எட்டி பழுத்து என்ன? - ஈயாதார் வாழ்ந்து என்ன?

 


எட்டி பழுத்து என்ன?- ஈயாதார் வாழ்ந்து என்ன?

---

 

     மனிதன் தனியாக வாழ்வது இல்லை. அவன் சமுதாயத்தில் ஒருவனாகவே வாழ முடியும். சமுதாயம் என்பது மனிதர்களின் கூட்டம். தனி மனிதன் நல்ல வழியில் ஒழுகி வந்தால், அவன் சார்ந்து உள்ள சமுதாயம் சிறப்பான வழியில் வாழும். முற்பிறவியில் செய்த புண்ணிய பாவங்களின் பயனாக ஒவ்வொரு மனிதனும் தனித்தனி மன இயல்பு உடையவனாக இருக்கிறான். சமுதாயம் என்பது தொகுதியாகப் பார்க்கும் போதுஒன்றாகத் தோன்றினாலும்ஒவ்வொரு மனிதனும் தனித் தனி நிலையில் இருக்கிறான். ஒருவன் கல்வி கற்றிருக்கிறான்மற்றொருவன் செல்வம் பெற்றிருக்கிறான். ஒருவனுக்கு மக்கட்செல்வம் இருக்கிறதுவேறு ஒருவனுக்கு அது இல்லை. ஒருவன் குடும்பம் ஒற்றுமையாக வாழ்கிறதுவேறு வீட்டில் அப்படி இல்லை. மனைவியிடம் அன்பு உள்ளவனும்அன்பு இல்லாதவனும் அருகருகில் மட்டுமல்லஒரே வீட்டிலும் கூட வாழ்கிறார்கள். உலகம் முழுவதும் இப்படி வேறுபாடான நிலையும்,இயல்பும் கொண்டுள்ளது. 

 

     ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு குறை இருக்கும். அந்தக் குறையை அவரால் நீக்கிக் கொள்ள முடியாதபோதுஅதனை நீக்குகின்ற ஆற்றல் உடையவர் அவருக்கு உதவி செய்ய வேண்டும். பள்ளமும் மேடும் இருக்கிற இடத்தில்மேட்டிலுள்ள அதிக மண்ணைப் பள்ளத்தில் போட்டு நிரவினால் நிலம் சமம் ஆகிவிடும். அதுபோல, யார் யார் எந்தப் பொருளை நிரம்ப பெற்றிருக்கிறார்களோ, அவர்கள் அதைப் பெறாதவர்களுக்கு உதவி செய்யவேண்டும். இப்படி உதவி செய்வதுதான் அறம் என்று சொல்வார்கள். கையிலுள்ள பணத்தைக் கொடுப்பது மாத்திரம் ஈகை அல்ல. தான் கற்ற கல்வியைப் பிறர் அறியக் கொடுப்பதும் ஈகைதான். தம்முடைய ஆற்றலைப் பிறருக்குப் பயன்படுத்துவதும் ஈகைதான். தொண்டு செய்வதும் ஒரு வகையில் ஈகையே ஆகும். இப்படித் தம்மிடம் இருக்கிற ஆற்றலையும்பொருளையும்கல்வியையும் பிறருக்குக் கொடுக்காமல் இருப்பது பாவம் என்று நம்முடைய பெரியவர்கள் கருதினார்கள். ஒளவைப் பாட்டி, "இயல்வது கரவேல்"என்று பாடி, 'உன்னால் இயன்றதை ஒளிக்காதே'என்று அறிவுறுத்தினார். "கெடுவாய் மனனே! கதிகேள். கரவாது இடுவாய்வடிவேல் இறைதாள் நினைவாய்" என்று அறிவுறுத்திஅதன் பலனாக, "சுடுவாய் நெடு வேதனை தூள் படவே" என்று காட்டினார் அடிகளார் கந்தர் அனுபூதியில்.

 

     உலகில் பொருள் உடையவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களிடத்திலிருந்து பொருளைப் பெற்று நன்கு வாழ்வதற்கு உரிய நிலையில் உள்ளவர்களும் பலர் இருக்கிறார்கள். ஆனால்பொருள் உடையவன் பொருள் இல்லாதவனுக்கு ஈவது இல்லை. அதற்குக் காரணம், அவன் தனது முயற்சியினால் ஈட்டப் பெற்றது தன்னிடத்தில் உள்ள பொருள் என்ற எண்ணத்துடன் இருக்கிறான். தான் ஈட்டியதைத் தானே உரிமையுடன் அனுபவிக்க வேண்டுமென்று நினைக்கிறான். 

