இருதலைக் கொள்ளியினுள் எறும்பு

                                                    இருதலைக் கொள்ளியினுள் எறும்பு

-----

 

     சுற்றிச் சுற்றி வருகின்ற சில கோடுகளைப் போட்டுஉள்ளே இருக்கும் ஒன்றை அடைவதற்கு வழியைக் கண்டு பிடிக்குமாறு போடுவார்கள். ஐந்தாறு வழிகள் வெளியே வருவதற்கு இருப்பது போலத் தோன்றும். ஆனால் ஒரு வழியைத் தவிர மற்றவையெல்லாம் எங்கோயாவது ஒரிடத்தில் போய் நின்றுவிடும்படி அமைந்திருக்கும். சரியான வழிபலவிடங்களில் சுற்றிச் சுற்றிப் போய்க் கடைசியில் வெளியில் வரும்படி அமைந்திருக்கும்.

 

     மனிதன் வாழ்நாள் ஒரு வகையில் அந்தச் சித்திரத்தைப் போன்றதுதான். அந்தச் சித்திரத்திலே வெளியில் வருவதற்கு ஒரு வழியாவது இருக்கும். ஆனால் நம் வாழ்க்கைச் சித்திரத்தில்வெளியில் வர வழியே இல்லை. வெளியில் வர வேண்டுமென்ற ஆசை உடையவனுக்குக் கூட  வழி தெரியாமல் சுழன்று சுழன்று வரும்படியாக அமைந்திருக்கிறது இந்தச் சித்திரம். அதற்குக் காரணம் நம் மனந்தான். போன போன இடங்களில் எல்லாம் பதிந்து கொண்டு எந்த இடத்தில் இருந்தும் மீள ஒட்டாமல் மனம் பற்றை வளர்த்துக் கொள்கிறது. 

 

     நாம் வாழ்கின்ற காலம் மிகக் குறைவு. அந்தக் காலத்திற்குள் நாம் தெரிந்து கொள்ளும் செய்திகள் பல. எதனைத் தெரிந்து கொண்டாலும் தெரிந்து கொள்ளாவிட்டாலும் நம்முடைய முடிந்த முடியாகிய இலட்சியத்திற்கு அனுகூலமான வழியைத் தெரிந்து கொள்ள வேண்டும். ரெயில் வண்டியில் ஏற வந்தவன் ரெயில் நிலையத்தில் கண்ட நண்பனோடு பேசிக் கொண்டே இருந்தால்வண்டி வந்து நிற்பது கூட மறந்துவிடும். வண்டி நிற்கிற வரைக்கும் அவனோடு பேசலாமே என்று ஆரம்பித்தவன் வண்டி புறப்பட்ட பிறகும் பேச்சுச் சுவாரசியத்தில் அதை மறந்து நிற்பான். இப்படித்தான் இந்த உலகத்தில் தோன்றிய மனிதன் இருக்கிறான். தன்னுடைய சரீரத்தைக் காப்பாற்றுவதற்குப் பல பேருடைய துணையை நாடுகிறான். இதனை வளர்ப்பதற்கும் சுகம் பெறுவதற்கும் பல செயல்களைச் செய்கிறான். நாளுக்கு நாள் பல பேருடைய தொடர்பும் ஏற்படுகின்றது. இந்தத் தொடர்பினால் நட்பும் பகையும் விளைகின்றன. நட்புக் காரணமாக மகிழ்ச்சியும்பகை காரணமாக அச்சமும் துன்பமும் அடைகிறான். உலகத்தில் இருக்கும்போது ஏதாவது செயல் செய்யத்தானே வேண்டும்மற்றவர்களோடு பழகத்தானே வேண்டும்என்ற கேள்விகள் எழலாம். பழகுவது வேறுபதிவது வேறு. பிள்ளைப் பூச்சி சேற்றிலே பல காலம் ஊர்ந்து கொண்டிருந்தாலும் சேறு ஒட்டாமலே வளைய வருகிறது. அதுபோல் நாம் எல்லாவற்றோடும் பழகிக் கொண்டிருந்தாலும் அவற்றோடு ஒட்டாமல் வாழப் பழக வேண்டும். நம்முடைய லட்சியம் இன்னதென்று தெரிந்து வாழ வேண்டும். 

