கல்விக் கழகு கசடு அற மொழிதல்
-----
சிறுவயதில், தொடக்கப் பள்ளியில் நாம் படித்த "வெற்றிவேற்கை" அல்லது "நறுந்தொகை" என்னும் இந் நீதிநூல் அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்டது. இவர் கொற்கை நகரத்திலிருந்து அரசு புரிந்தவர் என்று, இந் நூற்பயன் கூறும் பாயிரத்தில் 'கொற்கையாளி' என வருதலால் அறியப்படுகின்றது.
"நறுந்தொகை" என்பது நறிய, நல்லனவாகிய நீதிகளின் தொகை எனப் பொருள்படும். இதனால், பழைய நூல்களிலுள்ள நல்ல நீதிகள் பல இந்நூலுளே தொகுத்து வைக்கப்பட்டன என அறியலாகும்.
இந்நூலில் இரண்டாவதாகச் சொல்லப்பட்ட நீதி,
கல்விக் கழகு கசடு அற மொழிதல்.
இதன் பதவுரை ---
கல்விக்கு அழகு - (எழுத்து அறிவிக்கின்ற ஆசிரியன் கற்ற) கல்விக்குஅழகாவது, கசடு அற மொழிதல் - (தன்னை அடுத்துக் கேட்போருடைய) குற்றங்கள் நீங்குமாறு (தான் கற்றவற்றைச்) சொல்லுதல்.
எழுத்து அறிவிப்போன் கற்ற கல்விக்கு அழகாவது,தான் கற்றவற்றைக் கேட்போருடைய குற்றம் அறும்படியாகச் சொல்லுதல்.
இதற்குக் காரணம்,
"இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர், தாம் கற்றது
உணர விரித்து உரையாதார்"
என்று நாயனார் அருளிய திருக்குறள் ஆகும். தாம் கற்றவற்றை மற்றவர் உணரும்படி, தெளிவாக விளக்கிச் சொல்லாதவர், கொத்தாக ஒருமுறையில் மலர்ந்து இருந்தும் மணம் வீசாத மலரைப் போன்றவர் என்கின்றார் நாயனார்.
"கற்க கசடு அற" என்றார் திருவள்ளுவ நாயனார். "கசடு" என்னும் சொல்லுக்கு, குற்றம், அழுக்கு, மாசு, ஐயம் திரிபு ஆகிய குற்றங்கள்,குறைவு என்பன பொருள்கள். "கசடு அறக் கற்றலாவது", விபரீத ஐயங்களை நீக்கி,மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல் என்றார் பரிமேலழகர். அதாவது, அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் உணர்த்தும் நூல்களை அன்றி, சிற்றின்பம் தரும் நூல்களை ஒருவன் பயிலுதல் கூடாது. உயிர்கள் தமது வாழ்நாளில் சிலவே பிழைத்து இருப்பன. அவற்றுள்ளும், பல,நோய்களை அடைந்து துன்றுபுவனவாக உள்ளன. உயிர்களுக்குச் சிற்றறிவும் உள்ளதால், சிற்றின்பத்தைப் பயக்கும் நூல்களில் மனம் செல்லுமாயின், கிடைத்தற்கு அரிய வாழ்நாள் பயனற்றுக் கழிந்து, பிறப்பின் பயனை அடைய முடியாமல் போகும்.
"அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே" என்று நன்னூல் கூறும். அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்களைப் பயக்கும் நூல்களையும் ஆசிரியரிடத்தில் கற்குங்காலையில், நூல்களின் பொருளை ஒன்றை மற்றொன்றாக எண்ணிக் கொள்ளுகின்ற விபரீதமும், இதுவோ அதுவோ என்னும் ஐயப்பாடும் நீக்கி, உண்மைப் பொருளை உணர்ந்து, உணர்ந்த வழியில் நிற்கின்ற பலரோடும் பல காலமும் பழகி வந்தால்,உள்ளத்தில் உள்ள கசடு (குற்றம்) அகலும்.
"அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது,
உலகநூல் ஓதுவது எல்லாம்,- கலகல
கூஉந் துணை அல்லால்,கொண்டு தடுமாற்றம்
போஒந் துணை அறிவார் இல்". ---நாலடியார்.
இதன் பொருள் ---
அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது உலகநூல் ஒதுவது எல்லாம் --- அளவமைந்த கருவிக் கல்வியினால் ஞானநூல்களைக் கற்று மெய்ப்பயன் பெறாமல் உலக வாழ்வுக்குரிய பொருள் தன்மை சார்ந்த நூல்களையே எப்போதும் ஓதிக் கொண்டிருப்பது, கலகல கூவும் துணை அல்லால் --- கலகல என்று இரையும் அவ்வளவே அல்லால்,கொண்டு தடுமாற்றம் போம் துணை அறிவார் இல் --- அவ் வுலக நூல்களால் பெற்ற நூலறிவு கொண்டு பிறவித் தடுமாற்றம் நீங்கு முறைமையை அறிகின்றவர் எங்கும் இல்லை.
