைப் பொறுக்கமாட்டாமல், "ஐயா! எல்லா இடங்களிலும் கேட்டேன், ஒன்றும் கிடைக்கவில்லை. பசி மிகவும் வாட்டுகிறது. ஏதாவது கொடுங்கள்" என்று கூறி சிறிது படி ஏறி, வீட்டிற்குள் நுழைய முயலுமுன், அவனது எதிரில் முடுகிப் போய், நாய்போல் சீறி விழுந்து விரட்டி அடிப்பர். ஆனால், வீணாக வாழ்நாளைக் கழித்து விணாகப் போகின்றவருடைய சொல்லை வேதவாக்காக எடுத்துக் கொள்வர். இப்படிப்பட்டவர்கள் படைத்துள்ள செல்வம் எல்லாம் ஒருநாளில் வற்றிப் போய்விடும் என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.
"வெறுமிடியன் ஒருதவசி அமுதுபடை எனும் அளவில்,
மேலை வீடுகேள், கீழை வீடுகேள்,
திடுதிடு என நுழைவதன்முன், எதிர்முடுகி, அவர்களொடு
சீறி, ஞாளிபோல் ஏறி வீழ்வதாய்,
விரகினொடு வருபொருள்கள் சுவறிஇட,மொழியும்ஒரு
வீணியார் சொ(ல்)லே மேலது ஆயிடா, ...... விதிதனை நினையாதே" --- திருப்புகழ்.
பொருள் உள்ளபோதே பொருளற்ற ஏழைகளுக்குக் கொடாதவர்கள், தாம் நேர்மையற்ற வழியில் தேடிய செல்வத்தை மண்ணில் புதைத்து ஒளித்து வைத்திருந்த போது, அப்பொருளைத் திருடர்களிடம் பறிகொடுத்துவிட்டு, திகைத்து,உடல் மெலிந்து, மனம் வாட்டமுற்று துக்கப்பட்டு தம் வாழ்நாளை வீணாக அழிப்பவர்களே இவர் ஆவர் என்றும் பாடுகின்றார், அருணையடிகள் கந்தர் அலங்காரத்தில்.
"வேடிச்சி கொங்கை விரும்பும் குமரனை மெய் அன்பினால்
பாடிக் கசிந்து, உள்ளபோதே கொடாதவர், பாதகத்தால்
தேடிப் புதைத்துத் திருட்டில் கொடுத்துத் திகைத்து இளைத்து
வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே".
"செருப்பாலே அடிப்பவர்க்கு, விருப்பாலே கோடி செம்பொன் சேவித்து இடுவர்" என்று இந்தக் கயவர்களை அடையாளம் காட்டுகின்றது "விவேக சிந்தாமணி" என்னும் நூல்.
எதிர்காலத்தில் பிச்சை எடுக்கப் போகின்றவர், இப்போது பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளானவர் யார் என்று பட்டினத்தடிகள் காட்டுவதைப் பார்ப்போம்.
"ஆற்றோடு தும்பை அணிந்து ஆடும் அம்பலவாணர் தமைப்
போற்றாதவர்க்கு அடையாளம் உண்டே இந்தப் பூதலத்தில்,
சோற்றாவி அற்று, சுகம் அற்று, சுற்றத் துணியும் அற்றே,
ஏற்றாலும் பிச்சை கிடையாமல் ஏக்கற்று இருப்பர்களே"
இதன் பொருள் ---
கங்கை நதியுடன் தும்பை மலரையும் தரித்து, ஆனந்தத் திருநடனம் புரிகின்ற அம்பலவாணப் பெருமானைத் துதிக்காதவர்க்கு இந்த உலகத்தில் அடையாளம் உண்டு. (அது என்னவென்றால்), இந்தப் பூமியில் சோற்று வாசனை ஒழிந்து, சுகம் ஒழிந்து, அரையில் உடுத்துக் கொள்ள ஆடையும் இல்லாமல், யாசித்தாலும் பிச்சை கிடைக்காமல் ஏக்கத்தோடு இருப்பார்கள்.
"மண்ணினில் பிறந்தார் பெறும் பயன், மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல்" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில். இந்த அமுத வாசகம்தான், திருக்கோயில்களில் இன்று நற்பகலில் அன்னம் பாலிப்புச் செய்யும் செயலுக்கு ஊக்கமாக அமைந்தது.
ஆக, இந்தப் பிறவி எடுத்ததன் பயனே, பசியால் வாடுவோர்க்கு சோறு படைத்து வாழ்வதற்கே.
பசித்தோர்க்கு சோறு இட்டோர்க்கு என்ன வாய்க்கும்?சோறு வாய்க்கும்.
சோறு என்னும் சொல்லுக்கு "அன்னம்"என்றும் "திருவடிப் பேறு" என்று பொருள் உண்டு. "அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்" என்றால், "தில்லையைத் தரிசிக்க முத்தி" என்றது போல, தில்லைச் சிற்றம்பலமானது தன்னை வணங்குவோருக்குத் திருவடிப் பேற்றை அளிக்கும் என்றே பொருள். "பாதகமே சோறு பற்றினவா தோள்நோக்கம்" என்று மணிவாசகப் பெருமான் அருளியதும் காண்க.
