அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
இருட்குழலை (பொது)
தனத்ததனத் தனத்ததனத்
தனத்ததனத் தனத்ததனத்
தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான
இருட்குழலைக் குலைத்துமுடித்
தெழிற்கலையைத் திருத்தியுடுத்
திணைக்கயலைப் புரட்டிவிழித் ...... ததிபார
இழைக்களபப் பொருப்பணிகச்
செடுத்துமறைத் தழைத்துவளைத்
திருத்தியகப் படுத்திநகைத் ...... துறவாடி
பொருட்குமிகத் துதித்திளகிப்
புலப்படுசித் திரக்கரணப்
புணர்ச்சிவிளைத் துருக்குபரத் ...... தையர்மோகப்
புழுத்தொளையிற் றிளைத்ததனைப்
பொறுத்தருளிச் சடக்கெனஅப்
புறத்திலழைத் திருத்தியளித் ...... திடுவாயே
உருத்திரரைப் பழித்துலகுக்
குகக்கடையப் பெனக்ககனத்
துடுத்தகரப் படுத்துகிரித் ...... தலமேழும்
உடுத்தபொலப் பொருப்புவெடித்
தொலிப்பமருத் திளைப்பநெருப்
பொளிக்கஇருப் பிடத்தைவிடச் ...... சுரரோடித்
திரைக்கடலுட் படச்சுழலச்
செகத்ரையமிப் படிக்கலையச்
சிரித்தெதிர்கொக் கரித்துமலைத் ...... திடுபாவி
செருக்கழியத் தெழித்துதிரத்
திரைக்கடலிற் சுழித்தலையிற்
றிளைத்தஅயிற் கரக்குமரப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
இருள் குழலைக் குலைத்து முடித்து,
எழில் கலையைத் திருத்தி உடுத்து,
இணைக் கயலைப் புரட்டி விழித்து,...... அதிபார
இழைக் களபப் பொருப்பு அணி கச்சு
எடுத்து மறைத்து, அழைத்து, வளைத்
திருத்தி அகப்படுத்தி, நகைத்து...... உறவாடி,
பொருட்கு மிகத் துதித்து, இளகி,
புலப்படு சித்திரக் கரணப்
புணர்ச்சி விளைத்து உருக்கு பரத் ...... தையர்மோகப்
புழுத் தொளையில் திளைத்த அதனைப்
பொறுத்து அருளி,சடக்கென அப்-
புறத்தில் அழைத்து இருத்தி அளித் ...... திடுவாயே.
உருத்திரரைப் பழித்து, உலகுக்கு
உகக் கடை அப்பு எனக் ககனத்து
உடுத் தகரப் படுத்து, கிரித் ...... தலம் ஏழும்,
உடுத்த பொலப் பொருப்பு வெடித்து
ஒலிப்ப, மருத்து இளைப்ப, நெருப்பு
ஒளிக்க இருப்பிடத்தை விட,...... சுரர் ஓடித்
திரைக்கடலுள் படச் சுழலச்
செக த்ரையம் இப்படிக்கு அலைய,
சிரித்து எதிர் கொக்கரித்து மலைத் ...... திடு பாவி
செருக்கு அழியத் தெழித்து, உதிரத்
திரைக்கடலில்,சுழித்தலையில்
திளைத்த அயில் கர! குமர! ...... பெருமாளே.
