அறம் சார்ந்த வறுமை --- அறம் சாரா வறுமை
-----
இந்தத் தலைப்பே இதுவரையில் கேட்டிராததாகத் தோன்றும். திருக்குறளில் "நல்குரவு" என்னும் ஒர் அதிகாரத்தை வைத்தார் நாயனார். நல்குரவு என்னும் தலைப்பிற்கு, "நுகர்தற்கு ஏதும் இல்லாமை" என்று பொருள் கண்டார் பரிமேலழகர். "நல்குரவு" என்பது, வறுமை, இல்லாமை, ஏழ்மை, மிடி, தரித்திரம் என்று பலவாறாகச் சொல்லப்படும்.
அருணகிரிநாதர் வறுமையை, "மிடி என்று ஒரு பாவி" என்று கடிந்து கொள்கிறார். வறுமையில் கிடந்து வாடுகின்ற நிலையை, "வறுமையாகிய தீயின் மேல் கிடந்து நெளியும் நீள் புழு" என்று ஒரு திருப்புகழில் பாடுகிறார். நெருப்பில் கிடந்து நெளிகின்ற புழுவானது எத்தகைய துன்பத்தை அனுபவிக்குமோ, அத்தகைய துன்பத்தை வறுமை நிலையில் ஒருவன் அனுபவிப்பான்.
வறுமை குறித்துச் சொல்லப்பட்டு உள்ள பாடல்களைப் பார்ப்போம்...
"வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே".
என்பது அருணகிரிநாதப் பெருமான் அருளிய கந்தர் அனுபூதியில் வரும் ஒரு பாடல். வறுமையின் கொடுமையைக் குறித்து இந்தப் பாடலில், "பிறப்பும் இறப்பும் இல்லாத வேலாயுதப் பெருமானே! வறுமை என்கிற பாவி வந்து பிடித்துவிட்டால், ஒருவனுடைய அழகும்,சமூகத்தில் அவன் கொண்டிருக்கும் உயர் நிலையும், நல்லொழுக்கமும், பரம்பரை கெளரவமும், நீங்கி விடுகின்றனவே. இது என்ன ஆச்சரியம்!" என்று காட்டினார்.
வறுமை என்பது இருவகைப்படும். இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான பொருட்செல்வம் இல்லாமை ஒருவகை. மேலுலக வாழ்க்கைக்கு இன்றியமையாத அருட்செல்வம் இன்மை ஒருவகை. இவ்வுலக வாழ்க்கையில் உண்டாகும் வறுமையில் இருந்து தப்பிக்க, ஒருவனது முயற்சி இருக்கவேண்டும். அதற்குத் திருவருள் துணை புரியவேண்டும்.
வறுமையின் கொடுமை குறித்து, இதுவரை நாம் அறிந்திராத ஒரு திருப்புகழ்ப் பாடல். திருமுருக கிருபானந்தவாரியார் பதிப்பில் இந்தப் பாடல் இல்லை. 1935-ஆம் ஆண்டு சென்னை, சைவசித்தாந்தப் பெருமன்றத்தினரால் வெளியிடப்பட்ட பதிப்பில் உள்ளது. வறுமைப் பிணியில் இருந்து தப்பிக்க அருள் புரியுமாறு முருகப் பெருமானிடம் அருணகிரிநாதர் முறையிடுகின்ற திருப்புகழ்ப் பாடலைக் காண்போம்...
"வறுமைப் பாழ்பிணி ஆற்றப்படாது உ(ள்)ளம்
உருகிப் போனது தேற்றப் படாது, இனி
மகிமைக் கேடுகள் பார்க்கப்படாது என ......அழையாயோ?
வலியப் போய்உடல் கூச்சப்ப டாமையும்
இடியப் பேசிய நா சிக்கலாமையும்
மறுசொல் காதுகள் கேட்கப்ப டாமையும் ......வரலாமோ?
கறுவிப் பாய்புலி வேட்டைக்கு உ(ள்)ளேவரு
பசுவைப் போல்மிடி யால்பட்ட பாடு எழு
கதையைப் பாரினில் ஆர்க்குச் சொல்வேன் இ(ன்)னம்....அறியாயோ?
