24. எட்டி பழுத்து என்ன!

 

"கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்

     கனிகள்உப காரம் ஆகும்;

சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்

     இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார்

மட்டுலவும் சடையாரே! தண்டலையா

     ரே! சொன்னேன்! வனங்கள் தோறும்

எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார்

     வாழ்ந்தாலும் என்உண் டாமே?"


இதன் பொருள் ---

மட்டு உலவும் சடையாரே - மணம் கமழும் திருச்சடையை உடையவரே! தண்டலையாரே -  திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் "நீள்நெறி" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே! 

வனங்கள் தோறும் எட்டிமரம் பழுத்தாலும் என் உண்டாம் - காடுகள் எங்கும் எட்டிமரம் பழுப்பதனாலும் என்ன பயன் உண்டாகும்? 

        ஈயாதார் வாழ்ந்தாலும் என் உண்டாம் - (நாடுகள் எங்கும்) கொடைப் பண்பு இல்லாத உலோபிகள் வாழ்வதனாலும் என்ன பயன் உண்டாகும்? 

கட்டு மாங்கனி  வாழைக் கனி பலவின் கனிகள் உபகாரம் ஆகும் - (பழுப்பதற்காகக்) கட்டி வைக்கும் மா, வாழை,  பலா ஆகிய  இவற்றின்  பழங்கள் (மற்றவர்க்குப்) பயன்படும்; 

அவ்வணம் சிட்டரும் தேடும் பொருளையெல்லாம் இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் - (அதுபோலவே) நல்லோரும் தாம் (பாடுபட்டுத்) தேடும் பொருள் முழுதையும் (புதைத்து வைத்துக் கேடு கெட்டுப் போகாமல்) இல்லை என்று வந்து இரப்போர்க்கே அளித்துச்  சிறப்புடன் வாழ்வார்கள்.

விளக்கம் ---

      ‘எட்டி பழுத்தால் என்? ஈயாதார் வாழ்ந்தால் என்?' என்பன பழமொழிகள். உலகத்தில் எத்தனையோ பணக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாவருமே ஒரே வகையில் சிரமப்பட்டுப் பொருளை ஈட்டுகிறார்கள் என்று சொல்வதற்கு இல்லை. உண்மையைச் சொல்லப் போனால் அவர்களைக் காட்டிலும் மிக்க உழைப்பை மேற்கொள்கிற மக்கள் வறுமை நிலையில் இருக்கிறார்கள். கல்வி ஆற்றல் உடையவர்கள் பொருள் உடையவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்வதற்கு இல்லை. ஒரே வகையில் திட்டமிட்டு ஒரே முறையில் இரண்டு பேர்கள் உழைத்து வருகிறார்கள். ஆனால், இருவருக்கும் ஒரே வகையில் பொருள் கிடைப்பதில்லை.  ஒருவன் சிறந்த செல்வனாக இருக்க, மற்றொருவன் கையில் உள்ளதையும் இழந்து வறியவனாகப் போகிறான். நினைத்ததை நினைத்தபடியே திட்டமாக ஈட்டுகிற வாய்ப்பு, பொருள் முயற்சியில் கிடைப்பது இல்லை. கணக்கும் முறையும் தெரிந்தால் பொருளை அடையலாம் என்றால், எல்லோருமே பொருளை ஈட்டிவிடுவார்கள். நம்முடைய அறிவுக்கு எட்டாத ஒன்று இந்தப் பொருளை ஈட்டுவதற்குத் துணையாக இருக்கிறது. பொருள் குவிவதும், அழிவதும் அவரவருடைய முன்னைவினைப் பயனால் நிகழ்கின்றது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அந்த முன்னை வினைப்பயனை நமக்கு ஊட்டுவது இறைவன். எனவே, ஒருவன் பெற்ற செல்வம் இறையருளால் வந்தது. 

"பிறக்கும் போது கொண்டு வந்தது இல்லை, பிறந்து மண் மேல் 

இறக்கும் போது கொண்டு போவது இல்லை, இடை நடுவில் 

குறிக்கும் இந்த செல்வம் சிவன் தந்தது என்று, கொடுக்க அறியாது 

இறக்கும் குலாமருக்கு என் சொல்வேன் கச்சி ஏகம்பனே"

என்கின்றார் பட்டினத்து அடிகளார்.

ஆகவே, நாம் ஈட்டிய பொருள் நம்முடைய முயற்சியால் வந்தது என்று நினைப்பதே தவறு. நம்முடைய ஆற்றல் நமக்கு உதவுகிறது என்று எண்ணுவதும் தவறு. நம்மையெல்லாம் கருவியாக்கி ஏதோ ஒர் ஆற்றல் இயக்குகிறது என்ற நினைவு வந்தால், இந்தப் பொருள் நாம் ஈட்டியது அல்ல என்ற நினைவு உண்டாகும். எல்லாம் இறைவன் திருவருளால் வந்தது என்ற நினைவு வரவேண்டும். உலகிலுள்ள எல்லாப் பொருளையும் ஆட்டி வைத்து, அவரவர்களுடய புண்ணிய பாவப் பயன்களுக்கு ஏற்ற அனுபவத்தைக் கூட்டி வைத்து, அருள் செய்கிற பரம்பொருள் ஒன்று உண்டு என்ற நினைவு வந்தால், நம்முடைய நெஞ்சம் கசியும். பரம்பொருளின் நினைவை உடையவர்கள் அதற்கு முன்பு எவ்வளவு கடுமையான உள்ளம் உடையவர்களாக இருந்தாலும், இறை அன்பு முதிர முதிர அவர்கள் உள்ளம் நெகிழும்.

மரத்தில் மாங்காய் இருக்கிறது. அது பார்க்கப் பச்சையாக இருக்கிறது. அதன் சுவையோ புளிப்பு. மரத்திலிருந்து அதைப் பறித்தால், மரத்தினின்றும் பிரிவதற்கு மனம் இல்லாமல் காய் கண்ணீர் வடிப்பதுபோலப் பால் வடிகிறது அந்தக் காய் முதிர்ந்து பழுக்கும்போது, அதனிடத்தில் ஒரு மாற்றம் நிகழ்கிறது. பசுமை நிறம் மாறி, பால் வற்றி, மஞ்சள் நிறம் உண்டாகிறது. கடுமை மாறி நெகிழ்ச்சி ஏற்படுகிறது. புளிப்பு மாறி இனிப்பு உண்டாகிறது. வேண்டினாலும் வேண்டாவிட்டாலும் மரத்திலுள்ள பிடிப்பு மாறி, அது தானே உதிர்ந்து விடுகிறது. 

தன்னிடத்து உள்ள பொருள்களை எல்லாம் தன்னுடையவை என்று பற்றிக் கொண்டு, தன்னுடைய முயற்சியால் எல்லாவற்றையும் ஈட்டியதாக எண்ணி இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் மனிதனுக்கு இறைவனிடத்தில் அன்பு உண்டானால், இத்தகைய மாற்றம் நிகழும். அவனுடைய உள்ளம் ஆருயிர் எல்லாவற்றிலும் அன்பு உடையது ஆகும். அதன் பயனாக உலகியல் பொருள்களிலுள்ள பற்று மெல்ல மெல்ல நழுவும். தனது பொருளால் எல்லோருக்கும் பயன் உண்டாக வேண்டுமென்ற நயம் ஏற்படும். "பயன் மரம் உள்ளூர்ப் பழுத்து அற்றால், செல்வம் நயன் உடையான்கண் படின்" என்றார் திருவள்ளுவ நாயனார்.


73. செல்வம் நிலையற்றது


"ஓடமிடும் இடமது மணல்சுடும், சுடும்இடமும்

     ஓடம்மிக வேநடக்கும்;

உற்றதோர் ஆற்றின்நடு மேடாகும், மேடெலாம்

     உறுபுனல்கொள் மடுவாயிடும்;


நாடுகா டாகும்,உயர் காடுநா டாகிவிடும்;

     நவில்சகடு மேல்கீழதாய்

நடையுறும், சந்தைபல கூடும்,உட னேகலையும்;

     நல்நிலவும் இருளாய்விடும்;


நீடுபகல் போயபின் இரவாகும், இரவுபோய்

     நிறைபகற் போதாய்விடும்;

நிதியோர் மிடித்திடுவர், மிடியோர் செழித்திடுவர்;

     நிசமல்ல வாழ்வுகண்டாய்!


மாடுமனை பாரிசனம் மக்கள்நிதி பூடணமும்

     மருவுகன வாகும் அன்றோ?

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."


இதன் பொருள் ---

மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

ஓடம் இடும் இடமது மணல் சுடும் - ஓடத்தை நிறுத்தி வைத்திருக்கும் (நீர் நிறைந்த பள்ளமான) இடம் (நீர் வற்றி) மணல் சுடும்படி (மேடாக) மாறும்; சுடும் இடமும் ஓடம் மிக நடக்கும் - (மேடாகிய) மணல் சுடும்படியான இடமும் (பள்ளமாகி நீர் நிறைவாய்) ஓடம் மிகுதியாக ஓடும்; 

உற்றது ஓர் ஆற்றின் மடு மேடாகும் - நீருள்ள ஓர் ஆற்றின் பள்ளம் மேடாக மாறும்; மேடு எலாம் உறுபுனல்கொள் மடு ஆயிடும் - மேடுகள் யாவும் மிகுதியான நீரைக்கொண்ட மடுவாக மாறிவிடும்; 

நாடு காடாகும் - (மக்களிருக்கும்) நாடு (விலங்குகள் வாழும்) காடாகும்; உயர்காடு நாடு ஆகிவிடும் - (மரங்கள்) உயர்ந்த காடு (மக்களிருக்கும்) நாடாக மாறி விடும்; 

நவில் சகடு மேல்கீழதாய் நடையுறும் - சொல்லப்படும் (வண்டியின்) சக்கரம் மேலும் கீழுமாக மாறிமாறிச் சுற்றிக்கொண்டு செல்லும்; 

பல சந்தை கூடும் உடனே கலையும் - பலவகைச் சந்தைகளும் கூடுவதும் கலைவதுமாகவே இருக்கும்; 

நல்நிலவும் இருளாய் விடும் - நல்ல நிலவின் ஒளியும் (மாறி) இருளாகி விடும்; 

நீடு பகல் போய பின் இரவாகும் - பெரிய பகல் கழிந்து இரவு வரும்; இரவு போய் நிறை பகற்போதாய் விடும் - இரவு நீங்கி ஒளி நிறைந்த பகற்காலம் வந்துவிடும்; 

 (உலக நிகழ்வுகள் இவை யாவும் போலவே)

நிதியோர் மிடித்திடுவர் - செல்வர் வறியராவர்; மிடியோர் செழித்திடுவர் - வறியோர் செல்வராவர்; வாழ்வு நிசம் அல்ல - (ஆகையால்) வாழ்க்கை நிலையானது அல்ல.

மாடு, மனை, பாரிசனம், மக்கள்,  நிதி, பூடணமும் மருவு கனவு ஆகும் அன்றோ? - ஆநிரையும், வீடும், மனைவியும், உறவினரும், மக்களும், செல்வமும், அணிகலன்களும் கனவைப் போலவே மாறிவிடும் அன்றோ?

நிலையற்ற செல்வத்தைக் கொண்டு,  அறம் பல புரிந்து, நிலையான வீடுபேற்றைப் பெற முயலவேண்டும் என்பது கருத்து.


89. தத்துவத் திரயம்.

 


"பூதம்ஓர் ஐந்துடன், புலன்ஐந்தும், ஞானம்

     பொருந்தும்இந் திரியம் ஐந்தும்,

  பொருவில்கன் மேந்திரியம் ஐந்தும், மனம் ஆதியாம்

     புகலரிய கரணம் நான்கும்,


ஓதினோர் இவை ஆன்ம தத்துவம் எனச் சொல்வர்;

     உயர்கால நியதி கலையோடு

  ஓங்கிவரு வித்தை, ராகம், புருடன் மாயை என்று

     உரைசெய்யும் ஓர் ஏழுமே


தீதில்வித் யாதத்வம் என்றிடுவர்; இவையலால்

     திகழ்சுத்த வித்தை ஈசன்,

  சீர்கொள்சா தாக்கியம், சத்தி, சிவம் ஐந்துமே

     சிவதத்வம் என்று அறைகுவார்;


ஆதிவட நீழலிற் சனகாதி யார்க்கருள் செய்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே."


இதன் பொருள் ---

ஆதி வடநீழலில் சனகாதியர்க்கு அருள்செய்  அண்ணலே - முற்காலத்தில் கல் ஆலமரத்தின் நிழலில் வீற்றிருந்து சனகாதியர் நால்வருக்கு அருள்புரிந்த பெரியோனே!, 

அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 

பூதம் ஓர் ஐந்து - ஓர் ஐம்பூதங்களும், உடன் புலன் ஐந்தும் - (அவற்றுடன்) ஐம்புலன்களும், ஞானம் பொருந்தும் இந்திரியம் ஐந்தும் - ஞான இந்திரியங்கள் ஐந்தும், பொரு இல் கன்ம இந்திரியம் ஐந்தும் - உவமையில்லாத கன்ம இந்திரியங்கள் ஐந்தும், மனம் ஆதி ஆம் புகல் அரிய கரணம் நான்கும் - மனம் முதலிய சொல்லற்கரிய கரணங்கள் நான்கும், இவை ஆன்ம தத்துவம் என ஓதினோர் சொல்வர் - இவற்றை ஆன்ம தத்துவம் என்று கற்றறிந்தோர் கூறுவர்;

உயர்காலம் நியதி கலையோடு ஒங்கிவரு வித்தை ராகம் புருடன் மாயை என்று உரைசெய்யும் ஓரேழுமே தீது இல் வித்யா தத்துவம் என்றிடுவர் - உயர்வாகிய காலம், நியதி, கலைகளோடு கூறப்படும் ஏழினையும் குற்றமற்ற வித்தியாதத்துவம் எனக் கூறுவர்;

இவை அலால் - இவையல்லாமல், 

திகழ் சுத்தவித்தை, ஈசன், சீர்கொள் சாதாக்கியம், சத்தி, சிவம் ஐந்துமே சிவ தத்துவம் என்று அறைகுவார் - விளங்கும் சுத்தவித்தை, ஈசன், சிறப்புடைய சாதாக்கியம் சத்தி, சிவம் (ஆகிய) ஐந்தினையும் சிவ தத்துவம் என்று கூறுவர்.


விளக்கம் ---

பூதம் ஐந்து : மண், நீர், அனல், வளி, வான். 

புலன் ஐந்து: சுவை , ஒளி, ஊறு, ஒசை, நாற்றம். 

ஞான இந்திரியம் (அறிவுப் பொறி) ஐந்து : மெய், வாய், கண், மூக்கு, செவி. 

கன்ம இந்திரியம் (தொழிற்பொறி) ஐந்து : வாக்கு, பாதம், பாணி(கை), பாயுரு (எருவாய்), உபத்தம் (கருவாய்) 

கரணம் நான்கு: மனம், புத்தி, சித்தம், அகங்காரம். 

ஆன்மதத்துவம் - உயிருடன் சேர்ந்தவை : இருபத்துநான்கு தத்துவங்கள். வித்தியா தத்துவம் : கலையுடன் சேர்ந்தவை ஏழு தத்துவங்கள். சிவதத்துவம் : இறையுடன் சார்ந்தவை : ஐந்து தத்துவங்கள், ஆக தத்துவங்கள் முப்பத்தாறு.


23. நாய் அறியாது, ஒரு சந்திப் பானையின் அருமையை

 


"தாயறிவாள் மகளருமை! தண்டலைநீள்

     நெறிநாதர் தாமே தந்தை

ஆயறிவார் எமதருமை! பரவையிடம்

     தூதுசென்ற தறிந்தி டாரோ?

பேயறிவார் முழுமூடர்! தமிழருமை

     அறிவாரோ? பேசு வாரோ?

நாயறியா தொருசந்திச் சட்டிப்பா

     னையின்அந்த நியாயந் தானே!"


இதன் பொருள் ---

மகள் அருமை தாய் அறிவாள் - மகளின் அருமையைப் பெற்ற தாயே அறிவாள்,  எமது அருமை தண்டலை நீள்நெறிநாதர் தாமே தந்தையாய் அறிவார் - (அடியவரான) எமது அருமையைத் திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் 'நீள்நெறி' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள இறைவரே  தந்தையாகி அறிவார், 

பரவையிடம் தூது சென்றது அறிந்திடாரோ - சிவபெருமான்  (தம் அடியவரான நம்பிஆரூரின் வேண்டுகோளுக்கு இரங்கி)) பரவை நாச்சியாரிடம் இரவு முழுதும் தூது நடந்ததை உலகினர் அறியமாட்டாரோ?, 

முழுமூடர் பேய் அறிவார் - முற்றினும்  பேதையர் பேய்த் தன்மையையே அறிவார், தமிழ் அருமை அறிவாரோ - தமிழின் அருமையை உணர்வாரோ?, பேசுவாரோ - (தமிழைப் பற்றி) ஏதாவது உரைப்பாரோ? (ஒன்றும் செய்யார்). 

ஒரு சந்திச் சட்டிப் பானையின் அந்த நியாயம் நாய் அறியாது - ஒருபோது(க்குச் சமைக்கும்) சட்டிப் பானையின் அந்த உயர்வை  நாய் அறியாது.

விளக்கம் ---

     "தந்தையாய்த் தாயும் ஆகி, தரணியாய், தரணி உள்ளர்க்கு எந்தையும் என்ன நின்ற" என்றும், "அம்மை நீ, அப்பன் நீ" என்றும் வரும் அப்பர் தேவாரப் பாடல் வரிகளையும், "தாயும் நீயே, தந்தை நீயே, சங்கரனே" என வரும் திருஞானசம்பந்தர் திருவாக்கையும், "தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்" என வரும் வள்ளல்பெருமான் அருள் வாக்கையும் கொண்டு, உயிர்களுக்குத் தாயும் தந்தையுமாய் விளங்குகின்றவன் இறைவன் என்பது தெளியப்படும். எனவே,  ‘தண்டலை நீள்நெறி நாதர் தாமே தந்தையாய் அறிவர் எமது அருமை' என்றார். 

"தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம்" என்று சிவபரம்பொருளே திருவாய் மரல்ந்து அருளியபடி, "தம்பிரான் தோழர்" என்று சுந்தரமூர்த்தி நாயனார் உலகவரால் வழங்கப்பட்டார். தனது அடியவரும் தோழரும் ஆகிய அவரின்  வேண்டுகோளுக்கு இரங்கிப் பரவை நாச்சியாரின் ஊடலைத் தவிர்க்கத் தூது சென்றது அடியவரின் அருமையையும் தமிழின் அருமையையும் உணர்ந்தே. ஆகையால் ‘அறிந்திடாரோ?'  என்றார். "பரவையார் ஊடலை மாற்ற ஏவல் ஆளாகி இரவெலாம் உழன்ற இறைவனே" என்று பட்டினத்து அடிகளார் பாடுவார்.

முழுமூடர் பேய்த் தன்மை உடையவர். "கொடிறும் பேதையும் கொண்டது விடாது" என்பது மணிவாசகம். பற்றியதை விடாது பேய். அன்புக்கு இரங்காது பேய். விரட்டினால் விட்டு விலகிச் செல்லும். முழுமூடர் அச்சத்திற்காகக் கொடுப்பரே, அன்றித் தமிழின் அருமை அறிந்து  கொடுக்கமாட்டார். ‘கொல்லச் சுரப்பதாம் கீழ்'என்றது நாலடியார்.

"இரவலர் கன்றாக ஈவார் ஆவாக

விரகிற் சுரப்பதாம் வண்மை;- விரகின்றி

வல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய்வைத்துக்

கொல்லச் சுரப்பதாங் கீழ்." -- நாலடியார்.

இதன் பொருள் ---

இரவலர் கன்றாக ஈவார் ஆவாக விரகின் சுரப்பதாம் வண்மை - இரப்போர் கன்றுகளை ஒப்பக் கொடுப்போர் ஆன்களை (பசுக்களை) ஒப்பப் பூரிப்புடன் குறையாது அளிப்பதே கொடை எனப்படும். விரகு இன்றி, வல்லவர் ஊன்ற வடி ஆபோல் வாய் வைத்துக் கொல்லச் சுரப்பதாம் கீழ் - அத்தகைய உயிர்க் கிளர்ச்சி இல்லாமல், கறக்க வல்லவர் தமது விரல்களை அழுத்தி நோவுண்டாக்க, அது பொறாது பாலை ஒழுகச் செய்யும் பசுக்களைப்போல் சூழ்ச்சி உடையார், பலவகையிலும் வருத்தினால், அது பொறாது கீழ்மக்கள் தம்பொருளைச் சொட்டுவோர் ஆவர்.

ஒரு சந்திப் பானை : நோன்புக்குச் சமைக்க வேண்டித் தனியே வைத்திருக்கும் சமையல் கலம்.  நாய்க்கு  எல்லாப்  பானையும்  ஒரே  மாதிரியாகத் தான் மதிப்புப் பெறும். அவ்வாறே மூடர் யாவரையும் ஒரு  தன்மையராகவே கருதுவர். ‘நாய் அறியுமோ ஒருசந்திப் பானையை?' ‘பெற்றவள் அறிவாள் பிள்ளை அருமை' என்பன பழமொழிகள். ஒருசந்தி - ஒருபோது.


72. மாமனார் வீட்டில் மருமகன் நிலை

 


"வேட்டகந் தன்னிலே மருகன்வந் திடுமளவில்

     மேன்மேலும் உபசரித்து

விருந்துகள் சமைத்துநெய் பால்தயிர் பதார்த்தவகை

     வேண்டுவ எலாமமைப்பார்;


ஊட்டமிகு வர்க்கவகை செய்திடுவர்; தைலம்இட்டு

உறுதியாய் முழுகுவிப்பார்;

ஓயாது தின்னவே பாக்கிலை கொடுத்திடுவர்;

     உற்றநாள் நாலாகிலோ,


நாட்டம்ஒரு படியிரங் குவதுபோல் மரியாதை

     நாளுக்கு நாள்குறைவுறும்;

நகைசெய்வர் மைத்துனர்கள்; அலுவல்பார் போஎன்று

     நாணாமல் மாமிசொல்வாள்;


வாட்டமனை யாளொரு துரும்பாய் மதிப்பள்; அவன்

     மட்டியிலும் மட்டிஅன்றோ?

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமர! ஈசனே."


இதன் பொருள் ---

மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

வேட்ட அகம் தன்னிலே மருகன் வந்திடும் அளவில் - மனைவியின் தந்தை வீட்டில் மருமகன் வந்தவுடன், மேன்மேலும் உபசரித்து - மேலும் மேலும் ஆதரவு காட்டி, விருந்துகள் சமைத்து - புதிய உணவுகளைச் சமைத்து, நெய்பால் தயிர் பதார்த்த வகை வேண்டுவ எலாம் அமைப்பார் - நெய்யும் பாலும் தயிரும் கறிவகைகளுமாக விரும்பியவற்றை யெல்லாம் செய்துவைப்பார்கள்; 

ஊட்டம் மிகு வர்க்க வகை செய்து இடுவர் - உடலுக்கு வலிமை தரும் சிற்றுண்டி வகைகளைச் சமைத்துக் கொடுப்பார்கள்; 

தைலம் இட்டு உறுதியாய் முழுகுவிப்பார் - எண்ணெய் தேய்ப்பித்து நலம் பெற நீராட்டுவார்கள்; 

ஓயாது தின்னவே பாக்கு இலை கொடுத்திடுவர் - தின்பதற்குத் தொடர்ச்சியாக வெற்றிலையும் பாக்கும் அளிப்பார்கள்; 

உற்ற நாள் நாலாகிலோ - (அங்குத்) தங்கிய நாட்கள் நான்கு ஆகிவிட்டால், 

நாட்டம் ஒருபடி இறங்குவதுபோல் நாளுக்கு நாள் மரியாதை குறைவுறும் - அவனுக்குச் செய்யும் ஆதரவு ஒவ்வொரு வகையாகக் குறைவது போல, மதிப்பும் ஒவ்வொரு நாளாகக் குறையும்; 

மைத்துனர்கள் நகை செய்வர் - மைத்துனர்கள் எல்லோரும் இகழ்ந்து பேசுவர்; 

மாமி அலுவல் பார் போ என்று நாணாமல் சொல்வாள் - மனைவியின் தாயானவள், 'சென்று ஏதாவது வேலை செய்' என்று (முன் இருந்து) வெட்கம் இல்லாமல் விளம்புவாள்; 

வாட்ட மனையாள் ஒரு துரும்பாய் மதிப்பள் - அழகு மிக்க மனைவியும் அவனை ஒரு துரும்பு போல நினைப்பள்; 

அவன் மட்டியிலும் மட்டி அன்றோ? - (ஆகையால்) அவன் பேதையிலும் பேதை அல்லனோ?

‘விருந்தும் மருந்தும் மூன்றுநாள்.'   என்று பெரியோர் கூறுவர்.


88. பலவகை அறிவுரைகள்

 

"தாம்புரி தவத்தையும் கொடையையும் புகழுவோர்

     தங்களுக் கவைத ழுவுறா;

  சற்றும்அறி வில்லாமல் அந்தணரை நிந்தைசெய்

     தயவிலோர் ஆயுள் பெருகார்;


மேம்படு நறுங்கலவை மாலைதயிர் பால்புலால்

     வீடுநற் செந்நெல் இவைகள்

  வேறொருவர் தந்திடினும் மனுமொழி யறிந்தபேர்

     விலைகொடுத் தேகொள் ளுவார்;


தேன்கனி கிழங்குவிற கிலையிவை யனைத்தையும்

     தீண்டரிய நீசர் எனினும்

  சீர்பெற அளிப்பரேல் இகழாது கைக்கொள்வர்,

     சீலமுடை யோர்என் பரால்;


ஆன்கொடி யுயர்த்தவுமை நேசனே! ஈசனே!

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

ஆன் கொடி உயர்த்த உமை நேசனே - விடைக் கொடியை உயர்த்திய உமையன்பனே!  ஈசனே - செல்வத்தை அளிப்பவனே!, அண்ணலே - பெரியோனே!, அருமை மதவேள் - எம் அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

தாம் புரி தவத்தையும் கொடையையும் புகழுவோர் தங்களுக்கு அவை தழுவுறா - தாங்கள் செய்த தவத்தினையும் ஈகையையும் தாமே புகழ்ந்து கூறிக் கொள்வோருக்கு அவை கிடையாமல் போய்விடும்;

சற்றும் அறிவு இல்லாமல் அந்தணரை நிந்தை செய் தயவு இலோர் ஆயுள் பெருகார் - சிறிதும் அறியாமல் அந்தணரைப் பழிக்கும் இரக்கம் அற்றவருக்கு வாழ்நாள் குறையும்; 

மேம்படு நறுங் கலவை, மாலை, தயிர், பால், புலால், வீடு. நல் செந்நெல் இவைகள் - உயர்ந்த மணமிக்க கலவைச் சந்தனம், மாலை, தயிர், பால், ஊன், வீடு, நல்ல செந்நெல் ஆகிய இவற்றை, வேறு ஒருவர் தந்திடினும் மனுமொழி அறிந்த பேர் விலை கொடுத்தே கொள்ளுவார் - மற்றொருவர் கொடுத்தாலும், மனு கூறிய முறையை அறிந்தவர்கள் விலை கொடுத்துத் தான் வாங்குவார்கள்;

தேன், கனி, கிழங்கு, விறகு, இலை இவை அனைத்தையும் தீண்ட அரிய நீசர் எனினும் சீர் பெற அளிப்பரேல் - தேனையும், கனியையும், கிழங்கையும், விறகையும், இலையையும் இவை (போன்ற) யாவற்றையும் தீண்டத் தகாத  இழிந்தோரானாலும் நேர்மையோடு கொடுத்தாரானால், சீலம் உடையோர் இகழாது கைக் கொள்வர் - ஒழுக்கம் உடையோர் பழிக்காமல் ஏற்றுக்கொள்வர்.


விளக்கம் ---

தன்னைத் தானே ஒருவன் புகழ்ந்து கூறுதல் ஒருவனுக்கு அழிவைத் தரும் என்கிறார் திருவள்ளுவ நாயனார். "அமைந்து ஆங்கு ஒழுகலான், அளவு அறியான், தன்னை வியந்தான் விரைந்து கெடும்" என்னும் திருக்குறளைக் காண்க. சூழல் அமைந்தபடி வாழாதவனும், வலிமைகளின் அளவை அறியாதவனும், தன்னைத் தானே மதித்துக் கொண்டவனும் விரைவில் கெடுவான் என்கின்றார் நாயனார்.  பின்வரும் பாடல்களைக் கருத்தில் கொள்க.

"தமரேயும் தம்மைப் புகழ்ந்து உரைக்கும் போழ்தில்

அமராது அதனை அகற்றலே வேண்டும்;

அமையாரும் வெற்ப! அணியாரே தம்மைத்

தமவேனும் கொள்ளாக் கலம்." --- பழமொழி நானூறு.

இதன்பொருள் ---

அமை அரும் வெற்ப - மூங்கில்கள் நிறைந்த மலை நாடனே!, கொள்ளாக் கலம் தமவேனும் - தமக்கு ஏற்றதாக இல்லாத பொற்கலன்கள் தம்முடையதாயினும், தம்மை அணியார் - மக்கள் அவற்றை அணிந்து கொண்டு தம்மை அணிபெறச் செய்யார். (அதுபோல) தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில் - தம்மைப் புகழ்ந்து கூறுமிடத்து, தமரேயும் அமராததனை அகற்றலே வேண்டும் - சுற்றத்தாரேயானாலும் தமக்குப் பொருந்தாதனவற்றைக் கூறுவரேல் அவற்றை அவர் சொல்லாதவாறு விலக்குதலையே ஒருவன் விரும்புதல் வேண்டும்.

'அணியாரே தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம்' என்பது பழமொழி. தமக்குப் பொருந்தாத புகழ்ச்சி உரையை ஏற்றல் கூடாது.


"தாயானும் தந்தையா லானும் மிக(வு)இன்றி

வாயின்மீக் கூறும் அவர்களை ஏத்துதல்

நோயின்(று) எனினும் அடுப்பின் கடைமுடங்கும்

நாயைப் புலியாம் எனல்."

இதன் பொருள் ---

தாயினால் ஆயினும், தந்தையினால் ஆயினும் யாதானும் ஒரு சிறப்புக் கூறப்படுதல் இல்லாமலே, தனது வாயினாலேயே தன்னைப் புகழ்ந்து கூறிக்கொள்ளும் தற்புகழ்ச்சியாளர்களை, மற்றவர்களுக் புகழ்ந்து கூறுதல் என்பது, புகழ்பவருக்கு ஒரு துன்பமும் தருவது இல்லை. என்றாலும், அவ்வாறு கூறுவது அடுப்பின் ஓரத்திலே முடங்கிக் கிடக்கும் நாயை பார்த்து, புலி என்று சொல்வது பொலப் பொருத்தம் இல்லலாத புகழ்ச்சியே ஆகும் அது. (குடிப் பெருமை இல்லாதவர் உயர்ந்த பண்பினை உடையவர் ஆதல் இல்லை. அவருடைய போலித் தோற்றத்தைக் கண்டு புகழ்வது எல்லாம் பொய்யான புகழ்ச்சியே ஆகும்.

 

"ஒன்னார் அடநின்ற போழ்தின்,ஒருமகன்

தன்னை எனைத்தும் வியவற்க;--- துன்னினார்

நன்மை இலராய் விடினும்,நனிமலராம்

பன்மையில் பாடு உடையது இல்." --- பழமொழி நானூறு.

இதன் பொருள் --- 

    ஒன்னார் அட நின்ற போழ்தின் - பொருந்தாத பகைவரிடத்தில் போரிடும்போது, தம்மைக் கொல்ல நின்ற பொழுதில், ஒரு மகன் தன்னை எனைத்தும் வியவற்க - வீரத்தில் மிக்கவனாக இருந்தாலும், தனித்து நின்ற ஒருவன், தன்னை எத்துணையும் வியந்து கூறுதல் கூடாது. துன்னினார் நன்மையிலராய்விடிலும் - கொல்லும் பொருட்டுச் சூழ்ந்து நின்றவர் வீரத்தால் நன்மையிலராய் நின்றாராயினும். நனி பலவாம் பன்மையில் பாடுடையது இல் - மிகப்பலராய் இருத்தலை விட வலிமையுடையது ஒன்று இல்லை.

 

"கற்(று)அறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்,

பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பார்;- தெற்ற

அறைகல் அருவி அணிமலை நாட!

நிறைகுடம் நீர்தளும்பல் இல்."  --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

      அறைகல் அருவி அணிமலை நாட - பாறைக் கற்களினின்றும் இழிகின்ற அருவிகளை (மாலையாக) அணிந்த மலைநாட்டை உடையவனே!, நிறைகுடம் நீர் தளும்பல் இல் - நீர் நிறைந்த குடம் ஆரவாரித்து அலைதல் இல்லை, (அதுபோல) கற்று அறிந்தார் கண்ட அடக்கம் - நூல்களைக் கற்று அவைகளின் உண்மைகளை அறிந்தவர்கள் தமது வாழ்வில் அமைத்துக் கண்டனவே அடக்கத்திற்கு உரிய செயல்களாம். அறியாதார் - கற்றதோடு அமைந்து நூல் உண்மையையும் அநுபவ உண்மையையும் அறியாதார், பொச்சாந்து தம்மைத் தெற்றப் புகழ்ந்து உரைப்பர் - மறந்து தங்களைத் தெளிவாக வாயாரப் புகழ்ந்து பேசுவர்.

    நிறைகுடம் நீர் தளும்பாது. குறைகுடமோ, தளும்பித் தளும்பி, இருக்கின்ற நீரும் இல்லாமல் போகும். கற்றறிந்தவர்கள் தங்களைப் புகழ்ந்து பேசமாட்டார்கள். அறிவில்லாதவர்கள் தம்மைத் தாமே பெரிதும் மதித்துப் பேசி, இழிவைத் தேடிக் கொள்வார்கள்.

 

 "தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்

நன்னீர் சொரிந்து வளர்த்து அற்றால், -– தன்னை

வியவாமை அன்றே வியப்பு ஆவது, இன்பம்

நயவாமை அன்றே நலம்."        --- நீதிநெறி விளக்கம்

இதன் பொருள் ---

      தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் - தன்னைப் பிறர் மதிக்கும்படி செய்வதற்காகத் தன்னைத் தானே ஒருவன் புகழ்ந்து கொள்ளுதல், தீச் சுடர் நல்நீர் சொரிந்து வளர்த்தற்று - குளிர்ந்த நீரை விட்டுத் தீவிளக்கை வளர்த்தது போல ஆகும்;  ஆதலால்,  தன்னை வியவாமை அன்றே வியப்பு ஆவது -  தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளாமை அன்றோ நன்மதிப்பாகும்; இன்பம் நயவாமை அன்றே நலம் - இன்பத்தை விரும்பாமை அன்றோ இன்பமாகும்?

    தீ வளரும் என்று நீர் விட்டால் முன்னிருந்த தீயும் எப்படி வளராது அவிந்தே போகுமோ, அதுபோலவே, தனக்கு மதிப்பு மிகும் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொண்டால் இதற்கு முன்னிருந்த மதிப்பும் மிகாது அழிந்தே போகும் என்று சொல்லப்பட்டது.

