அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
காதி மோதி (பொது)
முருகா!
வாதம் இடக் கற்பவரும்,
அறம் செய்யாத செல்வரும்,
அன்பு செய்யாத அவலரும்
நரகில் வீழ்ந்து வருந்துவார்கள்.
தான தான தானான தானத் ...... தனதான
காதி மோதி வாதாடு நூல்கற் ...... றிடுவோருங்
காசு தேடி யீயாமல் வாழப் ...... பெறுவோரும்
மாதுபாகர் வாழ்வே யெனாநெக் ...... குருகாரும்
மாறி லாத மாகால னூர்புக் ...... கலைவாரே
நாத ரூப மாநாத ராகத் ...... துறைவோனே
நாக லோக மீரேழு பாருக் ...... குரியோனே
தீதி லாத வேல்வீர சேவற் ...... கொடியோனே
தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
காதி மோதி வாதுஆடு நூல் கற் ...... றிடுவோரும்,
காசு தேடி ஈயாமல் வாழப் ...... பெறுவோரும்,
மாதுபாகர் வாழ்வே எனா நெக்கு ...... உருகாரும்,
மாறு இலாத மாகாலன் ஊர்புக்கு ...... அலைவாரே.
நாத ரூப! மாநாதர் ஆகத்து ...... உறைவோனே!
நாக லோகம் ஈர் ஏழு பாருக்கு ...... உரியோனே
தீது இலாத வேல்வீர! சேவல் ...... கொடியோனே!
தேவ தேவ! தேவாதி தேவப் ...... பெருமாளே.
பதவுரை
நாத ரூப --- ஒலி வடிவாக விளங்குபவரே!
மாநாதர் ஆகத்து உறைவோனே --- சிறந்த தலைவராகிய சிவபெருமானுடைய திருஉள்ளத்தில் உறைபவரே!
நாகலோகம் ஈரேழு பாருக்கு உரியோனே --- நாகலோகம் முதல் பதினான்கு உலங்கங்களை உடைமையாகக் கொண்ட முதல்வரே!
தீது இலாத வேல் வீர --- குற்றமில்லாத ஞானசத்தியாகிய வேலை ஏந்திய வீரமூர்த்தியே!
சேவற்கொடியோனே --- சேவலைக் கொடியாக உடையவரே!
தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே --- தேவர்களுக்கும், தேவதேவர்களுக்கும் தனிப்பெரும் தலைவராக விளங்கும் பெருமையில் சிறந்தவரே!
காதி மோதி வாது ஆடு நூல் கற்றிடுவோரும் --- மனம் அடங்காமல், சினம் கொண்டு,ஒருவரை ஒருவர் தாக்கி வாதிடுகின்ற நூல்களைக் கற்று அடங்காதவர்களும்,
காசு தேடி ஈயாமல் வாழப் பெறுவோரும் --- பொருள்களை ஈட்டி, வறியவர்க்கு வழங்காமல் தாமே வாழ்ந்து மகிழ்கின்றவர்களும்
மாது பாகர் வாழ்வே எனா நெக்கு உருகாரும் --- உமையம்மை ஒரு பாகராகிய சிவபெருமானுடைய திருக்குமாரரே என்று கூறியும்,நினைந்தும்,என்பு நெக்குவிட்டு உருகி அன்பு செய்யாதவர்களும்,
மாறு இலாத மாகாலன் ஊர் புக்கு அலைவாரே --- மாறுபாடு இல்லாத இயமனுடைய நகரம் சென்று பற்பல நிரயங்களில் அலைவார்கள்.
பொழிப்புரை
ஒலி வடிவாக விளங்குபவரே!
சிறந்த தலைவராகிய சிவபெருமானுடைய திருஉள்ளத்தில் உறைபவரே!
நாகலோகம் முதல் பதினான்கு உலங்கங்களை உடைமையாகக் கொண்ட முதல்வரே!
குற்றமில்லாத ஞானமாகிய வேலை ஏந்திய வீரமூர்த்தியே!
சேவலைக் கொடியாக உடையவரே!