இதைப் பட்டினத்தடிகள் நெஞ்சறிவுறுத்தலாக, நமக்கு அறிவுறுத்தம் பாடலைக் காண்க..
"அன்னம் பகிர்ந்து இங்கு அலைந்தோர்க்கு உதவி செயும்
சென்மம் எடுத்தும், சிவன் அருளைப் போற்றாமல்,
பொன்னும், மனையும், எழில்பூவையரும், வாழ்வும் இவை
இன்னும் சதமாக எண்ணினையே நெஞ்சமே".
இதன் பொருள் ---
நெஞ்சமே! நீ உண்ணுகின்ற அன்னத்தை, ஆதரவு அற்று, வயிற்றுப் பசி தீர்க்க சோற்றுக்காக அலைபவர்க்கு, பகிர்ந்து அளித்து உதவி, பின் உண்ணுகின்றதற்காக இந்தப் பிறவியை எடுத்து இருக்கின்றாய். அவ்வாறு ஓர் அற்புதமான பிறவியைத் தந்த சிவபரம்பொருளின் திருவருளைப் போற்றாமல், பொன்னையும், மண்ணையும், அழகு வாய்ந்த பெண்ணையும், இவற்றால் உண்டாகும் போகத்தையுமே இன்னும் கூடச் சதம் என்று நினைத்து இருக்கின்றாயே.
"முன்தொடர்பில் செய்த முறைமையால் வந்த செல்வம்,
இற்றைநாள் பெற்றோம் என்று எண்ணாது,பாழ்மனமே!
அற்றவர்க்கும் ஈயாமல், அரன் பூசை செய்யாமல்,
கற்றவர்க்கும் ஈயாமல் கண்மறைந்து விட்டனையே".
இதன் பொருள் ---
பாழான நெஞ்சமே! முந்தைய பிறவிகளில் நீ செய்து வைத்த புண்ணியத்தின் பலனாக, உனக்கு இப் பிறவியில் அனுபவிக்கவே, இந்தஐசுவரியாமானது வாய்த்தது என்று நினையாது, தரித்திரர்க்கும் கொடுக்காமல், சிவபூசையும் செய்யாமல், கற்ற பெரியோர்க்கும் கொடுத்து உதவாமல், செல்வச் செருக்கால் அறிவற்று வாழ்கின்றாயே.
"இறைக்கின்ற கிணறு ஊறும். இறைக்காத கிணறு நாறும்" என்பது போல் பயன்படுத்தாத உள்ள கிணறு பாழும்கிணறு ஆகி விடும். இறைக்க இறைக்க நீர் உறும்போது, அது பயனுள்ளதாகி விடும். செல்வத்தில் ஒரு பகுதியை நல்ல செயலுக்குப் பயன்படுத்தினால், அந்தச் செலவானது, நம்மிடம் எஞ்சி உள்ள செல்வத்திற்குப் பாதுகாப்பாக இருக்கும்.
எனவே, வறுமை வராமல் காத்துக் கொள்ள வேண்டும். வறுமை வந்துவிட்டால், தீய வழிகளில் மனத்தைச் செலுத்தி மேலும் மேலும் பாவங்களைத் தேடிக் கொள்ளாமல், வறுமை ஏன் வருகின்றது, அதை நீக்க வழி என்ன என்பதைச் சிந்தித்து, நல்லறிவு பெற்று, நல்வழிகளில் பொருளை ஈட்டி, இல்லாதவர்க்கும் பகிர்ந்து, இறையருளைப் பெறுவதே அறிவுடைய செயல் ஆகும்.
செல்வம் மிகுந்து உள்ள போது இறையருளைப் பற்றிச் சிந்தித்து உயர் நிலை பெறுவர் அரிது. வறுமை வந்தால், இறைவன் மீது நாட்டம் உண்டாகும். அவனருளைப் பெறுகின்ற நல்வழியில் மனம் செல்லும். எனவே, வறுமை என்பது இறைவனை நமக்குக் காட்டி அருளுகின்ற பராசத்தி என்று அறிதல் வேண்டும்.
“It is easier for a camel to go through the eye of a needle, than for a rich man to enter into the Kingdom of God” (Bible, Mark, 10-25) 'ஒரு ஒட்டகம் ஊசித் துளையில் நுழைதலும் கூடும். ஆனால்,செல்வன் கடவுளின் இராச்சியத்தில் புகுதல் அரிது. செல்வம் அறிவைக் குருடாக்கி விடுகின்றது. வறுமை மறுமைக்கு உரிமையாய் அரிய பல நலங்களை உதவி அருளுதலால் ஞானிகளும் சான்றோர்களும் தமக்கு உறுதியாக வறுமையினை உவந்து ஏற்றுக் கொள்கின்றனர்.
No comments:
Post a Comment