 

"கற்றாங்கு அறிந்துஅடங்கி, தீதுஒரீஇ, நன்றுஆற்றிப்

பெற்றது கொண்டு மனம் திருத்திப் - பற்றுவதே

பற்றுவதே பற்றி, பணிஅறநின்று, ஒன்றுஉணர்ந்து

நிற்பாரே நீள்நெறிச்சென் றார்."      --- நீதிநெறி விளக்கம்.

இதன் பொருள் ---

     கற்று ஆங்கு அறிந்து அடங்கி - அறிவுநூல்களைக் கற்று அவற்றின் மெய்ப்பொருளை உணர்ந்து, அவற்றிற்கேற்ப மன அடக்கத்தோடு இருந்து, தீது ஒரீஇ - (அந் நூல்களில் விலக்கிய) தீய காரியங்களைக் கைவிட்டு, நன்று ஆற்றி - (அந்நூல்களில் விதித்த) நற்காரியங்களைச் செய்து, பெற்றது கொண்டு மனம் திருத்தி - கிடைத்ததைக் கொண்டு மனம் அமைந்து அதனை ஒரு வழிப்படுத்தி, பற்றுவதே பற்றுவதே பற்றி - தாம் அடைய வேண்டிய வீட்டு நெறியையும் அந் நெறிக்குரிய முறைகளையும் மனத்தில் கொண்டு, பணி அற நின்று - சரியை முதலிய தொழில்கள் மாள, அருள் நிலையில் நின்று, ஒன்று உணர்ந்து - தனிப் பொருளாகிய இறைவனை அறிந்து, நிற்பாரே நீள்நெறி சென்றார் - நிற்கின்ற ஞானியரே வீட்டை அடையும் வழியில் நின்றவராவர்.

         அறிவு நூல்களில் விலக்கிய தீயகாரியங்களாவன: காமம் கோபம் முதலியன. அவற்றின்கண் விதித்த நற்காரியங்களாவன: கொல்லாமை,வாய்மை முதலியன. 

 

 "கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்

பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்; தானுரைப்பின்

மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத

பித்தனென் றெள்ளப் படும்."           ---  நாலடியார்.

இதன் பொருள் --- 

      கற்றனவும் கண் அகன்ற சாயலும் இல் பிறப்பும் பக்கத்தார் பாராட்டப்பாடு எய்தும் - தான் கற்ற கல்விகளும், காட்சி பரந்த தனது சாயலும், தனது உயர் குடிப் பிறப்பும் அயலவர் பாராட்டப் பெருமை அடையும்;  தான் உரைப்பின் - அவ்வாறன்றித் தான் புகழ்ந்தால், மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத பித்தன் என்று எள்ளப்படும் - தனக்கு முகமன் மொழிந்து விளையாடுவோர் மிகப் பெருகி அதனால், 'மருந்தினால் தெளியாத பித்தன் இவன்' என்று உலகத்தவரால் இகழப்படும் நிலையை ஒருவன் அடைவான்.

         பேதைமை என்பது, பிறர் கருத்தை அறியாது, பிறர் கூறும் முகமனுக்கு மகிழும் பித்துத் தன்மை உடையது.


பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

மடல்அவிழ் சரோருக (பொது)


முருகா! 

விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர, 

தேவரீர் போதகத்தை அருள வேண்டும்.


தனதனன தானதத்த தனதனன தானதத்த

     தனதனன தானதத்த ...... தனதான


மடலவிழ்ச ரோருகத்து முகிழ்நகையி லேவளைத்து

     மதசுகப்ர தாபசித்ர ...... முலையாலே


மலரமளி மீதணைத்து விளையுமமு தாதரத்தை

     மனமகிழ வேயளித்து ...... மறவாதே


உடலுயிர தாயிருக்க உனதெனதெ னாமறிக்கை

     ஒருபொழுதொ ணாதுசற்று ...... மெனவேதான்


உரைசெய்மட வாரளித்த கலவிதரு தோதகத்தை

     யொழியவொரு போதகத்தை ...... யருள்வாயே


தடமகுட நாகரத்ந படநெளிய ஆடுபத்ம

     சரணயுக மாயனுக்கு ...... மருகோனே


சரவணமி லேயுதித்த குமரமுரு கேசசக்ர

     சயிலம்வல மாய்நடத்து ...... மயில்வீரா


அடல்மருவு வேல்கரத்தி லழகுபெற வேயிருத்தும்

     அறுமுகவ ஞானதத்வ ...... நெறிவாழ்வே


அசுரர்குல வேரைவெட்டி அபயமென வோலமிட்ட

     அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே.


                            பதம் பிரித்தல்


மடல் அவிழ் சரோருகத்து முகிழ் நகையிலே வளைத்து,

     மத சுக ப்ரதாப சித்ர ...... முலையாலே,


மலர் அமளி மீது அணைத்து, விளையும் அமுத அதரத்தை

     மனம் மகிழவே அளித்து, ...... மறவாதே


உடல் உயிர் அதாய் இருக்க, உனது எனது எனா மறிக்கை,

     ஒரு பொழுது ஒணாது சற்றும், ...... எனவே தான்,


உரை செய் மடவார் அளித்த கலவி தரு தோதகத்தை

     ஒழிய, ஒரு போதகத்தை ...... அருள்வாயே.


தட மகுட நாக ரத்ந படம் நெளிய ஆடு, பத்ம

     சரண யுக மாயனுக்கு ...... மருகோனே!


சரவணமிலே உதித்த குமர! முருக ஈச! சக்ர

     சயிலம் வலமாய் நடத்து ...... மயில்வீரா!


அடல் மருவு வேல் கரத்தில் அழகு பெறவே இருத்தும்

     அறுமுகவ! ஞான தத்வ ...... நெறி வாழ்வே!


அசுரர் குல வேரை வெட்டி, அபயம் என ஓலம் இட்ட

     அமரர் சிறை மீளவிட்ட ...... பெருமாளே.

பதவுரை

தடமகுட நாகரத்ன பட(ம்) நெளிய ஆடு பத்ம சரண யுக மாயனுக்கு மருகோனே --- விசாலமான மகுடங்களைக் கொண்டதும்,  நாகரத்தினத்தை உடையதும் ஆன காளிங்கன் என்னும் பாம்பின் படம் நெளியுமாறு திருநடனம் புரிந்த, தாமரை போன்ற இரண்டு திருவடிகளை உடைய திருமாலின் திருமருகரே!

சரவணமிலே உதித்த குமர --- சரவணப் பொய்கையில் உதித்த குமாரக் கடவுளே!

முருக --- முருகப் பெருமானே!

ஈச --- எவ்வுயிர்க்கும் தலைவரே!

சக்ர சயிலம் வலமாய் நடத்து மயில் வீரா --- சக்ரவாள கிரியை வலம் வரும்படி மயிலைச் செலுத்திய வீரரே!

அடல் மருவு வேல் கரத்தில் அழகு பெறவே இருத்தும் அறுமுகவ --- வல்லமை வாய்ந்த வேலாயுதத்தை அழகு விளங்கத் திருக்கரத்தில் ஏந்தி இருக்கும் ஆறுமுகப் பரம்பொருளே!

ஞான தத்வ நெறி வாழ்வே ---  மெய்ஞ்ஞான நெறியில் பயில்வோர்க்குக் கிட்டிய அருட்செல்வரே!

அசுரர் குல வேரை வெட்டி, அபயம் என ஓலமிட்ட அமரர் சிறை மீள விட்ட பெருமாளே --- அசுரர் குலத்தவர்களை வேருடன் அழித்து, அடைக்கலம் என்று ஓலமிட்ட தேவர்களைச் சிறையிலிருந்து மீள்வித்த பெருமையில் மிக்கவரே!

மடல் அவிழ் சரோருகத்து முகிழ் நகையிலே வளைத்து --- இதழ்கள் விரிந்து மலர்ந்த தாமரை போன்ற வாயில் இருந்து வெளிப்படுகின்ற புன்சிரிப்பால் காமுகர்களின் மனதைக் கவர்ந்து,

  மத சுக ப்ரதாப சித்ர முலையாலே மலர் அமளி மீது அணைத்து --- மன்மதன் உண்டாக்கும் இன்ப நிலைக்குப் பெயர்பெற்ற அழகிய முலைகளால், மலர்ப் படுக்கையிலே அணைத்து,

விளையும் அமுத அதரத்தை மனம் மகிழவே அளித்து மறவாதே --- காம உணர்வினால் விளையும், அமுதம் போன்ற வாயிதழ் ஊறலை மனம் மகிழ மறவாமல் தந்து,

உடல் உயிர் அதாய் இருக்க --- உடலும் உயிரும் ஒன்றுபட்டது போன்று இருக்கும் நிலையில்,

உனது எனது எனா மறிக்கை ஒரு பொழுது ஒணாது சற்றும் எனவே தான் உரை செய் --- உனது, எனது என்னும் வேற்றுமை ஒரு போதும் கொஞ்சமேனும் கூடாது என்று பேசுகின்ற,

மடவார் அளித்த கலவி தரு தோதகத்தை ஒழிய --- விலைமாதர்கள் தருகின்ற கலவி இன்பத்தால் உண்டாகும் வருத்தம் ஒழியுமாறு,

ஒரு போதகத்தை அருள்வாயே --- ஒப்பற்ற நல்லுபதேச மொழியை அடியேனுக்கு அருள் புரிவீராக.

பொழிப்புரை

விசாலமான மகுடங்களைக் கொண்டதும்,  நாகரத்தினத்தை உடையதும் ஆன காளிங்கன் என்னும் பாம்பின் படம் நெளியுமாறு திருநடனம் புரிந்த, தாமரை போன்ற இரண்டு திருவடிகளை உடைய திருமாலின் திருமருகரே!

சரவணப் பொய்கையில் உதித்த குமாரக் கடவுளே!

முருகப் பெருமானே!

எவ்வுயிர்க்கும் தலைவரே!

சக்ரவாள கிரியை வலம் வரும்படி மயிலைச் செலுத்திய வீரரே!

வல்லமை வாய்ந்த வேலாயுதத்தை அழகு விளங்கத் திருக்கரத்தில் ஏந்தி இருக்கும் ஆறுமுகப் பரம்பொருளே!

மெய்ஞ்ஞான நெறியில் பயில்வோர்க்குக் கிட்டிய அருட்செல்வரே!

அசுரர் குலத்தவர்களை வேருடன் அழித்து, அடைக்கலம் என்று ஓலமிட்ட தேவர்களைச் சிறையிலிருந்து மீள்வித்த பெருமையில் மிக்கவரே!

இதழ்கள் விரிந்து மலர்ந்த தாமரை போன்ற வாயில் இருந்து வெளிப்படுகின்ற புன்சிரிப்பால் காமுகர்களின் மனதைக் கவர்ந்து, மன்மதன் உண்டாக்கும் இன்ப நிலைக்குப் பெயர்பெற்ற அழகிய முலைகளால், மலர்ப் படுக்கையிலே அணைத்து, காம உணர்வினால் விளையும், அமுதம் போன்ற வாயிதழ் ஊறலை மனம் மகிழ மறவாமல் தந்து, உடலும் உயிரும் ஒன்றுபட்டது போன்று இருக்கும் நிலையில், உனது, எனது என்னும் வேற்றுமை ஒரு போதும் கொஞ்சமேனும் கூடாது என்று பேசுகின்ற, விலைமாதர்கள் தருகின்ற கலவி இன்பத்தால் உண்டாகும் வருத்தம் ஒழியுமாறு, ஒப்பற்ற நல்லுபதேச மொழியை அடியேனுக்கு அருள் புரிவீராக.

விரிவுரை


மடல் அவிழ் சரோருகத்து முகிழ் நகையிலே வளைத்து --- 

சரோருகம் - தாமரை.


மத சுக ப்ரதாப சித்ர முலையாலே மலர் அமளி மீது அணைத்து ---

மத சுகம் - மன்மதன் உண்டாக்குகின்ற சுகம்.

பிரதாபம் - பெயர் பெற்றது.

சித்ர முலை - அழகிய முலை.  


அமுத அதரத்தை மனம் மகிழவே அளித்து மறவாதே --- 

அதர அமுதத்தை மறவாதே மனம் மகிழவே அளித்து.

அதரம் - வாய் இதழ். உதடு. வாயில் ஊறுகின்ற எச்சிலை, அதர பானம் என்பர். கலவியின் போது காம மயக்கத்தில் அது எச்சில் எனத் தோன்றாது. அமுதம் எனத் தோன்றும்.


மடவார் அளித்த கலவி தரு தோதகத்தை ஒழிய ஒரு போதகத்தை அருள்வாயே --- 

தோதகம் - வருத்தம், வஞ்சகம், சாலவித்தை, கற்பு ஒழுக்கம் இன்மை.

போதகம் - நல்லுரை, சொல்லிக் கொடுத்த புத்தி.

ஒரு போதகம் - ஒப்பற்ற போதகம்.

விலைமாதர் கூட்டுறவால் விளைந்த தோதகம் ஒழிய, போதகத்தை அருளுமாறு முருகப் பெருமானை அடிகளார் வேண்டுகின்றார்.


தடமகுட நாகரத்ன பட(ம்) நெளிய ஆடு பத்ம சரண யுக மாயனுக்கு மருகோனே --- 

காளிங்கன் என்னும் கொடிய பாம்பின் தலை உச்சியில் கண்ணன் நர்த்தனம் புரிந்தார். யமுனா நதியில் காளிங்கன் என்ற பாம்பு அவ்வப்போது நஞ்சினைக் கக்கிப் பலரையும் கொன்றது. கண்ணன் அங்கு சென்று, மக்களின் வருத்தத்தை மாற்றும் பொருட்டு அம் மாநதியில் குதித்து, பாம்பினுடன் போர்புரிந்து வென்று, அப் பாம்பின் படத்தின் மீது திருவடி வைத்து நடனம் புரிந்தருளினார்.

காளிங்க நர்த்தனத்தின் பொருள் --- காளிங்கன் என்பது மனம். அது ஐந்து புலன்களின் வழியே நஞ்சினைக் கக்கிக் கொடுமை புரிகின்றது. அந்த ஐம்புலன்களாகிய - ஐந்து தலைகளுடன் கூடிய மனமாகிய காளிங்களை அடக்கி மெய்யறிவுப் பொருளாகிய கண்ணன் ஆனந்த நடனம் புரிகின்றான்.

"லகரமே போல் காளிங்கன் அல் உடல் நெளிய நின்று 

தகர மர்த்தனமே செய்த சங்கு அரி"

என்றார் பாம்பன் சுவாமிகள், சண்முக கவசத்தில்.


சரவணமிலே உதித்த குமர --- 

சரவணத்திலே உதித்த என்பது "சரவணமிலே" என்று வந்தது.


சக்ர சயிலம் வலமாய் நடத்து மயில் வீரா --- 

சயிலம் - மலை.

சக்ர சயிலம் - சக்கரவாள மலை. சக்கரவாள கிரி.


"தடக்கொற்ற வேள்மயிலே இடர் தீரத் தனிவிடின் நீ 

வடக்கில் கிரிக்கு அப்புறத்தும் நின் தோகையின் வட்டம்இட்டுக் 

கடற்கு அப்புறத்தும், கதிர்க்கு அப்புறத்தும், கனகசக்ரத் 

திடர்க்கு அப்புறத்தும், திசைக்கு அப்புறத்தும் திரிகுவையே"    --- கந்தர் அலங்காரம்.


"சக்ர ப்ரசண்டகிரி முட்டக் கிழிந்து வெளி

   பட்டு க்ரவுஞ்ச சயிலம்

தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும் எழு

   தனி வெற்பும் அம்புவியும் எண்

திக்கும் தடங்குவடும் ஒக்கக் குலுங்க வரு

   சித்ரப் பதம் பெயரவே

சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெம்சூரர்

   திடுக்கிட நடிக்கு மயிலாம்

பக்கத்தில் ஒன்றுபடு பச்சை பசும்கவுரி

   பத்மப் பதம் கமழ் தரும்

பாகீரதிச் சடில யோகீசுரர்க்கு உரிய

   பரம உபதேசம் அறிவிக்

கைக்குச் செழும் சரவணத்தில் பிறந்த ஒரு

   கந்தச்சுவாமி தணிகைக்

கல்லாரகிரி உருக வரு கிரண மரகத

   கலாபத்தில் இலகு மயிலே."          --- மயில் விருத்தம்.


கருத்துரை


முருகா! விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர, தேவரீர் போதகத்தை அருள வேண்டும்.







22. தன் பாவம் தன்னோடு

 



"செங்காவி மலர்த்தடம்சூழ் தண்டலைநீள்

     நெறியே! நின் செயல் உண்டாகில்

எங்காகில் என்ன? அவர் எண்ணியதெல்

     லாம்முடியும்!, இல்லை யாகில்,

பொங்காழி சூழுலகில் உள்ளங்கால்

     வெள்ளெலும்பாய்ப் போக ஓடி

ஐங்காதம் போனாலும் தன்பாவம்

     தன்னுடனே ஆகும் தானே."


இதன் பொருள் ---

செங்காவி  மலர்த் தடம்சூழ் தண்டலை  நீள் நெறியே - சிவந்த குவளை மலர்களையுடைய பொய்கைகள் சூழ்ந்த திருத் தண்டலை என்னும் திருத்தலத்தில் "நீள் நெறி" என்னும் திருக்கோயிலில்  எழுந்தருளிய சிவபரம்பொருளே!

நின் செயல் உண்டாகில் - தேவரீருடைய நல்ல அருள்  கிடைத்தால், எங்கு ஆகில் என்ன அவர் எண்ணியது எல்லாம் முடியும் - எவ்விடமாயினும் என்ன? அவர்கள் நினைத்தது முற்றும் முற்றுப் பெறும், 

இல்லை ஆகில் - தேவரீரது  அருள் கிடையா விட்டால், பொங்கு  ஆழிசூழ் உலகில் - நீர் மிகுந்த  கடலால் சூழப்பட்டு உள்ள இந்த உலகத்தில், உள்ளங்கால் வெள் எலும்பாய்ப் போக - உள்ளங் காலில் (தசை தேய்ந்து) வெள்ளை எலும்பு தெரியும்படியாக, ஐங்காதம் ஓடிப் போனாலும் தன் பாவம் தன் உடனே ஆகும் - ஐந்துகாத தொலைவு விரைவாகப் போய் அலைவுற்றாலும் தான் செய்த தீவினை தன்னுடனேயே இருக்கும்.