 

     தன்னுடன் சார்ந்தவர்களுக்கு மாத்திரம் அதைக் கொடுக்கிறான். மனைவி மக்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் கொடுக்கிறான். சில மக்கள் தாம் உண்ணாவிட்டாலும் தம்முடைய மனைவி மக்களுக்கு நிரம்ப அளிக்கிறார்கள். மனைவியும் மக்களும் அந்தப் பொருளை ஈட்டவில்லை. ஈட்டியவன் அவன்தான். தான் ஈட்டியதைத் தானே அனுபவிக்க வேண்டுமென்று நினைக்கிற அவன்அந்தப் பொருளை ஈட்டுவதில் சிறிதும் பங்கு பெறாத மனைவி மக்களும் அனுபவிக்கும்படி பயன்படுத்துகிறான். இதற்குக் காரணம், அவர்கள் மீது கொண்ட அன்பு என்று கூறலாம்.  உண்மையில் மனைவி மக்களால் தான் இன்பம் அடையலாம் என்ற நினைவுஅவர்களுக்கும் அவனுக்கும் உள்ள தொடர்புஅவ்வாறு உதவி செய்ய வேண்டும் என்ற நினைவை உண்டாக்குகிறது. 

 

     தனக்குத் தானே இன்பம் பெறுகிற நிலை மனிதனுக்கு இல்லை. பிறரால்தான் இன்பம் வருகிறதுதனக்கு இன்பம் தருகிறவர்கள் தன் மனைவி மக்கள் என்று நினைந்துதான் ஈட்டிய பொருளை அவர்களுக்குக் கொடுக்கிறான். உலகத்திலுள்ள சமுதாயம் அத்தனையும் நமக்கு இன்பம் தரும் என்ற நினைவு வந்தால், எல்லோருக்குமே தான் ஈட்டிய பொருளை வழங்குவான். 

 

     தன்னுடைய மனைவி மக்கள் துன்பப்படும்போது பார்த்துக் கொண்டிருக்க எவனுக்கும் மனம் வருவது இல்லை. அவர்களுடைய துன்பத்தைத் தன்னுடைய துன்பமாக எண்ணுகிற இயல்பு இயற்கையாக அமைகிறது. அப்போது உள்ளம் கசிகிறது. அந்தக் கசிவு காரணமாக கஞ்சத்தனத்தை விட்டுதன்னிடத்திலுள்ள பொருளை அவர்களுக்குப் பயன்படுத்தும் எண்ணமும் தோன்றுகிறது. 

 

     தான் ஈட்டிய பொருளை இறுகப் பற்றிக் கொள்வது பற்று. தன்னைச் சார்ந்தவர்களுக்கும் கொடுக்க மூலமாக இருப்பது அன்பு. பற்று என்பது ஒருவகையான திண்மை. அன்பு என்பது ஒருவகையான நெகிழ்ச்சி. நெகிழ்ச்சி இன்மையினால் மனம் பொருள்களைப் பற்றிக் கொள்கிறது. அதில் நெகிழ்ச்சி உண்டாகி விட்டால், பொருள்கைளப் பிறருக்கும் பயன்படுத்தும் நிலை வருகிறது. 

 

     குழந்தை மிகவும் பிடிவாதம் செய்து ஒரு பொம்மையைப் பெற்றுக் கையில் இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறது. வேறு ஒரு குழந்தைக்கு அதைக் கொடுத்துவிடு என்று சொன்னால்கொடுக்காமல் வன்மையாகப் பற்றிக் கொள்கிறது. ஆனால்அந்தக் குழந்தை தூங்கத் தொடங்கினால், எவ்வளவு இறுகப் பற்றிக்கொண்டிருந்தாலும் அந்தப் பொருளை நெகிழவிட்டு விடுகிறது. அதுபோல், மனிதன் தன்னுடைய மனத்தில் நெகிழ்ச்சி இல்லாமல்கல்லைப் போன்ற வன்மையைப் பெற்றிருந்தால்நல்ல பொருள்களை எல்லாம் இறுகப் பற்றிக் கொள்ளும் தன்மை உடையவனாக இருக்கிறான். அப்படியின்றி மனம் கசிவு பெற்றால்பிறருக்கும் கொடுக்க வேண்டும் என்ற நினைவு உண்டாகிறது. பெரும்பாலான மக்களுக்குத் தம்முடைய மனைவி மக்கள் என்று கசிவு ஓரளிற்கு இருக்கிறது. இந்தக் கசிவு விரிவு பெற்றால்மனைவி மக்கள்  அல்லாத பிறருக்கும் தம்முடைய பொருளைப் பயன்படுத்த வேண்டும் என்ற நினைவு ஏற்பட்டுவிடும். 

