மரணப் பிரமாதம் இல்லை

 


மரணப் பிரமாதம் இல்லை

-----

 

     மரணம் என்பது பற்றி நன்றாகவே தெரியும். "பிரமாதம்" என்னும் சொல்லுக்குதவறுஅபாயம் என்று பொருள். மரணப்ரமாதம் இல்லை என்றால்மரணம் என்னும் தவறு நேர்வது இல்லைமரணம் என்னும் அபாயம் இல்லை என்று பொருள்.

 

     ஞானம் பெற்றவர்கள் இந்த உலக வாழ்வு நிலையற்றது என்பதை உணர்கிறார்கள்இறைவன் நித்தியமான பொருள் என்பதையும் அறிகிறார்கள். நமக்கு மரணம் நிச்சயம் என்பதைத் தெளிந்துகொண்டு நமக்குத் துணையாக இருப்பது இறைவன் திருவருள் என்று உறுதியாக உணர்ந்து அதனை அடைய முயற்சி செய்கிறார்கள். இந்த இரண்டு வகையான அறிவில் நாம் மரணம் அடைவோம் என்ற ஒன்றை எல்லோரும் அறிவார்கள். 

 

     சிறு பையன் ஆனாலும் உலகில் பிறந்த மக்கள் யாவரும் நிச்சயமாக மரணத்தை அடைவார்கள் என்ற உண்மையை அறிவான். அதற்காகச் சாத்திரம் படிக்க வேண்டாம். புராணம் எதையும் படிக்கவேண்டாம். வேதாந்த நூல்களை ஆராய்ச்சி பண்ண வேண்டாம். கண்கூடாகப் பார்த்து வருகின்ற உண்மை ஆகிய மரணம், 'நமக்கு இல்லைஎன்று அருணகிரிநாதர் சொல்கிறார்.  

 

     "பிரமாதம்" என்பதற்கு தவறு என்று பொருள். அளவில் மிக்கது என்றும் பொருள் உண்டு. இசைவாணர் ஒருவர் நன்றாகப் பாடுகின்றார். இசை பற்றித் தெரிந்த ஒருவர்,'பிரமாதம்பிரமாதம்என்கிறார் ஒருவர். மிக அலங்காரமாகப் போட்டிருக்கும் பந்தலைப் பார்த்து, 'மிகப் பிரமாதமாக இருக்கிறதே' என்கிறோம். ஆனால்உண்மையில் பிரமாதம் என்னும் சொல்லுக்குதவறுஅபாயம் என்பதுதான் பொருள்.

 

     யாவரும் மரணம் என்றால் அஞ்சுகிறார்கள். அவர், 'அந்தப் பயம் நமக்கு இல்லை" என்று பெருமிதத்தோடு சொல்கிறார். பல பல இடங்களில் நான்எனக்கு என்று சொல்லி வந்தவர் இங்கே, 'நமக்கு என்கிறார். அப்பர் சுவாமிகள் மிகமிகப் பணிவு உடையவர். "குலம் பொல்லேன் குணம் பொல்லேன் குறியும் பொல்லேன்என்று தம்மைச் சொல்லிக் கொள்கிறார். ஆனால் இறைவன் திருவருட் பேற்றைப் பெற்ற பெருமிதத்தில், "நாம் ஆர்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்" என்று மிடுக்கோடு பாடுகிறார். எல்லோரும், "ஐயோ!என்று அலறும் இடத்தில் அவர், 'நாம்என்று தலை நிமிர்ந்து பேசுகிறார். அதுபோலவே அருணகிரிநாதர், "மரணம் எனக்கு இல்லைஎன்று சொல்ல வேண்டியவர், 'மரணம் என்ற தவறு நமக்குக் கிடையாதுஎன்று பேசுகிறார். அது அவருடைய பெருமிதத்தைக் காட்டுகிறது. 

 

     மனிதன் வாழ்நாளில் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாமல்,செய்ய வேண்டாத காரியங்களைச் செய்தால்,தவறு செய்தான் என்று சொல்வோம். அந்தப் பிழைக்குப் பயன் பிழையாகவே விளையும். தினை விதைத்தால் தினை விளையும்வினை விதைத்தால் வினை விளையும். பிழைக்குப் பிழைதான் விளையும்.வாழ்நாளில் செய்ய வேண்டிய காரியங்கள் அல்லாதவற்றைச் செய்தால் தவறு ஆகிய மரணம் சம்பவிக்கும். 

