ஞானிகளும் கலைஞர்களும்

 


ஞானிகளும் கலைஞர்களும்

-----

 

     ஞானம் என்பதற்குப் பொதுவாக அறிவு என்று பொருள் கொண்டாலும்அது அபரஞானம்பரஞானம் என்று இருவகைப்படும். அபரஞானம் என்பதுகல்வி அறிவுகேள்வி அறிவு. உலகியல் அறிவு. பட்டறிவு என்னும் அனுபவ அறிவைப் பெறத் துணை புரிவது. 

     

     பரஞானம் என்பது  கடவுளைப் பற்றிய அறிவு. இறைவனை உணரும் நிலை. இதுவே உண்மை ஞானம் ஆகும். முத்தியை அடைவதற்கு உரிய சரியைகிரியையோகம்ஞானம் ஆகிய நான்கு பாதங்களில் தலைசிறந்தது ஞானபாதம்.

 

     கலை என்னும் சொல்லுக்கு கல்விசாத்திரம்நூல்ஆடை என்றும் பொருள்கள் உண்டு. கலைகள் அறுபத்து நான்கு எனப்படும்.. கலைஞன் கலைகளில் வல்லவன். கலைஞானம் என்பது நூலறிவு. கலைத்தல் என்னும் சொல்லுக்குகுலைத்தல்நீக்கல்பிரித்தல்ஓட்டுதல் என்பன பொருள்கள். உயிரினது அறிவில் இயல்பாகவே உள்ள அறியாமையைக் கலைத்துஅறிவை நிரப்புவதால் "கலை" என்று சொல்லப்பட்டது.

 

     கலைகளில் வல்லவர்கள் ஞானிகள். கலைஞன் ஞானி இல்லை. ஞானி தன் அளவில் அநுபவத்தைப் பெற்றிருக்கிறான். கலைஞன் தான் பெற்ற அறிவைப் பிறருக்கும் பயன்படச் செய்கிறான். ஒரு சாலை வழியே போகும்போது சப்பாத்திப் புதரைப் பார்த்தால் நாம் வெறுக்கிறோம்ரோஜாச் செடியைக் கண்டால் மகிழ்கிறோம். ஞானிகளுக்கு ரோஜாச் செடியைப் பார்க்கும்போதும்சப்பாத்தி முள்ளைப் பார்க்கும்போது வெறுப்போ மகிழ்வோ உண்டாவதில்லை. கலைஞன் ரோஜாச் செடியையும் மகிழ்வோடு பார்க்கிறான்சப்பாத்தியையும் மகிழ்வோடு பார்க்கிறான். இரண்டையும் சித்திரமாக எழுதுகிறான். பாடவும் செய்கின்றான். ஞானி விருப்பு வெறுப்பு இல்லாத நிலையில் இருந்து பார்த்தால்கலைஞன் மகிழ்ச்சி என்ற நிலையில் இருந்து பார்க்கிறான். கலைஞன் ஓதி உணர்பவன். ஞானி ஓதாதே உணர்ந்தவர்.

 

     திருஞானசம்பந்தப் பெருமான் ஞானகலை உடையவர். "உவமை இல்லாக் கலைஞானம்உணர்வு அரிய மெய்ஞ்ஞானம்” ஆகியவற்றைப் பெற்றார் திருஞானசம்பந்தர் என்று அறிவிக்கின்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான். சீர்காழியில்பிரமதீர்த்தக் குளக்கரையில்திருஞானசம்பந்தப் பிள்ளையார் அழுதபோதுசிவபெருமான் பணிக்கஉமாதேவியார் தனது துணைமுலைகளில் பொழிகின்ற பால் அடிசிலைபொன் கிண்ணத்தில் கறந்துஎண்ணரிய சிவஞானத்து இன்னமுதத்தை அதில் குழைத்துஉண்பாயாக என்று கொடுத்தார். அந்த ஞானப் பாலைக் குடித்த மாத்திரத்தில்,அவரிடத்தில் ஞானம் வெள்ளமாகப் பொங்கியது. அது வெறும் ஞானம் அல்லகலைஞானத்தோடு கலந்த மெய்ஞ்ஞானம். தெய்வச் சேக்கிழார் பாடுகின்றார்...