 

     சமுதாயத்திற்கு வேண்டிய காரியங்களைச் செய்து கொண்டுஅவ்வப்போது நமக்குத் துணையாகின்றவர்களோடு அன்பு செய்து வாழ்வது தவறு அல்ல. ஆனால்,அப்படி வாழ்கின்ற இடத்திலும்பழகுகின்ற மனிதர்களிடமும் பற்று வைத்துஎந்தக் காலத்திலும் பிரியாமல் இருக்க வேண்டுமென்ற உணர்ச்சியைக் கொள்வது ஆபத்தை உண்டாக்கும். நம்மோடு பிறப்பிலே தொடர்ந்து வந்துஇறக்கும் வரைக்கும் இருக்கும் இந்த உடம்பே வாழ்நாள் முடிந்தவுடன் நம்மைப் பிரிந்து விடுகிறதுஅல்லது நாம் இதைப் பிரிந்து விடுகிறோம். அப்படி இருக்கபிறந்த பிறகு தொடர்ந்த தொடர்புகள் நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்குமா?  ஒட்டிக் கொண்டு இராதவற்றை மனத்திலே பற்றிக் கொள்வதுதான் பற்று. அப்படிப் பற்று வளர்வதனால் மனத்திலே துயரம் மிகுகிறதே அல்லாமல்அமைதி உண்டாவதில்லை.

 

     "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்" என்பது திருக்குறள். பல வகையான பற்றுக்களை உள்ளத்தில் ஏற்றிக் கொண்டு எந்தப் பக்கம் திரும்பினாலும் சேற்றிலே அமிழ்வது போலப் பாசத்திலே அமிழ்ந்து கொண்டிருக்கிறோம். என்றைக்காவது சிறிது உணர்வு வந்து அவற்றிலிருந்து விடுபட வேண்டுமென்றால் முடிவதில்லை. எந்தப் பக்கத்திலும் நம்மை அழுத்துகின்ற பாசம் இருப்பதைப் பார்க்கிறோம். பாசத்தைவிட்டு நீங்குவதற்கு ஒரு சிறிய வழிகூடக் காணாமல் திண்டாடுகிறோம்.  

 

     கல்யாணம் பண்ணிக்கொண்டு மனைவியோடு வாழ்கிறவன் சிறிது நேரம் கடவுளை எண்ணலாம் என்றால்மனைவியோடு பேசிவிட்டு அவள் தூங்கும்போது எண்ணலாம் என்ற நினைவு வருகிறது. மனைவியோடு பேசி அவள் தூங்கின பிறகோ,  நாமும் தூங்கிவிடலாம்நாளைக்குத் தியானம் பண்ணிக் கொண்டால் போகிறது என்ற நினைவு வருகிறது. மறுநாள் எழுந்தாலோ கடைகண்ணிக்குப் போகிற வேலை முன்னாலே வந்து நிற்கிறது. இன்று இரவு அவசியம் நாம் தனித்திருந்து தியானம் பண்ணவேண்டும் என்று நினைக்கிறோம். அந்த இரவு நமக்கு வேண்டிய நண்பர் ஒருவர் வந்துவிடுகிறார். அவர் தினந்தோறுமா வருகிறார்இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வருகிறவரோடு பேசாமல் என்ன செய்வதுதியானம் எங்கே போகிறதுநாளைக்குப் பண்ணிக் கொள்ளலாம் என்று மறுநாளைக்கு ஒத்திப் போடுகிறோம். அடுத்த நாள் நமக்கு உடம்பு சரியில்லாமல் போய்விடுகிறது. சிறிது காய்ச்சல் வருகிறது. அன்றைக்கும் தியானம் செய்ய முடிவதில்லை. இப்படியாக ஒவ்வொரு நாளும் நாம் அமைத்துக் கொண்ட பற்றுகள் காரணமாகச் சிறிது நேரம் ஒய்வாகவும்அமைதியாகவும் இருக்க வழி பிறப்பது இல்லை. மற்றவற்றைத் தள்ளிப் போடுவதில்லைஇறைவனை நினைப்பதை மாத்திரம் எளிதிலே தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம். 

 