 

      "மரண ப்ரமாதம் நமக்கு இல்லையாம்" என்று அருணகிரிநாதர் அருளிச் செய்து உள்ளரேமரணம் இல்லாமல் இருக்க முடியுமாமரணம் இல்லாப் பெருவாழ்வு என்பது ஒன்று உண்டா 

 

      நமது உடம்பு ஐந்து பூதங்களால் ஆனது. தாய் வயிற்றில் கருவாகிப் பின்பு அந்தக் கரு முதிர்கிறதுவெளிவந்து நிமிர்ந்து வளர்ந்துவருகிறதுவிதை முளைத்துச் செடியாகி மரமாகிக் கப்பும் கிளையுமாகப் படர்ந்து வளர்வதுபோல வளர்கிறது. எந்தப் பொருளுக்குத் தோற்றம் உண்டோஅந்தப் பொருளுக்கு நிச்சயம் அழிவும் உண்டு. 'தோற்றம் உண்டேல் மரணம் உண்டுஎன்பது சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருள்வாக்கு. தோற்றிய உடம்பு நிச்சயமாக மறையும். உடம்பு மறைவதுதான் மரணம். உலகில் யாராக இருந்தாலும்சிவஞானம் பெற்றவர்களாக இருந்தாலும்நிச்சயமாக இறந்து போவார்கள். எட்டு வயதில் இறந்து போகிறவர்களும் இருக்கிறார்கள். எண்பது வயதில் இறந்து போகிறவர்களும் இருக்கிறார்கள். நூறாண்டுக்கு மேல் ஒருவன் வாழ்ந்தான் என்றாலும்,அவனும் மரணம் அடையத்தான் வேண்டும். உடம்பு எல்லோருக்கும் கடைசியில் மரித்துப் போகும். கடுமையான யோகத்தினால் பல ஆண்டுகள் இளமையோடு வாழ்கிறவர்களானாலும் அவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகாவது மரணம் அடையத்தான் வேண்டும். உடம்பு பஞ்ச பூதங்களால் ஆனது. ஐம்பெரும் பூதங்கள் இருக்கும் வரையில்தவம் யோகம் முதலியவற்றால் வாழ்ந்து கொண்டிருக்க வகை தேடிக் கொண்டாலும்ஐம்பெரும் பூதங்களும் மங்கும் பிரளயம் உண்டாகும்போது பஞ்ச பூதங்களால் ஆன உடம்பும் அழிந்தே போக வேண்டும்.

 

        'அப்படி இருக்கமரணம் இல்லை என்று சொல்லுவது சரியாகுமாஎன்னும் ஐயம் எழுந்தால் அது நியாயமானதே. அருணகிரிநாதப் பெருமான், "மரணப் பிரமாதம்நமக்கு இல்லை" தம்மைத் தான் குறிப்பிட்டுச் சொன்னார்.

 

        மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றால் என்னஉடம்பிலிருந்து உயிர் போய் விட்டால் மரணம் என்று சொல்கிறோம். ஒருவன் நோய்வாய்ப்பட்டு இறந்து போகிறான். மற்றொருவன் மாரடைப்பினால் இறக்கிறான். வேறொருவன் விபத்தில் அகப்பட்டு மடிகிறான். இப்படி உயிர் உடம்பைவிட்டுப் புறப்படுகின்ற முறையில் பல வேறுபாடு இருந்தாலும்மரணம் என்பது எல்லோருக்கும் பொதுவாகவே இருக்கிறது. மரணத்தினால் ஏற்படுகின்ற துன்பத்தைக் கண்டு சிலர் எமன் என்றைக்கு வந்துவிடுவானோ என்று பயத்தால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். 'சாவு என்றைக்கு வந்தாலும் கவலை இல்லை" என்று இருப்பவர்கள் எமனுக்குப் பயப்படுவதில்லை.

 

     "சந்தமும் வேதமொழி யாது ஒன்று பற்றின்துதான் வந்து முற்றும் எனலால் சகம் மீது இருந்தாலும் மரணம் உண்டு என்பதைச் சதாநிஷ்டர் நினைவது இல்லை”  என்கிறார் தாயுமான அடிகளார். எப்பொழுதும் சகஜ நிட்டையில் இருப்பவர்கள்தாம் அடைய வேண்டிய பெருநிலையை அடைந்துபுளியம்பழமும் ஒடும் இருப்பது போல உடம்போடு இருக்கும்போதே உடம்பின் வாசனையை எல்லாம் மாய்த்து விட்டு வாழ்கின்ற பெருமக்கள். இந்த உலகத்தில் இருந்தாலும் மரணம் உண்டு என்ற பயம் அவர்களுக்கு இராது. மரணம் வந்தால் அதனால் ஏற்படும் துன்பம் அவர்களுக்கு இல்லை. "அடியேனுடை யாக்கை புளியம்பழம் ஒத்து இருந்தேன்" என்பார் மணிவாசகப் பெருமான்.

