பிறப்பும் இறப்பும் அற்ற பெருநிலை வேண்டும்
-----
சாத்திர நூல்களை நன்றாகப் படித்து விட்டு, ஆன்மா என்பது என்ன? இறைவன் யார்? அவனுடைய குணங்கள் என்ன?என்பவற்றை அறிந்து கொள்வதும் அறிவுதான். இது எழுத்துக் கூட்டிப் படிக்கிற குழந்தைகளின் அறிவைப் போன்றது. எழுத்துக் கூட்டிப் படித்துவிட்டாலும் குழந்தைக்கு தான் படித்த நூலின் சுவையைத் அனுபவிக்க முடியாது. நூலறிவு நுண்ணறிவாக மாறவேண்டும். நுண்ணறிவு என்பது அனுபவ அறிவு அல்லது பட்டறிவு ஆகும். அனுபவ அறிவைப் பெற வேண்டுமானால் முயற்சி வேண்டும். நம் முன்னோர்கள் காட்டிய வழியைப் பின்பற்ற வேண்டும். அந்த வழிதான் பத்திநெறி. அதுவே முத்திக்கு நெறியாகும். அனுபவத்தைப் பெறுவதற்கு உரிய நம்பிக்கையை அளித்து, அனுபவத்தை உண்டாக்கி, அதனால் ஏற்படுகின்ற இன்பத்தை அனுபவித்து ஆனந்திக்கும்படி தேவார திருவாசகம் முதலாகிய அருள்நூல்கள் அமைந்து உள்ளன.
ஒருவன் அடைகிற இன்பத்தைப் பார்த்து, அதை அடைய வேண்டுமென்று நினைப்பது மனித இயல்பு. ஒருவன் ஒரு செயலைச் செய்து துன்புற்றால், நாமும் துன்புறும்படி நேரும் என்று அஞ்சி அச் செயலைத் தவிர்க்கின்றோம். அருளாளர்கள் தம்முடைய பாடல்களில் தமக்குத் கிடைத்த இன்ப அனுபவங்களை மாத்திரம் சொல்லியிருந்தால், அவற்றைப் படிக்கும்போது நாம் வியப்படைவதோடு நிற்போம். தம்முடைய பாடல்களில் தம்மிடத்து இருந்த பலவிதமான குறைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, "அப்படி இருந்த நான் இத்தகைய இன்பங்களைப் பெறும்படி செய்தாயே!” என்று இறைவனைப் பார்த்துச் சொல்லும்போது, நாமும் அவர் கூறியுள்ள குறைபாடுகள் எல்லாவற்றையும் உடையவர்களாக இருப்பதனால், "நாமும் அவர் முதலில் இருந்தது போலத்தானே இருக்கிறோம்? அவர் சொல்கிறபடி இறைவனை வழிபட்டால் அவர் அனுபவித்த இன்ப நலங்களை நாமும் பெறலாமே!" என்கிற நம்பிக்கை நமக்கு எழுகிறது. நம்பிக்கையை அடுத்து முயற்சியும் உண்டாகிறது.
தோத்திர நூல்களில் இறைவன் புகழ் மாத்திரம் இராது. அர்ச்சனையும் இருக்கும். குறைபாடுகளைச் சொல்லி வருந்துவதும் இருக்கும். சாத்திர நூல்களில் இறைவனின் இயல்பும் தத்துவங்களின் இலக்கணமும் இருக்கும். அருளாளர்களின் பாடல்களில் உயர்ந்த நிலையில் இருப்பார்களுக்கு ஏற்ற பொருள்களும் இருக்கின்றன. மிகவும் இழிந்த நிலையில் உள்ளவர்களையும் மேல் நிலைக்கு உயர்த்துவதற்கான வழிகளும் இருக்கின்றன.
