அறமே ஆக்கம் தருவது - அறம் செய விரும்பு
----
திருக்குறளில் "அறன் வலியுறுத்தல்" என்னும் அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "அறத்தைக் காட்டிலும் மேம்பாடு தருவது இல்லை; அந்த அறத்தை மறப்பதைக் காட்டிலும் அழிவைத் தருவதும் இல்லை" என்கின்றார் நாயனார்.
கோவூர் கிழார் என்னும் புலவர் பாடிய புறநானூற்றுப் பாடலில், "சிறப்பு உடை மரபில் பொருளும் இன்பமும் அறத்து வழிப்படுஉம் தோற்றம் போல" என்று சோழன் நலங்கிள்ளிக்கு அறிவுறுத்துமாறு கூறியுள்ளார். "மேன்மை உடைய முறைமையினால் பொருளும் காமமும் அறத்தின் பின்னே தோன்றும் காட்சியைப் போல" என்பது இதன் பொருள்.
பொருள் படைத்த ஒருவன், தனக்கு உள்ள பொருளிலேயே இன்புற்று இருக்கலாம். ஆனால், அந்தப் பொருளைக் கொண்டு அவன் அறச்செயல்களைச் செய்யவில்லையானால், அவன் படைத்துள்ள பொருளால் அவனுக்கு யாதொரு நன்மையும் இல்லை. உண்மையான, நிலைத்த இன்பம் அவனுக்கு இல்லாமல் போகும்.
--- அறத்தின் பெயர் இன்பம்.
--- அறத்தின் பெயர் அமைதி.
--- அறத்தின் பயன் ஒருமைப்பாடு.
--- அறத்தின் பயன் எல்லாரும் நன்றாக வாழ்தல்.
இதுவே மனித வாழ்க்கையின் நியதி ஆகும்.
அறவழியில் நிற்கவில்லையானால், அதுவே ஒருவனுக்கு எல்லாவிதமான கேட்டையும் அடைவதற்கு வழி ஆகும். அறம் என்பது மனம் சார்ந்தது. மனம் செம்மையாக இருந்தால் அற உணர்வு தன்னால் வரும். "மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்" என்று நாயனார் பிறிதொரு திருக்குறளில் காட்டினார். மனம் தூயதாக இருந்தால், இருக்கின்ற நிலையற்ற பொருளைக் கொண்டு, நிலையான பயனைத் தருகின்ற அறத்தைச் செய்து வாழ்வதுதான் வாழ்வின் குறிக்கோள் என்பது புலப்படும். பொருள் பொருளாகவே இருந்தால், என்றாவது ஒரு நாள் அது நம்மை விட்டுப் போகும். அல்லது நாம் அதைவிட்டுப் போய்விடுவோம். பொருளை அருளாக மாற்றிக் கொண்டால், அது நம்மோடு வந்து மறுமைக்கும் இன்பத்தைத் தரும்.
"அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை, அதனை
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு".
என்பது நாயனார் அருளிய திருக்குறள்.
ஒருவனுக்கு மேம்பட்ட பெருக்கத்தைத் தருவது அறத்தைச் செய்வதாலேயே. வேறு ஒன்னிறாலும் ஆக்கம் வருவது இல்லை.அறத்தைச் செய்வதை அறிவு மயக்கத்தால் மறந்து விடுவதால் வருகின்ற மேம்பட்ட கேட்டைத் தருவதும் வேறு ஒன்றும் இல்லை.
ஆக்கம் என்பதற்கு, எல்லாப் பேற்றினும் சிறந்ததாகிய வீடு பேறு என்று சொல்லப்பட்டது. வீடு பேறு, சுவர்க்கம் முதலிய இன்பங்கள் "ஆக்கம்" என்று சொல்லப்பட்டன. அவை உயிருக்கு இன்பத்தையே தருவதால்,பிறப்பினால் வரும் துன்பத்தைக் "கேடு" என்றே கொள்ள வேண்டும்.
"பிறவியால் வருவன கேடு உள, ஆதலால் பெரிய இன்பத் துறவியார்க்கு அல்லது துன்பம் நீங்காது எனத் தூங்கினாயே" என்ற திருஞானசம்பந்தப் பெருமான் தேவாரத்தால் இது தெளியப்படும். முதல் திருப்பதிகத்திலேயே, "துயர் இலங்கும் உலகில்" என்று அப் பெருமானார் பாடியுள்ளதும் கருத்தில் கொள்ளத்தக்கது.