 

     ஆகவே, மனிதன் பொருளை ஈட்டிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. ஈட்டிய பொருளைப் பிறருக்கும் கொடுக்க வேண்டும் என்ற நினைவு வேண்டும். அந்த நினைவுக்குக் காரணமாக இருப்பது உள்ளக் கசிவு. மனிதனுக்கு தன்னைச் சார்ந்தவர்களுக்கு அதைக் கொடுக்கலாம் என்ற வகையில் அந்தக் கசிவு அவன் உள்ளத்தில் நிலவுகிறது. அது பின்னும் விரிய வேண்டும்.  பலருக்கும் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாக வேண்டும். உள்ளம் கசிந்து தான் ஈட்டிய பொருளை எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்ற நிலை வருவதற்கு மிகவும் அருமையான வழியை அருணகிரிநாதப் பெருமான் சொல்கிறார். 

 

     உலகத்தில் எத்தனையோ பணக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாவருமே ஒரே வகையில் சிரமப்பட்டுப் பொருளை ஈட்டுகிறார்கள் என்று சொல்வதற்கு இல்லை. உண்மையைச் சொல்லப் போனால் அவர்களைக் காட்டிலும் மிக்க உழைப்பை மேற்கொள்கிற மக்கள் வறுமை நிலையில் இருக்கிறார்கள். கல்வி ஆற்றல் உடையவர்கள் பொருள் உடையவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்வதற்கு இல்லை. ஒரே வகையில் திட்டமிட்டு ஒரே முறையில் இரண்டு பேர்கள் உழைத்து வருகிறார்கள். ஆனால், இருவருக்கும் ஒரே வகையில் பொருள் கிடைப்பதில்லை.  ஒருவன் சிறந்த செல்வனாக இருக்கமற்றொருவன் கையில் உள்ளதையும் இழந்து வறியவனாகப் போகிறான். நினைத்ததை நினைத்தபடியே திட்டமாக ஈட்டுகிற வாய்ப்புபொருள் முயற்சியில் கிடைப்பது இல்லை. கணக்கும் முறையும் தெரிந்தால் பொருளை அடையலாம் என்றால்எல்லோருமே பொருளை ஈட்டிவிடுவார்கள். நம்முடைய அறிவுக்கு எட்டாத ஒன்று இந்தப் பொருளை ஈட்டுவதற்குத் துணையாக இருக்கிறது. பொருள் குவிவதும்அழிவதும் அவரவருடைய முன்னை வினைப் பயனால் நிகழ்கின்றது  என்று பெரியவர்கள் சொல்வார்கள். அந்த முன்னை வினைப்பயனை நமக்கு ஊட்டுவது இறைவன். எனவே, ஒருவன் பெற்ற செல்வம் இறையருளால் வந்தது. 

 

"பிறக்கும் போது கொண்டு வந்தது இல்லை, பிறந்து மண் மேல் 

இறக்கும் போது கொண்டு போவது இல்லை, இடை நடுவில் 

குறிக்கும் இந்த செல்வம் சிவன் தந்தது என்று, கொடுக்க அறியாது 

இறக்கும் குலாமருக்கு என் சொல்வேன் கச்சி ஏகம்பனே"

 

என்கின்றார் பட்டினத்து அடிகளார்.

 

     ஆகவேநாம் ஈட்டிய பொருள் நம்முடைய முயற்சியால் வந்தது என்று நினைப்பதே தவறு. நம்முடைய ஆற்றல் நமக்கு உதவுகிறது என்று எண்ணுவதும் தவறு. நம்மையெல்லாம் கருவியாக்கி ஏதோ ஒர் ஆற்றல் இயக்குகிறது என்ற நினைவு வந்தால்இந்தப் பொருள் நாம் ஈட்டியது அல்ல என்ற நினைவு உண்டாகும். எல்லாம் இறைவன் திருவருளால் வந்தது என்ற நினைவு வரவேண்டும். உலகிலுள்ள எல்லாப் பொருளையும் ஆட்டி வைத்துஅவரவர்களுடய புண்ணிய பாவப் பயன்களுக்கு ஏற்ற அனுபவத்தைக் கூட்டி வைத்துஅருள் செய்கிற பரம்பொருள் ஒன்று உண்டு என்ற நினைவு வந்தால்,  நம்முடைய நெஞ்சம் கசியும். பரம்பொருளின் நினைவை உடையவர்கள் அதற்கு முன்பு எவ்வளவு கடுமையான உள்ளம் உடையவர்களாக இருந்தாலும்இறை அன்பு முதிர முதிர அவர்கள் உள்ளம் நெகிழும்.