பதவுரை
உருத்திரரைப் பழித்து--- துடைப்புக் கடவுளரான உருத்திரர்களை மிஞ்சும்படியாக
உலகுக்கு உகக்கடை அப்பு என--- உலகை அழிக்க எழுந்து வந்த பெருவெள்ளம் என்னும்படியாகப் பொங்கி,
ககனத்து உடுத் தகரப் படுத்து--- வானத்தில் உள்ள நட்சத்திரங்களைச் சிதறும்படிச் செய்து,
கிரித் தலம் ஏழும் உடுத்த பொலப் பொருப்பு வெடித்து ஒலிப்ப--- மலைகள் ஏழால் சூழப்பட்டு உள்ள பென்மலை ஆகிய மேருமலை வெடிப்பட்டு ஒலி எழுப்பவும்,
மருத்து இளைப்ப--- காற்று சோர்ந்து போகவும்,
நெருப்பு ஒளிக்க--- நெருப்பு தன்னை ஒளித்துக் கொள்ளவும்,
இருப்பிடத்தை விடச் சுரர் ஓடி திரைக் கடல் உட்படச் சுழல--- அவரவரது இருப்பிடத்து விட்டுத் தேவர்கள் ஓடிடவும், அலை வீசுகின்ற கடல்கள் சுழலவும்,
செகத்ரையம் இப்படிக்கு அலையச் சிரித்து--- மூவுலகங்களும் இவ்வாறு வேதனைப் படும்படியாகச் சிரித்தும்,
எதிர் கொக்கரித்து மலைத்திடு பாவி--- எதிரே நின்று கொக்கரித்துப் போர் புரிந்த பாவியாகிய சூரபதுமனுடைய,
செருக்கு அழியத் தெழித்து--- ஆணவம் அழியுமாறு அடக்கி,
உதிரத் திரைக் கடலில்--- குருதிக் கடலில்,
சுழித் தலையில் திளைத்த--- உண்டான சுழியில் திளைத்து நின்றதான,
அயில் கரக் குமரப் பெருமாளே --- வேலாயுதத்தைத் திருக்கரத்தில் ஏந்திய பெருமையில் மிக்கவரே!
இருள் குழலைக் குலைத்து முடித்து--- இருண்ட கூந்தலை அவிழ்த்து, பின்னர் மீண்டும்முடித்து
எழில் கலையைத் திருத்தி உடுத்து--- அணிந்துள்ள அழகிய ஆடையை திருத்தி உடுத்தும்,
இணைக் கயலைப் புரட்டி விழித்து --- கயல்மீன் போன்ற இரண்டு கண்களையும் இங்கும் அங்குமாகப் புரட்டி விழித்துப் பார்த்தும்,
அதிபார இழைக் களபப் பொருப்பு--- அதி பாரத்தை உடைய அணிகலன்களை அணிந்துள்ள, கலவைச் சாந்து அணிந்துள்ள மலை போன்ற முலைகள் மீது,
அணி கச்சு எடுத்து மறைத்து--- அழகான கச்சினை வைத்து மறைத்தும்,
அழைத்து --- காமுகர்க்கு அழைப்பு விடுத்து,
வளைத் திருத்தி அகப்படுத்தி--- கையில் உள்ள வளையல்களைத் திருத்திச் சரிசெய்து,
நகைத்து உறவாடி--- சிரித்துப் பேசி, உறவுமுறைகளைச் சொல்லி உறவாடியும்,
பொருட்கு மிகத் துதித்து இளகி--- பொருளைப் பெறுவதற்கு வேண்டி நிரம்பத் துதித்தும், பொருளைப் பெற்றுக் கொண்ட பின் மனம் நெகிழ்ந்தும்,
புலப்படு சித்திரக் கரணப் புணர்ச்சி விளைத்து உருக்கு பரத்தையர் மோகப் புழுத் தொளையில் திளைத்த--- புலப்படுத்த வேண்டிய விசித்திரமான புணர்ச்சி வகைகளைக் காட்டி மனதை உருக்குகின்ற விலைமாதரின் காமத்துக்கு இடமானதும், புழுக்கள் நெளிகின்றதுமான பெண்குறி என்னும் குழியில் இடைவிடாது திளைத்து இருந்த.
அதனைப் பொறுத்து அருளி --- அடியேனது இழிசெயலைப் பொறுத்து அருள் புரிந்து,
சடக்கு என ---விரைந்து,
அப் புறத்தில் அழைத்து இருத்தி அளித்திடுவாயே---அதற்குப் புறம்பானநன்னெறியில் அடியேனை அழைத்துப் பொருந்த வைத்துக் காப்பாற்றி அருள்வாயாக.
