நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும்
-----
ஒருவன் நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அவனது குடிப் பிறப்பால் மட்டுமே அல்ல. ஒவ்வொருவரின் பிறப்பும் அவரது பிராரத்த வினையின் பயனாகவே நிகழுகின்றது. யார் எங்கே பிறப்பது? எப்படி வாழ்வது என்பதெல்லாம் அவரவர் வசம் இல்லை. யாருக்கும் அந்தச் சுதந்திரமும் இல்லை.
சகலாகம பண்டிதர் என்று போற்றப்பெற்ற அருள்நந்தி சிவாச்சாரியார் பின் வரும் பாடல்கள் மூலம் இதனைத் தெளிவு செய்கின்றார்.
"பேறுஇழவு இன்ப மோடு,
பிணிமூப்புச் சாக்காடு என்னும்
ஆறும் முன் கருவுள் பட்டது;
அவ்விதி அனுப வத்தால்
ஏறிடும்; முன்பு செய்த
கன்மம் இங்கு இவற்றிற்கு ஏது
தேறு நீ, இனிச்செய் கன்மம்
மேல்உடல் சேரும், என்றே". --- சிவஞானசித்தியார்.
இந்தப் பிறவியில் நிகழ்கின்ற நற்பேறுகளும்,இழப்புகளும், இன்பமும், துயரமும், மூப்பினால் வரும் நரை திரையும், இறப்பும், என்னும் இவை ஆறும் ஓர்உயிர் கருவாய்க் கிடந்த போதே அதற்கு உரியனவாக அமைந்து கிடந்தன. அவையே பின்னர் அவ்வுயிர் வாழும் காலத்து அதனை வந்து பொருந்தும். முற்பிறவிகளில் செய்த வினைகளின் பயனே மேலேகூறப்பட்ட ஆறனுக்கும் காரணமாக அமைந்தவை என்பதைஅறிந்துதெளிக. இந்தப் பிறவியில் மீண்டும் ஈட்டப்படும் வினைகள் அவ்வுயிரால் இனிமேல் எடுக்கப்படும் பிறவிகளில் இந்த ஆறுவகை நுகர்வுகளுக்கும் காரணமாக அமையும்.
"உடல்செயல் கன்மம்; இந்த
உடல் வந்தவாறு ஏது என்னின்,
விடப்படும் முன் உடம்பின்
வினை இந்த உடல் விளைக்கும்;
தொடர்ச்சியால் ஒன்றுக்கு ஒன்று
தொன்று தொட்டு அநாதி, வித்தின்
இடத்தினின் மரம், மரத்தின்
வித்தும் வந்து இயையுமா போல்".--- சிவஞானசித்தியார்.
கன்மம் எனும் வினையைச் செய்வதற்கு உடல் இன்றியமையாது தேவைப்படும். எனவே,இந்த உடல் எவ்வாறு வந்தது என்றால், முந்திய பிறப்பில் செய்யப்பட்ட வினைகள் இந்தப் பிறவியில் வருகின்ற உடம்பைத் தோற்றுவிக்கும். அவ்வாறே இந்தப் பிறப்பில் செய்யப்பட்ட வினைகளுக்கு ஏற்ப அடுத்த பிறவி அமையும். சங்கிலித் தொடர் போல ஒன்றுக்கு ஒன்று தொன்று தொட்டுத் தோற்றமில் காலம் தொடங்கி இவ்வாறு வரும். வித்திலிருந்து மரமும் மரத்திலிருந்து வித்தும் தோன்றுவது போன்றது இத் தொடர்ச்சி.
இவ்வாறு வருவது பிரவாக அநாதி என்று கூறப்படும். அதாவது,ஓடுகின்ற வெள்ளநீர் இடம் பெயர்ந்து கொண்டே அந்த இடத்தை மேலும் வரும் நீர் நிரப்பியது போன்ற தொடர்ச்சி.
உயர்ந்த குலம் என்று போற்றப்படுகின்ற அந்தணர் குலத்தில், காசிப கோத்திரத்தில் அவதரித்தவர்தான்விசாரசருமர் என்னும் பிள்ளைத் திருநாமத்தைக் கொண்டிருந்து, பின்னாளில் இறையருளைப் பெற்றவர் ஆகியசண்டீச நாயனார். ஆனால் அவரது தந்தை பெருமைக்கு உரிய குலத்தில் பிறந்தும் பெருமைக்கு உரிய குணங்களோடு வாழவில்லை என்கின்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.
