மையல் வலையும், ஞான கலையும்
-----
மனிதனுடைய வாழ்நாளில் இன்பம் துன்பம் ஆகிய இரண்டும் மாறி மாறி வருகின்றன. தங்களுக்கே இறைவன் மிகுதியான துன்பங்களைத் தருகிறான் என்றும், மற்றவர்களுக்கு இத்தகைய துன்பங்கள் உண்டாவது இல்லை என்றும் பலர் நினைக்கிறார்கள். இறைவனுக்கு அப்படிப் பட்சபாதம் ஏதும் இல்லை. அவரவர்கள் செய்த வினைக்கு ஏற்றபடியே இன்ப துன்பங்களை அவன் கொடுக்கிறான். அவர்கள் அநுபவிக்க வேண்டாதவற்றை இறைவன் கொடுக்க நியாயம் இல்லை. சிலர் அதிகமான துன்பங்களை அநுபவிப்பதைப் போல வேதனைப்படுவார்கள். எண்ணிப் பார்த்தால் அது மிகவும் சிறிய துன்பமாக இருக்கும்.
பெரும்பாலும் செல்வம் நிரம்பியவர்கள் சிறிய துன்பம் வந்தாலும் பெரிதாகக் கருதுகிறார்கள். ஒரு வேளை உணவு சரியான நேரத்தில் கிடைக்காவிட்டால் அவர்கள் அலறுகின்ற அலறல் மிகுதியாக இருக்கும். பல நாளாக உண்ண ஒன்றும் கிடைக்காமல் பசியால் துவண்டும், தான் துன்பப்படுவதாக அலட்டிக் கொள்ளாதவனும் இருக்கிறான். இந்த இரண்டு வகையான மக்களுக்கும் பொதுவானவை உடம்பு, மனம் ஆகியவை. ஆனால் ஒரு சிலர் சிறிய துன்பத்தையும் பெரிது படுத்தி வேதனைப்படுவதற்கும், இன்னும் ஒரு சிலர் பெரிய துன்பங்களையும் சிறிய துன்பமாகக் கூடப் பாராமல் இருப்பதற்கும் காரணமாக இருப்பது அவர் மனமே.
துன்பமானாலும், இன்பமானாலும் நாம் அனுபவிக்கின்ற பொருளில் இல்லை. உணர்கின்ற மனத்தில்தான் இருக்கிறது. எதைத் துன்பம் என்று நினைக்கிறோமோ, அது வருமே என்று, வருவதற்கு முன்னாலும் மனம் துன்பப்படுகிறது. வந்துஅனுபவித்த பிறகும், "ஐயோ வந்ததே" என்று துன்பப்படுகிறது. ஆகவே, துன்பத்தினால் உண்மையில் வேதனைப்படுகிற காலம் ஒன்று என்றால், துன்பம் வராததற்கு முன்பே "துன்பம் வருமே" என எண்ணி வேதனைப்படுகிற காலம் ஒன்றும், வந்த பின்னர், "வந்ததே" என்று வேதனைப்படுகிற காலம் ஒன்றுமாகக் கோழைகளுக்கு வளர்கிறது. இன்பம் வருவது போலவே, துன்பம் எப்படியும் வரத்தான் வரும்.
"ஊழையும் உப்பக்கம் காண்பர்,உலைவு இன்றித் தாழாது உஞற்றுபவர்" என்றார் திருவள்ளுவ நாயனார். பலரும் விதி பெரிதா, மதி பெரிதா என்று சந்தேகப்படுகிறார்கள். வாதம் புரிந்தும் வருகிறார்கள். "விதியை மாற்றயாராலும் முடியாது, விதி வலியது"என்று பெரும்பாலானவர்கள் சொல்ல, சிலர் மட்டும், "விதியைமதியால் வென்றுவிடலாம்'" என்று சொல்கிறார்கள். "ஊழையும் உப்பக்கம் காணலாம்" என்று சொன்ன திருவள்ளுவர்தான், "ஊழில் பெருவலி யா ஊள" என்றும் சொன்னார். இந்த இரண்டில் எது உண்மை? விதியை மதி வெல்லுமே அன்றிக் கொல்லாது. விதியைக் கொல்வது வேறு; விதியை வெல்வது வேறு. கொல்வதாவது அடியோடு அழித்துவிடுவது. விதியை அடியோடு அழித்து ஒதுக்க யாராலும் முடியாது. விதி என்பது பிராரப்தம் அல்லது பிராரத்தம் எனப்படும். முன்னர் செய்த வினைகளின் தொகுதியில் இருந்து, இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டிய வினைகளின் பயனைப் பிராரத்தம் என்கின்றனர். பிராரப்தத்தை யாராலும் கொல்ல முடியாது. ஆனால் தெளிந்த அறிவு இருந்தால் வென்று விடலாம். ஒருவனை வெற்றி கொள்வது என்பது, அவனது வலியை அழித்து விடுவதுதான். வலி அழிந்தால்தானே கொல்ல முடியும்.