விளக்கம் ---

இறைவன் செயல் நம் ஊழ்வினைக்கு ஏற்றவாறே அமையும். ஆகையால்,  "நின்செயல் உண்டாகில் எண்ணிய எல்லாம் முடியும்" என்றார். ‘உள்ளங்கால் வெள்ளெலும்பாய்ப் போக' என்பது மரபுமொழி. ‘ஐங்காதம் போனாலும் தன்பாவம் தன்னுடனே' என்பது பழமொழி.


71. நிலையாமை

 

"மனுநல்மாந் தாதாமுன் ஆனவர்கள் எல்லோரும்

     மண்மேல் இருந்துவாழ்ந்து

மடியாதிருந்தபேர் இல்லை;அவர் தேடியதை

     வாரிவைத் தவரும்இல்லை;


பனியதனை நம்பியே ஏர்பூட்டு கதையெனப்

     பாழான உடலைநம்பிப்

பார்மீதில் இன்னும்வெகு நாளிருப் போம்என்று

     பல்கோடி நினைவையெண்ணி


அனிதமாய் விருதாவில் மாய்வதே அல்லாமல்

     அன்பாக நின்பதத்தை

அர்ச்சித்து முத்திபெறல் வேண்டுமென் றெண்ணார்கள்,

     ஆசைவலை யிற்சுழலுவார்;


வனிதையர்கள் காமவி காரமே பகையாகும்,

     மற்றும்ஒரு பகையும்உண்டோ?

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."


இதன் பொருள் ---

மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர  ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

மனு, நல் மாந்தாதா முன் ஆனவர்கள் எல்லாரும் - மனு என்னும் அரசனும், நற்குணமுடைய மாந்தாதா முதலானவர்கள் எல்லாரும், மண்மேல் இருந்து வாழ்ந்தும் மடியாது இருந்த பேர் இல்லை - மண்ணுலகில் நீண்டநாள் இருந்து வாழ்ந்தாலும் இறவாமல் இருந்தவர்கள் எவரும் இல்லை; 

தேடியதை வாரி வைத்தவரும் இல்லை - (சிறிது சிறிதாகப் பாடுபட்டுச்) சேர்த்த பொருளைத் (தம்முடன் எடுத்துச் செல்ல)  அள்ளி வைத்தவர்களும் இல்லை; 

பன அதனை நம்பியே ஏர்பூட்டு கதை என - பனி பெய்ததால் ஈரமிருக்கும் என்று நம்பிக்கை வைத்து ஏரைப் பூட்டும் அறிவின்மை போல, பாழான உடலை நம்பி - அழியும் உடலை (நிலையானது என்று) நம்பிக்கை கொண்டு, பார்மீதில் இன்னும் வெகுநாள் இருப்போம் என்று - உலகிலே மேலும் நீண்டகாலம் வாழ்வோம் என, பல்கோடி நினைவை எண்ணி - பல கோடிக்கணக்கான நினைவுகொண்டு, அனிதமாய் விருதாவில் மாய்வதே அல்லாமல் - நெறிகெட்டு வீணில் இறப்பதே அன்றி, அன்பாக நின் பதத்தை அர்ச்சித்து - அன்புடன் உன் திருவடியில் மலரிட்டு வணங்கி, முத்தி பெறல்வேண்டும் என்று எண்ணார்கள் - வீடு அடையவேண்டும் என நினையார்கள்; 

ஆசை வலையில் சுழலுவார் - ஆசையாகிய வலையில் அகப்பட்டுத் திகைப்பார்கள்; 

வனிதையர்கள் காமவிகாரமே பகையாகும் - (அவர்களுக்குப்) பெண்களைக் காமநோக்குடன் பார்ப்பதே கெடுதி தரும்; மற்றும் ஒரு பகைமை உண்டோ? - வேறொரு பகை இல்லை.


87. கோபத்தின் கொடுமை

 


"கோபமே பாவங்களுக் கெல்லாம் தாய்தந்தை;

     கோபமே குடிகெ டுக்கும்;

  கோபமே ஒன்றையும் கூடிவர வொட்டாது;

     கோபமே துயர்கொ டுக்கும்;


கோபமே பொல்லாது! கோபமே சீர்கேடு;

     கோபமே உறவ றுக்கும்;

  கோபமே பழிசெயும்! கோபமே பகையாளி;

     கோபமே கருணை போக்கும்;


கோபமே ஈனமாம் கோபமே எவரையும்

     கூடாமல் ஒருவ னாக்கும்;

  கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீயநர

     கக்குழி யினில்தள் ளுமால்;


ஆபத்தெ லாந்தவிர்த் தென்னையாட் கொண்டருளும்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

ஆபத்து எலாம் தவிர்த்து என்னை ஆட்கொண்டருளும் அண்ணலே - இடையூறுகளை எல்லாம் நீக்கி என்னை ஏற்றுக்கொண்டருளும் பெரியோனே!,  அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 

கோபமே பாவங்களுக்கு எல்லாம் தாய் தந்தை - சினமே எல்லாப் பாவங்களுக்கும் அன்னையும் அப்பனும் ஆகும்;

கோபமே குடிகெடுக்கும் - சினமே குடியைக் கெடுக்கும்;

கோபமே ஒன்றையும் கூடிவர ஒட்டாது - சினமே எதனையும் அடைய விடாது;

கோபமே துயர் கொடுக்கும் - சினமே துயரத்தைத் தரும்; 

கோபமே பொல்லாது - சினமே கெட்டது; 

கோபமே சீர்கேடு - சினமே புகழைக் கெடுப்பது;

கோபமே உறவு அறுக்கும் - சினமே உறவைத் தவிர்க்கும்;

கோபமே பழி செயும் - சினமே பழியை உண்டாக்கும்;

கோபமே பகையாளி - சினமே ஒருவனுக்குப் பகையாளி;

கோபமே கருணை போக்கும் - சினமே அருளைக் கெடுக்கும்; கோபமே ஈனம் ஆம் - சினமே இழிவாகும்; 

கோபமே எவரையும் கூடாமல் ஒருவன் ஆக்கும் - சினமே ஒருவரையும் சேர்க்காமல் தனியன் ஆக்கும், 

கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீய நரகக் குழியில் தள்ளும் - சினமே காலன்முன் இழுத்துச் சென்று கொடிய நரகக் குழியிலே வீழ்த்தும்.

விளக்கம் ---

ஔவைப் பிராட்டியார், அறம் செய்ய விரும்புகின்ற உனது மனத்துள் ஆறவேண்டியது நீ கொள்ளுகின்ற சினம் ஆகும் என்பதை அறிவுறுத்த, "ஆறுவது சினம்" என்றார். எனவே, கோபமானது ஒருவனுக்குத் தணிய வேண்டுவது ஆகும் என்பதை அறிதல் வேண்டும். காரணம், சினம் மிகுந்து தீராமல் இருந்தால், அது போராக முடியும் என்பதை அறிவுறுத்த, "தீராக் கோபம் போராய் முடியும்" என்று கொன்றைவேந்தன் மூலமாக விளக்கம் தந்தார் ஔவைப் பிராட்டியார். 


கோபம் சீக்கிரமாகப் போய் விட வேண்டும். இல்லையேல் அது சண்டையில் போய் முடியும். பின்வரும் பாடல்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

உள்ளத்தில் மிக்கு எழுகின்ற சினத்தின் வேகத்தைத் தணித்து, தன்னையும் பிறரையும் காத்துக் கொள்ளுவதே சிறந்த குணம் என்கின்றார் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்.

"உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்குசினம் காத்துக்

கொள்ளும் குணமே குணம் என்க, - வெள்ளம்

தடுத்தல் அரிதோ? தடங்கரைதான் பேர்த்து

விடுத்தல் அரிதோ? விளம்பு."  ---  நன்னெறி.

இதன் பொருள் ---

மனத்தைத் தன்வயப்படுத்திக் கொண்டு ஓங்கி வளர்கின்ற சினத்தை வெளிவராமல் அடக்கிக் கொள்கிற  குணமே மேலான குணம் என்று அறிவாயாக. பெருகி வருகின்ற நீர்ப்பெருக்கைத் தடுத்தல் அரிய செயலோ? முன் கட்டப்பட்டிருந்த கரையை உடைத்து அதனுள் அடங்கிச் சென்ற வெள்ளத்தை வெளியில் செல்ல விடுத்தல் அரிய செயலோ? நீயே சொல்வாயாக.

உடம்போடு உயிரானது எப்போதும் கூடி இருப்பதில்லை. வாழ்நாள் முடிவில் பிரியத் தான் போகின்றது. அதுபோல, உள்ளத்தில் ஒருக்கால் தோன்றிய சினமானது தணியத் தான் வேண்டும். பயிரில் உடன் வளர்கின்ற புல்லைக் களைந்து, பயிரைக் காத்துக் கொள்வது போல, உள்ளத்தில் எழுகின்ற சினத்தைக் களைந்து, தன்னைக் காத்துக் கொள்ளவேண்டும் என்கின்றது "அறநெறிச்சாரம்".

"உயிரும் உடம்பும் பிரிவு உண்மை உள்ளிச்

செயிரும் சினமும் கடிந்து, - பயிரிடைப்

புல்களைந்து நெல்பயன் கொள்ளும் ஒருவன் போல்

நற்பயன் கொண்டு இருக்கற் பாற்று." --- அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

உயிரும் உடம்பும் பிரிவு உண்மை உள்ளி - உயிரும் உடம்பும் வேறு வேறாகப் பிரிவது தவறாது என்பதை அறிந்து, பயிரிடை புல் களைந்து - பயிர்களின் இடையிடையே தோன்றிய களைகளைப் பிடுங்கி எறிந்துவிட்டு, நெல் பயன்கொள்ளும் ஒருவன்போல் - பயிர்களைக் காத்து நெல்லாகிய பயனை அடையும் உழவன்போல, செயிரும் சினமுங் கடிந்து - மயக்கம் வெகுளிகளை நீக்கி, நற்பயன் கொண்டு இருக்கற்பாற்று - இன்பத்துக்கு ஏதுவாகிய நல்வினையை மேற்கொண்டு ஒழுகுதல் நல்லது.

சான்றோர் உள்ளத்தில் சினம் தோன்றும். ஆனால் அது விரைவில் தணிந்துவிடும் என்கிற்து "நாலடியார்". சினத்தைத் தணிவித்துக் கொள்ளப் பழகுபவர் சான்றோர்.

"நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி

கெடுங்காலம் இன்றிப் பரக்கும், - அடுங்காலை

நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே

சீர்கொண்ட சான்றோர் சினம்." --- நாலடியார்.

இதன் பதவுரை ---

நெடுங் காலம் ஓடினும் - நீண்ட காலம் சென்றாலும், நீசர் வெகுளி - கீழ்மக்களின் கோபம், கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - தணியும் காலம் இல்லாமலே பெருகிக்கொண்டு போகும் ; ஆனால், அடுங் காலை நீர் கொண்ட வெப்பம்போல் - காய்ச்சுகின்ற காலத்தில் தண்ணீர் அடைந்த வெப்பத்தைப் போல, தானே தணியும் சீர் கொண்ட சான்றோர் சினம் - பெருமை மிக்க சான்றோரது கோபம் தானே தணிந்துவிடும்.


கோபத்தில் நன்மை எது என்பதே தோன்றாது, எல்லாம் கெட்டுப் போகும் என்கின்றது "நான்மணிக்கடிகை".

"கற்றார்முன் தோன்றா கழிவிரக்கம், காதலித்து ஒன்று

உற்றார்முன் தோன்றா உறாமுதல், - தெற்றென

அல்ல புரிந்தார்க்கு அறம் தோன்றா, எல்லாம்

வெகுண்டார்முன் தோன்றாக் கெடும்" --- நான்மணிக்கடிகை.

இதன் பதவுரை ---

கழிவு இரக்கம் கற்றார்முன் தோன்றா - இழந்த பொருள்களுக்கு வருத்தப்படுதல், கற்று உணர்ந்த பெரியோர்பால் தோன்றாது; காதலித்து ஒன்று உற்றார்முன் உறா முதல் தோன்றா - ஊக்கம் கொண்டு, ஒரு நன்முயற்சியைத் தொடங்கி ஆற்றுபவரிடத்தில், அது விரைவில் கிட்டாமையால் ஆகிய முயற்சித் துன்பம் தோன்றாது; தெற்றென அல்ல புரிந்தார்க்கு அறம் தோன்றா - தெளிவாய் தீயவை செய்தார்க்கு நல்லவை தோன்றமாட்டா; எல்லாம் வெகுண்டார் முன் தோன்றா கெடும் - எல்லா நன்மைகளும், சினந்து கொள்வாரிடத்தில் தோன்றாவாய்க் கெட்டு ஒழியும்.


"மூங்கிலில் பிறந்த முழங்குதீ மூங்கில்

முதல் அற முருக்குமா போல்

தாங்க அரும் சினத்தீ தன்னுளே பிறந்து

தன்உறு கிளை எலாம் சாய்க்கும்,

ஆங்கு அதன் வெம்மை அறிந்தவர் கமையால்

அதனை உள்ளடக்கவும் அடங்காது

ஓங்கிய கோபத் தீயினை ஒக்கும்

உட்பகை உலகில் வேறு உண்டோ?"  --- விவேக சிந்தாமணி.

இதன் பொருள் ---

மலைகளில் அடர்ந்து இருக்கின்ற மூங்கில் காட்டில் மூங்கில்கள் ஒன்றோடொன்று உராய்வதாலே நெருப்பு உண்டாகும். அந்த நெருப்பு மூங்கில்களை அழிக்கும். அத்தோடு அருகில் உள்ள கிளை மூங்கில்களையும் அழிக்கும். அதுபோல, ஒருவனிடத்தில் வந்த கோபமானது பெரியோர் தடுத்தாலும் அடங்காமல் அவனை அழிப்பது அல்லாமல் அவனுடைய சுற்றத்தையும் அழித்துவிடும். எனவே, கொடுமையான கோபத்தை விட்டுவிட வேண்டும். அதைவிட உள் பகை வேறு இல்லை.


"கோபத்தால் கௌசிகன் தவத்தைக் கொட்டினான்,

கோபத்தால் நகுடனும் கோலம் மாற்றினான்,

கோபத்தால் இந்திரன் குலிசம் போக்கினான்,

கோபத்தால் இறந்தவர் கோடி கோடியே." --- விவேக சிந்தாமணி.

இதன் பொருள் ---

விசுவாமித்திரன் தனது கோப மிகுதியினாலே வசிட்டரோடு சபதம் புரிந்து தனது தவத்தை எல்லாம் இழந்தான். நகுடன் என்னும் அரசன் நூறு அசுவமேத யாகங்களைப் புரிந்து இந்திர பதவியை அடைந்தும், முனிவர்களிடம் தனது கோபத்தைக் காட்டியதால், அகத்திய முனிவரின் சாபத்தால், அப் பதவியை இழந்து மீண்டும் பாம்பாக ஆனான். இந்திரன் ஒரு காலத்தில் உக்கிரபாண்டியனோடு போர் புரிந்து தன்னுடைய வச்சிராயுதத்தைப் போக்கினான். கோபத்தால் எண்ணிறந்த பேர் உயிர் துறந்தனர்.

சினம் தோன்றுவது இயல்புதான். சினம் தோன்றினால், அதனைத் தணித்துக் (ஆற்றிக்) கொள்ளுதல் வேண்டும். 


பொது --- 1105. நடையுடையிலே அருக்கி

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

நடை உடையிலே (பொது)


முருகா! 

விலைமாதர் வசமாகி அழியாது இருக்க அருள்


தனதனன தானதத்த தனதனன தானதத்த

     தனதனன தானதத்த ...... தனதான


நடையுடையி லேயருக்கி நெடியதெரு வீதியிற்குள்

     நயனமத னால்மருட்டி ...... வருவாரை


நணுகிமய லேவிளைத்து முலையைவிலை கூறிவிற்று

     லளிதமுட னேபசப்பி ...... யுறவாடி


வடிவதிக வீடுபுக்கு மலரணையின் மீதிருத்தி

     மதனனுடை யாகமத்தி ...... னடைவாக


மருவியுள மேயுருக்கி நிதியமுள தேபறிக்கும்

     வனிதையர்க ளாசைபற்றி ...... யுழல்வேனோ


இடையர்மனை தோறுநித்த முறிதயிர்நெய் பால்குடிக்க

     இருகையுற வேபிடித்து ...... உரலோடே


இறுகிடஅ சோதைகட்ட அழுதிடுகொ பாலக்ருஷ்ண

     னியல்மருக னேகுறத்தி ...... மணவாளா


அடலெழுது மேடுமெத்த வருபுனலி லேறவிட்டு

     அரியதமிழ் வாதுவெற்றி ...... கொளும்வேலா


அவுணர்குலம் வேரறுத்து அபயமென வோலமிட்ட

     அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே.


                              பதம் பிரித்தல்


நடை உடையிலே அருக்கி, நெடிய தெரு வீதியிற்குள்

     நயனம் அதனால் மருட்டி, ...... வருவாரை


நணுகி, மயலே விளைத்து, முலையை விலை கூறி விற்று,

     லளிதம் உடனே பசப்பி, ...... உறவாடி,


வடிவு அதிக வீடுபுக்கு, மலர் அணையின் மீது இருத்தி,

     மதனன் உடை ஆகமத்தின் ...... அடைவாக


மருவி, உளமே உருக்கி, நிதியம் உளதே பறிக்கும்,

     வனிதையர்கள் ஆசை பற்றி ...... உழல்வேனோ?