தேவர்களுக்கும், தேவதேவர்களுக்கும் தனிப்பெரும் தலைவராக விளங்கும் பெருமையில் சிறந்தவரே!
மனம் அடங்காமல், சினம் கொண்டு,ஒருவரை ஒருவர் தாக்கி வாதிடுகின்ற நூல்களைக் கற்று அடங்காதவர்களும், பொருள்களை ஈட்டி, வறியவர்க்கு வழங்காமல் தாமே வாழ்ந்து மகிழ்கின்றவர்களும் உமையொரு பாகராகிய சிவபெருமானுடைய திருக்குமாரரே என்று கூறியும் நினைந்தும் என்பு நெக்குவிட்டு உருகி அன்பு செய்யாதவர்களும், மாறுபாடு இல்லாத இயமனுடைய நகரம் சென்று பற்பல நிரயங்களில் அலைவார்கள்.
விரிவுரை
காதி மோதி வாதாடு நூல் கற்றிடுவோரும் ---
அறிவு நூல்களை ஓதி உணர்ந்து, அடங்கி, அறநெறியில் நின்று, இறையன்பு செய்து, நிறைவுறல் வேண்டும். கல்வியின் பயன் கடவுளை வழிபடுதல்.
கடவுளை என் வழிபடவேண்டும்? கடவுள் இருந்தால் அவர் ஒருபுறம் இருக்கட்டுமே? அவரை வழிபடுவானேன்? கடவுள் உணர்ச்சி எதற்காக? என்று வினாவுவோர் பலர்.
இறை என்ற சொல், இறு என்ற பகுதியடியாக வந்தது. இறைவன் என்பதற்கு எங்கு தங்கி இருப்பவன் என்பது பொருள். எங்கும் - எல்லா உயிர்களிடத்திலும் நீக்கமற நிறைந்து நிற்பவன் இறைவன். எவ்வுயிரும் பராபரன் சந்நிதி ஆகும். எல்லா உயிர்களும் இறைவனுடைய திருக்கோயில்கள் என்ற எண்ணம் உண்மையாக உள்ளத்தில் ஊன்றி நிற்குமாயின், எல்லா உயிர்களையும் இறைவனாகவே எண்ணி, அவ் உயிர்கட்கு இன்பம் செய்யும் இனிய பண்பு ஒருவனுக்கு உண்டாகும். ஒரு உயிரைக் கொல்லவோ இடர்படுத்தவோ மனம் வராது. எல்லா உயிர்களையும் இறைவன் சந்நிதியாக எண்ணுவோர், அவ் உயிர்களிடம் தூய அன்பு செய்து உய்வு பெறுவர். பிற உயிர்கட்கு நன்மை செய்வதைக் காட்டிலும் சிறந்த தவம் இல்லை.
"உற்றநோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை,
அற்றே தவத்திற்கு உரு"
என்பார் திருவள்ளுவ நாயனார்.
கடவுள் உணர்ச்சி ஒன்றுதான் இந்த மனப் பக்குவத்தைத் தரும். கடவுள் உணர்ச்சி இல்லாதவர் எதனையும் செய்யத் தலைப்படுவர். புண்ணிய பாவங்களையும் உண்டு என்று உடன்படாது, நினைத்தவற்றை எல்லாம் பேசி, நினைத்தவற்றை எல்லாம் செய்து நிரயம் உறுவர்.
ஆகவே, கடவுள் அன்பு மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்பதனைக் கடைப்பிடிக்க. மனிதவாழ்க்கைக்கு மூச்சுக் காற்று எத்துணை அவசியமோ, அத்துணை அவசியம் கடவுளன்பு.