கவலைச் சாகர நீச்சுக்கு உ(ள்)ளேஉயிர்
தவறிப் போம்என ஓட்டத்தில் ஓடியே
கருணைத் தோணியில் ஏற்றிக்கொள் வாய் இனி.... அலையாதே
குறைபட் டேஉயிர் காத்துக்கொள் வாய் என
முறையிட்டு ஓர்கரி கூப்பிட்ட நாள் ஒரு
குரலில் போய்உயிர் மீட்டுக்கொள்வோர் திரு.....மருகோனே!
இதன் பொருள் ---
வறுமைப் பாழ்பிணி ஆற்றப்படாது --- (முருகப் பெருமானே!) வறுமை என்னும் பாழான கொடிய நோயைத் தாங்க மாட்டாமையால், உ(ள்)ளம் உருகிப் போனது தேற்றப்படாது --- என் மனமானது நைந்து போனது, அதை இனித் தேற்ற முடியாது, இனி மகிமைக் கேடுகள் பார்க்கப்படாது என --- இனிவரும் காலத்தில் (வறுமையின் காரணமாக) எனது பெருமைக்கு உண்டாகும் குந்தகங்கள் என்னை வந்து அடையாது என்னுமாறு, அழையாயோ --- தேவரீர் அடியேனை அழைத்துக் கொள்ள மாட்டீரா? வலியப் போய் உடல் கூச்சப் படாமையும் --- எனது வறுமையைப் போக்கிக் கொள்ள வலியச் சென்று சற்றும் கூச்சம் இல்லாமல் பொருள் உள்ளோரிடம் இரப்பதும், (பொருள் உள்ளவர்கள் சற்றும் இரக்கம் கொள்ளாது) இடியப் பேசிய நா சிக்கலாமையும் --- இடி முழக்கம் போல் நாக்குக் குழறக் கத்திப் பேசுகின்ற, மறுசொல் காதுகள் கேட்கப் படாமையும் --- மறு சொற்களை என் காதுகளால் கேட்டுச் சகித்துக் கொள்ள முடியாமையும், வரலாமோ --- (ஆகிய இந்த நிலைகள் என்னை வந்து) அடையலாமா?கறுவிப் பாய் புலி வேட்டைக்கு உள்ளே வரு பசுவைப் போல் --- கோபம் கொண்டு பாய்கின்ற புலியின் வேட்டைக்குள்ளே அகப்பட்டுக் கொள்கிற பசுவைப் போல, மிடியால் பட்ட பாடு எழு கதையை --- (அடியேனது முன்னை வினைப் பயனால் உண்டான) வறுமையால் அடியேன் பட்ட துன்பங்களை எழுதிய ஒரு கதையை, பாரினில் ஆர்க்குச் சொல்வேன் இ(ன்)னம் அறியாயோ --- இந்த உலகத்தில் நான் இன்னும் யாரிடம் சொல்லிக் கொண்டிருப்பேன்? (அடியேனுக்கு என்று உலகில் உற்ற துணையாக யாரும் இல்லை,நான் உனது அடியவன்உன்னிடம் சொல்லாமல் வேறுயாரிடம் சொல்வேன்?) இதை நீ அறியமாட்டாயா?கவலைச் சாகர நீச்சுக்கு உ(ள்)ளே --- கவலைக் கடலின் ஆழத்தில் அழுந்தி, உயிர் தவறிப் போம் என ஓட்டத்தில் ஓடியே --- அடியேன் உயிரானது தவறிப் போகும் என்பதால் (வறுமையைத் தொலைக்க வேண்டி)அங்கும் இங்குமாக ஓடித் திரிந்து, இனி அலையாதே --- இனியும் நான் அலையாதவண்ணம், கருணைத் தோணியில் ஏற்றிக் கொள்வாய் --- உன்னுடைய அருட்கருணை என்னும் படகிலே என்னை ஏற்றிக் (பிறவி எனும் பெருங்கடலிலே நீந்திக் கொண்டிருக்கும் என்னைக் கரையேற்றிக்) காத்து அருள்வாய். குறைபட்டே உயிர் காத்துக் கொள்வாய் என முறையிட்டு --- (முதலையின் வாயில் பட்டுத் தவிக்கின்ற உனது உயிரைக் காத்து அருள்வாய் என்று முறையிட்டு, ஓர் கரி கூப்பிட்ட நாள் --- ஒப்பற்ற கஜேந்திரன் எனும் யானையானது கூப்பிட்ட அந்த நாளிலே, ஒரு குரலில் போய் --- ஒரு முறை கூப்பட்ட உடனே ஓடிச் சென்று, உயிர் மீட்டுக் கொள்வோர் திரு மருகோனே --- யானையின் உயிரைக் காத்து அருள் புரிந்த திருமாலின் திருமருகரே!