இடையர் மனை தோறும் நித்தம் உறி தயிர் நெய் பால் குடிக்க

     இருகை உறவே பிடித்து, ...... உரலோடே


இறுகிட அசோதை கட்ட, அழுதிடு கொபாலக்ருஷ்ணன்

     இயல் மருகனே! குறத்தி ...... மணவாளா!


அடல் எழுதும் ஏடு மெத்த வருபுனலில் ஏறவிட்டு

     அரியதமிழ் வாது வெற்றி ...... கொளும்வேலா!


அவுணர்குலம் வேர் அறுத்து, அபயம் என ஓலம் இட்ட

     அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே.


பதவுரை


இடையர் மனை தோறு நித்தம் --- இடையர்களின் வீடுகளில் நாள்தோறும் சென்று,

உறி தயிர் நெய் பால் குடிக்க ---உறியிலே உள்ள தயிர் நெய் பால் இவைற்றைக் குடிக்கவும்,

இரு கை உறவே பிடித்து --- இரண்டு கைகளையும் பிடித்து,

உரலோடே இறுகிட அசோதை கட்ட அழுதிடு --- யசோதையானவள் உரலோடு இறுகக் கட்டவும் அழுதிட்ட, 

கொ)பால க்ருஷ்ணன் இயல் மருகனே --- கோபாலகிருட்டிணரின் அன்புக்கு உரிய திருமருகரே!

குறத்தி மணவாளா --- குறமகளாகிய வள்ளிநாயகியின் மணவாளரே!

அடல் எழுதும் ஏடு மெத்த வருபுனலில் ஏற விட்டு --- வல்லமை பொருந்திய மந்திர மொழியால் எழுதப்பட்ட ஏடானது, மிகுந்து ஓடுகின்ற வைகையாற்று வெள்ளத்தில் எதிர் செல்லுமாறு விடுத்து,

அரிய தமிழ் வாது வெற்றி கொளும் வேலா --- அருமை வாழ்ந்த தமிழ்ப் பாசுரத்தால் (சமணரை) வாதத்தில் (திருஞானசம்பந்தராக வந்து) வெற்றி கொண்ட வேலாயுதரே!

அவுணர் குலம் வேர் அறுத்து --- அரக்கர் குலத்தை வேரோடு அறுத்து அழித்து,

அபயம் என ஓலம் இட்ட அமரர் சிறை மீள விட்ட பெருமாளே. --- அடைக்கலம் என்று ஓலம் இட்ட தேவர்களைச் சிறையினின்றும் மீட்டுவித்த பெருமையில் மிக்கவரே!

நடை உடையிலே அருக்கி --- நடையாலும், அணிந்துள்ள உடையாலும் தமது அழகின் அருமையை வெளிப்படுத்தி,

நெடிய தெரு வீதியிற்குள் வருவாரை நயனம் அதனால் மருட்டி ---  நீண்ட தெருவில் வருகின்ற ஆடவர்களைத் தமது கண்களால் மயக்கி,

நணுகி --- அவர்களை அணுகி,

மயலே விளைத்து --- காம மயக்கத்தை உண்டாக்கி,

முலையை விலை கூறி விற்று ---- தமது முலைகளுக்கு உரிய விலையினைப் பேசி,

லளிதம் உடனே பசப்பி உறவாடி ---  இச்சையோடு இன்முகம் காட்டி ஏய்த்து அவர்களோடு உறவாடி,

வடிவு அதிக வீடு புக்கு --- அழகு மிக்க வீட்டினில் கொண்டு வந்து,

மலர் அணையின் மீது இருத்தி ---  மலர்ப் படுக்கையில் இருக்கச் செய்து,

மதனன் உடை ஆகமத்தின் அடைவாக மருவி --- மன்மதனுடைய காம சாத்திரத்தின்படிக்குக் கலந்து,

உ(ள்)ளமே உருக்கி --- காமுகர்களின் உள்ளத்தை உருகச் செய்து,

நிதியம் உளதே பறிக்கும் வனிதையர்கள் ஆசை பற்றி உழல்வேனோ --- உள்ள பொருளைப் பறிக்கும் விலைமாதர்களின் மீது ஆசை வைத்து அடியேன் திரியலாமோ?

பொழிப்புரை

இடையர்களின் வீடுகளில் நாள்தோறும் சென்று, உறியிலே உள்ள தயிர் நெய் பால் இவைற்றைக் குடிக்கவும், இரண்டு கைகளையும் பிடித்து, யசோதையானவள் உரலோடு இறுகக் கட்டவும் அழுதிட்ட கோபாலகிருட்டிணரின் அன்புக்கு உரிய திருமருகரே!

குறமகளாகிய வள்ளிநாயகியின் மணவாளரே!

வல்லமை பொருந்திய மந்திர மொழியால் எழுதப்பட்ட ஏடானது, மிகுந்து ஓடுகின்ற வைகையாற்று வெள்ளத்தில் எதிர் செல்லுமாறு விடுத்து, அருமை வாழ்ந்த தமிழ்ப் பாசுரத்தால் (சமணரை) வாதத்தில் (திருஞானசம்பந்தராக வந்து) வெற்றி கொண்ட வேலாயுதரே!

அரக்கர் குலத்தை வேரோடு அறுத்து அழித்து, அடைக்கலம் என்று ஓலம் இட்ட தேவர்களைச் சிறையினின்றும் மீட்டுவித்த பெருமையில் மிக்கவரே!

நடக்கின்ற நடையாலும், அணிந்துள்ள உடையாலும் தமது அழகின் அருமையை வெளிப்படுத்தி, நீண்ட தெருவில் வருகின்ற ஆடவர்களைத் தமது கண்களால் மயக்கி, அவர்களை அணுகி, காம மயக்கத்தை உண்டாக்கி, தமது முலைகளுக்கு உரிய விலையினைப் பேசி, இச்சையோடு இன்முகம் காட்டி ஏய்த்து, உறவாடி, அழகு மிக்க வீட்டினில் கொண்டு வந்து, மலர்ப் படுக்கையில் இருக்கச் செய்து, மன்மதனுடைய காம சாத்திரத்தின்படிக்குக் கலந்து, காமுகர்களின் உள்ளத்தை உருகச் செய்து, உள்ள பொருளைப் பறிக்கும் விலைமாதர்களின் மீது ஆசை வைத்து அடியேன் திரியலாமோ?

விரிவுரை

இப் பாடலின் முற்பகுதியில் அடிகளார் விலைமாதர்களின் சாகசத்தை எடுத்துக் கூறி, அவர்கள் வலையில் விழுந்து அலைந்து திரிதல் கூடாது என்று அறிவுறுத்தினார்.

இடையர் மனை தோறு நித்தம்..... உரலோடே இறுகிட அசோதை கட்ட அழுதிடு கொ)பால க்ருஷ்ணன் இயல் மருகனே --- 

திருமால் துவாபர யுக முடிவில் தேவகி வயிற்றில் திருவவதாரம் புரிந்து ஆயர்பாடியில் யசோதை மகனாக வளர்ந்தார். முற்பிறப்பில் தாருக வனத்து முனிவர்களாகவும், தண்டக வனத்தில் முனிவர்களாகவும், இருந்து தவஞ் செய்தவர்கள் கோபிகைகள். ஆதலால், அவர்கள் உள்ளங்கவர் கள்வனாக கண்ணபிரான் சென்று, அவர்கள் உள்ளத்தையும் தயிரையும் ஒருங்கே களவு செய்தருளினார்.

        கண்ணபிரானுக்கு யசோதை, பாலும் தயிரும் வெண்ணெயும் ஊட்டினாள். அவர் அதனை உண்டு அமையாது, ஒளிந்து போய் பானையில் உள்ள பால் தயிர் வெண்ணெயை வாரி வாரி உண்டும், அடுத்த மனைகளில் உள்ளதனைக் களவு செய்து உண்டும், உறியில் உள்ளதனை உரல்மீது ஏறிப் பானைகளை உடைத்து உண்டும் உவந்தார். அதுகண்ட யசோதை சீற்றமுற்று, தாம்புக்கயிறு ஒன்றெடுத்து உரலிலே கட்டும் பொருட்டு, ஓடித் தேடிப் பிடித்து வாசுதேவர் இடையில் சுற்றினாள். இரண்டு விரற்கிடை குறைந்தது. பெரிய அக் கயிற்றுக்கு அடங்காத மகனுடைய இடையைக் கண்டு அவள் தியங்கினாள்.  வேறு பல கயிறுகளை எடுத்து, ஒன்றுடன் ஒன்றை முடிந்து சுற்றினாள். எத்துணைக் கயிறுகளை முடிந்தும் இரண்டு விரற்கிடை குறைவாகவே இருந்தது. 'அந்தோ! இது என்ன அதிசயம்! இத்தனைக் கயிறுகளாலும் இவனைக் கட்ட முடியவில்லையே' என்று வருந்தினாள். தாயாருடைய வருத்தத்தை அகற்றி மகிழ்விக்கவும் மருதமரங்களாக நின்ற கந்தருவர்களின் சாபத்தை மாற்றவும் திருவுள்ளங் கொண்டு, இடையைச் சுருக்கினார். பந்தபாசக் கட்டை அவிழ்க்கின்ற அவரை யசோதை உரலுடன் கட்டிவிட்டுச் சென்றாள். அவர் உரலுடன் சிறிது நேரம் அழுது, மெல்லத் தவழ்ந்து, வாயிலில் நின்ற மருதமரங்களுக்கு இடையே சென்றார்.

உள்ளமாகிய பாலில் தீய நினைவுகளாகிய நீர் வற்ற ஞானமாகிய நெருப்பை மூட்டிக் காய்ச்சி, பக்குவமாகிய இளஞ்சூட்டில் ஐந்தெழுத்தாகிய உறை விட்டு, உறுதியாக உறியில் வைத்து, அசையாமல் நிருவிகற்ப சமாதியில் நிலைத்து நின்று, அன்பு என்ற மமதையிட்டு அறிவு என்ற கயிற்றைக் கொண்டு கடைந்தால், இறையருளாகிய வெண்ணெய் வெளிப்படும்.

கண்ணபிரான் செய்த திருவிளையாடலை, பெரியாழ்வார் எடுத்து இனிது கூறுகின்றார்

"ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பால் உண்டு,

பேர்த்து அவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு,

வேய்த் தடந்தோளினார் வெண்ணெய் கோள் மாட்டாது, அங்கு

ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும்,

அடியுண்டு அழுதானால் இன்று முற்றும்." --- பெரியாழ்வார்.


அடல் எழுதும் ஏடு மெத்த வருபுனலில் ஏற விட்டு, அரிய தமிழ் வாது வெற்றி கொளும் வேலா --- 

        மதுரையம்பதியில் திருஞானசம்பந்தப் பெருமான் செய்த அற்புத நிகழ்வை அடிகளார் பாடுகின்றார். "பெம்மான் முருகன் பிறவானு இறவான்" என்பது கந்தர் அனுபூதி. பிறவா யாக்கைப் பெரியோன் ஆகிய முருகப் பெருமான் திருஞானசம்பந்தராக வந்து, ஒரு தாய் வயிற்றில் கருவாக இருந்து அவதாரம் புரிந்தார் என்று கொள்ளுவது கூடாது. முருக சாரூபம் பெற்ற அபர சுப்ரமண்ய மூர்த்திகளுள் ஒருவர் சீகாழியிலே கவுணியர் குடியில் திருஞானசம்பந்தராக அவதரித்தருளினார் என்ற கொள்ளுவதே பொருத்தமாக அமையும்.

மதுரையம்பதிக்குத் திருஞானசம்பந்தர் வருகையும், அடியார்கள் முழக்கமும் சமணர்களுக்குப் பொறாமையை ஊட்டியது. அவர்களுக்குப் பல துர் நிமித்தங்களும், தீய கனவுகளும் தோன்றின. எல்லோரும் ஓரிடத்தல் கூடி பாண்டிய மன்னனைக் காணச் சென்றார்கள். மன்னனிடம், "உமது மதுராபுரியில் இன்று சைவ வேதியர்கள் மேவினார்கள். நாங்கள் கண்டு முட்டு" என்றார்கள். மதி இல்லாத மன்னவனும், "கேட்டு முட்டு" என்றான். "இதற்கு என்ன செய்வது என்று அவர்களையே கேட்டான். மதிகெட்ட மன்னனின் கீழ் வாழும் மதிகெட்ட சமணர்களும், "மந்திரத்தால் தீயிட்டால், அவன் தானே ஓடிவிடுவான்" என்றார்கள். மன்னனும் உடன்பட்டான்.

சமணர்கள், பிள்ளையார் எழுந்தருளி இருந்த மடத்தில் தீயை மூட்ட மந்திரத்தை செபித்தார்கள். பலிக்கவில்லை. திரும்பிப் போனால் மன்னன் மதிக்கமாட்டான் என்று எண்ணி, கையிலே தீக்கோலைக் கொண்டு மடத்திற்குத் தீயை மூட்டினார்கள். மன்னன் அரசாட்சி வழுவியதால் வந்த தீது இது என்று உணர்ந்த திருஞானசம்பந்தப் பெருமானார், தம்மை மதுரையம்பதிக்கு வரவழைத்த மங்கையர்க்கரசியாரின் மங்கல நாணைப் பாதுகாக்கவும், குலச்சிறை நாயனாரின் அன்பை நினைந்தும், மன்னவன் தனது தவறை உணர்ந்து மீண்டும் சிவநெறியை அடையவேண்டும் என்பதை உணர்ந்தும், "அமணர் கொளுவும் சுடர் பையவே சென்று பாண்டியற்கு ஆகவே" என்று திருப்பதிகம் பாடி வேண்டினார். 

சமணர்கள் மடத்தில் இட்ட தீயானது, மெதுவாகச் சென்று, பாண்டியன் உடம்பில் வெப்பு நோயாகப் பற்றியது. இதைக் கேட்ட சமணர்கள் மன்னனை அடைந்து, தமது கையில் உள்ள மயிற்பீலியால் மன்னனின் உடலைத் தடவி, குண்டிகை நீரை மந்திரித்துத் தெளித்தார்கள். அந்த நீர் நெருப்பில் சொரிந்த நெய்யைப் போல, வெப்பு நோய் பின்னும் மிகுவதற்கே ஏதுவானது. 

பாண்டி மாதேவியாரும், குலச்சிறையாரும் மன்னனை வணங்கி, "சமணர்கள் இட்ட தீயே வெப்பு நோயாகி உம்மை வருத்துகின்றது. உடல் மாசும், உள்ளத்தில் மாசும் உடைய இவர்களால் இதைத் தீர்க்க முடியாது. இறைவன் திருவருளைப் பெற்ற திருஞானசம்பந்தப் பெருமான் வந்து பார்த்து அருளினாலே இந்த நோய் மட்டும் அல்லாது பிறவி நோயும் அகன்று விடும்" என்றார்கள்.

திருஞானசம்பந்தர் என்னும் நாம மந்திரம் செவியில் நுழைந்த உடனே, சிறிது அயர்வு நீங்கப் பெற்ற மன்னன், "சமணர்களின் தீச் செயலே இந்த நோய்க்கு மூலம் போலும்" என்று எண்ணி, "திருஞானசம்பந்தரை அழைத்து வாருங்கள். எனது நோயைத் தீர்ப்பவர் பக்கம் நான் சேர்வேன்" என்றான்.

மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் வேண்ட, திருஞானசம்பந்தர் மன்னனின் திருமாளிகைக்கு எழுந்தருளினார். மன்னன் தனது முடியின் பக்கத்தில் பொன்னால் ஆன ஆசனத்தை இடுமாறு பணிக்க, அந்த ஆசனத்தில் எழுந்தருளினார் சுவாமிகள். சமணர்கள் வெகுண்டனர். "நீங்கள் இருவரும் உங்கள் தெய்வ வலிமையால் எனது நோயைத் தீருங்கள். தீர்த்தவர் வென்றவர் ஆவர்" என்றான். சமணர்கள் "எங்கள் தெய்வ வல்லமையால் இடப்பக்கத்து நோயைத் தீர்ப்போம்" என்று அருக நாமத்தை முழக்கி, மயில் பீலியால் உடம்பைத் தடவினார்கள். பீலி வெந்தது. மன்னனைப் பற்றிய வெப்பு நோய் மேலும் முறுகியது. ஆற்ற முடியாதவனாய் மன்னன் திருஞானசம்பந்தரைப் பார்த்தான். 

ஆலவாய்ச் சொக்கனை நினைந்து, "மந்திரமாவது நீறு" என்னும் திருப்பதிகத்தைப் பாடி, திருஞானசம்பந்தப் பெருமான் பாண்டியனின் வலப்பக்கத்தில் தடவினார். வலப்பக்கம் நோய் நீங்கிக் குளிர்ந்தது. தனது உடம்பிலேயே, ஒரு பக்கம் நரகத் துன்பத்தையும், ஒரு பக்கம் வீட்டின்பத்தையும் அனுபவித்தான் மன்னன். "அடிகளே! எனது இடப்பக்க நோயையும் தீர்த்து அருள் செய்யும்" என வேண்டினான். பெருமான் அப் பக்கத்தையும் தமது திருக்கைகளால் திருநீறு கொண்டு தடவ, வெப்பு நோய் முழுதும் நீங்கியது. 

மங்கையர்க்கரசியாரும் குலச்சிறை நாயனாரும், பிள்ளையார் திருவடிகளில் விழுந்து வணங்கி, "நாங்கள் பெருமை உற்றோம். பெறுதற்கு அரிய பேற்றைப் பெற்றோம். மன்னனும் பிறவா மேன்மை உற்றார்" என்றனர். "ஞானசம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன்" என்று மன்னனும் பெருமானாருடைய திருப்பாதங்களில் பணிந்தான்.

"மீனவன் தன்மேல் உள்ள வெப்பு எலாம் உடனே மாற,

ஆன பேரின்பம் எய்தி, உச்சிமேல் அங்கை கூப்பி,

மானம் ஒன்று இல்லார் முன்பு வன்பிணி நீக்க வந்த

ஞானசம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன்" என்றான்.   ---  பெரியபுராணம்.

