உலகம் இயங்குவது யாரால்?

 


உலகம் இயங்குவது யாரால்?

-----

 

    பண்புடைமை என்பது சான்றாண்மைகளில் வழுவாது நின்றுஎல்லார் இயல்புகளும் அறிந்து ஒழுகுதல் என்று காட்ட"பண்புடைமை" என்னும் ஓர் அதிகாரத்தைத் திருவள்ளுவ நாயனார் வைத்து அருளினார். "பண்பு எனப்படுவது பாடு அறிந்த ஒழுகல்" என்றும்  ‘‘பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்" என்றும் கலித்தொகையில் சொல்லப்பட்டு உள்ளது.

 

    தமது பெருமைசான்றாண்மை ஆகியவைகளில் சிறிதும் குற்றப்படாது வாழ்ந்து கொண்டேஉலகத்து மக்களின் இயற்கையையும் அறிந்துஅவரவர்க்குத் தக்க விதமாக ஒழுகி வருதல் நற்பண்பு ஆகும். அவ்வாறு நற்பண்புகளை அமையப் பெற்றவர்கள் வாழ்ந்து வருவதாலேயேஅவர்களுடைய நீதியாலும்அறத்தினாலுமே இந்த உலக இயற்கையானது எக்காலமும் நிலைத்து வருகின்றது. இல்லையேல்இந்த உலகமானது மண்ணுள் மறைந்து மாய்ந்து போய்விடும் என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.

 

"பண்பு உடையார்ப் பட்டு உண்டு உலகம்,அது இன்றேல்

மண்புக்கு மாய்வது மன்"

 

என்னும் திருக்குறளின் வழி தமது மேலான கருத்தை வெளியிட்டு உள்ளார் நாயனார்.

 

    மேலே குறித்த நற்குணங்கள் இல்லாவிட்டாலும்மிகுதியும் கூர்மையான அறிவு உடையவர்களாக சிலர் இருக்கின்றார்களேஅவர்களால் இந்த உலகத்திற்கு ஏதும் பயன் விளையாதா?என்னும் ஐயம் தோன்றலாம். இதனைத் தெளிவிக்கவே,

 

"அரம்போலும் கூர்மைய ரேனும்,மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லாதவர்".

 

என்னும் திருக்குறளை வகுத்துகூர்மை உடைய அரத்தைப் போன்ற அறிவுக் கூர்மை உடையவராக இருந்தாலும்மக்களுக்கு உரிய பண்புகள் இல்லாதவர்ஓர் அறிவினை உடைய மரத்திற்கே சமானமானவர் என்றார். 

 

    அரமானது தன்னிடத்தே வந்த பொருளைத் தேய்த்துத் தேய்த்து மாய்ந்து போகும்படிச் செய்வது போபிறரை அழிப்பதற்காகத் தமது அறிவுக் கூர்மையைப் பயன்படுத்திக் கொள்வார்களே ஒழியஒர் அறிவு உடைய மரம் உலகத்தார்க்குப் பயன்படுகின்ற அளவும் பயன் தராது போவதால்பண்பு இல்லாதவர் மரத்தைக் காட்டிலும் தாழ்ந்தவர் என்பது கருத்து. மரமானது பிறர் தேவை அறிந்து உதவாது. பயன்படுத்திக் கொள்வோர்க்கு உதவும். ஆனால்மனிதன் பிறர் தேவைதுன்பம் அறிந்து உதவ வேண்டிய பண்பு இல்லாது இருத்தலால், "மரம் போல்வர்" என்றார் நாயனார். யாருக்கும் உதவாதவர்பட்டுப் போன மரத்துக்கு ஒப்பானவர் என்றும் கொள்ளலாம்.

 

    இதுதான் வாழ்வியல் என்பதைக் காட்டும்படியாபுறநானூற்றில் ஒரு அற்புதமான பாடல்....