நாம் செய்கிற பாவபுண்ணியம் வேறு. அனுபவிக்கின்ற இன்ப துன்பம் வேறு. இப்பொழுது நுகரும் அனுபவம் அல்லது பிராரத்தம், முந்திய பிறவியில் நாம் செய்த வினையின் பயன். இப்பொழுது செய்கின்ற பாவபுண்ணியச் செயல்கள் அடுத்த பிறவியின்அனுபவங்களுக்கு வித்து ஆகின்றன. முன்னை வினைகள் காரணமாக அனுபவிக்கின்ற போகங்கள் இன்பமாகவும், துன்பமாகவும் அமைகின்றன. வித்து இல்லாமல் முளை இல்லை. முன்னை வினை இல்லாமல் பிறவி வராது. இந்தப் பிறவி வந்த பிறகு முன்னை வினைகள் அனுபவமாக இப்பிறவியில் முளைக்காமல் இராது. அவை கப்பும் கிளையுமாகப் படர்ந்து தழைக்காமல் இருக்கச் செய்யலாம். முளைக்காமல் இருக்கச் செய்ய முடியாது. ஒருவனுக்கு மதி இருக்குமானால், முளைக்கின்ற முன்னை வினைகளின் வேகத்தைக் குறைத்து விடலாம். எவ்வளவுதான் மதி உடையவன் ஆனாலும், வீசுகின்ற ஊதல் காற்றையும், பனியையும் அழிக்க முடியாது. ஆனால் தக்கதொரு போர்வையைப் போர்த்திக் கொண்டு அவற்றின் கடுமையைக் குறைத்துக் கொள்ளலாம். இதைத்தான் திருவள்ளுவ நாயனார் சொல்கிறார்.
"உப்பக்கம்" என்பது "பின்பக்கம்". முன் பிறவியில் செய்த கன்மங்களுக்கு ஏற்ப அமைந்த விதியை அனுபவித்து, அதனால் பெருந்துன்பம் அடையாமல், அதனை முதுகு காட்டச் செய்து வெல்பவர்கள், தமது மனத் திண்மை காரணமாகத் தாழாது உஞற்றுபவர்கள். அவர்களுக்கும் ஊழின் வழியேதான் வாழ்க்கை இருக்கும். இன்பதுன்ப விளைவுகள் உண்டாகும். ஆனால் அவர்களுக்கு அவை அதிகமாக உறைப்பதில்லை. குளிருக்குக் கம்பளிச் சட்டை போட்டுக் கொள்கிற மாதிரி, அவர்கள் இறைவன் திருவருளைப் பக்க பலமாகக் கொண்டு இருக்கிறார்கள். அந்தத் திருவருள் பலம் மதியினால் கிடைக்கும். புலி கொல்வதைவிடக் கிலி கொல்வது மிகுதி என்று சொல்வார்கள். புலி கொல்வதற்கும் அஞ்சாமல் இருப்பவர்கள் வீரர்கள். "புலி கொன்றுவிடுமே கொன்றுவிடுமே" என்று கிலியினால் செத்துக் கொண்டிருப்பவர்கள் கோழைகள். சிறிய கல்லும் கோழைக்குப் பெரிய மலை போல இருக்கும். பெரிய மலைகளும் வீரர்களுக்குச் சிறிய கற்களாகத் தோன்றும்.