சண்டீச நாயனார் அவதரித்த திருச்சேய்ஞ்ஞலூர் என்னும் திருத்தலத்தின் பெருமைகளைச் சுருக்கமாகச் சொல்லப் போனால்,
"செம்மை வெண்ணீற்று ஒருமையினார்,
இரண்டு பிறப்பின் சிறப்பினார்,
மும்மைத் தழல் ஓம்பிய நெறியார்,
நான்கு வேதம் முறைபயின்றார்,
தம்மை ஐந்து புலனும்பின் செல்லும்
தகையார்,அறுதொழிலின்
மெய்ம்மை ஒழுக்கம் ஏழ்உலகும்
போற்றும் மறையோர் விளங்குவது".-- பெரியபுராணம்.
இதன் பொருள் ---
செம்பொருளாகிய சிவத்தை அடைவதற்குக் காரணமாகிய திருவெண்ணீற்றில் மனம் ஒன்றுபட்ட ஒழுக்கம் உடையவராய், இரு பிறப்பின் சிறப்புஉடையவராய், ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினியம் என்னும் மூவகைத்தீயையும் வளர்த்து வரும் நன்னெறிஉடையவராய், நான்மறைகளையும் முறையாகப் பயின்றவராய், ஐம்புலன்களும் தம் வழிநிற்கும் தகுதிஉடையராய்த், தாம் செய்யும் ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் ஆறு தொழில்களிலும் உண்மை நிறைந்த ஒழுக்கத்தை மேற்கொண்டு ஏழுலகமும் போற்றும் சீலமுடையவராய் வாழும் அந்தணர்கள் வாழும் சிறப்பு உடையது அவ்வூர்.
"பண்ணின் பயனாம் நல்இசையும்
பாலின் பயனாம் இன்சுவையும்
கண்ணின் பயனாம் பெருகுஒளியும்
கருத்தின் பயனாம் எழுத்துஅஞ்சும்
விண்ணின் பயனாம் பொழிமழையும்
வேதப் பயனாம் சைவமும்போல்
மண்ணின் பயனாம் அப்பதியின்
வளத்தின் பெருமை வரம்பு உடைத்தோ". ---பெரியபுராணம்.
இதன் பொருள் ---
பண்ணின் பயனாக இனிய நல் இசையும், பாலின் பயனாக இனிய நற்சுவையும், கண்ணின் பயனாகப் பெருகிய ஒளியும், கருத்தின் பயனாக "நமச்சிவாய" என்னும்,திருவைந்தெழுத்தும், விண்ணின் பயனாக பொழிகின்ற பெருமழையும், நான்மறைகளின் பயனாக சீலமுடைய சைவசமயமும் விளங்குவன போல, இம் மண்ணின் பயனாக விளங்கும் திருச்சேய்ஞலூர் என்னும் அத்திருத்தலத்தின் வளத்தின் பெருமை ஓர் எல்லைக்கு உட்படுத்திச் சொல்லப்படும் தன்மையதோ?
இவ்வாறு அருமறையவர்கள் வாழ்ந்திருந்த அந்த ஊரில்தான், சண்டீச நாயனாரைப்பெற்ற, எச்சதத்தன் என்னும் அந்தணனும் வாழ்ந்திருந்தான். அவனை நச்சுப் பாம்பு என்கின்றார்.
"பெருமை பிறங்கும் அப்பதியின்
மறையோர் தம்முள் பெருமனைவாழ்
தருமம் நிலவு காசிபகோத்
திரத்துத் தலைமை சால்மரபில்
அருமை மணியும் அளித்து அதுவே
நஞ்சும் அளிக்கும் அரவுபோல்
இருமை வினைக்கும் ஒருவடிவாம்
எச்ச தத்தன் உளன் ஆனான்". --- பெரியபுராணம்.
இதன் பொருள் ---
இத்தகைய பெருமைமிக்க அப்பதியில் வாழும் மறையவர்களில், சிறப்புடைய இல்லற நெறியில், அறம் நிலவிய காசிப கோத்திரத்தின் தலைமை சான்ற நல்ல மரபினில், அருமையான இரத்தினத்தையும் தந்து, அதுவே நஞ்சினையும் தரும் பாம்பைப் போல,நல்வினை தீவினை (புண்ணிய பாவம்) என்னும் இருவினைகளையும் செய்யும் ஒருவனாக எச்சதத்தன் என்னும் பெயருடைய ஓர் அந்தணன் வாழ்ந்து வந்தான்.
