தனிமை கழிய அறிவு தரவேணும்
-----
உலகில் மிக கொடுமையாகத் தோன்றுவது தனிமை. தனிமைப் படுத்தப்படுகிறவர்களின் உடலில் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் அதிகம் உண்டாகின்றன. அதிர்ச்சி ஊட்டும் உண்மை என்னவென்றால், உடல் பருமன் முதலியவற்றால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையை விட, தனிமையாய் இருப்பவர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகம் என்று சொல்லப்படுகிறது. தனியாக இருக்கும் மனிதர்கள் வாதத்தால் அதிகமாகத் துன்புறுகின்றனர். பாதிக்கப்படுகின்றனர். சமூகத்தில் இருந்து விலகி இருக்கும் இவர்களுக்கு விரைவான இறப்பும் நேரிடுகிறது.
தனிமை என்பது தனிமையாதல் அல்லது தனிமைப்படுத்திக் கொள்ளுதல் அல்லது தனிமைப்படுத்தப்படுதல் ஆகும். இது விரும்பத் தக்கதாக இருக்கலாம். தனிமைக்கும் தனிமைப்படுத்துதலுக்கும் இடையில் வேறுபாடு உள்ளது. இந்த இரு வார்த்தைகள் முறையே, மகிழ்ச்சி மற்றும் வலி எனப்படும்.
மோசமான உறவுகளிலிருந்தும், நட்புகளில் இருந்தும்தன்னைக் காத்துக் கொள்ளத் தனிமை தேவைப்படும். இன்றைய காலச் சூழலில், கொரோனா போன்ற தொற்றுநோய்களில் இருந்து காத்துக் கொள்ளவும் மனிதனுக்குத் தனிமை தேவைப்படுகிறது.
முதுமைக் காலத்தில் நாம் விரும்பிய ஒவ்வொன்றும் கொஞ்சம் கொஞ்சமாக நம்மிடம் இருந்து விலகிவிடும். "இல்லும் இளையோரும் மெல்ல அயலாக" என்பார் அருணகிரிநாதர். அதுவும் மரண பக்குவம் வருகின்ற நாள் நெருங்க நெருங்க,யாரும் தம்மை நெருங்கமாட்டார்கள். "வெம்பும் உயிருக்கு ஓர் உறவாய் வேளை நமனும் வருவானேல், தம்பி தமையர் துணை ஆமோ? தனயர் மனைவி வருவாரோ?" என்பார் வள்ளல் பெருமான்.
"தனிமை கொஞ்சம் வித்தியாசமானது. நாமே தனிமையைத் தேடிக் கொண்டால் அது இனிக்கும்.மற்றவர்கள் நமக்குக் கொடுத்தால் அது கசக்கும்." என்ற வரிகளை அண்மையில் படிக்க நேர்ந்தது. அதன் விளைவே இந்தப் பதிவு.
வாழ்க்கைப் பயணத்தில் இந்த உடம்பு இருக்கிற வரைக்கும் சிலர் கூடி ஒன்றுபடலாம். ஆனால், இந்த உடம்பை விட்டு வேறு உடம்பை இந்த உயிர் எடுக்கும்போதும், நரகம் சொர்க்கமாகிய அநுபவங்களைப் பெறும்போதும் இப்போது நமக்கு யார் துணையாக இருக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாகத் துணையாக இருக்க முடியாது. ஓரிடத்தில் துணையாக நிற்பவர் மற்றோரிடத்தில் துணையாக நிற்க இயலாது. சாலையில் வண்டியில் போகிற வரைக்கும் ஓட்டுநர் துணையாக இருப்பார். ஆற்றில் அவர் துணை பயன்படாது. ஒடம் ஒட்டியின் துணை வேண்டும். எத்தனை பணம் இருந்தாலும், மனிதக் கூட்டு இல்லாமல் காரியங்கள் தடைப்பட்டிருக்கின்றன. அங்கே பணம் இருந்தாலும், மக்கள் இல்லாமையினால் குறை நேருகிறது. மனைவியினால் செய்வதற்குரிய காரியம் சில.மக்களால் செய்வதற்குரிய காரியம் சில.குருவினால் கிடைக்கிற நலம் சில. இப்படி ஒவ்வொரு காரியத்திற்கும், ஒவ்வோர் இடத்திற்கும், ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றபடி துணைகள் அமைகின்றன.