 

"உண்டால் அம்ம! இவ் வுலகம்,இந்திரர்

அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத்

தமியர் உண்டலும் இலரே;முனிவு இலர்;

துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவது அஞ்சி,

புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்;பழி எனின்

 உலகுடன் பெறினும் கொள்ளலர்யர்வு இலர்;

அன்ன மாட்சி அனையர் ஆகித்

தமக்கு என முயலா நோன்தாள்

பிறர்க்கு என முயலுநர் உண்மை யானே". 

 

இதன் பொருள் ---

 

    இப் பாடலைப் பாடியவன் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்னும் அரசன். கடலில் கலம் செலுத்திப் பிறநாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்தலும்மீன் பிடித்தலும்முத்துக் குளித்தலும் பாண்டியர்கள் மேற்கொண்டிருந்த தொழில். பாண்டி வேந்தரும் இத் தொழிற்கு வேண்டும் ஆதரவு புரிந்து வந்தனர். கடாரம்சாவகம்ஈழம் முதலிய நாடுகளுக்குக் கலம் செலுத்திப் படைகொண்டு சென்று போர் புரிந்துஅரசு முறை நிறுவியதாக வரலாறு கூறுகிறது. பாண்டிநாட்டு அரசகுமரர்களில்இளம்பெருவழுதிஇளமையிலே கற்பவை கசடறக் கற்று,  "கற்ற பின் நிற்க அதற்குத் தக" என்று திருவள்ளுவர் காட்டியபடிகற்ற நெறியிலே ஒழுகும் மேம்பாடு உடையவனாக விளங்கினான். அவன் அவ்வப்போது பாடிய பாட்டுக்கள் சான்றோர்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்தன. அத்தகைய நலம் வாய்ந்த அவன் கடலில் பயணித்த போதுகலம் கவிழ்ந்து மாண்டான்.  அதனால்அவனைச் சான்றோர்  "கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி" என்று குறித்தனர். 

 

    இந்த உலகமானது எத்தனையோ காலமாக இன்னமும் அழியாமல் நிலைபெற்று இருக்கின்றது. இன்னமும் மனிதர்களும்உயிரினங்களும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று கல்வி அறிவில் சிறந்தவனாக விளங்கிய பாண்டியன் இளம்பெருவழுதியின் சிந்தனையில் ஒரு வினா தோன்றியது, "தமக்கென வாழாது,  பிறர்க்கென முயலும் பெரியோர் உள்ளதால் இவ்வுலகம் இன்னமும் நிலைபெற்று உள்ளது" என்பதுதான் அவனுக்குக் கிடைத்த விடை. அதை அவன் மேற்குறித்த பாடலாக வடித்தான்.

 

இப் பாடலின் பொருள் ---

 

    அம்மம்ம! எவ்வளவோ காலமாக இந்த உலக இயக்கம் இன்னமும் நிலைபெற்று இருக்கின்றது. இந்திரர்க்கு உரிய  அமிழ்தமானது தெய்வ அருளாலாவதுதவ ஆற்றலினாலாவதுதமக்கு வந்து கிடைத்தாலும் கூஅதை இனியது எனக் கருதித் தாமே உண்டு பயன் பெறலாம் என்னும் மனம் இல்லாதவர்கள். யாரோடும் வெறுப்புக் கொள்ளாத அன்புள்ளம் படைத்தவர்கள்.  பிறர் அஞ்சத் தகும் பழி பாவங்களுக்குத் தாமும் அஞ்சுபவர்கள். அந்த அச்சத்தால் சோம்பி இருக்காதவர்கள்.  புகழ் உண்டாகும் என்றால்அதற்காகத் தம்முடைய உயிரையும் கொடுப்பவர்கள்.  ஆனால்அதே சமயம்பழிக்கு இடமான இழிந்த செயல் என்றால்அதற்கு விலையாக இந்த உலகமே கிடைப்பதாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளாத உயர்ந்த பண்பாளர்கள். மனத் தளர்சி என்பது சிறிதும் அறியாதவர்கள். இத்தகு குணநலன்கள் வாய்க்கப் பெற்ற மாண்பினை உடையவர் ஆகி,  தமக்கு என வாழுகின்ற தன்னலம் அற்றவர் ஆகிபிறர் வாழத் தானும் வாழும் பொதுநலம் பேணுபவர்கள் ஆகிய நல்லவர்கள் இருந்து கொண்டு இருப்பதால்இந்த உலகம் இன்னமும் இருந்து கொண்டு இருக்கின்றது. இயங்கிக் கொண்டு இருக்கின்றது. (இல்லையேல்திருவள்ளுவ நாயனார் காட்டியபடி,மண்ணோடு மண்ணாக மாய்ந்து போய் இருக்கும்.)