 

"சிவனடியே சிந்திக்கும்திருப்பெருகு சிவஞானம்,

பவம் அதனை அறமாற்றும்பாங்கினில் ஓங்கிய ஞானம்,

உவமை இல்லாக் கலைஞானம்உணர்வு அரிய மெய்ஞ்ஞானம்

தவமுதல்வர் சம்பந்தர்தாம்உணர்ந்தார் அந்நிலையில்"

 

     திருஞானசம்பந்தப் பெருமான் இப்படி கலைஞானம்மெய்ஞ்ஞானம் ஆகியவற்றை ஒருங்கே பெற்றதால்அளவில்லாத இன்பத்தைத் தாம் அனுபவித்ததோடு நில்லாமல், "நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்னும் நிலையில் எல்லோருக்கும் அந்த இன்பத்தை அவரவரது நிலைக்கு ஏற்ப அளித்ததால்ஞானாசிரியராகத் திகழ்ந்தார். வழிவழியாக வந்துகொண்டே இருக்கும் மனித சமுதாயம்தமது காலத்திற்குப் பிறகும் படித்துப் பயனுற்றுஞானம் எய்துவதற்குத் தக்க தேவாரத் திருப்பதிகங்களைத் தமிழில் வெள்ளமாகப் பொழிந்தார். 

 

     மூன்று வயது முதலே  இறைவன் மீது பலப்பல திருப்பதிகங்களைப் பாடிக்கொண்டு ஒவ்வொரு திருத்தலமாக வழிபட்டு வந்தார் திருஞானசம்பந்தர். அந்தக் காலத்தில் சென்னையின் ஒரு பகுதியாக இப்போது உள்ள மயிலாப்பூரில் சிவநேசர் என்ற பெயருடைய ஒரு செட்டியார் இருந்தார். சிவபெருமானிடத்தில் உண்மையான அன்பு பூண்டு சிவனடியார்களிடத்தில் மிக்க அன்பு உடையவராக இருந்தார். அவர் ஆளுடைய பிள்ளையார் ஆகிய திருஞானசம்பந்தரின் வரலாற்றைக் கேள்வியுற்று அவரைக் காணவேண்டும்அவருக்குத் தம்முடைய பெண்ணாகிய பூம்பாவையை மணம் செய்து கொடுக்கவேண்டும் என்ற ஆசை உடையவராக இருந்தார்.  மூன்று வயதிலே திருத்தல யாத்திரையைத் தொடங்கிய திருஞானசம்பந்தப் பெருமான்பதினாறு ஆண்டு நிரம்பப் பெறும் போது தொண்டை நாட்டுக்கு வந்தார். 

 

     இங்கே சிவநேசச் செட்டியாரின் தவப்புதல்வி ஆகிய பூம்பாவை ஒருநாள் பூக் கொய்யும்போது பாம்பு தீண்டியதால் மாண்டு விட்டாள். 'சீகாழிப் பிள்ளையாருக்கு இவளைக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கஇப்படி இறந்து போய்விட்டாளே! திருஞானசம்பந்தப் பெருமானுக்கு உரிய பொருளை நான் இப்பொழுது எவ்வாறு ஒப்படைப்பது'  என்று வருந்திய சிவநேசர், தமது மகளின் பருவுடலை எரித்தசாம்பலையும்எலும்புகளையும் ஒரு குடத்தில் இட்டுஅக் குடத்திற்கு நாள்தோறும் வழிபாடு செய்து வந்தார். 

 

     திருஞானசம்பந்தப் பெருமான் திருவொற்றியூர் என்னும் திருத்தலத்துக்கு எழுந்தருளி உள்ளதைக் கேள்வியுற்ற சிவநேசர் அப்பெருமானை எதிர் சென்று திருமயிலைக்கு அழைத்து வந்துநடந்த வரலாறுகளைச் சொன்னார். திருஞானசம்பந்தப் பெருமான் பணிக்கசாம்பலையும்எலும்புகளையும் வைத்திருக்கும் குடத்தை அவர் முன் கொண்டு வந்தார். சிவநேசரின் அன்பு தம் உள்ளத்தைத் தொட்டு விட்டதால்திருஞானசம்பந்தர் அதை ஏற்றுக்கொண்டார். பலரும் அப்பானையைக் காணுமாறு கோயிலுக்குப் புறம்பே ஓரிடத்தில் வைத்துஉள்ளம் உருக, "மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலைஎன்னும் திருப்பதிகத்தைத் தொடங்கி, 'போதியோ பூம்பாவாய்என்று ஒவ்வொரு பாட்டும் முடியும்படி பாடினார். 