எங்கும் நிறைந்த பரம்பொருள் நமது உள்ளத்தில் உறைகின்றார் என்று மறவாது நினைப்பவர், மனத்தினாலும் தீமை செய்யமாட்டார். கடவுள் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இருக்கின்றார் என்று எண்ணுவோமானால், உண்மைக்கு மாறாக எதையும் சொல்ல முடியாது. ஆகவே, இறைவனை ஒரு கணமேனும் மறவாது சிந்தை செய்துஉய்வு பெறவேண்டும். கடவுள் உணர்ச்சி மனிதனைத் தூய்மையாக்குகின்றது. வாய்மை நெறியில் வளப்படுத்துகின்றது. ஆகவே, அறிவு நூல்களைக் கற்கவேண்டும். அவ்வறிவு நூல்களைக் கற்றாரே கற்றார் ஆவார். அல்லாதார் கற்றாரெனினும் கல்லாரே ஆவார். "கற்றவர் விழுங்கும் கற்பகக் கனி" என்றும், "கற்றவர்கள் உண்ணும் கனி" என்றும் "கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ" என்றும் வரும் அமுத வசனங்களால் அறிக.
கற்றதன் பயன் வாலறிவன் நற்றாள் தொழுதலே என்று திருவள்ளுவ நாயனார் வகுத்து உரைத்த வாய்மையாலும் அறிக.
"கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்
நள்ளார் தொழாஅர் எனின".
"கற்பவை கற்க" என்று திருவள்ளுவர் கூறியபடியால்,கற்கத் தக்க நூல்களையே கற்கவேண்டும். கற்கத்தக்க நூல்கள் எவை அவை ஞானநூல்களாகும். "அறிவுநூல் கலா மூடர்" என்கின்றார் அடிகள் பிறிதொரு திருப்புகழில்.
தமிழ் நூல்களில் இரண்டு பிரிவுகள் உள. ஒன்று தோத்திர நூல்கள். மற்றொன்று சாத்திர நூல்கள். தோத்திரங்கள் பன்னிரு திருமுறைகள். சாத்திரங்கள் பதினான்கு சித்தாந்த சைவ நூல்கள். அருணகிரிநாதர், தாயுமானார் முதலிய அருளாளர்கள் அருளிய நூல்கள் அவைகளின் வழி வந்தவைகள். எனவே, இத்தகைய முத்திநெறிக்கு உரிய சத்திய நூல்களையே கற்றல்வேண்டும், கற்றவண்ணம் நிற்றல் வேண்டும்.
கற்பது என்பது உள்ளத்தில் உள்ள கசடு அறுவதற்காகவே. "கற்க கசு அற" என்றார் திருவள்ளுவ நாயனார். ஓதுவது என்பதை நன்னெறியில் நிற்பதற்காக. "ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது" என்றார் திருஞானசம்பந்தர். ஒதுவது என்பது உணர்தலில் முடிய வேண்டும். "ஓதியும் உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும்" என்றார் திருவள்ளுவ நாயனார். "உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான். எனவே, அருள்நூல்களையும், சாத்திரங்களையும், கசடு அறக் கற்று, ஓதி உணர்ந்து தெளிவு பெறுதல் வேண்டும்.
எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு
மக்கட் பிறப்பில் பிறிதுஇல்லை - அப்பிறப்பில்
கற்றலும், கற்றவை கேட்டலும், கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின். --- அறநெறிச்சாரம்.
கற்றும் என்பலன்? கற்றிடு நூன்முறை
சொற்ற சொற்கள் சுகாரம்ப மோ?நெறி
நிற்றல் வேண்டும், நிருவிகற பச்சுகம்
பெற்ற பேர்பெற்ற பேசாப் பெருமையே. --- தாயுமானார்.
இங்ஙனம் இன்றி, வெறும் இலக்கண இலக்கியங்களாகிய கருவி நூல்களை மட்டும் கற்று, அதனால் வந்த பொது அறவினால், நம்மினும் உயர்ந்தவர் எவர் என்று தருக்குற்று, பல புலவர் நிமிர்ந்து நிற்பர். அவர்கள் உள்ளத்தில் குழைவு இராது. சிந்தையில் தணிவும், செய்கையில் பணிவும் இரா. இத்தகையோர் ஒருவரையொருவர் காணும்போது தாம்தாம் கற்ற வித்தைகளைக் கொட்டிக் கலகமிடுவர்.
முன்கூறிய படி, அறிவு நூல்களைக் கற்றவர் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, பாலும் தேனும் கலந்ததுபோல் மகிழ்ந்து அளவளாவுவர்.
நல்தாமரைக் கயத்தில் நல்அன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாறே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம். --- மூதுரை.