 

       பலகாலம் இவ்வுடம்பில் இருந்த உயிர் போவதனால் ஏற்படும் பிரிவுத் துன்பந்தான் அச்சத்திற்குக் காரணம். உடம்பு நிலையற்றது என்னும் நினைவு நம்மில் பதிந்து இருக்கவில்லை. அதனால்உடம்பின் மீதும்உலக வாழ்வின் மீதும் வைத்த பற்று அறுவது இல்லை. ஒரு நிலைக்குமேல் துன்பமோவலியோ அதிகமானால்,அதை நாம் உணராது இருக்கும்படியான ஆற்றலை இயல்பாகவே இறைவன் கொடுத்து வைத்து இருக்கின்றான். ஒருவனுக்கு காய்ச்சல் அளவு கடந்துவிட்டது என்றால்,உடனே மயக்கம் வந்து விடுகிறது. அப்போது உடம்பு படுகின்ற துன்பத்தை அவனது அறிவு தெரிந்து கொள்வது இல்லை உயிர் போகும்போதுஇந்த உடம்பை விட்டுப் போகிறோமேஎன்ற எண்ணத்தினால் ஏற்படும் அச்சமே பெரிய துன்பமாக விளைகிறது. இந்த உடம்பு நமக்குச் சொந்தம் என்ற நம்பிக்கையோடு இதனிடம் அதிகப் பற்றுக் கொண்டு இருந்ததன் விளைவு இது. இந்த அச்சம் உடம்போடு நிற்பது இல்லை. உடம்போடு சம்பந்தப்பட்ட மக்கள்உடம்போடு சம்பந்தப்பட்ட சொத்துக்கள்உடம்போடு சம்பந்தப்பட்ட வாழ்க்கை ஆகிய எல்லாவற்றையும் பிரிகிறோமே என்று எண்ணி மனம் துன்புறுகிறது.

 

       தண்ணிர் இல்லாக் காட்டில் ஓர் அதிகாரி இருக்கிறார். அவர் மேலதிகாரியிடம் நல்ல பெயர் வாங்கியவர். அவருக்கு மாற்றல் வந்தால் மிக மகிழ்ச்சியோடுதான் இருக்கிறார். மற்றொருவர் மாற்றலாகி விட்டதே என மிகவும் கவலைப்படுகிறார். "வேறு ஊருக்குப் போய்ச் சேர வேண்டுமே!என்று துன்பப்படுகிறார். இருவருக்கும் மாற்றல் என்பது பொதுவானதுதான். ஆனால் ஒருவர் உள்ளத்தில் மகிழ்ச்சியும்மற்றவருக்கு அச்சமும் உண்டாகக் காரணம் என்னதண்ணீர் இல்லாத காட்டில் இத்தனை நாள் மிகவும் துன்புற்றோம். இப்பொழுதாவது நல்ல இடத்திற்கு நம்மை மாற்றினார்களோ என்று எண்ணிஇருக்கும் இடத்தைவிடப் போகிற இடம் நல்லது என்ற நினைப்பினால் மகிழ்கிறார் ஒருவர்.மற்றவரோ, 'இத்தனை நாள் மிகவும் மகிழ்ச்சியாக இங்கே இருந்து கொண்டிருந்தோம். அங்கே போய் எத்தனை துன்பப்பட நேருமோ?'! என்று எண்ணி வருந்துகிறார். 

 

       அதுபோலத்தான்நாம் இந்த உடம்பை விட்டுப் போகும் போதுபோகிற இடம் நல்லதாக இருக்கும் என்று தெரிந்து கொண்டால் போகத் தயாராக இருப்போம். இனி வருகின்ற பிறவியில் நமக்கு இதைக் காட்டிலும் சிறந்த இன்பம் உண்டு என்ற நிச்சய புத்தி உடையவர்கள் இந்த உடம்பை விடுவதால் துன்பப்பட மாட்டார்கள். 

 

"கரும்பு ஆட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்

துரும்பு எழுந்து வேம்கால் துயர் ஆண்டு உழவார்;

வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்

வருங்கால் பரிவது இலர்".             --- நாலடியார்.

 

என்னும் பாடலின் மூலம் இதைத் தெளிந்து கொள்ளலாம்.