இராவணன் கல்வி அறிவில் மிக்கவன். செல்வத்தில் மிக்கவன். சிவபத்தியிலும் சிறந்தவன். ஆனாலும், அவனது ஆட்சியில் எல்லோருக்கும் துன்பமே மிகுந்து இருந்தது. காரணம் அவனிடத்தில் ஆணவமும், காமமும் மிகுந்து இருந்தது. சடாயு, கும்பகர்ணன், விபீடணர், மாலியவான் முதலானவர்கள் சொன்ன அறிவுரைகள் எதையும் அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. முடிவில் தனது அழிவைத் தானே தேடிக் கொண்டான். அரக்கர் குலத்தில் பிறந்தவனாக இருந்தும், நல்லவனாக விளங்கினபடியால், விபீடணரை ஏற்றுக் கொண்டார் இராமபிரான்.
சூரபதுமனுடன் பிறந்தவன்தான்சிங்கமுகாசூரன். அரக்கர் குலத்தில் பிறந்தும் அவன் நல்லவனாகத் தான் வாழ்ந்தான்.
அரக்கன் ஆகிய இரணியனுக்கு ஒரு நல்ல பிள்ளை வாய்த்தது. இராக்கதர் குலத்தில் பிறந்தவராக இருந்தாலும், பிரகலாதரை, "பிரகலாத ஆழ்வார்" என்று அவரை உலகம் போற்றுகின்றது. பிரகலாத ஆழ்வாரால், அரக்கனான இரணியனும் நற்கதியைப் பெற்றான்.
தீமைகள் என்று எத்தனை உள்ளனவோ, அத்தனைக்கும் பிறப்பிடமாக இருந்தவன் துரியோதனன். அவனுடன் பிறந்த அத்தனை பேரும் தீயவர்களாகவே இருந்தனர். துரியோதனனுக்கு நண்பனாக வந்த கர்ணனும் அவனுக்கு நன்மை தரும் விதத்தில் நடந்து கொள்ளவில்லை. செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதாகச் சொல்லிக் கொண்டு, துரியாதனன் செய்த அத்தனைத் தீமைகளுக்கும் உடந்தையாகவே இருந்தான். கர்ணனை விடவும் வீரத்தில் சிறந்த ஒருவன் துரியோதனனுக்குத் தம்பியர்களில் ஒருவனாக இருந்தான். அவன் "விகர்ணன்" என்ற பெரியை உடையவன். (வி=மேலான) கர்ணனுக்கும் மேலானவன் என்பது அவனுடைய பெயருக்கு உரிய விளக்கம்.
நன்மை தீமைகளை எடுத்துச் சொல்லி அறிவுரை கூறுவது தனிப்பட்ட முறையில் எல்லோருக்கும் சாத்தியமே. என்றாலும், பலர் முன்னிலையில் அது சில நேரங்களில் சாத்தியம் ஆகாது. மகாபாரத நிகழ்வு ஒன்றைக் காண்போம். சகுனியின் வஞ்சனையால் சூதாட்டத்தில் ஈடுபட்டு அனைத்துச் செல்வங்களையும் இழந்த தருமன், தனது தம்பியர்களையும், தனது தேவியாகிய பாஞ்சாலியையும் சூதில் இழந்து நின்கின்றான். அந்த வெற்றியை எல்லாரும் கொண்டாட வேண்டும் என்று துரியோதனன் கொக்கரிக்கின்றான்.