பிறவித் துன்பத்தை நினைந்து உள்ளம் குழைந்து உருகி, "ஈசனே! எண்ணில்லாத பிறவி எடுத்து எடுத்து இளைத்து விட்டேனே! இனி இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ? யாது வருமோ? இனி எளியேனைப் பிறவா வண்ணம் ஏன்றுகொள்" என்று உள்ளத்தால் உரைத்து, வெள்ளம்போல் விழிநீர் பெருக நின்று, நெய்யிலே இட்ட அப்பத்தில் தண்ணீர்ப் பசை அற்றவுடன், அந்த அப்பம் அமைதி உறுவதுபோல் சாந்தியுடன் நிற்பர்.
இத்தகைய பெருந்தன்மையும் நன்மையும் அறியாத பலர், மரப் பெட்டியில் உள்ள நூல்களை மாமிசப் பெட்டியில் ஏற்றி, அகந்தை கொண்டு, மனிதப் பண்பு ஒரு சிறிதும் இன்று, ஒருவரை ஒருவர் எதிர்த்து அதிர்ந்து பேசி, பற்கள் உதிர்ந்து, கண்கள் பிதிர்ந்து, பேதுறுவர். இம்மையிலே இகழும் மறுமையிலே நரகமும் அடைவர்.
இவர்களுடைய நிலையைக் கண்டு இரக்கமுற்ற தமது பரம குருநாதராகிய அருணகிரிநாதர், "அந்தோ! தமிழ் நூல்களைக் கற்றும் உணர்வு பெறாத இவர் மதி இருந்தவாறு என்னே?” என்று ஏங்கி, இந்த அழகிய உபதேசத்தை உரைத்தருளுகின்றார்.
காதிமோதி வாதாடு நூல்கற்றிடுவோர்
மாறிலாத மாகாலன் ஊர்புக்கு அலைவார்.
காசு தேடி ஈயாமல் வாழப் பெறுவோரும்---
பொருள் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது. பொருள் இல்லாமல் இனிது வாழ முடியாது. துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் துணையாக நிற்கின்ற இல்லறத்தான் பொருளை ஈட்டவேண்டியது கடமைதான். ஆனால், அறவழியில் ஈட்டியதுதான் பொருள். மறவழியில் ஈட்டிய பொருள் பொருள் ஆகாது. அது தீவினையின் குவியல். அப்பொருளைத் துய்ப்பார்க்கும் தூய்மை கெடும். "தீவினை விட்டு ஈட்டல் பொருள்" என்பது ஔவையார் அமுத வாக்கு. எப்படியாவது - யார்தலையில் கைவைத்தாவது - பலரை நசுக்கியாவது பொருள் வந்தால் போதும்; வாழ்வின் குறிக்கோள் பொருளை ஈட்டுவதுதான் என்று இருக்கக் கூடாது. இது மடமை. தீயவழியில் பொருளை ஈட்டுவார், இம்மையில் இகழும், மறுமையில் நரகமும் அடைந்து அல்லல் படுவர். ஆகவே, உண்மை நெறியில் நின்று, பிறர் மனம் நோவாமல் அறவழியில் பொருளை ஈட்டுதல் வேண்டும்.
அவ்வாறு அறத்தின்வழி ஈட்டிய பொருளை அரனார் தந்தது என்று, மறவாமல் கருத்தில் இருத்தவேண்டும். அப்பொருளை அடியார்கட்கும் வறியார்கட்கும் இறைதிருப்பணிகட்கும் வழங்குதல் வேண்டும். குறைந்த பட்சம் வருவாயில் கால் கூறு வழங்குதல் கடமை. அங்ஙனம் அறம் செய்தோர் ஆன்ற புகழும், அழிவற்ற புண்ணியமும் அடைவர். அவருக்குக் கடமையைச் செய்தோம் என்ற சாந்தியும் உண்டாகும்.
அல்வழியில் பொருளை ஈட்டி, நல்வழியில் செலவிடாத உலோபிகள், பொருள் காத்த பூதம்போல் காத்து, பொருள் என்றவுடன் ஆ என்று வாயைப் பிளந்து, உண்ணாதும் உடாதும் கொடாதும் பயன் அற்றுக் கிடப்பர்.