 

     நன்றாக விளைந்து முற்றின கருப்பங்கழியை வெட்டிஆலையில் இட்டுக் கருப்பஞ்சாறு பிழிந்துவெல்லம் சர்க்கரை முதலியவை யாவும் பண்ணி பயன் அடையலாம் என்று தோட்டக்காரன் நினைத்துக் கொண்டிருக்கிறான். யாரோ பொல்லாதவன் ஒருவன் அந்தக் காட்டில் நெருப்பை வைத்து விட்டான். கருப்பங்காடு தீப்பற்றி எரிகிறது. தீயிலே கருப்பங் கழிகள் எல்லாம் வெந்து சாம்பலாகின்றன. அதைப் பார்த்துத் தோட்டக்காரன் அலறித் துடித்துப் போவான்.

 

     வேறு ஒருவன்விளைந்த கரும்பை எல்லாம் வெட்டி ஆலையில் இட்டு வெல்லமாக்கி விட்டான். அவன் தோட்டத்திலே கோதுகள்தான் குவிந்து கிடக்கின்றன. அங்கே ஒருவன் நெருப்பை வைத்துவிட்டான் என்றால் அந்தத் தோட்டக்காரன் துன்பப்பட மாட்டான். அந்தக் கோதுகளை வைத்தே அடுப்பு எரித்துகருப்பஞ்சாற்றைப் பாகு காய்ச்சியவன். மிச்சம் உள்ள கோதுயாராலோ எரிக்கப்பட்டால் கவலை கொள்ளமாட்டான். கரும்பினால் உண்டான பயனை அவன் பெற்றுவிட்டதால்கோது எரிந்தால் கவலை இல்லை.  'நானே நெருப்பை வைத்துத் தோட்டத்தைச் சுத்தமாக்க வேண்டுமென்று நினைத்தேன். நல்லவேளை எவனோ வைத்தான். எனக்கு வேலை இல்லாமல் போய்விட்டதுஎன்று எண்ணி மகிழ்வான். 

 

     அதைப் போலவேபெற்று வந்த உடம்பினால் பெற்றுக் கொள்ள வேண்டிய பயனை அடைந்தவர்கள்உடம்பை விட்டுப் போக அஞ்சமாட்டார்கள். உடம்பின் பயனை மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருப்பவர்கள்உடம்பை விட அஞ்சுவார்கள். உடம்பின் பயனைப் பெற்று விட்ட பட்டினத்து அடிகளார், "இந்த உடம்போடு இருப்பது அருவருப்பே" என்றார்.

 

     இறந்து போகின்ற மக்கள் துன்பப்படுவதற்குக் காரணம், 'உடம்பினால் அனுபவிக்க வேண்டியவைகளை இன்னும் அநுபவித்து முடிக்கவில்லையே! இந்த உடம்பு அழிந்து விட்டால் என்ன செய்வது?’ என்ற நினைவே. இந்த உடம்பை வைத்துக் கொண்டு எத்தனையோ இன்பங்களை அடைய வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. அந்த ஆசை ஒவ்வொரு கணமும் மிகுந்து வருகிறது. அது படிப்படியாக வளர்கிறதே அன்றிக் குறைவது இல்லை. இரண்டு அனுபவித்தால் நான்கு வேண்டுமென்று ஆசை கூடுகிறது. பலவற்றை அனுபவிக்க வேண்டுமென்ற ஆசை இருப்பதனால் உயிருக்கு உடம்பை விட்டுப் போக மனம் இல்லை. 

 

      தினமும் கஞ்சியே குடித்து வாழ்கின்ற ஒருவன்கஞ்சிக்குப் பதிலாகப் பால் கிடைக்கும் என்ற உறுதி இருக்குமானால்கஞ்சியை விட்டுவிடக் கவலைப் படமாட்டான். அறநெறியில் செல்வதன் மூலம் இறைவனுடைய இன்ப அனுபவங்கள் நிச்சயமாக உண்டாகும் என்று தெரிந்தால் இந்தப் பிறவியில் இந்திரியங்களினால் ஏற்படுகின்ற இன்பசுகத்தை விட்டுவிடச் சித்தமாக இருப்பார்கள் மக்கள். இந்தப் பிறவியில் இந்திரிய சுகம் என்ற அனுபவம் மட்டுமே நமக்குத் தெரிகிறது. வேறு வகையான அனுபவம் நமக்கு இல்லை. எனவே, இப்போது உண்டாகும் சுகத்திற்குரிய கருவியாக இருக்கிற உடம்பை விட மனம் வருவதில்லை. வேறு வகையான இன்ப அனுபவம் உண்டு என்று அருளாளர்கள் சொன்னாலும்நமக்கு நம்பிக்கை வருவது இல்லை. காரணம்அவர்கள் சொன்ன நெறியில் நாம் ஒழுகுவதும் இல்லை.

