சொந்த வீடும் - புகுந்த வீடும்
-----
உயிருக்குச் சொந்தமாக அமைந்துள்ள நிரந்தரமான வீடு இறைவன் திருவடி ஆகும். அது மோட்சம் என்றும் வீடு என்றும் சொல்லப்படும். மோட்சம் என்னும் சொல்லுக்கு, வீடுபேறு, விடுபடுதல், வினைத்தொடர்பில் இருந்து நீங்குதல் என்று பொருள். உயிர் புகுந்து இருக்கின்ற வீடு, பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆன இந்த வீடு. சொந்த வீட்டுக்குப் பொவதற்கு, புகுந்த வீடு துணைபுரிய வேண்டும் என்பதற்காக இறைவனால் படைத்து அளிக்கப்பட்டது.
உயிரானது புகுந்து உள்ள உடலிலும் பேதங்கள் உள்ளன. "உடலில் பஞ்சபேதம்" என்பது குறித்து திருமூல நாயனார் அருளி உள்ளார். உள்நாடிக் காண்பதற்குத் துணையாக வாய்த்ததே இந்த உடம்பு. உடம்பினுள்ளே ஒன்றும் இல்லையானால், அதற்கு "மெய்"என்று பெயர் வந்து இருக்காது. மெய்ப்பொருளை உணரத் துணை செய்வதாலேயே அதற்கு "மெய்" என்று பெயர் வந்தது.
இந்தப் பருவுடல் மட்டுமல்லாமல், அதற்குஉள்ளே நான்கு நுண் உடம்புகள் உள்ளன. இயற்கையிலும் கூட இந்த அமைப்பு உள்ளது. வெங்காயத்தை உரிக்க உரிக்க இறுதியில் ஒன்றும் இல்லாமல் போகும். கனிகளும் இந்த வகையில் உள்ளவையே.
முதலாவது பரு உடல். இது நமது கண்ணுக்குப் புலனாவது. உடல் என்பதற்குக் கோசம் என்று ஒரு பெயரும் உண்டு. "அன்னமய கோசம்" என்றும் சொல்லப்படும். இந்த உடம்பிற்கு, பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆன உணவினை இட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.
இரண்டாவது காற்று உடம்பு. கண்ணுக்குத் தெரியாது. இதைப் "பிராணமய கோசம்" என்பர். இது பிராண சத்தியால் இயங்குவது. உடம்பில் இருந்து உயிர் பிரியும்போது இது மேலெழுந்து போகும். நமது கண்ணுக்குப் புலப்படாவிட்டாலும் நாய், கோட்டான் முதலியவைகளுக்குப் புலப்படும். நாய் அழும்போதும், கோட்டான் கத்தும்போதும், யாரோ இறந்துவிட்டார் என்று பேசுவதை நாம் கண்டும் கேட்டும் இருக்கின்றோம்.
மூன்றாவது மன உடம்பு. இது மிகவும் நுட்பானது. நமது எண்ணத்திற்கு ஏற்ப உருப்பெறும், வலுப்பெறும். இது "மனோமய கோசம்" என்று அழைக்கப்படும். உயர்ந்த சிந்தனைகளால் மனமானது மென்மை அடைந்து, ஆற்றல் பெற்று விளங்கும். "எண்ணியர் திண்ணியர் ஆகப் பெறின்" என்பது இதை வைத்துத் தான். தேவையற்ற, வீணான நினைப்புகளை அகற்ற வேண்டும்.
