சாதிகள் இல்லையடி பாப்பா!!!!
-----
வில்லிபாரதத்தில் ஒரு சுவையான நிகழ்வு. துரோணரிடம் வில் வித்தையைக் கற்றுத் தேர்ந்த அருச்சுனன், அரங்கத்தில் கூடி இருந்த மன்னர்கள் யாவரும் வியக்கும்படி தனது வில் வித்தையைக் காட்டுகின்றான்.
"மீளி மகவான் மதலை ஆயுத புரோகிதன்
விலோசனம் உணர்ந்து,அவன் மலர்த்
தாளில் முடி வைத்து, எதிர் தரித்தனன், இடங்கை
வரி சாபகவசத்தினன், இபம்,
யாளி, அரவம், கருடன், வன்னி, சலிலம், திமிரம்,
இரவி,இவையே கடவுளாம்
வாளியின் வினோதம் உற எய்தனன், இருந்த
முடி மன்னவர்மதிக்கும் வகையே".--- வில்லிபாரதம்.
என்று இந்த நிகழ்வை வில்லிப்புத்தூரார் பாடுகின்றார்.
இதன் பொருள் ---
வீரத்தில் சிறந்தவனானஇந்திரகுமாரனாகிய அருச்சுனன், ஆயுத வித்தைக்குக் குருவான துரோணாசாரியரது கண்ணின் குறிப்பை அறிந்து,அவனுடைய தாமரை மலர்போன்ற திருவடிகளிலே தனது தலையை வைத்து, அட்டாங்கமாக விழுந்து தண்டனிட்டு, அவன் எதிரிலே, இடக்கையில் கட்டமைந்த வில்லை ஏந்தியவனாய், உடம்பில் தரித்த கவசத்தையும் உடையவனாய், யானையும் (அதற்குப் பகையான)சிங்கமும்,பாம்பும் (அதற்குப் பகையான) கருடனும்,அக்கினியும் (அதற்கு மாறான) நீரும், இருளும் (அதற்கு மாறான) சூரியனும் ஆகிய இவற்றின் விதமானதெய்வத்தன்மை பொருந்திய அம்புகளினால் ஒன்றற்கு ஒன்று பகையாகிய பல திவ்விய அத்திரங்களால், காண்பவர்க்கு வியப்பு உண்டாக, அரங்கத்தில் இருந்த முடிமன்னர்கள் தன்னை நன்கு மதிக்கஎய்தான்.
முன்பு தானே ஓர் அத்திரத்தை எய்து, அதன் திறத்தை வெளிக்காட்டி,வியப்பு உண்டாக்கி, உடனே அதற்குப் பகையான அத்திரத்தைக் கொண்டு, முன்பு எய்த அத்திரத்தைத் தணிப்பதான மிக்க வினோதக் காட்சிகளை அருச்சுனன் விளைவித்தான்.
அப்போது, துரோணரது அனுமதியைப் பெற்று வந்து, கர்ணன் சிங்கம்போல் எழுந்து சிங்கநாதம் செய்துகொண்டு தனது வில் வித்தையைக் காட்டுகின்றான்.
"சிந்தை அன்புடன் பணிந்து, தேசிக ஈசன் அருளினால்
வந்து, வெஞ் சராசனம் வணக்கி, வீர வாளியால்,
இந்திரன் குமாரன் முன் யாது யாது இயற்றினான்,
அந்த அந்த நிலையும் ஏவும் அவனின் விஞ்சல் ஆயினான்".
இதன் பொருள் ---
அந்த அரங்கிற்குத் தலைவனாக விளங்கும் குருசிரேஷ்டரான துரோணாச்சாரியாரது அனுமதி பெற்று வந்து, மனப்பூர்வமான பக்தியோடு வணங்கி, தனது கையில் உள்ள கொடிய வில்லை வளைத்து, இந்திரனது மகனான அருச்சுனன் முன்னர் திறமையுடைய அம்புகளால் எந்தெந்த வகையான வித்தைகளைச் செய்தானோ, அதற்கு உரிய நிலையிலும் அந்தந்த அம்பைச் செலுத்துதலிலும் அருச்சுனனை விஞ்சும்படியாக வில்லில் தனது வித்தையைக் காட்டினான்.