 

     ஞானிகளும் மரணம் அடைகிறார்கள். அஞ்ஞானிகளும் மரணம் அடைகிறார்கள். இருவர் மரணமும் ஒன்று அல்ல. ஞானிகளுக்கு மரணம் வந்தால்அது அவர்களுக்குப் பிறவி என்னும் சிறையில் இருந்து விடுதலை பெற்றது போல. நமக்கு மரணம் வந்தால் அது நமக்கு விடுதலை ஆகாது. நேரே நாம் மோட்ச வீட்டுக்குப் போவதில்லை. மீண்டும் பிறவியில் புகுவதால்,நமக்கு ஏற்படுவது சிறைமாற்றம் மட்டுமே. நம்மை ஒரு சிறையிலிருந்து மற்றொரு சிறைக்கு அழைத்துப் போகப் எமதூதர்கள் வருகிறார்கள். ஆனால் ஞானிகள் அடையும் மரணமோ பிறவித் தளையில் இருந்து விடுதலை. அவர்கள் இன்ப துன்பங்களை அனுபவிக்க வேண்டிய காலம் முற்றுப் பெற்றமையினால் வாழ்க்கை என்னும் சிறையில் இருக்கும்போதே நல்ல பிள்ளையாக இருந்து விட்டமையால்அவர்களை நேரே மோட்ச வீட்டுக்கு இறைதூதர்கள் வந்து அழைத்துப் போகிறார்கள். "பிறவி அறஇச் சிறைவிடுதலைப்பட்டதுவிட்டது பாச வினை விலங்கே" என்கின்றார் அருணகிரிநாதர் பிறிதோரிடத்தில்.

 

     இறைவன் திருவடியில் ஈடுபட்டவர்களுக்குச் சிறை மாற்றம் இல்லை. அவர்கள் அடையும் மரணமே அவர்களுக்கு உடம்பு என்னும் சிறையில் இருந்து உயிர் பெறும் விடுதலை ஆகிறது. பாவம் செய்கிறவர்களுக்கு,சிறை மாற்றம் போல,உயிர் இந்தக் கூட்டை விட்டு மற்றொரு கூட்டை அடைய மரணம் ஏற்படுகிறது. 

 

     விடுதலை அடையப் போகிறோம் என்ற நம்பிக்கையுடைய கைதி,தன்னுடைய விடுதலை நாள் என்றைக்கு வரும் என ஏங்கிக் காத்துக் கொண்டிருப்பது போலவே,தமது உயிர் இனி வேறு எந்த உடலுக்கும் போகாமல் நேரே வீடாகிய மோட்சத்திற்குப் போகும் என்பதை ஞானத்தினால் உணர்ந்தவர்கள்,உயிர் விடுதலை அடையும் நாளை எண்ணிக் காத்துக் கிடப்பார்கள். அவர்களுக்கு உடம்பு ஒரு சுமையாகவே இருக்கும். "பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பு மிகை" என்றார் திருவள்ளுவ நாயனார். தனக்கு விடுதலை கிடையாதுசிறைமாற்றம் மட்டுமே உண்டு என்பதை உணர்ந்த கைதி 'இந்தச் சிறையிலேயே இருந்து விடலாமே. இங்கே காவலர்கள் மிகவும் நல்லவர்கள். நம்மை அதிகம் அடிப்பதில்லை. புதிய சிறை எப்படி இருக்குமோஎன்றெல்லாம் எண்ணி அஞ்சி,சிறை மாற்ற நாளை எண்ணிப் பயப்படுவார்கள். 

 

       நம்மைப் போன்றவர்கள் இறந்தால் மரணம் அடைந்தார்கள் என்று சொல்லலாம். ஞானிகள்சித்தர்கள் காலமானால் "பரிபூரணம்" அடைந்தார்கள் என்று சொல்வது வழக்கம். பரிபூரணம் என்றால் "நிறைவு" என்று பொருள். வாழ்க்கையில் நிறைவு அடைந்தார்கள் பரிபூரணம் அடைந்தவர்கள். சிறைவாச காலம் நிறைவேறியவர்கள் அவர்கள். உடம்பின் முடிவு என்பது,அவர்களுடைய மரணம் இல்லாப் பெருவாழ்வின் தொடக்கம். அவர்கள் மீட்டும் உடம்பாகிய சிறையில் புகுவது இல்லை. "மீட்டு இங்கு வந்து வினைப் பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லான்" ஆகிய இறைவன் திருவருள் பெற்றவர்கள் அவர்கள்.

