சிவயோகமும் அவயோகமும்

 


சிவயோகமும் அவயோகமும்

-----

     "சிவம்" என்னும் சொல் ஒரு தெய்வத்தைக் குறித்ததாக இருந்தாலும்அதன் உண்மையான பொருள்மங்கலம்உயர்வுகளிப்புநன்மைமுத்திகடவுளின் அருவுரு நிலைமுத்தி ஆகியவை ஆகும். "யோகம்" என்னும் சொல்லுக்குசேர்க்கைபுணர்ச்சிகூட்டம்நற்பேறுஊக்கம்உயல்ச்சிதகுதி வழிசூத்திரம் ஆகிய பொருள்கள் உண்டு. "அவம்" என்னும் சொல்லுக்குவீண்பயனின்மைகேடு என்று பொருள் உண்டு. இதிலிருந்தே சிவயோகம் என்பது என்னஅவயோகம் என்பது என்னஎன்று விளங்கி இருக்கும்.

 

     இறைவன் திருவருளைப் பெறுவதற்கு முயற்சி செய்யாமல் இருக்கும் மக்களைப் பார்த்துப் பெரியவர்கள் இரங்குவது வழக்கம். திருவருளைப் பெருகின்ற முயற்சியில் ஈடுபடுகின்ற மக்களிடத்தில் அருணகிரிநாதருக்கு இரக்கம் தோன்றுகிறது. திருவருளில் ஈடுபட்டு இன்பம் பெறுவதற்குரிய வாய்ப்பு மனிதனுக்கு இருக்கும்போதுசரியான வழியில் போகாமல்,கோணல் வழிகளில் சென்று துன்பத்தைத் தேடிக் கொள்ளுகிறவர்களைப் பார்த்து அனுதாபம் பிறக்கிறது. 

 

     உயிர்கள் தன் திருவருளைப் பெற்று உய்வு பெறவேண்டும் என்பதற்காகவே இந்த உடம்பையும்இந்த உடம்பில் கருவி கரணங்களையும் நாம் வாழ்வதற்கு உரிய உலகத்தையும்இதில் பலவகையான போகங்களையும் இறைவன் அருளியிருக்கிறான். இவற்றை வைத்துக் கொண்டு நல்ல முறையில் வாழ்கிறவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் செய்கிற காரியங்கள் யாவுமே இறைவன் திருவருளை அடைவதற்குக் காரணமானவை என்று சொல்ல முடியாது. அறியாமை காரணமாக நம்பாதவர்களை நம்பிதெளிவு இல்லாததனால் பயன் இல்லாத துறைகளில் ஈடுபட்டு வாழ்க்கையை வீணாக்குகிறவர்களும் இருக்கிறார்கள். ஒரு பொருளைப் பெறவேண்டும் என்று விரும்புவது தவறு அல்ல. ஆனால்,அந்தப் பொருளைப் பெறுவதற்குரிய முறையான வழி இன்னது என்று தெரிந்து கொண்டே முயற்சி செய்ய வேண்டும். 

 

     மருத்துவர் நமது நோயை அறிந்து மருந்து கொடுக்கிறார். இன்ன பத்தியம் இருக்க வேண்டும் என்பதையும் அவர் அறிவிக்கிறார். மருந்தை மாத்திரம் குறிப்பிட்ட காலத்தில் உட்கொண்டு, பத்தியத்தை மேற்கொள்ளாமல் இருந்தால் நோய் போகாது. மருத்துவர் சொன்ன இரண்டையுமே நாம் கடைப்பிடிக்க வேண்டும். அதுபோல, இறைவனுடைய திருவருளைப் பெறுவதற்குரிய சாதனங்களைபெருமக்கள் சொன்னபடி கடைப்பிடித்து வருதல் வேண்டும்.

 

     ஒரு பொருளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு,சுருதிஉத்திஅனுபவம் என மூன்று முறைகள் உண்டு. சுருதி என்பது பெரியவர்கள் அருளிய நூல்கள். உத்தி என்பது, நம் பகுத்தறிவினாலும்பெரியவர்கள் சொல்வதைக் கேட்பதனாலும்அறிந்து தெளிவது. யுக்தி என்று வடமொழியில் சொல்லப்படும். அனுபவம் என்பது நம் வாழ்க்கையில் நாமே தெரிந்து கொள்வது. இந்த மூன்றில் இறைவனைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு நமது உத்தி பயன்படுவது இல்லை. நமக்கு அனுபவமும் இல்லை. ஆகையால், அவன் திருவருள் அனுபவத்தைப் பெற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நம்பவேண்டும். அவர்கள் நூல் வடிவில் சொல்லி வைத்துச் சென்று இருக்கிறார்கள். எல்லா நூல்களையும்எல்லோரும் படித்துப் பயன்பெற முடியாது. பொதுவாகநூல்களைப் படிப்பதற்கு முன்னால் இந்த நூல்களைப் படிப்பதற்குத் தக்கவர் இன்னார் என்ற வரையறை உண்டு. 

