பழமுதிர்சோலை - 0449. துடிகொள் நோய்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

துடிகொள் நோய் (பழமுதிர்சோலை)

சோலைமலை முருகா!
திருவடி பெற அருள்

தனன தான தான தத்த
     தனன தான தான தத்த
          தனன தான தான தத்த ...... தனதான


துடிகொ சோய்க ளோடு வற்றி
     தருண மேனி கோழை துற்ற
          இரும லீளை வாத பித்த ...... மணுகாமல்

துறைக ளோடு வாழ்வு விட்டு
     உலக நூல்கள் வாதை யற்று
          சுகமு ளாநு பூதி பெற்று ...... மகிழாமே

உடல்செய் கோர பாழ்வ யிற்றை
     நிதமு மூணி னாலு யர்த்தி
          யுயிரி னீடு யோக சித்தி ...... பெறலாமே

உருவி லாத பாழில் வெட்ட
     வெளியி லாடு நாத நிர்த்த
          உனது ஞான பாத பத்ம ...... முறுவேனோ

கடிது லாவு வாயு பெற்ற
     மகனும் வாலி சேயு மிக்க
          மலைகள் போட ஆழி கட்டி ...... யிகலூர்போய்க்

களமு றானை தேர்நு றுக்கி
     தலைக ளாறு நாலு பெற்ற
          அவனை வாளி யால டத்தன் ...... மருகோனே

முடுகு வீர சூர பத்மர்
     தலையின் மூளை நீறு பட்டு
          முடிவ தாக ஆடு நிர்த்த ...... மயில்வீரா

முநிவர் தேவர் ஞான முற்ற
     புநித சோலை மாமலைக்குள்
          முருக வேல த்யாகர் பெற்ற ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


துடிகொள் நோய்களோடு வற்றி,
     தருண மேனி கோழை துற்ற,
          இருமல், ஈளை, வாத, பித்தம், ......அணுகாமல்,

துறைகளோடு வாழ்வு விட்டு,
     உலக நூல்கள் வாதை அற்று,
          சுகம் உள அநுபூதி பெற்று ...... மகிழாமே,

உடல் செய் கோர பாழ் வயிற்றை,
     நிதமும் ஊணினால் உயர்த்தி,
          உயிரின் நீடு யோக சித்தி ...... பெறலாமே?

உரு இலாத பாழில், வெட்ட
     வெளியில் ஆடு நாத! நிர்த்த
          உனது ஞான பாத பத்மம் ...... உறுவேனோ?

கடிது உலாவு வாயு பெற்ற
     மகனும், வாலி சேயும், மிக்க
          மலைகள் போட, ஆழி கட்டி, ......இகல்ஊர்போய்க்

களம் உறு ஆனை தேர் நுறுக்கி,
     தலைகள் ஆறு நாலு பெற்ற
          அவனை, வாளியால் அடு அத்தன் ......மருகோனே!

முடுகு வீர சூர பத்மர்
     தலையின் மூளை நீறு பட்டு
          முடிவது ஆக ஆடு நிர்த்த ...... மயில்வீரா!

முநிவர், தேவர், ஞானம் உற்ற
     புநித சோலை மாமலைக்குள்
          முருக! வேல! த்யாகர் பெற்ற ...... பெருமாளே.


பதவுரை


     கடிது உலாவு வாயு பெற்ற மகனும் --- வேகமாக உலாவுகின்ற வாயு தேவன் பெற்ற மைந்தனாம் அநுமனும்,

     வாலி சேயும் --- வாலியின் மகனாம் அங்கதனும்,

     மிக்க மலைகள் போட --- மிகுதியாக மலைகளைக் கொணர்ந்து போட,

     ஆழி கட்டி --- கடலில் அணை புதுக்கி,

     இகல் ஊர் போய் --- பகைவருடைய ஊருக்குச் சென்று,

     களம் உறு --- போர்க்களத்தில் வந்த,

     ஆனை தேர் நுறுக்கி --- யானைகளையும் தேர்ளையுந் தூளாக்கி,

     தலைகள் ஆறு நாலு பெற்ற அவனை --- பத்துத்தலைகள் படைத்த இராவணனை,

     வாளியால் அடு அத்தன் மருகோனே --- அம்பினால் கொன்ற திருமாலின் மருமகரே!

     முடுகு வீர --- போரில் முடுகிவந்த வீரராகிய,

     சூர பத்மர் --- சூரபதுமர் என்பவரின்,

     தலையின் மூளை நீறுபட்டு முடீவு அது ஆக --- தலையில் உள்ள மூளையானது தூளாகி முடிவுபெற,

     ஆடும் நிர்த்தம் -- -நடனம் ஆடிய,

     மயில் வீரா --- மயில் வீரரே!