கர்ணன் காட்டிய வில் வித்தையைக் கண்டு அரங்கில் இருந்த எல்லோரும் வியக்க, நாணத்தோடு நின்ற அருச்சுனனைப் போருக்கு அழைத்தான் கர்ணன். அங்கிருந்த துரியோதனன் கர்ணனைத் தழுவிப் பாராட்டுகின்றான். அருச்சுனனும் கர்ணனும் ஒருவருக்கு ஒருவர் கோபமாகப் பேசிக் கொள்கின்றனர். "சூதன் மகனான கர்ணன் வெகுண்டு பேசுவது தவறு" என்று கிருபாச்சாரியார் கூறுகின்றார். வீரத்தில் ஏது சாதிபேதம்? சாதிபதேம் பார்ப்பவர் ஆச்சாரியராக இருக்க முடியாது. வீரனுக்குத் தான் வில் வித்தை. இதில் சாதிபேதம் இல்லை. எனவே, துரியோதனன் எழுந்து சாதிபேதம் கருதுவது தகாது என்று சொல்லி, "இன்னார் இன்னார்க்குச் சாதிபேதம் கருதுவது தக்கது அல்ல" என்று சொல்லுகின்றான்.
"கற்றவர்க்கும், நலன்நிறைந்த கன்னியர்க்கும், வண்மை கை
உற்றவர்க்கும், வீரர் என்று உயர்ந்தவர்க்கும், வாழ்வுஉடைக்
கொற்றவர்க்கும், உண்மையான கோதுஇல் ஞான சரிதராம்
நற்றவர்க்கும் ஒன்றுசாதி, நன்மை தீமை இல்லையால்.". --- வில்லிபாரதம்.
இதன் பொருள் ---
படித்தவர்களுக்கும், அழகு நிறைந்த கன்னிகைகளுக்கும், ஈகைக் குணம் கைவந்தவர்களுக்கும், வீரர்கள் என்று சிறப்பாக மதிக்கப்பட்டவர்களுக்கும், செல்வ வாழ்க்கையை உடைய அரசாட்சி பூண்டவர்களுக்கும், உண்மையான - குற்றமற்ற தத்துவ ஞானத்தையும், அதற்கு ஏற்ற ஒழுக்கத்தையும் உடையவர்களாகிய நல்ல தவம் செய்யும் முனிவர்களுக்கும் சாதி ஒன்றுதான். அதில் உயர்வு தாழ்வு என்னும் பகுப்பு இல்லை.
எந்தச் சாதியில் பிறந்திருப்பினும் கற்றவர் முதலியோர் மேன்மை பெறுவர், கல்லாதவர் முதலியோர் கீழ்மை உறுவர். எனவே, இவர்களில் சாதி வேற்றுமை குறிக்கக் கூடாது என்பது கருத்து.
"நாற்பால் குலத்தின், மேற்பால் ஒருவன்
கற்றிலன் ஆயின் கீழ் இருப்பவனே.
எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியில் கற்றோரை மேல்வருக என்பர்,
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்".
என்பது அதிவீர்ராம பாண்டியர் அருளிய "வெற்றிவேற்கை" என்னும் "நறுந்தொகை" ஆகும்.
இதன் பொருள் ---
நான்கு வகையாகச் சொல்லப்பட்டுள்ள குலங்களில், உயர்குலத்தில் பிறந்த ஒருவன் கல்லாதவனாக இருந்தால், அவன் தாழ்ந்த இடத்தில் இருப்பவனே. எந்தக் குலத்தில் பிறந்திருந்தாலும், யாராக இருந்தாலும், அந்தக் குலத்தில், கல்வி கற்ற ஒருவன் இருப்பானானாயின், அவனை மேலிடத்தில் உள்ளோர் வருக என்று அழைத்து உபசரிப்பர்.
"பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்; .
ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும்,
'மூத்தோன் வருக என்னாது, அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்,
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே".
என்று புறநானூற்றிலும் கூறப்பட்டு உள்ளது. ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்களானாலும், கல்விச் சிறப்பால் உயர்ந்தவனைத்தான் தாயும் விரும்புவாள். வீட்டில் மட்டுமல்ல, வெளியிலும் கூட, ஒரு குடும்பத்தில் பிறந்தவர்களில், மூத்தவனை வருக என்று அழைத்துச் சிறப்புச் செய்யாது, அந்தக் குடும்பத்தில் உள்ள கற்றறிந்தவனையே அரசனும் விரும்புவான். வேறுவேறு வகையாகச் சொல்லப்பட்டுள்ள நான்கு குல மக்களுள்ளும், கீழ்சாதிக்காரன் ஒருவன் கல்வி அறிவு உடையவனாக இருந்தால், மேல்சாதியானும் அவனிடத்தில் பணி கற்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவான். எனவே, குலத்தால் உயர்வு அல்ல. கல்வி அறிவு ஒழுக்கங்களால் உயர்வு என்பது தெளியப்படும்.
எனவே, "கற்றவர்க்கும்" என்று தொடங்கி, இன்ன இன்னார்க்கு சாதிவேற்றுமை பாராட்டக் கூடாது என்னும் கருத்தை, துரியோதனன் கூற்றாக வில்லிப்புத்தூரார் காட்டினார்.
அடுத்து, "நலன் நிறைந்த கன்னியர்க்கும்" என்றார். அழகு நிறைந்த கன்னியர்கள் என்றால், அது புற அழகைக் குறிக்காது. மாதர் என்னும் சொல்லுக்கு "அழகு" என்பதுதான் பொருள். இங்கே அகத்தில் அழகு நிறைந்த பெண்களைக் குறித்தே சொன்னார். குணவதியாக ஒருத்தி இருந்தால் போதும். சாதபேதம் இல்லை என்பது கருத்து.
"மன்னர் குலத்தில் பிறந்தவன்தான், மன்னர் குலத்தில் பிறந்த இன்னொருவனோடு தனது வித்தையைக் காட்ட முடியும் என்றால், நான் இப்போதே கர்ணனை அங்கதேசத்துக்கு அரசன் ஆக்குகின்றேன்" என்று சொல்லி, அப்படியே செய்து, தனது ஆசனத்தைக் கர்ணனுக்குத் தந்து அவனை எல்லோருடனும் ஒருங்கு அமருமாறு செய்தான் துரியோதனன்.
"என்று நல்ல உரை எடுத்து இயம்பி, ஏனை இழிவினோடு
ஒன்றி நின்ற ஆடகத்தை ஓட வைக்குமாறுபோல்,
அன்று சூதன் மதலைதன்னை அங்கராசன் ஆக்கினான்,
மின் தயங்கு முடி கவித்து, வேந்து எலாம் வியக்கவே". --- வில்லிபாரதம்.
இதன் பொருள் ---
என்று இவ்வாறு நல்ல வார்த்தைகளை துரியோதனன் எடுத்துச் சொல்லி, தன்னினும் தாழ்ந்த உலோகங்களோடு கலந்து இழிந்து நின்ற பொன்னை, புடம் இட்டுச் சுத்தமாக்கி வைப்பது போல, அன்று தேர்ப்பாகன் மகனான கர்ணனை, அரங்கத்தில் கூடி இருந்த அரசர்கள் எல்லாரும் கொண்டாடும்படி, ஒளி விளங்குகின்ற கிரீடத்தை அவனுக்குச் சூட்டி, அவனை அங்கதேச அதிபதியாக, ஆக்கினான்.
"சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" என்று சொல்லி, குலத்தில் உயவர்வு தாழ்வு கற்பிக்கின்ற பாவத்தைச் செய்யவேண்டாம் என்பது இளமைப் பருவத்திலேயே விளங்கவேண்டும் என்பதாகச் சொல்லி வைத்தார் அமரகவி பாரதியார்.
"சாதி இரண்டு ஒழிய வேறுஇல்லை, சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி"
என்றார் ஔவையார். மனிதர்கள் பிறப்பால் உருவாக்கி கொள்ளுகின்ற சாதியை ஔவையார் குறிப்பிடவில்லை. பிறப்பால் எந்தக் குலத்தில் பிறந்தவர் ஆனாலும், ஒருவன் துன்பத்தில் உள்ளான் என்பதை அறிந்து, இல்லை என்று ஒருவன் கேட்கும் முன்பாகவே கொடுத்து உதவுபவர்களே பெரியோர்கள். பொருள் இருந்தும், உதவ வேண்டும் என்ற மனநிலை இல்லாவர்களே தாழ்ந்தவர்கள் என்றும் இவ்வாறு இரண்டு சாதிகளே உலகில் நீதிநெறிகளின்படி பார்த்தால் உண்டு என்றார் ஔவையார்.
“ஈதல் இசைபட வாழ்தல்,அது அல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.”
என்று திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்தினார். போகின்ற வழிக்குப் புண்ணியத்தைத் தேடிக் கொள்ளவேண்டும் என்றால், ஒருவன் தன்னிடத்தில் உள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுத்து அதன் மூலம் வருகின்ற புகழோடு வாழ்தல் வேண்டும். அதைத் தவிர உயிருக்கு ஊதியமாக வருவது வேறு ஒன்றும் இல்லை.
சாதி குலம் பேசுகின்ற ஈனத்தனத்தினால், உள்ளத்தில் ஊனமே உண்டாகும். அந்த ஈனத்தனத்திலே தன்னை ஆட்படுத்திக் கொண்டவர்கள் ஈடேற வழியே இல்லை. அவர்களுக்குப் பிறவி என்னும் தடுமாற்றமே உண்டாகும். வெள்ளச் சுழலில் அகப்பட்டுக் கொண்டவனுக்கு அதிலிருந்து தப்பிக்க வழியே இல்லை. அதுபோல,சாதி குலம் பிறப்பு என்கின்ற சுழியிலே, அறியாமையால் தன்னைத் தானே அகப்படுத்திக் கொண்டவர்களுக்கு ஈடேற்றம் இல்லை என்பதைப் பின்வரும் மணிவாசகப் பாடல் உணர்த்தும்.
"சாதி, குலம் பிறப்பு என்னும்
சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதம் இலி நாயேனை
அல்லல் அறுத்து ஆட்கொண்டு
பேதைகுணம் பிறருருவம்
யான் எனது என் உரைமாய்த்துக்
கோதுஇல் அமுது ஆனானைக்
குலாவுதில்லைக் கண்டேனே. --- திருவாசகம்.
இதன் பொருள் ---
சாதி, குலம், பிறவி என்கின்ற சூழலிலே அகப்பட்டு அறிவு கலங்குகின்ற அன்பில்லாத - நாய் போன்ற எனது துன்பத்தினைக் களைந்து, என்னையும் அடிமை கொண்டு அறியாமைக் குணத்தையும் அன்னியருடைய வடிவம் என்ற எண்ணத்தையும், நான், எனது என்று சொல்லும் சொல்லையும் அறவே அழித்து, குற்றம் இல்லாத அமுதம் ஆனவனைத் தில்லையம்பலத்தில் கண்டேன்.
சாதி என்பது பெயரோடு ஒட்டிக் கொண்டு இருந்த நிலை மாறிவிட்டது. கல்வி அறிவு இல்லாத பாமர மக்கள் கூட உயர்வு தாழ்வு பார்ப்பது இல்லை. ஆனால், கற்றவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் உள்ளத்தில் இன்னமும் சாதி, குலம் பிறப்பு என்னும் ஏற்றத் தாழ்வு மனப்பான்மை குடிகொண்டுதான் உள்ளது என்பதே பெரும்பாலானோரின் இன்றைய கருத்து. இது அறிவீனம் என்பதையே நமது முன்னோர்கள் காட்டிச் சென்றனர்.