 

     அப்பாட்டைக் கேட்ட பூம்பாவையின் எலும்புகள் ஒன்றுகூடி அழகான பெண் உருவாயின. திருமயிலையிலே ஆண்டுதோறும் முழங்கை வழியே நெய் வார அடியார்களுக்கு அன்னமிட்டுக் கொண்டாடும் விழாக்கள் பல நடந்து வந்தன. அவ்விழாக்களை எல்லாம் கண்டுகளிக்காமல் நீ போகிறாயோ பூம்பாவையே!"என்று திருஞானசம்பந்தப் பெருமான் பாடினார்.

 

     திருஞானசம்பந்தர் இறைவனை விளித்துப் பாடி இருக்கிறார். மக்களை நோக்கிப் பொதுவாகப் பாடியும் இருக்கின்றார். நெஞ்சுக்கு அறிவுறுத்தலாகவும் பாடி இருக்கிறார். தனிப்பட்டவர்கள் யாரையும் குறித்துப் பாடியதில்லை. மதுரையம்பதியில்பாண்டிமாதேவியாக  இருந்த மங்கையர்க்கரசியாரையும்முதலமைச்சராக இருந்த குலச்சிறை நாயனாரையும் குறித்துப் பாடி இருக்கிறார். அடுத்துப் பூம்பாவை குறித்துப் பாடி இருக்கிறார். திருஞானசம்பந்தப் பெருமான் விளித்துப் பாடும் பெரும்பேற்றினைப் பெற்றவர்கள் இவர்கள் மூவரும்.

 

     அவர் பாடினவுடனே அந்தப் பருவத்திற்கு ஏற்ற வளர்ச்சியோடு முட்டையிலிருந்து குஞ்சு வெளிவருவது போலத் திருஞானசம்பந்தப் பெருமான் முன் நின்றாள் பூம்பாவை. அவளைக் கண்டவுடனே சிவநேசருக்கு ஆனந்தம் பொங்கிற்று. 'இறந்துபோன என் பெண் தங்களுடைய திருவருளினால் உயிர்பெற்று மீண்டும் எழுந்து விட்டாள். இவளைத் தாங்களே திருமணம் செய்து கொண்டு அருளவேண்டும்என்று திருஞானசம்பந்தப் பெருமானுடைய திருவடிகளில் வீழ்ந்து இறைஞ்சினார். 

 

     'நீர் பெற்ற பெண் அப்பொழுதே பாம்பு கடித்து இறந்து விட்டாள். இந்தப் பெண்ணை நான் இப்பொழுது பெற்றேன். இவளுக்கு நான் இப்போது தந்தை.  நான்  இவளை மணம் செய்துகொள்வது முறை ஆகாது என்றார் திருஞானசம்பந்தர். அவருக்கு வயது அப்போது பதினாறு. நல்ல காளைப் பருவம். திருமணம் செய்துகொள்வதற்கு உரிய பருவம். இந்தக் காலத்தில் இத்தகைய வயதும்புகழும் உடைய எவனாவது நல்ல அழகான பெண்ணைப் பார்த்தால் வேண்டாம் என்று சொல்வானாஇறைவியின் திருவருளாலே ஞானகலை பெற்ற பெருமான் திருஞானசம்பந்தர். ஆதலால்அழகு ஓவியமாகத் தம் முன் நின்ற பூம்பாவையின் எழில் வண்ணத்தை அவர் காணவில்லை. அவளைக் கண்டபோது காமம் உண்டாகவில்லை. இதைத் தெய்வச் சேக்கிழார் பெருமான் அழகாகச் சொல்கிறார். 