ஆக, "ஆக்கம்" என்பது ஆண்டவன் அருளால் வருகின்ற வீடுபேறும் அதனால் விளைகின்ற அளவிலா இன்பமும் என்பதும், "கேடு" என்பது பிறவியும், அதனால் வருகின்ற துன்பமும் என்பதும் இதனால் நன்கு விளங்கும்.
இத் திருக்குறளுக்கு விளமக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் தாம் பாடிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில், அறவழியில் நின்று, பசுக்களைக் காத்த சண்டீச நாயனாருக்கு, அவர் புரிந்த பாதகத்துக்குப் பரிசாக, தனது திருவடிப் பேற்றை சிவபெருமான் அருளியதையும், வேள்வியை ஆற்றினாலும், அது அறவழியில் அமையாததால், சிவபெருமான் தக்கனைத் தண்டித்ததையும் வைத்து, பின் வரும் பாடலைப் பாடி உள்ளார்.
தண்டிக்கு அருள் புரிந்து, தக்கன் சிரம் அறுக்கும்
அண்டர் பெருமான் அருளும் ஆகமத்தில் --- கண்ட,
அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு.
தண்டி - சண்டேச நாயனார். இவருக்குச் சிவபெருமான் அருளியது சண்டேச பதவி. தக்கன் சிவபிரானிடத்து வெறுப்புற்று அவரை அழையாமல் மற்றத் தேவர்களைக் கொண்டு பெரியதொரு வேள்வியைத் தொடங்கினான். அப்போது, அவன் சிவநிந்தைக்கும், அபசாரத்துக்கும் ஆளாகவே, சிவபெருமான் வீரபத்திரரைக் கொண்டு, அவன் தலையை அறுப்பித்து வேள்வியையும் அழித்தார்.
அண்டர்பிரான் கூறும் ஆகமத்தில் கண்ட அறத்திலும் சிறந்தது இல்லை என்பது சண்டேசுவரர் வரலாற்றால் தெரியவரும். 'அதனை'என்றது ஆகமத்தில் கூறிய அறத்தினை.
அறத்தினை மறத்தலால் வரும் தீங்கினை உணர்த்துவது தக்கன் வரலாறு ஆகும். தாம் சிவபூசை செய்து வரும்போது, அதற்கு இடையூறாகப் பூசைக்குரிய உபகரணங்களைக் காலால் உதைத்துத் தள்ளிய தம் தந்தையின் தாளைச் சண்டேசுவரர் துணித்தார். இச்செயல் அறச் செயலேயாகச் சிவபெருமான் அருளுக்கு இவர் பாத்திரமானார்.
பின் வரும் சிவஞானசித்தியார் பாடல் ஒன்று இங்கு வைத்து எண்ணத் தகும்...
"அரன் அடிக்கு அன்பர் செய்யும்
பாவமும் அறமதாகும்,
பரன் அடிக்கு அன்பு இலாதார்
புண்ணியம் பாவம் ஆகும்,
வரம் உடைத் தக்கன் செய்த
மாவேள்வி தீமை ஆகி,
நரரினில் பாலன் செய்த
பாதகம் நன்மை ஆய்த்தே".
இதன் பொருள் ---
சிவபெருமானுடைய திருவடிக்கு அன்பு பூண்ட மெய்யடியார்கள் வழிபாடு செய்யும் காலத்தில்,அவர்கள் செய்கிற பாவச் செயல்களும் அறமே ஆகும். தலைவனாகிய சிவனது திருவடிகளுக்கு அன்பு இல்லாதவர்கள் செய்யும் புண்ணியங்களும் பாவமே ஆகும். தனது தவ வலிமையால் பல வரங்களைப் பெற்ற தக்கன் இயற்றத் தொடங்கிய சிறந்த வேள்வி பாவச் செயலாக முடிந்தது. சிறிய பெருந்தகையான சண்டீசர் தமது தந்தையின் காலைத் தடிந்த பாதகம் நன்மையாக முடிந்தது.
