053. சுற்றம் தழால் - 08. தமராகி

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 53 -- சுற்றம் தழால்


இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "முன்னே சுற்றத்தாராக இருந்து, ஏதேனும் ஒரு காரணத்தால் தன்னோடு பொருந்தாமல், தன்னைப் பிரிந்து போனவர், மீண்டும் வந்து சுற்றத்தார் ஆகுதல், அப் பொருந்தாமைக்கான காரணம் தன்னிடத்து இல்லாமையால், தானே உண்டாகும்" என்கின்றார் நாயனார்.

ஒருவன் தான் ஒழுகவேண்டிய நெறியைக் கடந்து தீயவழியில் நடப்பதாலும், எல்லோரும் வெறுக்கக் கூடிய செயல்களைச் செய்வதாலும், சுற்றத்தார் நீங்குவர்.  பின்னர், அவன் நன்னெறியில் ஒழுகுவானாயின், முன்னே அவர்கள் நீங்கிய காரணம் இப்போது ஒழியவே, சுற்றத்தவர்க்கு உள்ள அன்பின் மிகுதியால் பழைய முறைப்படி மீண்டும் சுற்றத்தாராக வந்து நிற்பர்.

தீய வழியில் நடத்தலாவது, அறநூல், பொருள் நூல், நீதிநூல் கூறியவாறு நடக்காது, தான் விரும்பியவாறு நடத்தல்; அறிவு உடையார் வெறுக்கத்தக்க செயல்களைச் செய்தல்.


இதற்குத் திருக்குறள்....

“தமர்ஆகித் தன்துறந்தார் சுற்றம், அமராமை

காரணம் இன்றி வரும்.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

தமர் ஆகித் தன் துறந்தார் சுற்றம் --- முன் தமராய் வைத்துத் தன்னோடு அமராது யாதானும் ஒரு காரணத்தால் தன்னைப் பிரிந்து போயவர் பின்னும் வந்து சுற்றமாதல், 

அமராமைக் காரணம் இன்றி வரும் --- அவ் அமராமைக் காரணம் தன் மாட்டு இல்லையாகத் தானே உளதாம்.

('அமராமைக் காரணம் இன்றி' என்றதனான் முன் அஃது உண்டாய்த் துறத்தல் பெற்றாம்'. அஃதாவது, அரசன் தான் நெறிகெட ஒழுகல், வெறுப்பன செய்தல் என்றிவை முதலியவற்றான் வருவது. 'ஆக்கம்' வருவிக்கப்பட்டது. இயற்கையாகவே அன்புடையராய சுற்றத்தார்க்குச் செய்கையான் வந்த நீக்கம் அதனை யொழிய ஒழியும், ஒழிந்தால் அவர்க்கு அன்பு செய்துகொள்ள வேண்டா, பழைய இயல்பாய் நிற்கும் என்பார் 'வரும்' என்றார்.)


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளதை அறியலாம்...

“தமர் என்று தாம் கொள்ளப் பட்டவர் தம்மைத்

தம் அன்மை தாம் அறிந்தார் ஆயின், அவரைத்

தமரினும் நன்கு மதித்துத் தமர் அன்மை

தம்முள் அடக்கிக் கொளல்.” --- நாலடியார்.

இதன் பொருள் ---

தமர் என்று தாம் கொள்ளப்பட்டவர் தம்மைத் தமரன்மை தாம் அறிந்தாராயின் - நண்பர் என்று தாம் நட்புக் கொண்டவரிடத்து இடையே நண்பராகாத் தன்மையைத் தாம் அறிந்தால், அவரைத் தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை தம்முள் அடக்கிக் கொளல் - அவரை நண்பரினும் மிகுதியாகப் போற்றி அவரது நண்பரல்லாத நிலையைப் புறத்தே தூற்றாமல் தமக்குள் காத்துக் கொள்ளுதல் வேண்டும்.

நட்பில் பிழைபடுவாரைத் தமது போற்றுதலால் நல்லராமாறு காத்துக் கொள்ளுதல் வேண்டும்.


“மெய்யா உணரில் பிறர்பிறர்க்குச் செய்வதென்?

மையார் இருங்கூந்தல் பைந்தொடி! எக்காலும்

செய்யார் எனினும் தமர்செய்வர், பெய்யுமாம்

பெய்யாது எனினும் மழை.” --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

மை ஆர் இரும் கூந்தல் பைந்தொடி - கருமை நிறைந்த நீண்ட கூந்தலையும் பசிய தொடியினையும் உடையவளே! மெய்யா(க) உணரின் - உண்மையாக ஆராயின், பிறர் பிறர்க்குச் செய்வது என் - உறவினரல்லாதோர் பிறருக்குச் செய்யப் போவது என்ன இருக்கின்றது?, எக்காலும் செய்யார் எனினும் - ஒரு காலத்தும் செய்யமாட்டார் என்று கருதும்படி இருந்தாரேயாயினும், தமர் செய்வர் - உறவினரே ஒரு நன்மையைச் செய்வார்கள், பெய்யாதெனினும் பெய்யும் மழை - குறித்த ஒரு பருவகாலத்தில் பெய்யாது ஒழியினும் பின்னையும் பெய்வது மழையேயாதலான்.

உறவினரே தமக்குற்ற துன்பத்தை நீக்கும் உரிமையுடையவராதலால், அவரோடு சேர்ந்தொழுக வேண்டும். 


No comments:

053. சுற்றம் தழால் - 08. தமராகி

 திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 53 -- சுற்றம் தழால் இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "முன்னே சுற்றத்தாரா...