வெறும் சாத்திரம் மாத்திரம் படித்தவன், பூகோள ஆசிரியரைப் போன்றவன். ஒரு ஊருக்குப் போகாமலேயே அந்த ஊரைப் பற்றியும், அங்குள்ள மலைகள், நதிகள் முதலானவற்றைப் பற்றியும் சொல்லிக் கொடுப்பவர் பூகோள ஆசிரியர். பூகோளப் பாடம் என்னவென்று அறியாத ஒருவன், ஒரு ஊருக்குச் சென்று அங்கு உள்ளவற்றை எல்லாம் நேரில் பார்த்து வந்து, பூகோள ஆசிரியரிடம் சொன்னால், அப்படித்தான் பூகோள நூலும் சொல்வதாகவே பூகோள ஆசிரியர் சொல்லுவார். ஆனால், பூகோள ஆசிரியர் உண்மையில் பார்த்து அறிந்து அனுபவித்தவர் இல்லை. பூகோளப் பாடத்தில் ஒருக்கால் பிழை இருந்தாலும், நேரில் பார்த்து வந்தவனால் திருத்தமுடியும்.
அருளாளர்களின் அருட்பாடல்களில் சாத்திர அறிவோடு, அதை அறிந்து அனுபவித்த உண்மை அறிவும் புலப்படுவதைக் காணலாம். தமிழ் வேதமாகிய தோத்திரங்கள் சிறந்தவை என்று சொல்வதற்குக் காரணம் இதுதான். வேதங்களில் சொல்லியிருப்பவற்றை எல்லாம் தோத்திரம் சொல்கிறது. வேதத்தில் காணக் கிடைக்காத அனுபவ விடயங்களும் தோத்திரத்தில் இருக்கின்றன. அந்தத் தோத்திரத்தை யாரிடத்திலிருந்து பெறுகிறோமோ அவர்களுடைய சொந்த அநுபவங்களுக்கு ஏற்ப அது பின்னும் உயர்ந்திருக்கிறது.
நல்ல புலமை உள்ளவர்கள் பல பாடல்களைப் பாடலாம். அனுபவம் இல்லாத வெறும் புலமை உடையவர்கள் பாடிய பாடல்களை நாம் பாடும்போது நம் மனம் குழையாது. கரைந்து உருகாது. புலமை இல்லாவிட்டாலும் அனுபவ முதிர்ச்சி பெற்ற அருளாளர்களின் திருவாயிலிருந்து வரும் பாடல்களில் மனத்தை நெகிழ வைக்கும் தன்மை இருக்கும். அத்தகைய பாடல்களில் இலக்கண அமைதியும் பொருந்தி இருக்கும். இல்லாமல் இருந்தாலும் பிழை இல்லை.
ஒரு தமிழ்ப் புலவரைப் பார்த்து, ஓரு சின்னக் குழந்தை கேட்டது.'அப்பா, நாளைக்கு வந்தாரே ஒரு மாமா,அவர் நேற்று வருவாரா அப்பா?' என்று கேட்கிறது.'நாளைக்கு என்பது எதிர்காலம். நாளைக்கு வந்தாரே என்று இறந்த காலத்தில் சொல்வது பிழை. நேற்று என்பது இறந்த காலம். அதோடு வருவாரா என்று எதிர்கால வினை வருவது பிழை. "ஏன் பிழையாகச் சொன்னாய்?" என்று குழந்தையைக் கடிந்து கொள்வாரா அந்தப் புலவர்? அந்தக் குழந்தையை வெறுத்து ஒதுக்குவாரா? தம்முடைய குழந்தையின் மழலைச் சொல்லைக் கேட்டு மனம் உருகிப் போவார். அந்த இன்பத்தில் குழந்தையின் சொல்லில் பிழை காணமாட்டார்.
இப்படித்தான் ஞானிகள் தங்களுடைய அனுபவத்தை, "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்னும் நிலையில் அருட்பாடல்களாகப் பாடிச் சென்றார்கள். அவற்றை அப்படியே அனுபவிப்பதை விடுத்து, சில புலவர்கள் அருளாளர்களின் பாடல்களில் இலக்கண அமைதி காண்பதும், பாடபேதங்களைச் சொல்வதுமாக இருந்தார்கள். இப்போதும் இருக்கின்றார்கள். வெறும் நூலறிவு இதைத்தான் செய்யும்.