நல்ல பருமனாக இருக்கும் ஒருவனிடம் ஒரு பெரிய கல்லைத் தூக்கி அப்புறம் போடு என்று சொன்னால், "ஐயோ! இதை எப்படி நகர்த்துவது” எனப் பயப்படுவான். மதி உடையவனாக இருந்தால், அக் கல்லைப் புரட்டக் கூட வலிமை இல்லா விட்டாலும், நான்கு பேர்களை அழைத்து வந்து கல்லைக் கொண்டு புரட்டிக் கொண்டு போய் அப்புறம் சேர்த்துவிடுவான். தானே தூக்குபவனும், பிறரை விட்டுத் தூக்கச் செய்பவனும் ஒரே ஒரு காரியத்தைச் செய்கிறார்கள். ஒருவன் தனது உடலை ஏவுகிறான். மற்றவன் தனது மதியை ஏவுகிறான். ஒரு பெரிய பாலத்தைப் பொறியாளர் ஒருவர் கட்டினார் என்று சொல்கிறோம். அறிவு இல்லாதவன், "அவரா கட்டினார்? கொத்தர்கள் அல்லவா கட்டினார்கள்?' என்று நினைப்பான். பொறியாளர் கட்டினார் என்பதும் உண்மை,கொத்தர்கள் கட்டினார்கள் என்பதும் உண்மை. பொறியாளர் தமது மதி நுட்பத்தால் ஏவியபடி கொத்தர்கள் தமது உழைப்பால் கட்டினார்கள். ஏவியவன் ஒருவன் என்றால், ஏவப்பட்டவர்கள் பலராகவும் இருக்கலாம். ஒருவன் ஆணைக்குப் பலர் அடங்கி வேலை செய்வார்கள்.
அதைப் போலவே, உடம்பில் பல உறுப்புக்கள் இருக்கின்றன. நடப்பது கால். வேலை செய்வது கை. சரியா தப்பா என்று பார்ப்பது கண். இப்படிப் பல உறுப்புக்களும் ஒரு வேலையைச் செய்யும்போது செயல்படுகின்றன. ஆனால், உடம்பிலுள்ள எல்லா உறுப்புக்களையும் இயக்குகின்ற கருவியாக மதி உள்ளது. பல கொத்தர்களிடம் வேலை வாங்குபவராக பொறியாளர் ஒருவர் இருப்பது போல, உடம்பிலுள்ள பல உறுப்புக்களிடமும் வேலை வாங்குபவனாக மதி இருக்கிறது. பல கொத்தர்கள் ஒரு பாலத்தைக் கட்டினாலும், பல கொத்தர்களையும் இயக்கிய பொறியாளர் பாலம் கட்டினார் என்று சொல்வது போல, ஒரு காரியத்தைச் செய்வது உடம்பிலுள்ள பல உறுப்புக்கள் என்றாலும், அந்த உறுப்புக்களை இயக்கிய மதியே அக்காரியத்தைச் செய்வதாகச் சொல்வர். உடம்பின் பலத்தைச் செயற்படுத்துவது அறிவு. நுட்பமாக இருக்கும் ஒன்று செயல் படும்போது பெரிய காரியத்தைச் செய்துவிடுகிறது. இப்படி, பலரும் மதிக்கக் கூடிய காரியத்தைச் செய்துவிடுவது அறிவு, ஞானம். ஞானம் இல்லாதவர்கள் ஒரு சிறு காரியத்தைச் செய்வதற்குக் கூட நடுங்குகிறார்கள்.
ஞானம் இறைவன் திருவருளால் வருகின்றது. இறைவன் திருவருளால் ஞானம் பெறாதவர்களுக்கு உலகிலுள்ள ஒவ்வொரு பொருளும் எமனாக இருக்கிறது. இறைவன் திருவருள் பலத்தைத் துணையாகக் கொண்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் இல்லாதவன், மதி இல்லாதவன், எதைக் கண்டாலும் நடுங்குகிறான். அஞ்சி அஞ்சிச் சாகிறான். கிலி பிடித்த தனது மனத்தால், எல்லாவற்றையும் தீங்காகக் கற்பனை செய்து பார்த்துப் பயப்படுகிறான்.