அன்பு உள்ளவர்கள் உயர்ந்தவர்கள். அன்பு இல்லாதவர்கள் தாழ்ந்தவர்கள். அன்பு உள்ளத்தில் இருந்தால் மனிதகுலம் தழைக்கும். அன்பு இல்லாத கீழ்மக்களால் மனிதகுலம் வேறுபட்டு நிற்கும். "பொன்னின் குடம் உடைந்தால், பொன் ஆகும்; மண்ணின் குடம் உடைந்தால் என் ஆகும்?" என்பது ஔவையார் எழுப்பிச் சென்ற வினா. பொன்னால் செய்யப்பட்ட குடம் உடைந்தால் அது தண்ணீர் பிடிப்பதற்கு, பொருளை வைப்பதற்கு உதவாது. என்றாலும், உடைந்த அந்தப் பொன்குடத்தின் மதிப்புக் குறைவதில்லை. ஆனால் மண்ணால் ஆன குடம் உடைந்தால், அது எதற்கும் பயன்படாது. அதுபோலவே, உள்ளத்தால் உயர்ந்தவர்கள், தமது நிலையில் இருந்து தாழ்ந்து போனாலும் அவர்களுடைய மதிப்புக் குறைவதில்லை.
சாதி, குலம், பிறப்பு முதலியவற்றால் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொள்ளுகின்ற பாவத்தைச் செய்யாது விடுத்தல் வேண்டும். பிறப்பால் இழிந்த குலத்தவரானாலும், ஒழுக்கம் உடையவர் உயர்ந்த குலத்தினராக மதிக்கப்படுவார். உயர்ந்த குலத்தில் பிறந்தவரானாலும், அந்தக் குலத்திற்கு உரிய ஆசாரத்தில் தவறி ஒழுகினால், அவர் தாழ்ந்த குலத்தவராகவே கருதப்படுவார். ஆசாரம் உள்ள இடத்தில் குணம் உண்டாகும். ஆசாரம் இல்லாத இடத்தில் குற்றம் உண்டாகும்.
திருமால் தனது அடியவர்களைத் தான் விரும்பவார் என்றும், அந்த அடியவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும் என்றும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடி அருளியவாறு காணலாம்....
"அடிமையில் குடிமை இல்லா
அயல்சதுப் பேதி மாரில்
குடிமையில் கடமைப் பட்ட
குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய்!
மொய்கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும்
அரங்கமா நகர் உளானே".
இதன் பொருள் ---
(சதுப்பேதிமார்கள் --- சதுர் (நான்கு) வேதங்களை ஓதுகின்றவர்கள்). திருமுடியில் திருத்துழாய் மாலையை அணிந்தவனே! நான்கு வேதங்களையும் ஓதிக்கொண்டு, உனக்குத் திருப்பணி செய்வதில் பற்றுக்கோடு இல்லாதவராய், உனக்கு அடிமை செய்வதில் மாறுப்பட்டவர்களாய் உள்ள வேதியர்களைக் காட்டிலும், குடிப்பிறப்பினால் கீழான சண்டாளருக்கும் கீழ்ப்பட்ட சாதியில் பிறந்தவர்களே ஆனாலும், உனது திருவடிகளுக்கு அன்பு செய்யும்படியான அடியவர்களையே விரும்புகின்றவன் அல்லவா நீ.
நான்கு வேதங்களையும் அத்யயனம் செய்த சதுர்வேதிகள், இறைவனே எல்லா உலகுக்கும் சுவாமி என்று அறிவதும், வேதங்களை ஓதுவன்பயன் பகவத் கைங்கரியத்தோடு பாகவத கைங்கரியமும் என்று அறிந்து கடைப்பிடிப்பது ஆகும். இவற்றை அறியாதவர்கள் சதுர்வேதிகளானாலும், அவர்களால் எவருக்கும் பயன் இல்லை. அவருக்கும் பயன் இல்லை.