நான்காவது அறிவு உடம்பு. இதுவும் நுண்மையானது. அறிவால் ஆனது. அதனால், இதை "விஞ்ஞானமய கோசம்" என்பர். ஆன்மா அறிவுப் பொருள். ஆனாலும் அது சிற்றறிவு எனப்படும். இந்த அறிவைக் கொண்டுதான், மேலும் மேலும் அறிவு விளக்கத்தை அது பெற்று, முற்றறிவினனான இறைவனை உணர முடியும். அதற்குத் தான் கல்வி, கேள்வி முதலானவை துணை செய்யும். "கற்றதனால் ஆய பயன் என்கொல்? வாலறிவன் நல்தாள் தொழாஅர் எனின்" என்னும் திருக்குறளைச் சிந்தித்தால் இது விளங்கும். கண் ஒளியைக் கொண்டு சூரியன் ஒளியால் பொருள்களைக் கண்டு அறிவது போல இது. ஆன்ம அறிவு முதிரும்போது அன்பு பிறக்கும். அது மேலும் முதிரும்போது அருள் பிறக்கும். அறிவு முதிராத போது வன்மை உடையதாக இருக்கும். முரட்டுத் தனம் என்று இதைச் சொல்லலாம். அறிவு முதிர முதிரக் கூர்மை பெறும். அதனால் 'ஞானவாள்'என்று சொன்னார்கள். முரட்டுத் தனத்தைக் காய்க்கு ஒப்பிடலாம். மென்மைத் தன்மையைக் கனிக்கு ஒப்பிடலாம்.
ஐந்தாவது உடம்பு, காரண உடம்பு. இதை "ஆனந்தமய கோசம்" என்பர். இது மிகவும் நுட்பமானது. ஆன்ம அறிவு இந்த உடலுக்கு வந்த பிறகு மற்ற கருவிகளின் துணை இல்லாமல் விளங்கும். இந்த உடல் வந்தபின் ஆன்மா கருவியின் துணையில்லாமல் செயல்படும். அன்புடைய ஒருவரை இந்த உடம்பில் இருந்து நினைத்தாலே அவர் வந்துவிடுவார். கடிதம் எழுத வேண்டுவதில்லை. இந்த உடம்போடு வாழ்வது சிறந்தது. மேன்மேலும் இன்பம் தருவதாக அமையும். இந்த உடம்பே மிகவும் நுட்பநானது. இறைவனும் மிக நுட்பமானவன். இந்த உடம்பிலே இறைவனுடைய அருட்காட்சி தோன்றும்.
இத்தகு நிலையைப் பெறுவதற்கு பருவுடலையே பெரிதாக எண்ணி, அதற்கு உணவு தேடும் முயற்சியிலேயே காலத்தைக் கழிப்பதை மாற்றி, உள் உடம்புகளுக்குச் செல்லும் முயற்சியில் ஈடுபடவேண்டும். சத்துவ உணவைக் கொள்ளவேண்டும். மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும். இதற்கு அடிப்படை ஆதாரமாக நல்ல நூல்களைப் பயில வேண்டும். நல்லவர் கூட்டத்திலே இருத்தல் வேண்டும். அப்போதுதான் அதிசூக்கும உடலுக்குப் போகமுடியும். அங்குதான் ஆன்ம அறிவு விளங்கும். விளங்கிய ஆன்ம அறிவு, அன்பாக மாறும். தத்துவங்களை எல்லாம் சடமாகக் காணும் நிலை உருவாகும். அந்த நிலையில் ஓங்காரத்தின் உட்பொருள், திருவைந்தெழுத்தின் உட்பொருள் விளங்கும். இறையருள் பெருகும். அந்த மனத்தினைக் கோயிலாகக் கொண்டு இறைவன் வந்து விளையாடுவான்.
இரும்பைக் காய்ச்ச வேண்டுமென்றால் எரிந்து கொண்டிருக்கிற நெருப்பிலே தூக்கிப் போட்டு விடலாம். சிறிது நேரத்தில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்போடு இரும்பும் காய்ந்து தகதகவென ஒளி விடத் தொடங்கும். ஆனால் பாலைக் காய்ச்ச வேண்டுமானால் இரும்பைப் போட்டதுபோல அடுப்பிலே அப்படியே கொட்ட முடியாது. அப்படிக் கொட்டினால் பாலும் வீணாகும், நெருப்பும் இல்லாது போகும். நெருப்பின் சூட்டை வாங்கி, அதனிடத்தில் சாரச் செய்கின்ற பாத்திரம் ஒன்று இடையில் வேண்டும்.
அதுபோலவே, உயிர் நேரே அனுபவத்தைப் பெறுவது இறைவனுடன் இணைந்து முத்தியாகிய இன்பம் பெறும்போது தான். இது இரும்பு நேரே சூட்டைப் பெறுவது போன்றது. நல்வினை தீவினைகளின் பயனாகிய இன்ப துன்ப அனுபவத்தைப் பெறும்போது பாலுக்கும் நெருப்புக்கும் இடையிலுள்ள பாத்திரத்தைப் போன்று, ஒரு உடம்பு வேண்டும்.