ஒரு ஆசிரியர் தமது வீட்டுத் திண்ணையில் சில பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வூர்க் கோயில் யானை அவ்வழியே வந்தது. அவர் வீட்டு வாசலுக்கு எதிரே போகும்போது ஒரு மரத்திலிருந்து தேங்காய் தொப்பென்று கீழே விழுந்தது. அந்தத் தேங்காயின் மேல் யானை தன் காலைத் தூக்கி வைத்தது. அவ்வளவுதான். தேங்காய் அப்படியே மட்டையோடு நசுங்கிப் போய் விட்டது. ஆசிரியர், "யானையின் காலில் என் தலை அகப்பட்டுக் கொண்டிருந்தால் இப்படித்தானே நசுங்கிப் போயிருக்கும்?" என்று சொல்லி விட்டு மேலும் அழுதாராம். அவரோ திண்ணையின்மேல் இருந்தார். யானையோ வீதி வழியே போனது. அவர் தலை யானையின் காலில் எப்படி அகப்படும்? ஆனாலும், யானையின் காலில் தமது தலை அகப்பட்டுக் கொண்டால் என்ன ஆகும் என்பதை அவர் மனத்திலே கற்பனை செய்துகொண்டு, இருக்கிற தொல்லை போதாது என்று, விலை கொடுத்து வாங்கின மாதிரி அழுதார். அவரைப் போலவே நெஞ்சில் உரம் இல்லாத கோழைகள் பலர் இருக்கிறார்கள். இல்லாத ஒன்றை இருப்பது போலக் கற்பனை செய்துகொண்டு இவர்கள் சாகிறார்கள். நல்லவர்களைப் பொல்லாதவர்கள் என்று எண்ணி அவர்களோடு பழகுவது இல்லை. உலகில் ஒருவன் எப்படி நினைக்கிறானோ அப்படி விளைகிறது.
இந்த உலகமாகிய கண்ணாடியைப் பார்க்கிறவர்களில் சிலருக்கு, "உலகம் முழுவதும் இன்பமாகக் காட்சி அளிக்கிறது" என்றால், அவர்களே இன்பத்தின் வடிவாக இருக்கிறார்கள். சிலர், "உலகம் முழுவதும் துன்பம் நிரம்பி இருக்கிறது" என்றால் அவர்களே துன்பத்தின் சின்னமாக இருக்கிறார்கள். "உலகில் நல்லவர்களே இல்லை. திருடர்களும், நயவஞ்சகர்களும் நிரம்பி இருக்கிறார்கள்" என்பவர்களே திருடர்கள், நய வஞ்சகர்கள். அதனால்தான் உலகத்திலுள்ளவர்கள் எல்லாரும் அவர்களுக்கு அப்படித் தோன்றுகிறார்கள். உலகிலுள்ளவர்கள் எல்லோரும் நல்லவர்கள்; ஆண்டவன் குழந்தைகள்என்று பார்க்கின்ற மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படிப் பல வழியாகக் கூர்ந்து பார்த்தால் அவரவர்களின் உள்ளத்தின் பண்பே உலகத்தில் பிரதிபலிப்பதை உணரலாம்.
ஆகவே, துன்பம் இன்பம் என்பவை அவரவர்களுடைய மனத்தின் பண்பையும், திண்மையையும் பொறுத்து இருக்கின்றன. ஒருவன் மலைபோல இருக்கிற பொருளைப் பொடியைப் போல் இருக்கக் காண்கிறான். அணு அணுவான திவலைகளைக் கூட ஒருவன் மலைபோல எண்ணி மலைத்து நிற்கிறான். எல்லா விதமான இன்ப போகங்களும் நிரம்பப் பெற்ற மாளிகையில் இருப்பவன் நரகத்தில் வாழ்பவனைப் போல அவதியுறுவதும் உண்டு. வறிய நிலையில் இருப்பவனோ வளமான வாழ்வு நிரம்பப் பெற்ற மாளிகையில் இருப்பவனைப் போல மகிழ்வதும் உண்டு. நரகத்தையே நல்லதாகப் பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள்.
மணிவாசகப் பெருமான், 'இறைவா! உனது திருவருள் துணை இருந்தால் நரகமானாலும் சரி, அங்கே சென்று வாழ்வேன்' என்று சொல்கிறார். "நரகம் புகினும் எள்ளேன்,திருவருளாலே இருக்கப் பெறின் இறைவா!" என்கின்றார். இறைவன் திருவருள் இல்லாவிட்டால் இன்பலோகம் நரகலோகமாகத் தோன்றும். ஒரு சிறு துரும்பும் கட்டாரியாகத் தோன்றும். இறை நம்பிக்கையோடு வாழ்பவர்களுக்கு நரகமும் சுவர்க்கமாகத் தோன்றும். வாழ்வில் அளவு கடந்த துன்பங்களை அனுபவித்த அப்பர் பெருமான், "இன்பமே எந்நாளும் துன்பமில்லை" என்றாரே.