"பழுது இலா ஒழுகலாற்றுப்
பல சதுப்பேதி மார்கள்
இழிகுலத் தவர்க ளேலும்
எம்அடி யார்கள் ஆகில்,
தொழுமின், நீர் கொடுமின், கொள்மின்
என்று நின்னோடும் ஒக்க
வழிபட அருளினாய் போன்ம்
மதிள்திரு அரங்கத் தானே"
என்று மேலும் பாகவத கைங்கரியத்தின் உயர்த்திக் கூறுகின்றார் தொண்டரடிப்பொடி ஆழ்வார்.
இதன் பொருள் ---
மதில்கள் சூழ்ந்துள்ள திருவரங்கம் என்னும் திவ்விய தேசத்தில் அறிதுயில் கொண்டு இருப்பவனே! பிரமன் முதல் அளவும் நீண்டு வருகின்ற வம்ச பரம்பரையில், ஒரு குற்றமும் இல்லாதவர்களாய், நான்கு வேதங்களையும் ஓதுகின்றவர்ளே! நமக்கு அடிமைப்பட்டவர்கள் என்று இருக்கின்ற பாகவதர்கள் கீழான குலத்தில் பிறந்தவர்களே ஆனாலும், நீங்கள் அவர்களைத் தொழுதல் வேண்டும். உங்களிடம் உள்ள சிறந்த பொருளை அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். அவர்களிடம் சிறந்த பொருள் இருக்குமானால், அவர்களிடமே கேட்டுத் தெளிவு பெறுங்கள் என்று அருளிச் செய்து, உனக்குச் சமானமாக அவர்களை (கீழானவர்களையும்) ஆராதிக்கும்படியாக அருளிச் செய்தாய் அல்லவா?
உயர்ந்த சாதியில் பிறந்த ஒருவனுக்குப் பாதுகாவலனாக இருப்பதாக அறிந்த இடம், சண்டாள சாதியில் பிறந்த நம்பாடுவானுடைய சம்பந்தம் ஒரு பிராமணனுக்கு, அவன் பிராமண ஒழுக்கம் தவறியதால் ஏற்பட்ட பிரமராட்சதத் தன்மையை நீக்கியதால் அறியலாம் என்று பெரியோர் கூறியுள்ளார்கள்.
இசைக்குப் பெயர்பெற்ற பாணர் குலம் காலப்போக்கில் தீண்டாக் குலம் ஆனது. அக்குலத்தில் பாண்பெருமாள் என்னும் திருநாமத்தோடு, ஆழ்வார்கள் வரிசைக் கிரமத்தில் பதினோராம் ஆழ்வாராக அவதரித்தவர் சிறந்த திருமால் அடியார். எனினும், தன் குலத்தின் பொருட்டு திருவரங்கத்தின் உள்ளே நுழைவதற்கும், அந்த மண்ணை மிதிப்பதற்கும் அஞ்சி காவிரியின் மறுகரையில் இருந்தவாறே, பண் இசைத்துத் திருவரங்கனைப் பாடி வந்தார். காவிரியிலிருந்து தண்ணீரைக் குடத்தில் எடுத்துச் சென்று அரங்கனுக்கு திருமஞ்சனம் செய்யும் பொருட்டு விரைந்து வந்த லோகசாரங்கர் என்னும் கோயில் பட்டர், வழியில் தன்னிலை மறந்து நின்றுகொண்டிருந்த பாணரைப் பலமுறை அழைத்தும் அவர் செவிமடுக்காததால்,பாணர் விலகும் பொருட்டு ஒரு கல் கொண்டு எறிந்தார். லோகசாரங்கர் எறிந்த கல் பாணரின் தலையில்பட்டு குருதி பெருக, அதைக் கவனியாது லோகசாரங்கர் தண்ணீரோடு அரங்கன் முன் சென்றார். பாணரின் சிறந்த பத்தி உணர்வையும், அவரது உயர்வையும் உணர்த்த விரும்பிய திருவரங்கன், இரத்தம் வடிந்த முகத்தினராய் லோகசாரங்கருக்கு காட்சி கொடுத்ததோடு, பாணரான திருப்பாணாழ்வாரைத் தனது தோளில் சுமந்து திருவரங்கத்துள் கொணர்ந்து தனது சந்நிதியில் நிறுத்தும்படியும் லோகசாரங்கருக்கு ஆணையிட, அவ்வாறே செய்தார். அதன் பொருட்டு திருப்பாணாழ்வாருக்கு "முனிவாகனன்" என்றும் "யோகிவாகனன்" என்றும் பெயர் ஏற்பட்டது.