 

       நமக்கு மரணம் ஏற்பட்டால் மறு பிறப்பும்மீண்டும் மரணமும் காத்திருக்கின்றன. ஞானிகளுக்கு அதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வின் தொடக்கமாக இருக்கிறது. இனி வேறு ஒரு பிறவியோசாவோ அவர்களுக்கு இல்லை. மரணத்திலும் மங்கல மரணம், தவறான மரணம் என்று இருவகை உண்டு.. உலக வழக்கில் எண்பது வயதுக்கு மேல் வாழ்ந்துவிட்டு யாராவது இறந்து போனால் அதைக் "கல்யாணச் சாவு" என்று சொல்வார்கள். அவர் வாழ்க்கையில் செய்ய வேண்டியவற்றைச் செய்து விட்டுச் செத்தார்.அவர் சாவுக்கு வருந்த வேண்டியதில்லை. அதனால்பெரியவர் பழுத்த பழமாகிப் போய்விட்டார் என்று  கொண்டாடுகிறார்கள். உண்மையான "கல்யாணச் சாவு" இறைவனுடைய திருவருளைப் பெற்றுஇனிப் பிறவியே இல்லை என்ற நிலையில் உண்டாகும் மரணம்தான். உயிர் விடுதலை பெற்று இறைவனது திருவடியில் சேர்ந்து இறைவனோடு கல்யாணம் நிகழும் நிலையை "மங்கல மரணம்" அல்லது "கல்யாணச் சாவு". 

 

     இறந்து இறந்து பிறவி எடுத்து மரணம் அடைவது தவறு. அதனால்,மரணத்தையே தவறு (பிராமதம்) என்று சொன்னார் அருணகிரிநாதர். ஞானிகளுக்கு இந்த மரணமாகிய தவறு உண்டாகாது. அது விடுதலையாகபரிபூரணமாக இருக்கும். இறைவனை நம்பினவர்களுக்கு மரணம் வராதுவிடுதலைதான் கிடைக்கும். இப்படிச் சொன்னவுடனேயே நமக்கும் ஆசை உண்டாகிறது. மரணம் ஆகிய தவறு இல்லாத மங்கல வாழ்வு கிடைக்கிறது என்று சொன்னால் யாருக்குத்தான் ஆசை இராது?

 

     அந்த மரணமில்லாப் பெரு வாழ்வு கிடைக்காதாஎன்ற ஆசை நிச்சயம் உண்டாகும். அதற்கு வழி தெரியவேண்டும். வழியை யாராவது ஒருவர் காட்டினால் தெரிந்துகொள்ள முடியும். அந்த வழியில் பயணம் செய்ய என்ன செய்யவேண்டும் என்பதையும் ஒருவர் நமக்குச் சொன்னால்தான் தெரியும். அருணகிரிநாரிடம், "சுவாமீ! நீங்கள் மரணப் பிரமாதம் இல்லை என்கிறீர்களே. உங்களுக்கு யார் துணைஎமனுக்குத் தெரிந்தவர்கள் யாராவது உங்களுக்குத் தெரியுமா அதனால்தான் எமன் உங்களைக் கொல்ல மாட்டான் என்கிறீர்களா?என்று கேட்டால்அவரிடம் இருந்து "என்றும் வாய்த்த துணை கிரணக் கலாபியும் வேலும் உண்டே" என்ற பதில் கிடைக்கின்றது. என்றும் - எல்லாக் காலத்திலும்வாழுகின்ற காலத்திலும்உலக வாழ்வை விட்டுச் செல்லும்போதும். வாய்த்த துணை - அமைந்த துணைபொருந்தி உள்ள துணை. கிரணக் கலாபியும் - ஒளி வீசுகின்ற கலாபம் என்னும் தோகையினை உடைய மயிலும். வேலும் - எம்பெருமான் திருக்கரத்தில் விளங்குகின்ற வேலும். எனவேமரணமாகிய தவறு எனக்கு இல்லை என்கின்றார்.

 

     தவறு இருந்தால் மரணம் உண்டு. தவறு செய்யாதபடிக்குநெறி தவறிப் போகாதபடிக்குப் பாதுகாத்து இருப்பவை வேலும் மயிலும் ஆகிய துணை என்கின்றார் அருணகிரிநாதர். மயில் திரோதான சத்தி ஆகும். செல்லக் கூடாத வழியில் செல்லாமல்படிக்குத் தடுப்பது மயில். இறைவன் திருவடியில் ஈடுபட வைப்பது ஞானசத்தி ஆகிய வேல்.ஒளி படைத்த வேல்ஞான ஒளியைக் காட்டுகிறது. "அஞ்ஞானத்தை அடையாதே" என்று மயிலும்"ஞானத்தை அடைவாயாக" என்று வேலும் துணையாக நின்று சுட்டுவதனால்நான் தவறுகளைச் செய்யாமல்,தவறு அல்லாத நல்ல வழியில் செல்கிறேன். அதனால்,'மரணப் பிரமாதம் எனக்கு இல்லைஆம்என்கின்றார் அருணகிரிநாதர்.  