"இற்றைநாள் கற்றதும் கேட்டதும்போக்கிலே போகவிட்டுப்பொய் உலகன் ஆயினேன், நாயினும் கடையான புன்மையேன்"என்றும், "ஆடித் திரிந்து நான் கற்றதும் கேட்டதும் அவலமாய்ப் போதல் நன்றோ?" என்றும் இரங்கிய தாயுமான அடிகளார் பாடி அருளிய பாடல்களின் கருத்தினை உள்ளத்து இருத்துதல் வேண்டும்.
"கற்றதும் கேட்டதும் தானே ஏதுக்கு ஆக?
கடபடம் என்று உருட்டுதற்கோ?கல்லால் எம்மான்
குற்றம் அறக் கைகாட்டும் கருத்தைக் கண்டு
குணம் குறி அற்று இன்பநிட்டை கூட அன்றோ?"
என்றார் தாயுமான அடிகளார்.
இதன் பொருள் ---
மெய்யுணர்வு நூல்களாகிய ஞான நூல்களைக் கற்றலும், நூற்பொருளை நல்லார் வாயிலாகத் தெளியக் கேட்டலும் எதன் பொருட்டு என்று நன்கு ஆராய்ந்தால்,ஆருயிர்கள் உய்தி பெறும் பொருட்டே ஆகும். பிறரொடு சொற்போராகிய கடம், படம் என்று உருட்டும் தர்க்கம் புரிவதற்கு அல்ல. கல்லாலின் நீழலில் எழுந்தருளும் எம்மான், உயிருக்கு உள்ளஆணவமலக் குற்றமும், அதனால் வரும் இருவினையும், வினையால் ஏற்படும் பிறப்பும், பிறப்பின் நிலைக்களமாகிய மாயையும் அறவே நீங்கும் பொருட்டு அறிவடையாளம் எனப்படும் சின்முத்திரை வடிவமாகத் திருக்கை காட்டி அருளினான். திருவருளால் அத் திருக்குறிப்பினை உணர்ந்து மாயாகாரியக் குணம்குறிகள் நீங்கிய சிவத்தொடுங் கூடி, ஒடுங்கும் சிவயோக நிட்டையினைப் பெற்று இன்புறுதற்குத் தான்.
"கன்று மனத்துடன் ஆடு தழை தின்றாற்போல்
கல்வியும் கேள்வியும் ஆகிக் கலக்குற்றேனே".
என்கின்றார் தாயுமான அடிகளார்.
இதன் பொருள் ---
வருந்திய மனத்துடன் ஆடு தழை தின்னும் தன்மைபோல் ஒருவரிடத்தே முற்றும் கற்கும் நிலைமை இல்லாதவனாய், அரைகுறையாகக் கற்றலும், செவிச் செல்வமாகிய அரும்பெருங் கேள்வியினைக் கேட்டல் இல்லாமையும் ஆகிய குறைபாடுடையனாய் அடியேன் மனக் கலக்கத்தை அடைந்தேன்.
ஆடு ஒரு செடியிலே தழை நிறைந்திருந்தாலும் வயிறு நிறைய மேயாது; செடிதோறும் போய் மேய்தல்" அதன் இயல்பு. இது கடை மாணாக்கர்க்கு ஒப்பு.
அன்னம் ஆவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடம் ஆடு எருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமாணாக்கர்.
என்னும் நன்னூல் சூத்திரம் காண்க.
நிரம்ப நூல்களைக் கற்றுப் பட்டம், பதவி, பொன் பொருள் படைத்து இருப்பதால் மட்டுமே உள்ளத்தில் உள்ள கசடு அறாது. நூல்களைக் கற்றதன் பலனாகத் தமது உள்ளத்தில் உள்ள குற்றங்களை அறுத்து, நன்னெறியில் ஒழுகுவோரே, தாம் கற்றவற்றைஐயம் திரிபு இன்றியும், திருத்தமாகவும் பிறருக்குச் சொல்லவேண்டும் என்னும் கருத்து இதன் மூலம் வலியுறுத்தப்பட்டது.
குருடன் ஒருவன் இன்னொரு குருடனுக்கு வழிகாட்ட முடியாது. அதுபோலவே, தனது உள்ளத்தில் கசடு மண்டிக் கிடக்கின்ற ஒருவன், பிறன் ஒருவனது உள்ளத்தில் உள்ள கசட்டினைப் போக்க முடியாது.தனது உள்ளக் கசடு அற்றவன்தான், பிறரது கசடு அறுமாறு சொல்லுதல் வேண்டும்.