 

     மரத்தில் மாங்காய் இருக்கிறது. அது பார்க்கப் பச்சையாக இருக்கிறது. அதன் சுவையோ புளிப்பு. மரத்திலிருந்து அதைப் பறித்தால்மரத்தினின்றும் பிரிவதற்கு மனம் இல்லாமல் காய் கண்ணீர் வடிப்பதுபோலப் பால் வடிகிறது. அந்தக் காய் முதிர்ந்து பழுக்கும்போதுஅதனிடத்தில் ஒரு மாற்றம் நிகழ்கிறது. பசுமை நிறம் மாறி, பால் வற்றிமஞ்சள் நிறம் உண்டாகிறது. கடுமை மாறி நெகிழ்ச்சி ஏற்படுகிறது. புளிப்பு மாறி இனிப்பு உண்டாகிறது. வேண்டினாலும் வேண்டாவிட்டாலும் மரத்திலுள்ள பிடிப்பு மாறி, அது தானே உதிர்ந்து விடுகிறது. 

 

     தன்னிடத்து உள்ள பொருள்களை எல்லாம் தன்னுடைவை என்று பற்றிக் கொண்டுதன்னுடைய முயற்சியால் எல்லாவற்றையும் ஈட்டியதாக எண்ணி இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் மனிதனுக்கு இறைவனிடத்தில் அன்பு உண்டானால்இத்தகைய மாற்றம் நிகழும். அவனுடைய உள்ளம் ஆருயிர் எல்லாவற்றிலும் அன்பு உடையது ஆகும். அதன் பயனாக உலகியல் பொருள்களிலுள்ள பற்று மெல்ல மெல்ல நழுவும். தனது பொருளால் எல்லோருக்கும் பயன் உண்டாக வேண்டுமென்ற நயம் ஏற்படும். "பயன் மரம் உள்ளூர்ப் பழுத்து அற்றால்செல்வம் நயன் உடையான்கண் படின்" என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     உண்மையான பத்திக்கு உயிர்க் கருணை சிறந்த அடையாளம். ஜீவதயை இல்லாவதர்கள் இறைவனிடம் பத்தி உள்ளவர்களாக இருக்க முடியாது. விடியற்காலையில் எழுந்து நீராடித் திருநீறு அணிந்து கொண்டுஉருத்திராட்சம் தரித்துசிவபூசையை விரிவாகச் செய்துதேவார திருவாசகங்களை ஒதிக் கண்ணிர் விடுகிறவன்தன் வீட்டுக்கு வெளியில் வந்து நின்ற ஏழைகளைக் கோபிப்பானானால் அவன் விட்ட கண்ணிர் பொய் என்று வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களை நினைந்தே,

 

செழுங்கள்ளி நிறைசோலைத் தண்டலைநீள்

     நெறியாரே! திருடிக் கொண்டே

எழும் கள்ளர் நல்ல கள்ளர்! பொல்லாத

     கள்ளர் இனி யாரோ என்றால்,

கொழுங்கள்ளர் தம்முடன் கும்பிடும் கள்ளர்,

     திருநீறு குழைக்கும் கள்ளர்,

அழும் கள்ளர்,தொழும் கள்ளர்,ஆசாரக்

     கள்ளர் இவர் ஐவர் தாமே.    

 

என்கிறது "தண்டலையார் சதகம்" என்னும் நூல்.

 

இதன் பொருள் ---

 

     வளம் பொருந்திய கள்ளிகள் நிறைந்த சோலைகளை உடைய திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில், நீள்நெறி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபெருமானே! திருடிக்கொண்டு செல்லும் கள்ளர் எல்லாரும் நல்ல கள்ளர்களே எனில்தீய கள்ளர் யார்?என வினவினால்செல்வமுடைய கள்ளருடன் சேர்ந்து கும்பிடும் கள்ளரும்திருநீறு குழைத்து இட்டுக் கொள்கின்ற கள்ளரும்அழுகின்ற கள்ளரும்தொழுகின்ற கள்ளரும் (என)ஒழுக்கத்திலே மறைந்து பிறரை ஏமாற்றும் கள்ளராகியஇந்த ஐவருமே தீய கள்ளர் ஆவர்.

 

     ஆசாரக் கள்ளர்ஒழுக்கம் உடையார்போல நடித்து மக்களை நம்பச் செய்து ஏமாற்றுவதால் இவர்களைக் கண்டு பிடித்தல் அரிது. இவர்களால் ஒழுக்கம் உடையோரையும் மக்கள் நம்பமாட்டார்கள். ஆகையால் வெளிப்படையாகத் திருடர் எனப் பெயர் பெற்றோர் நல்லவராகவும்இவர் தீயராகவும் கொள்ளப்பட்டனர். கொழுங்கள்ளர் என்போர், செல்வம் இருந்தும் இல்லார்போல நடித்திடுவோர். நல்ல தோற்றம் உடையராகக் காணப்பட்டு மக்களை ஏமாற்றுவோர். நன்னெறியில் வெறுப்பு உடையவராய் இருந்தும்அதனை வெளியில் காட்டாது மறைத்து ஓழுகுகின்ற வஞ்சகர். உண்மையாக இறைவன் அன்பு நெஞ்சில் இருக்குமானால் அந்த நெஞ்சு உருகும்உருகுவதற்கு முன் நெகிழ வேண்டும். அது முதல் நிலை. 