எல்லாக் காலத்துக்கும், எல்லா இடத்திற்கும், எந்த நிலைக்கும் ஒத்தபடி நம்முடைய உயிருக்குத் துணையாக யாரேனும் வரக்கூடும் என்றால் அவர் நம்முடைய உயிரோடு ஒட்டியவராக இருக்க வேண்டும். உயிருடன் கலந்தவராக இருத்தல் வேண்டும். உடம்போடு கலப்பவர்கள் ஒத்து வரமாட்டார்கள். இப்போது நம்முடைய உயிரோடு ஒட்டியது உடம்பு என்று தோன்றுகிறது. ஆனால் இந்த உடலையும் உதைத்து விட்டு உயிர் தனியே போய்விடுகிறது. அப்போது இந்த உடம்பினால் நமக்குப் பயன் இல்லை. உயிரோடு என்றும் ஒட்டி,அது செல்லும் இடங்களில் எல்லாம் துணையாக நிற்பவர் யாரேனும் உண்டா என்று ஆராய்ந்தால், உயிருக்கு உயிராக இருக்கும் இறைவனே அத்தகைய பெரிய துணையாக வருவான். அவன்தான் எல்லாக் காலத்தும், எல்லா இடத்தும், எல்லா உயிர்களுக்கும், எந்த நிலையிலும் துணையாக நிற்பவன். அவன் நம்மைப் பற்றிக் கொண்டிருக்கிறான். அது போதாது. நாம் அவனை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும். அவனுடைய திருவடி யாருக்குத் துணையாகக் கிடைக்கிறதோ அவர்கள் என்றும் குன்றாத இன்பத்தை அடைவார்கள்.
தனிமையைத் தீர்த்துக் கொள்வதற்கு ஒரு தனித்துணை உண்டு. அது இறைவன்தான் என்று கண்டு, அந்த தனித் துணையை வேண்டினர் நமது அருளாளர்கள். இறைவனைத் "தனித் துணை" என்றார் மணிவாசகப் பெருமான். புறத்தே உள்ள பொன் பொருள் உறவுகள் போன்றவை நம்மை விட்டுச் சிறிது சிறிதாக விலகுவதால், புறத்தனிமை உண்டாகின்றது. அன்பு காட்டியவர் யாரும் இல்லாது போய், அன்பு காட்டுவார் யாரும் இல்லாத நிலையில், புறத் தனிமையை நினைத்தே, வருந்தி வருந்தி, உள்ளத் தனிமையும் கூடி வாட்டுகின்றது. இந்த, புறத் தனிமை, அகத் தனிமை ஆகிய இரு தனிமைகளும் மனித மனத்தை வெகுவாக வாட்டுகின்றன. வாட்டுகின்ற கொடுமையான தனிமையைப் போக்குவதற்கு உள்ள ஒப்பற்ற துணை இறைவன் திருவடிகளே ஆகும். எனவே, "என்னை உனது திருவடிகளில் சேர்த்து, எனது தனிமையைத் தீர்த்து அருள்வாயாக" என்று மணிவாசகப் பெருமான் பின்வருமாறு வேண்டுகின்றார்.
"ஒருவனே போற்றி! ஒப்பில்
அப்பனே போற்றி! வானோர்
குருவனே போற்றி! எங்கள்
கோமளக் கொழுந்து போற்றி!
"வருக" என்று என்னை நின்பால்
வாங்கிட வேண்டும் போற்றி!
தருகநின் பாதம் போற்றி!
தமியனேன் தனிமை தீர்த்தே". --- திருவாசகம்.
இதன் பொருள் ---
தனி முதல்வனே! உனக்கு வணக்கம். ஒப்பு இல்லாத உயிர்த் தந்தையே! உனக்கு வணக்கம். தேவர்களுக்குக் குருவானவனே! உனக்கு வணக்கம். எங்களுடைய அழகிய சோதியே! உனக்கு வணக்கம்! வருக என்று உன்னிடத்து என்னை அழைத்து ஏற்றுக்கொள்ள வேண்டும், உனக்கு வணக்கம். துணை ஏதும் இல்லாமல் நான் அனுபவிக்கும் (தாவிப் படரக் கொழுகொம்பு இல்லாமல் தவிக்கின்ற பாவியின் தனி மனமானது அனுபவித்து வரும் கொடுமையான) தனிமையை நீக்கி, உன்னுடைய திருவடித் துணையைத் தந்து அருளவேண்டும். உனக்கு வணக்கம்.
துணை எதுவும் இல்லாமல் தன்னந் தனியாக நாம் நிற்கிறோம். துணை இல்லை என்று சொல்வதைவிடத் துணை இருப்பதை அறிந்துகொண்டு பற்றிக் கொள்ளவில்லை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். அறிவு இல்லாதவன் என்று சொல்வதைவிட அறிவை வெளிப்படுத்திப் பயன்கொள்ளாதவன் என்று சொல்வது பொருத்தம். எல்லோரிடமும் அறிவு இருக்கிறது. ஆனால் அதை வெளிப்படுத்திப் பயன்கொள்பவர் சிலரே. கல்வி என்பது அந்த அறிவைத் தூண்டித் தீய குணங்களைக் களைந்து நற்குணங்களை மலரச் செய்கிறது. அதுபோல,பத்தி என்ற உணர்ச்சி இறைவனுடைய அருள் துணையை விளக்கமாக்கி நலம் செய்கிறது. அந்த உணர்ச்சி இல்லாதவர்கள், ஒவ்வொரு துணையாக நம்பி வாழ்ந்து அந்தத் துணைகள் எல்லாம் இறுதியில் பயன் அற்றுப் போக, 'நான் துணையில்லாமல், தனிமையில்நிற்கிறேனே' என்று வாடுவார்கள். அந்த நிலையில் இருந்து அருணகிரிநாதப் பெருமான், தனிமைப்படுத்தப்பட்ட மனமானது, தாவிப் படர ஒரு கொழுகொம்பு இல்லாத கொடியினைப் போலத் தவித்துத் துன்புறும். எனவே, திருவடித் தாமரையில் சேர்த்துக் காத்து அருளவேண்டும் என்கின்றார்.
"காவிக் கமலக் கழலுடன் சேர்த்து என்னைக் காத்தருளாய்!
தூவிக் குலமயில் வாகனனே! துணை ஏதும் இன்றித்
தாவிப்படரக் கொழுகொம்பு இலாத தனிக்கொடி போல்
பாவித் தனிமனம் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே". ---கந்தர் அலங்காரம்.
இதன் பொருள் ---
தேவரீரின் சிவந்த தாமரை மலர் போன்றவையும் கழலுடன் கூடிவையுமான திருவடிகளுடன் அடியேனைச் சேர்த்துக் காப்பாற்றி அருள்வீராக! இறகுகளுடன் கூடிய மேன்மையான மயிலை வாகனமாக உடையவரே! உதவி சிறிதும் இல்லாமல் தாவிப் படர்வதற்குக் கொழு கொம்பு இல்லாத தனித்த கொடியைப் போல பாவியாகிய அடியேனுடைய துணையற்ற மனமானது தளர்ந்து வாட்டமுற்றுத் துடிக்கின்றது.
எனது தனிமையானது கழியுமாறு மெய்யறிவைத் தந்து அருளவேண்டும் என்று அருணகிரிநாதர் ஒரு திருப்புகழில் வேண்டுகின்றார். எத்தனையோ அன்பு காட்டி நம்மால் உபசரிக்கப்படும் உறவினரும், அன்பு காட்டி நம்மை உபசரிக்கும் உறவினரும், மிகமிக அருமையாக நாம் கட்டிப் பாதுகாத்த மாளிகையும், இரவு பகலாகத் தேடி அமைத்த செல்வமும், அரிய பதவியும் ஆகிய எல்லாம் ஒரு கணத்தில் பிரிந்து அயலாகி விடுகின்றன. எத்தைனையோ காலமாகத் தேடி, அருமையிலும் அருமையாக வைத்துப் போற்றிய பொருள்கள் யாவும் நமக்கு அந்நியமாகப் போய்விடுகின்றன. அந்திம காலத்தில் எமன் ஒருவன்தான் ஒருவான். அவனது வருகை நமக்கு எவ்விதத்தும் இனிமையைத் தராது.
பல இலட்ச ரூபாய் செலவில் ஒருவன் ஒரு பெரிய மாளிகையைப் புதுக்கினான். சிறந்த கட்டில், ஆசனங்கள், மெத்தை, விளக்குகள், பாத்திரங்கள், பண்டங்கள் எல்லாவற்றையும் தொகுத்து வைத்தான். அவன் இறந்த பிறகு, எதிர் வீட்டில் போய் ஓர் ஏழை மகனாகப் பிறந்துவிட்டான். பிறகு, இந்த மாளிகையும் உடைமைகளும் அவனுக்குச் சொந்தமாக ஆகுமா? எதிர் வீட்டில் பிறந்தவனை இந்த வீட்டில் நுழையத் தான் அனுமதிப்பார்களா? இங்கிருந்த மனைவியுடன் தான் பேச முடியுமா? எல்லாம் இவனுக்கு அயலாகி விட்டன. எல்லாம் கனவாகிக் கழிந்தன. பல ஆண்டுகள் பாடுபட்டுத் தேடிய அத்தனையும் ஒரு நொடியில் அயலாகி விடுகின்றன. ஆதலால், இறை அருளைத் தேடாமல், பொருளையே தேடித் திரியக் கூடாது. தேடிய பொருளில் பற்று வைக்கவும் கூடாது. எல்லாம் இறைவன் தந்தது என்று கருதி அறவழியில் அவற்றைப் பகிர்ந்து தந்து, இறைவன் திருவருளைச் சிந்தித்து வந்தித்து ஆறுதலாக இருக்கவேண்டும். இப்படி வாழ்ந்தால், தனிமையும் இனிமையாகும்.
"பற்று அற்றால் தனிமையும் இனிமை.
பற்று வைத்தால் தனிமையே கொடுமை"
திருப்புகழைப் பார்ப்போம்.
"தமரும், அமரும் மனையும், இனிய
தனமும் அரசும் ...... அயல் ஆகத்
தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய ...... எறியாதே,
கமல விமல மரகத மணி
கனக மருவும் ...... இருபாதம்
கருத அருளி, எனது தனிமை
கழிய, அறிவு ...... தரவேணும்".
குமர! சமர முருக! பரம!
குலவு பழநி ...... மலையோனே!
கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி ...... மணவாளா!
அமரர் இடரும் அவுணர் உடலும்
அழிய அமர் செய்து ...... அருள்வோனே!
அறமும், நிறமும் மயிலும், அயிலும்,
அழகும் உடைய ...... பெருமாளே".