     இப்படியின்றி எந்தக் காரியம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இறைவனைத் தியானம் பண்ணுவது அவசியம் என்ற உணர்ச்சி இருந்தால்எப்படியாவது அந்த நேரத்தில் தனிமையை நாடுவோம். வீட்டிலே தக்க இடத்தில் அமர்ந்து சுவையான உணவை உண்ணும் ஒருவன்கடுமையான வேலையில் ஈடுபட்டு வீட்டுக்குப் போக முடிவதில்லையானால்தான் பணிபுரியும் அந்த இடத்திற்குச் சோற்றை வருவித்து உண்ணுகிறான். வண்டியில் பயணம் செய்கிறவன் வண்டி ஒடும்போதே ஏதாவது வாங்கி உண்ணுகிறான். ஓட்டத்தில் இருக்கிறவன் ஒடும்போதே எதையாவது கிடைத்ததைக் கொண்டு வயிற்றை நிரப்புகிறான். மற்றக் காரியங்களில் ஈடுபடுகிறபோது உண்ண வேண்டிய அவசியம் இல்லையென்று அதை ஒதுக்க முடியாது. எப்படியாவது உண்ணுவதற்கும்உறங்குவதற்கும் நேரத்தைக் கண்டுபிடித்துக் கொள்கிறான். உண்ணுவது முயற்சியினாலே வருவதுஉறங்குவது தானே வந்துவிடுகிறது. இறைவனைத் துதிப்பதற்கும்தியானம் செய்வதற்கும் ஒருவனுக்கு உண்மையான சிரத்தை இருந்தால் எந்த நிலையிலும்போகிற இடத்தில் உணவைப் பெற்று உண்ணுவது போல அவற்றைச் செய்துவிடுவான். அப்படிச் செய்யாமல் இருப்பதற்குக் காரணம் மற்றப் பொருள்களில் வைத்த பற்றுத்தான். பற்று வைத்தவன் சிறிதே உணர்வு வந்தபோதுஎந்தப் பக்கம் வந்தாலும் அவன் வெளியே வர முடியாதபடி அந்தப் பற்று அவனுக்குத் தடையாக இருப்பதைக் காண்கிறான். இடப்பக்கம் போனால் மனைவி வந்து நிற்கிறாள். வலப் பக்கம் போனால் மக்கள் வந்து நிற்கிறார்கள். இவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்வதையே கடமையாகத் தீரமானித்துக் கொண்டிருக்கிறான். அதனால் இறைவனைத் தியானிக்கும் கடமையைச் சற்றே தள்ளி வைக்கப் பார்க்கிறான். இப்படியேதான் பொழுது போய்க் கொண்டிருக்கிறது. துணிவு இல்லாமல்பற்றின பற்றை நழுவ விடுவதற்குரிய தைரியம் இல்லாமல்எந்த நேரத்திலும் தனியாக வந்து அமர்ந்து கொள்வதற்குரிய பழக்கம் இல்லாமல் திண்டாடுகிறான்.

 

     இதற்கு ஒரு உவமை சொல்லலாம். இருதலைக் கொள்ளிக்கு இடையில் அகப்பட்ட எறும்பு திண்டாடுவது போல நாம் திண்டாடுகிறோம். "இருதலைக் கொள்ளி எறும்பு போல" என்பது ஒரு பழமொழி. இரண்டு பக்கமும் தீ எரிந்துகொண்டிருக்கும் கொள்ளியினிடையே அகப்பட்ட எறும்பு எந்தப் பக்கமும் போக முடியாது. வெளியில் குதிக்கவும் முடியாது. சுற்றிலும் மூங்கில் குழாய் இருக்கிறது. அந்த எறும்பு உய்வதற்கு வழியே இல்லை. அப்படித் தான் நம்முடைய பற்றுக்களை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். 

 

     இந்த உவமையையே மணிவாசகப் பெருமான் எடுத்து ஆளுகிறார். இறைவனைப் பிரிந்துஇந்தப் பிரபஞ்சம் என்னும் சேற்றுக்குள் சுழன்றுஎந்தப் பக்கமும் போய் விடுதலையைப் பெற முடியாமல் நிற்கிறோம். அதற்குஇருதலைக் கொள்ளியின் உள்ளே உள்ள எறும்பை உவமிக்கிறார்.  "பெருமானேஇரண்டு பக்கமும் எரிகின்ற கொள்ளியின் உள்ளே இருக்கும் எறும்பு போலஉன்னைப் பிரிந்து எந்தப் பக்கமும் செல்ல முடியாதபடி நான் துன்புறுகின்றேன். என்னைக் கைவிட்டு விடாதே" என்று அலறுகிறார். 

 

"இருதலைக் கொள்ளியின் உள்எறும்பு ஒத்து,நினைப்பிரிந்த 

விரிதலை யேனை விடுதிகண்டாய்வியன் மூவுலகுக்கு 

ஒருதலைவாமன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே!

பொருதுஅலை மூவிலை வேல்வலன் ஏந்திப் பொலிபவனே!."  --- திருவாசகம்.

 

     இதை மனத்தில் பதித்துக் கொண்டால் அருணகிரிநாதப் பெருமான் கருத்துத் தெளிவாகும். அவரும் இருதலைக் கொள்ளி எறும்பைச் சொல்கிறார். இருதலைக் கொள்ளியின் நடுவிலுள்ள எறும்பு போல நான் குலைந்து கொண்டிருக் கிறேன்அதனால் எனக்கு உண்டான துயரம் மிகுகிறது. அதனை ஒழிக்க வேண்டும் என்று முருகப் பெருமானிடத்தில் வேண்டுகிறார். 

 

"கொள்ளித் தலையில் எறும்பு அது போலக் குலையும் என்றன் 

உள்ளத் துயரை ஒழித்து அருளாய்ஒருகோடி முத்தம் 

தெள்ளிக் கொழிக்கும் கடல் செந்தில் மேவிய சேவகனே!

