இறப்பு உண்டு என்பதை மறத்தல் பேதைமை
-----
"தோற்றம் உண்டேல் மரணம் உண்டு" என்பது சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருள் வாக்கு. பிறப்பு என்பது உண்டானால், மரணமும் உண்டு என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். மரண பயம் நம்மில் எல்லோருக்கும் உண்டு. மரணம் என்று ஒன்று இருந்தால், பிறப்பு என்பதும் சங்கிலித் தொடர் போல உண்டு. பிறந்த நாம், என்றாவது ஒரு நாள் மரணத்தைச் சந்தித்தே ஆகவேண்டும். இனிப் பிறவாமல் இருக்கவேண்டும் என்றால், அதற்கு உரிய உபாயத்தை அப்பர் பெருமான் காட்டி அருளுகின்றார். ஆறறிவு உள்ள மனிதனாகப் பிறப்பெடுத்த ஒவ்வொருவரும், உலகியல் இன்பங்களை நுகர்வதோடு, இறைவன் திருநாமத்தையும் சொல்லி வருதல் முதலிய பயிற்சிகளைச் செய்து வருதல் வேண்டும். அதுவே உயிருக்கு உய்தியைத் தருகின்ற ஒழுக்கநெறி ஆகும். இறைவன் திருநாமத்தை வாயாரச் சொல்லுதல், அவன் திருப்புகழை வாயாரப் பாடுதல்முதலியவற்றை முற்பிறப்பில் பயிற்சியால் பலகாலும் செய்து, அதனை பயனைப் பெறாதவர், வினையின் காரணமாகப் பெறிந்து, வினைகளை மேலும் பெருக்கி, நோய்கள் நலிய வாழ்ந்து, இறுந்த ஒழிபவர்களே, பிறப்பும் இறப்பும் தொடர்ந்து வரும், அவர்களுக்குப் பிறவி அறாது என்பதை அப்பர் பெருமான் பின்வரும் தேவாரப் பாடலால் காட்டி அருளினார்.
"திருநாமம் அஞ்செழுத்தும் செப்பார் ஆகில்,
தீவண்ணர் திறம் ஒருகால் பேசார் ஆகில்,
ஒருகாலுநம் திருக்கோயில் சூழார் ஆகில்,
உண்பதன்முன் மலர்பறித்து இட்டு உண்ணார் ஆகில்,
அருநோய்கள் கெட வெண்ணீறு அணியார் ஆகில்,
அளி அற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்,
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும் செத்தும்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே".
இதன் பொருள் ---
சிவபரம்பொருளின் திருநாமம் ஆகிய திருவைந்தெழுத்தை ஒருகாலும் செப்பாதவராக இருந்தால், தீவண்ணர் ஆகிய அப் பெருமானின் இயல்பை ஒருகாலும் வாயாரப் பேசாதவராக இருந்தால், இறைவன் திருக்கோயிலினை ஒருபோதாவது வலம் வாராதவராக இருந்தால், உண்பதற்கு முன், மலர்களைப் பறித்து இறைவனுக்கு இட்டு வணங்காதவராக இருந்தால், முன்வினையின் காரணமாக உண்டாகும் கொடிய நோய்கள் கெடும்படியாக திருவெண்ணீற்றை உடம்பில் தரித்துக் கொள்ளாதவராக இருந்தால், இறைவனது திருவருளை இழந்தவர் ஆவார். அவர்கள் பிறந்த முறை என்ன என்று கேட்டால், பிறந்த பிறவியில் தீராத கொடுநோய்கள் மிகத் துன்புறுத்த, பயன் இன்றி வாளா இறந்து, மீளவும் பிறக்கின்ற தொழிலை மேற்கொள்பவராக இருப்பதே.
மேலே குறித்த தேவாரப் பாடலில், "செப்பார் ஆகில்" என்று நாயனார் அருளிச் செய்தது சிந்தனைக்கு உரியது. "சொல்லார் ஆகில்" என்றும் சொல்லி இருக்கலாம். சொல்லுவது செப்பமாக இருக்கவேண்டும் என்பதால், "செப்பார் ஆகில்" என்று சொன்னார் என்பதைக் கருத்தில் கொண்டு சிந்திக்கவேண்டும்.