பக்திச் சுவை ததும்ப, அனுபவ முதிர்ச்சியை அள்ளிக் கொட்டும் அருட்பாடல்கள் அருளாளர்களின் அருளிச் செயல்கள். நம்மில் யாரும் அவர்கள் அளவுக்கு உயர்ந்து நின்றவர் இல்லை. நூல்களைப் பயின்று நாம் பெற்ற அறிவைக் கொண்டு பாடபேதம் காண்பது அறிவுடைமை ஆகாது.
தேவாரம்முதலிய அருட்பாடல்கள், சாத்திரங்களை விடச் சிறந்தவைஎனக் கருதுவதற்குக் காரணம், அவை நமது நெஞ்சத்தை நெகிழ வைக்கின்றன. அதற்குக் காரணம் அதைப் பாடியவர்கள் இறையருளைப் பரிபூரணமாகப் பெற்றவர்கள். ஓதாது எல்லாம் உணரப் பெற்றவர்கள். நாம் ஓதிய நூல்களைக் கொண்டு சிறிதளவு அறிவைப் பெற்று உள்ளோம். அது முழுமையான அறிவு, மெய்யறிவு அல்ல. அருட்பாடல்களைச் சொல்லும்போதே, 'நமக்கு அந்த நிலை வர வில்லையே!'என்னும் ஏக்கம் உண்டாகிறது. ஏங்குகிற இடத்தில் தான் நெகிழ்வு உண்டாகிறது. உருக்கம் அதற்கு அப்பால் உண்டாகும். ஏக்கம் வந்தால், உருக்கம் வரும். உருக்கம் உண்டானால் புலம்பல் வரும். அழுத பிள்ளை பால் குடிக்கும் என்பதுபோல், இறையருளை வேண்டி அழுதவர்கள், அவனருளைப் பெறுவார்கள். அவர்களுக்கு மரணம் இல்லை. உடம்பை விட்டு, பிறவாத பெருநிலையைப் பெற்றவர்கள் ஆவார்கள்.
தேவர்களுக்கு ஒரு நாள் ஒர் ஆசை தோன்றியது. சாவாமல் இருப்பதற்கு ஏதாவது மருந்து வேண்டும். அதற்கு, வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிற அமுதத்தை எப்படி அடைவது என்று எண்ணினார்கள்.பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமான் அவர்களுக்கு உபகாரம் செய்ய வந்தார். "இந்தப் பாற்கடலைக் கடைந்தால் அமுதம் கிடைக்கும்" என்று சொன்னார்.
பாற்கடலைக் கடைவதற்கு நல்ல மத்தாக மேருமலையை நாட்டினார்கள். மத்தைச் சுற்றிக் கடைவதற்கு உரிய கயிறாக வாசுகி என்னும் பாம்பை வைத்தார்கள். அமுதம் கடையும் போது ஒரு தூண் வேண்டும். அமுத மயமாக உள்ள சந்திரனே அதற்கு ஏற்றவன் என்று கொண்டார்கள். வெல்லத்தைப் பாகு காய்ச்சும்போது, முதலில் கிடைப்பது தேவையற்ற பொருட்களே. அவற்றை அகற்றிய பிறகுதான் பாகு கிடைக்கும். தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது, முதலில் தோன்றியது ஆலகால விடம். அது யாரையும் விடாது. தேவர்களையும், உலகையும் காப்பாற்ற வேண்டி, சிவபரம்பொருள் அந்த ஆலகால விடத்தை ஏற்றுக் கொண்டு, தமது கண்டத்திலே நிறுத்தினார்.