இதன் பொருள் ---
குமாரக் கடவுளே! போரில் வல்ல முருகப் பெருமானே! பரம்பொருளே! சிறந்த பழனிமலைப் பரமனே! கொடும் வேகமுடைய மதயானை வடிவாகிய மூத்தபிள்ளையாரை வரும்படிச் செய்து, வள்ளியம்மையை மணந்த மணவாளரே! தேவர்கள் துயரும் அசுரர்களுடைய உடல்களும் அழியுமாறு போர் புரிந்தருளியவரே! அறமும், ஒளியும், வேலும், மணியும், அழகும் படைத்த பெருமிதம் உடையவரே!
உறவினரும், விரும்புகின்ற மாளிகையும் இனிய செல்வமும் என்னைவிட்டு நீங்குமாறு, அஞ்சுதல் இல்லாத இயமன் வலிய பாசக் கயிற்றை எனது தலையைச் சுற்றி எறியாதவாறு, தாமரை மலர் போன்றதும் தூய்மையுடையதும் மரகதமணியும் பொன்னாபரணமும் பூண்டதும் ஆகிய உமது திருவடிகளை அடியேன் சிந்திக்குமாறு அருள்புரிந்து, உம்மைக் கூடாமல் நிற்கும் எனது தனித்த அவல நிலைமை தீர மெய்யறிவைத் தந்தருள்வீர்.
தனித்துணையாக உயிருக்கு எப்போது வருகின்ற இறைவன் இருக்க,அவனை நினைக்காமல், உலக வாழ்வில் செருக்குக் கொண்டு, தலையால் நடத்தல் கூடாது. ஆணவம் பிடித்து அலைபவனைப் பார்த்து "தலையால் நடக்கின்றான்" என்று சொல்லுவது வழக்கம். அவ்வாறு வாழ்ந்த என்னையும் விட்டுவிடல் ஆகாது என்கின்றர் மணிவாசகர்.
"தனித்துணை நீ நிற்க, யான் தருக்கித்
தலையால் நடந்த
வினைத் துணையேனை விடுதிகண்டாய்,
*வினையேனுடைய
மனத் துணையே!* என்தன் வாழ்முதலே! எனக்கு
எய்ப்பில் வைப்பே!
தினைத் துணையேனும் பொறேன் துயர்
ஆக்கையின் திண்வலையே". --- திருவாசகம்.
துயரத்தைத் தருகின்ற இந்த உடம்பு என்னும் உறுதியான வலையில் உயிரானது இருந்து கொண்டு, வெளிவர முடியாமல் தவிக்கின்றது. வினையை ஒழிக்கின்ற தனி (ஒப்பற்ற) துணையாக உள்ள இறைவனை நினைக்காமல், உலக வாழ்வில் செருக்கி, வினையை விளைக்கின்றவற்றை நினைத்தல் கூடாது. என்றால், அவற்றை மறந்து விடுதல் கூடாது என்பதல்ல. அவற்றில் பற்று வைக்காமல் வாழுதல் வேண்டும்.
இறையருளால் மட்டுமே கிடைக்கக் கூடிய மெய்யறிவு பெற்று இருந்தால், மனத்துணையாக இறைவன் தமது உள்ளத்தில் வீற்றிருப்பதால், வாழும் காலத்தில் தனிமையும் கூட இனிமையாகும். அதை அருளுமாறு வேண்டுகின்றார் அருணகிரிநாதர். "இருபாதம் கருத அருளி, எனது தனிமை கழிய அறிவு தரவேணும்" என்றார். தனிமையைக் கழித்துக் கொள்ளக் கூடிய அறிவு நம்மிடத்தில் இல்லை. அதனால், துன்பப்படுகிறோம். அந்த அறிவு இறையருளால் நமக்கு வாய்க்கவேண்டும் என்பதால், தனிமை கழிய அறிவு தர வேண்டும் என்றார். ஏன் அந்த அறிவு வேண்டும்? என்றால், தனித்துணையாக இருக்கும் இறைவனை கருத்தில் இருத்த வேண்டும் என்பதற்காக.
No comments:
Post a Comment