வள்ளிக்கு வாய்த்தவனே! மயில் ஏறிய மாணிக்கமே"

 

என்பது கந்தர் அலங்காரத்தில் வரும் பாடல். இரண்டு பக்கமும் கொள்ளி உள்ள ஓரிடத்தில் எறும்பு நிற்பது போல நான் நிற்கிறேன் என்று புலம்புகிறார்.

 

     இறப்பு பிறப்பு என்ற இரண்டும் நம்முடைய வாழ்க்கையின் இரண்டு தலைப்பிலும் உள்ளவை. கொள்ளியின் ஒரு தலைப்பாகிய பிறப்புத் துன்பத்திலிருந்து வெளிப்பட்டு வந்திருக்கிறோம். மறுபக்கத்தில் இறப்பு என்னும் துன்பம் இருக்கிறதுஇந்த இரண்டுக்கும் நடுவில் உள்ள வாழ்க்கையில் நின்று குலைகிறோம்.

 

     முற்பிறவிகளில் நாம் செய்திருக்கும் புண்ணிய பாவங்கள் இந்தப் பிறவியில் வந்து பயனைத் தருகின்றன. இவற்றை "ஊழ்" என்றும் "பிராரத்தம்" என்றும் சொல்வார்கள். அதன்படி நம்முடைய அனுபவங்கள் அமைகின்றன. இந்த வாழ்க்கையில் நமக்கு உரிய கருவி கரணங்களைக் கொண்டு பல செயல்களைச் செய்கிறோம். முன்னைப் பிறவியில் நாம் செய்த செயல்களின் விளைவாகப் புண்ணிய பாவங்கள் நமக்குக் கிடைத்தன. புண்ணியத்தின் பயனாக முயற்சியும்தீவினையின் பயனாகச் சோம்பலும் தோன்றும். புண்ணியம் அறிவை வளர்க்கும். பாவம் அறிவைச் சுருக்கும். அவற்றின் பயனைச் சுகமாகவும் துக்கமாகவும் இந்தப் பிறவியில் அடைகிறோம். இந்த அனுபவங்களுக்கு இடையில் புதிய செயல்களைச் செய்கிறோம். அந்தச் செயல்களின் பயன் அடுத்த பிறவியில் கிடைக்கும். எனவே இந்தப் பிறவியில் முன்னை வினைப் பயனால் வரும் அனுபவமும்புதுச் செயல்களினால் வரும் புண்ணிய பாவங்களும் இருக்கின்றன. இந்த இரண்டுக்கும் நடுவில் நாம் குலைந்து நிற்கிறோம். 

 

     அப்படிக் குலைந்து நிற்பதற்கு மூலகாரணம் முன்னை வினை என்று தெரிகிறது. முன்னை வினையின் பயனை மாத்திரம் அனுபவித்துவேறுசெயல் இல்லாமல் இருக்க முடியாது. வினை அனுபவத்தைத் தருகிறது. நம்முடைய மனநிலை அதற்கு ஏற்றதாக இல்லை. ஏதாவது செய்து கொண்டே இருக்கிறோம். இப்படி முன்னை வினையின் விளைவுக்கும்இப்போது செய்யும் செயலுக்கும் இடையில் நின்று திண்டாடுகிறோம். இதுவும் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைதான். 

 

     நம்முடைய வாழ்க்கையில் நமக்கே சில சமயங்களில் சில எண்ணங்கள் தோன்றுவது உண்டு. வேறு சிலருடைய அறிவுரைகளையும் ஏற்றுக் கொள்கிறோம். திண்மையான மனம்தன்னுடைய எண்ணத்தில் சிறந்தன இருந்தாலும், பிறர் உபதேசங்களில் சிறந்தன. இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனத் திண்மை இல்லாதவனுக்குப் பிறர் உபதேசம் செய்கிறபோது நல்லதாகத் தோற்றும். அதற்கு மாறாகத் தன் எண்ணமே சிறந்ததாகவும் தோற்றும். இப்படி நம்முடைய அறிவுக்கும்பிறர் அறிவுறுத்தலுக்கும் இடையே நின்று தெளிவில்லாமல் திண்டாடுகிறோம். இருதலைக் கொள்ளியின் இடையில் அகப்பட்டுக் கொண்ட எறும்பு போலஇன்னதுதான் செய்வது என்று தெரியாமல் திண்டாடுகிறோம். எண்ணத்தில் திண்மை இல்லாமையினால் வந்த விளைவு இது. இப்படியும் இருதலைக் கொள்ளி எறும்பு நிலை ஒன்று உண்டு. 