சிவபெருமானை ஒதுக்கி விட்டுத் தன் முனைப்போடு வேள்வி செய்யத் தொடங்கினான் தக்கன். அந்த வேள்வி அவனுக்கு நன்மையைத் தராமல் தீமையில் முடிந்தது. இந்த வரலாறு கந்த புராணத்தில் இடம் பெறுகிறது
சேய்ஞலூர்ப் பிள்ளையாராகிய சண்டீசர் மணலைச் சிவலிங்கமாகப் பிடித்து வைத்துப் பாலால் திருமஞ்சனம் ஆட்டி வழிபட்டார். அதனைத் தடுக்க முயன்ற தமது தந்தையின் காலை அருகில் கிடந்த சிறு கோலால் எறிந்தார். அதுவே வாளாகித் தந்தையின் கால்கள் இரண்டையும் துணித்து எறிந்தது. இவ்வாறு பெரியபுராணத்தில் கூறப்படுகிறது.
"புத்தன் மறவாது ஓடி எறி சல்லி புதுமலர்கள் ஆக்கினான் காண்" என்பார் அப்பர் பெருமானார். சாக்கிய நாயனார் சிவலிங்கத்தின் மீது நாள்தோறும் கல்லினை எறிந்தது அறச் செயலே. மறச் செயல் அல்ல. ஆனால், மன்மதன் சிவபிரான் மீது எறிந்தவை மலர்க்கணைகள் என்ற போதிலும்,அச் செயல் பாவச் செயலாகவே முடிந்த்து. அதனால் மன்மதன் எரிந்து சாம்பலானான்.
ஆக, அற வழியில் நின்றால் ஆக்கம் என்னும் வீடுபேறு வாய்க்கும் என்பதும், அறத்தை அறிவு மயக்கத்தால் மறந்து அல்லாத வழியில் சென்றால்,கேடு என்னும் பிறப்பும், நரகத் துன்பமும் வாய்க்கும் என்பது தெளிவாக்கப்பட்டது.
அடுத்ததாக, குமார பாரதி என்னும் பெரியவர், தாம் பாடிய "திருத்தொண்டர் மாலை"என்னும் நூலில், இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பெரிய புராணத்தில் வரும் மூர்க்க நாயனார் வரலாற்றை வைத்துப் பின்வரும் பாடலைப் பாடி உள்ளார்.
உருள் ஆயமும் பொன் உதவுதல் மூர்க்கர்க்கே,
பொருள்ஆயம் மற்றவர்க்கே போக்கும்,- அருளாம்
அறத்தினூஉங்கு ஆக்கமும் அல்லை அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.
தொண்டை நாட்டிலே திருவேற்காட்டிலே வேளாளர் குலத்திலே தலைமை பெற்றவர் ஒருவர் இருந்தார். சிவனடியார்களைச் சிவன் எனவே கொண்டு நாள்தோறும் வணங்கித் திருவமுது செய்வித்துத் தாம் உண்ணும் நியமம் உடையவர். அடியவர் வேண்டும் பொருள்களையும் கொடுத்து வந்தார். நாளடைவில் அவரிடமுள்ள பொருள்கள் எல்லாம் அடியார்கட்கு அமுது அருத்தி வந்தமையால் செலவாகிவிட்டன. அடிமை,நிலம் முதலியவற்றையும் விற்று, அவர் மாகேசுர பூசையை மனமகிழ்வுடன் வழுவாமல் செய்து வந்தார். அதன் பின்பு மாகேசுர பூசையைச் செய்வதற்குப் பொருள் இல்லாமையால், தாம் முன்பு கற்றிருந்த சூதாட்டத்தினால் பொருள் சம்பாதிக்க நினைத்தார். அவ்வூரில் சூதாடுவோர் இன்மையால் அவ்வூரை அகன்றார். அவர் சிவத்தலங்கள் தோறும் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அங்கங்கே சூதாடலால் வரும் பொருளைக் கொண்டு மாகேசுர பூசை நடத்தி வரலானார். கும்பகோணத்தைச் சேர்ந்தார். அங்கே சூதாடிப் பொருள் தேடித் தம் நியமத்தைச் சரிவர நடத்தினார். சூதிலே மறுத்தவர்களை அவர் உடைவாளை உருவிக் குத்துவார். அதனால் 'நற்சூதர்', 'மூர்க்கர்' என்னும் பெயரையும் பெற்றார். அடியார்கள் திருவமுது செய்தபின்பு தாம் கடைப் பந்தியிலேயே உண்பார். இவ்வாறு சிலகாலம் செய்திருந்து அப்பெரும் சிவபுண்ணியத்தினாலே சிவபதம் அடைந்தார்.