உலகியல் இன்பங்களுக்கே உழன்று, உழன்று, பாரதியார் சொன்னது போல் வேடிக்கை மனிதர்களாக வாழ்ந்து, ஒரு பயனும் இன்றி செத்துப் போவாரை நாளும் கண்டு வருகின்றோம். இருந்தும், நலம் ஒன்றும் காணாமல், பொய்யான இந்த உலக வாழ்வையே நிலையானது என்று அறிவு மயங்கி, புலை வாழ்வை மகிழ்கின்றோம். உலக வாழ்வும், வாழ வந்த இந்த உடம்பும், உலகியல் பொருள்களும் அநித்தியாமானவை. நீர் மேல் தோன்றுகின்ற அழகான குமிழியைப் போன்று அழிந்து போகக் கூடியவை. உயிர் நீங்கியவுடன், இந்த உடல் சவம் எனப்படுகின்றது. புறங்காட்டிற்குக் கொண்டுபோய், இழிந்த விறகில் வைத்து எரித்துச் சாம்பலாக்கப்படுகின்றது.
சாதாரண மக்கள் மட்டும் அல்லாமல், மன்னர் மன்னவராய் மாண்போடு வாழ்ந்தவருக்கும் இந்த நிலைதான். வாழ்வின் நிலையாமையை உணராமல், உலக வாழ்வில் உள்ளம் களித்துத் திரிபவர்க்கு, இந்தக் காட்சிகளைக் கண்டு, அறிவில் தெளிவு உண்டாகுமானால், பிறப்பு இறப்பை ஒழித்துப் பேரின்ப வீட்டினைக் காண நாட்டம் உண்டாகும்.
"இன்னம் பிறக்க இசைவையோ?நெஞ்சமே!
மன்னர் இவர் என்று இருந்து வாழ்ந்தாரை - முன்னம்
எரிந்தகட்டை மீதில் இணைக் கோவணத்தை
உரிந்து உருட்டிப் போட்டது கண்டு"
என்கின்றார் பட்டினத்து அடிகளார்.
"அரசர் இவர் என்று சொல்லப்படும்படியாக வாழ்ந்து மடிந்தவரை, இதற்கு முன் வேறு ஒரு பிணத்தை எரித்த கட்டையின் மீது வைத்து, அவரது ஆண்மைக்குத் துணையாய் இருந்த கோவணத்தையும் உரிந்து, உருட்டிப் போடுவதைப் பார்த்து இருந்தும், எனது மனமே! நீ இனிமேலும் பிறப்பு எடுக்க விரும்புவாயோ?" என்றகின்றார் அடிகளார்.
"மேலும் இருக்க விரும்பினையே,வெள்விடையோன்
சீலம் அறிந்திலையே,சிந்தையே! - கால்கைக்குக்
கொட்டை இட்டு,மெத்தை இட்டுக,குத்திமொத்தப் பட்ட உடல்
கட்டை இட்டுச் சுட்டுவிடக் கண்டு"
"கால்களுக்கும், கைகளுக்கும் சிறு திண்டுகள் வைத்து, மெத்தையை விரித்து, அழகாகக் குத்தி அடித்து வைக்கப்பட்ட இந்த உடலை விட்டு, உயிர் நீங்கிப் பிணம் ஆன பின்னர், ஒழுங்கற்ற கட்டையில் வைத்துத் தானே எரிக்கின்றார்கள். இதைப் பார்த்த பின்னரும், நீ இந்த உலக வாழ்வில் களித்து இருக்க விரும்புகின்றாயே. இறைவனது கலியாண குணங்களை உணர்ந்து, அவனைப் போற்றி வாழத் தலைப்படவில்லையே" என்று தனது நெஞ்சுக்கு மேலும் அறிவுரை கூறுகின்றார் பட்டினத்து அடிகளார்.
அந்த ஞானத் துறவியின் திருவாயில் இருந்த மலர்ந்த அருட்பாடல்கள் இன்று பட்டிதொட்டிகள் தோறும் ஒலிக்கத்தான் செய்கின்றது. ஆனாலும், வாழ்வின் இறுதி நிலையை நினைத்து, உய்தி பெற உறுதி கொள்வது மட்டும் இல்லாமல் போவது கொடுமையானது.