 

     முருகன் பிரதாபத்தை உடையவன். பிரதாபம் என்றால் புகழ் அல்லது கீர்த்தி என்று பொருள். புகழ் இரண்டு வகையில் வருகின்றது. வீரத்தினால் வருகின்ற புகழ் வருவது ஒன்று.ஈகைப் பண்பினால் வருகின்ற புகழ் ஒன்று. "ஈதல் இசைபட வாழ்தல்" என்றார் திருவள்ளுவ நாயனார். யார் கொடுக்கிறார்களோ அவர்கள் புகழ் பெறுகிறார்கள். ஈகையினால் வருகின்ற புகழைக் கீர்த்தி என்பர். வீரத்தினால் அடைகின்ற புகழ் பிரதாபம். முருகன்  மிக்க பிரதாபம் உடையவன்முருகன் கீர்த்தியும் புகழும் உடையவன்.

 

      இந்திராணியின் மங்கல நாணைக் காத்த பிரதாபத்தை உடையவன் முருகப் பெருமான். "இந்திராணி மாங்கல்ய தந்து ரட்சாபரண!" என்றும், "க்ருபாகர" என்றும் கூறுகின்றார். இந்திராணியின் மங்கலநாணைக் காத்துத் கிருபை புரிந்தவன் முருகப் பெருமான்.

 

     இந்திராணியின் கழுத்தில் இருக்கும் மங்கல நாண் சிறியதும்  மிக மெல்லியதும்தான். இவ்வளவு சிறிய மெல்லிய நாண் முருகன் இல்லாவிட்டால் அவள் கழுத்தில் இல்லாமல் போயிருக்கும். சூரபதுமன் வென்றிருந்தால்இந்திரனைக் கொன்றிருப்பான். இந்திராணியின் மங்கல்யதந்து(தாலிக் கயிறுவாங்கப்பட்டிருக்கும். அதை இரட்சிக்க வேண்டும் என்ற பெருங்கருணை காரணமாக முருகப்பெருமான் போர்க்களம் புகுந்தார். அரக்கர்கள் மாண்டனர். சூரபதுமனால் சிறையிடப்பட்டு இருந்து இந்திரன் முதலான தேவர்கள் மீண்டனர். இந்திரன் வாழ்ந்தான். இந்திராணியின் கழுத்திலுள்ள தாலியும் அறுபடாமல் பிழைத்தது. அவள் கழுத்தில் இருக்கிற மாங்கலநாண் முருகனின் பிரதாபத்ததைச் சொல்லுகின்றது.  சசிதேவி என்பது இந்திராணியைக் குறிக்கும்.

 

     முருகன் வீரத்தோடுஈகைப் புகழும் உடையவன். பிறருக்கு இல்லை என்னாது கொடுத்துக் கொடுத்துப் புகழை அடைவதற்கு அவன் அருள் துணைபுரிகின்றது. பொருளைக் காட்டிலும் சிறந்தது அருள். பொருளை மனிதன் தன்னுடைய முயற்சியினால் பெறலாம். அருளை இறைவனு திருவருளால் மட்டுமே பெற முடியும். தன்னுடைய திருவடியே புகலிடமாகக் கொள்கிறவர்களுக்கு,அடைக்கலம் தந்து வாரி வழங்க அருள்நிதியை வைத்திருக்கிறான்.  கிருபைக்கு இடமாக உள்ளவன் என்பதால், "கிருபாகர"என்றார். "எல்லார்க்கும் இல்லை என்னாது அருள் செய்வார்" என்பது சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருள்வாக்கு.

 

      அது மட்டும் அல்ல. மரணம் வேண்டாம் என்றால்,அறியாமை போக வேண்டும். ஞானம் பெற வேண்டும். அவன் அருளால் ஞானம் உண்டாகிறது. உயிர்கள் தங்களுடைய மரணத்தை நீக்கிக் கொள்வதற்கு வழியே அவன் திருவடியைப் பற்றுவதுதான்.உயிர்களுக்கு அருள் கொடுத்துஞானத்தையும் கொடுத்து மரணமில்லாப் பேரின்ப வாழ்வைப் பெறும்படி செய்கிறான் முருகப் பெருமான். ஞானத்துக்கு இருப்பிடம் அவன். எனவே, "ஞானாகர" என்றார்.