‘வாழ்விலே எவ்விதத் துன்பமும் இன்றி வாழுகின்றவர்களைப் படைத்துவிட்டு, என்னை எல்லாவிதமான துன்பங்களையும் அனுபவிக்கும்படியாக இறைவன் செய்து விட்டானே" என அலறுகின்ற மக்கள் யார்? என்றால் அவர்கள் இறைவன் திருவருள் துணை இல்லாதவர்கள். சிறிய சிறிய துன்பங்கள்கூட அவர்களுக்கு மலை மலையாக இருக்கின்றன. இறைவன் திருவருள் இல்லாத இத்தகைய கோழைகளுக்கு எந்தக் காரியத்தைச் செய்வதற்கும் நேரம் இராது; ஆற்றல் இராது. மனத் திண்மையும் இராது. பழியைப் பிறர்மேல் சுமத்தி ஏமாந்தும், உலகை ஏமாற்றியும் வருபவர்கள் இந்தக் கோழைகள். இக்கோழைகளுக்கு மலை மலையாகத் தோன்றும் துன்பங்கள் இறைவன் திருவருளால் ஞானம் பெற்ற வீரர்களுக்குப் பொடிப் பொடியாகப் போகின்றன.
இந்த இரண்டையும் பிணைத்து அருணகிரியார் ஒரு பாட்டைச் சொல்கிறார்.
"பொட்டாக வெற்பைப் பொருத கந்தா! தப்பிப் போனது ஒன்றற்கு
எட்டாத ஞான கலை தருவாய்;இரும் காமவிடாய்ப்
பட்டார் உயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்கும்
கட்டாரி வேல்விழி யார்வலைக் கேமனம் கட்டுண்டதே"
மனிதனுக்கு இன்பம் வந்தாலும், துன்பம் வந்தாலும் அதற்கு உவமையாக மலையைச் சொல்வது வழக்கம். "மலை மலையாகச் செல்வம் அவனிடத்தில் சேருகிறது” என்பார்கள். அதேபோல, "மலை போலத் துன்பம் வந்துவிட்டதே' என்று தலையின்மேல் கை வைத்துக் கொள்ளுவார்கள்.
ஞானத்தையே வேலாக உடைய முருகப் பெருமான் தேவர்களுக்கு மலை மலையாக வந்த துன்பங்களை அழிந்து போகும்படி செய்தான். அவர்களுக்குத் துன்பம் அளித்து வந்த அசுர மலைகள் எல்லாம் பொடிப் பொடியாகும்படி செய்தான். தேவர்களை அழிக்க வந்த பெரிய மலை ஒன்று இருந்தது. அதற்குக் கிரவுஞ்சம் என்று பெயர். அதைக் கண்டு முதலில் மலைத்தார்கள் தேவர்கள். இறைவன் அதைப் பொடிப் பொடியாக்கினான். மலைபோல வந்தது பனி போலப் போயிற்று.
ஞானத்தையே வேலாக உடைய பெருமானிடத்தில் ஞான கலையைப் பெறவேண்டும். அதனால் மலையையும் பொடிப்படுத்தி விடலாம். அதனைப் பெறாதவர்கள் துன்புறுகிறார்கள். அவர்கள் அகங்காரத்தால் அவன் திருவடி சேராது, தலை திரும்பி நிற்பவர்கள். ஞானம் உடையவர்கள் மலையையும் பொடியாக்குவார்கள். ஞானம் இல்லாதவர்களோ, ஒன்றும் இல்லாத சிறியதையும் பெரிய மலை என்று அஞ்சுவார்கள். ஒரிடத்தில் "ஞானகலை" இருக்கிறது. மற்றோர் இடத்தில் காம விடாயினால் உண்டாகின்ற "மையல் வலை" இருக்கிறது. ஞான கலையைத் தரும் தலைவன் கந்தன். மையல் வலையை வீசுபவர்கள் கட்டாரி வேல்விழியார். இரண்டு பேர்களிடமும் வேல் ஆயுதமாக இருக்கிறது. அவன் வேலாயுதன். இவர்கள் வேல் விழியார்கள். வேலாயுதன் செய்ததை அருணகிரிநாதர் சொல்கிறார்.