நச்சுப் பொய்கையில் தருமபுத்திரனை நோக்கி, தருமதேவன் கேட்ட பல கேள்விகளில் ஒன்று, "இவ்வுலகில் மிகவும் அதிசயமானது எது" என்பது. தருமபுத்திரர் அதற்கு, "இறந்து பாடை மேல் போவாரை கண் எதிரில் கண்டு இருந்தும், தாமும் இப்படித்தானே ஒரு நாள் இறந்து போவோம் என்று எண்ணாமல் மனிதர்கள் இருப்பதே பெரிய அதிசயம்" என்று அருமையாகப் பதில் இறுத்தார்.
"பொருள்களை மிகுதியாகச் சம்பாதிக்கும் வழிகளையும், சக போகங்களை அனுபவிக்கின்ற முறைகளையும், துறைகளையும் சொல்லிக் காட்டாமல், "நீ செத்துத் தொலைவாய், பாடையிலே போவாய்" என, அருளாளர்களளும் ஆன்றோர்களும், இழவுக் காட்சிகளை எடுத்துக் காட்டுவது மக்களை அச்சத்தில் ஆழ்த்துவதற்கு அல்ல. நல் அறிவு கொளுத்துவதற்கே.
பொருளை எவ்வாறாயினும் ஈட்டுவதிலும், புலன் இன்பங்களை எவ்வாறாவது நுகர்வதிலும் நாட்டம் இல்லாதவரைக் காண்பது மிக அரிது. இதற்கு அவர்களுக்குப் போதனை ஏதும் வேண்டுவதில்லை. அறிவு மயக்கத்தில் இருந்து அவர்களைத் தெளிவித்து, நல்வழிப்படுத்தவே அறவுரை தேவைப்படுகின்றது. இறந்து போவோம் என்னும் உண்மையை மறந்து வாழ்வதை விட, மனித இனத்திற்குக் கேட்டினைத் தருவது வேறு ஒன்றும் இல்லை என்பதை, கம்பநாடர் அருமையாக, இராமகாதையில் தசரதன் கருத்தாகக் காட்டி உள்ளார்.
"இறப்பு எனும் மெய்மையை
இம்மை யாவர்க்கும்
மறப்பு எனும் அதனின் மேல்
கேடு மற்று உண்டோ?" --- கம்பராமாயணம்.
இதன் பொருள் ---
இப்பிறப்பிலே எவர்க்கும் சாவு உண்டு என்னும் உண்மையை மறத்தல் என்பதற்கு மேற்பட்டகேடு வேறு உண்டோ? (இல்லை).
"தோற்றம் உண்டேல், மரணம் உண்டு, துயரம் மனை வாழ்க்கை" என்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். பிறந்த நாம் என்றாவது ஒருநாள் இறந்தே போவோம் என்பதை மறந்து கிடப்பதை விடக் கேடு தருவது ஏதும் இல்லை. உண்மையை நம்ப மறுத்து, பொய்யான, நிலையற்ற உலக வாழ்வை நிலையானது என நம்புதல் மடமை.
இதனைப் புறநானூற்றில் ஒரு பாடலின் வழி உணரலாம். ஐயாதிச் சிறுவெண் தேரையர் என்னும் புலவர் பின்வருமாறு பாடுகின்றார்.
"இருங்கடல் உடுத்த இப் பெருங்கண் மாநிலம்
உடை இலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடுதிரை மணலினும் பலரே,சுடுபிணக்
காடு பதியாகப் போகி,தத்தம்
நாடு பிறர்கொளச் சென்று மாய்ந்தனரே;
அதனால், நீயும் கேண்மதி அத்தை,வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை,
மடங்கல் உண்மை மாயமோ அன்றே,
கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு
வெள்ளில் போகிய வியலுள், ஆங்கண்
உப்பு இலாஅ அவிப் புழுக்கல்
கைக்கொண்டு,பிறக்கு நோக்காது
இழி பிறப்பினோன் ஈயப்பெற்று
நிலம் கலனாக விலங்கு பலி மிசையும்
இன்னா வைகல் வாரா முன்னே,
செய்ந் நீ முன்னிய வினையே,
முந்நீர் வரைப்பகம் முழுது உடன் துறந்தே".