பாத்திரம் நிலையாக இருக்கவேண்டும். ஆனால், உடம்பு நிலையாக இருக்கக் கூடாது. அது இயங்கவேண்டும். அது சரீரித்தலால், 'சரீரம்' என்று பெயர் பெற்றது. உலக அனுபவங்களாகிய இன்ப துன்பங்கள் சரீர சம்பந்தமாகவே வரும். உலகில் வாழும் போது இந்தத் துல சரீரத்தின் சம்பந்தமாக அனுபவங்கள் வருகின்றன. உலகில் வாழ்ந்து, மரணம் அடைகிறவர்கள் நரகத் துன்பத்தையும், சொர்க்கலோக இன்பத்தையும் அனுபவிக்கிறார்கள். அந்த அனுபவம் வெளி உடம்பு எனப்படும் தூல உடம்பினால் வருவது அல்ல. சூக்கும உடலைச் சார்ந்து வருவது.
இத்தகைய சரீரங்களில் எதுவுமே இல்லை என்றால் உயிரானது நேரே இறைவனோடு ஒன்றி எல்லையில்லாத ஆனந்தத்தைப் பெறுகிறது. எனவே, உயிர் எப்போதும் தனித்து இராது. ஒன்று உடம்போடு ஒட்டி இருக்க வேண்டும். உடம்போடு ஒட்டி இருப்பது புகுந்த வீடு அல்லது வாடகை வீடு. அல்லது இறைவனைச் சார்ந்து இருக்க வேண்டும். அது சொந்த வீடு. வாடகை வீடு பலவாகும். சொந்த வீடு ஒன்றே ஆகும்.
உலகில் வாழும்போது பலவகை நுகர்ச்சிகளையும் அடைகிற இந்தப் புற உடலை இறைவன் மிக அற்புதமாகவும் மிக நுட்பமாகவும் படைத்திருக்கிறான். இந்த இயந்திரத்துக்கு உள்ளே எத்தனையோ சிறிய சிறிய உறுப்புக்கள் இருக்கின்றன. புதிய புதிய இயந்திரங்களை விஞ்ஞானிகள் படைக்கும்போது கண்டு வியந்து போற்றுகின்ற நாம்,நமது உடலாகிய அற்புதமான இயந்திரத்தைப் பார்த்து மிக்க வியப்பை அடைவதில்லை. நமது முயற்சி ஏதும் இல்லாமலேயே, மிக ஏளிதில்இது கிடைத்திருப்பதுதான் இத்தகு நிலைக்குக் காரணம். இதன் அருமை புலப்படுவது இல்லை.பற்பல வகைகளில் ஆச்சரியப்படும்படியாக, இறைவனுடைய திருவருள், உயிர் வாழ்வதற்கு உரிய வீடான இந்த உடம்பைக் கட்டிக் கொடுத்திருக்கிறது.
வாடகை வீடாக இருந்தாலும் நாம் அதில் வாழ்வதனாலே தூய்மையாக வைத்துக் கொள்கிறோம். பழுது உபார்த்துக் கொள்கிறோம். நம்முடைய வீடு அல்ல என்றாலும், நாம் அதில் வாழவேண்டும் என்பதற்காக இப்படிச் செய்கிறோம். இல்லையானால் நாம் நிம்மதியாக வாழமுடியாது.அங்கே இருக்கும் காலம் வரையில் துன்பங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு நம்முடையதாகிறது.
அதுபோல,உடம்பு நமக்குச் சொந்தமானது அல்ல என்றாலும், அதனால் வருகின்ற துன்பங்களைப் போக்கிக் கொண்டு அதை நன்றாக நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதைக் காப்பாற்ற வேண்டிய அவசியத்தைத் திருமூலர் சொல்கிறார்.