தேவர்கள் மறுபடியும் பாற்கடலைக் கடைந்தார்கள். அமுதம் வந்தது. உடனே, "எனக்கு உனக்கு” என்று தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை மூண்டு விட்டது. திருமாலே அப்போதும் மோகினி உருவம் எடுத்துக் கொண்டு வந்து அமுதம் பரிமாறினார். தேவர்களை ஒரு பக்கமாகவும், அசுரர்களை ஒரு பக்கமாகவும் உட்கார வைத்துத் தேவர்களின் வரிசையில் முதலில் படைக்க ஆரம்பித்தார். அசுரர்கள் அமிருதத்தை மறந்து மோகினியின் அழகிலே சொக்கிப் போனார்கள். அமிர்தம் முழுவதையும் தேவர்களுக்கு வழங்கி மறைந்தாள் மோகினி.
தேவர்கள் அமுதத்தை உண்பதற்கு மூலகாரணமாக இருந்தவர் திருமால். இதை சைவர்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சிலப்பதிகாரத்தில்,சமணராகிய இளங்கோவடிகள் இதைப் பற்றி,"'வடவரையை மத்தாக்கி,வாசுகியை நாணாக்கி,கடல்வண்ணன் பண்டு ஒருநாள் கடல்வயிறு கலக்கினையே!" என்று பாடி இருக்கின்றார்.
தேவர்கள் அமுதத்தை அருந்தியதாலேயே தங்களுக்கு இனி மரணம் இல்லை என்று தலை தருக்கி நின்றார்கள். அவர்களுடைய செருக்கு அதிகமாகிவிட்டது. அவர்கள் அமிருதம் சாப்பிட்டதால் பூர்ண ஆயுளோடு வாழ்ந்தார்களே தவிர, துன்பம் இல்லாமல் வாழவில்லை. அவர்களை அழிக்கச் சூரன் தோன்றியவுடன் பலர் மாண்டிருக்கிறார்கள். எனவே, தேவர்கள் உண்டது அற்ப ஆயுளோடு வாழவைக்கும் அமுதமே ஆகும்.
ஆனால், தேவர்களுக்கு அமுதம் தந்த திருமாலின், திருமருகன் ஆன முருகப் பெருமான் தனது அருளாகிய அமுதத்தைத் தன் அடியார்களுக்கு வழங்குகிறான். அது எந்நாளும் சாவா நிலையில் வைத்திருக்கும் ஆற்றல் மிக்கது. பிறப்பையே நீக்கும் அமுதத்தை முருகப் பெருமான் வழங்குகிறான். பிறப்பு நம்முடைய வினையினால் வருவது. வினை ஒரு நிலையில் கட்டுப்படாமல் திரிகின்ற மனத்தினால் விளைவது. ஒரு நிலைப்படாமல் திரிகின்ற மனத்தைக் கட்டுப்படுத்தியவன் மிகப் பெரியவன்.
'நிலையில் திரியாது அடங்கியான் றோற்றம் மலையினும் மாணப் பெரிது’ என்கிறார் திருவள்ளுவர். மலை கொஞ்சங்கூட அசையாமல் இருக்கிறது. அதைக் காட்டிலும் பெருமை உடையவர்கள், இறைவன் திருவருள் ஒன்றையே பற்றிக்கொண்டு, மனமானது ஆடாமல் ஓடாமல் அசங்காமல் இருக்கும் இயல்பைப் பெற்றவர்கள். மலை கூட ஒருநாள் தனது நிலையில் இருந்து மாறலாம். ஆனால், திருவருள் பெற்றவர்கள் எப்போதும் மாறாமல் ஒருநிலையாக இருக்கக் கூடியவர்கள்.