கசடு அற மொழிய வேண்டிய நல்லாசிரியர் இயல்பு குறித்து, "அறப்பளீசுர சதகம்" என்னும் நூல் கூறுமாறு காண்க.
"வேதாந்த சித்தாந்த வழிதெரிந்து, ஆசார
விவரம், விஞ்ஞான பூர்ணம்,
வித்யா விசேடம், சற்குணம், சத்ய சம்பன்னம்,
வீர வைராக்யம், முக்ய
சாதார ணப்பிரியம், யோக மார்க்க ஆதிக்யம்,
சமாதி நிஷ்டானு பவராய்ச்,
சட்சமய நிலைமையும், பரமந்த்ர பரதந்த்ர
தருமமும், பரச மயமும்,
நீதியின் உணர்ந்து, தத்துவ மார்க்கராய், பிரம
நிலைகண்டு, பாசம் இலராய்,
நித்தியானந்த சைதன்யராய், ஆசை அறு
நெறி உ(ள்)ளோர் சற்குரவர் ஆம்.
ஆதார மாய்உயிர்க்கு உயிராகி எவையும் ஆம்
அமல! எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!"
இதன் பொருள் ---
ஆதாரமாய், உயிர்க்கு உயிராகி எவையும் ஆம்ஙஅமல --- உலகு உயிர்க்கு ஆதாரமாய் நின்று, உயிர்களுக்கு எல்லாம் உயிராக நின்று, எவ்வகைப் பொருளும் ஆகி நிற்கும் தூய மலமற்ற பரம்பொருளே! எமது அருமை மதவேள் அனுதினமும் மனதில் நினைதரு --- எம் அருமை வாய்ந்த மதவேள் நாள்தோறும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
வேதாந்த சித்தாந்த வழி தெரிந்து --- வேதாந்த சித்தாந்த நெறிகளை ஆராய்ந்து அறிந்து, ஆசார விவரம் --- அந்த நெறிகளின்படி இருக்கவேண்டிய ஒழுக்கத் தெளிவு, விஞ்ஞான பூர்ணம் --- அந்த நெறிகளைப் பயின்றதால் வந்த மேலான ஞான நிறைவு, வித்தியா விசேடம் --- கல்விச் சிறப்பு, சற்குணம் --- நற்பண்புகள், சத்திய சம்பன்னம் --- உண்மையாகிய செல்வம், வீர வைராக்கியம் --- உறுதியான வீரம், முக்கியம் --- தலைமைப் பண்பு, சாதாரணப் பிரியம் --- எல்லோரிடமும் காட்ட வேண்டிய அருள் பண்பு, யோகமார்க்க ஆதிக்கியம் ---- யோக நெறியிலே மேன்மை, சமாதி நிஷ்ட அனுபவராய் --- இவைகளோடு, சமாதி கூடுதலில் பயிற்சி உடையவராய், சட்சமய நிலைமையும் --- அறுவகைச் சமயங்களின் உண்மையும், பரம தந்திர --- மேலான தந்திரம் என்பவற்றின் நிலையையும், பர தந்திர தருமமும் --- பிற சமய நூல்களிலை சொல்லப்பட்டுள்ள அறங்களும்,பரசமயமும் --- பிற மதங்களையும், நீதியின் உணர்ந்து ---- நெறிப்படி அறிந்து உணர்ந்து, தத்துவ மார்க்கராய் ---- உண்மை நெறியில் நிற்பவராகி, பிரம நிலை கண்டு --- மேலான பொருளின் நிலையை அறிந்து, பாசம் இலராய் --- பற்றுக்களில் இருந்து விடுபட்டவராய், நித்திய ஆனந்த சைதன்யராய் --- உண்மை அறிவு இன்ப (சச்சிதானந்த) உருவினராய், ஆசை அறு நெறியுளோர் --- பற்றற்ற நெறியில் நிற்பவரே. சற்குரவர் ஆம் --- நல்லாசிரியர் ஆவார்.
குறிப்பு --- இங்கு குறிப்பிடப்பட்டது உலக நூல் கற்பிக்கும் ஆசிரியரை அல்ல. உலக நூல் அறிவு மயக்கத்தை உண்டுபண்ணும். அறிவு நூல், அறிவைத் தெளிவித்து, பற்றற்ற நிலையைத் தந்து, உயிருக்கு ஆக்கம் என்று சொல்லப்படும் வீடுபேற்றை அளிக்கும். எனவே, ஞானாசிரியர், நல்லாசிரியரைக்குறித்து நின்றது இது.
"விலங்கொடு மக்கள் அனையர், இலங்கு நூல்
கற்றாரோடு ஏனை யவர்"
என்னும் திருக்குறள் கருத்து இங்கு வைத்து எண்ணத் தக்கது.
No comments:
Post a Comment