உடம்பு ஒரு மல பாண்டம். இழுக்கு உடையது. இதை எதற்காகப் பாதுகாக்க வேண்டும்? என்றுதான் அவர் எண்ணி இருந்தார். பின்பு உடம்பினைப் பேணத் தொடங்கினார். உடம்பு கொழுக்கவேண்டும் என்பதற்காக அல்ல. ஊனைப் பெருக்குவது நோக்கம் அல்ல.உடம்புக்குள்ளே இறைவன் உறைகிறான் என்பதை உணர்ந்து கொண்டார். இறைவன் திருக்கோயிலாகிய இதை நன்றாகப் பாதுகாத்துக் கொள்வது முறை என்று உணர்ந்தார்.
"உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்;
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்;
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று,
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே" --- திருமூலர்.
நாமும் உடம்பைப் பாதுகாத்துக் கொள்கிறோம். யோகிகளும் உடம்பை மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறார்கள். இருவர் செயலும் ஒன்றாகத் தோன்றினாலும், குறிக்கோள் வேறானது. கத்தியைத் தீட்டுகின்ற ஒருவர் உயிரை வதைக்கவும் பயன்படுத்தலாம். வழியில் உள்ள முட்செடிகளை அகற்றவும் பயன்படுத்தலாம். செய்கை ஒன்றுதான். நோக்கம் வேறு.
ஞானிகளோ உடம்பினுள்ளே இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்து, அவன் வாழ்கின்ற கோயிலாகிய வீட்டை நன்றாக வைத்துக் கொள்ளவேண்டும் என்ற கருத்தினால் ஒம்புகிறார்கள். நம்மவர்கள் அப்படி அல்ல. நாக்குச் சுவை கருதி, கண்ட கண்ட உணவுகளை உட்கொண்டு, உடம்பிலுள்ள இந்திரியங்கள் தருகிற இன்பத்தையே நுகர்ந்து,அவை வன்மை இழந்த பிறகு வருந்திச் செத்துக் கொண்டிருக்கிறோம். மரணமில்லாப் பெருவாழ்வை விரும்பும் ஞானியர்கள் அதை அடைவதற்குரிய கருவியாகிய உடம்பை, உண்ணவேண்டிய உணவை மட்டும் உண்டு பேணி வருகிறார்கள்.
இந்த உடம்பாகிய கருவிக்கு ஒரு கால எல்லை உண்டு. அக்காலம் வரையில் உடம்பைப் பாதுகாக்க வேண்டியது இன்றியமையாதது. எந்தக் காலத்தும் நாம் உடம்புக்கு அடிமை ஆகிறோம். உடம்பைக் கருவியாகக் கொண்டு, அதற்கு அடிமையாகாமல், அதை எந்தச் சமயத்திலும் உதறித் தள்ளும் நிலையில் வாழ்கிறார்கள் ஞானிகள்.
உடம்பாகிய இந்த வீட்டில் வாழும் நாம் உடம்பை விட்டு நீங்கினால்,வேறு கட்டுப்பாடு இன்றி இறைவனுடைய திருத் தாளாகிய முத்தி இன்பம் ஒன்றையே பெறவேண்டும். அதுதான் நமது இலட்சியம். அப்படி இன்றி,இந்த உடம்பை விட்டு வேறோர் உடம்பை எடுக்கும் நிலை வரக்கூடாது. நாம் இறந்து இறந்து பிறந்து கொண்டிருக்கிறோம். புற உடம்பு அழிகிறதே தவிர உயிருக்கு உட்சட்டையாக இருக்கிற சூட்சும காரண சரீரங்கள் அழிவில்லாமல் இருக்கின்றன. அவற்றை விட்டு உயிர் நீங்க வேண்டுமானால்,அது தனது சொந்த வீடாகிய இறைவன் திருவடியில் பொருந்தும் முயற்சியைச் செய்ய வேண்டும்.
தெரு வீதியிலே படுத்து உறங்கும் ஏழையாக இருந்தாலும், மாட மாளிகையில் படுத்துக் களிக்கும் செல்வனாக இருந்தாலும் பிறக்கும்போது எவ்வித வேற்றுமையும் இல்லாமல் இறைவனால் கட்டிக் கொடுக்கப்பட்ட குடிசையாகிய இந்த உடம்போடுதான் வருகிறார்கள். இந்தக் குடிசை நமக்குச் சொந்தமானது அல்ல என்று அலட்சியம் செய்யவும் முடியாது.