 

     தன்னுடைய குற்றங்களையும்அவை காரணமாக இறைவனுடைய திருவருளைப் பெறாமல் இருக்கும் இழிந்த நிலையையும் நினைந்து நினைந்து நெஞ்சம் நெகிழ வேண்டும். பின்பு இறைவனது பெருமையையும் கருணையையும் எண்ணி உருகவேண்டும். நெகிழ்வதுஉருகுவது இரண்டும் இருவேறு நிலை. "நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருக"என்றார் அருணகிரிநாதப் பெருமான். நெய் உருகி ஓடினால் எந்தப் பொருளும் அதில் சிக்காது. உருகிய நீர் பனிக்கட்டி ஆகும் போது அந்த நீரிலுள்ள பொருள்கள் பனிக்கட்டிக்குள் சிக்கிவிடும். மறுபடியும் உருகும்போது சிக்கிய பொருள்கள் எல்லாம் விடுதலை பெறும். 

 

     தேக அபிமானத்தால் இறுகிப் போன நெஞ்சில் உலகப் பொருள்கள் எல்லாம் சிக்கிக் கிடக்கின்றன. இறைவனுடைய திருவருட் பிரகாசத்தினால் நெஞ்சம் உருகும் போது, அதில் சிக்கிக் கொண்டிருக்கிற பொருள்கள் எல்லாம் விடுபடுகின்றன. இவை என்னுடைய பொருள் என்ற "மமகாரம்" என்னும் "புறப்பற்று" மாறிவிடுகிறது. பொருள்களிடத்தில் ஆசையும்அவற்றை இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற பற்றும்பிறருக்குக் கொடுக்கக் கூடாது என்ற எண்ணமும் உண்டாவதற்கு மூலகாரணம் நெஞ்சில் உள்ள இறுக்கந்தான்.

 

     இறுக்கம் மாறிஇரக்கம் வந்தாலேகசிவு ஏற்பட்டாலேபொருளைப் பிறருக்கு உதவும் இயல்பு உண்டாகிறது. அந்தக் கசிவு உண்டாவதற்கான வழியை அருணகிரிநாதர் சொல்லித் தருகிறார். முருகப்பெருமானைப் பாடி உள்ளம் கசிய வேண்டும். இறைவன் பெரிய செல்வன். அருள் என்னும் பெரும்செல்வத்தை உடையவன் அவன். மனிதன் பிற உயிரைக் கண்டு இரங்கும் இரக்கம் ஆகிய அருள்,அவன் படைத்திருக்கும் பெரிய பொருளைவிடச் சிறந்தது.

 

"அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்பொருட்செல்வம் 

பூரியார் கண்ணும் உள"

 

என்பது திருவள்ளுவ நாயனார் அருள்வாக்கு. 

 

     பொருள் உள்ளவன் அதைப் பிறருக்கு ஈவதில் பலவகை உண்டு. அடுத்து அடுத்துக் கேட்கும் ஒருவனுக்கு ஈவது ஒரு வகை. ஒரு முறை கொடுத்தால் இன்னொரு முறை கொடுக்காது இருப்பது மற்றொரு வகை. யார் குறை உடையவனோ அவன் நேரே சொல்லாமல்,அவனுக்கு வேண்டியவர்கள் சொல்லப் பொருளைத் தருவது ஒரு வகை. அவனுக்கு இது வேண்டும் என்று தானாகவே உணர்ந்து கொண்டு வலிந்து கொடுப்பது ஒருவகை. 

 

     மிகச் சிறந்த ஈகை என்பதுபிறருடைய துன்பத்தைக் குறிப்பால் அறிந்து, தானே வலியச் சென்று ஈவதுதான். பலமுறை கேட்டுக் கொடுத்தால்,அது அவன் பலமுறை வருவதற்குக் கூலி கொடுப்பது போல ஆகும் ஒருவனுடைய வறுமையைக் குறிப்பினால் அறிந்து, 'இறைவன் திருவருள் நம்மிடத்தில் பொருளை வைத்திருக்கிறது. வேண்டியவர்களுக்கு வழங்குவதற்காகவே அது இருக்கிறதுஎன்று உணர்ந்து கொடுக்க முன்வருகிறவன் சிறந்த வள்ளல். 

 

     இறைவன் எல்லோரினும் சிறந்த வள்ளலாக இருக்கிறான். அவனிடத்தில் உள்ள அருட்செல்வம் பிறருக்குப் பயன்படுவதற்காகவே அமைந்தது. அருட்செல்வம் எப்படி வரும் என்பதை, "பாடுவார் பசி தீர்ப்பாய், பரவுவார் பிணி களைவாய்" என்னும் சுந்தரர் தேவாரத்தால் அறியலாம். "வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்" என்கின்றார் அப்பர் பெருமான். "யார் வேண்டினாலும் கேட்ட பொருள் ஈயும் தியாங்க சீலம் போற்றி" என்று முருகப் பெருமானைப் போற்றினார் அடிகளார் திருப்புகழ்ப் பாடல் ஒன்றில்.