அரசவையில், பாஞ்சாலியின் நிலையைக் கண்டவர் எல்லோரும் தமக்குள் வருந்திப் புலம்புகின்றார்கள். "நெருப்பினை ஒத்த கற்பினை உடைய பாஞ்சாலியின் நறுமணம் மிக்க கூந்தல் மட்டும் குலையவில்லை - பாம்புக் கொடியினை உடைய துரியோதனனின் பரம்பரை இப்போது குலைந்துவிட்டது. நாட்டில் உள்ள அனைவரையும் காக்கவேண்டிய வெண்கொற்றக் குடையானது, இப்போது தீயாய் வருத்துகின்றது. தனது மைந்தர் செய்த தீய செயலைக் கேட்டு அறிந்தும், அதைத் தடை செய்ய எண்ணாமல், பாஞ்சாலியை "அஞ்சாமல் அரசவைக்குப் போ" எனக் கூறிய காந்தாரி மிகக் கொடியவள். தனது மருமகளின் மானத்தைப் பங்கம் செய்யத் துணிந்த, தனது மகன் ஆகிய துரியோதனனின் செய்கைக்கு எல்லாம் உடன்பட்டு, வாய்பேசாமல் இருக்கின்ற திருதராட்டிரனின் உள்ளம் இரும்பாகி விட்டது. நல்ல குடியில் பிறந்தவர்களுக்கு, இந்த அத்தினாபுரி வாழத் தகுதியற்ற இடமாகி விட்டது." இவ்வாறெல்லாம் திருதராட்டிரனின் அரசவையில் இருந்தவர்கள் மட்டும் அல்லாது, அத்தினாபுரத்தில் இருந்த மக்கள் எல்லோருமே புலம்பலானார்கள்.
தீயோர்கள் நிறைந்து வெறியாட்டம் ஆடும்போது,அங்கிருந்த அறிவிலும் ஞானத்திலும் வயதிலும் மூத்தவர்கள் கூட, ஒவ்வொரு காரணத்திற்காக வாய்மூடி மௌனிகளாக இருந்தபோது, அவர்கள் அனைவரையும் விட அறிவு,ஞானம், வயது என அனைத்திலும் சிறியவனாக இருந்த ஓர் இளைஞன், அந்தச் சபையில் நடக்கும் தீயவர்களின் ஆபாச வெறியாட்டத்தைத் தடுக்க முனைகிறான்.
இவ்வளவு பெருமை வாய்ந்த அந்த இளைஞன் உப்புக் கடலில் முத்துப் பிறப்பதைப் போலப் பிறந்தவன்.இருண்ட வானத்தில் தோன்றும் வால் நட்சத்திரம் வருவதைப் போல உதித்தவன். அவன் கர்ணனை விடத் தலைசிறந்தவன்.திகைக்க வேண்டாம். மகாபாரத யுத்தம் பதினெட்டு நாட்கள் நடந்தது. அதில் பாதி நாட்கள் தாண்டியும், கர்ணன் போரில் கலந்து கொள்ளவில்லை. பத்து நாட்கள் கழித்துப் பதினோராவது நாளில் இருந்துதான், அதாவது பீஷ்மர் கீழே விழுந்த பிறகுதான், கர்ணன் போரில் கலந்து கொண்டான். பீஷ்மர் ஏதோ ஒரு வார்த்தை சொல்லி விட்டார் என்பதற்காகக் கர்ணன், அந்த முடிவை எடுத்தான். கர்ணனுக்கு முடி சூட்டி, அவனை அங்கதேசத்திற்கு அரசனாக்கி, அவனுடைய பெருமைக்கெல்லாம் காரணமாக இருந்தது துரியோதனனா? இல்லை பீஷ்மரா?
கர்ணன், துரியோதனனால் அடைந்த நன்மைகள் பலப்பல. இவ்வாறு கர்ணனைப் பற்றிப் பலவிதமாகப் பட்டியல் இடலாம். ஆனால், இவ்வாறு சொல்ல முடியாதபடி, கர்ணனைப் போல அல்லாமல் துரியோதனனை இடித்துத் திருத்த முயல்வான் என்பதற்காகத்தானோ என்னவோ, அந்த இளைஞனுக்கு ‘விகர்ணன்’ எனப் பெயரிட்டார்கள். துரியோதனனின் தம்பிகளில் ஒருவன் விகர்ணன். இவன் மிகவும் நல்லவனாகவும்,தர்மம் அறிந்தவனாகவும் இருந்தும், துரியோதனனிடம் இவன் எதையும் பெறவில்லை. அவன் பெற்றது எல்லாம் ஏச்சும் பேச்சும்தான் பெற்றான்.
துரியோதனனும் அவன் கூடப் பிறந்தவர்களும் (விகர்ணனைத் தவிர) பீஷ்மர், துரோணர் முதலானவர்களிடம் இருந்து எல்லாவற்றையும் கற்றுக் கொண்டிருந்தாலும், நல்லவற்றைக் கடைபிடிக்க வில்லை. பரிட்சையில் ‘சாய்ஸில்’ (விருப்பத்திற்கு இணங்க) விடுவதைப்போல விட்டு விட்டார்கள். ஆனால், துரியோதனனின் தம்பிகளில் ஒருவனான விகர்ணன் நல்லவற்றை மட்டுமே கடைபிடித்தான்.