வறுமையின் கொடுமை குறித்து அருணகிரிநாதப் பெருமான் பாடிய அருளிய இந்தத் திருப்புகழ் எத்துணை அருமையாக உள்ளது! நாள்தோறும் நாம் முருகப் பெருமானிடம் முறையிட்டுக் கொள்ள வேண்டிய அற்புதமான திருப்புகழ்ப் பாடல்களில் இதுவும் ஒன்று. இறையருளால், இவ்வுலக வாழ்க்கைக்கு வேண்டிய பொருட்செல்வத்தையும், மறுமைக்கு வேண்டிய அருட்செல்வத்தையும் பெறலாம் என்பதால், அருளாளர்கள் இறைவனிடம் தமது வறுமையை முறையிட்டுக் கொள்கிறார்கள்.
வறுமை காரணமாக உணவு கிடைக்காமல், பசி நோய் வந்துவிட்டால், தன்மானமும், குடிப்பெருமையும், கல்வியும், கொடையும்,அறிவுடைமையும், தானமும், தவமும், பெருமையும், தொழிலில் ஈடுபடும் முயற்சியும், தேன் கசிவது போன்ற இனிமையான சொற்களை உடைய மங்கையர் மீது விருப்பம் கொள்ளுதலும், ஆகிய இவை பத்தும் இல்லாமல் போய்விடும் என்கின்றார் ஔவையார்.
"மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்". --- ஔவையார்.
"தாங்க ஒணா வறுமை வந்தால்
சபைதனில் செல்ல நாணும்,
வேங்கை போல் வீரம் குன்றும்,
விருந்தினர் காண நாணும்,
பூங்கொடி மனையாட்கு அஞ்சும்,
புல்லருக்கு இணங்கச் செய்யும்,
ஓங்கிய அறிவு குன்றும்,
உலகெலாம் பழிக்கும் தானே". --- விவேக சிந்தாமணி.
இதன் பொருள் ---
ஒருவனுக்குப் பொறுத்துக்கொள்ள முடியாத வறுமை வந்து சேர்ந்தால், அவன், (தகுந்த ஆடை அணிகலன்கள் இல்லாததால்) உயர்ந்தோர் கூடியுள்ள சபைக்குப் போவதற்கு நாணப்படுவான்.அவன் முன்னே கொண்டு இருந்த வேங்கைப் புலி போன்ற வீரத் தன்மையானது குன்றிப் போகும்.விருந்தினரைத் தக்கவாறு உபசரிக்கும் நிலை இல்லாததால், விருந்தினரைக் கண்டாலே நாணப்படுவான்.மலர்க் கொடி போன்ற மனையாளுக்கும் அவன் அஞ்ச வேண்டி வரும்.அந்த வறுமையானது அவனை, கீழ்மக்களோடு இணக்கம் கொள்ளச் செய்யும். அவனிடத்தே முன்பு மிகுந்து இருந்த அறிவானது, இப்போது குன்றிப் போகும்.உலகில் உள்ளவர்கள் அவனை நிந்தித்துப் பேசுவார்கள்.
"தரித்திரம் மிக்க வனப்பினை ஒடுக்கிச்
சரீரத்தை உலர்தர வாட்டும்,
தரித்திரம் அளவாச் சோம்பலை எழுப்பும்,
சாற்றஅரும் உலோபத்தை மிகுக்கும்,
தரித்திரம் தலைவன் தலைவியர்க்கு இடையே
தடுப்ப அரும் கலாம்பல விளைக்கும்,
தரித்திரம் அவமானம் பொய் பேராசை
தரும் இதில் கொடியது ஒன்று இலையே". --- குசேலோபாக்கியானம்.