"என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே" என்று பாடியபடி தன் பருஉடலோடு ஆண்டாள் போல அரங்கனோடு இரண்டறக் கலந்தார். இதனால், திருமால் குலம் கோத்திரம் பார்ப்பதில்லை. அன்பு செய்யும் அடியவரையே விரும்புகின்றான் என்பது தெளிவாகும்.
தில்லையின் சிறப்பை அறிந்தும் உணர்ந்தும் இருந்த திருநாளைப் போவார் நாயனார் என்னும் நந்தனார், தமது குலத்தின் இழிவைக் கருதி,தில்லைத் திருத்தலத்தை மிதிப்பதற்கு ஆஞ்சி, தில்லையின் எல்லையை இரவு பகல் பலகாலும் வலம் செய்து வந்தார். ஒருநாள், "தில்லையின் உள் நுழைவிற்கு இப்பிறவி தடையாக நிற்கிறதே, எந்த வழியில் திருக்கூத்தைக் கண்டு தொழுவது" என்று நினைந்து, நினைந்து, மனம் நொந்து நொந்து உறங்கிவிட்டார். அன்பர் உள்ளம் கோயில் கொண்ட தில்லையம்பலவாணன், நந்தனார் கனவில் தோன்றிப் புன்முறுவல் செய்து, "இப் பிறவி ஒழிய நீ நெருப்பில் மூழ்கி வேதியர்களுடன் நம் முன் அணைவாய்" என்று திருவாய் மலர்ந்தருளினான். மேலும் தொடர்ந்து, தில்லைவாழ் அந்தணர்கள் கனவில் தோன்றித் திருநாளைப் போவார் நிலையை அவர்களுக்கு உணர்த்தி, எரி அமைக்குமாறு பணித்து அருளினான். அந்தணர் பெருமக்கள் விழித்து எழுந்து, அச்சத்துடன் ஆலயத்திலே ஒருங்கு சேர்ந்து, ஆண்டவன் கட்டளையை நிறைவேற்ற உறுதிகொண்டு, திருநாளைப் போவாரிடம் சேர்ந்தார்கள். சென்று, "ஐயரே! ஆண்டவன் ஆணைப்படி இங்கே வந்தோம், உம்பொருட்டு எரி அமைக்கப் போகிறோம்" என்றார்கள். திருநாளைப் போவார் "உய்ந்தேன், உய்ந்தேன்" என்று ஆண்டவன் திருவருளைப் போற்றினார்.
உயர்ந்த குலம் ஒழுக்கத்தைக் கொடுக்கும் என்பதை, கம்பர் கோசல நாட்டின் பெருமையைக் குறித்துப் பாடியுள்ளார்.
"கலம் சுரக்கும், நிதியம்; கணக்கு இலா,
நிலம் சுரக்கும், நிறை வளம்; நல் மணி
பிலம் சுரக்கும்; பெறுதற்கு அரிய தம்
குலம் சுரக்கும்ஒழுக்கம் குடிக்கு எலாம். --- கம்பராமாயணம், நாட்டுப் படலம்.