 

     இறைவனுடைய திருவருளைப் பெறவேண்டும் என்று முயலும் போது கூடபல சமயங்களில் இப்படி இருவேறு எண்ணங்கள் வந்து மோதுகின்றன. இறைவனுடைய திருநாமத்தைச் சொல்லித் திருவுருவத்தைக் கண்டு பத்தி செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். நாம் அதை நம்பி வருகிறோம். ஒரு சாரார்இறைவன் குணம் குறி கடந்தவன்அவனுக்கு விக்கிரகம் கூடாது என்று சொல்லுகிறார்கள். நம்முடைய முன்னோர்கள் சென்ற நெறியும்புதிய அறிவாளிகள் சொல்லும் நெறியும் ஒன்றுக்கொன்று மாறுபாடாகத் தோற்றுகின்றன. பள்ளிக்குச் சென்று படித்துத் தேருவது ஒன்று. காப்பி அடித்துத் தேருவது ஒன்று.  படித்துத் தேருவதை விடகாப்பி அடித்துத் தேருவதில் உத்திகள் அதிகம் கண்டு பிடிக்கப்படுகின்றன. எந்த உத்தி உசிதமானது என்பதை தேருவதிலும் கூடத் திண்டாட்டம் உண்டாகிறது. இப்படிப்பட்ட மாறுபாடுகளின் நடுவில் நின்று இன்னது செய்வது என்று தெரியாமல் நாம் திகைக்கிறோம். இதுவும் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை. 

 

     உலக வாழ்க்கையில் எத்தனையோ தரும சங்கடங்கள் உண்டாகின்றன. இரண்டு வகையான தருமம் ஒன்றுக் கொன்று எதிராக நிற்கும்போது தரும சங்கடம் எழுகிறது. ஒரு பாம்பு இரையை உண்ண வருகிறது. அப்போது பாம்பை அடித்தால் அதைக் கொன்றவர் ஆகிறோம். அடிக்காமல் இருந்தால்அதற்கு இரையாகிற பிராணியைக் கொலை செய்தது போன்ற துயரம் வருகிறது. இந்த இரண்டுக்கும் நடுவில் நின்று திகைக்கிறோம். 

 

     இப்போது எங்கே பார்த்தாலும் விஞ்ஞானத்தைப் பற்றிய பேச்சாக இருக்கிறது. மனிதன் வாழ வேண்டுமானால் விஞ்ஞானத்தின் முயற்சியும்தொழில் முயற்சியும் சிறந்து நிற்க வேண்டுமென்று தலைவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை நன்றாக முன்னேறினால்தான் சமுதாயம் முன்னேற முடியும் என்பதை அவர்கள் வற்புறுத்துகிறார்கள். அதே சமயத்தில் நம்முடைய ஞான நூல்கள்ஒவ்வொருவனுக்கும் தன்னுடைய ஆன்மா கடைத்தேறும் வழியைப் பார்க்க வேண்டும் என்று சொல்கின்றன. விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று போட்டியாக நிற்கின்றன. இந்த இரண்டுக்கும் நடுவில் இன்னது செய்வது என்று தெரியாமல் திண்டாடுகிறோம். இதுவும் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை. இப்படிவாழ்நாள் முழுவதும் சில இரட்டைகளுக்கு நடுவில் நின்று திண்டாடுகிறோம். இப்படியே நமக்கு இந்தத் திண்டாட்டம் விடுவதே இல்லை. பிராரத்த வினையின் அனுபங்களால் உண்டாகும் விருப்பு வெறுப்புக்களால் நன்மையும் தீமையும் உண்டாகின்றன. நன்மை என்று நாம் நினைப்பது தீமையாகவும் முடிகின்றது. இவற்றைத் "துவந்துவங்கள்" என்கின்றார் மணிவாசகப் பெருமான். இது போக வேண்டுமானால் ஒரு வழி உண்டு என்றும் அவர் காட்டியருளுகின்றார்.

 

"என்பு உள் உருக்கி,இருவினையை ஈடு அழித்து,

துன்பம் களைந்து,துவந்துவங்கள் தூய்மைசெய்து,

முன்பு உள்ளவற்றை முழுது அழிய உள்புகுந்த

அன்பின் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே".

 

என்று "திருவாசகம்" பாடுகின்றார். "எலும்பையும் உள்ளே உருகச்செய்துஇருவினைகளாகிய சஞ்சிதம், பிராரத்தத்தின் வலியினை ஒழித்துஅவற்றால் உண்டாகின்ற துன்பத்தைப் போக்கிதொடர்புகளையும் அறுத்துத் தூய்மை ஆக்கிமுன்னே உள்ள சஞ்சித வினையானது முற்றிலும் தொலையும் வண்ணம்,என் உள்ளத்தின் உள்ளே எழுந்தருளிய அன்பினை உடையவிளக்கம் பொருந்திய தில்லை ஆண்டவனை அடியேன் பற்றிக்கொண்டேனே" என்று தனது அருள் அனுபவத்தைப் பாடுகின்றார்.