பிறக்கலாம். பிறப்பது தவறு அல்ல. பிறந்தவன் இறக்கத் தான் வேண்டும். ஆனால் பிறந்து திரிகிறானே, மனம் ஒரு நிலைப்படாதவாறு உழல்கிறானே, அவன் தவறு இழைக்கிறான். பலவிதமான அழுக்குக்களை பூசிக்கொள்கிறான். உடம்பில் சேர்த்துக் கொள்கிற அழுக்கை நீரினாலே போக்கிக் கொள்ளலாம். ஆனால் உள்ளத்திலே பூசிக் கொள்கின்ற அழுக்கைப் போக்க வழி இல்லை.
"துணி வெளுக்க மண் உண்டு எங்கள் முத்து மாரியம்மா!
தோல் வெளுக்கச் சாம்பர்உண்டு எங்கள் முத்து மாரியம்மா!
மணிவெளுக்கச் சாணை உண்டு எங்கள் முத்து மாரியம்மா!
மனம் வெளுக்க வழியில்லையே எங்கள் முத்து மாரியம்மா!"
என்று பாரதியார் பாடினார். மனத்தில் உள்ள மாசுகள் எல்லாம் நீங்க வேண்டுமானால் மனத்திலே இறைவனைக் கொண்டு வந்து வைக்க வேண்டும். மனம் என்னும் பாழறையானது, இறைவனுக்குப் பள்ளியறை ஆகவேண்டும். எப்படி ஆக்குவது என்பது குறித்துப் பட்டினத்து அடிகள் வழி காட்டி உள்ளார்.
"கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம்
காமம் வெகுளி கழிபெரும் பொய் எ(ன்)னும்
தூய்மையில் குப்பை தொலைவு இன்றிக் கிடந்ததை
அரிதின் இகழ்ந்து போக்கி,பொருதிறல்
மையிருள் நிறத்து மதன் உடை அடுசினத்து,
ஐவகைக் கடாவும் யாப்பு அவிழ்த்து அகற்றி,
அன்புகொடு மெழுகி,அருள்விளக்கு ஏற்றி,
துன்ப இருளைத் துரந்து,முன்புறம்
மெய் எ(ன்)னும் விதானம் விரித்து,நொய்ய
கீழ்மையில் தொடர்ந்து கிடந்தஎன் சிந்தைப்
பாழறை உனக்குப் பள்ளியறை ஆக்கிச்
சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவிசு
எந்தை நீ இருக்க இட்டனன்"
அப்போதுதான் இன்பம் பெருகும். இறைவன் உள்ளத்தில் வந்து அமர வேண்டுமென்றால், உழன்று உழன்று திரிகிற மனம் நிலைக்க வேண்டும். மனம் நிலைக்கின்ற தன்மையே நமக்கு வரவில்லை.
பிறந்து பிறந்து உழன்று சாகிற நம்மைக் காப்பாற்ற வேண்டுமென்றே இறைவன் உறுதி பூண்டு இருக்கின்றான். நாம் செய்கிற பாவங்களினால் மட்டும் அல்லாமல் புண்ணியத்தினாலும் வந்து பிறக்கின்றோம். புண்ணியமும் பிறவிக்கு வித்து ஆகும் என்பதை மறந்து விடக் கூடாது பிறந்து உழல்கிறோம். 'நீ வேறு, நான் வேறு' என்று வேறுபடுத்திப் பார்க்கும் வரையில் மனம் ஒரு நிலைப்படாமல் திரிந்து கொண்டே இருக்கிறது. என்றைக்கு, 'நீ வேறு அல்ல, நான் வேறு அல்ல' என்னும் மனோபாவம் வருகிறதோ அப்போது மனம் ஒன்றுபடுகிறது. நம் மனம் எந்த நிலையில் நின்று ஒன்றுபட்டாலும் அந்த நிலைக்கு இறங்கி நமக்கு அருள் செய்ய எம்பெருமான் ஒடோடியும் வருவான். "நீ வேறு எனாது இருக்க, நான் வேறு எனாது இருக்க, நேராக வாழ்வதற்கு உன் அருள் கூர" என்பார் அருணகிரிநாதப் பெருமான். அந்த நிலையை அடைய, நமக்குத் தனிப்பட்ட ஆற்றல் இல்லை. இறைவனே பெருங்கருணையால் நாம் இருக்கும் நிலைக்கு இறங்கி வருகிறான்.