ஒருவனுக்கு அறம் செய்தலின் மேம்பட்ட ஆக்கமும் இல்லை. அதனை மயக்கத்தால் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை என்றார் திருவள்ளுவ நாயனார்.அறவழியிலே நின்றதால் மூர்க்க நாயனாருக்கு,உருள் ஆயம் என்னும் சூதாட்டத்தால் பொன் கிடைத்தது. மற்றவர்க்கு சூதாட்டத்தால் பொருள் போனது.
அடுத்ததாக, பிறைசை சாந்தக் கவிராயர் தாம் பாடிய நீதி சூடாமணி என்னும் "இரங்கேச வெண்பா"வில், இத் திருக்குறளுக்கு விளக்கமாகப் பின்வரும் பாடலைப் பாடி உள்ளார்.
கானக் குரங்கு எழலால்,கங்கை சுதன் முதலோர்
ஈனப் படலால்,இரங்கேசா! - ஆன
அறத்தினூஉங்கு ஆக்கமு மில்லை யதனை
மறத்திலின் ஊங்கில்லை கேடு.
இதன் பொருள் ---
இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே, கானக் குரங்கு எழலால் - காட்டில் வாழும் குரங்குகள் வெற்றி பெற்று இராமாயணத்தில் விளங்கின காரணத்தாலும், கங்கை சுதன் முதலோர் - கங்கை மைந்தராகிய வீடுமர் முதலிய பெரியோர், ஈனம் படலால் - பாரதத்தில் தோல்வி அடைந்து பெருமை குன்றின காரணத்தாலும், ஆன - எல்லார்க்கும் அனுகூலமான, அறத்தின் ஊங்கு - தருமத்தைக் காட்டிலும், ஆக்கமும் இல்லை - செல்வமும் வாழ்வும் கிடையாது. அதனை மறத்தலின் ஊங்கு - அதை மறந்து பாவம் செய்வதை விட, கேடு இல்லை - கெடுதியும் தாழ்வும் இல்லை.
கருத்துரை--- தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்.
விளக்கவுரை--- தேவக் குரங்குகளாகிய கானக் குரங்குகள் இராமாயணத்தில் வெற்றி பெற்று விளங்கினமை உலகறிந்த கதை. அவைகள் கேவலம் குரங்குகளாய் நிராயுத பாணிகளாய் இருந்தும், அறத்தை மேற்கொண்டு ஒழுகிய இராமபிரானை அடுத்திருந்த காரணத்தால், இராவணன் முதலிய அர்க்கரைக் கொன்று வென்று நன்று விளங்கின. இராமபிரானுடைய அறக் கருனையும், அறம் போற்றும் ஆற்றலும் இராமாயணத்தில் எங்கெங்கும் பரக்கக் காணலாமாயினும்,இராவணனிடத்தில் அவர் அங்கதனைத் தூது அனுப்பின பெருங் கருணைத் திறம் பெரிதும் வியக்கற்பாலது. இப்படித் தருமத்தையே பெரிதும் பாராட்டிப் போற்றின புண்ணிய புருஷோத்தமனை நண்ணிய சேனைகள் குரங்குகள் எனினும் வெற்றி பெற்றன.
இதனையே இங்கு "கானக் குரங்கு எழலால்" என்று கூறினார். இதனால் அறத்தின் ஊங்கு ஆக்கம் இல்லை என்பது நன்கு விளங்குகின்றது.
கங்கை சுதன் முதலோர் ஈனப்படலால் என்பது, கங்கையின் மைந்தர் ஆகிய வீடுமர் முதற்கொண்டு துரோணர், கிருபர், விதுரர் முதலிய பெரியோர், பாவியாகிய துரியோதனனை அடுத்திருந்த காரணத்தால் ஈனம் அடைந்து பாண்டவர்க்குத் தோற்றமையைக் குறிக்கின்றது. குரங்குச் சேனையைக் காட்டிலும் எத்தனையோ வில்லாண்மையில் சிறந்த வீடுமர் முதலிய சேனா வீரர்களைப் பெற்றிருந்தானாயினும், துரியோதனன் தருமத்தைக் கைவிட்டுப் பாண்டவர்க்குச் சேர வேண்டிய பாகத்தை, அவர்கள் வனவாசம் தீர்ந்து வந்த பின்பும் கொடுக்க மறுத்தானாகையால், பாரதப் போரில் தன் சுற்றத்தோடு அநியாயமாய் மாண்டான்.