இந்த உடம்பாகிய சிறிய குடிசைக்குச் சுவராக இருப்பது தோல். சுவர் இருந்து விட்டால் போதாது. கால் நாட்ட வேண்டும்.இந்த வீட்டுக்கு ஆதாரமாக இருப்பவை நாலாறு கால்கள். நாலு ஆறு என்பதற்கு,இங்கே பத்து என்று பொருள்கொள்ள வேண்டும். பத்துக் கால்களின் மேல் இந்தகு குடிசை அமைந்து உள்ளது. கால் என்றால் தூண் என்றும் சொல்லலாம். காற்று என்றும் சொல்லலாம். இந்த உடம்பாகிய வீட்டைத் தாங்குபவை பத்துக் கால்கள்; பத்து வாயுக்கள்.
மூச்சுப் போய்விட்டால், உடம்புபிணம் எனப்படும். உயிரோடு வாழ்கின்ற மனிதனின் உடம்பைத்தான் உடம்பு என்று சொல்கிறோம். வாழ்கின்ற மனிதனின் உடம்பிலே பல வகையான நாடி, நரம்புகள் இருக்கின்றன. 72 ஆயிரம் நாடிகள் இருக்கின்றன எனச் சொல்வர். இரத்த ஒட்டம் இருக்கிறது; கை காலை அசைக்கிறோம். இத்தனை செயல்களுக்கும் மூலமாக இருப்பது காற்று. அந்தக் காற்றைப் பத்து வகையாகப் பிரித்துச் சொல்லியிருக்கிறார்கள். உடம்பிலே பல செயல்கள் நிகழ்வதற்குக் காரணமாக இருப்பவை பத்து வாயுக்கள். உடம்பாகிய இந்த வீடு, பத்துக் கால்களில் சுமத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பத்துக் கால்கள் உடம்புக்கு ஆதாரமாக இருக்கின்றன.
மற்ற அமைப்புகள் நான்கு கால்களிலே நிற்கிற குடிசைகள், மாடுகள் போன்ற விலங்குகள். மனிதர்களுக்கு இரண்டு கால்களே உள்ளன. ஆகவே இந்தக் குடிசை இரு கால்களால் உயர்த்தி வைக்கப்பட்டிருக்கிறது. "இரு காலால் எழுப்பி" என்றார். இங்கே கால் என்பதற்குக் காற்று என்ற பொருள் இல்லை. முதலிலே காற்று என்ற பொருளில், "நாலாறு காலில் சுமத்தி" என்றார். இங்கே பாதம் அல்லது தூண் என்ற பொருளில், "இரு காலால் எழுப்பி" என்கிறார். உடம்பாகிய குடிசை தோலால் சுவர் வைத்து, பத்துக் காற்றுகளை ஆதாரமாக வைத்து, அவற்றின் மேல் சுமத்தி, இரு கால் ஆகிய தூணில் நிற்கிறது.
இரண்டு பக்கமும் சார்ப்பு இறக்குவதற்கு நடுவில் ஒரு விட்டம் வேண்டும். அந்த விட்டம்போல இருப்பது முதுகு. அது வளையக் கூடிய சக்தி உடையது. வளைமுதுகை விட்டமாக வைத்து, இரண்டு பக்கமும் கையாகிய சட்டத்தை அமைத்திருக்கிறான் இறைவன். இந்தக் குடிசைக்கு மேற்கூரை வேய வேண்டும். கீற்றினாலும் வைக்கோலினாலும் கூரை மேய்வார்கள். பனை நாரையோ கயிற்றையோ கொண்டு கட்டுவார்கள். இந்த உடம்பாகிய வீட்டுக்குக் கூரை தசையினால் வேய்ந்திருக்கிறது. நரம்பாகிய கயிற்றினால் கட்டப்பட்டிருக்கிறது.