 

    "பிறர் அஞ்சுவது அஞ்சி" என்னும் சொற்றொடர் சிந்தனைக்கு உரியது. எதற்கு எடுத்தாலும் அச்சம் கொள்ளுவதும் மடமை. அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாது இருத்தலும் மடமை.

 

    மனிதனாகப் பிறந்தவர் எல்லோருக்கும் உள்ளீடாக இருக்கவேண்டியது அறிவும்அன்பும் ஆகும். அறிவு மட்டும் இருந்துவிட்டால் போதாது. அன்பு இருந்தால் தான் அறிவு பயன் தரும். 


"அறிவினால் ஆகுவது உண்டோபிறிதின் நோய் 

தன் நோய்போல் போற்றாக் கடை" 

 

என்னும் திருக்குறளின் வழி இது புலன் ஆகும். பிறருக்கு வருகின்ற துன்பத்தைத் தனக்கு வந்ததாக மதித்து நடந்து கொள்ளாதபோதுஒருவன் பெற்ற அறிவினால் அவனுக்குப் பயன் ஏதும் இல்லை. பயன் இல்லாதது "பதர்" எனப்படும். அறிவுடைமை நற்பண்புகளை வளர்க்கும். அன்புடைமை பிற உயிர்களுக்கு நன்மை புரியும்.

 

    பொதுவாகப் பெண்களுக்கு இருக்கவேண்டிய நற்பண்புகள் நான்கு என்று கூறுவர். ஆண்களுக்கும் பொருந்தி இருக்க வேண்டிய நற்பண்புகள் பற்றியும் கூறப்பட்டு உள்ளது. ஆனால்இதைப் பெரிதாகக் கொள்ளமால்பெண்களுக்கு உரியதையே வலியுறுத்தும் ஆணாதிக்கம் உள்ளது.

 

    பெண்களுக்கு அமைந்திருக்க வேண்டிய நற்பண்புகள்பொதுவாகஅச்சம்மடம்நாணம்பயிர்ப்பு என்று கூறப்படும். "அச்சம்" என்பதுவர இருக்கும் கேடுதீங்குகளைக் குறித்த அச்சம்.பழிபாவங்களைக் குறித்த அச்சம். "மடம்" என்பதுஅறிந்த ஒன்றைஅறியாதது போல் இருத்தல். (பிறர் உள்ளக் கருத்தை அறிந்துகொள்ள உதவும். இதனால்தான்பெண்களின் உள்ளக் கருத்தை எளிதில் அறிந்து கொள்ள முடியாது என்பர். )"நாணம்" என்பது நாணப்பட வேண்டியதற்கு நாணப்படுதல். "பயிர்ப்பு" என்பதுதனக்கு உரியது அல்லாத ஒன்றின் மீது அருவருப்புக் கொள்ளுதல்.

 

    ஆண்மக்களுக்கு அமைந்திருக்க வேண்டிய நற்பண்புகள்அறிவுநிறைஓர்ப்புகடைப்பிடி என நான்காக வகுத்துள்ளனர் பெரியோர். "அறிவு" எனப்படுவதுஎப்பொருளையும் நன்கு கவனித்துஅதன் உண்மைத் தன்மையை அறிவது. "மெய்ப் பொருள் காண்பது அறிவு" என்றும் "மெய்த் தன்மை காண்பது அறிவு" என்று திருக்குறள் கூறும். "நிறை" எனப்படுவதுகாக்க வேண்டியவற்றைக் காத்துநீக்கவேண்டியதை நீக்கி ஒழுகும் ஒழுக்கம் ஆகும். "ஓர்ப்பு" எனப்படுவதுஒரு பொருளை ஆராய்ந்து உணர்தல். பொறுமைநினைவுதெளிவு கொள்ளுதல். "கடைப்பிடி" எனப்படுவதுநல்லதை மறவாது கடைப்பிடித்தல். "நன்மை கடைப்பிடி" என்பது ஆத்திசூடி.