இதன் பொருள் ---
கருநீலக் கடலையே ஆடையாக உடுத்தி இருக்கும் பரந்த இந்த நில உலகத்தை, உடை என்னும் ஒருவகை மரத்தின் சிறிய இலை அளவு உள்ள இடம் கூடப் பிறருக்கு இல்லாமல், தனியாகத் தாமே முழுதும் ஆண்ட பேரரசர்கள் பலர் இருந்தனர். அவர்கள் கடற்கரை மணலினும் அதிகமானவர்கள். இப்படிப் பிறர்க்கு இடம் இல்லாமல் உலகம் முழுமையும் தனது குடையின் கீழ் ஆண்ட பேரரசர்கள் பலரும், தமது வாழ்நாள் முடிவில் சுடுகாடே தமக்கு இடமாக மடிந்தனர். அவர்கள் ஆண்ட நாடு பிறருக்கு உரிமை ஆனது. எனவே, நான் சொல்வதைக் கேட்பாயாக. அழியாத உடம்போடு எந்த உயிரும் இருந்தது இல்லை. இது உலகம் அறிந்த உண்மை. பொய் அல்ல. இதில் மாறுபாடு கொண்டு தடுமாற்றப் படவேண்டுவது இல்லை. கள்ளியும் முள்ளும் முளைத்துக் கிடக்கும் சுடுகாட்டில், உப்பு இல்லாமல் பொங்கிய வெறும் சோற்றுப் பிண்டத்தை, இழிமகன் ஆகிய புலையன் ஒருவன் கொடுக்கப் பெற்று, பின்புறம் திரும்பிப் பார்க்காது, நிலத்தில் வைத்த பலிச் சோற்றை ஏற்கின்ற துயரம் மிக்க இறுதிக் காலம் உன்னை வந்து அடையும் முன்பாக இவ்வுலக வாழ்வைத் துறந்து, நல்லறம் புரிய நினைப்பாயாக.
பரந்துபட்டுக் கிடக்கும் இந்த மாநிலமானது, இதில் பிறந்த எல்லோருக்கும் உரிமையானது. இது பொது என்று கருதாது, தமக்கே உரியதாக்கி, ஏகச் சக்கராதிபதியாக ஆட்சி புரிந்தவரும் கூட இறந்து ஒழிந்தனர். ஏனவே, பிறர் இறந்துபடுவது பற்றிச் சொல்ல வேண்டாம். எனவே, பிறந்த எல்லோரும் இறப்பது திண்ணம் என்பதால் ,"வீயாது (இறந்து ஒழியாது) உடம்பொடு நின்ற உயிரும் இல்லை” என்று சொல்லப்பட்டது. அப்படி ஒருவர் இறக்கும் நாள் யாருக்கும் இன்பம் தருவதாக இருக்காது என்பதை உணர்த்த, "இன்னா வைகல்” எனக் காட்டினார்.
உலக வாழ்வில் அரச பதவி என்பது மிகவும் உயர்ந்தது. அரிய பல புண்ணியங்களைப் பிறவிகள்தோறும் ஆற்றி வந்ததன் பலனாக அமையப் பெறுவது. அத்தகைய பெரிய வாழ்வும் அழிந்து போவதற்கே உரியது. எனவே, அழிவில்லாத நிலையினை அடைய முயல்வது அறிவுடைமை ஆகும். நிலையாமை உணர்வு இருந்தால், நிலையானதை அடைய முயற்சி தோன்றும்.
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகளும் தமது காப்பியத்தின் வாயிலாக, மன்பதைக்கு இந்த ஒப்பற்ற அறிவுரையை அருளி உள்ளார். சேரமன்னன் செங்குட்டுவனுக்கு, மாடலன் என்னும் வேதியன், "மன்னா, உனது ஆட்சிக் காலம் ஐம்பது ஆண்டுகள் முடிந்த பின்னரும், நீ அறக் கள வேள்வியைச் செய்யாது, எப்போதும் மறக் கள வேள்வியையே செய்பவனாக இருக்கின்றாய்" என்று கூறிய அறிவுரை...