 

"தடுமாற்றம் அஞ்சுவான், தன்னை உவர்ப்பான்,

வடுமாற்றம் அஞ்சித் தற் காப்பான்-படும்ஆற்றால்

ஒப்புரவு செய்து ஆண்டு உறுதிச்சொல் சேர்பவன்

தக்கான் தரும உரைக்கு".

 

என்று "அறநெறிச்சாரம்" என்னும் நூல் கூறுகிறது.

 

இதன் பொருள் ---

 

     தன் சோர்வுபடுதலுக்கு அஞ்சுபவனும் பிறர் தன்னைப் புகழுங்கால் அதனை வெறுப்பவனும்பழி வராமல் தன்னைக் காத்துக்கொள்பவனும்தன்னால் இயன்ற அளவு பிறருக்கு உதவி செய்துஅந்நிலையில் பெரியோர்பால் உறுதி மொழிகளைக் கேட்டு அதன்வழி நிற்பவனுமாகிய ஒருவன்அறநூல் கேட்டற்கு உரியவனாவான்.

 

     மருத்துவத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியவன் சோதிட நூலைப் படித்துப் பயன் இல்லை. யோகத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறவன் காமசாத்திரத்தைப் படித்துப் பயன் இல்லை. நூல் நல்லதாக இருந்தாலும் அதனைத் தெரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாதவர்கள் படித்தால், அவர்களுக்குத் தீய பயனே உண்டாகும். நூல் அறிவு மட்டுமே நமக்கு அனுபவத்தை உண்டாக்குவதில்லை. அவை காட்டும் வழியில் சென்று அனுபவத்தை ஊட்டுவதற்கு உரிய குருநாதனைத் தேடித் தலைப்பட வேண்டும். 

 

     ஊரில் உள்ள ஒருவரைக் காண வேண்டும் என்று போகிறோம். அந்த ஊர் எங்கே இருக்கிறது என்று தெரிந்து கொண்டுஅவர் உள்ள தெருவைத் தெரிந்து கொண்டுஅந்தத் தெருவில் அவர் வாழும் வீட்டைத் தெரிந்து கொண்டுஅவர் பெயர் முதலியவற்றைத் தெரிந்து கொள்கிறோம். ஊருக்குச் சென்றுதெருவைத் தேடிக் கண்டுபிடித்து வீட்டையும் அடைந்து விடுகிறோம். ஆனால், அந்த வீட்டுக்குள் போகவேண்டும் என்றால் வீட்டுக்குள்ளே இருப்பவர் கதவைத் திறந்தால் மட்டுமே முடியும். வீட்டுக்கு வரும் வரைக்கும் நம்முடைய முயற்சி பயன்படுகிறது. அதற்கு அப்பால் நம் முயற்சி மாத்திரம் இருந்தால் போதாது. வீட்டுக்கு உடையவன் கதவைத் திறந்து வரவேற்க வேண்டும். 

 

     கதவைத் திறந்து வரவேற்பவரே குரு. இறைவன் திருவருளை அடைவதற்கு முன்பு, சரியை முதலிய படி நிலைகளைக் கடந்து செல்கிறோம். அப்படிச் செய்தால், நல்ல குருநாதனுடைய காட்சி கிடைக்கும். மூர்த்திதலம்தீர்த்தம் ஆகியவற்றைத் தரிசிப்பதும் குருநாதனுடைய அருளைப் பெறுவதற்காகத் தான். "மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாகத் தொடங்கினர்க்கு, வார்த்த சொல்லச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே"என்றார் தாயுமான அடிகாளர். திருத்தல யாத்திரையின் குறிக்கோள் நல்ல குருவை அடைவதுதான்.

 

     குருநாதன் நம்பால் கருணை கூர்ந்துதாழ்ப்பாளைத் திறக்க வரும் சமயத்தில் சென்றால் உள்ளே நுழையலாம். அல்லது கதவு திறக்கும் மட்டும் காத்து இருக்க வேண்டும். நம்முடைய முயற்சியோடு குருநாதனுடைய கருணையும் சேர்ந்தால்தான், நமக்கு நல்ல பயன் உண்டாகும். குருநாதன் சொன்ன கருத்தை மனத்தில் இருத்திக் கொண்டால் முத்தி கைகண்ட ஒன்றாகும் என்கிறார் அருணகிரிநாதப் பெருமான்.

 

     அருணகிரிநாதர் யோகம் பயில்பவர்களைக் கடிந்து கொள்கிறார். யோகம் நல்லது தானே? எனத் தோன்றும்.  பணம் நல்லதுதான். பணம் இல்லாமல் வாழ முடியாது. ஆனால், அந்தப் பணத்தினால் தீங்கு அடைகிறவர்களைக் கண்டு, பணமே தீங்குதான் என்று சொல்ல முடியாது. யோகம் நல்லது தான். ஆனால், யோகம் என்ற பெயரைச் சொல்லிக்கொண்டு பலர் தமக்குத் தீங்கு தேடிக்கொள்வதோடு, பிறருக்கும் தீங்கு செய்கிறார்கள். 