 

     முருகன் தன் அருட்செல்வத்தை வேடிச்சியாக வளர்ந்த வள்ளிநாயகியை நாடிச் சென்று வழங்கினான். அவன் ஈகையில் சிறந்தவன். அவன் கொடுத்த செல்வம் எல்லாவற்றிலும் சிறந்தது. மிகப் பெரிய செல்வத்தைமிகப் பெரிய அருளோடுமிகப் பெரிய ஈகையாகமிகப் பெரியவன் ஆகிய இறைவன் வழங்கினான். அவனது பெருங்கருணையை நினைத்தால் நம்முடைய உள்ளம் கசியும். 

 

     உள்ளத்தில் அவன் நினைப்பு அழுந்துவதற்குப் பலவகையான சாதனங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று அவன் புகழைப் பாடுதல். பாடினால் உள்ளம் கசியும். அப்படிக் கசிந்தால் தன்னிடம் உள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாகும். முதலில் பொருளில் உள்ள பற்று அறவேண்டும். பின்பு பொருளைப் பிறருக்கு ஈயும் செயல் நிகழவேண்டும். 

 

     இறைவனைப் பாடுவதில் இரண்டு வகை உண்டு. பிறருடைய காது கேட்கப் பாடுவதும்,பிறர் மெச்சப் பாடுவதும் ஒரு வகை. பொருள் கருதிப் பாடுவது ஒரு தனிவகை. பாடினவுடன் நெஞ்சம் கசிய வேண்டுமானால் உள்ளன்போடு பாடவேண்டும். நெஞ்சம் எங்கும் ஓடாமல் பாடினால் அந்தப் பாட்டு நெஞ்சிலே பதிந்து நிற்கும். நெடுநாள் பிரிந்திருந்த தாயைக் கண்டு குழந்தை அம்மா என்று ஒடுகிறது. அந்த 'அம்மாஎன்ற சொல்பலகாலம் பிரிந்திருந்த உணர்ச்சியை எல்லாம் சேர்த்து வெளிப்படுத்தும் சொல்.  அப்படி இறைவனிடத்தில் முறுகிய அன்பு உடையவர்கள் இறைவனைப் பாடினால்அந்தப் பாட்டு வெறும் சொல்லாக மாத்திரம் இராது. இறைவனுடைய புகழாக மாத்திரம் இராது. உள்ளத்தில் தோன்றிய உணர்ச்சிப் பொங்கலேஉருக்கத்தோடு வெளிவரும். அதனால்"மெய்யன்பினால் பாடிக் கசிந்து" என்று சொன்னார். 

 

     "உள்ளபோதே கொடாதவர்என்று சொல்கிறார். கொடுக்க வேண்டும் என்ற மனம் பலருக்கு இருப்பது உண்டு.  "என்னிடம் பணம் இருந்தால் நானும் கொடுப்பேன்" என்று சிலர் சொல்வது உண்டு.  ஆனால்அவர்களிடம் பணம் வரும்போது கொடுக்க மனம் வராது. இது ஒருவகை மாயை. கொடுக்க வேண்டும் என்ற மனம் உடையவனுக்கு அந்த எண்ணம் அழுத்தமாக இருக்கவேண்டும். அதனால்தான் ஒளவைப்பாட்டி"அறம் செய விரும்பு"என்று சொன்னார். கொடுப்பதற்கு விருப்பம் அதிகமானால் எப்போது கொடுப்பதற்குரிய பொருள் வரும் என்று எதிர்பார்த்திருப்பான்.  வேளைக்குச் சோறு சாப்பிடுவது என்பது பசி இல்லாதவர்கள் செயல். பசி உடையவனுக்கு நேரம் காலம் இல்லை. எப்போதுஉணவு கிடைக்கின்றதோ, அந்தக் கணமே அவன் உண்பான். மிகவும் அலுத்துப் போனவனுக்கு இரவு வந்தால்தான் தூக்கம் வரும் என்பது இல்லை. அலுப்பு முற்றிய போது தூக்கம் வந்துவிடும். அப்படியே உள்ளத்தில் அறம் செய்யவேண்டுமென்ற நினைப்பு உள்ளவன் எப்போது எந்தப் பொருள் கையில் கிடைத்தாலும்,அதனைப் பிறருக்கு வழங்க முற்படுவான். 