கௌரவர்களும் பாண்டவர்களும் சூதாட்டம் ஆடி, தருமர் செல்வங்களை எல்லாம் தோற்று,தான் உட்பட தனது தம்பியர்களையும் வைத்துத் தோற்றார். அதன்பின் பாஞ்சாலியையும் சூதாட்டத்தில் இழந்தார். வீட்டிற்கு விலக்காக, ஒற்றை ஆடையுடன் இருந்த பாஞ்சாலியைத் துரியோதனன் ஏவலால், துச்சாதனன் பலாத்காரமாகப் பிடித்து இழுத்து வந்து சபையில் நிறுத்தினான்.துயரத்தின் எல்லை காணாத பாஞ்சாலி, சபையிலிருந்த அனைவரையும் நோக்கிப் பலவிதமாகவும் தர்மங்களைச் சொல்லி, அழுது-தொழுது சோர்ந்து போனாள்.
"பொல்லா வசையே புகழ்பூணாப்
புல்லன் புகல,இதற்கு ஒன்றும்
சொல்லாது இருந்த பேரவையைத்
தொழுதாள்,அழுதாள்,சோர்வுற்றாள்;
மல்லார் திண்டோள் மாமா ஓ!
மந்தாகினியாள் மதலாய் ஓ!
எல்லா நெறியும் உணர்ந்தவர்க்கு
மண்ணில் இதுவோ இயல்பு என்றாள்"
இதன் பொருள் ---
மிகக் கொடிய பழிச் செயலையே தனக்குப் புகழும் ஆபரணமுமாகக் கொண்டுஅற்பனான துச்சாதனன், பாஞ்சாலியை நோக்கிச் சுடுமொழிகளைச்சொல்ல,இந்த வசைமொழியைக் குறித்து ஒன்றும் பேசாதிருந்த பெரும் சபையோரை நோக்கி, பாஞ்சாலி அழுதாள், புலம்பினாள்,சோர்வு உற்றாள். ஏங்கிய உள்ளத்தோடு நின்று கைகளைக் கூப்பி வசங்கிக் கொண்டு, திருதராட்டிரனைப் பார்த்து, "மற்போருக்குப் பொருந்திய வலிய தோள்களையுடைய மாமனே"என்றும், பீஷ்மரைப் பார்த்து, "கங்கா தேவியின் புத்திரனே! எல்லாம் நெறியும்கற்றுத் தேர்ந்தவர்களாகியஉங்களுக்கு இது நல்ல செய்கை ஆகுமா" என்று முறையிட்டாள்.
பாஞ்சாலி எவ்வளவுதான் அழுது, கதறிப் புலம்பினாலும்,அவையில் இருந்த யாரும் வாய் திறக்கவில்லை. பதில் சொல்ல முடியாததற்கான காரணத்தையே பதிலாகச் சொன்னார் பீஷ்மர். சபையில் உள்ளோர் அனைவரும் வாய்மூடிக் கிடந்த அந்த நேரத்தில் விகர்ணன் எழுந்தான். "அரசர்களே! சபையில் இவ்வளவு பேர்கள் இருக்கிறீர்களே! பாஞ்சாலியின் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்! யாருமே பதில் சொல்லாவிட்டால் நம் அனைவருக்கும் நரகம்தான் கிடைக்கும்.
“பீஷ்மர்,திருதராஷ்டிரன்,அறிவாளியான விதுரர் ஆகியோர் கூட, ஒன்றும் சொல்லவில்லையே! ஆசாரிய புருஷர்களும் அந்தண உத்தமர்களுமான துரோணர், கிருபர் முதலானோர் கூட வாயைத் திறக்கவில்லையே! ஏன்?எல்லாத் திசைகளில் இருந்தும் எல்லா அரசர்களும் வந்திருக்கிறீர்கள். யாராவது ஒருவராவது உங்களுக்குத் தெரிந்த தர்மத்தைச் சொல்லுங்கள்! யாருக்கும் எதற்கும் பயப்படாதீர்கள்!” என்றான். அதர்மம் நிறைந்த அந்தச் சபையில் விகர்ணனின் வாக்கு எடுபடவில்லை. அதற்காக விகர்ணன் மனம் தளர்ந்து போகவில்லை; மறுபடியும் மறுபடியும், ‘"இங்கு நடக்கும் அக்கிரமத்தைத் தட்டிக் கேளுங்கள்!" என்று கூவினான்.