 

     "யோகம்" என்ற பொருளுக்கு ஒன்று கூடுதல் என்று பொருள்பல வகையாகச் சிதறுண்டு போகாமல் மனம் அடங்கி ஒடுங்கி வரவேண்டும். அதுவே யோகம். மனம் ஒருமைப்பட்டு நிற்கஇறைவனோடு ஒன்றுபட வேண்டும்.இதற்காகத் தியானம் முதலியன செய்ய வேண்டும். சரியைகிரியையோகம் என்று மூன்று படிகளைச் சொல்வார்கள். அந்த யோகம் என்பதுஞானம் என்ற இலட்சியத்தை உடையது. யோகத்திற்கு மேலும் ஞானம் என்ற படி உள்ளது. யோகத்தை முடிந்த முடிபு என்று கொள்ளக்கூடாது. யோகத்தில் மட்டும் முழுப் பயன் அடைய முடியாது. இறைவனுடைய நினைவு இல்லாமல் செய்கிற யோகம் பயன்படாதுஅதானல் ஞானமும் உண்டாவதில்லை. யோகத்தைத் தொடங்கும்போது இறைவனுடைய திருவருளைப் பெறவேண்டும் என்ற நினைவோடுதான் பலர் தொடங்குகிறார்கள். யோகம் செய்வதனால் ஒருவகையான வலிமை உண்டாகும். அதனால் ஒருவகையான இன்பமும் உண்டாகும். அதை அனுபவிக்கும்போதுஅதுவே யோகத்தின். பயன் என்று சிலர் ஏமாந்து போகிறார்கள். என்றைக்கும் மாறாத திருவருள் இன்பத்தைப் பெற வேண்டும் என்ற நினைவு அப்போது போய்விடும். 

 

     யோகம் என்ற ஏணியை வைத்துக் கொண்டு இறைவனுடைய திருவருள் இன்பமாகிய இலட்சியத்தை அடைய வேண்டும். அந்த அனுபவம் கிடைப்பதற்கு முன்னால் யோக நிலைகளில் பலவகை அனுபவங்கள் ஏற்படும். சாமானிய மனிதனுக்குக் கிடைக்காத அனுபவங்கள் அவை. யோகத்தில் மாத்திரம் அல்ல. பக்திநெறியிலும் இப்படி இடையிடையே சில உயர்ந்த அனுபவங்கள் கிடைக்கும். அந்த அனுபவங்கள், உலகப் பற்றில் சிக்கி உழலுகின்ற மக்களுக்கு கிடைக்காதவை. ஆனால், அந்த அனுபவங்களை முடிந்த முடிவு என்று கருதி, நாம் மிக உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டோம் என்று ஏமாந்துஅப்படியே நின்றுவிடுகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் மீட்டும் உலக மாயையில் சிக்கிக் கொண்டு தடுமாறிக் கீழே விழுந்துவிடுவார்கள். பல துறவிகளும்யோகிகளும் மிகவும் தீவிரமாகச் சாதகம் செய்வார்கள். அதில் ஏதோ ஒரு நிலை வந்துவிடும். முடிந்த நிலை கிடைத்துவிட்டதாக எண்ணி நின்றுவிடுவார்கள். 

 

     யோகம் என்று நாம் சொல்வது அட்டாங்க யோகமே. அதில் ஒரு பயற்சி மூச்சை அடக்குவது. நம்முடைய உடம்பில்இடைகலைபிங்கலைசுழுமுனை என்று மூன்று நாடிகள் உள்ளன. இடப்பக்கத்தில் ஒடும் நாடி, இடைகலை;  வலப்பக்கத்தில் உள்ள நாடி பிங்கலை; இரண்டுக்கும் நடுவில் முதுகுத் தண்டின் நடுவிலே செல்வது சுழுமுனை என்ற நாடி. மூக்கில் இடப் பக்கமாக மூச்சு வந்தால் இடைகலையில் மூச்சு ஒடுகிறது. அப்படியே வலப்பக்க மூக்கில் வந்தால் அது பிங்கலை நாடியில் ஒடும். சுழுமுனை என்னும் நடுநாடியில் மூச்சு ஓடினால் இரண்டு மூக்குத் துளைகளில் இருந்தும் ஒரே மாதிரி மூச்சு வரும். இந்த நடுநாடியின் வழியாக மூச்சு வெளிப்பட்டால் மனம் மிகத் தெளிவாக இருக்கும். 

 

     மூச்சுக்கும் மனத்துக்கும் தொடர்பு உண்டு. மூச்சுப் பிடித்துக் கொண்டிருந்தால் மனம் மயங்குகிறது. மூச்சு வழியாக மயக்கமருந்தைக் கொடுத்தாலும் மனம் மயங்குகிறது. துக்கம் வந்தாலும்கோபம் வந்தாலும் மூச்சு வேகமாக வருகிறது. மூச்சுக் காற்றின் பயிற்சியினால் மனத்தையே மாற்றலாம் என்று யோகிகள் இயல்பாக வரும் மூச்சை மாற்றினார்கள். மூச்சை உள்ளே இழுப்பதற்குப் 'பூரகம்' என்றும்உள்ளே நிறுத்துவதற்குக் 'கும்பகம்' என்றும்வெளியில் விடுவதற்கு 'இரேசகம்' என்றும் பெயர். நாம் மூச்சை விடுவதும்இழுப்பதுமாக இருக்கிறோம்நிறுத்துவது இல்லை. 