 

     எந்த வேலையைச் செய்தாலும் திருடனுக்குத் திருட்டிலே கண் இருப்பது போலவும்யாரிடம் காதல் செய்தாலும் பரத்தையர்களுக்குப் பொருளில் ஆசை இருப்பது போலவும்எத்தனைதான் பேசிக் கொண்டு வந்தாலும் வண்டி ஒட்டுகிறவனுக்குத் தனது கைச் சக்கரத்தில் நோக்கம் இருப்பது போலவும்உலகில் எப்படி வளைய வந்தாலும்,எத்தனை பேர்களிடம் பழகினாலும்எத்தனை முயற்சியில் ஈடுபட்டாலும்ஆன்ம விடுதலை என்ற குறிக்கோளை மறந்துவிடாமல் இருக்க வேண்டும். அதற்கு இறைவன் திருவடிப் பற்று உண்டாகவேண்டும். ஒருமையுடன் அவனது திருமலரடிகளை வழிபடுகின்ற உத்தமர்களின் உறவை வளர்த்துக் கொள்ளவேண்டும். இல்லையானால் பற்றுக்களில் ஆழ்ந்து துன்புற நேரும். அப்போது கொள்ளித் தலையில் எறும்பு போன்ற நிலை நமக்கு வரும். 

 

     நாம் இறைவனை அடைய வேண்டும். பற்றுக்கள் எல்லாம் அற்றால் இறைவனை அடைய முடியும். "அற்றது பற்று எனில் உற்றது வீடுஎன்று ஆழ்வார் அருள்வாக்கு. "பற்றுக பற்று அற்றான் பற்றினை" என்றார் திருவள்ளுவ நாயனார். ஏன் என்றால்இப்போது நமக்கு உள்ள பற்றினை அறுத்துக் கொள்வதற்கு உபாயம் அது ஒன்றே. எனவே, "அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" என்று மேலும் சொன்னார்.

 

     உலக மாயையால் உள்ளத்திலு உண்டான பற்றுக்கள் என்னும் அழுக்குப்  போவதற்குஇறையருள் என்னும் நன்னீரில் குளிக்க வேண்டும். தண்ணிர் குடிக்க எண்ணும் ஒருவன் சோற்றுக் கையோடு போய்கையினாலே தண்ணீரைக் குடிக்க முடியாது. ஆகையால்,முதலில் அந்தத் தண்ணீரில் கையைக் கழுவிக் கொள்கிறான். பின்பு அந்தத் தண்ணிரை அருந்துகிறான். அதுபோல் இறைவனைப் பற்றிக் கொள்வதனால்சேறு போல் இருக்கிற பற்று முதலில் போகும். பின்பு அவனோடு ஒன்றுபடலாம்.

 

     நாள்தோறும் பற்றுக்களைப் பெருக்கிக் கொண்டுதொட்ட தொட்ட இடங்களில் எல்லாம் மனத்தைப் பதித்து ஒன்றிலிருந்தும் பிரிய முடியாது வாழ்கின்ற நமக்கு அந்த நிலையினின்றும் மீள்வதற்கு வழி ஒன்றே ஒன்றுதான் உள்ளது. பற்று உள்ளவனைப் பற்றிக் கொண்டால்பற்றுப் போகாது. பற்று அற்றவனைப் பற்றிக் கொண்டால் அவனுக்கு உள்ள குணம் நம்மிடத்தில் மேலிடும். பற்ற அற்றவன் இறைவன் ஒருவனே. எனவேதான்,  இருதலைக் கொள்ளியின் இடையில் உள்ள எறும்பு போலத் தவிக்கும் என்னை விட்டுவிடாதே என்று இறைவனைப் பற்றிக் கொண்டார் மணிவாசகப் பெருமான். அருணகிரிநாதப் பெருமான், "இருதலைக் கொள்ளி எறும்பு போல இருக்கும் என்னை நீ வந்து காப்பாற்ற வேண்டும்என் உள்ளத் துயரத்தை நீக்க வேண்டும்என்று முருகப் பெருமானைப் பற்றிக் கொண்டு வேண்டுகிறார். 

 

     இந்த விண்ணப்பத்தை அவர் திருச்செந்தூரில் உள்ள பெருமானிடத்தில் வைக்கிறார். எப்போதும் அலை மோதுகின்ற கடற்கரையில் செந்தில் ஆண்டவன் எழுந்தருளியிருக்கிறான். அந்த ஊருக்கே "அலைவாய்" என்று பெயர். அங்குள்ள கடற்கரை அழகியது. முத்துக்களை அலைகள் கொண்டு வந்து கொழிக்கின்றன. கோடிக்கணக்கான முத்தங்களை அங்கே கொண்டு வந்து சேர்க்கின்றன. "வினை ஓடவிடும் கதிர்வேல்" பெருமான் திருக்கையில் விளங்குகிறது. அங்கே படைவீடு கொண்டான். அங்கே இருந்து சூரபதுமனுடன் போர் புரிந்து பெற்றஜயத்தைக் கொண்டாடியமையால் "ஜயந்திநாதன்" என்ற திருப்பெயர் உண்டாயிற்று. 