 

     சிலருக்குச் சில சமயங்களில் கொடுக்க வேண்டும் என்ற நினைவு உண்டாகிறது. கொடுப்பதற்குரிய பொருள் வந்தாலோ அந்த நினைவு போய்பொருளின்மீது பற்று உண்டாகிறது. பத்து ரூபாய் கொடுக்க வேண்டுமென்ற நினைவு தோன்றும் போது கொடுத்துவிட வேண்டும். யோசித்தால், அடுத்த கணமே பத்து ரூபாய்ஐந்து ரூபாயாக ஆகிவிடும். பின்பு மெல்ல மெல்லஇப்போது அவசியம் இல்லைஎன்ற நினைவு தோன்றும். இது மனித மனத்தின் இயற்கை. "உள்ளபோதே கொடாதவர்" என்று அருணகிரிநாதர் சொன்னார். உள்ளபோதே கொடுக்கதாவன், பின்பு கொடுக்கமாட்டான். அப்படி ஈயாதவர்கள் இன்ன இன்ன துன்பத்தை அடைவார்கள் என்று சொல்கிறார். 

 

     பணத்தில் பற்று உள்ளவர்கள் யாரும் அதை முழுமையாக அனுபவிப்பதில்லை. பழங்காலத்தில் பணத்தைப் பாதுகாப்பதற்கு வங்கிகள் இல்லை. பிறரிடம் கொடுத்து வைப்பதற்கோ நம்பிக்கை இராது. அதனால், பணத்தைப் பூமியில் புதைத்து வைப்பார்கள். தன்னிடம் பொருள் உள்ளபோதே கொடுக்காமல்பிறருக்குத் தெரியாமல் புதைத்து வைத்த மனிதன்அதைத் தான் பயன்படுத்திக் கெள்ளாமல் போய்விடுகிறான். பின்னாளில் வேறு எவனோ ஒருவனுக்கு அது கிடைக்கிறது. 

 

     ஈட்டிய பொருளைத் திருட்டில் கொடுத்து விடுகிறார்கள் என்று அருணகிரிநாதர் சொல்கிறார். பிறன் ஒருவன் ஈட்டிய பொருளை அவன் அறியாமல் கொள்வது திருட்டு. தன் தேவைக்கு மிகுதியான பொருளைப் பயன்படுத்துவது மற்றொரு வகைத் திருட்டு. 

 

     இறைவனை நினைந்து கசிந்து பிறருக்கு ஈயும் இயல்பு இல்லாதவர்கள் மேலும் மேலும் பணத்தை ஈட்டுகிறார்கள்.  அவர்கள் முன்செய்த பாதகத்தினால் இப்போது பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் குவிக்கிறார்கள். எப்படி எல்லாமோ குவித்த பொருளை, யாரிடத்தும் நம்பிக்கை இல்லாமையால் புதைக்கிறார்கள். அந்தப் புதையலைத் தம்முடைய காலத்திலேயே பிறர் திருட்டுத் தனமாக எடுத்துக் கொண்டு செல்ல, அதனால் ஏமாந்து போகிறவர்கள் உண்டு. அவர்கள் தம்முடைய வாழ்நாளில் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இறந்து போன பிறகு யாரோ ஒருவர் அதை எடுத்துக் கொள்வதும் உண்டு. இப்படித் திருட்டில் கொடுத்தவர்களுக்கு உண்டாகிற திகைப்புக்கு அளவே இல்லை. மனத்தில் கவலை மிகுதியாகிறது. அதனால் அவர்கள் உடம்பு இளைத்துப் போகிறது. 

 

     "ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்" என்பது "கொன்றை வேந்தன்" கூறுவது. தம்மிடத்தில் பொருள் இருக்கும் போது அதை வறியவர்களுக்கு ஈயாமல் பாதுகாத்துக் கொண்டிருந்தால்அவர்கள் தேடிய அந்தப் பொருளைத் தீயவர்கள் வலிந்து கைப்பற்றிக் கொள்வார்கள் என்பது இதன் பொருள். இதற்கு இப்படியும் பொருள் காணலாம். ஈயார் என்பது, ஈக்களைக் குறிக்கும். ஈக்கள் பல இடங்களுக்குப் பறந்து சென்று மலர்களை நாடி அவற்றிலுள்ள தேனைத் தேடிக் கொணர்ந்து தேன் அடை வைக்கின்றன. அவற்றின் தேட்டம்தான் தேன். (தேட்டு - தேடி வைத்தது). மலைப் பக்கங்களில் பாறைகளில் உள்ள பெரிய பெரிய தேனடைக்குக் கீழே பெருந்தீயை மூட்டி எரிய விடுவார்கள். தீப்பந்தங்களைத் தேனடையின் அருகில் கொண்டு செல்வார்கள். அதனால் ஈக்கள் தேனடைய விட்டு ஒடிவிடும்,பல ஈக்கள் இறந்து போகும். பிறகு தேனடையை எடுத்துக் கொள்வார்கள். ஈக்கள் தேடித் தொகுத்த தேனாகிய தேட்டை, தீயை உடையவர்களாகிய மக்கள் கொள்கிறார்கள். 'ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்" என்பதற்கு இப்படியும் பொருள் கொள்ளலாம்.