 

     பாஸ்கரன் என்றால் சூரியன் என்று பொருள். சூரியன் இருளை நீக்கி ஒளியைப் பரப்புவான். தேவர்களுடைய உள்ளத்தில் தோன்றுகின்ற அகங்காரமாகிய இருள் நீக்குகின்ற ஞானசூரியனாக இருக்கிறான்.  தேவர்களின் துன்பத்தைப் போக்கும் எம் பெருமான் அவர்களது அறியாமை இருளை நீக்கும் சூரியனாக இருக்கிறான். ஆகவே"சுர பாஸ்கரனே" என்கிறார். 

 

      அருணகிரிநாதரைப் போல நாமும் மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழலாம். வீணாகப் பயன் இல்லாத செயல்களில் ஈடுபட்டுக் காலத்தை நாம் கொன்றால்,காலன் நம்மைக் கொன்று விடுவான். காலத்தைக் கொல்லாமல் பயன்படுத்திக் கொண்டால்நாம்காலனைக் கொன்று விடலாம். காலத்தை வீணாக்காமல் நம்முடைய எண்ணங்களை எல்லாம் இறைவன்பால் செலுத்தி வாழ்ந்தால் காலம் போவது தெரியாமலே போய்க் கொண்டிருக்கும். 

 

"தூங்கிக் கண்டார் சிவலோகமும் தம் உள்ளே;

தூங்கிக் கண்டார் சிவயோகமும் தம் உள்ளே;

தூங்கிக் கண்டார் சிவபோகமும் தம் உள்ளே;

தூங்கிக் கண்டார் நிலை சொல்வது எவ்வாறே"

 

என்பார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார். தூங்குவது உறக்க நிலை. தூங்காமல் தூங்குவது தியான நிலை. தூங்காமல் தூங்கும் தியான நிலையில்தான் ஞானிகள் தம்மை அறிந்து கொள்கின்றனர். தம்மை அறிந்துகொண்ட ஞானிகள் சிவலோகத்தையே தமக்குள் தரிசிக்கின்றனர். இப்படித் தூங்கியதால்தான் ஞானிகளுக்குச் சிவயோகம் சித்தித்தது.

 

     வாழ்க்கையில் நாம் எத்தனை காலம் வாழ வேண்டும் என்ற வரையறை இருக்கிறதோஅதுவரையில் தூங்க வேண்டும். தூங்குவதாவதுமனம் இறைவன் திருவடியில் ஒருமைப்பட்டு இருப்பது. அப்படித் தூங்கினால் காலம் போவது தெரியாது. காலனையும் கொன்று, காலத்தை வென்று விடலாம். மரணம் இல்லாப் பெருவாழ்வினை எப்படி அடைவது என்று நல்லதொரு வழியைநமக்கு வள்ளல்பெருமான் காட்டுகின்றார்.

 

"நினைந்து நினைந்துணர்ந்துஉணர்ந்து,நெகிழ்ந்து  நெகிழ்ந்துன்பே

     நிறைந்து நிறைந்துற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு

நனைந்து நனைந்துருளமுதேநன்னிதியேஞான

     நடத்து அரசே!என் உரிமை நாயகனே! என்று

வனைந்து வனைந்து ஏத்துதும் நாம்,வம்மின் உலகியலீர்!

     மரணம் இ(ல்)லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்!

புனைந்து உரையேன்,பொய்புகலேன்,சத்தியம் சொல்கின்றேன்,

     பொற்சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே."

 

     வள்ளல்பெருமான் காட்டியபடி வாழ்ந்தவர்கள் மரணமாகிய தவறு இல்லை என்ற பெருமிதத்தில் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்தார்கள். அவருக்கு முன்னர் அவதரித்த அருணகிரிநாதரும்  எம்பெருமான் ஏறும் வாகனமாகிய மயிலும்அவன் திருக்கரத்தில் உள்ள வேலும் நல்ல துணை நம்பி வாழ்ந்த வகையினால், "மரணப்ரமாதம் நமக்கு இல்லை,ஆம்என்று சொல்லும் வீறு பெற்றார். அந்த வீறு பாடலாக மலர்ந்தது.

 

"மரணப்ர மாதம் நமக்கு இல்லை,ஆம்என்றும் வாய்த்த துணை

கிரணக் கலாபியும் வேலும் உண்டே! கிண் கிணிமுகுள 

சரண! ப்ரதாப! சசிதேவி மங்கல்ய தந்து ரட்சா 

பரண! க்ருபாகர! ஞானாகர! சுரபாஸ்கரனே!"

 

என்று பாடினார் அருணகிரிநாதப் பெருமான். 

 

No comments:

Post a Comment

ஏகம்ப மாலை

  பட்டினத்தடிகள் பாடியருளிய திரு ஏகம்ப மாலை திருச்சிற்றம்பலம் "அறம்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம் துறந்தான், அவனில் சதகோடி உ...