பின்னர், அனல் வாதம் தொடங்கியது. பாண்டியன் முன்னிலையில் எரி வளர்க்கப்பட்டது. திருஞானசம்பந்தர் தான் பாடிய திருமுறைகளை எடுத்தார். கயிற்றை அவிழ்த்தார். ஏடுகளில் கயிறு சாத்தினார். "போகம் ஆர்த்த பூண்முலையாள்" என்னும் திருநள்ளாற்றுத் திருப்பதிகம் கிடைத்தது. அத் திருப்பதிக ஏட்டினைப் பெருமான் தமது திருக்கரத்திலே தாங்கி, அதற்கு ஆக்கம் தேடத் "தளரிள வளரொளி" என்னும் திருப்பதிகத்தைப் பாடி நெருப்பில் இட்டார். அந்த ஏடு நெருப்பில் வேகாது, பழுது நீங்கி, முன்னினும் பச்சையாய் விளங்கியது. அந்த ஏட்டினைத் தமது திருக்கைகளால் நெருப்பில் இருந்து எடுத்து, அவைக்குக் காட்டி, பழையபடி அதைத் திருமுறையிலே சேர்த்தார். மன்னனும் மற்றையோரும் வியந்தனர்.

சமணர்கள் தங்கள் ஏட்டை இட்டனர். அது தீய்ந்து கருகியது. மன்னன் தண்ணீரைக் கொண்டு தீயை அவிக்கச் செய்தான். சமணர்கள் தமது ஏட்டைத் தடவிப் பார்த்து, கரியையும் சாம்பலையுமே கண்டார்கள். மன்னன் அவர்களைப் பார்த்துச் சிரித்து, "இன்னும் நன்றாக அரித்துப் பாருங்கள். பொய்யை மெய்யாக்கப் புகுந்தவர்களே! போங்கள். போங்கள். முன்னும் தோற்றீர்கள். இப்பொழுதும் தோற்றீர்கள்" என்றான். "இன்னும் ஒருமுறை முயல்வோம்" என்றனர் சமணர்கள். "வாதில் தோற்றவர்களை என்ன செய்வது என்பதை முடிவு செய்து, மேல் வாதம் புரியவேண்டும்" என்றார் குலச்சிறை நாயனார். சமணர்கள், கோபத்தால் வாய் சோர்ந்து, "நாங்கள் வாதில் தோற்றோமாயின், மன்னவன் எங்களைக் கழுவில் ஏற்றுவானாக" என்றனர். மன்னன் சமணர்களைப் பார்த்து, "கோபமும் பொறாமையும் உங்களை இவ்வாறு கூறச் செய்தன" என்றான்.

எல்லோரும் வைகை ஆற்றங்கரையை அடைந்தார்கள். சமணர்கள் அத்தி நாத்தி என்று எழுதிய ஏட்டை ஆற்று வெள்ளத்தில் விட்டார்கள். அந்த ஏடு கடலை நோக்கி ஓடியது. திருஞானசம்பந்தர், வாழ்க அந்தணர் எனத் தொடங்கும் திருப்பாசுரத்தை ஏட்டிலே வரைந்து, அதை வைகையிலே இட்டார். அந்த ஏடு நீரைக் கிழித்துக் கொண்டு மேல் ஏறிச் சென்றது. திருப்பாசுரத்தில் வேந்தனும் ஓங்குக என்று அருளப்பட்டதால், மன்னன் கூன் நிமிரப் பெற்றான். ஏட்டை நிறுத்தப் பிள்ளையார், "வன்னியும் மத்தமும்" என்னும் திருப்பதிகத்தைப் பாடினார். திரு ஏடகம் என்னும் இடத்திலே ஏடு நீரில் நின்றது. குலச்சிறை நாயனார் காற்றினும் கடிது சென்று, ஏட்டினை நீரிலே நின்ற ஏட்டினை எடுத்து வந்து எல்லோருக்கும் காட்டினார்.  

சமணர்கள் எண்ணாயிரவரும் கழுவில் ஏறினார்கள். திருஞானசம்பந்தர் பாண்டியனுக்குத் திருநீறு கொடுத்தார். அதை அன்போடு வாங்கித் தரித்துக் கொண்டான் பாண்டியன். மன்னன் நீறு அணிந்தான் என்று, மற்று அவன் மதுரை வாழ்வார் துன்னி நின்றார்கள் எல்லாம் தூய நீறு அணிந்துகொண்டார். இந்த நிகழ்வினை அடிகளார், "சிவமாய்த் தேன் அமுது ஊறும் திருவாக்கால், ஒளி சேர்வெண் திருநீற்றால் அமராடும் சிறியோனே" என்று பாடிப் பரவினார். ஆயுதங்கள் ஏதும் இல்லாமல், திருஞானசம்பந்தப் பெருமான் தமது திருவாக்கில் பிறந்த தேவாரத் திருப்பாடல்களைக் கொண்டும், திருநீற்றைக் கொண்டுமே சமணர்களோடு வாது புரிந்து வென்றார். 


கருத்துரை


முருகா! விலைமாதர் வசமாகி அழியாது இருக்க அருள்


21. கொடியருக்கு நல்ல புத்தி ஏறாது

 


"கொடியருக்கு நல்லபுத்தி சொன்னாலும்

     தெரியாது! கொடையில் லாத

மடையருக்கு மதுரகவி உரைத்தாலும்

     அவர்கொடுக்க மாட்டார் கண்டீர்!

படியளக்கும் தண்டலைநீள் நெறியாரே!

     உலகமெலாம் பரவி மூடி

விடியல்மட்டும் மழைபெயினும் அதின்ஓட்டாங்

     குச்சில்முளை வீசி டாதே!"


இதன் பொருள் ---

படி அளக்கும் தண்டலைநீள் நெறியாரே - உயிர்களுக்குத் தக்க வினைப் பயனை ஊட்டும் திருத் தண்டலையில் எழுந்தருளிய நீள் நெறியாரே!

உலகம் எலாம் பரவி மூடி விடியல் மட்டும் மழை பெயினும் - உலகெங்கும் படர்ந்து கவிந்து காலை வரையில் மழை பெய்தாலும், அதின் ஓட்டாங்குச்சில் முளை வீசிடாது - அதனால், ஓட்டாங்குச்சில்  முளைக்காது, (ஆகையால்),  கொடியருக்கு நல்ல புத்தி  சொன்னாலும் தெரியாது - தீயோருக்கு நல்லறிவு கூறினாலும் விளங்காது, கொடையில்லாத மடையருக்கு மதுரகவி உரைத்தாலும் - ஈகைப் பண்பு அற்ற பேதையருக்கு இனிய பாவைப் பகர்ந்தாலும், அவர் கொடுக்கமாட்டார் - அப் பேதையர் ஒன்றும் ஈயமாட்டார்.

      படி அளத்தல் : ஊழ்வினைக்கு ஏற்றவாறு வினைப் பயனை நுகர்வித்தல். ‘ஓட்டாங் குச்சில் முளைக்காது' என்பது மரபு மொழி.  ‘கொடிறும் பேதையும் கொண்டது விடா' என்பது பழமொழி.


70. இடம் அறிதல்

 


"தரையதனில் ஓடுதேர் நீள்கடலில் ஓடுமோ?

     சலதிமிசை ஓடுகப்பல்

தரைமீதில் ஓடுமோ? தண்ணீரில் உறுமுதலை

     தன்முன்னே கரிநிற்குமோ?


விரைமலர் முடிப்பரமர் வேணிஅர வினைவெல்ல

     மிகுகருட னால்ஆகுமோ?

வேங்கைகள் இருக்கின்ற காடுதனில் அஞ்சாமல்

     வேறொருவர் செல்லவசமோ?


துரைகளைப் பெரியோரை அண்டிவாழ் வோர்தமைத்

     துட்டர்பகை என்னசெய்யும்?

துணைகண்டு சேரிடம் அறிந்துசேர் என்றௌவை

     சொன்னகதை பொய்யல்லவே?


வரைஊதும் மாயனை அடுத்தலாற் பஞ்சவர்கள்

     வன்போர் செயித்ததன்றோ?

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."


இதன் பொருள் ---

மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர  ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

தரை அதனில் ஓடு தேர் நீள்கடலில் ஓடுமோ? - நிலத்தில் ஓடும் தேர் நீண்ட கடலில் ஓடுமோ?

சலதிமிசை ஓடு கப்பல் தரைமீதில் ஓடுமோ? - கடலில் ஓடும் கப்பல் நிலத்தின் மேல் ஓடுமோ?  ("கடல் ஓடா கால்வல் நெடுந்தேர், கடல் ஓடும் நாவாயும் ஓடா நிலத்து" எனத் திருவள்ளுவ நாயனார் அருளியது காண்க)

தண்ணீரில் உறும் முதலைதன் முன்னே கரி நிற்குமோ? - நீரில் வசிக்கும் முதலைக்கு எதிராக (நிலத்தில் வசிக்கும்) யானை நிற்குமோ? ("நெடும்புனலின் வெல்லும் முதலை, அடும் புனலின் நீங்கின் அதனைப் பிற" எனத் திருவள்ளுவ நாயனார் அருளியது காண்க.)

விரைமலர் முடிப் பரமர் வேணி அரவினை வெல்ல மிகு கருடனால் ஆகுமோ? - மணமிக்க மலரணிந்த சிவனார் திருமுடியிலுள்ள பாம்பினை வெல்ல வலிமைமிக்க கருடனால் இயலுமோ?

வேங்கைகள் இருக்கின்ற காடுதனில் வேறொருவர் அஞ்சாமல் செல்ல வசமோ? - வேங்கைகள் வசிக்கும் காட்டிலே எவரேனும் அச்சமின்றிச் செல்லமுடியுமோ?

துரைகளைப் பெரியோரை அண்டி வாழ்வோர்தமைத் துட்டர் பகை என்ன செய்யும்? - தலைவர்களையும் பெரியோர்களையும் அடைந்து வாழ்கின்றவர்களைக் கொடியவர்களின் பகைமை என்ன செய்துவிடும்?

வரை ஊதும் மாயனை அடுத்தலால் அன்றோ பஞ்சவர்கள் வன்போர் செயித்தது? - மூங்கிற்குழலை ஊதும் கண்ணபிரானைச் சார்ந்ததால் அல்லவோ பாண்டவர்கள் தங்களுடைய கொடிய போரை வென்றனர்

துணைகண்டு சேர் இடம் அறிந்துசேர் என்று ஒளவை சொன்ன கதை பொய்யல்லவே? - நல்ல துணையைக் கண்டு பிடித்துச் சேரத்தக்க இடம் அறிந்து நட்புக்கொள் என்று ஒளவை கூறிய கதை பொய்மை அல்லவே!


விளக்கம் ---

"இடன் அறிதல்" என்று திருவள்ளுவ நாயனார் அருளியுள்ள திருக்குறள் அதிகாரத்தைப் பொருள் உணர்ந்து ஓதுக. மற்றும், "சேர் இடம் அறிந்து சேர்" என்று ஔவைப் பிராட்டி அருளியதன் விளக்கமாகவே இப் பாடல் அமைந்துள்ளது காணலாம். பின்வரும் பாடல்கள் ஔவைப் பிராட்டியின் அருளுரைக்கு அரண் செய்வதாக அமைந்துள்ளமை காணலாம்.


மனத்தான் மறுவு இலரேனும் தாம் சேர்ந்த

இனத்தால் இகழப்படுவர்; --- புனத்து

வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே,

எறிபுனந் தீப்பட்டக் கால். ---  நாலடியார்.

இதன் பொருள் ---

புனத்து வெறி கமழ் சந்தனமும் வேங்கையும் வேம் எறி புனம் தீப் பட்டக்கால் - காட்டினுள்ள மணங் கமழ்கின்ற சந்தனமரமும் வேங்கைமரமும் பெருங்காற்று வீசுகின்ற அக்காடு தீப்பிடித்தால் வெந்து அழிந்துவிடும்; மனத்தால் மறு இலரேனும் தாம் சேர்ந்த இனத்தால் இகழப்படுவர் - அதுபோலவே, சான்றோர் தம் மனநலத்தால் குற்றம் அற்றவராக இருந்தாலும், தாம் சேர்ந்த தீய இனத்தினால் பெருமை குன்றிப் பழிக்கப்படுவர்.


தக்கார் வழிகெடாது ஆகும், தகாதவரே

உக்க வழியராய் ஒல்குவர், --- தக்க

இனத்தினான் ஆகும் பழியும் புகழும்,

முத்தினான் ஆகும் மதி. ---  சிறுபஞ்சமூலம்.

இதன் பொருள் ---

தக்கார் வழி கெடாது ஆகும் - தகுதியுடையாரது சந்ததி, என்றும் தளராது விருத்தி அடைவதாகும். தகாதவர் உக்க வழியராய் ஒல்குவர் - தகுதியற்றவர் அழிந்த வழியை உடையவராய்த் தளர்வார், பழியும் புகழும் தக்க இனத்தினான் ஆகும் - ஒருவனுக்கு உண்டாகும் பழியும் புகழும், அவன் சேர்ந்த இனத்தினால் உள்ளது ஆகும், மதி - அறிவானது, மனத்தினான் ஆகும் - (ஒருவனது) மனத்தின் அளவே உண்டாகும்.


கொம்பு உளதற்கு ஐந்து, குதிரைக்கு பத்துமுழம்,

வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே, - வம்புசெறி

தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து

நீங்குவதே நல்ல நெறி. --- நீதிவெண்பா.

இதன் பொருள் ---

கொம்பு உளற்கு ஐந்து - கொம்பு உள்ள விலங்குகளுக்கு ஐந்து முழத் தொலைவிலும், குதிரைக்குப் பத்து முழம் --- திரைக்குப் பத்து முழத் தொலைவிலும், வெம்பு கரிக்கு ஆயிரம் தான் வேண்டுமே - சினம் உள்ள யானைக்கு ஆயிரம் முழத் தொலைவிலும் விலகி இருக்கவேண்டும். (ஆனால்), வம்பு செறி - கொடுமைகள் மிகுந்துள்ள; தீங்கினர் தம் கண்ணில் - தீயவர்களின் கண்களில் படாமல், தெரியாத தூரத்து நீங்குவதே நல்ல நெறி - காணமுடியாத தொலைவில் விலகி இருப்பதே நல்லது. (தீயோரைக் காண்பதுவும் தீதே என்பதை எண்ணுக.


நிந்தைஇலாத் துயவரும் நிந்தையரைச் சேரில்,அவர்

நிந்தையது தம்மிடத்தே நிற்குமே, - நிந்தைமிகு

தாலநிழில் கீழ்இருந்தான் ஆன்பால் அருந்திடினும்

பால்அதுஎனச் சொல்லுமோ பார். --- நீதிவெண்பா.

இதன் பொருள் ---

நிந்தை மிகும் தால நிழல் கீழ் இருந்தான் - இழிவு மிகுந்த பனைமரத்தின் கீழ் அதன் நிழலில் அமர்ந்துள்ள ஒருவன், ஆன் பால் அருந்திடினும் - பசுவின் பாலைக் குடித்தாலும்,  பால் அது எனச் சொல்லுமோ பார் - பிறர் அதனைப் பால் அருந்துவதாகச் சொல்லுவார்களோ? நீ அதனை எண்ணிப்பார். (கள் குடிப்பதாகவே சொல்லுவார்கள்). (அதுபோல), நிந்தை இலாத் தூயவரும் - பழிக்கப்படாத மேன்மக்களும்; நிந்தையரைச் சேரில் - பழிக்கப்படும் கீழ்மக்களைச் சேர்ந்தால்,  அவர் நிந்தை அது தம் இடத்தே நிற்கும் - பழிப்புக்கு உரிய அந்த மக்களின் பழிப்புரையானது, தம்மிடமும் வந்து சேர்வதற்கு ஏதுவாகும்.


நல்லொழுக்கம் இல்லார் இடம்சேர்ந்த நல்லோர்க்கும்

நல்லொழுக்கம் இல்லாச்சொல் நண்ணுமே, -- கொல்லும்விடப்

பாம்புஎன உன்னாரே பழுதையே ஆனாலும்

தூம்பு அமரும் புற்றுஅடுத்தால் சொல். --- நீதிவெண்பா.

இதன் பொருள் ---

தூம்பு அமரும் புற்று அடுத்தால் - உள் தொளை பொருந்திய புற்றுக்குப் பக்கத்தில் கிடப்பது; பழுதையே ஆனாலும் - பழுதைக் கயிறே ஆனாலும், (இரவில் அதனைக் காண்பவர்) பாம்பு என உன்னாரே? -கொல்லும் விடத்தைக் கொண்ட பாம்பு என அதனைச் சொல்ல மாட்டார்களோ?  (அதுபோல), நல்லொழுக்கம் இல்லார் இடம் சேர்ந்த நல்லோர்க்கும் நல்லொழுக்கம் இல்லாச் சொல் நண்ணுமே - நல்லொழுக்கம் இல்லாத தீயவரைச் சேர்ந்த நல்லவர்க்கும் ஒழுக்கம் இல்லாத பழிச்சொல்லே வந்து சேரும்.


மொய்சிதைக்கும் ஒற்றுமை இன்மை, ஒருவனைப்

பொய்சிதைக்கும் பொன்போலும் மேனியை, - பெய்த

கலஞ்சிதைக்கும் பாலின் சுவையை, குலம்சிதைக்கும்

கூடார்கண் கூடி விடின். ---  நான்மணிக் கடிகை.

இதன் பொருள் ---

ஒற்றுமை இன்மை ஒருவனை மொய் சிதைக்கும் - தக்காரோடு ஒற்றுமை இல்லாமை, ஒருவனது வலிமையை ஒழிக்கும்; பொய் பொன் போலும் மேனியைச் சிதைக்கும் - பொய்ம்மையான ஒழுக்கம், பொன்னிறத்தைப் போன்ற அழகிய உடம்பை  வாடச் செய்யும்; பெய்த கலம் பாலின் சுவையைச் சிதைக்கும் - நிரப்பி வைக்கப்பட்ட பாண்டம், பாலின் இனிய சுவையைக் கெடுக்கும்; கூடார்கண் கூடிவிடின் குலம் சிதைக்கும் - கூடத் தகாதவரிடத்தில் நட்புக் கொண்டு கூடிவிட்டால், அச்செய்கை தன் குலத்தை அழிக்கும்.


தன்னை அடைக்கலமாக வந்து சார்ந்த விபீடணனை ஏற்றுக் கொள்வது குறித்து இராமபிரான் தன்னைச் சார்ந்து உள்ளோரின் கருத்துக்களை அறிந்து கொள்ள எண்ணி, அவரவர் சொல்வதைக் கேட்கின்றார். "செம்மை இல் அரக்கரில் யாவர் சீரியோர்?" என்கின்றான் சுக்கிரீவன். நேரிடையாகப் பகைமை  இல்லாத போதும் அண்ணனைப் பிரிந்து வந்த வீபிடணன் செயல் அறமாகுமா என்பது சுக்கிரீவன் கேள்வி. அரக்கர்களிடையே நல்லவர்கள் இருக்கமுடியாது என்பதும் அவன் கருத்து.

ஆனால், சாம்பவான் கூறும் கருத்து, சிற்றினத்தவர் ஆகிய அரக்கரோடு சேருதல் கூடாது என்பதே. சாம்பவான் கூற்றாக, கம்பர் கூறும் கருத்துக்கள், மேற்கூறிய திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதைக் காணலாம்.

அறிஞரே ஆயினும், அரிய தெவ்வரைச்

செறிஞரே ஆவரேல், கெடுதல் திண்ணமாம்;

நெறிதனை நோக்கினும், நிருதர் நிற்பது ஓர்

குறி நனி உளது என உலகம் கொள்ளுமோ?

இதன் பொருள் ---

அறிஞரே ஆயினும் - கற்றறிந்த அறிஞர்களே ஆனாலும்; அரிய தெவ்வரை - நம்புவதற்கு இயலாத பகைவர்களை;   செறிஞரே ஆவரேல் - சேர்ந்தவர் ஆவார் என்றால்; கெடுதல்  திண்ணமாம் - அவர்களைச் சேர்த்துக் கொண்டவர்கள் கெடுவது   உறுதியாகும்; நெறிதனை நோக்கினும் - வீடணன் கூறும் அற   நெறியை  ஆராய்ந்தாலும்;  நிருதர் நிற்பதோர் குறி - அரக்கர்கள் நிற்பதாகிய  ஒரு குறிக்கோளான அறநெறி;  நனி உளது என - மிக உள்ளது என்று; உலகம் கொள்ளுமோ - உலகம் ஏற்றுக் கொள்ளுமோ?


வெற்றியும் தருகுவர், வினையம் வேண்டுவர்,

முற்றுவர், உறு குறை முடிப்பர், முன்பினால்-

உற்றுறு நெடும் பகை உடையர். அல்லதூஉம்,

சிற்றினத்தவரொடும் செறிதல் சீரிதோ?   --- கம்பராமாயணம்.

இதன் பொருள் ---

வெற்றியும் தருகுவர் -  (விபீடணனைப் போன்றவர்களை நம்முடன் சேர்த்துக் கொண்டால்) வெற்றி தேடித் தரலாம்;  வினையம் வேண்டுவர் - நமக்குத் தேவையான   யோசனைகளையும் கூறுவர்; முற்றுவர் - நமது காரியங்களை  முடித்தும் தருவர்;   உறுகுறை முடிப்பர் - வேறு ஏதேனும்  குறைகள் இருந்தாலும் அதை மாற்றி நலம் புரிவர்;  முன்பினால்  -(ஆனால்) முன்பிருந்தே;  உற்றுறு நெடும் பகை உடையர் -  நம்முடன் அரக்கர்கள் பெரிய பகை உடையவராவர்;   அல்லதூஉம்    - அதுவும் அல்லாமல்;  சிற்றினத்தவரொடும் --- இவர்களை    ஒத்த சிற்றினத்தவருடன்; செறிதல் சீரிதோ? - சேர்தல் சிறப்புடையதாகுமோ?


86. அரசவைக் கணக்கன்

 


"வரும்ஓலை உத்தரத் தெழுதிவரு பொருளினால்

     வரவிடுப் போன்ம னதையும்,

  மருவிவரு கருமமும் தேசகா லத்தையும்

     வருகர தலாம லகமாய்


விரைவாய் அறிந்தரசர் எண்ணில்எண் ணினையள

     விடஎழு தவாசிக் கவும்

  வெற்றிகொண் டேபெரிய புத்தியுடை யோன்புவி யின்

     மேன்மைரா யசகா ரன்ஆம்;


கருவாய் அறிந்து தொகை யீராறு நொடியினிற்

     கடிதேற் றிடக்கு றைக்கக்

  கடுகையொரு மலையாக மலையையொரு கடுகுமாக்

     காட்டுவோன் கருணீ கன்ஆம்;


அருவாகி உருவாகி ஒளியாகி வெளியாகும்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---


அரு ஆகி உரு ஆகி ஒளி ஆகி வெளி ஆகும் அண்ணலே - அருவமாகவும், உருவமாகவும், ஒளியாகவும், வெளியாகவும் உள்ள பெரியோனே!, அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 


வரும் ஓலை உத்தரத்து எழுதிவரு பொருளினால் - வருகின்ற ஓலையின் புறத்திலே எழுதிவிட்ட பொருளைக் கொண்டு, வர விடுப்போன் மனதையும் - ஓலையை விட்டவன் உள்ளத்தையும், மருவி வரு கருமமும் - அவன் விரும்பிய தொழிலையும், தேச காலத்தையும் - இடத்தையும் காலத்தையும், வரு கரதல ஆமலகம் ஆய், விரைவாய் அறிந்து - உள்ளங்கையில் உள்ள நெல்லிக்கனியாக நொடியில் உணர்ந்து, அரசர் எண்ணில் எண்ணினை அளவு இட எழுத வாசிக்கவும் - அரசருடைய கருத்தில் உள்ள கருத்தை மதிப்பிடவும் எழுதவும் வாசிக்கவும், வெற்றி கொண்டே பெரிய புத்தியுடையோன் புவியின் மேன்மை ராயச காரன் ஆம் - தேர்ச்சி பெற்றுப் பேரறிவு உடையோன் உலகிலே பெருமை பெற்ற அரசாங்க எழுத்தாளன் ஆவான், தொகை வருவாய் அறிந்து ஈராறு நொடியினில் கடிது ஏற்றிடக் குறைக்க - ஒரு தொகையை மனத்தில் உணர்ந்து பன்னிரு விநாடியில் விரைவாகக் கூட்டவும் குறைக்கவும், கடுகை ஒரு மலை ஆக மலையை ஒரு கடுகும் ஆ(க)க் காட்டுவோன் கருணீகன் ஆம் - கடுகை மலை போலவும், மலையைக் கடுகுபோலவும் ஆக்கிக் காண்பிக்க வல்லவன் அரசாங்கக் கணக்கன் ஆவான்.

      எழுத்தாளரும் கணக்குப் பார்ப்போரும் கணக்கர் எனவே வழங்கப்படுகின்றனர். ஆமலகம் - நெல்லி. கரதலாமலகம் (கர தல ஆமலகம்) என்பது வெளிப்படை என்பதை விளக்கும் சொல். கையில் வைத்திருக்கும் பொருள் தெரிவதைப் போலத் தெளிவித்தல் என்பதே அதனால் விளக்கப்படும் பொருள்.


உலகநீதி - 12

 


"கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம்;

    கொண்டைமேற் பூத்தேடி முடிக்க வேண்டாம்;

தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்;

    துர்ச்சனராய்த் திரிவாரோ டிணங்க வேண்டாம்;

வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்;

    வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்;

மாறான குறவருடை வள்ளி பங்கன்

    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!"


இதன் பொருள் ---

ஒரு குடியை - ஒரு குடும்பத்தை, கூறு ஆக்கி - பிரிவு படுத்தி, கெடுக்கவேண்டாம் - கெடுக்காதே.

பூ தேடி - பூவைத் தேடி, கொண்டை மேல்- கொண்டையின் மீது, முடிக்க வேண்டாம் - முடித்துக் கொள்ளாதே.

தூறு ஆக்கி - (பிறர்மீது) பழிச்சொற்களை உண்டாக்கி, தலையிட்டு - தலைப்பட்டுக் கொண்டு, திரியவேண்டாம் - அலையாதே.

துர்ச்சனாய் - தீயவர்களாகி, திரிவாரோடு - (ஊர்தொறும்) அலைவருடன், இணங்கவேண்டாம் - சேராதே.

வீறு ஆன - பெருமை மிக்க, தெய்வத்தை - தெய்வத்தை இகழவேண்டாம் - இகழாதே.

வெற்றி உள்ள - மேன்மை உடைய, பெரியோரை - பெரியோர்களை, வெறுக்க வேண்டாம் - வெறுக்காதே.

மாறு ஆன - (மற்ற நிலத்தில் உள்ளாருடன்) பகைமை உடையராகிய, குறவர் உடை - குறவர்களுடைய (மகளாகிய), வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே-மனமே, வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக.


விளக்கம் ---

ஒரு குடியில் ஒற்றுமையுடன் வாழ்பவர்களைப் பிரிவு செய்தல் கூடாது. (கூறு - பிளவு; பிரிவு.)  பிறர் காணும்படி கொண்டை மேல் பூ முடித்துக்கொண்டு தூர்த்தர் போலத் திரிவது ஆகாது என்று சொல்லப்பட்டது. முன் இருந்து பார்த்தால் தலையில் சூடி உள்ள பூ தெரியாத வகையில் பூச்சூடிக் கொள்ள வேண்டும். மலரைக்  கண்டால் இறைவனுக்குச் சாத்த வேண்டும். பிறர்மேல் பழிச்சொற்களைக் கட்டிவிட்டு, அதுவே தொழிலாகத் திரிதல் கூடாது. (தலையிடல் - தொடர்பு வைத்துக் கொள்ளுதல்; பொறுப்பேற்றல்.) தீய தொழில் உடையாருடன் சேர்தல் கூடாது. துர்ச்சனர் - துட்டர், தீயோர். "தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற தீயார்சொல் கேட்பதுவும் தீதே; தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோ(டு இணங்கி இருப்பதுவும் தீது." என்னும் ஔவையார் அருள்மொழியைக் கருத்தில் கொள்க.  பெருமையுள்ள தெய்வத்தை இகழ்ந்து உரைத்தல் கூடாது. "தெய்வம் இகழேல்" என்பது ஔவையிர் அருள்மொழி. கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்து விளங்கும் பெரியோரை வெறுத்தல் கூடாது. "பெரியாரைத் துணைக் கோடல்" எனவும், "பெரியாரைப் பிழையாமை" எனவும் திருவள்ளுவ நாயனார் வகுத்துள்ள திருக்குறள் அதிகாரங்களைக் காண்க.


20. சொன்னதைச் சொல்லும் கிளி

 


"சொன்னத்தைச் சொல்லும்இளங் கிள்ளையென்பார்

     தண்டலையார் தொண்டு பேணி

இன்னத்துக் கின்னதென்னும் பகுத்தறிவொன்

     றில்லாத ஈனர் எல்லாம்

தன்னொத்துக் கண்டவுடன் காணாமல்

     முறைபேசிச் சாடை பேசி

முன்னுக்கொன் றாயிருந்து பின்னுக்கொன்

     றாய்நடந்து மொழிவர் தாமே."

இதன் பொருள் ---

இளங்கிள்ளை சொன்னத்தைச் சொல்லும் என்பார் - இளங்கிளி நாம் சொன்னத்தையே சொல்லும் என்று கூறுவார்கள், (அவ்வாறு) தண்டலையார் தொண்டு பேணி இன்னத்துக்கு இன்னது எனும்  பகுத்தறிவு ஒன்று இல்லாத ஈனர் எல்லாம் - திருத் தண்டலை இறைவருக்குத் தொண்டு புரிய விரும்பி, இதற்கு இது என்று அறியும் பகுத்தறிவு சிறிதும் பெறாத இழிந்தோர் யாவரும், தன் ஒத்துக் கண்டவுடன் முறை பேசி - தன்னை நேரே பார்த்தவுடன் தகுதிப்படி உரையாடி, காணாமல் சாடை பேசி - காணாதபோது குறிப்பாக இகழ்ந்து கூறி, (இவ்வாறு), முன்னுக்கு ஒன்றாய் இருந்து - எதிரில் ஒருவாறு நடந்து கொண்டும், பின்னுக்கு ஒன்றாய் நடந்து - காணாதபோது ஒருவாறு நடந்து கொண்டும் மொழிவர். (அவ்வாறே முன்னுக்குப் பின் வேறாக) பேசுவதும் செய்வார்கள்.

திருத் தண்டலையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளுக்குத் தொண்டு பேணுவதனால் பகுத்தறிவு பெறலாம். அவ்வாறு செய்யாத ஈனர்கள் யாவரும் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போன்றவர்கள் என்றும், அத்தகையோர் ஒருவரைக் கண்டால் ஒன்றும்,  காணாதபோது ஒன்றுமாகப் பேசியும் நடந்தும் வருவார்கள் என்று உணர்க.  ‘சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை' என்பது பழமொழி, ‘முறைபேசிச் சாடைபேசி' ‘முன்னுக்கு ஒன்றாய் இருந்து பின்னுக்கு ஒன்றாய் நடந்து மொழிவர்' என்பன மரபு மொழிகள். 


69. காலம் அறிந்து செய்க

 


"காகம் பகற்காலம் வென்றிடும் கூகையை;

     கனகமுடி அரசர்தாமும்

கருதுசய காலமது கண்டந்த வேளையில்

     காரியம் முடித்துவிடுவார்;


மேகமும் பயிர்காலம் அதுகண்டு பயிர்விளைய

     மேன்மேலும் மாரிபொழியும்;

மிக்கான அறிவுளோர் வருதருண காலத்தில்

     மிடியாள ருக்கு தவுவார்;


நாகரிகம் உறுகுயில் வசந்தகா லத்திலே

     நலம்என் றுகந்துகூவும்;

நல்லோர் குறித்ததைப் பதறாமல் அந்தந்த

     நாளையில் முடிப்பர்கண்டாய்;


வாகனைய காலைகல் மாலைபுல் எனும்உலக

     வாடிக்கை நிசம்அல்லவோ!

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.


இதன் பொருள் ---

மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர  ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

காகம் கூகையைப் பகற்காலம் வென்றிடும் - காகம் கோட்டானைப் பகல் காலத்திலே வெல்லும்; 

கனகமுடி அரசர் தாமும் கருது சய காலம் அது கண்டு அந்த வேளையில் காரியம் முடித்து விடுவார் - பொன்முடி புனைந்த மன்னர்களும் அவ்வாறே தங்களுக்கு வெற்றி உண்டாகும் காலத்தை அறிந்து பகையை வெற்றி கொள்வர்; 

மேகமும் கார்காலம் அது கண்டு பயிர் விளைய மேன்மேலும் மாரி பொழியும் - மேகமும் மழைக் காலத்திலே பயிர்கள் விளைவதற்குத் தொடர்ச்சியாக மழைபெய்யும்;  

மிக்கான அறிவு உ(ள்)ளோர் மிடியாளருக்குத் தருணம் வருகாலத்தில் உதவுவார் - பேரறிவாளர் வறியவருக்குக் காலம் அறிந்து பொருள் உதவி செய்வார்; 

நாகரிகம் உறு குயில் வசந்த காலத்திலே நலம் என்று உகந்து கூவும் - அழகிய குயில் வேனில் காலமே நல்லது என்று விரும்பிக் கூவும்; 

நல்லோர் குறித்ததைப் பதறாமல் அந்த அந்த நாளையில் முடிப்பர் - நல்லறிவாளர் தாம் நினைத்ததை அமைதியாக அவ்வக்காலத்திலே நிறைவேற்றிக் கொள்வர்;

வாகு அனைய காலை கல் - அழகிய இளமைப் பருவம் கல்வி கற்க உறுதியானதாகும்; மாலை புல் - முதுமைப் பருவம் அற்பம் ஆனதாகும்; எனும் உலக வாடிக்கை நிசம் அல்லவோ? - என்று கூறும் உலகியல் மொழி உண்மையானது அல்லவோ?


      "பகல்வெல்லும் கூகையைக் காக்கை; இகல் வெல்லும் - வேந்தர்க்கு வேண்டும்பொழுது" என்னும் திருக்குறள் கருத்து இங்கே வந்துளது. வசந்த காலம் : இளவேனில் முதுவேனில் எனப்படும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடித்திங்கள்கள், ‘காலை கல்; மாலை புல்' என்பது பழமொழி. இளமைப் பருவமானது கல்வி கற்கவும், கற்ற நெறியில் நின்று அறம் புரியவும் உகந்த காலம். முதுமையில் செய்வோம் என்பது அறிவீனம். காரணம், நாளை இருப்போம் என்பது உறுதி இல்லை.  "இளமையில் கல்" என்றார் ஔவைப் பிராட்டியார்.

"வேதங்களில் மன்னர்களுக்கெனக் கூறப்பட்டுள்ள வேள்விகளை முதலில் நீ செய்ய வேண்டும். அதை நாளை செய்யலாம் என்று தள்ளிப் போடலாகாது. இன்று இருப்போர் நாளை இருப்பது உறுதியில்லை. எனவே, அந்த அறவேள்விகளை உடனே செய்யத் தொடங்குவாயாக!  தமது வாழ்நாள் இவ்வளவு என்று உணர்ந்தவர் உலகில் யாரும் இல்லை." என்னும் கருத்துக்களை மன்னன் காதுகாளில் மாடலன் விதைத்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

"வானவர் போற்றும் வழி நினக்களிக்கும்

நான் மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்

"அருமறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய

பெருநல் வேள்வி நீ செயல் வேண்டும்,

நாளைச் செய்குவம் அறம் எனில், இன்றே

கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்

இது என வளர்ந்து வாழு நாள் உணர்ந்தோர்

முதுநீர் உலகில் முழுவதும் இல்லை."   --- சிலப்பதிகாரம்.