இந்தக் குடிசையாகிய உடம்பு நிலையானது அல்ல. எத்தனை காலம் இருக்கும் என்றும் சொல்ல முடியாது. இறைவன் அலட்சியமாக அதை அமைத்துக் கொடுக்கவில்லை. நூறு ஆண்டு வசிக்கப் போகிற உடம்பு என்பதற்காக நல்ல முறையில் அதைப் படைப்பதும், நூறுநாள் தானே உலகில் வாழப்போகிறது என்பதற்காக மற்றோர் உடம்பை மட்டமாகப் படைப்பதும் இல்லை. எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக, தோலால் சுவர் வைத்து, நாலாறு காலில் சுமத்தி, இரு காலால் எழுப்பி, வளை முதுகு ஒட்டி,கைநாற்றி, நரம்பால் ஆர்க்கை இட்டுத் தசை கொண்டு வேய்ந்து, படைக்கிறான்.
எவ்வளவுதான் அற்புதமான வீடாக இருந்தாலும் இதிலேயே இருந்துவிட முடியாது. சென்று சேருகின்ற இடம் ஒன்று உண்டு என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். பல இடங்களில் குடியிருந்தவன்,சொந்தமாக ஒரு வீடு கட்டிக் கொள்ள வேண்டுமென்று நினைக்கும் காலம் ஒன்று வரும். இந்த உடம்பாகிய புகுந்த வீட்டை விரும்பாமல்,நிலைத்த இன்ப வீட்டை, சொந்தமாக உள்ள முத்தி வீட்டைப் பெறலாம் என்று நினைக்கும் பக்குவம் ஒரு காலத்தில் வந்தே தீரும். இந்த உடம்பு எங்கே போனாலும் துக்கம்தான். இதிலும் எந்த உறுப்புக் கெட்டுப் போனாலும்,போனது போனது தான். இந்த வீட்டில் இருக்கிறபோதே சொந்தமாக வேறு ஒரு பாதுகாப்பு உள்ள வீட்டைக் கட்டிக் கொண்டால்தான் இந்த வீடு அழியும் போது, துன்பம் இல்லாத நிலையான ஆனந்தத்தை அளிக்கும் இடத்துக்குப் போக முடியும்என்று உணர்ந்தார்கள் ஞானிகள். வாடகை வீட்டில் உள்ள ஒருவன் வேறு ஒரு வாடகை வீட்டைத் திட்க் கொள்வது சிரமம். வாடகை வீட்டில் உள்ளபோதே, தனக்குச் சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டிவிட்டால், ஆனந்தமாக வாடகை வீட்டில் இருந்து வெளியேறி விடலாம்.
இன்பத்தைப் பல காலம் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிற மனிதன், அந்த இன்ப நுகர்ச்சிக்குக் கருவியாகிய உடம்பு பல காலம் வாழ வேண்டும் என்று ஆசை கொள்கிறான். உடம்பு நெடுங் காலம் இராது என்பது அவனுக்குத் தெரியும். இருந்தும் அறிவு மயங்கி, நிலையாத உடம்பை நிலைக்கப் பண்ணக் காயகல்ப மருந்தை உண்ணுகிறான். சித்தர் என்று, சாமியார் என்று யார் யாரையோ தேடிச் சென்று காலில் விழுகிறான். "ஆசைக்கு ஓர் அளவு இல்லை...நெடுநாள் இருந்த பேரும் நிலையாகவே இன்னும் காயகல்பம் தேடி நெஞ்சு புண் ஆவர்" என்று இந்த நிலையைத் தாயுமானவர் பாடுகிறார்.
ஆகவே, உண்மை தெரிந்தவர்கள், உடம்பு இருக்கும் போதே, உயிர் உடம்பை விடும்போது சென்று சேர வேண்டிய இலட்சியத்திலே குறியாக இருப்பார்கள். அந்த இலட்சியத்திற்குத் தடையாக இருக்கிற உலக மாயையில் சிக்க மாட்டார்கள். உடம்பின் மீது கொண்ட பற்று,இறைவன் திருவடியில் கொண்ட பற்றாக மாறும்.
தாமரை வளர வேண்டுமானால் சேறு நிறைந்த குளம் வேண்டும். சேற்றிலே முளைக்கின்ற தாமரை வேண்டும் என்பவன்,குளத்தின் சேறு இழிந்த பொருளாக இருந்தாலும் அதைக் காப்பாற்றுவான்.