மலைப்பைத் தருவது மலை. பின்னாலே இருக்கும் பொருளை மறைத்து, முன்னால் இருக்கிறவனுக்கு மலைப்பை, அச்சத்தை உண்டு பண்ணும் மலையைக் கண்ணுக்குத் தெரியாத பொட்டுப் பொட்டாகப் போகும்படி அழித்தான் கந்தன். அவனுடைய அருள் பெற்றவர்களும் அவனைப்போல இருப்பார்கள்."அரசன் எப்படி, குடிகளும் அப்படி" என்பது வழக்கு. அவன் திருவருளைப் பெற்றவர்கள், மலைபோல் இருக்கும் துன்பங்களைக் கண்ணுக்குத் தெரியாத பொட்டாக ஆக்குகின்ற ஆற்றலை அடைவார்கள்.
நமக்கு அந்த ஆற்றல் வரவில்லை. காரணம் நமது மனம் தப்பிப் போனது. அதனால், ஞானகலையை அது எட்டுவது இல்லை. மனத்தை நமது பிடிக்குள் அகப்படுத்தி, இறைவன் திருவடியிலே விழச் செய்து அதற்குக் கொஞ்சம் ஞானம் ஊட்டலாம். அப்படிச் செய்தால், மலை மலையாக வரும் துன்பங்களைப் பொட்டுப் பொட்டாகப் போய்விடும். ஆனால், அந்த மனம் பிடிக்கு அகப்படாமல் தப்பிப் போய்விட்டது. அதற்கு எட்டாத ஞான கலையை வழங்க வேண்டும் என்றால் முருகன் திருவடியை வணங்கவேண்டும்.
தாழம்பூவை நாம் பார்த்திருக்கிறோம். தனியாக இலை வேறு, பூ வேறு என்று இல்லாமல் இலையே பூவாக இருப்பது தாழம்பூ. இரண்டு இலைக்கும் வேறுபாடு உண்டு. இலையில் முள் இருக்கும்.பூவில் முள் இருக்காது. இலை பச்சையாக இருக்கும்.பூ மஞ்சளாக இருக்கும். இலைக்கு மணம் இல்லை. பூவுக்கு மணம் உண்டு. மேலே உள்ள பச்சையான மணம் இல்லாத முள் இலைகளை ஒவ்வொன்றாகக் கழித்து விட்டால், கடைசியில் மஞ்சள் நிறமான முள் இல்லாத இலை கிடைக்கும். அதற்கு மணம் உண்டு. அதுதான் தாழம்பூ. அதைப் போலவே மனம் இருக்கிறது. மனத்தைச் சுற்றியுள்ள முரட்டுத்தனம், சோம்பேறித்தனம் முதலான படலங்களை அகற்றி விட்டால் குழைவு, சுறுசுறுப்பு ஆகிய முள் இல்லாத படலங்கள் வெளிப்படும். அன்பாகிய நறுமணம் அதில் கமழும். நம் மனம் தாழம்பூ ஆக வேண்டுமானால் மனத்தைச் சுற்றியுள்ள வாசனை அற்ற முள் இலைகளைக் கழிக்க வேண்டும். அது நமது கைக்குள் அகப்படாமல் தப்பிப் போய்விடுகிறது.
நமக்கு நாமே கட்டுப்படுவது தான் சுதந்திரம். அதுவே இன்பம். பிறருக்குக் கட்டுப்படுவது துன்பம். நாமே நம் வீட்டுக்குள்ளே நுழைந்து கொண்டு தாழ்ப்பாள் போட்டுக்கொள்வது பாதுகாப்பு. நம்மை உள்ளே தள்ளிப் பிறர் வெளியே பூட்டிடுவது சிறை. இரண்டு இடங்களுக்கும் வேறுபாடு ஒன்றும் இல்லை. நான்கு பக்கமும் இரண்டு இடங்களிலும் சுவர்கள் உள்ளன. கதவு இருக்கிறது. பூட்டு இருக்கிறது. ஆனால் இங்கே போட்ட பூட்டு, பிறர் போட்டது. அங்கே போட்ட பூட்டு நாமே போட்டுக் கொண்டது. நாமே பூட்டுப் போட்டுக் கொண்டது வெளியில் இருந்து பகைவர்கள் உள்ளே வராமல் இருப்பதற்காக, பிறர் போட்ட பூட்டு நாம் வெளியே தப்பிப் போய்விடாமல் இருப்பதற்காக. ஆகவே முன்னால் நாம் இருக்கும் இடம் பாதுகாப்பான இடம். பின்னால் நாம் உள்ள இடம் சிறை. பாதுகாப்பான இடத்தில் இன்பம் உண்டாகிறது. சிறையில் துன்பம் அனுபவிக்கப்படுகிறது.