 

     இங்கே பதினாறு வயதினர் ஆன திருஞானசம்பந்தப் பெருமான் பூம்பாவையைப் படைத்தார். எண்ணிலாத ஆண்டுகளாகப் படைப்பதையே தன் தொழிலாகக் கொண்ட முதியவனும் வேதம் உணர்ந்தவனுமாகிய பிரமதேவனும் அழகு தேவதையாகத் திலோத்தமை என்னும் ஒரு பெண்ணைப் படைத்தான். படைத்தவுடனேஅவளது எழிலின் வண்ணத்தைத் தன்னுடைய நான்கு முகங்களாலும் பார்த்தான். அவனுக்கு வயசு என்ன கொஞ்சமாபல்லாயிரம் ஆண்டுகள் சென்ற கிழவன்அதோடு வேதம் சொல்கிறவனும் கூட. உலகமே அவனை "வேதா" என்று கொண்டாடுகிறது. தான் படைத்த படைப்பைத் தன்னுடைய பெண்ணாகப் பார்க்கும் ஞானம் பிரமனுக்கு இல்லை. அவள் எழிலின் வண்ணத்தைக் கண்டு மகிழ்ந்தான். ஆனால் திருஞானசம்பந்தரோ பதினாறு வயது நிரம்பப் பெற்ற அழகுக் காளை. இவரது படைப்புப் பூம்பாவை. பிரமன் தன் படைப்பை எப்படிக் கண்டான்கலை ஞானம் உண்ட ஞானசம்பந்தர் தமது கட்டிளங்காளைப் பருவத்தில் தம் படைப்பை எப்படிக் கண்டார் என்பதைத் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள் சொல்கிறார். 

 

"எண்ணில் ஆண்டு எய்தும் வேதாப் 

     படைத்தவள் எழிலின் வண்ணம் 

நண்ணுநான் முகத்தால் கண்டான்

     அவளினும் நல்லாள் தன்பால் 

புண்ணியப் பதினா றாண்டு 

     பேர்பெறும் புகலி வேந்தர் 

கண்ணுதல் கருணை வெள்ளம் 

     ஆயிரம் முகத்தால் கண்டார்."

 

     எண்ணில் அடங்காத வயதுள்ள பிதாமகன்தான் படைத்த பெண்ணின் எழிலின் வண்ணத்தைக் கண்டான்தன்னால் படைக்கப்பட்டவளை  அவன் அழகுப் பிழம்பாகப் பார்த்தான். ஆனால் திருஞானசம்பந்தப் பெருமான் பூம்பாவையைப் படைத்தார். பூம்பாவை திலோத்தமையைக் காட்டிலும் நல்லாள். எப்படி நல்லவள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டுமானால் தமிழ் நூல்களைப் பார்க்க வேண்டும். தன்னைப் பார்க்கிறவர்களுக்குத் தீய எண்ணம் உண்டாகாமல் தோன்றுபவள் நல்லவள். திலோத்தமை மற்றத் திறத்தில் நல்லவளே. ஆனால் அவள் உருவம் பிரமதேவன் கண்ணிலே பட்ட மாத்திரத்தில் ஆசை அவனுக்கு மூண்டதால் அழகு வெள்ளத்தைக் கண்டான். பூம்பாவையின் உருவமோ திருஞானசம்பந்தப் பெருமான் உள்ளத்தில் காம எழுச்சியை உண்டாக்கவில்லை. பிறர் நெஞ்சு புகாத கற்பு என்று இதைச் சொல்வார்கள். அங்கே நான்கு முகம். இங்கே ஆயிரமுகம். பூம்பாவை எழுந்தாள். அவள் அழகு திருஞானசம்பந்தப் பெருமான் உள்ளத்தில் கலக்கத்தை உண்டாக்கவில்லை. 

 

     திலோத்தமையைப் படைத்தவன் பிரமன். இங்கே திருஞானசம்பந்தப் பெருமான் பூம்பாவையைச் சிவபெருமானின் அருளினால் படைத்தார். ஆகவேஇது மூலப் படைப்பு. பிரமன் படைப்பாகிய திலோத்தமையை விடச் சிவபெருமான் அருளால் படைக்கப்பெற்ற பூம்பாவை பின்னும் நல்லவள் என்பதில் ஐயம் எழ வாய்ப்பு இல்லை.

 

     அவளைப் புண்ணியப் பதினாறு ஆண்டு பேர்பெறும் புகலி வேந்தர் ஆகிய திருஞானசம்பந்தர் கண்டார். உமையம்மையின் திருக்கரத்தால் கலைஞானம் ஊட்டப் பெற்றவர் திருஞானசம்பந்தர். ஆகவே, தம் முன் நின்ற பூம்பாவையின் எழிலை அவர் காணவில்லை. தாம் படைத்த படைப்பின் ஆற்றலையும் அவர் காணவில்லை. காமமும் இல்லை ஆணவமும் இல்லை. பிரமன் தன்னால் படைக்கப்பட்டதிலோத்தமையைப் பார்க்கும் போது இரண்டு விதமான உணர்ச்சி ஏற்பட்டிருக்கலாம். அவள் எழிலைப் பார்ப்பதனாலே காமம் உண்டாகி இருக்கலாம்அல்லது நாம் படைத்தோம் என்ற நினைப்பினாலே அகங்காரம் முளைத்திருக்கலாம். 

 

     திருஞானசம்பந்தர் ஆண்டவனுடைய கருணையினால் எல்லோரும் மகிழும்படியாகப் பூம்பாவை உயிர் பெற்றாள் என்று இன்புற்றார். ஆண்டவன் கண்ணுதல். ஞானக் கண்ணை நெற்றியில் கொண்டவன். அவன் அருளில் காமத்துக்கு இடம் இல்லை. அந்த நெற்றிக்கண் காமனை எரித்தது ஆயிற்றே.  ஞானம் காமத்தையும் அகங்காரத்தையும் தோன்றாமல் செய்து விட்டது. புறக் கோலத்தைப் பாராமல் ஞானக் கண்ணால் இறைவன் திருவருளைப் பூம்பாவையின் வடிவத்தில்தமது ஒரு திருமுகத்தால் திருஞானசம்பந்தர் கண்டதைஆயிரம் முகத்தால் கண்டார் என்கின்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான். திருஞானசம்பந்தப் பெருமானுக்கு இறைவன் திருவருள் கருணையின் திறத்தை நோக்க ஒரு முகம் போதாது. ஆயிரம் முகம் வேண்டும். "செங்கோட்டு வேலனைக் கண்டு தொழ நாலாயிரம் கண் வேண்டும்" என்றார் அருணகிரிநாதப் பெருமான். தன் எட்டுப் புறக் கண்களால் பிரமன் பார்த்தது அழகு வெள்ளத்தை. ஆனால் கலைஞானம் உடைய திருஞானசம்பந்தரோ ஒரு முகம் உடையவர்தான் என்றாலும்தமது ஞான உள்ளத்திலே முளைத்த ஆயிரம் முகங்களைக் கொண்டு கண்டது இறைவன் கருணை வெள்ளத்தை. "அவள் என் மகள் என்று கூறி அப்பெண்ணை மணக்க மறுத்தார். பெண்களைக் காண்பதால் காமவிடாய்ப் படுகிறவர்கள் ஞானம் இல்லாதவர்கள். அப்பெண்களின் விழிகாமவிடாய் கொண்டவர்களின் உயிரைத் திருகிப் பருகிப் பசி தணிக்கும். ஞானகலை பெற்ற ஞானிகளோ அவர்களைத் தங்கள் குழந்தை போலப் பார்த்துவிடுகிறார்கள். காமம் உண்டாக வழி இல்லை.

 

     உள்ளத்தில் தோன்றினால் எளிதில் அவிக்க முடியாதது காமம். விடம் உண்டாரைக் கொல்லும். காமம் கொண்டாரை நரகத்திலே தள்ளும். உயிருக்குப் பிறவித் துன்பத்தைத் தருவனகாமம்முதலாகிய மூன்று குற்றங்கள். காமத்தால் தோன்றுவன  வெகுளிமயக்கம் என்னும் இரண்டு குற்றங்கள். இவற்றை அகற்றவேண்டும்.


     உயிருக்கு அநாதியாக உள்ள அஞ்ஞானமும்அது பற்றி உடம்பை நான் என மதிக்கும் அகங்காரமும்அது பற்றிஎனக்கு இது வேண்டும் என்னும் அவாவும்அது பற்றிபொருளினிடத்துச் செல்லும் ஆசையும்அவ்வாசை ஈடேறாதபோதுஉண்டாகும் கோபமும் எனக் குற்றங்கள் ஐந்து. 