     முனிவர் தேவர் --- முனிவர்களும் தேவர்களும்,

     ஞானம் உற்ற --- ஞானத்தை யடைந்த,

     புனித சோலை மாமலைக்கு உள் முருக --- பரிசுத்தமான சோலை மாமலைக்குள் வீற்றிருக்கின்ற முருகக்கடவுளே!

     வேல --- வேலவரே!

     த்யாகர் பெற்ற --- தியாக மூர்த்தியாம் சிவபெருமான் பெற்ற,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

     துடி கொள் நோய்களோடு வற்றி --- துடிக்கச் செய்கின்ற நோய்களால் உடல் வற்றி,

     தருண மேனி கோழை துற்ற --- இளமையுடன் கூடிய மேனியில் கோழை நெருக்க,

     இருமல் ஈளை வாத பித்தம் அணுகாமல் --- இருமல் காசம் வாதம் பித்தம் எனப்படும் நோய்கள் அடியேனை அணுகாதபடி,

     துறைகளோடு வாழ்வு விட்டு --- அறத்துறைகளுடன் கூடிய இவ்வாழ்வை விடுத்து,

     உலக நூல்கள் வாதை அற்று --- உலக சம்பந்தமான நூல்களைக் கற்கவேண்டிய வேதனை நீங்கி,

     சுகம் உள அநுபூதி பெற்ற --- சுகத்தையுடைய அநுபூதியைப் பெற்று,

     மகிழாமே --- அடியேன் மகிழ்ச்சி அடையாமல்,

     உடல் செய் கோர பாழ் வயிற்றை --- உடலை வளர்க்கும் கோரமான பாழான வயிற்றை,

     நிதமும் ஊணினால் உயர்த்தி --- தினந்தினமும் உணவினால் வளரச் செய்து,

     உயிரின் நீடு யோக சித்தி பெறல் ஆமே --- உயிர் நிண்ட காலம் இருக்கும்படியான யோகசித்திகளைப் பெறுதல் நன்றோ?

     உரு இலாத பாழில் --- உருவம் கடந்த பாழ் வெளியில்,

     வெட்ட வெளியில் ஆடும் நாத நிர்த்த --- வெட்ட வெளியிலே நாத கிதத்துடன் ஆடுகின்ற கூத்தக் கடவுளே!

     உனது ஞான பாத பத்மம் உறுவேனோ --- தேவரீருடைய ஞானமேயான பாத தாமரையை அடைவேனோ?


பொழிப்புரை


     வேகமாக உலாவுகின்ற வாயுதேவன் பெற்ற அநுமனும், வாலிமகனாகிய அங்கதனும் மிகுதியான மலைகளைக் கொணர்ந்து போட, கடலில் அணைகட்டி, பகைவருடைய ஊருக்குள் சென்று, போர்க்களத்தில் இருந்த யானைகளையும், தேர்களையும் தூளாக்கி, பத்துத் தலைகளையுடைய இராவணனை அன்பினால் அழித்த அண்ணலாகிய திருமாலின் திருமருகரே!

     போருக்கு முடுகி வந்த சூரபத்மனின் தலையில் உள்ள மூளை தூளாகி முடியுமாறு நடனம் புரிந்த மயில் வீரரே!

     முனிவர்களும் தேவர்களும் ஞானம் அடைந்த பரிசுத்தத் தலமான சோலைமாமலைக்குள் வீற்றிருக்கும் முருகக்கடவுளே!

     வேலவரே!

     தியாகமூர்த்தியாம் சிவபெருமான் பெற்ற பெருமிதம் உடையவரே!

     துடிக்கச் செய்கின்ற நோய்களால் உடல் வற்றி, இளமையுடன் கூடிய மேனியில் கோழை நெருக்க, இருமல் ஈளை வாதம் பித்தம் என்கின்ற நோய்கள் அடியேனை வந்து அணுகாத வண்ணம், அறத்துறைகளுடன் கூடிய வாழ்வைவிட்டு, உலக நூல்களைக் கற்க வேண்டிய வேதனை நீங்கிச் சுகத்தைக் கொண்ட அநுபூதியைப் பெற்று அடியேன் மகிழாமல், உடலை வளர்க்கும் கோரமான பாழான வயிற்றை நாள்தோறும் உணவினால் வளரச் செய்து, உயிர் நீடித்து வளரும்படியான யோகசித்திகளைப் பெறுவது நன்றன்று; உருவம் கடந்த பாழ் வெளியில், வெட்ட வெளியில் நாத கிதத்துடன் நடனம் புரிகின்றவரே! உமது ஞானமேயான திருவடியை அடியேன் அடைவேனோ?


விரிவுரை

துடிகொள் நோய்களோடு வற்றி ---

துடிகொள்நோய்கள். உயிரையும் உள்ளத்தையும் உடம்பையும் துடிக்கச் செய்கின்ற நோய்களால் உடல் வற்றுகின்றது.

தருண மேனி கோழை துற்ற ---

தருணம்-இளமை. இளமையுடைய மேனி கெடுமாறு கோழை பொங்கி நெருக்க.

துறைகளோடு வாழ்வு விட்டு ---

துறை-வழி. இல்லநெறி, துறவறநெறி எனவும், தாசமார்க்கம், சற்புத்திர மார்க்கம், சன்மார்க்கம், எனவும்பலவழிகள் வாழ்வில் திகழ்கின்றன. இத்தகைய வழிகளுடன் கூடிய வாழ்வைத் துறந்து விலகி நிற்கின்றனர் மனிதர்.

 
உலக நூல்கள் வாதை அற்று ---

உலகநூல்-பௌதிகநூல். அணுவைப் பற்றி, நீரைப்  பற்றி, மலையைப் பற்றி, சந்திரனைப் பற்றி, சூரியனைப்பற்றி, இன்னோரன்ன பொருள்களைப் பற்றி, ஆராய்கின்ற நூல்கள். இவைகளைக் கற்பதனால் ஆன்ம லாபம் ஏற்படாது. முத்தி சித்திக்காது. அதனால் அவைகைளக் கற்பதனால் எய்துகின்ற துன்பம் அறவேண்டும் என்கின்றார்.

சுகமுள அநுபூதி பெற்று மகிழாமே ---

எல்லா உயிர்களும் சுகத்தை விரும்புவது இயல்பு. சுகம் அநுபூதியில் கிடைக்கின்றது. அநுபூதி என்ற சொல்லுக்கு தொடர்ந்து ஒன்று படுதல் என்று பொருள்.

அநுபூதி எப்படி இனிக்கும் என்பதை அருணகிரிநாதர் பிறிதொரு திருப்புகழில் கூறுகின்றார்.

ஆராமுத மானசர்க் கரை தேனே
   ஆன அநுபூதியைத் தருவாயே”     --- (நாரியர்கள்) திருப்புகழ்


உடல்செய் கோர பாழ் வயிற்றை நிதமும் ஊணினால் அயர்த்தி ---

நன்றி கெட்டவர்கள் எல்லோர்க்கும் தலைமை தாங்கும் பெருமையும் அருமையும் உடையது வயிறு. இந்த வயிற்றுப் பெருமான் உலகத்தில் உள்ள எல்லோரையும் ஆட்டி வைக்கின்றான். ஆ! ஆ! இந்த வயிற்றுக்காக எத்தனை ஆட்டம்; எத்தனை கூட்டம்; என்ன என்ன நாட்டம்; எங்கெல்லாமோ ஓட்டம். பிறந்தநாள் தொடங்கி இந்த பாழ் வயிற்றுக்குத் தினம் ஒன்றுக்கு நான்கு வேளை உணவு இடுகின்றோம். ஒரு நாள் உணவு தர வசதியில்லையானால் இந்த நன்றி கெட்ட வயிறு நம்மைப் படுத்துகின்றபாடு கொஞ்சநஞமன்று.

வாழ்நாள் முழுதும் வயிற்றை வளர்ப்பதிலேயே முடிவு பெறுகின்றது; மனிதர்களுக்கு அதிலேயே நாட்டம்.

அலவ வயிற்றை வளர்ப்பதற்கே
   அல்லும் பகலும் அதில்நினைவாய்க்
கவலைப் படுவது அன்றிசிவ
   கனியைச் சேரக் கருதுகிலேன்,
திவலை ஒழிக்கும் திருத்தணிகைத்
     திருமால் மருகன் திருத்தாட்கக்
குவளைக் குடலை எடுக்காமல்,
     கொழுத்த உடலை எடுத்தேனே.”         --- திருவருட்பா.

உயிரினீடு யோகசித்தி பெறலாமே ---

உயிர் வாழ்க்கையை நெடுங்காலம் நிடிக்கச் செய்யும் திறனுடையது யோகம். எத்தனை யுகங்கள் இருப்பினும் ஒரு நாள் அழியக் கூடிய உடம்புதானே! இதைக் கருதாமல், ஹடயோகம் முதலியவற்றைக் கைக்கொண்டு நிற்றல் தக்கதன்று.


உருவிலாத பாழில் வெட்ட வெளியிலாடு நாத நிர்த்த ---

உருவிலாத பாழ்-உருவம், செயல், பேர், ஊர் முதலிய யாவும் அற்ற சுத்தப் பாழ்.

வெளியில் விளைந்த வெறும்பாழைப்பெற்ற வெறுந்தனியை”  --- கந்தரலங்காரம்.

எல்லாம் கடந்த வெட்ட வெளியில் அரன் நாத ஒலியுடன் முருகன் நடனம் புரிகின்றார்.

ஞான பாதபத்மம் ---

இறைவனுடைய திருவடி ஞானமேயாகும்.

வள்ளல் தொழு ஞானக் கழலோனே”  --- (துள்ளுமத) திருப்புகழ்.

ஞானமேயான திருவடியுடையாய்”       --- (கண்ணன்தூது) வில்லிபாரதம்.

கடிது உலாவு வாயு மகன் ---

அஞ்சனையென்ற பெண் வாநரத்திடம் வாயுதேவனுக்குப் பிறந்தவர் அநுமார். சூரியனைக் கனியென்று பற்றச் சென்றவர் சூரியனிடம் ஒன்பது வியாகரணங்களையும் கற்றவர். நைஷ்டிக பிரமசாரி. எட்டுச் சித்திகளிலும் வல்லவர்.

வாலி சேயும் ---

வாலிமகன்-அங்கதன். உபேந்திரனுடைய அம்சமாகப் பிறந்தவன். இராவணனிடம் தூது சென்றவன். பேராற்றல் படைத்தவன். இராமர் பொன்வாளைக் கொடுக்க, அதனை ஏந்தி நிற்பவன்.

பொன்னுடை வாளைநீட்டி நீஇதைப் பொறுத்தி என்றான்”
அரியணை அநுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த”     --- இராமாயணம்.

மிக்க மலைகள் போட ஆழி கட்டி ---

அநுமன்அங்கதன் முதுலிய சிறந்த வானர வீரர்கள் நிரம்ப மலைகளைக் கொணர்ந்து இட இராமர் நளன் என்பவனைக் கொண்டு கடலில் அணைகட்டி, இலங்கைக்குச் சென்றார்.

முடுகு வீர சூரபத்மர் ---

சூரன், பதுமன் இருவரும் சேர்ந்து ஒருவராகப் பிறந்தார்கள்.

இவ்விருவரும் முற்பிறப்பில் முருகவேளுக்கு மயிலும் சேவலும் ஆகித் தொண்டுபுரியத் தவஞ் செய்தவர்கள். கருடனுக்கும் அன்னத்துக்கும் ஊறு செய்தபடியால், அசுரர்களாகுமாறு முருகவேள் சபித்தருளினார். அதனால் அவர்களைத் திரும்பவும் மயிலும் சேவலுமாக்கி அருள் புரிந்தார்.


ஆடு நிர்த்த ---

சூரனைச் சங்கரித்தவுடன் முருகவேள் துடி என்ற கூத்து ஆடியருளினார்.

சூர்த்திறங் கடந்தோன் ஆடிய துடியும்”      --- சிலப்பதிகாரம்.

முனிவர் தேவர் ஞானமுற்ற புனித சோலை மாமலை ---

முனிவர்களும், தேவர்களும் இந்தப் பழமுதிர்சோலையில் வந்து ஞானத்தைப் பெறுகின்றார்கள். இதனால் இந்தத் தலத்தின் பெருமை புலனாகின்றது.

சரியை-அரும்பு; கிரியை-மலர்; யோகம்-காய்; ஞானம்-பழம்.

விரும்பும் சரியைமுதல் மெய்ஞ்ஞான நான்கும்
அரும்புமலர் காய்கனிபோல் அன்றோ பராபரமே.  - தாயுமானார்.


கருத்துரை


பழமுதிர் சோலைவேலவனே! ஞானத் திருவடியைப் பெற அருள்செய்வீர்.
                 



No comments:

Post a Comment

25. காதவழி பேர் இல்லாதவன் கழுதைக்குச் சமம்

"ஓதரிய தண்டலையார் அடிபணிந்து      நல்லவன்என் றுலகம் எல்லாம் போதம்மிகும் பேருடனே புகழ்படைத்து      வாழ்பவனே புருடன், அல்லால் ஈதலுடன் இரக...