 

    தொல்காப்பியம் பெண்மக்களுக்கு இருக்கவேண்டிய நற்பண்புகள் ஆறு எனக் கூறும். அவை வருமாறு...

 

செறிவு --- மன அடக்கம்.

நிறைவு --- உள்ளத்தில் உள்ளதைப் புலப்படுத்தாமல் அமைதி காத்தல்.

செம்மை --- மனக் கோட்டம் இல்லாது இருத்தல்.

செப்பு --- செய்யத் தகுவனவற்றைக் கூறுதல்.

அறிவு --- நன்மைதீமைகளை அறிதல்.

அருமை --- உள்ளக் கருத்தினை அறிதலில் அருமை. 

 

    இந்த நற்பண்புகள் இல்லாதவர் குற்றம் உள்ளவர்கள்பயனற்றவர்கள்பண்பு அற்றவர்கள்என்று நூல்கள் கூறும்.

 

    நற்பண்புகள் அமையப் பெற்றவர்கள்அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சுவார்கள் எனக் காட்ட,

 

"அஞ்சுவது அஞ்சாமை பேதைமைஅஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்".

 

என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

    எனவே, "பிறர் அஞ்சுவது அஞ்சி" என்று புறநானூறு கூறுகின்றது. பழி பாவங்களுக்கு அஞ்ச வேண்டும். அறிவு உடையவர்களாக இருந்தால்அவரிடத்தில் பழி பாவங்களுக்கு இடம் கொடுப்பதில் அச்சமும்நாணமும் இருக்கும் என்பதைக் காட்ட"அச்சமும் நாணமும் அறிவு இல்லோர்க்கு இல்லை"என்றது வெற்றிவேற்கை.

 

"அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லாக்

கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி

எச்சம் அற்று ஏமாந்து இருக்கை நன்று".

 

என்று மேலும் கூறுகின்றது "வெற்றிவேற்கை"

 

     கல்வி கற்று வாழ்க்கை உணர்ந்துசெய்யக் கூடாத செயல்களைச் செய்வதற்கு உள்ளத்தில் அச்சத்தை வைத்துக் கொண்டுஅறிவு இல்லாத இழிந்த குணம் உடைய பிள்ளைகளைப் பெறுவதைக் காட்டிலும்,அந்தக் குடியானது சந்ததி இல்லாமல் இன்பத்துடன் வாழ்வதே நல்லது.

 

     நல்ல பண்பாளர்கள் இருந்துகொண்டு இருப்பதால்தான் இந்த உலகம்மண்ணோடு மண்ணாகிப் போகாமல்,இன்னமும் இயங்கிக் கொண்டு இருக்கின்றது. அவர்கள் பொருட்டே அனைத்து நலங்களும் விளங்கிக் கொண்டு இருக்கின்றன. 

 

     "நல்லார் ஒருவர் உளரேல்,அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை"என்றார் ஔவைப் பிராட்டியார். அந்த நல்லாரில் ஒருவராபண்பாளர்களில் ஒருவராக நாம் இருப்பது நல்லது. நமது சந்ததிக்கும் நல்லது. நாம் நல்லவராக வாழ்வதால்இந்த உலகம் இயங்குகிறது என்பது எவ்வளவு பெருமைக்கு உரியது!

No comments:

Post a Comment

ஏகம்ப மாலை

  பட்டினத்தடிகள் பாடியருளிய திரு ஏகம்ப மாலை திருச்சிற்றம்பலம் "அறம்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம் துறந்தான், அவனில் சதகோடி உ...