"மீக்கூற் றாளர் யாவரும் இன்மையின்
யாக்கை நில்லாது என்பதை உணர்ந்தோய்!
மல்லன்மா ஞாலத்து வாழ்வோர் மருங்கில்
செல்வம் நில்லாது என்பதை வெல்போர்த்
தண்டமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின்
கண்டனை அல்லையோ?காவல் வேந்தே!
இளமை நில்லாது என்பதை எடுத்து ஈங்கு
உணர்வுடை மாக்கள் உரைக்க வேண்டா;
திருஞெமிர் அகலத்துச் செங்கோல் வேந்தே!
நரைமுதிர் யாக்கை நீயும் கண்டனை,
விண்ணோர் உருவின் எய்திய நல்லுயிர்
மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்;
மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர்
மிக்கோய், விலங்கின் எய்தினும் எய்தும்;
விலங்கின் யாக்கை விலங்கிய இன்னுயிர்
கலங்கு அஞர் நரகரைக் காணினுங் காணும்;
ஆடுங் கூத்தர்போல் ஆருயிர் ஒருவழிக்
கூடிய கோலத்து ஒருங்கு நின்று இயலாது,
செய்வினை வழித்தாய் உயிர்செல்லும் என்பது
பொய்யில் காட்சியோர் பொருள் உரை,ஆதலின்,
எழுமுடி மார்ப! நீ ஏந்திய திகிரி
வழிவழிச் சிறக்க வயவாள் வேந்தே!
அரும்பொருட் பரிசிலேன் அல்லேன் யானும்
பெரும்பேர் யாக்கை பெற்ற நல்லுயிர்
மலர்தலை உலகத்து உயிர்போகு பொதுநெறி,
புலவரை இறந்தோய் போகுதல் பொறேஎன்,
வானவர் போற்றும் வழிநினக்கு அளிக்கும்
நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்,
அருமறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய
பெருநல் வேள்வி நீ செயல் வேண்டும்,
நாளைச் செய்குவம் அறம் எனில்,இன்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்,
இதுஎன வரைந்து வாழுநாள் உணர்ந்தோர்
முதுநீர் உலகில் முழுவதும் இல்லை"
இந்த அற்புதமான அறிவுரையை மாடலமறையோன், சேரன் செங்குட்டுவனுக்குச் சொல்லி நெறிப்படுத்த முயன்றதாகச் சொல்லி, இளங்கோ அடிகள் நம்மை நெறிப்படுத்த முயன்று இருக்கின்றார் என்பதை அறிய உள்ளம் நெக்கு உருகும்.
இதன் பொருள் ---
மேம்பட்ட புகழினை உடைய உனது முன்னோர் ஒருவரும் இல்லாது இறந்து போனமையால், உடல் நிலையானது அல்ல என்பதனை நீ அறிந்து உள்ளாய்.வளம் நிறைந்த இப்பெரிய உலகத்தில் வாழும் மக்களிடத்தில், செல்வம் நிலைபெறாது என்பதனை, தமிழ் நாட்டு மன்னர்களை இகழ்ந்த ஆரிய மன்னர்களிடத்தில் நீ கண்டு இருக்கின்றாய் அல்லவா? இளமைப் பருவம் நிலையானது அல்ல என்பதனை, உனக்கு உணர்த்த எந்த மேற்கோளும் தேவையில்லை. திருமகள் தங்கிய பரந்த மார்பினையும் செங்கோலையும் உடைய வேந்தனே! உனது முடி நரைத்து உள்ளது. தோல் திரைந்து உள்ளது. இதை நீயே அறிவாய்.
தேவர் வடிவத்தோடு சுவர்க்க உலகம் சென்ற நல்ல உயிரானது, மக்கள் வடிவோடு இந்த உலகத்தில் மீளவும் வந்து பிறக்கலாம். மனித உடலை மேற்கொண்ட உயிரானது, விலங்கின் உடலைப் பெறுவதும் கூடும். விலங்கு உடலைப் பெற்று இருந்த உயிரானது நரகலோகத்தை அடையவும் செய்யும். நடிகர் ஒருவர் தாம் மேற்கொண்ட பாத்திரத்துக்கு ஏற்ப வெவ்வேறு வேடங்களைப் போட்டுக் கொள்வது போல, எந்த உயிரும் தான் முற்பிறவிகளில் செய்த வினைப் பயனுக்கு ஏற்ப, பிறவியை எடுக்கும் என்பது தெளிந்த அறிவினை உடையோருடைய மெய்ம்மொழி ஆகும்.