 

     அந்தக் கடல் அலைகளால் நலம் விளைகிறதுஅலைகள் கோடிக்கணக்கான முத்தங்களை கொண்டு வந்து சேர்க்கின்றன என்கிறார். நம்முடைய உள்ளத்தில் துயர அலைகள் மோதும்போது நாம் கவலை அடைகிறோம். மணல் கரையாக நமது உள்ளம் இருக்கிறது. நமது உள்ளம் என்னும் மணல் கரையே இறைவனுடைய திருக்கோயிலாக மாறினால்உலக வாழ்க்கையில் வந்துவந்து மோதுகின்ற இன்பதுன்ப அலைகளிலிருந்து கிடைக்கின்ற அரிய முத்துக்கள் என்னும் உண்மைகளைத் தெரிந்து,மெய்யறிவைப் பெறலாம். 

 

     சூரபனதுமனை அழித்த வீரராகிய எம்பெருமான் வள்ளிக்கு வாய்த்தவன் ஆகிறான். வள்ளிநாயகி என்பது சீவான்மாவைக் குறிக்கும். சீவான்மா ஆகிய நமக்கும் வாய்த்தவன் அவன்தான். வாய்த்தவன் என்றால்வள்ளிநாயகிக்கு அவளது தவப் பயனாக வந்தவன் என்று பொருள். இது மற்றவர்க்குக் கிடைத்தற்கு அரியவன் என்பதை உணர்த்தும். எல்லா நலங்களும் ஒருங்கே பொருந்திய திருச்செந்தில் ஆண்டவனை மணவாளனாக அடைய வேண்டுமென்றால் எத்தனையோ தவம் செய்திருக்க வேண்டும். வள்ளிநாயகி பெருந்தவம் உடையவள். அவளுக்கு அவன் வாய்த்தான்.  அவனை அடைய நாமும் தவம் புரியவேண்டும். மாணிக்கம் நவமணிகளில் சிறந்தது. இயல்பான ஒளியை உடையது. திண்மையானது. சிவப்பானது. பல அணிகளினிடையே கலந்து நின்றாலும் தனிச் சிறப்புடன் விளங்குவது. எப்போதும் விலை மதிப்புக் குறையாமல் இருப்பது. மன்னர்களின் முடிமேல் சிறந்து நிற்பது. குப்பையில் கிடந்தாலும் மதிப்புக் குன்றாதது. முருகன் மயிலேறிய மாணிக்கமாக விளங்குகிறான். எனவேதான்,  வள்ளிநாயகியையும்மயிலையும் எண்ணி"நீலச் சிகண்டியில் ஏறும் பிரான் எந்த நேரத்திலும் கோலக் குறத்தியுடன் வருவான்"என்றார் பிறிதொரு கந்தர் அலங்காரப் பாடலில். வள்ளிநாயகியுடன் மயில் ஏறிய மாணிக்கம் ஆகிய முருகன் நம்மையும் வந்து ஆட்கொள்ளுவான். எப்போது வருவான் என்றால்எந்த நேரத்திலும் வருவான் என்கிறார் அருணகிரிநாதர். நாம் தவம் செய்து பக்குவப்பட்டு இருக்கவேண்டும். 

 

     வள்ளிக்கு வாய்த்தவனும்மயில் ஏறிய மாணிக்கமும் ஆக விளங்கும் திருச்செந்தில் ஆண்டவனைத் தரிசித்த அருணகிரிநாதப் பெருமான்தனது உள்ளத் துயரை ஒழித்து அருள் புரியவேண்டும் என்று விண்ணப்பம் செய்கின்றார். அவன்தானேதேவர்களின் துயரை ஒழிப்பதற்காகசூரபதுமனை அழித்து அருள் புரிந்தவன். அவன் திருவடியைப் பற்றிக் கொண்டால் ஆயிரம் ஆயிரம் துயர அலைகள் வந்து நமது மனத்தில் மோதினாலும்கொள்ளித் தலையில் அகப்பட்டுக் கொண்ட எறும்பைப் போலச்சற்றும் தளர்ச்சி அடையாமல் இருக்கலாம்.

 

     அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரப் பாடலை இப்போது மீண்டும் பார்ப்போம்... 

 

"கொள்ளித் தலையில் எறும்பு அது போலக் குலையும்என்றன் 

உள்ளத் துயரை ஒழித்து அருளாய்ஒரு கோடிமுத்தம்

தெள்ளிக் கொழிக்கும் கடல்செந்தில் மேவிய சேவகனே! 

வள்ளிக்கு வாய்த்தவ னே!மயில் ஏறிய மாணிக்கமே! 