உடாஅதும், உண்ணாதும், தம்உடம்பு செற்றும்,
கெடாஅத நல்லறமும் செய்யார், - கொடாஅது
வைத்துஈட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட!
உய்த்துஈட்டும் தேனீக் கரி. --- நாலடியார்.
கன்னெஞ்சராகிய வன்னெஞ்சராம் அவர்களைப் பூமி தாங்குதற்குக் கூசும். அவர்களை ஏன் படைத்தாய் என்று கூறி இறைவனை நோக்கி வினவுகின்றார் பட்டினத்தடிகள்.
நாயாய்ப் பிறக்கினும் நல்வேட்டைஆடி நயம்புரியும்,
தாயார் வயிற்றில் நரராய்ப் பிறந்து,பின் சம்பன்னராய்,
காயா மரமும், வறளாம் குளமும், கல்ஆவும் என்ன
ஈயா மனிதரை ஏன் படைத்தாய், கச்சிஏகம்பனே. --- பட்டினத்தார்.
அறம் செய்யாது, அல்வழியில் ஈட்டிய பொருள் திருட்டுக்கும் புரட்டுக்கும் சூதுக்கும் வாதுக்குமாகச் சென்று, அதனால் உள்ளம் வருந்திய அவர்கள் கடும் துயரமுற்று மாய்ந்து ஒழிவார். இறுதியில் நரகமும் அடைவார்.
நம்பன் அடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்குஆம், பேய்க்குஆம், பரத்தையர்க்குஆம் -
வம்புக்குஆம், கொள்ளைக்குஆம், கள்ளுக்குஆம், கோவுக்குஆம்,
சாவுக்குஆம்,கள்ளர்க்குஆம், தீக்காகும் காண். --- ஔவையார்.
வேடிச்சி கொங்கை விரும்பும் குமரனை மெய்அன்பினால்
பாடிக் கசிந்து,உள்ள போதே கொடாதவர், பாதகத்தால்
தேடிப் புதைத்து, திருட்டில் கொடுத்து, திகைத்து, இளைத்து
வாடிக் கிலேசித்து, வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே. --- கந்தர் அலங்காரம்.
மற்றுஅறிவாம் நல்வினை, யாம்இளையம் என்னாது,
கைத்துஉண்டாம் போழ்தே கரவாது அறஞ்செய்ம்மின்;
முற்றி இருந்த கனிஒழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு. --- நாலடியார்.
கெடுவாய் மனனே, கதிகேள், கரவாது
இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்,
சுடுவாய் நெடுவேதனை தூள்படவே,
விடுவாய், விடுவாய் வினையா வையுமே. --- கந்தர் அநுபூதி.
மாதுபாகர் வாழ்வே எனா நெக்கு உருகார் ---
நமது மனம் கல்லினும் வலியதாக அமைந்திருக்கின்றது. "திணியான மனோசிலை" என்றார் அடிகளார். அப்படி இருத்தல் கூடாது. கல்லின்மீது தாமரை மலராது. அது ஈரமும் சேறும் உள்ள இடத்தில் மலரும். மனம் உருகி இளகிய போது, அங்கு இறைவனுடைய திருவடியாகிய தாமரை மலரும்.
"திணியான மனோசிலை மீதுஉனதாள்
அணிஆர் அரவிந்தம் அரும்பும் அதோ".. --- கந்தர் அநுபூதி.
இறைவனுடைய பெருமையையும், அவனுடைய கருணையின் எளிமையையும், ஆன்மாவாகிய தனது சிறுமையையும், நாம் அவனை மறந்த போதும், தாயினும் சாலப் பரிவு உடைய அத் தயாபரன் மறவாது தனக்கு அருள் புரியும் தன்மையையும், அப் பரமகருணைக் கடவுளைப் போற்றாது சாலநாள் கழித்த புன்மையையும், போற்றுவதனால் வரும் நன்மையையும் உள்ளத்தில் உன்னி உன்னி உருகுதல் வேண்டும்.