வேந்தே! உனது வெற்றிக் கொற்றம் மேலும் சிறப்புப் பெறவேண்டும். உன்னிடம் பரிசில் வேண்டி நான் இங்கு வரவில்லை. பரந்த இந்த நிலவுலகத்தில் வாழ்கின்ற உயிர்கள் பொதுப்படப் பிறந்து இறந்து செல்லும் பொதுநெறியினை என்னால் பொறுக்க முடியவில்லை. தேவர்கள் புகழும் வீட்டுலக இன்பத்தைத் தருகின்ற நான்கு வேதங்களில் வல்ல அந்தணர்களைக் கொண்டு, நீ உயர்ந்த பெருவேள்வியினைச் செய்தல் வேண்டும்.
அடுத்த நாளில் அந்த அறச் செயலைச் செய்வோம் என்று கருதினால், இதைக் கேட்ட மாத்திரத்திலேயே உயிரானது உடலை விட்டு நீங்குதலும் கூடும். அதனால், இப்பொழுதே நான் சொன்னதைச் செய்வாயாக. வாழ்நாள் எல்லை இதுதான் என உணர்ந்தவர் யாரும் கடல் சூழ்ந்த இந்தப் பரந்த உலகில் இல்லை.
"புல்நுனி மேல் நீர்போல் நிலையாமை என்று எண்ணி,
இன்இனியே செய்க அறவினை;- இன்இனியே
நின்றான்,இருந்தான்,கிடந்தான், தன் கேள் அலறச்
சென்றான் எனப்படுத லான்" --- நாலடியார்.
என்று நாலடியார்உடம்பினது நிலையாமை குறித்துக் கூறுகின்றது.
பனிக் காலத்தில் புல்லின் நுனிமேல் முத்து முத்தாக, பனித் துளி தங்கி இருக்கும். அது வெயில் ஏற ஏற ஆவியாகி மறைந்து போகும். அது பொலத்தான், இந்த உடம்பும் ஒரு நாள் மறைந்து போகும். எனவே, இந்த உடம்பு உள்ளபோதே நல்ல அறத்தைச் செய்க. இல்லை என்றால்,இப்போது நன்றாகத்தான் இருந்தான், நோய் என்று படுத்தான், தனது குண்ணத்தார் கதறி அழச் செத்துப் போனான் என்ற நிலை வந்து விடும்.
குமரகுருபர அடிகளாரும் யாக்கை நிலையாமையை வலியுறுத்திக் கூறுகின்றார்.
நீரில் குமிழி இளமை,நிறைசெல்வம்
நீரில் சுருட்டும் நெடுந்திரைகள்,- நீரில்
எழுத்தாகும் யாக்கை,நமரங்காள்! என்னே
வழுத்தாதது எம்பிரான் மன்று? --- நீதிநெறி விளக்கம்.
1. இதன் பொருள் ---
2.
3. இளமை நீரில் குமிழி - நீரில் தோன்றி அழியும் கொப்புளம் போன்று இளமைப் பருவம் (நிறையில்லாது அழிவது ஆகும். நிறைசெல்வம் நீரில் சுருட்டும் நெடும் திரைகள் - தேடிச் சேர்த்து வைத்துள்ள குறைவில்லாத பெரும் செல்வமானது,நீரிலே காற்றினால் காற்றினால் சுருட்டப்படும் நெடிய அலைகள் (போன்று நிலையில்லாது அழிவது ஆகும்)யாக்கை நீரில் எழுத்து ஆகும் - உடம்பானது நீரின் மேல் எழுதிய எழுத்தைப் போன்று (நிலை இல்லாது அழியும் இயல்பை உடையது) ஆகும்.(இவ்வாறு இளமையும், செல்வமும், உடம்பும் நிலையில்லாது அழியும் இயல்பினை உடையவையாய் இருக்க) நமரங்காள் - நம்மவர்களே! எம்பிரான் மன்று வழுத்தாதது என்னே - எமது அம்பலவாணப் பெருமான் எழுந்தருளி ஆனந்தத் திருநடனம் புரியும் பொன்னம்பலத்தை வாழ்த்தி வணங்காமல் காலம் போக்கி இருப்பது ஏனோ?