இதன் பொருள் ---
வறுமையானது மிகுந்த அழகைக் கெடுத்து உடம்பினை மெலியும்படி வருத்தும். வறுமையானது அளவிடப்படாத சோம்பலை உண்டாக்கும், சொல்லுதற்கரிய உலோபத் தன்மையை மிகச் செய்யும். வறுமையானது கணவன் மனைவியர்க்குள் தடுத்தற்தகு அரிய பல கலகங்களை உண்டாக்கும்.வறுமையானது மானம் இழத்தல், பொய் பேசுதல், பேராசைகொள்ளுதல் முதலியவற்றை உண்டாக்கும். (ஆதலால்) இவ்வறுமையில் கொடியது வேறு ஒன்று இல்லை.
"தரித்திரம் களிப்பாம் கடலுக்கு ஓர் வடவை,
சாற்றும் எண்ணங்கள் வாழ் இடமாம்,
தரித்திரம் பற்பல் துக்கமும் தோன்றத்
தக்க பேர் ஆகரம் என்ப,
தரித்திரம் நன்மை சால் ஒழுங்கு என்னும்
தழைவனம் தனக்கு அழல் தழலாம்,
தரித்திரங் கொடிய எவற்றினும் கொடிது, அத்
தகையதை ஒழித்தல் நன்று ஆமே". ---குசேலோபாக்கியானம்
இதன் பொருள் ---
வறுமையானது மகிழ்ச்சியாகிய கடலினுக்கு வடவைத் தீயாகும். சொல்லப்பட்ட பல எண்ணங்களுக்கு உறைவிடம் ஆகும். வறுமையானது பலப்பல துன்பங்களும் பிறத்தற்கு இடமாகும் என்பர் மேலோர். வறுமையானது நன்மை மிகுந்த ஒழுக்கம் என்ற செழித்த சோலையை எரிக்கும் தீ ஆகும் தரித்திரம் என்பது கொடிய எவற்றினும் கொடியது. அத் தன்மை உள்ள வறுமையை நீக்குவதே நன்மையாகும்.
"கொடியது கேட்கின்,நெடிய வெவ் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது;
அதனினும் கொடிது இளமையில் வறுமை"
என்றார் ஔவைப் பிராட்டியார். இந்த உலகில் மிகவும் கொடுமையானது எது என்றால் வறுமைதான். அந்த வறுமையும் இளமைப் பருவத்தில் வந்தால் மிகமிகக் கொடுமையானது.
"வறுமைதான் வந்திடில் தாய்பழுது சொல்லுவாள்;
மனையாட்டி சற்றும் எண்ணாள்;
வாக்கில் பிறக்கின்ற சொல்லெலாம் பொல்லாத
வசனமாய் வந்துவிளையும்;
சிறுமையொடு தொலையா விசாரமே அல்லாது
சிந்தையில் தைரியமில்லை;
செய்யசபை தன்னிலே சென்றுவர வெட்கம்ஆம்;
செல்வரைக் காணில்நாணும்;
உறுதிபெறு வீரமும் குன்றிடும்;விருந்துவரின்
உயிருடன் செத்தபிணமாம்;
உலகம் பழித்திடும்;பெருமையோர் முன்புசென்று
ஒருவர் ஒரு செய்திசொன்னால்
மறுவசனமும் சொலார்;துன்பினில் துன்பம்இது
வந்து அணுகிடாது அருளுவாய்
மயிலேறி விளையாடு குகனே! புல்வயல் நீடு
மலைமேவு குமரேசனே!" --- குமரேச சதகம்.
வறுமையால் உண்டாகும் கொடுமைகள் குறித்து, குருபாத தாசர் என்னும் பெரியார் இயற்றிய, "குமரேச சதகம்" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
இதன் பொருள் ---
மயிலேறி விளையாடு குகனே --- மயில் மீது அமர்ந்து திருவிளையாடல் புரியும் குகனே!புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே! --- திருப்புல்வயல் என்னும் திருத்தலத்தில் உயர்ந்த மலையின்மேல் எழுந்தருளிய குமரக் கடவுளே!
வறுமை தான் வந்திடில் தாய் பழுது சொல்வாள் ---(ஒருவனுக்கு) வறுமை வந்து சேருமானால் தாயும் குற்றம் கூறுவாள்; மனையாட்டி சற்றும் எண்ணாள் --- மனைவியும் சிறிதும் மதிக்கமாட்டாள்; வாக்கில் பிறக்கின்ற சொல் எ(ல்)லாம் பொல்லாத வசனமாய் வந்து விளையும் --- வாயிலிருந்து வரும் மொழிகள் எல்லாம் தீயமொழிகளாக மாறிவிடும்; சிறுமையோடு தொலையா விசாரமே அல்லாது ---இழிவும் நீங்காத கவலையுமே, அல்லாமல், சிந்தையில் தைரியம் இல்லை --- உள்ளத்தில் துணிவு இருக்காது; செய்ய சபை தன்னிலே சென்று வர வெட்கம் ஆம் --- நல்ல சபையிலே போய் வர நாணம் உண்டாகும்;செல்வரைக் காணில் நாணும் --- செல்வம் படைத்தோரைக் கண்டால் உள்ளம் வெட்கம் அடையும்; உறுதிபெறு வீரமும் குன்றிடும் --- நன்மை தரும் வீரமும் குறைந்துவிடும்; விருந்து வரின் உயிருடன் செத்த பிணம் ஆம் --- விருந்தினர் வந்தால் உயிருடன் இறந்த பிணமாக நேரும்; உலகம் பழித்திடும் --- உலகத்தார் இகழ்ந்து பேசுவர்; பெருமையோர் முன்பு சென்று ஒருவர் ஒரு செய்தி சொன்னால் மறு வசனமும் சொல்லார் --- பெருமை உடையோர் முன்பு போய், வறுமையுடைய ஒருவர் ஒரு செய்தியைக் கூறினால் மறுமொழியும் சொல்லமாட்டார்;
துன்பினில் துன்பம் இது வந்து அணுகிடாது அருளுவாய் --- துன்பத்திலும் துன்பமான இந்த வறுமையானது ஒருவருக்கும் வந்து சேராமல் அருள்புரிவாய்.
"பிறந்த குலம் மாயும்; பேராண்மை மாயும்
சிறந்ததம்கல்வியும் மாயும் - கறங்குஅருவி
கல்மேறல்கழூஉங் கணமலை நன்னாட!
இன்மை தழுவப்பட் டார்க்கு". --- நாலடியார்.
இதன் பொருள் ---
கறங்கு அருவி கல்மேல் கழூஉம் கணமலை நல் நாட --- பாய்ந்து ஒலிக்கின்ற அருவிநீர் கற்களின் மேற்புறத்தைக் கழுவுகின்ற கூட்டமான மலைகளையுடைய சிறந்த நாடனே!. இன்மை தழுவப்பட்டார்க்குப் பிறந்த குலம் மாயும் பேராண்மை மாயும் சிறந்த தம் கல்வியும் மாயும் --- உலகத்தில் வறுமை பொருந்தியவர்க்கு அவர் பிறந்த குலத்தின் பெருமை கெடும்; அவருடைய பேராற்றல் கெடும்; எல்லாவற்றிற்கும் மேலான அவர்தம் கல்வி நிலையும்கெடும்.
திருவள்ளுவ நாயனார், இந்தக் கொடியதான வறுமை குறித்து, "நல்குரவு" என்று ஒரு அதிகாரத்தையே வைத்து உள்ளார். வறுமை என்று சொல்லப்படுகின்ற ஒற்றைத் துன்பத்துள், பல வகையாகச் சொல்லப்படுகின்ற துன்பங்கள் அனைத்தும் ஒருங்கு சேர்ந்து உண்டாகும் என்கின்றார்.
நல்குரவு என்னும் இடும்பையுள், பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.
என்பது திருக்குறள்.
வறுமையை, "இன்மை என ஒரு பாவி" என்றும் சாடினார் திருவள்ளுவ நாயனார்.
இத்தனை கொடிய வறுமையானது ஒருவனை வந்து சாருவது கொடுமையிலும் கொடுமையானது தான். வறுமை காரணமாகத்தான் தீய செயல்கள் அத்தனையும் நிகழ்கின்றன.
இந்தக் கொடிய வறுமை வந்து சேர்ந்துவிட்டால், அப்போதும் ஒருவன் அறநெறியில் பிறழாது வாழ்வான் என்றால், அவனைச் சார்ந்த வறுமையானது, "அறம் சார்ந்த வறுமை" எனப்படும். வறுமை காரணமாக யார் வெறுத்தாலும், பெற்றெடுத்த தாய் வெறுக்கமாட்டாள். உலகில் உள்ள சான்றோர் அவனது வறுமையைப் பழித்துப் பேச மாட்டார்கள்.
அறச்செயல்களைப் புரிந்து வறுமையானோர் பலர் உண்டு. தமது செல்வத்தை எல்லாம் எல்லோருக்கும் வரையாது வழங்கி, வறுமையை அடைந்து சிறுமைப்பட்டவர்கள் உண்டு. ஆங்கிலேய அரசுக்கு எதிராக,கப்பல் வாணிகத்தைச் செய்யும் அளவுக்குச் செல்வ வளம் பெற்று இருந்தவர் "கப்பல் ஓட்டிய தமிழன்" என்று சிறப்புப் பெற்றிருந்த வ.உ.சி. பிள்ளையவர்கள், தமது வாழ்நாள் இறுதியில் வறுமையில்தான் வாடினார். "கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு" என்று பிரிதொரு திருக்குறளில் நாயனார் காட்டியபடி, நடுநிலையாக அற வழியில் நின்றவனது தாழ்வை உலகம் கேடு என்று கருதாது. அறம் சார்ந்து வாழ்ந்த ஒருவன் வறியவன் ஆனால், அவனை உலகம் இகழ்வதில்லை. அவனைச் சான்றோன் எனவே உலகம் புகழும். தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய், அவனைப் பெற்றெடுத்து போது அடைந்ததை விடப் பெரிதும் மகிழ்வாள்.
அறம் சாராத நெறியில் வாழ்ந்து, தாழ்ந்து போகின்றவர்களும் உண்டு. இதை வேறுபடுத்திக் காட்டவே, திருவள்ளுவ நாயனார், "அறம் சாரா நல்குரவு" என்று ஒரு பிரிவை உண்டாக்கி, பின்வருமாறு ஒரு திருக்குறளை வைத்தார்.
"அறம்சாராநல்குரவு, ஈன்றதாயானும்
பிறன்போலநோக்கப்படும்"
என்பது நாயனார் வகுத்து அருளிய அற்புதமான திருக்குறள்.
அறத்தோடு பொருந்தாத வறுமையை உடைய ஒருவன், தன்னைப் பெற்ற தாயாலும், யாரோ ஒருவனைப் போல நோக்கப்படுவான், புறக்கணிக்கப்படுவான் என்பது இத் திருக்குறளின் பொருள். தாய்மை என்பது எந்த இழிவையும் பாராட்டாது. அன்பையே தம் மக்கள் மீது பொழியும். பெற்ற மகனைத் தாய் வெறுத்தால், அவள் தாய்மையில் இருந்து நழுவினவள் ஆவாள். அறம் சாராத நெறியில் ஒழுகுகின்ற தன் மகனை அவள் விரும்பி இருப்பாளானால், அறம் சாராத அவனது செயல்களுக்கு அவளும் உடன்படுகின்றவள் ஆவாள். எனவே, தாய்மைப் பண்பு அவளிடத்தில் இல்லை என்று ஆகும். அறம் சாராத வறுமை சாரும் நிலையில் ஒருவன் நெறி தவறி ஒழுகினான் என்றால், அவன் சான்றோன் அல்ல. தன் மகனைச் சான்றோன் எனப் பிறர் கூறுவதைக் காதாரக் கேட்டு மகிழ விரும்பும் தாயானவள், சான்றாண்மை அற்ற நெறியில் வாழ்ந்து, உள்ள பொருள் அனைத்தையும் இழந்து வறுமை நிலையை அடைகின்ற தன் மகனைப் புறக்கணிக்கவே செய்வாள் என்பதைக் காட்டவே, "ஈன்ற தாயானும் பிறன் போல நோக்கப்படும்" என்றார்.
அறம் சார்ந்த வறுமையில் உள்ளோர், அது தீர்ந்து செல்வராவது திண்ணம் என்பது, பெரியபுராணத்தில் வரும் குங்கிலியக்கலய நாயனார் வரலாற்றால் தெரியவரும்.
அறம் சாராத வழியில் ஒழுகியதால் வறுமை வரும். அது தீவினையின் பயன். அந்த வறுமைதான் தீராது வருத்தும்.
எனவே, அறம் சார்ந்த வறுமையை விட, இம்மையில் துன்பமும், மறுமைக்குப் பழியும் பாவமும் விளைக்கக் கூடியது "அறம் சாரா வறுமை" ஆகும்.
No comments:
Post a Comment