உடம்பு சேறு நிறைந்த குளமாக இருந்தாலும் முளைக்கின்ற தாமரை ஆகிய ஞானத்திற்காக, ஞானிகள் அதைக் காப்பாற்றினார்கள். உடம்பு நிலையற்றது என்பது தெரிந்தமையால்,அது செத்துப் போவதற்குள், முத்தி இன்பத்தைப் பெறுவதற்கு முயன்றார்கள். இந்திரிய சுகத்தை எண்ணியே நாம் உடம்பினிடத்தில் அபிமானம் கொள்கிறோம். ஞானிகளோ, ஞானத்தைப் பெறுவதற்கு, இறைவனின் திருவடியாகிய முத்தி வீட்டைப் பெறுவதற்குத் தமக்கு வாய்த்துள்ள உடம்பினிடத்தில் அபிமானம் கொண்டார்கள்.
அற்புதமான மாணிக்கத்தைப் பெற்ற ஒருவன் அழுக்கான கிழிசல் துணி கிடைத்ததனால் அதில் முடிந்து கொண்டு போகிறான். அழுக்குப் படிந்த கிழிசல் துணியில் அவனுக்கு இருக்கும் அபிமானம் அதனுள் இருக்கும் மாணிக்கத்தைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்பதால் உண்டாகிறது. வீட்டுக்குச் சென்ற பிறகு மாணிக்கத்தைப் பெட்டியில் வைக்கிறான். பிறகு கிழிசல் துணியைப் பற்றிக் கவலை கொள்ளாமல் எறிந்து விடுகிறான்.
உயிராகிய மாணிக்கம் இறைவனது திருவடிகிய பெட்டியை அடையும் வரைக்கும் அது பத்திரமாக இருக்க வேண்டும் என்று,அது முடியப்பட்டிருக்கும் உடம்பாகிய அழுக்குக் கந்தையிடம் அபிமானம் வைத்திருப்பார்கள் ஞானிகள்.
குளிர் காய வேண்டும் என்றால் நெருப்பு வேண்டும். நெருப்பிடம் நெருங்கினால் சுட்டுவிடும். அப்பால் அகன்றால் குளிர் வாட்டும். நெருப்பை விட்டு மிகவும் அகலாமலும் அதனிடத்தில் மிகவும் நெருங்காமலும் நின்று குளிர் காய்வதைப் போல,உடம்பை விடாமலும், உடம்பினால் வருகின்ற சுகத்தையே கருதி அதனிடம் நெருங்காமலும் இருப்பார்கள் ஞானிகள். உடம்பினுள் உயிர் வாழ்கின்ற காலம் வரையில் இறைவனுடய திருத்தாளைச் சென்று சேருவதற்கு உரிய முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள்.
இன்னார் ஒருவர் எங்கே இருக்கிறார்?என்று நாம் கேட்டால், அறிந்தவர்கள், அவர் இருக்கும் ஊரைச் சொல்லி, தெருவைச் சொல்லி, வீட்டு எண்ணைச் சொல்லுவார்கள்.
அப்பர் பெருமான் இந்த விதமாகச் சொல்லுகிறார்.
"முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்;
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்;
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்;
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்;
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்;
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை;
தன்னை மறந்தாள்; தன் நாமம் கெட்டாள்;
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!"
முத்தி வீடு என்பதற்குப் பலவிதமான அடையாளங்களை அவரவர்களுடைய தகுதி, தன்மை, நிலைக்கு ஏற்பச் சொன்னாலும், பொதுவாகச் சொல்லப்போனால் முத்தி வீடு என்பது இறைவன் திருவடிதான். அதைத் தலைப்படுவதற்கு உரிய வழியை அப்பர் பெருமான் சொன்னார். இறைவன் திருவடி அடைந்தார் என்று முத்தி பெற்றவர்களைச் சொல்வது எல்லோருக்கும் வழக்கம்.
சர்க்கரை வேறு, இனிப்பு வேறு என்று வேறு பிரித்துக் காட்ட முடியாததைப் போல இறைவனுடைய தாள் வேறு, அதை அடைந்தவுடன் கிடைக்கின்ற இன்பம் வேறு என்று வேறுபடுத்திச் சொல்ல முடியாது.