பொழிப்புரை
துடைப்புக் கடவுளரான உருத்திரர்களை மிஞ்சும்படியாகஉலகை அழிக்க எழுந்து வந்த பெருவெள்ளம் என்னும்படியாகப் பொங்கி, வானத்தில் உள்ள நட்சத்திரங்களைச் சிதறும்படிச் செய்து, மலைகள் ஏழால் சூழப்பட்டு உள்ள பென்மலை ஆகிய மேருமலை வெடிப்பட்டு ஒலி எழுப்பவும், காற்று சோர்ந்து போகவும், நெருப்பு தன்னை ஒளித்துக் கொள்ளவும், அவரவரது இருப்பிடத்து விட்டுத் தேவர்கள் ஓடிடவும், அலை வீசுகின்ற கடல்கள் சுழலவும்,மூவுலகங்களும் இவ்வாறு வேதனைப் படும்படியாகச் சிரித்தும், எதிரே நின்று கொக்கரித்துப் போர் புரிந்த பாவியாகிய சூரபதுமனுடைய ஆணவம் அழியுமாறு அடக்கி, குருதிக் கடலில்உண்டான சுழியில் திளைத்து நின்றதான வேலாயுதத்தைத் திருக்கரத்தில் ஏந்திய பெருமையில் மிக்கவரே!
இருண்ட கூந்தலை அவிழ்த்து, பின்னர் மீண்டும் முடித்து அணிந்துள்ளஅழகிய ஆடையை திருத்தி உடுத்தும், கயல்மீன் போன்ற இரண்டு கண்களையும் இங்கும் அங்குமாகப் புரட்டி விழித்துப் பார்த்தும், அதி பாரத்தை உடைய அணிகலன்களை அணிந்துள்ள, கலவைச் சாந்து அணிந்துள்ள மலை போன்ற முலைகள் மீது கச்சினை வைத்து அழகாக மறைத்தும், காமுகர்க்கு அழைப்பு விடுத்து,கையில் உள்ள வளையல்களைத் திருத்திச் சரிசெய்து, அவரிடத்தில் சிரித்துப் பேசி, உறவுமுறைகளைச் சொல்லி உறவாடியும், பொருளைப் பெறுவதற்கு வேண்டி நிரம்பத் துதித்தும், பொருளைப் பெற்றுக் கொண்ட பின் மனம் நெகிழ்ந்தும், புலப்படுத்த வேண்டிய விசித்திரமான புணர்ச்சி வகைகளைக் காட்டி மனதை உருக்குகின்ற விலைமாதரின் காமத்துக்கு இடமானதும், புழுக்கள் நெளிகின்றதுமான பெண்குறி என்னும் குழியில் இடைவிடாது திளைத்து இருந்த அடியேனது இழிசெயலைப் பொறுத்து அருள் புரிந்து, விரைந்து, அதற்குப் புறம்பானநன்னெறியில் அடியேனை அழைத்துப் பொருந்த வைத்துக் காப்பாற்றி அருள்வாயாக.
விரிவுரை
இத் திருப்புகழில் அடிகளார் முருகப் பெருமான் திருக்கரத்தில் பொருந்தி உள்ள ஞானசத்தி ஆகிய வேலாயுதத்தின் பெருமையை விளக்கி அருளினார்.
மாயையின் மகனாகிய சூரபன்மன் சிவ மூர்த்தியின்பால் பற்பல வரம் பெற்று உளந்தருக்கி அறநெறிப் பிறழ்ந்து அமரர்க்கு அலக்கண் விளைத்த ஞான்று, குமாரக்கடவுள் தேவர் சிறை தீர்ப்பான் அமர்த் தொடங்கி அசுரர் அனைவரையும் அட்டனர். முடிவில் சூரபன்மன் போர்க்கோலங்கொண்டு ஆயிரத்தெட்டுஅண்டங்களிலும் உள்ள சேனைகளைத் திரட்டிக்கொண்டு போர்க்களம் வந்தான். அப்பெரும் சேனையைக் கண்ட பூதவெள்ளங்களும் சேனாதிபதிகளும் வீரபாகு ஒழிந்த ஏனைய வீரர்களும் உள்ளம் நடுங்கினர். தேவர்கள் அளக்கலாகாத் துன்பத்தில் ஆழ்ந்தனர். குகப்பெருமான் அப்பெருஞ் சேனைகளையெல்லாம் அழித்தார். முருகவேளும் சூரபன்மனும் நெடுநேரம் போர் புரிந்தனர். சூரபன்மனுடையப் பற்பல