 

இதன் பொருள் ---

 

     ஒருகோடி முத்துக்களைத் தெள்ளிக் கொழிக்கின்ற கடற்கரையில் விளங்கும் திருச்செந்தூரில் எழுந்தருளிய வீரரே!  வள்ளிநாயகிக்கு வாய்த்த மணவாளரே! மயில்வாகனத்தின் மீது ஏறி அருளும் மாணிக்கம் போன்றவரே! இருதலையும் எரிகின்ற கொள்ளியின் இடையே அகப்பட்டுக் கொண்ட எறும்பினைப் போலத் துன்புறுகின்ற அடியேனுடைய மனத் துயரை ஒழித்து அருள் புரிவீராக.

 

     பின் வரும் அருட்பாடல்களிலும்மேற்குறித்த "கொள்ளித் தலையில் எறும்பு" என்பது காட்டப்பட்டு உள்ளதை அறிந்துதெளியலாம்.

 

"உள்குவார் உள்ளத்தானை,உணர்வுஎனும் பெருமையானை

உள்கினேன் நானும் காண்பான்,உருகினேன் ஊறி ஊறி

எள்கினேன்,எந்தை பெம்மான் இருதலை மின்னுகின்ற

கொள்ளிமேல் எறும்பு என் உள்ளம் எங்ஙனம் கூடுமாறே".

 

என்பது அப்பர் பெருமான் அருளிய தேவாரப் பாடல்.

 

இதன் பொருள் ---

 

     நினைப்பவர் மனத்தைக் கோயிலாகக் கொண்டவனாய்ச் சிவஞானமாகிய பெருமையை உடையவனாய் உள்ள சிவபரம்பொருளை நானும் காண்பதற்கு நினைத்துஉருகி அன்பு ஊறிஉள்ளம் உருகினேன். எமது தந்தையாகிய பெருமானே! உன்னை,இரண்டு பக்கமும் பற்றி எரிகின்ற கொள்ளியின் உள்ளே உள்ள எறும்பு போன்ற என் உள்ளம் எங்ஙனம் அடைய இயலும்?

 

"உருவார் பிறவிக்கண் இன்னம் புகச் செய்து

திரிவாய் என்று சிந்தித்தி என்று அதற்கு அஞ்சி,

இருபாடு எரி கொள்ளியினுள் எறும்பேபோல்

உருகா நிற்கும் என்உள்ளம் ஊழி முதல்வா".

 

என்று திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி கூறும்.

 

இதன் பொருள் --- 

 

     பிரளய காலத்து உலகம் முழுவதையும் வயிற்றில் வைத்துப் பாதுகாக்கின்ற தலைவனே! பல பிறப்புகளில் இன்னமும் என்னைப் பிறக்கச் செய்து கருமவசத்தால் திரிவாயாக என்று என்னைக் குறித்து நீ திருவுள்ளம் கொள்கின்றாயோஎன்றுஅப் பிறவிகளில் திரிவதற்கு அஞ்சிஇரண்டு பக்கத்திலும் நெருப்புப் பற்றி எரியஅவற்றின் நடுவிலே அகப்பட்டு வருந்தும் எறும்பு போல என் மனம் உருகி நெகிழ்ந்து கொண்டே இருக்கும்.

 

"உள்ளமோ ஒன்றில் நில்லாது,

     ஓசையில் எரி நின்று உண்ணும்

கொள்ளி மேல் எறும்பு போலக் 

     குழையுமால் என் தன் உள்ளம்,

தெள்ளியீர்! தேவர்க்கு எல்லாம் 

     தேவராய் உலகம் கொண்ட

ஒள்ளயீர்! உம்மை அல்லால் 

     எழுமையும் துணை இலோமே"

 

என்பது திருமங்கை ஆழ்வார் அருளிய திருக்குறுந்தாண்டகம்.

 

இதன் பொருள் ---

 

     என் மனமோ எதிலும் நிலைபெறாமல் இருக்கும். நெருப்பானது ஓசையுடன் பொருந்தி நின்று எரிகின்ற கொள்ளிக் கட்டையின் மேல் உள்ள எறும்பு போல என் மனம் பிறப்பு இறப்புகளை நினைத்து வருந்துகின்றது. அந்தோ! தெளிவு உடைய தேவரே! தேவர்க்கு எல்லாம் தேவர் ஆகி உலகை மாவலியிடம் இருந்து பெற்ற ஒளியுடையவரே! உம்மைத் தவிர எந்த நிலையிலும் நாங்கள் துணை இல்லாமல் இருக்கின்றோம்.

 

 

No comments:

Post a Comment

ஏகம்ப மாலை

  பட்டினத்தடிகள் பாடியருளிய திரு ஏகம்ப மாலை திருச்சிற்றம்பலம் "அறம்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம் துறந்தான், அவனில் சதகோடி உ...