அதைப் போல, மனம் நமக்குக் கட்டுப்பட்டிருந்தால் இன்பம் பெற்றிருக்கும். நம் கைக்குள் அகப்படாமல் தப்பிப் போய்ப் பிறருக்குக் கட்டுப்பட்டுச் சிறைப்படுகிறது. அதனாலே அதற்கு வருகின்றது துன்பம். தப்பிப் போனது ஒன்று யாருக்கும் கட்டுப்படாமல் இருந்தால் மறுபடியும் அதைக் கட்ட நாம் முயற்சி செய்யலாம். ஆனால் அதுவோ வேறு ஒருவரிடத்தில் கட்டுப்படுகிறது. நமக்குக் கட்டுப்பட்டிருந்தால் ஞான கலையை எட்டிப் பிடித்திருக்கும். தப்பிப் போனதனால் அதற்குக் கலைஞானம் எட்டாது போய்விட்டது. வேல்விழியாருக்குக் கட்டுப்பட்டதனால், அது மையல் வலையில் சிக்குண்டு கிடக்கின்றது. வேல்விழியார் விரித்த காம வலைக்குள் மனம் சிறைப்பட்டுவிட்டது.
"காமவிடாய்" என்பது, காமத்தினால் எழுகின்ற தாகம். காமம் என்பது மனத்திலே தோற்றுகின்ற உணர்ச்சி. இந்த உணர்ச்சி வசப்பட்டுக் கட்டாரி வேல்விழியார் வலையில் சிக்குண்டு தடுமாறின பல உயிர்கள் பற்றி, சரித்திரங்களும், புராணங்களும் கதைகதையாகச் சொல்கின்றன. காமவிடாய்ப் பட்டாருடைய உயிரை அது போகிற போக்கில் போக விடாமல், தனக்குள் அடக்கிப் பசி தணிகிறது கட்டாரியைப் போன்ற வேல்விழி.
உலகில் காமவிடாய்ப்பட்டவர்களும் இருக்கிறார்கள். ஞானகலை உடையவரும் இருக்கிறார்கள். ஞானகலை உடையவரிடத்தில் கட்டாரி வேல்விழியாரின் ஜம்பம் ஒன்றும் சாய்வதில்லை. காமவிடாய்ப்பட்டவன் கல்வி பயில்பவனாக இருந்தால், படிப்பில் அவன் மனம் ஓடாது. தொழிலில் இருந்தால் வேலையில் மனம் ஒடாது. அவன் தன் கடமைகளைச் செய்யும் இடங்களில் எல்லாம் வந்து குறுக்கிட்டு வழியை மாற்றி, கடமையைச் செய்யவொட்டாமல் முறித்து, வேல்விழியாரின் நினைவாகவே எப்போதும் இருக்கும்படி செய்துவிடும். வாழ வேண்டும் என்று அவன் எண்ணினாலும் கொஞ்சங்கூட வாழவொட்டாமல் சிதைத்து விடுகிறது காமவிடாய்.
மையல் வலைக்குக் கட்டுப்படாமல் இருப்பது ஞானகலை உள்ள மனம். ஞானபண்டித சாமியிடம் இருந்து ஞானகலை வர வேண்டும். ஞானம் என்னும் கலையையே ஒளி வீசுகின்ற, கூர்மையான வேலாகத் தன் திருக்கரத்தில் முருகப் பெருமான் வைத்திருக்கிறான். அது மலையைப் பொட்டுப் பொட்டாக்கிய வரலாறு நமக்குத் தெரியும். மலை என்பது நமது வினைகளின் தொகுதி. அவன் அருளால் நமக்கும் அவனிடத்திலிருந்து கொஞ்சம் ஞானகலை கிடைத்தால் மலை மலையாக நமக்கு வருகின்ற துன்பங்களைப் பொட்டுப் பொட்டாக ஆக்க முடியும்.