"அல் ஆர் கூந்தல் விரித்த மயில்
அனையாள் அரற்ற, அதற்கு ஒன்றும்
சொல்லாது, ஊமர் கணம் போலத்
தொல் போர் வேந்தர் சூழ்ந்திருப்ப,
மல் ஆர் தடந்தோள் விகருணன் ஆம்
வாய்மைக் கடவுள், 'வாள் வேந்தீர்!
பொல்லா நெறியில் அனைவீரும்
போகாவண்ணம் புகல்வீரே!" --- வில்லிபாரதம்.
"முறையோ!என்று என்று, அவனிதலம்
முழுதும் உடையான்முடித் தேவி
நிறையோடு அழிந்து, வினவவும், நீர்,
நினைவுற்று இருந்தீர்; நினைவு அற்றோ?
இறையோன் முனியும் என நினைந்தோ?
இருந்தால், உறுதிஎடுத்து இயம்பல்
குறையோ? கண் கண்டது நாளும்
குலத்துப் பிறந்தோர் கூறாரோ?" --- வில்லிபாரதம்.
இதன் பொருள் ---
இருண்ட கருநிறக் கூந்தலை விரித்துக் கொண்டு உள்ள பாஞ்சாலி அழுது அரற்றவும், அவள் கேட்ட கேள்விகளுக்கு மறுமொழியாக, தக்கது என்றோ, தகாததுதான் என்றோ ஏதும் கூறாமல், ஊமைகளின் கூட்டம்போல், பழமையான குலத்தில் தோன்றிய போர் வேந்தர்கள் சூழ்ந்து இருக்க, வாய்மைக் கடவுள் ஆகிய விகர்ணன் மட்டும் எழுந்து சபையோரை நோக்கி, "வாட்படையை உடைய அரசர்களே! நீங்கள் எல்லோரும் நரகத்துப் போகாமல் இருக்க விரும்பினீர்கள் என்றால், நீதியை எடுத்துச் சொல்லுங்கள்".
"இந்த நிலவுலகம்முழுவதற்கும் உரியவனான தருமபுத்திரனது, பட்ட மகிஷியாகியபாஞ்சாலி, உங்களை நோக்கி, "என்னை அடிமை எனக் கொண்டு, இவ்வாறு சபையில் இழுத்து வருவது முறையாகுமோ? என்று பலமுறையும் சொல்லி, தனது கற்பினைக் காப்பாற்றிக் கொள்ள நியாம் கேட்கின்றாள், பதில் ஏதும் பேசாமல் இருக்கின்றீர்களே! நீங்கள் சுயநினைவோடுதான் இருக்கிறீர்களா? நீதியைச் சொல்லாமல் நீங்கள் இருப்பதற்குக் காரணம், துரியோதனன் கோபம் கொள்வான் என்பதாலா? நல்ல குலத்தில் பிறந்தவர்கள் யாராவது நீதியை எடுத்துச் சொல்லாமல் இருப்பார்களா?" என்று ஆவேசமாகப் பேசினான்.
அவன் வார்த்தைகள் மட்டும் அங்கே சபையில் வெளிப்பட்டு எதிரொலித்துக் கொண்டிருந்தனவே தவிர, அங்கிருந்தோர் யாரும் ஒரு வார்த்தை கூடப் பதில் சொல்லவில்லை. அதாவது விகர்ணன் சொன்னதை ஆமோதிக்கவும் இல்லை,மறுத்துப் பேசவும் இல்லை. அந்த அளவிற்குச் சபையில் இருந்தவர்கள், துரியோதனனிடம் பயந்து கொண்டிருந்தார்கள்.
அதைப் பார்த்ததும் விகர்ணனுக்கு ஒருமாதிரி ஆகி விட்டது; சற்று சலித்தான்; கைகளைப் பிசைந்துகொண்டு பெருமூச்சு விட்டான்.
“அரசர்களே! இவ்வளவு பேர்களும் பயந்து விட்டீர்களே! நீங்கள் இப்படி இருந்தால், நீங்களும் உங்களை நம்பியிருக்கும் நாடும் மக்களும் என்ன ஆவார்கள்? வலிமையுள்ளவன் வைத்தது எல்லாம் சட்டம் என்று வாய்மூடி இருப்பதா தர்மம்?" என்றான் விகர்ணன்.