"அறத்தின் ஊங்கு ஆக்கம் இல்லை" என்னும் திருவள்ளுவ நாயனார் அருள்வாக்கிற்கு ஒப்புமையாகப் பின்வரும் பாடல்களைக் கொள்ளலாம்...
அறத்தின் ஊங்கு ஆக்கம் இல்லை
என்பதும்,இதனை ஆய்ந்து
மறத்தின் ஊங்கு இல்லை கேடும்
என்பது மதித்து, இவர் தம்
திறத்தினே அறிந்து கொண்மின்,
தீக்கதிப் பிறவி அஞ்சில்,
மறத்தை நீத்து அறத்தோடு ஒன்றி
வாழும்நீர் வையத்தீரே. --- மேருமந்தர புராணம்.
இதன் பொருள் ---
இப்பூமியில் உள்ளவர்களே! தர்மத்தைக் காட்டிலும் பெரிதாகியசெல்வம்இல்லை என்று உலகத்தில் சொல்வதையும், பாவத்தைக் காட்டிலும் பெரிதாகியகேடும் இல்லை என்று சொல்வதையும், இச் சரித்திரத்தை ஆராய்ந்துஎண்ணி, இந்த முனிவன்,ஆரியாங்கனை ஆகியோரால் தர்மபலன் சிறந்து விளங்கியதையும்,பாம்பாகியசத்தியகோஷனின் தன்மையால் பாவபலன் தாழ்ந்து நின்றதையும் தெரிந்து கொள்ளுங்கள். அவ்வாறு தெரிந்து கொண்டு,நீங்கள்கெட்ட கதியில் பிறக்கும் பிறப்புக்குப் பயந்தால், பாவத்தை நீக்கி, தருமத்தோடு சேர்ந்துவாழக்கடவீராக.
"அறம் அ(ல்)லது உறுதி செய்வார்கள் தாம் இ(ல்)லை,
மறம் அ(ல்லாது இடர் செ(ய்)ய வருவதும் இ(ல்)லை
நெறி இவை இரண்டையும் நினைந்து,நித்தமும்
குறுகுமின் அறநெறி குற்றம் நீங்கவே". --- மேருமந்தர புராணம்.
இதன் பொருள் ---
அறம் அ(ல்)லது உறுதி செய்வார்கள்தாம் இல்லை - தர்மமே அல்லாமல்உயிருக்கு உறுதியான நன்மை செய்பவர்கள் இல்லை, மறம் அ(ல்)லாது இடர் செய வருவதும் இல்லை - பாவமே அல்லாமல் உயிருக்குத் துன்பம் செய்ய வருவதும்வேறு இல்லை. நெறி இவை இரண்டையும் நினைந்து - (ஆக்கத்தைத் தருகின்ற) அறநெறி, (கேட்டினைத் தருகின்ற) பாவநெறி ஆகிய இரு நெறிகளையும் மனதில் ஆராய்ந்து வைத்து, நித்தமும் - நாள்தோறும், குற்றம் நீங்க - பாவத்துக்குக் காரணம் ஆகியவிருப்பு வெறுப்பு ஆகிய இரண்டும், காமம் முதலாகிய குற்றங்களும் விலகும்படியாக, அறநெறி - இம்மையில் உலகியல் இன்பத்தையும், மறுமையில் அழியாத இன்பத்தைத் தருகின்ற வீடுபேற்றையும் தருகின்ற அறநெறியை, குறுகுமின் - அடையுங்கள்.
"ஆக்குவது ஏது எ(ன்)னில்,அறத்தை ஆக்குக;
போக்குவது ஏது எ(ன்)னில்,வெகுளி போக்குக;
நோக்குவது ஏது எ(ன்)னில்,ஞானம் நோக்குக;
காக்குவது ஏது எ(ன்)னில்,விரதம் காக்கவே.". --- மேருமந்தர புராணம்.
இதன் பொருள் ---
ஆக்குவது ஏது என்னில், அறத்தை ஆக்குக- செய்ய வேண்டியது எது என்றால், அறத்தையே செய்க. போக்குவது ஏது என்னில் வெகுளி போக்குக - நீக்க வேண்டியதுஎன்ன? என்றால், கோபத்தை நீக்குக, நோக்குவது ஏது என்னில் ஞானம் நோக்குக - மனத்தால் நாட வேண்டியது எது என்றால்? வேண்டியது, ஞானத்தையே கருத்தாகப் பார்த்து அறிக, காக்குவது ஏது என்னில் விரதம் காக்கவே - காக்க வேண்டியது எது என்றால், விரதம் ஒன்றையே வழுவாமல் காப்பாற்றுவாயாக.