"யார் அறிவார் சாநாளும், வாழ்நாளும்" என்பது திருஞானசம்பந்தர் தேவாரம்.


"இன்றுகொல், அன்றுகொல், என்றுகொல் என்னாது,

பின்றையே நின்றது கூற்றம் என்று எண்ணி,

ஒருவுமின் தீயவை, ஒல்லும் வகையால்

மருவுமின் மாண்டார் அறம்."

என்பது நாலடியார்.  " இன்று வருவானோ? இன்னொரு நாள் வருவானோ? அல்லது என்றைக்கு வருவானோ? எனம் என்று எண்ணிக் கொண்டு இருக்காதீர்கள். அவன் உங்க்ளின் பின்னாலேயே நின்று கொண்டு, உங்களின் உயிரைக் கவர்ந்து செல்ல அவன் எப்போதுமே தயாராகவே இருக்கிறான் என்பதை உணர்ந்து, ஊயவை செய்வதை விட்டு ஒழியுங்கள். இயன்ற வரையில் பெருமை தரும் அறச் செயல்களைச் செய்யுங்கள்" என்கிறது நாலடியார்.


"தோற்றம் அரிதாய மக்கட் பிறப்பினால்

ஆற்றும் துணையும் அறஞ்செய்க, மாற்று இன்றி

அஞ்சும் பிணிமூப்பு அருங்கூற்று உடன் இயைந்து

துஞ்சு வருமே துயக்கு. --- பழமொழி நானூறு.

இதன் பொருள் --- 

அறிவின் மயக்கம், அஞ்சத் தகும் நோய், மூப்பு, அருங்கூற்று என்ற இவைகளுடன் சேர்ந்து, தடையில்லாது இறந்து படுமாறு வந்து சேரும். ஆதலால், தோன்றுதற்கு அருமையாகிய இம் மக்கள் பிறப்பைப் பெற்றதனால் ஒல்லும் வகையான் அறவினையைச் செய்க.


"வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி, வறிஞர்க்கு என்றும்

நொய்யில் பிளவு அளவேனும் பகிர்மின்கள், நுங்கட்குஇங்ஙன்

வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல்,

கையிற் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே."    ---  கந்தர் அலங்காரம்.

இதன் பொருள் --- 

உலகத்தீரே! உங்களுக்கு இங்கே வெய்யிலுக்கு ஒதுங்கி நிற்க உதவாத, இந்த உடம்பின் பயனற்ற நிழலைப் போல, மரண காலத்தில் ஆன்மா புறப்பட்டுச் செல்லும் இறுதி வழிக்கு, உங்கள் கையில் இப்போது உள்ள பொருளும் துணை செய்யாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எனவே, கூரிய வேலாயுதத்தை உடைய முருகப் பெருமானைத் துதித்து, ஏழைகளுக்கு எக்காலமும், நொய்யில் பாதி அளவாவது பகிர்ந்து கொடுத்து வாழுங்கள்.


85. தானைத் தலைவன், அமைச்சன், படைத் தலைவன்

 


"தன்னரசன் வலிமையும், பரராசர் எண்ணமும்,

     சாலமேல் வருக ருமமும்

  தானறிந் ததிபுத்தி உத்தியுண் டாயினோன்

     தானாதி பதியா குவான்;


மன்னவர் மனத்தையும், காலதே சத்தையும்,

     வாழ்குடி படைத்தி றமையும்,

  மந்திரா லோசனை யும்எல்லாம் அறிந்தவன்

     வளமான மதிமந் திரி;


துன்னிய படைக்குணம் கரிபரி பரீட்சையே,

     சூழ்பகைவர் புரிசூழ்ச் சியும்,

  தோலாத வெற்றியும் திடமான சித்தியுள

     சூரனே சேனா திபன்


அன்னையினும் நல்லமலை மங்கைபங் காளனே!

     அனகனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


 இதன் பொருள் ---

அன்னையினும் நல்ல மலைமங்கை பங்காளனே - தாயினும் நல்லருள் புரியும் மலைமகளாகிய உமையம்மையாரை இடப்பாகத்தில் கொண்டவனே!, அனகனே - தூயவனே! அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

தன் அரசன் வலிமையும் பரராசர் எண்ணமும் சால மேல்வரு கருமமும் தான் அறிந்து - தன் அரசனுடைய ஆற்றலும், மாற்றரசர் நினைவும், நன்றாகப் பின்வரும் அலுவலும் ஆராய்ந்து, அதி புத்தி உத்தி உண்டாயினோன் தான அதிபதி ஆகுவான் - சிறந்த அறிவும் சூழ்ச்சியும் பொருந்தியவன் தானைத் தலைவன் எனப்படுவான்,

  மன்னவர் மனத்தையும், கால தேசத்தையும், வாழ்குடி படைத் திறமையும், மந்திர ஆலோசனையும் எல்லாம் - அரசர்களின் உள்ளக் கருத்தையும், காலத்தையும், இடத்தையும், வாழ்கின்ற குடிபடைகளின் ஆற்றலையும், ஆராய்ச்சித் திறனையும், அறிந்தவன் வளமான மதி மந்திரி - தெரிந்தவன் தேர்ச்சிபெற்ற அறிவுடைய அமைச்சன் ஆவான், 

துன்னிய படைக் குணம் - செறிவான படைகளின் இயல்பும், கரி பரி பரீட்சையே - யானை குதிரைகளின் தேர்ச்சியும், சூழ் பகைவர் புரி சூழ்ச்சியும் - சூழந்துள்ள மாற்றலர் செய்யும் சூழ்ச்சியும், தோலாத வெற்றியும் - பின் வாங்காத வெற்றியும், திடமான சித்தி(யும்) உறுதியான சித்தியும், உள சூரனே சேனாதிபன் - உடைய வீரனே படைத்தலைவன் ஆவான்.


உலகநீதி - 11

 

 "அஞ்சுபேர்க் கூலியைக்கைக் கொள்ள வேண்டாம்;

    அதுவேதிங் கென்னின்நீ சொல்லக் கேளாய்,

தஞ்சமுடன் வண்ணான், நாவிதன்றன் கூலி,

    சகலகலை யோதுவித்த வாத்தியார் கூலி,

வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவிச்சி கூலி,

    மகாநோவு தனைத்தீர்த்த மருத்துவன்றன் கூலி,

இன்சொலுடன் இவர்கூலி கொடாத பேரை

    ஏதேது செய்வானோ ஏமன் றானே."


பதவுரை ---

அஞ்சுபேர் கூலியை - ஐவருடைய கூலியை ; கைக்கொள்ள வேண்டாம் - கொடுக்காமல் வைத்த இருக்க வேண்டாம் (கொடுத்து விடவேண்டும்), அது - அக் கூலி, ஏது என்னின் - யாது என்று கேட்பின், சொல்ல - நான் சொல்கின்றேன், நீ கேளாய் - நீ கேட்பாயாக, வண்ணான் கூலி - வண்ணானுடைய கூலியும், நாவிதன் கூலி - அம்பட்டன் கூலியும், சகலகலை - பல கலைகளையும், ஓதுவித்த - படிப்பித்த, வாத்தியார் கூலி - ஆசிரியர் கூலியும், வஞ்சம் அற - வஞ்சனை நீங்க, நஞ்சு அறுத்த - நச்சுக் கொடி அறுத்த, மருத்துவிச்சி கூலி - மருத்துவிச்சியின் கூலியும், மகாநோவு தனை (நீக்குவதற்கு அரிய) கொடிய நோயினை, தீர்த்த - நீக்கிய, மருத்துவன் கூலி - வைத்தியன் கூலியும், (ஆம்); இவர் கூலி இவருக்குக் கொடுக்க வேண்டிய கூலியை, தஞ்சமுடன்- அன்புடனும், இன்சொல்லுடன் - இன்சொல்லோடும், கொடாத பேரை - கொடுக்காதவர்களை , ஏமன் - இயமன், ஏது ஏது - என்ன என்ன துன்பம், செய்வானோ- செய்வானோ, (நான் அறியேன்).

விளக்கம் --

வண்ணான், அம்பட்டன், ஆசிரியர், மருத்துவிச்சி, மருத்துவன் என்னும் ஐவரின் கூலியையும் கொடுத்துவிட வேண்டும். இல்லையேல் எமனால் துன்புறுத்தப்படுவார்கள்.


19. எண்ணம் பொய்யாகும் - எழுத்தே மெய்யாகும்

 

"மண்ணுலகா ளவும்நினைப்பார், பிறர்பொருள்மேல்

     ஆசைவைப்பார், வலிமை செய்வார்,

புண்ணியம்என் பதைச்செய்யார், கடைமுறையில்

     அலக்கழிந்து புரண்டே போவார்;

பண்ணுலவு மொழிபாகர் தண்டலையார்

     வகுத்தவிதிப் படியல் லாமல்

எண்ணமெல்லாம் பொய்யாகும்! மௌனமே

     மெய்யாகும் இயற்கை தானே!"


இதன் பொருள் ---


பண்  உலவும் மொழி பாகர் தண்டலையார் வகுத்த  விதிப்படி அல்லாமல் - இனிய இசையைப் போன்ற மொழியை உடைய  உமையம்மையாரைத் தனது திருமேனியின் இடப்பாகத்தில் கொண்டவரான திருத்தண்டலை இறைவர் வகுத்து இட்ட கட்டளையின் வண்ணமே  நடக்கும் அன்றி, எண்ணம் எல்லாம் பொய் ஆகும் - நினைத்தவை யாவும்  நடவாமல் பொய்த்துப் போகும். மௌனமே மெய் ஆகும் இயற்கை - (சிவபரம்பொருளின் திருவருளை மனதில் சிந்தித்துப்) பேசாதிருப்பதே நலந்தருந் தன்மை உடையது, (ஆகையால்) மண் உலகு ஆளவும் நினைப்பார் - நிலவுலகை ஆள நினைப்பவரும், பிறர்  பொருள்மேல் ஆசை வைப்பார் - மற்றவர் பொருளுக்கு ஆசைப்படுவோரும், வலிமை செய்வார் - தமது ஆற்றலால் (பிறர்க்குக் கேடு) செய்வோரும், புண்ணியம் என்பதைச் செய்யார் - சிறிதும் புண்ணியச் செயல்களைச் செய்யாதவரும், கடைமுறையில் அலக்கழிந்து புரண்டே போவார் - இறுதியில் மனக் கலக்கமுற்றுக்  கெட்டு அழிவார்கள்.

அவரவர் செய்யும் வினைக்கேற்பப் பயன்களை இறைவர்  கூட்டுவார். ஆகையால் நாம் நினைத்தவாறே எதுவும்  முடியாமல் நம் வினையின் பயனை நோக்கி இறைவர் கூட்டியவாறே முடியும். ‘எண்ணமெல்லாம் பொய்! எழுத்தின்படி மெய்'  என்பது பழமொழி. பேராசை கொண்டு பிறர்க்குக் கேடு செய்வோர் கெடுவது திண்ணம். எனவே, தீய செயல்களில் மனத்தைச் செலுத்துவதை விடுத்து, நற்செயல்களை இறைவன் திருவருளை எண்ணிச் செய்து வாழ்வதே நன்மையைத் தரும் என்பது சொல்லப்பட்டது.


68. அன்புக்கு எல்லை இல்லை

 

கதிரவன் உதிப்பதெங் கே?நளினம் எங்கே?

     களித்துளம் மலர்ந்ததென்ன?

கார்மேகம் எங்கே? பசுந்தோகை எங்கே?

     கருத்தில்நட் பானதென்ன?


மதியம்எங் கே?பெருங் குமுதம்எங் கே?முகம்

     மலர்ந்துமகிழ் கொண்டதென்ன;

வல்லிரவு விடிவதெங் கே?கோழி எங்கே?

     மகிழ்ந்துகூ விடுதல்என்ன?


நிதியரசர் எங்கே யிருந்தாலும் அவர்களொடு

     நேசம்ஒன் றாயிருக்கும்;

நீதிமிகு நல்லோர்கள் எங்கிருந் தாலும்அவர்

     நிறைபட்சம் மறவார்கள்காண்;


மதிலுடன் கோபுரமும் வாவியும் புடைசூழ

     மருவுசோ ணாட்டதிபனே

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.


இதன் பொருள் ---


மதிலுடன் கோபுரமும் வாவியும் புடைசூழ மருபு சோணாட்டு அதிபனே! - மதிலும் கோபுரமும் பொய்கையும் சூழ்ந்திருக்கும் சோழநாட்டுத் தலைவனே!

மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர  ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

கதிரவன் உதிப்பது எங்கே? - சூரியன் இதிக்கும் இடம் எங்கே?, நளினம் எங்கே? - தாமரை இருக்குமிடம் எங்கே?, உளம் களித்து மலர்ந்தது என்ன ? - மன மகிழ்ச்சியுடன் தாமரை ஏன் மலர்கிறது?, 

கார்மேகம் எங்கே? - கருமையான மேகம் எங்கே உள்ளது?, பசுந்தோகை எங்கே? - பசிய தோகையினை உடைய மயில் எங்கு உள்ளது?, கருத்தில் நட்பு ஆனது என்ன? - மனம் உவந்து நட்புக் கொண்டது ஏன்?

மதியம் எங்கே? - திங்கள் எங்கே உள்ளது? பெருங் குமுதம் எங்கே? - பெரிய அல்லிமலர் எங்கே உள்ளது?, முகம் மலர்ந்து மகிழ்கொண்டது என்ன? - முகமலர்ச்சியுடனே இன்பம் அடைவது ஏன்?

வல்இரவு விடிவது எங்கே - கொடிய இராப்பொழுது நீங்குவது எப்படி?, கோழி எங்கே? - சேவற்கோழியின் நிலைமை எப்படி?, மகிழ்ந்து கூவிடுதல் என்ன? - சேவற்கோழி விடியலை அறிந்து எங்ஙனம் கூவுகிறது?,

நிதி அரசர் எங்கே இருந்தாலும் அவர்களொடு நேசம் ஒன்றாய் இருக்கும் - செல்வம் மிக்க அரசர்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவர்களுடைய நட்பு மாறாமலே இருக்கும்; 

நீதிமிகு நல்லோர்கள் எங்கு இருந்தாலும் அவர் நிறைபட்சம் மறவார்கள் - நீதிநெறி அறிந்த நல்லோர்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவர்களுக்குள் நிறைந்த அன்பை மறந்துவிடமாட்டார்கள்.

     அன்புக்கு எல்லையில்லை என்பது சொல்லப்பட்டது.


84. வேளாளர் சிறப்பு

 

"யசனாதி கருமமும் தப்பாமல் வேதியர்

     இயற்றிநல் லேர்பெ றுவதும்,

  இராச்யபா ரஞ்செய்து முடிமன்னர் வெற்றிகொண்

     டென்றும்நல் லேர்பெ றுவதும்,


வசனாதி தப்பாது தனதா னியந் தேடி

     வசியர்நல் லேர்பெ றுவதும்,

  மற்றுமுள பேரெலாம் மிடியென்றி டாததிக

     வளமைபெற் றேர்பெ றுவதும்,


திசைதோறும் உள்ளபல தேவா லயம்பூசை

     செய்யுநல் லேர்பெ றுவதும்,

  சீர்கொண்ட பைங்குவளை மாலைபுனை வேளாளர்

     செய்யும்மே ழிப்பெ ருமைகாண்,


அசையாது வெள்ளிமலை தனில்மேவி வாழ்கின்ற

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

வெள்ளிமலை தனில் அசையாது மேவி வாழ்கின்ற அண்ணலே - வெள்ளிமலை என்னும் திருக்கயிலையில் எப்போதும் பொருந்தி வீற்றிருக்கும் பெரியோனே! 

அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

வேதியர் யசனம் ஆதி கருமமும் தப்பாமல் இயற்றி, நல் ஏர் பெறுவதும் - மறையவர் வேள்வி முதலிய தொழில்களைத் தவறாமல் செய்து பேரழகு பெறுவதும், முடிமன்னர் என்றும் வெற்றி கொண்டு இராச்சிய பாரம் செய்து நல் ஏர் பெறுவதும் - முடியரசர் எப்போதும் பகைவரை வென்றிகொண்டு, ஆட்சி புரிந்து சிறப்பு அடைவதும், வசியர் வசனம் ஆதி தப்பாது தனதானியம் தேடி நல் ஏர் பெறுவதும் - வணிகர் சொல் முதலிய பிறழாமல் பொன்னும் தானியமும் ஈட்டிச் சிறப்புப் பெறுவதும், மற்றும் உள  பேரெலாம் மிடி என்றிடாது அதிக வளமை பெற்று ஏர் பெறுவதும் - மேலும் உள்ள யாவரும் வறுமை என்று கூறாமல் மிக்க வளம் பெற்று சிறப்பு உறுவதும், திசைதோறும் உள்ள பல தேவாலயம் பூசை செய்யும் நல் ஏர் பெறுவதும் - எல்லாத் திக்கினும் இருக்கும் பல திருக்கோயில்களும் வழிபாடு பெற்று சிறப்புப் பெறுவதும், சீர் கொண்ட பைங்குவளை மாலை புனை வேளாளர் செய்யும் மேழிப் பெருமை - புகழ் பெற்ற பசிய குவளைமலர் மாலை அணிந்த வேளாளர் புரியும் உழவின் பெருமையாகும்.

      யசனம் - வேள்வி. வைசியர் என்பது வசியர் எனச் செய்யுள் விகாரம் பெற்றது.


24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...