அங்ஙனம் உருகாதார் இறைவன் அளவற்ற கருணையினால் நமக்குச் செய்த, செய்கின்ற கருணைத் திறத்தை நினைக்கவும் மாட்டாமையால், நன்றி அறிவு இல்லாவதர் ஆவார். நன்றி மறத்தல்,உய்வு இல்லாத கொடிய தீவினை என்பதை நமது அறநூல்கள் அறுதியிட்டு உறுதி கூறுகின்றன.
பேசுவதற்குத் தகுந்த இந்த வாயும், கண்களும், கரசரணங்களும், பிறபிற உறுப்புக்களும், அகக் கருவிகளும் அமைந்த இந்த அருமையான உடம்பையும், தண்ணீரும், நெருப்பும், காற்றும், வெளியும் அமைந்த இந்த உலகத்தையும், இனிய கனிகளையும், கிழங்குகளையும், தன தானியங்களையும் நமக்குத் தந்தவர் கருணைக்கடலாகிய இறைவனே. நம்மால் ஒரு சிறு புல்லையேனும் உண்டுபண்ண முடியாது.
"வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா, வினையேன், நெடுங்காலமே". --- அப்பர் தேவாரம்.
இந்த தமிழ்மறை அமிர்தம்போல் நமக்கு அறிவுறுத்துகின்றது. எம்பிரானுடைய திருவருளின் திறம் அருமை மிக்கது. நாம் கருவுற்ற உடனேயே நாம் அருந்த இரண்டு பால் குடங்களை அமைத்து வைக்கின்றான். மதி கதிர் என்ற இரு பெரிய விளக்குகளை அமைத்துத் தந்துள்ளான். சகல வளங்களுக்கும் ஆதாரமாகிய மலைகளையும், வற்றாத கடலையும் நமக்கு ஆக்கி அளித்து இருக்கின்றான். கடலைக் கரையின்றி நிற்க வைத்ததும், அவ் இறைவனுடைய அருளாணையே. கருவில் உயிர்கள் இருக்கின்ற போது, அவைகட்கு உணவு செல்லுமாறு அமைத்த அருளை எண்ணினால், எந்தக் கருங்கல் மனம் தான் உருகாது? அவ்வாறு உருகவில்லையானால், ஆறு அறிவு படைத்த மனிதன் என்று எண்ணவும் கூடுமோ? பிறர் செய்த அற்ப உதவிகளையே நெஞ்சார நினைத்து வாயாரப் பாராட்டவில்லையானால் மீளா நரகம் வருமாயின், பரம்பொருள் நமக்குச் செய்யாமல் செய்த பலகோடி உதவிகளையும், அவனது கருணைத் திறத்தையும் நினைத்து உருகாதார் நரகில் வீழ்ந்து வேதனை உறுவர் என்பதில் எள் அளவும் ஐயமில்லை. எனவே,
"மாதுபாகர் வாழ்வே எனா நெக்கு உருகாரும்
மாறிலாத மாகாலன் ஊர்புக்கு அலைவாரே".
என்று அருளினார் அருணகிரிநாதர்.
நாத ரூப---
நாதம் - மந்திரத்தை உச்சரிக்கும்போது உண்டாகும் ஒலி. "ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே" என்ற அப்பர் திருவாக்கின்படி, இறைவன் ஒலி உருவாக, நாத வடிவமாக விளங்குகின்றான்.
மாநாதர் ஆகத்து உறைவோனே ---
நாதர் - தலைவர். மாநாதர் - தனிப்பெரும் தலைவர். ஆகம் - உடம்பு. இங்கே நமது மனத்தையும் குறித்து நின்றது.
சிவபெருமானுடைய திருமேனியில் எல்லா அண்டகோடிகளும், மாலயனாதி வானவர்களும், சராசரங்களும் அடங்கி இருக்கின்றன. முருகவேள் சிவபெருமானுடைய இதயத்தில் ஒளிமயமாக விளங்குகின்றார். அவ் ஒளிதான் அமரர் பொருட்டு, நெற்றிக்கண் வழியாக வெளிப்பட்டு, ஆறுமுகமும், பன்னிரண்டு திருக்கரங்களும், பதினெட்டு திருவிழிகளுமாக சரவணப் பொய்கையில் கருணைவடிவாகத் தோன்றி அருளியது. அவ்வாறு தோன்றி அருளினாலும், சிவபரம்பொருளின் திருவுள்ளத்தில் முருகவேள் உறைந்தவண்ணமாக இருப்பர். இதனால், சிவன் வேறு முருகன் வேறு என்று எண்ணுதற்கு இடமில்லை.