"சூதாட்டத்தில் அகப்பட்டுக் கொண்டு, அதில் பற்றுவைத்த தருமர், பாஞ்சாலியைப் பந்தயமாக வைத்து இருக்கிறார். அதை இங்கிருப்போர் அனைவரும் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். அதுவே தவறு! பாஞ்சாலி என்ன தர்மருக்கு மட்டுமா சொந்தம்? குற்றமற்றவளும் வேள்வித் தீயில் இருந்து அயோநிஜை ஆகத் தோன்றியவளுமான பாஞ்சாலி, பாண்டவர் ஐவருக்கும் அல்லவா சொந்தம்? ஐவருக்கும் பொதுவானவளைத் தருமர் மட்டும் தன் விருப்பப்படி, எப்படிப் பந்தயப் பொருளாக வைக்கலாம்? சகோதரர்கள் வாய் திறக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் செய்து விட்டதாகவே வைத்துக் கொள்ளுங்கள்! அவராகவா செய்தார்? அந்த நிலைக்குத் தருமரைத் தள்ளி, அவரைத் தூண்டி விட்டவர்கள் யார்? திரௌபதியைப் பந்தயமாக வை என்று சகுனியல்லவா தூண்டினார்?இந்த அசம்பாவிதங்களுக்கு எல்லாம் காரணம் சகுனியே. தெரிந்தும் வாய்மூடி இருக்கிறீர்களே. சரி! அதையும் விட்டு விடுவோம்".
"தருமர் சூதாட்டத்தில் தன்னைத் தோற்று, அதன்பிறகே பாஞ்சாலியை வைத்துத் தோற்று இருக்கிறார். தானே அடிமையான பிறகு, அந்தத் தருமர் எப்படி அடுத்தவரை அடிமையாக்க முடியும்?அது செல்லுபடியாகாது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே? ஆகையால், இந்தப் பாஞ்சாலி அடிமையில்லை. சூதாட்டத்தில் அவளை வைத்துத் தருமர் தோற்றது செல்லுபடியாகாது. பாஞ்சாலியை அடிமையாக நினைத்து யாரும் உரிமை கொண்டாட முடியாது. இதுவே என் கருத்து. இதைத்தான் பாஞ்சாலியும் கேட்கிறாள். பதில் சொல்ல வேண்டியது இந்தச் சபையின் பொறுப்பு” என்று கர்ஜித்து முடித்தான், விகர்ணன்.
நல்லவைகளுக்குப் பெருத்த ஆதரவு எப்போதும் கிடாக்காது. அத்திப் பூத்தால்போல, எப்போதாவது சற்றுஆதரவு கிடைக்கும் போலத் தோன்றுகிறது. ஆவேசத்துடன் விகர்ணன் பேசி முடித்ததும், சபையில் ஒரு மாபெரும் மாறுதல் உருவானது. விகர்ணனைப் புகழ்வதும் சகுனியை இகழ்வதுமாகப் பெருங்கூச்சல் உண்டானது. விகர்ணன் பற்ற வைத்த தர்மம் எனும் சின்னஞ் சிறிய தீப்பொறி, பரவத் தொடங்கியதைப் போல இருந்தது. ஆனால்,அதை பெருவெள்ளம் வந்து அணைத்து விட்டது.
விகர்ணனால் சபையில் உண்டான மாறுதலைப் பார்த்தான் கர்ணன். உடனே அவன் கைகளைத் தூக்கி, சபையில் எழுந்த கூச்சலை அடக்கிவிட்டு விகர்ணன் பக்கம் திரும்பினான். “விகர்ணா! குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! பாஞ்சாலியின் கேள்விக்கு இங்கு யாரும் பதில் சொல்லாமல் இருந்ததில் இருந்தே, அவள் அடிமைதான் என்பதை இங்கு எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள் என்பது உனக்குத் தெரியவில்லையா? சிறுபிள்ளைத்தனமாக இவ்வளவு பெரிய சபையில் அடக்கமில்லாமல் பேசுகிறாய். உனக்குத் தர்மமும் தெரியாது; அறிவும் கிடையாது".