 

     மனத்தில் இறைவன் திருவுருவத்தைத் தியானம் பண்ணினால், நம்மை அறியாமல் சுழுமுனை நாடியில் மூச்சு ஒடும். மனம் தெளிவாக இருக்கும். மனம் தெளிவாக இருப்பதுதான் இலட்சியம். குளத்தில் நீர் தெளிவாக இருந்தால், நம் முகத்தின் பிம்பம் நன்றாகத் தெரியும். சிறிய கல் விழுந்து நீர் அசங்கினாலும் முகத்தைப் பார்க்க முடியாது. நீருக்கு அடியில் ஏதேனும் இருந்தால் தெளிவான தண்ணீரில் நன்றாகத் தெரியும். எவ்வளவு ஆழமாக இருந்தாலும் கீழே உள்ள பொருள் தெளிவாகத் தெரியும். குழம்பிய நீரில் கணுக்கால் அளவு கீழே இருக்கிற பொருள்கூடத் தெரியாது. நம் மனம் கவலையினாலும்உலக இயல் வாழ்க்கையில் அடைகின்ற ஆசாபாசங்களினாலும் கலங்கி இருக்கும்போது உள்ளத்தில் இருக்கும் இறைவனை உணர முடியாது. எல்லோருடைய உள்ளத்திலும் இறைவன் அந்தர்யாமியாக இருக்கிறான். நம் மனம் பன்முகப்பட்டுக் குழம்பி இருப்பதால்,அந்தரங்கத்தில் உள்ள இறைவனுடைய திருவுருவம் நமக்குத் தெரிவது இல்லை. அந்தக் கலக்கம் தெளியத் தெளிய இறைவன் திருவுருவமும் தெளிவாகத் தோன்றும். 

 

     மனம் ஒருமுகபட்டுத் தெளிவு பெறவே யோகம். மூச்சை இழுத்து விடுகின்ற பிராணாயாமம் அட்டாங்க யோகத்தின் ஒரு கூறு. பிராணாயாமம் செய்து மனத்தைத் தெளிவுறச் செய்துகொண்டு தியானம் செய்தால், இறைவனுடைய திருவுருவம் மிகத் தெளிவாக மனத்தில் அமையும். 

 

     யோகம் செய்வது தியானம் கைகூடுவதற்குத்தான். இப்போது யோகத்தை ஆசனத்தோடு நிறுத்திவிடுகிறார்கள். ஆசனம் என்பது மேலே இருக்கிற யோக வழிகளுக்குத் துணையாக நிற்பது. அந்த வழிக்குப் போகும் வழியைக் காட்டாமல், இக் காலத்தில் பலரும் உடல் பயிற்சி போலச் சொல்லிக் கொடுக்கிறார்கள். நீரில் மிதந்து காட்டுவதும்குழியில் சில நாட்கள் இருந்து காட்டுவதும் ஆகிய செயல்கள் எல்லாம் செப்பிடுவித்தையைப் போன்ற சாமானியச் செய்கைகள் "அடயோகம்" என்ற வகையைச் சார்ந்தவை. 

 

     அடயோகங்களைச் சாதித்துஇடையிலே வருகின்ற விசேட ஆற்றல்களில் மயங்கி நின்று,உலகத்தாரையும் ஏமாற்றுகின்ற யோகியர்கள் கூட்டத்தை அருணகிரிநாதப் பெருமான் பார்த்து, 'இறைவனுடைய திருவருளைப் பெற முயல்வதை மறந்துவிட்டு, மூச்சை அடக்கி அதனால் வருகின்ற சிறிய இன்பங்களில் மயங்கிஅதோடு நின்று விடுகிறார்களே' என்ற இரக்கம்  உண்டாயிற்று. இறைவனிடத்தில் பக்தி இல்லாவிட்டால் எந்த யோகமும் கைகூடுவது இல்லை. யோகத்தின் பயனே புலனடக்கம் ஆகும். இதனை "நிரோதனம்" வடமொழியில் சொல்வார்கள். புலனடக்கத்தை விட்டு, சிலர் பொன்னுக்கும் பொருளுக்கும், பிற சுகங்களுக்கும் பேராசை கொண்டு எல்லோரையும் ஏமாற்றப் பார்க்கிறார்கள். 