புற அழகைப் பாராமல், ஞானக் கண்ணால் இறைவன் திருவருளைப் பூம்பாவையின் வடிவத்தில் கண்டார் திருஞானசம்பந்தர். தான் படைத்த பெண்ணின் அழகை, தன் எட்டுப் புறக் கண்களால் பிரமன் பார்த்துக் காமத்தினாலே மனச் சலிப்புக் கொண்டான். ஆனால் கலைஞானம் உடைய திருஞானசம்பந்தரோ ஒரு முகம் உடையவர் என்றாலும், தமது ஞான உள்ளத்திலே முளைத்த ஆயிரம் முகம் கொண்டு பூம்பாவையின் வடிவத்தில் இறைவன் கருணை வெள்ளத்தைக் கண்டார். "அவள் என் மகள்' என்று கூறி அப்பெண்ணை மணக்க மறுத்தார்.
பெண்களைக் காண்பதால் காமவிடாய்ப் படுகிறவர்கள் ஞானம் இல்லாதவர்கள். அப்பெண்களின் விழியானது, அவர்களது உயிரைத் திருகிப் பருகிப் பசி தணிக்கும். ஞானகலை பெற்ற ஞானிகளோ அவர்களைத் தங்கள் சேய் போலப் பார்த்துவிடுகிறார்கள். காமம் உண்டாக வழி இல்லை. இதை உணர்ந்து, நமக்கு உணர்த்துபவர் போல அருணகிரிநாதப் பெருமான் பாடுகிறார். "பெரிய மலையைப் பொட்டுப் பொட்டாக ஆக்கிய கந்தனே! நான் என் மனத்தைத் கட்டலாம் என்று எண்ணினேன். அது எனக்குத் தப்பிப் போய்விட்டது. தப்பிப் போனது மாத்திரம் அல்ல. காமவிடாய்ப் பட்டாருடைய உயிரைத் திருகிப் பருகிப் பசி தணிக்கும் கட்டாரி வேல்விழியார் வலையில் சிக்குண்டு விட்டது. இப்பொழுது நான் என்ன செய்வேன்?ஞானகலை உடையவனாய் இருந்தால் மலை மலையாகத் துன்பம் வந்தாலும் உன்னைப் போல் பொட்டுப் பொட்டாக ஆக்கிவிடுவேன். இல்லாததனால் காமவிடாய்ப்பட்டேன். மாதர்களுடைய சிறிய உறுப்பாகிய கண் என் உயிரைத் திருகிப் பருகிப் பசி தணிக்கும் கட்டாரியாகவும், வேலாகவும் இருக்கிறது. என் கைக்குள் அகப்படாமல் தப்பிப்போன மனமாகிய ஒன்றிற்கு எட்டாத ஞானகலையைத் தருவாய்" என்று முருகப் பெருமானிடம் பிரார்த்தித்துக் கொள்கிறார். மீண்டும் பாடலைப் பார்ப்போம்....
"பொட்டாக வெற்பைப் பொருத கந்தா! தப்பிப் போனது ஒன்றறற்கு
எட்டாத ஞான கலை தருவாய்;இரும் காமவிடாய்ப்
பட்டார் உயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்கும்
கட்டாரி வேல்விழியார் வலைக்கே மனம் கட்டுண்டதே!"
இதன் பொருள் ---
கிரவுஞ்ச மலையானது பொடிப் பொடியாய்ப் போகுமாறு போர் புரிந்த கந்தனே! பெரும் காமதாகம் கொண்டவருடைய உயிரை முறுக்கி எடுத்து, குடித்து, தமது பசியைத் தணித்துக் கொள்ளுகின்ற வாளையும் வேலையும் ஒத்த கண்களை உடைய விலைமகளிரின் வலையில் அடியேனுடைய மனமானது அகப்பட்டுக் கொண்டு விட்டது. அதில் இருந்து மீண்டு உய்யுமாறு, அடியேனை விட்டுத் தப்பிப் போனதாகிய, அன்பை அன்றி வேறு ஒன்றுக்கும் எட்டாதது ஆகிய மெய்யறிவு வித்தையை அடியேனுக்குத் தந்து அருள்வீராக.
No comments:
Post a Comment