இதன் பொருள் ---
குடிக்கு எலாம் -கோசல நாட்டு மக்களுக்கெல்லாம்; நிதியம் கலம் சுரக்கும் - செல்வத்தைக் கப்பல்கள் கொடுக்கும்; நிலம் கணக்கு இலா நிறைவளம் சுரக்கும் - நன்செயும் புன்செயும் ஆகிய நிலங்கள் அளவற்ற நிறைவளத்தைக் கொடுக்கும்; பிலம் நல் மணி சுரக்கும் - சுரங்கங்கள் நல்ல இரத்தினங்களைக் கொடுக்கும்; பெறுதற்கு அரியதம் குலம் ஒழுக்கம் சுரக்கும் - பெறுவதற்கு அரியதாகிய குலம் ஒழுக்கத்தைக் கொடுக்கும்.
நல்ல குலம், தீய குலம் என்பதன் பொருளை நாலடியார் உணர்த்துமாறு காணலாம்.
"நல்ல குலம் என்றும் தீய குலம் என்றும்
சொல்அளவு அல்லால் பொருள்இல்லை; - தொல்சிறப்பின்
ஒண்பொருள் ஒன்றோ? தவம் கல்வி, ஆள்வினை
என்று இவற்றான் ஆகும் குலம்". --- நாலடியார்.
இதன் பொருள் ---
நல்ல குலம் என்றும் கெட்ட குலம் என்றும் உலகத்தில் பிறப்பின் மேலேற்றிச் சொல்வது வெறும் சொல்லளவே அல்லால், அதற்குப் பொருள் இல்லை. குலம் என்பது, தொன்று தொட்டுவரும் மேன்மையினை உடைய செல்வத்தால் மட்டுமல்ல, தவம், கல்வி, முயற்சி என இவை தம்மால் எல்லாம் உண்டாவதாகும்.
உயர்ந்த குலத்தில் பிறந்து, அந்தக் குல ஒழுக்கம் தவறி, கன்ம சண்டாளனாக ஒருவன் ஆவது இழுக்கு. குலத்திற்கு ஏற்ற ஒழுக்க நிலையில் இருந்து உயர்கதியை அடைதல் வேண்டும். ஒழுக்கம் கெடுமானால், இழிந்த பிறப்பு ஆகிவிடும். மறந்துபோனால் கூட, வேதத்தை, திரும்பவும் தக்கவரை அடுத்து ஓதிக் கொள்ளலாம். ஆனால், உயர் குலப் பிறப்பானது ஒழுக்கம் குன்றினால் கெட்டுப் போகும் என்பதைக் காட்ட, "மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்" என்றார் திருவள்ளுவ நாயானர். சன்ம சண்டாளனாகப் பிறந்த ஒருவர், தமது ஒழுக்க நெறியால் உயர் நிலையை அடையலாம் என்பதே திருப்பாணாழ்வார் மற்றும் திருநாளைப் போவார் நாயானார் வரலாறு உணர்த்துவது.
ஏனவே, உண்மையில், "சாதிகள் இல்லையடி பாப்பா! குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" என்ற பாரதியைப் போற்றி, அவர் காட்டிய வழியில் நிற்றல் மேன்மை. சாதி குலம் பற்றிய பேத உணர்வை மனதில் அதை இருத்திக் கொள்ளுதல் கூடாது. மனத்தில் நினைவு இருந்தால், அது சொல்லாக மாறுகிறது. எனவே, மனத்தால் சாதி வேற்றுமை நினைப்பதே பாவம்தான்.
"பாவம் செய்யாது இரு மனமே- நாளைக்
கோபம் கொண்டே எமன் கொண்டோடிப் பாவான்,
பாவம் செய்யாது இரு மனமே".
நல்ல வழிதனை நாடு – எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு,
வல்லவர் கூட்டத்தில் கூடு – அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு".
என்னும் கடுவெளிச் சித்தர் பாடியதை உணர்வோம்.
No comments:
Post a Comment