 

     தாம் ஈட்டிய பொருளைக் கொண்டு சிலர் நல்ல உடையை அணிவதில்லை. வயிறார உண்ணுவது இல்லை. பொருள் குறைந்துவிடும் என்ற எண்ணத்தால்போதிய அளவுக்கு உணவு கொள்ளாமையால் அவர்கள் உடல் நலியும். அவர்கள் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டித் தம்மைத் தாமே வருத்திக் கொள்வார்கள். நிலையில்லாத பொருளைக் கொண்டு நிலையான பயனைத் தருகின்ற அறத்தைச் செய்தல் வேண்டும். இதனை அறிந்து,பொருளைக் கொண்டு நல்ல அறங்களையும் செய்யமாட்டார்கள். யாருக்கும் கொடுக்காமல்ஈட்டிய பொருளை எல்லாம் தாமே வைத்துக் கொண்டு பணம் காத்த பூதமாக இருப்பவர்கள் கடைசியில் அந்தப் பொருளை இழந்துவிடுவார்கள். இது உலக இயல்பு. இதை எதை வைத்து அறிந்து கொள்வது? நாம் அறிந்ததைக் கொண்டே தெளிந்து கொள்ளலாம் என்கின்றது "நாலடியார்".

 

"உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும் 

கெடாஅத நல்அறமும் செய்யார் - கொடா அது 

வைத்தீட்டி னார்இழப்பர்வான்தோய் மலைநாட! 

உய்த்தீட்டும் தேனீக் கரி."             --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     வானை முட்டும் அளவுக்கு மலைவளம் மிக்க நாட்டுக்குத் தலைவனே! அடுத்தவரை நெருங்க விடாதும், தானும் உண்டு மகிழாதும், பாடுபட்டுத் திரட்டிய தேனைப் பிறர் எடுத்துச் செல்வார்கள். தேனீக்கள் அழிந்து சாகும். அதுபோல,பாடுபட்டுத் தேடிய செல்வத்தைப் பிறர்க்கும் பகிர்ந்து உண்டு வாழாதார் வாழ்க்கையும், செல்வமும் அவர்களுக்கும் உதவாது. அடுத்தவர்களுக்கும் பயன்படாது பறிபோகும்.

 

     ” பெற்ற பொருளைக் கொடாமல் ஈட்டி வைத்து இழந்து ஏமாந்து வாடுபவர்கள் நிலை எவ்வளவு இரங்கத் தக்கது?. இப்படி வாழ்நாளை வீணாகச் செலவழித்துக் கடைசியில் மரணம் அடைகிறவர்களைப் பார்த்து, "தாம் பெற்ற பொருளை உள்ளபோதே கொடுக்காதவர்கள் இப்படி வீணாக இறந்து போகிறார்களே?' என்று அருணகிரிநாதர் இரக்கத்தால் பாடுகின்றார்.

 

"வேடிச்சி கொங்கை விரும்பும் குமரனை, மெய்அன்பினால் 

பாடிக் கசிந்து, உள்ள போதே கொடாதவர், பாதகத்தால் 

தேடிப் புதைத்துத் திருட்டில் கொடுத்துத் திகைத்து இளைத்து 

வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே." 

 

இதன் பொருள் ---

 

     குறவர் குலத்தில் அவதரித்த வள்ளிநாயகியின் கொங்கைகளை விரும்புகின்ற முருகப் பெருமானை, உண்மையான அன்பினால் உள்ளம் உருகிப் பாடித் துதித்து, கையில் பொருள் இருக்கும் காலத்திலேயே ஏழைகளுக்கும், இல்லாதவர்க்கும் கொடுத்து உதவாதவர்கள், பாதகமான பலவழிகளில் பொருளை ஈட்டி, தானும் அனுபவிக்காமல், பிறரையும் அனுபவிக்க விடாமல், மண்ணில் புதைத்து வைத்து, திருடர்களுக்குக் கொடுத்து, அதனால் உள்ளம் திகைப்பை அடைந்து, உடல் மெலிந்து, மனம் வாடி, தமது வாழ்நாளைப் பயனின்றி வீணாகக் கழிக்கின்றவர்களே ஆவார்.

 

 

 

 

 

No comments:

Post a Comment

ஏகம்ப மாலை

  பட்டினத்தடிகள் பாடியருளிய திரு ஏகம்ப மாலை திருச்சிற்றம்பலம் "அறம்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம் துறந்தான், அவனில் சதகோடி உ...