இறைவன் இறங்கி வருவதால் அவனுக்கு மாசு ஏற்படாதா? என்று தோன்றும். கிணற்றில் விழுந்துவிட்ட ஒருவனைக் காப்பாற்ற இன்னொருவன் கிணற்றிலே குதிக்கின்றான். கிணற்றிலே விழுந்தவன், தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்றோ, கிணறு இருக்கிறது என்று அறியாமையினாலோ விழுந்திருக்கலாம். பின்னவன் அவனைக் காப்பாற்ற வேண்டும் என்ற கருணையினால், விழுந்தவன் கேட்காமலேயே குதிக்கிறான். இறைவன் நமது நிலைக்கு இறங்கி வந்தாலும் தனது நிலையில் மாறமாட்டான்.
தேவர்களுக்குக் கிடைக்காத அமுதத்தை ஊட்டி,நம்மைப் பிறக்காமல், உழலாமல், சாகாமல் செய்கின்ற ஒருவன் இருக்கிறான். ஏதோ ஒரு காலத்தில் கொடுப்பான் என்பதும் அல்ல. எப்போதும் கொடுப்பான். எத்தனே பேர் வந்தாலும் கொடுப்பான். நேற்றைக்கும் கொடுத்தான். இன்றும் கொடுக்கிறான்.நாளைக்கும் கொடுப்பான். யாருக்கும் கொடுப்பான். "யார் வேண்டினாலும் கேட்ட பொருள் ஈயும் தியாகாங்க சீலம் போற்றி" என்பார் அருணகிரிநாதர்.
அந்தத் தியாகமூர்த்தி ஆகிய முருகப் பெருமானை நோக்கி, "உதித்து ஆங்கு உழல்வதும் சாவதும் தீர்த்து எல்லோரையும் ஆண்டு அருளும் வள்ளலே, எனக்கும் உன் அருள் கிடைக்குமா? அது எந்தக் காலம்?" என்று முறையிடுகின்றார் அருணகிரிநாதர்."உதித்தாங்கு உழல்வதும் சாவதும் தீர்த்து, என்னை உன்னில் ஒன்றா விதித்து,ஆண்டு அருள் தரும் காலம் உண்டோ?"என்பது அவரது முறையீடு.
எம்பெருமான் அருள் என்னும் அமுதத்தை வழங்கவே காத்துக் கொண்டிருக்கிறான். "கருத அரிய ஆலம் உண்டான் எங்கள் பாண்டிப் பிரான், தன் அடியவர்க்கு மூல பண்டாரம் வழங்குகின்றான்" என்றார் மணிவாசகப் பெருமான். அருணகிரிநாதர், "தரமாட்டாயா?" என்று கேட்கவில்லை. 'எனக்குக் கிடைக்கிற காலம் உண்டா?' என்று கேட்கிறார். கேட்டாலும், 'கிடைக்கிற காலம் உண்டு' என்கிற பொருளையே அது தரும்.
நமது வீட்டுக்கு வருகிற ஒருவர், “ஐயா,இன்றைக்கு உங்கள் வீட்டில் சாப்பாடு உண்டா?" என்று கேட்டுக் கொண்டே வந்தால், 'இல்லை' என்று சொல்லி அவரைப் போகச் செய்பவர் யாரும் இல்லை. அதுபோல, "அருள் தரும் காலம் உண்டோ?"என்று அருணகிரிநாதர் கேளவியாகக் கேட்டாலும், 'அருள் தரும் காலம் உண்டு. நீ தரத்தான் வேண்டும். நான் பெறத்தான் வந்திருக்கிறேன்' என்று பொருள்படும். காரணம், இறைவன் யார்க்கும் இல்லை என்னாது அருள் புரிபவன்.