"இளமையும் வனப்பும் நில்லா,
இன்பமும் நின்ற அல்ல,
வளமையும் வலிவும் நில்லா,
வாழ்வு நாள் நின்ற அல்ல,
களமகள் நேசம் நில்லா,
கைப்பொருள் கள்வர் கொள்வார்,
அளவு இலா அறத்தின் மிக்கது
யாதும் மற்று இல்லை அன்றே". --- நரி விருத்தம்.
இதன் பொருள் ---
இளமையும் அழகும் நிலையற்றன. அதனால் வரும் இன்பமும் நிலையில்லாதது. வாழ்க்கையில் கொண்டுள்ள வளமும், வலிமையும் கூட நிலையில்லாதன. வாழ்நாளும் ஒரு முடிவுக்கு வரும். தோட்டம், துரவு, மனை முதலான பூமிகளின் மீது நீங்கள் நேசம் வைத்திருப்பதும் நிலையற்றது. உங்களின் கையில் உள்ள பொருளை கள்வர்கள் கவர்ந்து கொள்வார்கள். அளவு இல்லாத நன்மைகளைத் தரக்கூடிய அறத்தின் மேலானது, வேறு எதுவும் இல்லை.
"அறத்தை மறந்தால் வரும் கேடு" என்பதற்கு ஒப்புமையாகப் பின்வரும் பாடல்களைக் கொள்ளலாம்...
'வாழியாய் ! கேட்டியால்: வாழ்வு கைம்மிக
ஊழி காண்குறு நினது உயிரை ஓர்கிலாய்,
கீழ்மையோர் சொற்கொடு கெடுதல் நேர்தியோ ?
வாழ்மைதான், அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ?
--- கம்பராமாயணம், வீடணன் அடைக்கலப் படலம்.
இதன் பொருள் ---
அண்ணலே வாழ்க! நான் கூறுவதைக்கேட்பாயாக. உனது வாழ்க்கை நாளுக்கு நாள்மேம்பட, ஊழிக் காலத்தின் எல்லையைக்காண உள்ள உனது உயிரின் பெருமையைஎண்ணாது இருக்கிறாய். நீகீழ்மக்களின்சொல்லைக் கேட்டு; கேட்டை அடையமுற்படுகிறாயா? அறநெறிகளை விட்டுத் தவறி நடந்தவர்க்கு நல்ல வாழ்க்கை அமையுமோ? (என்று இராவணனுக்கு, அவனது தம்பியான விபீடணன் அறிவுரை கூறினான்)
'அறம் உனக்கு அஞ்சி, இன்று ஒளித்ததால்; அதன்
திறம் முனம் உழத்தலின், வலியும் செல்வமும்
நிறம் உனக்கு அளித்தது; அங்கு அதனை நீக்கி, நீ
இற, முன் அங்கு, யார் உனை எடுத்து நாட்டுவார்?
--- கம்பராமாயணம். கும்ப. வதைப் படலம்.
இதன் பொருள் ---
இப்போது உன் செயலைக் கண்டு அறம் அஞ்சி ஒளித்துக் கொண்டது. முன்பு நீ அறத்தின் கூறுபாட்டைவருந்திச் செய்ததால், அவ்வறம் உனக்கு வலிமை செல்வம் ஆகியமேன்மையைக் கொடுத்தது. அத்தகைய அற வழியில் இருந்து நீங்கி,நீ இப்போது அழியப் போகும்போது, பிறர் யார் வந்து உன்னை எடுத்துமீட்க வல்லார். (என்று கும்பகர்ணன் தான் போருக்குப் போவதற்கு முன்னர், தனது அண்ணனாகிய இராவாணனுக்கு அறிவுரை கூறினான்)
இராவணனைப் பார்த்து, தான் போருக்குப் போகும் முன்னர், "அறம் பல செய்து, தவமும் செல்வமும் வலிமையும் பெற்ற நீ, இப்போது அறம் அல்லாத செயல்களைச் செய்து அழிகின்றாய்" என்றான் கும்பகர்ணன்.
No comments:
Post a Comment