இவ்வளவு நியாயம் பேசிய விகர்ணனைப் பார்த்து, "ஐவருக்கும் பொதுவான தாசியான திரௌபதி, ஒற்றை ஆடையுடன் இருந்தால் என்ன?அல்லது ஆடையே இல்லாமல் இருந்தால்தான் என்ன? ஆச்சரியப்பட அதில் என்ன இருக்கிறது? சிறுபிள்ளை நீ! மூடு வாயை!” என்று விகர்ணனை அடக்கிய கர்ணன், துச்சாதனன் பக்கம் திரும்பினான்.“துச்சாதனா! பாண்டவர்களின் மேல் உள்ள ஆடைகளையும் திரௌபதியின் ஆடையையும் கொண்டு வா! போ!” என்று ஏவினான். கர்ணனின் அந்த வார்த்தைகள் விளைவித்த விபரீதம், எல்லோருக்குமே தெரியும். தன்னுடைய வாக்கு சபையில் இவ்வாறு கர்ணனால் அடித்துத் தூக்கி வீசப்பட்டதை அறிந்த விகர்ணன் மனது என்ன பாடுபட்டிருக்கும்? அவன் மனது பாடுபட்டதோ, இல்லையோ; அவனைக் கொன்றவனின் மனம் அழுதது. ஆமாம்! விகர்ணனைக் கொன்றவன் விகர்ணனுக்காக அழுதான்.
துரோணர் தலைமையில் கௌரவர்கள் போர் புரிந்து கொண்டிருந்த போது, ஜயத்ரத வதத்திற்குப் பிறகு போர்க்களத்தில் பீமன், விகர்ணன் தன்னோடு போர் புரிய வந்தபோது, அன்று சபையில் தங்களுக்காக விகர்ணன் நியாயம் பேசியதை எண்ணி, அவனோடு போர் புரிய மறுக்கிறான். "இந்த உலகம் அறிய நிகழ்ந்த அநியாத்திற்குப் பரிந்து பேசிய உன்னோடு போர் புரிய மனம் இசையவில்லை" என்கிறான் வீமன். "எனது முன்னார்கள் எல்லோம் போரில் மடிந்த பிறகு, நான் மட்டும் போர் புரியாமல் இருப்பது கூடாது" என்று மறுத்த விகர்ணன்,வீமனோடு போர் புரிந்து மடிகிறான். போரில் விகர்ணன் மடிந்த நிலையில் வீமன் அவனுக்காக அழுகின்றான்.
மாவீரன் ஆகிய வீமனையே அழவைத்த ஒரு அற்புதமான கதாபாத்திரம் விகர்ணன்.அத்தனை கொடியவர்களுக்கு மத்தியிலும் ஒரு நல்லவன் இருக்கத் தான் இருந்தான். துரியோதனனும் அவன் சகோதரர்களும் செய்த தீமைகளை எல்லாம் விவரித்த வில்லிப்புத்தூரார்,மற்றவர்கள் யாரைப் பற்றியும் கூறாமல், கொடியவர்களின் கூட்டத்தில் இருந்தும், அவர்கள் நிகழ்த்திய அநீதியைத் தட்டிக் கேட்ட விகர்ணனைப் பற்றிக் குறிப்பிடத் தவறவில்லை.
அன்றைய நிலைதான் இது என்றால். இன்றைய நிலையும் அப்படித்தான் உள்ளது. "வல்லான் வகுத்ததே வாய்க்கால்" என்று உள்ளது.அநீதி நிகழ்ந்தால், யாரும் எதிர்த்துக் குரல் கொடுப்பதில்லை. எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களுக்கு ஆதரவும் இல்லை. மாறாக, பலன் பெற்றவர்கள் அல்லது தயவினால் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், எதிர்ப்பாளர்களின் குரலையும் அடக்கி, அநியாயத்திற்கு ஆதரவாகப் பேசுகிறார்கள்.நல்லவர்களின் குரல்வளை நொறுங்கிப்போகும் என்பதைத் தான் மகாபாரத காலத்திலேயே நடந்த இந்த நிகழ்வு காட்டுகிறது.
ஆக, ஒருவன் நல்லவனாகவோ, தீயவனாகவோ பிறப்பது அவனது முன்வினைப் பயனாக உள்ளது என்பது உண்மை. முன்வினைப் பயன் காரணமாக, தீயவன் ஒருவன் நல்ல குடியில் பிறப்பதும், தீயவன் ஒருவன் நல்ல குடியில் பிறப்பதும் உண்டு.
No comments:
Post a Comment