தனக்கு அருள் புரிய உள்ளவன் மயில் ஏறிய மாணிக்கம் ஆகிய முருகப் பெருமான். முருகன் வாகனமாகிய மயில் தனது காலின் கீழே நச்சுப் பாம்பை மிதித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். மயிலின் அடி பட்டாலே, நஞ்சு கக்கும் பாம்பு சுருண்டு தன் ஆற்றலை இழந்து விடுகிறது. ஐந்து தலைகளை உடையது அந்த நாகம். மனம் என்பதும் ஒரு நாகந்தான். ஐந்து பொறிகளாகிய தலைகளை உடையது அது. அது நஞ்சைக் கக்குகிறது. ஐந்து தலைகளாகிய ஐந்து இந்திரியங்களை வைத்துக் கொண்டு இந்த நாகம் ஆகிய மனசு நஞ்சைக் கக்குகிறது. அதனால் துன்பம் உண்டாகிறது.
நஞ்சைக் கக்குகின்ற நாகத்திடம் இருந்துதான், மாணிக்கமும் தோன்றுகிறது. நாகம் நஞ்சைக் கக்காமல் நெடுங்காலம் இருந்தால், அந்த நஞ்சே, இறுகி மாணிக்கம் ஆகிறது என்று சொல்வார்கள். நமது மனமாகிய நாகமும், ஐந்து இந்திரியங்களின் வழியாக நஞ்சைக் கக்காமல் இருந்தால், நமக்குத் தீங்கு விளைப்பதற்கு மாறாக நன்மையையே உண்டாக்கும். உலகத்தின் மாயையிலே சிக்கி, மையல்பட்டு, ஐந்து தலைகளாகிய ஐந்து பொறிகளின் வாயிலாக நஞ்சைக் கக்காமல், மனமான நாகம் அமிழ்ந்து கிடக்கும்படியாக எம்பெருமானின் மயில் வாகனம் நமது உள்ளத்திலே வந்து விட்டால் போதும். நஞ்சு கக்குகின்ற இடமாகிய மனத்திலேயே மாணிக்கமாகிய முருகன் வந்து விடுவான்.
"உதித்தாங்கு உழல்வதும் சாவதும் தீர்த்து,என்னை உன்னில்ஒன்றா
விதித்து, ஆண்டு அருள்தரும் காலம்உண்டோ? வெற்பு நட்டுஉரக
பதித்தாம்பு வாங்கிநின்று,அம்பரம் பம்பரம் பட்டு உழல
மதித்தான் திருமரு காமயில் ஏறிய மாணிக்கமே!"
என்று அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில் பாடியது போல், நாமும் உள்ளம் உருகி, இப் பாடலின் பொருள் உணர்ந்து ஓதி வருதல் வேண்டும்.
மந்தரமலையைத் திருப்பாற்கடலில் நட்டு, பாம்புகளுக்கு அரசு ஆகிய வாசுகியா வடமாகக் கொண்டு, திருப்பாற்கடலானது பம்பரம் போலச் சுழலுமாறு கடைந்தவர் ஆகிய திருமாலின் திருமருகரே! மயில்வாகனத்தின் மீது ஏறிய மாணிக்க மணியே! பிறந்து, பிறந்த இடங்களிலேயே உழல்வதும், சாவதும் ஆக உள்ள நிலையை நீக்கி, அடியேனை தேவரீரிடத்தில் இரண்டறக் கலக்குமாறு நியமித்து, ஆட்கொண்டு அருள் புரியும் ஒரு காலமும் உண்டாகுமோ?
பிறவியாகிய பெருங்கடலில் இருந்து நீங்கி, முத்தியாகிய கரையில் ஏறி, இறைவனுடன் கலந்து இன்புறுகின்ற காலம் ஒன்று நமக்கும் வாய்க்கவேண்டி, அருளாளர்களின் பாடல்களைப் பொருள் உணர்ந்து ஓதி வழிபடுவோம்.
No comments:
Post a Comment