உலகத்தார் இறைவனிடம் வைக்கும் வேண்டுகோள் பல வகை. சிலர் தமக்கு உடம்பில் உள்ள குறைபாட்டைச் சுட்டிக் காட்டி, அடுத்த பிறவியிலாவது நல்ல உடம்பாகக் கொடுக்க வேண்டும்என்பர். அடுத்த பிறவியில் பணக்காரர் மாளிகையில் பிறக்கும்படி செய்ய வேண்டும் என்பவர் சிலர். சுவர்க்க இன்பத்தைப் பெற வேண்டும்என்று விரும்புவார் சிலர்.
ஆனால், "தோலினால் சுவர் வைத்து, தசவாயுக்களை ஆதாரமாக வைத்து, இரண்டு கால் வைத்து, வளைகின்ற முதுகாகிய விட்டம் அமைத்து, கைகளாகிய சட்டத்தைத் தொங்க விட்டு, நரம்பாகிய ஆர்க்கையினால் தசை கொண்டு வேய்ந்திருக்கும் இந்த அகம் பிரிந்தால்,உயிர் சென்று சேரவேண்டிய இடம் ஒன்றுதான். அதுவே இறைவன் திருத்தாள்" என்கிறார் அருணகிரிநாதர்.
வாடகை வீடு நிரந்தரமானது அல்ல. அடிக்கடி வாடகை வீட்டை மாற்றிக் கொண்டு இருப்பதை விட, சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டு, இன்பமாக வாழலாம்.
உடம்பை விட்டு நீங்குகின்ற உயிருக்கு மீட்டும் உடம்பு வராமல் இருக்க வேண்டுமென்றால், இறைவனுடைய இரு தாள் அன்றி வேறு பாதுகாப்பான இடம் இல்லை. அந்தத் தாளைப் பெறுவதற்கு முயற்சி செய்யாமல், உயிராகிய மாணிக்கத்தை இறைவனுடைய தாளிலே சேர்க்கும் வரையில் பாதுகாக்கும் கருவியாக உடம்பை நினைக்காமல், இந்திரிய சுகமே பெரிது என்று வாழ்வது கூடாது. இதனால் மீட்டும் பிறந்து இன்ப துன்பங்களுக்கு ஆளாகி இப்போது போலவே எப்போதும் அல்லலுற வேண்டும். பாசத்துக்குக் கட்டுப்பட்டு உடம்பெடுத்து வந்து இறைவனுக்கு அடியவன் ஆகி,இறைவனுடைய இருதாளாகிய முத்தி வீட்டைப் பெற்று நித்திய இன்பத்தை அனுபவிக்கவேண்டும். அதை விட வேறு கதி இல்லை என்று உபதேசம் புரிகிறார் அருணகிரிநாதப் பெருமான்.
"தோலால் சுவர் வைத்து, நால்ஆறு காலில் சுமத்தி,இரு
காலால் எழுப்பி, வளை முதுகு ஒட்டிக் கைந் நாற்றி, நரம்
பால்ஆர்க்கை இட்டுத் தசைகொண்டு வேய்ந்த அகம் பிரிந்தால்,
வேலால் கிரிதுளைத்தோன் இருதாள்அன்றி வேறு இல்லையே". --- கந்தர் அலங்காரம்.
இதன் பொருள் ---
தோலினாலே சுவர் எழுப்பி, பத்து வாயுக்களால் தாங்குவித்து, இரண்டு கால்களாகிய தூணின்மேல் நிற்கச் செய்து, வளைந்த முதுகு எலும்பு ஆகிய மேல் முகட்டை அமைத்து, இரு கைகள் ஆகிய கொடுங்கைகளைத் தொங்கவிட்டு, நரம்புகளால் கட்டி, புலால் என்ற பூச்சவேலையால் முடிச் செய்த இந்த உடம்பாகிய வீட்டை விட்டு உயிர் பிரியும் வேளையில், வேற்படையால் கிரவுஞ்ச மலையைத் தொளைத்த முருகப் பெருமானுடைய இரண்டு சரணாரவிந்தங்களைத் தவிரப் புகலிடம் வேறு இல்லை.
புகுந்த வாடகை வீடாகிய இந்த உடம்பை விடுத்த பின்னர், சொந்த வீடாகிய இறைவன் திருவடியை அடைவதற்கான முயற்சியை இந்த உடம்பில் வழுகின்ற போதே மேற்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment