அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
பாசத்தால் விலை
(பழமுதிர்சோலை)
சோலைமலை முருகா!
பொதுமாதர் மாயையில் மயங்காமல்,
திருவடியைச் சேர அருள்.
தானத்
தானன தத்தன தத்தன
தானத் தானன தத்தன தத்தன
தானத் தானன தத்தன தத்தன ...... தனதான
பாசத்
தால்விலை கட்டிய பொட்டிகள்
நேசித் தாரவர் சித்தம ருட்டிகள்
பாரப் பூதர மொத்தத னத்திகள் ......
மிகவேதான்
பாவத்
தால்மெயெ டுத்திடு பட்டிகள்
சீவிக் கோதிமு டித்தள கத்திகள்
பார்வைக் கேமய லைத்தரு துட்டிக ...... ளொழியாத
மாசுற்
றேறிய பித்தளை யிற்பணி
நீறிட் டேயொளி பற்றவி ளக்கிகள்
மார்பிற் காதினி லிட்டபி லுக்கிகள்
...... அதிமோக
வாய்வித்
தாரமு ரைக்கும பத்திகள்
நேசித் தாரையு மெத்திவ டிப்பவர்
மாயைக் கேமனம் வைத்தத னுட்டின .....மலைவேனோ
தேசிக்
கானக முற்றதி னைப்புன
மேவிக் காவல்க வட்கல்சு ழற்றுவள்
சீதப் பாதகு றப்பெண்ம கிழ்ச்சிகொள்
...... மணவாளா
தேடிப்
பாடிய சொற்புல வர்க்கித
மாகத் தூதுசெ லத்தரில் கற்பக
தேவர்க் காதிதி ருப்புக லிப்பதி ......
வருவோனே
ஆசித்
தார்மன திற்புகு முத்தம
கூடற் கேவைகை யிற்கரை கட்டிட
ஆளொப் பாயுதிர் பிட்டமு துக்கடி
...... படுவோனோ
டாரத் தோடகி லுற்றத ருக்குல
மேகத் தோடொரு மித்துநெ ருக்கிய
ஆதிச் சோலைம லைப்பதி யிற்றிகழ் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
பாசத்தால்
விலை கட்டிய பொட்டிகள்,
நேசித்தார் அவர் சித்தம் மருட்டிகள்,
பாரப் பூதரம் ஒத்த தனத்திகள், ...... மிகவேதான்
பாவத்தால்
மெய் எடுத்திடு பட்டிகள்,
சீவிக் கோதி முடித்த அளகத்திகள்,
பார்வைக்கே மயலைத் தரு துட்டிகள், ......ஒழியாத
மாசு
உற்று ஏறிய பித்தளையில் பணி
நீறு இட்டே ஒளி பற்ற விளக்கிகள்,
மார்பில் காதினில் இட்ட பிலுக்கிகள், ...... அதிமோக
வாய்
வித்தாரம் உரைக்கும் அபத்திகள்,
நேசித்த ஆரையும் எத்தி வடிப்பவர்,
மாயைக்கே மனம் வைத்து, அதன் உள் தினம்...... அலைவேனோ?
தேசிக்
கானகம் உற்ற தினைப்புனம்
மேவிக் காவல் கவண்கல் சுழற்றுவள்,
சீதப் பாத குறப்பெண் மகிழ்ச்சிகொள்
...... மணவாளா!
தேடிப்
பாடிய சொல் புலவர்க்கு, இதம்
ஆகத் தூது செல் அத்தரில் கற்பக!
தேவர்க்கு ஆதி! திருப்புகலிப் பதி
...... வருவோனே
ஆசித்தார்
மனதில் புகும் உத்தம!
கூடற்கே வைகையில் கரை கட்டிட
ஆள் ஒப்பாய் உதிர் பிட்டு அமுதுக்கு அடி
......படுவோனோடு
ஆரத்தொடு
அகில் உற்ற தருக்குலம்,
மேகத்தோடு ஒருமித்து நெருக்கிய
ஆதிச் சோலைமலைப் பதியில்திகழ் ......
பெருமாளே.
பதவுரை
தேசி கானகம் உற்று அ தினைப் புனம் மேவி --- அழகிய
காட்டில் சென்று அந்த தினைப்புனத்தை அடைந்து,
காவல் கவண் கல் சுழற்றுவள் --- அங்கு காவல் புரிந்து
கவணில் கல்லை வைத்துச் சுழற்றுவளும்,
சீத பாத --- குளிர்ந்த திருவடியை உடையவளுமாகிய,
குறப்பெண் மகிழ்ச்சி கொள் மணவாளா ---
குறமகளாகிய வள்ளிநாயகி மகிழ்ச்சி கொள்ளுகின்ற மணவாளரே!
தேடி பாடிய --- தலங்கள்தோறும் தேடிச் சென்று
செந்தமிழ்ப் பாடல்கள் பாடிய,
சொல் புலவர்க்கு --- இனிய சொற்களையுடைய
சுந்தரமூர்த்தி நாயனாருக்கு,
இதம் ஆக - இன்பந்தர வேண்டி,
தூது செல் அத்தரில் கற்பக --- தூது சென்ற
சிவபெருமானிடத்தில் தோன்றிய கற்பகமே!
தேவர்க்கு ஆதி --- தேவர்கட்குத் தலைவரே!
திருபுகலி பதி வருவோனே --- சிறந்த சீகாழியில்
சம்பந்தராய் வந்தவரே!
ஆசித்தார் மனதில் புகும் உத்தம --- விரும்பி
வாழ்த்துவோருடைய மனதில் புகும் உத்தமரே!
கூடற்கே --- மதுரையில்,
வைகையில் கரை கட்டிட --- வைகை நதியில்
வெள்ளம் வந்தபோது கரை கட்டும் பொருட்டு,
ஆள் ஒப்பாய் --- ஆளாக ஒப்புக் கொண்டு,
உதிர் பிட்டு அமுதுக்கு --- உதிர்ந்த
பிட்டமுதத்தை வேண்டி,
அடி படுவோனோடு --- அடிபட்ட சொக்கநாதரோடு,
ஆரத்தோடு --- சந்தனமரமும்,
அகில் உற்ற தருக் குலம் --- அகில் மரமும்
உள்ள மரக்கூட்டங்கள்,
மேகத்தோடு ஒருமித்து நெருங்கிய --- மேகத்துடன்
ஒன்றுபட்டு நெருங்கியுள்ள,
ஆதி சோலை மலை பதியில் திகழ் --- பழமையான
சோலைமலை என்ற தலத்தில் விளங்குகின்ற,
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
பாசத்தால் --- தம்மிடம் வருபவர்கள் தம்மீது
வைத்த ஆசைக்கு ஏற்ப,
விலை கட்டிய பொட்டிகள் --- விலைபேசி முடிவு
செய்யும் வேசிகள்;
நேசித்தார் அவர் சித்தம் மருட்டிகள் ---
தம்தை நேசித்தவர்களுடைய சித்தத்தை மயக்குபவர்கள்;
பார பூதரம் ஒத்த தனத்திகள் --- பாரமான மலையை ஒத்த
கொங்கையை உடையவர்கள்;
மிகவே தான் பாவத்தால் மெய் எடுத்திடு
பட்டிகள் --- .மிகுந்த பாவத்தினால் உடம்பெடுத்த விபசாரிகள்;
சீவி கோதி முடித்த அளகத்திகள் --- சீவியும்
கோதியும் முடித்த கூந்தலை உடையவர்;
பார்வைக்கே மயலை தரு துட்டிகள் --- பார்வையாலேயே
மோக மயக்கத்தைத் தருகின்ற துஷ்டைகள்;
ஒழியாது மாசு உற்று ஒழிய --- ஒழியாமல்
அழுக்குப்பற்றி ஏறிய,
பித்தளையில் பணி --- பித்தளை ஆபரணங்களை,
நீறு இட்டு --- சாம்பலைவிட்டு,
ஒளி பற்ற விளக்கிகள் --- பளபளப்பு உண்டாகுமாறு
விளக்குபவர்கள்;
மார்பில் காதினில் இட்ட பிலுக்கிகள் --- அந்த
அணிகலன்களைத் தங்கள் மார்பிலும்,
காதுகளிலும், அணிந்து தளுக்கு செய்பவர்கள்;
அதிமோக --- அதிகமோகத்தை உண்டாக்குமாறு,
வாய் வித்தாரம் உரைக்கும் அபத்திகள் --- வாய்
விரிவாகப் பேசும் பொய்யர்கள்;
ஆரையும் நேசித்து --- யாராயிருப்பினும்
சிநேகஞ் செய்து,
எத்தி வடிப்பவர் --- ஏமாற்றி வடிகட்டுபவர்கள்; ஆகிய இத்தகைய பொதுமாதர்களின்,
மாயைக்கே மனம் வைத்து --- மாலையில் என்
மனத்தை வைத்து,
அதன் உள் தினம் அலைவேனோ --- அந்த மாயையுள்
அடியேன் நாள்தோறும் அலைவேனோ?
பொழிப்புரை
அழகிய காட்டில் சென்று, அத்தினைப்புனத்தில் காவல் புரிந்து கவண்
கல் சுழற்றுபவளும், குளிர்ந்த
திருவடியையுடைய யவளுமாகிய குறமகளாம் வள்ளியம்மையின் மணவாளரே!
தலங்கள் தோறும் தேடிச்சென்று, செந்தமிழ்ப் பாடல்கள் பாடிய
சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இன்பம் உண்டாகுமாறு தூது சென்ற சிவபெருமானிடத்தில்
தோன்றிய கற்பகமே!
தேவர்கட்கு முதல்வரே!
சீர்காழியில் திருஞான சம்பந்தராக
வந்தருளியவரே!
விரும்பி வாழ்த்துவோர் மனக்கோயிலில்
புகுந்துறையும் உத்தமரே!
மதுரையம்பதியில் வைகையாற்றில் கரைகட்டும்
பொருட்டு ஆளாகிச் சென்று, உதிர்ந்த பிட்டுக்காக, அடிபட்ட சொக்கநாதர் உறையும் மதுரைக்கு
அருகில், சந்தனமரம் அகில்மரம்
முதலிய மரக்கூட்டங்களுள் மேகத்துடன் ஒன்றுபட்டு நெருங்கியுள்ள, பழமையான பழமுதிர்சோலை மலையில் விளங்கும்
பெருமிதமுடையவரே!
தம்மிடம் வருபவர்கள் தம்மீது வைத்துள்ள
பாசத்தையுணர்ந்து அதற்கு ஏற்ப விலைபேசி முடிவு செய்யும் வேசிகள்; தம்மை நேசித்தவர்களை மயக்குபவர்கள்; மிகுந்த பாவ வினையின் காரணத்தால்
உடம்பெடுத்த விபசாரிகள்; சீவிக்கோதி முடித்த
கூந்தலை யுடையவர்கள்; பார்வையாலேயே மோக
மகத்தத்தைத் தருகின்ற துண்டைகள்;
ஒழியாது
அழுக்கு அடைந்துள்ள மிகுந்த பித்தளை நகைகளைச் சாம்பல் இட்டுப் பளபள என்று மினுக்கி
வைத்துள்ளவர்கள்; அந்நகைகளை மார்பிலும்
காதிலும் அணிந்து தளுக்குபவர்கள்;
மிகுந்த
மோகத்தை உண்டாக்க விரிவாகப் பேசும் பொய்யர்கள்; யாராயிருப்பினும் நட்புகொண்டு ஏமாற்றி
வடிகட்டுபவர்கள் ஆகிய பொதுமாதர்களின் மாயைச் செய்கையுள் மனம் வைத்து, அம் மாயைக்குள் தினந்தோறும் அடியேன்
அலைவேனோ?
விரிவுரை
பாசத்தால்
விலை கட்டிய பொட்டிகள் ---
பொதுமகளிர்
தம்மிடம் வருபவர்கள் தம்மை நேசிக்கும் அளவுக்கு ஏற்ப விலைபேசி முடிவு
கட்டுவார்கள். நிதிக்கு ஏற்ப நேயங் காட்டுவார்கள்.
மிகவேதான்
பாவத்தால் மெய் எடுத்திடு பட்டிகள் ---
உள்ளத்தில்
ஒருவர் மீதும் பற்றின்றிக் கண்டாரைத் தழுவும் படியான தீயொழுக்கம் பூண்டதனால்
விலைமாதரின் உடம்பு மிகுந்த திவினைப் பயனால் வந்தது என்றார்.
பார்வைக்கே
மயலைத் தரு துட்டிகள் ---
ஆடவரைப்
பார்வையாலே மயக்குவர்கள் என்றார்,
பேச்சினாலும்
தொழுவதனாலும் என்னதான் செய்ய மாட்டார்கள் என்பதை உய்த்துணர விட்டார்.
பித்தளையில்
பணி நீறு இட்டே ஒளி பற்ற விளக்கிகள் ---
பித்தளையில்
செய்த ஆபரணங்களை அவ்வப்பொழுது சாம்பலிட்டு விளக்கி மெருகேற்றி அணிந்து கொள்வார்.
இதனைப் பட்டினத்து சுவாமிகளும் கூறுகின்றார்.
முட்டுஅற்ற
மஞ்சளை எண்ணெயில் கூட்டி, முகம் மினுக்கி,
மெட்டிட்டுப்
பொட்டிட்டுப் பித்தனை ஓலை விளக்கியிட்டுப்
பட்டப்பகலில்
வெளிமயக்கே செயும் பாவையர்மேல்
இட்டத்தை
நீ தவிர்ப்பாய், இறைவ கச்சி ஏகம்பனே.
வாய்வித்தார
முரைக்கும் அபத்திகள் ---
அபத்தம்-பொய்.
வாயில் இனிமையாக வித்தாரமாகப் பேசுவார்கள். ஆனால் அத்தனையும் பொய்மைதான்.
நேசித்தாரையும்
எத்தி வடிப்பவர் ---
தம்மை
மிகவும் நேசிக்கின்றவர்களையும் ஏமாற்றுவர். அன்றி தம்மிடம் வருபவர்களில் அதிகம்
பொருள் தருபவர் யார் என வடிகட்டிப் பொருள் பறிப்பார்கள்.
தேசிக்
கானகம் ---
தேசி-அழகு.வள்ளியம்மையார்
இருந்த வனம் மிகவும் அழகியது.
தேடிப்பாடிய
சொற்புலவர் ---
சுந்தரமூர்த்திக்காக
இறைவன் நடு இரவில் பரவையார் திருமாளிகைக்குத் தூது சென்று அருள் புரிந்தார்.
பரமன் பரவையிடத்தில்
தூதுசென்ற வரலாறு
சுந்தரமூர்த்தி
நாயனார் தம்மை விடுத்துச் சென்று திரு ஒற்றியூரில் சங்கிலியாரை மணந்துகொண்ட
தன்மையை அறிந்து, பரவை நாச்சியார்
தம்மையறியா வெகுளியினால் தரியா நெஞ்சினோடு தளர்ந்திருந்தார்.
திருவாரூர்
வந்தடைந்த நம்பியாரூரர் பரவையார் பிணங்கியிருப்பதை யுணர்ந்து, சில பெரியோர்களை பரவையார் பிணக்கை
நீக்குமாறு தூதுவிட்டார். நம்பியருளாற் சென்ற அப்பெரியோர்கள், நங்கை பரவையரது பைம்பொன் மனையிற் போந்து
“எம்பிராட்டிக்கு இது தகுமோ” என்று பல நியாயங்களை எடுத்துரைத்தார்கள்.
பரவையார்
சினம் தணியாராய் “குற்றமிக்க அவர் விஷயத்தைக் கூறுவீரேல் என்னாவி நீங்கும்”
என்றனர். அவர்கள் அஞ்சி, அதனை ஆரூரரிடம்
கூறலும், பரவையாரது ஊடலால்
சுந்தரமூர்த்தி நாயனார் துன்பமாம் பரவையில் மூழ்கி, பேயும் உறங்கும் அப்பேரிருட் கங்குலில்
பிறைச் சடைப் பெருமானை நினைத்து “எம்பெருமானே! நீரே தூது சென்று பரவையின் ஊடலைத்
தீர்த்தருள வேண்டும்” என்று வேண்டினார்.
அடியார்
குறை முடிக்கும் அம்பலக் கூத்தர் நெடியோனுங்காணா அடிகள் படிதோய வந்து
தொண்டர்க்குத் தரிசனந் தந்தருளினார். பெருமானைக் கண்டவுடன் தொண்டர் உடல் கம்பித்து
உளம் உவந்து அடித் தாமரை மேல் வீழ்ந்து “எம்பெருமானே! தேவரீர் அருள் செய்யத் திரு ஒற்றியில்
சங்கிலியை அடியேன் மணந்து கொண்டதை உணர்ந்து சினங்கொண்டு, யான் சென்றால் மடிவேன் என்று
துணிந்திருக்கிறாள். நாயனீரே! நான் உமக்கு இங்கு அடியேனாகில், நீர் எனக்கு தாயில் நல்ல தோழருமாம்
தம்பிரானாரே ஆகில் அறவு அழியும் அடியேனுக்காக இவ்விரவே சென்று பரவையின் ஊடலைத்
தணித்தருள்வீர்” என்று வேண்டி நின்றார். அன்பையே வேண்டும் அரனார் “துன்பம் ஒழிக; நினக்கு யாம் தூதனாகி இப்பொழுதே
பரவையின் பைம்பொன் மனைக்குப் போகின்றோம்” என்று அருள் செய்து,
"அண்டர்
வாழக் கருணையினால் ஆல காலம் அமுதாக
உண்ட
நீலக் கோலமிடற்று ஒருவர் இருவர்க்கு அறிவறியார்
வண்டு
வாழும் மலர்க்கூந்தல் பரவை யார்மாளிகைநோக்கித்
தொண்டனார்தம்
துயர்நீக்கத் தூதனாராய் எழுந்தருள".
தேவர்களும்
முனிவர்களும் பூதகணங்களும் முன்னும் பின்னும் புறத்துமாகச் சென்றார்கள். தேவர்கள்
பூமழை பொழிந்தார்கள்; எம்பெருமானது பாதச்
சிலம்புகள் ஒலித்தன. அவ்வொலி “மாலும் அயனுங் காணாத மலர்த்தாளை வணங்குஞ் சமயம்
இதுவே; எல்லாரும் வம்மின்
வம்மின்” என்று அறைகூவி அழைப்பதுபோல் இருந்தது.
அடியார்
தொடரவும், சடைவாழ் அரவு
தொடரவும், மறைகள் தொடரவும், வன்றொண்டர் மனமுந்தொடர பெருமான்
திருவாரூர் வீதியிற் சென்றருளினார். அது சமயம் அத்திருவீதி சிவலோகம் போல்
விளங்கியது. பரவையர் திருமனைக்குப் பரமன் வந்து அனைவரையும் புறத்தே நிற்கச் செய்து, தாம் குருக்கள் வடிவு தாங்கி கதவிடம்
சென்று “பாவாய்! மணிக்கதவம் திறவாய்” என்று அழைக்க, பரவையார் துணுக்குற்று எழுந்து அவரை
அருச்சிப்போர் என்று நினைத்து வந்து, கதவு
திறந்து வணங்கி, “என்னையாளும் பெருமானே!
பேயும் நாயும் உறங்கும் இப்பேரிருட்கங்குலில் நீர் எழுந்தருளிய காரணம் யாது” என்று
வினவினார்.
வேதியராக
வந்த விமலன், “பரவையே! நான் கூறுவதை
மறுக்காமல் செய்வையேல் கூறுவேன்” என்ன பரவையார், “இசையுமாகில் செய்வேன்; கூறும்” என்றார். பெருமான் “பரவையே!
சுந்தரமூர்த்தி இங்கு வர அனுமதிக்க வேண்டும்” என்றார். பரவையார், “சங்கிலித் தொடக்குண்ட அவருக்கு இங்கு
வருவது தகாது; நீர் கூறியது மிக
அழகியதே” என்னலும், சிவபெருமான் “மடவரலே!
நம்பியாரூரன் செய்த நவையைக் கருதாது சினந்தணிந்து மறுக்காமல் ஏற்றுக்கொள்வாய்.
உன்னை மிகவும் மன்றாடி வேண்டிக் கொள்ளுகிறேன். என்றார்.
பரவையார்
“ஐயரே! நீர் இக்கருமத்தை மேற்கொண்டு இந்நள்ளிரவில் வந்தது உமது மேன்மைக்குத்
தகுதியற்றது. அவரை இங்குவர அனுமதிக்கேன்; செல்லுவீர்”
என்று மறுத்துரைத்தார்.
மணிமிடற்றண்ணல்
அன்பனுடன் விளையாடும் காரணமாய்,
தமது
நல்லுருவை அவருக்குக் காட்டாமல் “நன்று” என்று திரும்பி தமது வருகையை எதிர்
நோக்கியிருந்த நம்பியாரூரர் பால் வந்தார். பிணக்கு தீர்த்தே வந்தார் என்று
மகிழ்ந்து பணிந்து “பரவையின் ஊடல் தீர்த்து என்னை ஆட்கொண்ட எந்தையே” என்று
துதித்தார். பெருமான், “அன்பனே! நான் போய்க்
கூறியும் பரவை மறுத்துவிட்டாள்” என்று சொன்னார்; சுந்தரமூர்த்தி நாயனார் “எம்பெருமானே!
அமரருய்ய ஆலமுண்ட அண்ணலே! புரமெரித்த புராதன! பாவியேனை வலிய ஆட்கொண்ட பரமகருணா
நிதியே! அடியேனைப் பரவைபால் சேர்க்காவிடில் என் ஆவி நீங்கிவிடும்” என்று வருந்திப்
பூமியில் விழுந்தார். நம்பியாரூரது நடுக்கத்தைக் கண்டு எம்பிரான் திருவுளமிரங்கி
“மீண்டும் நாம் சென்று பரவையை சமாதானப் படுத்துகிறோம்” என்று கூறி, தேவபூத கணங்கள் சூழ தேவதேவர் பரவையார்
திருமாளிகைக்கு வருவாரானார்.
அங்கு
பரவையார் தம்மிடம் வந்த அருச்சகர் சிவபெருமானே என்று கருத்தினாலுணர்ந்து “அந்தோ!
என் செய்தேன்! தோழருக்காகத் தூது வந்தவரை அருச்சகர் என்று ஏமாந்து போனேனே!
மூவர்க்கும் எட்டா முழுமுதல் என்று உணராமல் போனேனே! மனவாசகங் கடந்த மகாதேவர் உரையை
மறுத்துப் பேசினேனே! என்னைப் போன்ற பாவிகளும் உளரோ?” என்று மனம் புழுங்கி கண் துயிலாராய் கருத்தழிந்து
திருவாயிலையே பார்த்துக் கொண்டிருந்தார். சென்றடையாத் திருவுடை கொன்றை வேணிப்
பெருமான் தமது தெய்வத் திருவுருவுடன் தேவரும் முனிவரும் பூதரும் சூழ வந்தருளினார்.
அம் மாளிகை அக்காலை வெள்ளியங்கிரி போல் விளங்கிற்று. அது கண்டு பரவையார் ஆகமும் அகமும்
நடுங்கி எதிர்கொண்டு, இணையடிகளை இறைஞ்சி
நிற்ப, எண்தோள் எம்பிரான்
“பரவையே முன்போல மறுக்காது நம்பியாரூரனை ஏற்றுக் கொள்ளும்” என்றார். பரவையார்
கசிந்து கண்ணீர் பொழிந்து “மறைகட்கும் எட்டாத மகாதேவராகிய நீர் ஓரிரவு முழுவதும்
உமது மலரடி சிவப்ப அன்பர்க்காகத் தூது வந்து உழல்வீராகில் அடியேன் சம்மதியாமல் என்
செய்யக்கூடும்.” என்றார். உடனே பெருமான் உளம் உவந்து நங்கையார் வழிவிடச் சென்று, நம்பியாரூரர் பால் வந்து “பரவை
சினந்தணிந்தாள். இனி நீ செல்லுதி: என்று பணித்து விடை மீது உருக் கரந்தார்.
சுந்தரர் மகிழ்ந்து பரவையார் மாளிகைக்கு வர அம்மையார் பொற்சுண்ணம் தெளித்து, நறுங்கலவைச் சாந்தால் மெழுகி, பூரண கும்பம் வைத்து, நாயனாரை எதிர்கொண்டு வணங்கி
இன்புற்றார்.
இவ்வரலாறு
சிவபெருமானது கருணையின் எளிமையையும் அடியாரது பெருமையையும் நன்கு
வெளிப்படுத்துகிறது. இதனாலன்றோ பரஞ்சோதியார் சுந்தரமூர்த்தி நாயனாரை அடியிற்
கண்டவாறு துதிக்கின்றார்.
"அரவுஅகல்
அல்குலார்பால் ஆசைநீத் தவர்க்கே வீடு
தருவம்என்று
அளவில் வேதஞ் சாற்றிய தலைவன் தன்னைப்
பரவைதன்
புலவி தீர்ப்பான் கழுதுகண் படுக்கும் பானாள்
இரவினில்
தூதுகொண்டோன் இணையடி முடிமேல் வைப்பாம்".
“பரவைமனை மீதிலன்று
ஒருபொழுது தூதுசென்ற பரமன்”
--- (கருவினுரு)
திருப்புகழ்.
ஆசித்தார்
மனதிற் புகும் உத்தம ---
முருகனை
ஆசிரயித்த அன்பர்களின் மனதில் புகுந்து; அங்கு
அப்பரமகருணாநிதி விளையாடிக் கொண்டிருப்பான்.
“என்உளமே புகுந்த
அதனால்” --- (வேயுறு)
சம்பந்தர்.
“சிந்தையுள் புகுந்த
செல்வமே” --- திருவாசகம்.
“மருவும் அடியார்கள்
மனதில் விளையாடு
மரகத மயூரப் பெருமாள்காண்” ---
(திருமக) திருப்புகழ்.
“மாசில் அடியார்கள்
வாழ்கின்ற ஊர்சென்று
தேடி விளையாடியே அங்ஙனே நின்று” --- (மூளும்வினை) திருப்புகழ்.
வைகையிற்
கரைகட்டிட ஆள் ஒப்பாய் உதிர் பிட்டு அமுதுக்கு அடி படுவோன் ---
மதுரையில்
நாள்தோறும் அவித்த பிட்டை ஆலவாய் அண்ணலுக்கு என்று நிவேதித்து, அதனை விற்று வாழ்ந்தனள் வந்தி. அந்த அம்மைக்கு மகப்பேறு இல்லை. அதனால் அப்பேரைப் பெற்றனள். அந்த அம்மை சோமசுந்தரக் கடவுளிடம் இடையறாத
மெய்யன்பு பூண்டவள்.
வையையாற்றில்
பெருவெள்ளம் சிவபெருமான் ஆணையால் பெருகியது.
அரிமர்த்தன பாண்டியன் கரையை உயர்த்துமாறு கட்டளை இட்டனன். செல்வம் உடையவர்கள் ஆள் வைத்துக் கரையை
உயர்த்தினார்கள். ஏழைகள் தாமே சென்று
கரையை மேடு செய்தனர்கள். வந்திக்குப்
பணமும் இல்லை. ஆளும் இல்லை. என் செய்வாள்? ஏங்கினாள்; இரங்கினாள்; மீனவன் ஆணையால் நடுங்கினாள்; அழுதாள்; தொழுதாள்.
துணைஇன்றி, மக்கள்இன்றி, தமர்இன்றி, சுற்றம் ஆகும்
பணையின்றி, ஏன்று கொள்வார் பிறர் இன்றி, பற்றுக்கோடாம்
புணைஇன்றி, துன்பத்து ஆழ்ந்து, புலம்புறு பாவியேற்குஇன்று,
இணைஇன்றி
இந்தத் துன்பம் எய்துவது அறனோ எந்தாய்.
தேவர்க்கும்
அரியன் ஆய தேவனே, அன்பர் ஆவார்
யாவர்க்கும்
எளியன்ஆகும் ஈசனே, வேந்தன் ஆணைக்
காவல்செங்
கோலார் சீற்றம் கடுகுமுன் கூலியாளாய்
ஏவல்செய்
வாரைக் காணேன், ஏழையேன் இனிஎன்
செய்வேன்.
என்று
தளர்ந்த வயதுடைய வந்தியம்மை உள்ளம் தளர்ந்தாள்.
இறைவன் ஏழை பங்காளன். ஏழை - பெண். பங்கு
ஆளன் - உமையை இடப் பாகத்தில் வைத்து ஆள்பவன். இப்போது ஏந்திழையாகிய வந்தியின்
பங்குக்கு ஆளாக வருகின்றார். அவருடைய கருணையே கருணை. கயிலையில் இருந்தபடியே
வந்தியின் பங்குக்கரையை சங்கல்பத்தினாலேயே உயர்த்திவிடலாம். வந்திக்கு ஆள்வேண்டும்
என்ற கவலைதான். "வேண்டுவார்
வேண்டுவதே ஈவான் கண்டாய்" என்றபடி எம்பெருமான் கூலியாளாக வந்தார். அழுக்கடைந்த
ஒரு பழந்துணியை உடுத்தி, சும்மாடு மேல் ஒரு
பழங்கூடையைக் கவிழ்த்து, தேய்ந்த மண்வெட்டியை
தோள்மேல் வைத்துக்கொண்டார். வேதமுடிவாகிய
அதர்வ சிகையில் விளங்கும் அவருடைய திருவடிக்கமலம் மதுரையின் வீதியில் படுகின்றது.
நிலமகள் செய்த பெருந்தவம். "கூலியோ கூலி" என்று ஓலமறைத் திருமொழிபோல்
வாய்விட்டுக் கூவுகின்றார். கண்ணீர்க் கடலில்
முழுகியிருக்கும் வந்தியம்மை வீட்டிற்கு நேராக வந்து "கூலியோ கூலி"
என்று கூவியருளினார். தாய்தந்தை இல்லாத
தற்பரனை வந்தி கண்டாள். ஆனந்தம் கொண்டாள்.
"அப்பா! இப்படி வா.
உன்னைப் பார்த்தால் நன்றாக சுகத்தில் இருந்து வந்தவனைப் போல் காண்கின்றதே. ஏனப்பா
இப்படி கூலியாளாக வந்தனை?” என்று
வினவினாள்.
கூலியாளாய்
வந்த குருபரன், "பாட்டீ! எனக்குத் தாய்
தந்தைகள் ஒருவருமில்லை. சுடலையில்தான் இருப்பேன். பேய்கள் தான் எனக்கு உறவு. என்
மனைவி அன்னபூரணி. அறம் வளர்த்தாள். ஆனால்
என்னை பிக்ஷாடனம் செய்ய விட்டுவிட்டாள்.
இன்னொருத்தி தலைமீது ஏறிக்கொண்டாள். மூத்தபிள்ளைக்கு மகோதரம். ஊரில் என்ன
விசேடம் ஆனாலும் அவன் போய்த்தான் ஆகவேண்டும். இளைய பிள்ளை தகப்பன் சுவாமி
ஆகிவிட்டான். என்ன செய்வேன்? விடத்தையும்
உண்டேன். எனக்கு மரணம் இல்லையென்று
எல்லோரும் கூறுகின்றனர். அதனால்
மண்ணெடுத்துப் பிழைக்கலாம் என்று வந்தேன்" என்றார்.
வந்தியம்மை, "அப்பனே! பாவம்
உன்னைப் பார்க்க மனம் மகிழ்ச்சி அடைகின்றது. இந்த ஊரில் பெரும் பெருந்தனவந்தர்கள்
இருக்கின்றனர். அங்கெல்லாம் போயிருந்தால் நல்ல கூலி கிடைத்திருக்கும். நான் பரம
ஏழை. என்னிடம் வந்து சேர்ந்தாய். என்னிடம்
காசு பணம் இல்லை. பிட்டு வியாபாரம் செய்பவள்.
பிட்டைத் தருவேன். பிட்டுக்கு மண்ணெடுக்கவேணும். உனக்கு உடன்பாடா"
என்று கேட்டாள்.
கூலியாள், "பாட்டீ! மிகவும்
நல்லது. நீ காசு பணம் தந்தால், நான் அதனை அப்படியே
தின்னமுடியாதன்றோ? கடையில் போய் ஆகாரம்
வாங்கி அருந்தவேண்டும். நீ பிட்டாகவே தந்துவிட்டால், கடைக்குப் போகும் வேலை இல்லாது போகும். பிட்டுக்கே
மண் சுமக்கிறேன்" என்றார்.
வந்தியம்மை, "அப்பனே! இன்னொரு
சங்கதி. உதிர்ந்த பிட்டைத் தான் உனக்குத் தருவேன். உதிராத பிட்டை விற்று, நாளைக்கு அரிசி வாங்க வைத்துக்கொள்வேன்.
உனக்குச் சம்மதமா?” என்றாள்.
எம்பிரான், "பாட்டீ! மிக நல்லது. உதிராத
பிட்டைத் தந்தால், நான் உதிர்த்துத்
தானே சாப்பிடவேண்டும். உதிர்ந்ததைத் தந்தால், உதிர்க்கின்ற வேலை இல்லாது போகும்.
அந்தக் கவலை உனக்கு வேண்டா. இப்போது சிறிது கொடு" என்றார்.
வந்தியம்மை
ஐந்தெழுத்தைச் செபித்தவண்ணமாகவே அவித்த தூய்மையும் இனிமையும் உடைய பிட்டை எடுத்து, "அருந்து, அப்பா!” என்று இட்டாள்.
பெம்மான்
சும்மாட்டுத் துணியை விரித்து ஏந்தி, "ஆலவாய்
அண்ணலுக்கு இது ஆகுக" என்று கூறி தலையை அசைத்து அசைத்து அமுது செய்தார்.
ஆலமுண்ட
நீலகண்டன் அடியாள் தந்த பிட்டைப் பெருமகிழ்ச்சியுடன் உண்டு, "பாட்டியம்மா! இனி
நான் போய் மண்சுமப்பேன். இன்னும் மாவு இருந்தால் பிட்டு சுட்டு வையும்" என்று
கூறிவிட்டு, வையைக் கரையை
அடைந்தார்.
பதிவு
செய்த புத்தகத்தில், 'வந்தியின் ஆள்
சொக்கன்' என்று பேர் பதிவு
செய்தார்.
வெட்டுவார்.
மண்ணை முடிமேல் வைப்பார். பாரம் என்று கீழே கொட்டுவார். குறைத்து எடுப்பார். சும்மாடு
விழத் தட்டுவார். சுமையிறக்கி
சும்மாட்டைத் தலை படியக் கட்டுவார்.
மண்ணைக் கொண்டுபோய் வேற்றுப் பங்கில் கொட்டுவார். அதனால் சிறிது உயர்ந்த கரையை உடைப்பார்.
ஆடுவார். இனிது பாடுவார். நகை செய்வார். எல்லோரும்
தன்னையே பார்க்குமாறு குதிப்பார். மணல்களைக் குவிப்பார். ஓடுவார். மீள்வார். கூடையைத் தண்ணீரில் போட்டு, அதனை எடுக்க வெள்ளத்தில் குதித்துத்
தவிப்பதுபோல் நடிப்பார். கரை ஏறுவார்.
வானத்தில் மண்ணில் பெண்ணில் மைந்தரில் பொருளில் ஆசையற்று, தனையும் அற்ற யோகியர் ஞானக்கண் கொண்டே
அன்றி, நாடருஞ்சோதி, மண்ணோர் ஊனக்கண் கொண்டுங்காண உடன்
விளையாடுவார்.
அருளினால்
உலகமெல்லாம் ஆக்கியும் அளித்தும் நீத்தும் பெருவிளையாடல் செய்யும் பிறைமுடிப்
பெம்மான் இவ்வாறு விளையாடல் செய்ய,
ஓச்சுகோல்
கையராகி அருகு நின்று ஏவல் கொள்வார் அடைகரை காண வந்தார். எல்லாப் பங்கும் அடைபட்டு
இருக்கின்றன. வந்தி பங்கு மட்டும் அடைபடவில்லை.
"வந்திக்குக்
கூலியாளாய் வந்தவன் யார்?” என்று ஓடி, மன்மத மேனியராய் விளங்கும் பெருமானை
நோக்கி, "தம்பீ! அந்தப் பங்கெல்லாம் அடைபட்டனவே? ஏன் நீ இந்தப் பங்கை அடைக்காமல் வாளா
கிடக்கின்றனை?” என்று
வினவினார். விரிசடைப்பெருமான்
சிரித்தனர்.
"இவன்
என்ன பித்தனோ? பேய் பிடித்த மத்தனோ? வந்தியை ஏமாற்ற வந்த எத்தனோ? இந்திர சாலம் காட்டும் சித்தனோ? இவன் யாரோ தெரியவில்லையே?” என்று திகைத்தார்கள்.
அரிமர்த்தன
பாண்டியர் கரை காண வருகின்றார். அமைச்சர் பலர் புடை சூழ்ந்து வருகின்றனர். ஏவலர்
வெண்சாமரை இரட்டுகின்றனர். கரையைக் காண்பாராகி வந்த காவலன், வந்தியின் பங்கைக் கண்டார். "ஏன்
இந்தப் பங்கு அடையவில்லை?” என்று கேட்டார். கண்காணிப்பாளர், "மன்னர் ஏறே! இது
வந்தியின் பங்கு. அவள் ஒரு ஆளை வைத்தனள். அந்த ஆள் இதனை அடைக்காமல் உன்மத்தனைப்
போல் இருக்கின்றான்" என்றார். "எங்கே அவன்?” என்று சீறினார் மன்னர்.
வள்ளல்தன்
சீற்றம்கண்டு மாறுகோல் கையர்அஞ்சித்
தள்ளரும்
சினத்தராகி, தடக்கைதொட்டு
ஈர்த்துப் பற்றி,
உள்ளொடு
புறம்கீழ் மேலாய் உயிர்தொறும் ஒளித்துநின்ற
கள்வனை, இவன்தான் வந்தி ஆள்எனக்
காட்டிநின்றார்.
எங்கும்
நிறைந்து ஒளிந்திருக்கும் கள்வனை ஈர்த்துக் கொண்டுபோய், "இவன்தான் வந்தியின் ஆள்" என்று
காட்டினார்கள்.
கண்டனன்
கனன்று வேந்தன் கையில்பொன் பிரம்புவாங்கி
அண்டமும்
அளவுஇலாத உயிர்களும் ஆகமாகக்
கொண்டவன்
முதுகில்வீசிப் புடைத்தனன், கூடையோடு
மண்தனை
உடைப்பில் கொட்டி மறைந்தனன் நிறைந்தசோதி.
எல்லா
உலகங்களையும், எல்லா உயிர்களையும்
தனது உடம்பாக உடைய எம்பிரானைப் பிரம்பால் பாண்டியன் முதுகில் ஓங்கி அடித்தான்.
அந்த அடி எல்லா உயிர்களின் மீதும்,
எல்லாப்
பொருள்களின் மீதும் பட்டது. அவர் எங்கும் நிறைந்தவர். எம்பிரான் மறைந்தார். வந்திக்குக் காட்சி
அளித்தார். திருக்கயிலையில் அவளைச்
சேர்த்து அருளினார். பாண்டினுக்கு அசரீரியாக அருள் புரிந்தார்.
பண்சுமந்த
பாடல் பரிசு படைத்து அருளும்
பெண்சுமந்த
பாகத்தன், பெம்மான், பெருந்துறையான்,
விண்சுமந்த
கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்,
கண்சுமந்த
நெற்றிக் கடவுள், கலிமதுரை
மண்சுமந்து, கூலிகொண்டு, அக்கோவால் மொத்துண்டு,
புண்சுமந்த
பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய். --- திருவாசகம்.
“மாடை யாடைதர பற்றிமுன்
நகைத்து, வைகை
ஆறின் மீது கடம் இட்டு மண் எடுத்து, மகிழ்
மாது வாணி தரு பிட்டுநுகர் பித்தன் அருள் கந்தவேளே”
--- (சீதவாசனை)
திருப்புகழ்.
"வேற்று
உருவிற் போந்து, மதுராபுரியில் ஆடி,வைகை
ஆற்றின் மணல் தாங்கு மழுவாளி" --- (வாட்டிஎனை) திருப்புகழ்
கருத்துரை
பழமுதிர்சோலை
மேவிய பரனே! மாதர் மயல் தீர ஆருள் புரிவாய்.
No comments:
Post a Comment