6.
7. ஆன்மாக்கள் இப்பிறவியில் இன்பத்தை அனுபவிப்பதற்கு இளமைப் பருவம் வாய்த்தது. அதற்குச் சாதனமாக அமைந்தவை செல்வமும், உடம்பும். இளமைப் பருவத்தை அடைந்து, பொருளைப் பாடுபட்டுத் தேடித் தொகுத்து, அதனை முழுமையாக அனுபவிக்கும் முன்னரே, உடம்பை விடுகின்றோம். இளமை தோன்றி அழிவதால், நீரில் தோன்றும் குமிழியை இளமை என்றார். நீரில் அலைகள் தோன்றும் போது சிறிது சிறிதாக உருவாகி, பெரிதாகத் தோன்றி, வரவரச் சுருங்குவது போல, செல்வமும் சிறிது சிறிதாக ஈட்டப்பட்டு, பின் பெருகி வளர்ந்து, இறுதியில் அழிந்து போவதால், அதை நீரில் தோன்றும் அலைகளைப் போன்றது என்றார். நீரில் எழுதிய எழுத்து, அப்போதே அழிவதால், உடம்பை நீரில் எழுதிய எழுத்து என்றார்.
8.
9. புல்லறிவு படைத்தவர்கள் கண்டவுடனே மயங்குவது இளமையே என்பதால், அதனை முன்னே வைத்து, நீரில் உடனே தோன்றி மறையும் குமிழியைக் காட்டினார். குமிழியானது பளபள என மின்னிக் காணப்பட்டு, சிறிது நேரத்தில் பொட்டென அழிவது போல், இளமையும் தொடக்கத்தில் மிகவும் அழகு உடையதாய் இருந்து,சிறிது காலத்தில் அழிந்து ஒழிவதால், இளமையை நீர்க்குமிழி என்றார்.
10.
11. இளமைப் பருவத்தில் இன்பத்தை அனுபவிப்பதற்குத் துணையாக அமைவது செல்வமே. ஆதலால், அதனை இளமையின் பின் வைத்து,காற்றின் வேகத்தால் சிறிதாக உருவாகி, பெரிதாகத் தோன்றி, இறுதியில் ஒன்றும் இல்லாது அழிவதைப் போன்ற அலைகளைக் காட்டினார். நீரில் அலைகள் பலமுறையும் தோன்றி, அழிவதும் அல்லாமல்,ஓரிடத்தில் நில்லாது,பல இடத்திலும் சென்று, மறிந்து மறிந்து விழுந்து அழிவதைச் செல்வத்துக்குக் காட்டினார்.
12.
13. இளமை, செல்வம் இரண்டும் போன பின்பு உடம்பும் விழுவதால், அதனை நீர்மேல் எழுத்து என்றார். நீரில் எழுதிய எழுத்தானது எழுதிய போதே அழிந்து போகும். எழுதிய இடமும் தெரியாது. மக்கள் உடம்பும்,விரைந்து அழியும் தன்மையை உடையது. அழிவதோடு அல்லாமல் இருந்த இடமும் தெரியாது ஒழியும்.
14.
15. எனவே, இளமையில் கற்கவேண்டிய நூல்களைக் கற்று, நல்லறிவு பெற்று, முயன்று தேடிய செல்வத்தைத் தாமும் துய்த்துப் பிறர்க்கும் உதவி, அழிந்து போகக் கூடிய உடம்பால் ஆன பயனைப் பெற, இறைவனைத் தொழுது உய்யவேண்டும்.
16.
பிறப்பு உண்டு என்றால் இறப்பும் நிச்சயமாக உண்டு என்பதை மறந்து விடுதல் கூடாது. நிலையில்லாத இளமை, செல்வம், உடம்பு ஆகியவற்றைப் பெற்றதன் பயனாக, நிலையான இன்பத்தைத் தரக் கூடிய இறைவனைத் தொழுது உய்யவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
No comments:
Post a Comment