 

     முதலில் யோகம் செய்யும்போது மனத்தை அடக்க வேண்டும் என்றுதான் தொடங்குகிறார்கள். ஆனால்இடையே வருகின்ற சிலவகையான சித்திகளில் அவர்களே மயங்கி விடுவதோடு, பிறரையும் மயக்கம் கொள்ளச் செய்கிறார்கள். சிலர் கோயிலுக்கு அறங்காவலர்களாகமனத்தில் பத்தி உணர்வோடு, நல்ல தொண்டு புரியவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் போவார்கள். போன பிறகு, அங்கே கிடைக்கும் சிறுசிறு பயன்களைக் கண்டு ஏமாந்து போய் இறைவனையே மறந்து விடுவார்கள். அதுபோல "அடயோகம்" பண்ணுகிறவர்கள் மூச்சு அடக்கல், ஆசனம் முதலியவற்றைப் பண்ணும்போது, ஏதோ ஒருவகையான இன்பத்தைப் பெற்றுஅந்த அளவில் நின்று, இறைவனையே மறந்து விடுகிறார்கள். அவர்கள் செய்கிற காரியங்கள் எல்லாம் இந்த உடம்பு மறைந்து போனால், மறைந்து விடுபவை. உடம்பு உரம் உடையதாகவும்மேலும் மேலும் சாதனைகளைத் தருவதற்குரிய வன்மை உடையதாகவும் இருந்தால் போதாது. மனத்தை ஒருமுகப்படுத்தி, அதையும் மாய்க்கும் வகையில் யோகம் கைகொடுக்க வேண்டும். இல்லையானால் யோகம் செய்து பயன் இல்லை.

 

     அதனால்தான், இறைவனுடைய திருவருளைப் பெறுவதற்கும் அதற்கு வழியாக மனத்தைத் தெளிவு அடையச் செய்வதற்கும் பத்தி என்ற எளிய முறை இருக்கவும், துருத்தியில் காற்றை அடைப்பதைப் போல வாயுவை அடைத்துஅது எந்தத் துவாரத்தின் வழியாக வெளியேறலாம் என்று முட்டிப் பார்க்கும்படி செய்து திண்டாடுகிறார்களே! என்று வருந்துகிறார். 

 

     அருணகிரிநாதர் காலத்தில் இப்படிச் சில யோகிகள் இருந்திருக்கக் கூடும் என்பது அவர் அருளிய திருப்புகழ்ப் பாடல்களின் மூலமாகவும் தெரியவரும். திருப்புகழில் ஒரு பாட்டில் பின்வருமாறு சொல்கிறார். "அனித்தமான ஊன் நாளும் இருப்பதாகவே நாசி அடைத்து, வாயு ஓடாத வகை சாதித்து, அவத்திலே குவால் மூலி புசித்து வாடும் ஆயாச அசட்டுயோகி ஆகாமல்......சிவச் சொரூப மாயோகி என ஆள்வாய்"என்று பாடுகிறார். அசட்டுயோகம் கூடாது. சிவயோகம் வேண்டும் என்கிறார்.

 

     பொதுவாக,"யோகம் செய்தால் இந்த உடம்பு சாகாது. நரை திரை போய்விடும்.  மூப்பு நெருங்காது. கண் ஒளி மங்காது. பல காலம் சித்தர்கள் வாழ்கிறார்கள்" என்று சொல்கிறார்கள். மூக்கைப் பிடிக்கிற அனைவருமே சித்தர் ஆகிவிட முடியாது என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். இந்த உடம்பு என்றைக்காவது ஒருநாள் நிச்சயமாக மறைந்துவிடும். 

 

     "ஐந்து விதமாகின்ற பூதபேதங்களினால் ஆன யாக்கை, நீர் மேல் குமிழி என நிற்கின்றது" என்பார் தாயுமான அடிகளார். நீர்க் குமிழி எப்போது, எப்படி அழியும் என்பது தெரியாது போலவே, இந்த உடம்பும் எப்போது, எப்படி அழியும் என்பதும் தெரியாது. இதை யோகம் முதலியவற்றாலும்மருந்து மூலிகைகளினாலும் நெடுங்காலம் வாழும்படி செய்யலாம். ஆனால் சாவாமல் செய்ய முடியாது. "தோற்றம் உண்டேல் மரணம் உண்டு” என்பது சுந்தர்மூர்த்தி சுவாமிகள் தேவாரம். தோன்றிய எதுவாக இருந்தாலும், காலக் கிரமத்தில் அழிந்தே போகும்.

 

     உடம்பைப் பலமுடையதாகச் செய்வது அவசியம். இந்த உடம்பை வலிமை உடையதாகப் பேணுவதற்குக் காரணம் இறைவன் திருவருளைப் பெறுவதே ஆகும். "உடம்பினுள் உத்தமன் கோயில் கொண்டான் என்று, உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே" என்பார் திருமூல நாயனார்.

 

     ஒரு திருப்புகழ்ப் பாடலில், அருணகிரியார் இந்த அடயோகிகளைக் "அனாசாரக் கர்மயோகிகள்" என்று சொல்கிறார்.ஆனாசாரக் கர்மயோகி ஆகாமல், "ஆசார பரமயோகி" ஆக அருள் புரியுமாறு வேண்டுகிறார்.

 

"அடைபடாது நாள்தோறும் இடைவிடாது போய்வாயு 

அடைய மீளில் வீடு ஆகும் எனநாடி, 

அருள்பெறா அனாசார கருமயோகி ஆகாமல்,

அவனிமீதில் ஓயாது தடுமாறும் 

உடலம்வேறு, யான்வேறு, கரணம்வேறு வேறாக 

உதறி, வாசக அதீத அடியூடே 

உருகி, ஆரிய ஆசார பரமயோகி ஆமாறு உன் 

உபய பாத ராசீவம் அருள்வாயே."          --- திருப்புகழ்.

 

     மனத்தை வென்றவர்களே யோகிகள். இப்போது யோகி என்று சொன்னால் அடயோகம் செய்கிறவர்களையே நினைக்கிறோம். ஆனால், பத்தி செய்கின்றவனும் யோகிதான். 

 

     யோகத்தை விட மிக எளிதிலே இறைவன் திருவருளைப் பெறுவதற்கு ஏற்ற வழிதான் பத்தி. நம்முடைய மனத்தில் இறைவனுடைய திருவடி மலர்களைப் பதித்துத் தியானம் செய்ய வேண்டும். அப்படித் தியானம் செய்கின்ற நிலை வரவேண்டும் என்று அருணகிரியார் இந்தத் திருப்புகழ்ப் பாட்டில் வேண்டுகிறார். 

 

     தாயுமானவர் "சோற்றுத் துருத்திச் சுமை சுமப்பக் கண் பிதுங்கக் காற்றைப் பிடித்து அலைந்தேன் கண்டாய் பராபரமே" என்று பாடுகிறார். இந்த உடம்பு சோற்றினால் வளர்ந்த துருத்தி போன்றது. உள்ளே காற்றை அடைத்து வயிறு உப்புவதனால் துருத்தி என்று சொன்னார். மூச்சை வாங்கி வெளிவிடும் பழக்கம் நமக்கு இருக்கிறது. தூங்கும்போது அது நன்றாகத் தெரியும். பெரிய வயிறு உடையவன் ஒருவன் குறட்டை விட்டுத் தூங்கும்போது வயிற்றை மாத்திரம் கவனித்தால் போதும். துருத்தி உப்பி வடிவது போலத் தோன்றும். "இந்தத் துருத்தி என்னும் சுமையைப் பலகாலம் சுமக்க வேண்டும் என்பதற்காகக் கண் பிதுங்கக் காற்றை உள்ளே அடைத்து அலைந்து திரிந்தேனே. சோற்றுத் துருத்தியைக் காற்றுத் துருத்தி ஆக்கி அலைந்ததனால் ஒரு பயனும் காணவில்லையே பராபரமே!" என்று வருந்துகிறார் தாயுமானவர். மற்றொரு பாட்டில்

 

"சும்மா இருக்கச் சுகம் உதயம் ஆகுமே, 

இம்மாயா யோகம் இனி ஏனடா? - தம்அறிவின் 

சுட்டாலே ஆகுமோ சொல்லவேண்டாம், கன்ம 

நிட்டா! சிறுபிள்ளாய் நீ.” 

 

என்று கூறுகிறார். "கன்ம நிட்டா" என்றால் கர்ம யோகியே என்று பொருள். மாய யோகத்தினால் பயன் இல்லை. அதனால் இன்பம் சாதிக்க ஒண்ணாது என்பது அவர் கருத்து. 

 

     சிவயோகம் என்று கூறுகின்ற முறையைத் தெரிந்துஆறு திருமுகங்களை உடையகுருநாதன் உபதேசித்து அருளியதை மனத்தில் இருத்தினால் முத்தி கைகண்டது ஆகும் என்று அருணகிரிநாதர் சிவயோகத்தைச் சொல்கிறார். அது ஆறு திருமுகங்களையுடைய குருநாதன் உபதேசம் செய்தது என்று அடையாளம் காட்டுகிறார். சிவயோகம் என்பது ஒரு குருத்து. அந்தக் குருத்தை அறிந்துகொள்ள,குருநாதன் சொன்ன கருத்தை மனத்தில் இருத்த வேண்டும் என்று அருணகிரிநாதர் காட்டியதை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், திருப்புகழ்ப் பாடல்களையும் பொருள் உணர்ந்து ஓதவேண்டும். சொல்லக் கூடியவற்றை ஒரே பாட்டில் சொல்லிவிட முடியாது. ஆகையால் அருளாளர்கள் தமது உள்ளக் கருத்தை அங்கங்கே வைத்திருப்பார்கள். 

 

     பெட்டியை எப்போதும் திறந்து போட்டிருக்கமாட்டார்கள். அதைப் பூட்டி, சாவியை அந்தப் பெட்டியின் வாயிலே வைத்திருக்கமாட்டார்கள். சாவி வேறிடத்தில் இருக்கும். சாவியைத் தேடிப் பெட்டியைத் திறந்தால், அதன் உள்ளே இருக்கும் பொருள் இன்னது என்று தெரிந்து கொள்ளலாம். 

 

     இந்த முறையில் அருணகிரிநாதர் இந்தப் பாட்டில் சிவயோகம் என்பதைச் சொன்னார். அதற்குச் சாவி இங்கே இல்லை. ஆறுமுகமுடைய குருநாதன் சொன்னான் என்று மாத்திரம் சொன்னார். கந்தர் அலங்காரத்தைப் படிப்பவர்கள் திருப்புகழையும் கொஞ்சம் தேடிப் பார்த்தால் சிவயோக இலக்கணத்தை அங்கே எவ்வாறு சொல்கிறார் என்பது தெரியவரும்.திருப்புகழில் ஓரிடத்தில் சிவயோகம் என்பது என்னவென்று தெரிவிக்கிறார்.

 

"ஐந்து பூதமும் ஆறு சமயமும் 

மந்த்ர வேத புராண கலைகளும் 

ஐம்ப தோர்விதம் ஆன லிபிகளும் - வெகுரூப 

அண்டர் ஆதி சராசரமும் உயர் 

புண்ட ரீகனும், மேக நிறவனும் 

அந்தி போல் உருவானும், நிலவொரு - வெயில்காலும் 

சந்த்ர சூரியர் தாமும், அசபையும் 

விந்து நாதமும் ஏகவடிவம் 

தன்சொரூபம் அதாக உறைவது - சிவயோகம்."    --- திருப்புகழ்.

 

     பஞ்சபூதங்களாகிய அடிப்படைத் தத்துவம் முதற்கொண்டு நாத தத்துவம் வரைக்கும் எல்லாத் தத்துவங்களும் ஒன்றன் விரிவு என்று கருதிஅந்த நிலையில் எல்லாவற்றையும் ஒன்றாக நினைந்து கொண்டு அனுபவித்து நிற்பதுதான் சிவயோகம் என்று சொல்கிறார்.

 

     'எல்லாம் ஒன்றுதான். இதனை நான் அறிவேன்'  என்று ஒருவர் சொல்லலாம். அப்படிச் சொல்வதற்கும்நினைப்பதற்கும் தனித் திறமை வேண்டும். அப்படிச் சொன்னாலும் போதாது. எங்கும் இறைவன் இருக்கிறான் என்பதை நூல்கள் சொல்கின்றன. அயல்நாடு ஒன்றைப் பற்றிப் பூகோளப் பாடத்தில் படித்தும்கேட்டும் அறிந்து வைத்து இருக்கிறோம். அது எப்படி உள்ளது என்று அங்கு போய்ப் பார்த்தால்தான், படித்ததும் கேட்டதும் பற்றிய உண்மை தெரியும். படிக்காத,கேட்காத உண்மைகளும் அங்கே இருக்கும்.

 

     அதுபோல, இறைவன் எங்கும் இருக்கிறான் என்பதை நூல்கள் வாயிலாகப் படித்தும் கேட்டும் இருப்போம். ஆனால் அதை அனுபவத்தில் உணருவது இல்லை. உலகிலுள்ள எல்லாவற்றையும் இறைவனாகவே காணவேண்டும் என்ற ஆசை உள்ளவன் முதலில் அந்த நினைவை மனத்தில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும். மெல்ல மெல்ல அந்த நினைவில் ஈடுபட்டு, உள்ளத்தை ஒருமுகப் படுத்தினால் இறைவன் என்ற நினைவே மிகுந்து, நம்முடைய நினைவு குறைந்து போகும். இப்படி எல்லாம் மறைந்து, ஏக வடிவம் ஆகியவனது நிலையைத் தான் "சிவயோகம்" என்றார் அருணகிரிநாதர்.

 

     இந்த நிலை வரவேண்டுமானால், பார்க்கிற பொருள்களை எல்லாம் இறைவனுடைய திருவுருவாகப் பார்க்க வேண்டும். எல்லாவற்றிலும் இறைவன் இருக்கிறான் என்பதைக் கேட்டும் கற்றும் செய்தி அளவில் தெளிவாகத் தெரிந்து கொண்டிருக்கிறோம். ஆனால் அறிவோடு நின்றுவிடுவதால், அனுபவம் உண்டாகாது அறிவுக்கு மேலே உணர்ச்சி வரவேண்டும். 

 

     ஏதேனும் ஒரு பொருளின்மீது நமக்கு அதிகமான ஆசை இருக்குமானால், எந்தப் பொருளைப் பார்த்தாலும் அந்தப் பொருளோடு நம்முடைய மனத்திலுள்ள ஆசைப் பொருளையும் தொடர்புபடுத்திப் பார்க்கிற நிலை உண்டாகும். புதிதாகத் திருமணம் பண்ணிக்கொண்ட பெண்ணுக்கு எந்தப் பொருளைப் பார்த்தாலும் தன் கணவனோடு தொடர்புபடுத்த நினைக்கிற நிலை உண்டாகும். பார்க்கிற பொருள்பிறர் மூலமாகக் கேட்கிற செய்தி எல்லாவற்றையும் அவள் தன் நாயகனோடு தொடர்புபடுத்திப் பார்க்க முயல்வாள். இதற்குக் காரணமாக இருப்பது,அவள் நெஞ்சில் உள்ள காதல். அதுபோல், இறைவனிடத்தில் உண்மையான பக்தி உண்டானால், உலகத்தில் உள்ள பொருள் எல்லாவற்றோடும் அவனைத் தொடர்பு படுத்திப் பார்ப்போம். இறைவனுடைய நினைப்பும்உலகப் பொருளைக் காணும் காட்சியும் சேர்ந்து சேர்ந்து வந்து பிறகு, காதல் முறுகிவிட்டால், அந்தக் காட்சி மறைந்து இறைவன் நினைவே காட்சியாக மாறிவிடும். அதுதான் "சிவயோகம்" என்று அனுபவத்தால் தெரிந்து கொண்டார் அருணகிரிநாதர்.

 

     உலகத்திலுள்ள பொருள்களை எல்லாம் இறைவனாகவே பார்ப்பதற்கு வழி உண்டு. எளிதாகச் சொல்லவேண்டுமானால், இன்பம் வந்தாலும்துன்பம் வந்தாலும்நோய் உடையவனாக இருந்தாலும்நோய் அற்றவனாக இருந்தாலும்,தன்னிடத்து வருகிறவனுடைய பொருளிலேயே விலைமாதுக்குக் குறி இருப்பதுபோலஇந்த உலகத்தில் எவ்விதமான நிலையில் இருந்தாலும், எப்போதும் இறைவனைக் குறியாகக் கொண்டு நிற்கவேண்டும். அந்த நிலை எப்போது சித்திக்கிறதோ,அப்போது நமக்குச் சிவயோக சித்தி உண்டாகும். 

 

     அதற்கு வழி எல்லாமாகவும், எல்லா இடத்திலும் இறைவன் இருக்கிறான் என்று எண்ணிஅவன் இருப்பதைக் காணவேண்டும் என்ற பேராசையை உள்ளத்தில் வளர்த்துக் கொள்வதுதான். இதுவே மிக எளிய வழி என்று அடிகளர் கூறுகிறார். இதுவே கடினமாக இருக்குமானால்மூச்சைப் பிடித்து அடைத்து உடம்பை ஒறுத்து அடயோகம் செய்வதனால் இறைவனைக் காண்பது என்பது எத்தனை கடினமானதாக இருக்கும் என்பது தெரியும். 

 

     ஆறுமுகப் பெருமான் குருநாதனாக எழுந்தருளி அளித்த உபதேசப்படிஅவனுடைய திருவடிகளில் அன்பு செய்து, அவனே எங்கும் எல்லாப் பொருளுமாக இருக்கிறான் என்ற அறிவு பெற்றுபின்பு உணர்ச்சி பெற்றுஅதன் பின்பு அனுபவம் பெறுகின்ற சிவயோகமாகிய நிலை மிக எளிது. இதை நீங்களும் மனத்தில் இருத்தி, அந்த நெறியில் ஒழுகுவீர்களானால் முத்தி கைகண்ட பொருளாகும்என்று அருணகிரிநாதர் நமக்கு உபதேசம் செய்கிறார். 

 

"துருத்தி எனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றி முறித்து 

அருத்தி உடம்பை ஒறுக்கில்என் ஆம்?சிவயோகம் என்னும் 

குருத்தை அறிந்து, முகம்ஆறு உடைக் குருநாதன் சொன்ன 

கருத்தை மனத்தில் இருத்தும் கண்டீர்! முத்தி கைகண்டதே".

 

இதன் பொருள் ---

 

     அடயோகிகளே! தோலினால் செய்யப்பட்ட துருத்தி என்று சொல்லும்படியாக பிராணவாயுவைக் கும்பகம் செய்து, சுழற்றி முறியச் செய்து, வாயுவையே உணவாகக் கொண்டு இந்த உடம்பைத் துன்புறுத்துவதால் ஆகிய பயன் என்ன?சிவயோகம் என்று கூறுகின்ற முளையை அறிந்து, ஆறுதிருமுகங்களை உடைய நல்ல குருநாதனாகிய முருகப் பெருமான் உபதேசித்து அருளிய திருக் கருத்தை உங்கள் மனத்தில் நிலைபெறச் செய்தால், முத்தி இன்பமானது கைக்கு எட்டினது ஆகும்.

     

    அடயோகத்தால் வாயுவை அடக்கி, உடம்பை ஒறுப்பதால் பயன் இல்லை. குருநாதன் உபதேசித்த நெறியில் நின்று, சும்மா இருக்கின்ற சிவயோக நிலையை அடைந்து சுகம் பெறுதல் வேண்டும். 

 

     சிவத்தோடு கூடி இருப்பது சிவயோகம். மற்ற எல்லாம் அவயோகம். அடயோகம் என்பது துறவு வாழ்க்கை. சிவயோகம் என்பது தூய இல்லற வாழ்க்கை. 


 

 

No comments:

Post a Comment

ஏகம்ப மாலை

  பட்டினத்தடிகள் பாடியருளிய திரு ஏகம்ப மாலை திருச்சிற்றம்பலம் "அறம்தான் இயற்றும் அவனிலும் கோடி அதிகம் இல்லம் துறந்தான், அவனில் சதகோடி உ...