       அறிவினால் உண்டாகும் குற்றம்உடம்பால் உண்டாகும் குற்றம் என்று இரண்டாக வைத்துபுந்திக் கிலேசம்காயக் கிலேசம் என்று வைத்தார் அருணகிரிநாதப் பெருமான். திருவள்ளுவ நயானார் மூன்றாக வகுத்தார். அகங்காரம் அஞ்ஞானத்தில் அடங்கும். ஆவா ஆசையில் அடங்கும். அடங்கவேகாமம்வெகுளிமயக்கம் எனக் குற்றங்கள் மூன்று என்று கொள்ளப்பட்டது. 

            இடையறாத ஞானயோகங்களின் முன்னர்இக் குற்றங்கள் யாவும் தீயின் முன்னர் பஞ்சு அழிவது போல் அழிந்தொழியும் என்றார். ஞானயோகத்தைச் சொல்லவேபத்தியோகமும் கொள்ளப்படும். தமிழர் சமயநெறி இரண்டு பிரிவுகளை உடையது. ஒன்று அறிவு நெறிமற்றது அன்பு நெறி. இதனை வடநூலார் ஞானமார்க்கம்பத்திமார்க்கம் என்பர். இவ்விரண்டும் ஒன்று கூடியது சன்மார்க்கம். இறைவனைச் சிவன் எனத் தேறிஅவன் அன்பு வடிவினன்அறிவு வடிவினன் என்று கொண்டதும் அவ்வாறே. திருவள்ளுவ நாயானர் "வாலறிவன்" என்றது காண்க. 

            இவ்வுண்மை கண்ட நமது சான்றோர்இரண்டையும் பிரிக்கமுடியாதகுணகுணியாக்கிஅம்மையப்பனாக வழிபடக் காட்டினர். அம்மை அருள் வடிவம். அப்பன் அறிவு வடிவம்.

            எனவேபத்தியோகத்தாலும் உயிருக்கு உள்ள முக்குற்றங்களும் அற்றுஇறையருளைப் பெறமுடியும் என்பது தெளிவாகும். திருநாவுக்கரசு நாயனாரின் நிலைமையை உலகுக்குக் காட்டத் திருவுள்ளம் பற்றிய சிவபெருமான்நாயனார் திருப்புகலூரில் இருக்கும் காலத்தில்புல் செதுக்கும்போதுஉழவாரப் படை நுழைந்த இடம் எல்லாம் பொன்னும் நவமணிகளும் பொலிந்து இலங்கும்படிச் செய்தார். அப்பர் பெருமான் அவற்றைப் பருக்கைக் கற்ளாக எண்ணிஉழவாரப் படையில் ஏந்திஅருகில் இருந்த குளத்தில் எறிந்தார்.புல்லோடும்கல்லோடும்பொன்னோடும்மணியோடும்சொல்லோடும் வேறுபாடு இல்லாத நிலையில் நின்றார். அதற்குமேல்ஆண்டவன் அருளால் தேவதாசிகள் மின்னுக்கொடி போலவானில் இருந்து வந்து ஆடல்பாடல் முதலியவற்றால்,சுவாமிகளின் நிலையைக் குலைக்க முயன்றார்கள். சுவாமிகளின் சித்த நிலை சிறிதும் திரியவில்லை. திருத்தொண்டில் உறுதிகொண்டு, "பொய்ம்மாயப் பெருங்கடலுள் புலம்பா நின்ற புண்ணியங்காள்தீவினைகாள்" என்று தொடங்கும் திருத்தாண்டகத்தைப் பாடி அருளினார். தேவதாசிகளும் சுவாமிக்குச் சிவமாகவே கணப்பட்டார்கள். அவர்கள் சுவாமிகளை வணங்கி அகன்றார்கள். "கேடும் ஆக்கமும் கெட்ட திருவினராகவும்ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் அருளாளராகவும்" அப்பர் பெருமான் விளங்கினார். பத்திநெறியில் நின்ற நாயனாரிடத்துகாமவெகுளிமயக்கம் ஆகிய முக்குற்றங்களும் அடியோடு ஒழிந்தன.

 

காமம்வெகுளிமயக்கம் இவை மூன்றன்

நாமம் கெடகெடும் நோய்.        

 

என்பது திருவள்ளுவ நாயனாரின் பொய்யாமொழி.

No comments:

Post a Comment

கச்சித் திரு அகவல்

பட்டினத்து அடிகளார் அருளிய கச்சித் திரு அகவல் திருச்சிற்றம்பலம் ----- திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து ...