மண் அளந்திடு மாயனும்,வனச மேலவனும்,
எண் அரும்பகல் தேடியும் காண்கிலாது இருந்த
பண்ணவன்நுதல் விழியிடைப் பரஞ்சுடர் உருவாய்
உள்நிறைந்த பேரருளினால் மதலையாய் உதித்தான். --- கந்தபுராணம்.
சூரபன்மன் வேறு ஒரு குற்றமும் செய்யவில்லை. முருகனைப் சிவபரம்பொருளே என்று அறியாதும், சிங்கமுகன் முதலியோர் அறிவுறுத்தியும் தெளிவு பெறாதும், எண்ணில் காலம் தவம் செய்து பெற்ற பெருவரங்களையும் இழந்து குலத்துடன் அழிந்தான். எனவே, சிவன் வேறு குகன் வேறு என்று எண்ணாது, சிவமூர்த்தியின் உள்ளக் குகைக்குள் வீற்றிருக்கின்ற ஒளிவடிவு முருகன் என உணர்தல் வேண்டும்.
தீது இலாத வேல் வீர---
வேல் என்பது ஞானம். ஞானம் நன்மையையே செய்யும். தீமையைச் செய்யாது. அறிவுள்ளவன் ஒன்றுக்கும் அஞ்சமாட்டான். "நமனை அஞ்சோம்" என்பது ஞானிகளுடைய வீரவசனம். ஞானத்தை உடையவன் மலைபோன்ற துன்பங்கள் வரினும், காற்றினால் கலங்காமல் நிற்கின்ற கல்மலை போல் கலங்காமல் நிற்பான். முருகனை வணங்குகின்ற மெய்யடியார்கட்கு ஞானமும், ஞானத்தால் விளையும் வீரமும் உண்டாகும் என்க.
சேவல் கொடியோனே---
ஒளியைக் கண்டு மகிழ்வது சேவல். அது உலகிற்கு எல்லாம் ஒலியைத் தரும் பெருவிளக்காகிய கதிரவனைக் கண்டு களி கூர்ந்து சிறகடித்து கோ கோ என்று கூவும். செவ்வேள் பரமன் எங்கு சென்றாலும் சேவல்கொடியுடன் செல்லுவார். அது நாத தத்துவம். நாதத் தத்துவத்தினால் மாயையின் வலி குறையும்.
தேவ தேவ தேவாதிதேவ---
முருகவேள் மூவர் தேவாதிகட்கும் முழுமுதலாய் விளங்குபவர்.
தினைப்பு னத்தினைப் பண்டு காத்தம டந்தைகேள்வா
திருத்த ணிப்பதிக் குன்றின் மேல்திகழ் கந்தவேளே
பனைக்க ரக்கயத்து அண்டர் போற்றிய மங்கைபாகா
படைத்து அளித்துஅழிக் குந்த்ரி மூர்த்திகள் தம்பிரானே.
--- (கனைத்ததிர்க்கும்) திருப்புகழ்.
"இதழ்பொதிய விழ்ந்த தாமரையின்
மணவறை புகுந்த நான்முகனும்
எறிதிரை அலம்பு பால்உததி.....நஞ்சுஅராமேல்
இருவிழி துயின்ற நாரணனும்
உமைமருவு சந்த்ர சேகரனும்
இமையவர் வணங்கு வாசவனும்...... நின்றுதாழும்
முதல்வ” --- (உததியறல்) திருப்புகழ்.
கருத்துரை
முருகா! வாதம் இடக் கற்பவரும், அறம் செய்யாத செல்வரும், அன்பு செய்யாத அவலரும் நரகில் வீழ்ந்து வருந்துவார்கள்.
No comments:
Post a Comment