ஆயுதங்களும் மாயத் திறங்களும் ஒழிந்தன. அவுணர்கோன் முடிவில் “இக்குமரனைக் கொணர்ந்து பொரை விளைவித்த தேவர்களை முதலில் கொன்று சிறிது எனது சினம் தணிந்தபின் இக்குமரனோடு போர்புரிவேன்” என்று நினைத்து ஒரு மாயமந்திரத்தைச் செபித்து உலகமுழுவதும் பெரியஇருள் சூழுமாறு செய்து, அவ்விருளில் வாளையேந்தித் தேவர்களைக் கொல்லுதற் பொருட்டு விண்ணிடைப் பாய்ந்தனன். அதனைக் குறிப்பால் உணர்ந்த அரியயனாதி அமரர்கள்,
தேவர்கள் தேவே ஓலம் சிறந்தசிற் பரனே ஓலம்
மேவலர்க்கு இடியே ஓலம் வேற்படை விமலா ஓலம்
பாவலர்க்கு எளியாய் ஓலம் பன்னிரு புயத்தாய் ஓலம்
மூவரும் ஆகி நின்ற மூர்த்தியே ஓலம் ஓலம்”
என்று முறையிட்டனர். அம்முறையைக் கேட்டு மூவிருமுகத்து அண்ணல், சேய் அழுகை கேட்ட தாயைப்போல் தண்ணருள் சுரந்து, தமது திருக்கரத்தில் பொருந்தி உள்ள வேலாயுதத்தை நோக்கி, “நீ விரைந்து சென்று சூரபன்மனுடைய மாயைகளையும் ஆற்றலையும் அழித்து அவனது உடலைப் பிளந்து வருதி” என்று ஆணை தந்தனர். உடனே வேற்படையானது ஆயிரங்கோடி சூரியர்கள் ஒருங்கு கூடினாற் போலத் திகழ்ந்து அக்கினி மழையைப் பொழிந்து கொண்டு சூரன் கொண்ட இருளுருவத்தை இமைப்பொழுதிலழித்தது.
“அரியும் அயனோடு அபயம்வே எ
அயிலை இருள் மேல் விடுவோனே” --- (இருவர்) திருப்புகழ்.
சூரபன்மன் “முடிவில்லாத வரத்தையுடைய என்னை இவ்வேற்படை என்ன செய்யும்? இதன் திறத்தைக் காண்கின்றனன்” என்று அண்டமுகடுகள் நடுங்கச் சிரித்து, மிகுந்த சீற்றங்கொண்டு “சமுத்திரம், பூதலம், பிரமாதி தேவர்களது உலகங்கள், உயிர்கள் முதலிய அனைத்தையும் இப்பொழுதே அழிப்பேன்” என்று விரைந்து சென்றுகடல் நடுவில்,நெருப்புப் போலுந் தளிர்களும், புகைபோன்ற இலைகளும், மேகக்கூட்டங்கள் போன்ற கிளைகளும், மரகதக் கற்கள் போன்ற பிஞ்சுகளும், மாணிக்கத்தையொத்த பழங்களுங்கொண்டு பிரமாண்டச் சுவர்வரையிலும் வேரோடி,இலக்க யோசனைத் தூரமளவும் விசாலித்த தலைகீழான மாமர வடிவங்கொண்டு, சகல லோகங்களையும் நடுநடுங்க மோதினன்.
"வன்னியின் அலங்கல் கான்று,வான்தழை புகையின் நல்கி,
பொன்என இணர்கள் ஈன்று,மரகதம் புரையக் காய்த்து,
செந்நிற மணிகள் என்னத் தீப்பழங் கொண்டு,கார்போல்
துன்னுபல் கவடு போக்கிச் சூதமாய் அவுணன் நின்றான்".
அந்த மாமரம் சிறிது அசைந்தபொழுது எல்லா உலகங்களும் அசைந்தன. குலகிரிகள் பொடிபட்டன. உலகத்தைத் தாங்கும் கூர்மமும் ஆதிசேடனும் புரண்டனர். நட்சத்திரங்கள் உதிர்ந்தன, அண்டங்களெல்லாந் தகர்ந்தன. நாரணன் உலகும் நான்முகன் உலகும் அழிந்தன. தேவர்களெல்லாம் வெருவி திருக்கயிலையை நாடி ஓடினர். அறுமுகப் பெருமான் விடுத்த அயிற்படையானது, ஆயிரங்கோடி யண்டத்து அக்கினியும் ஒன்று சேர்ந்தாற்போல் வடிவு தாங்கிச் சென்று,
"தேயுவின் எடுத்த அண்டத் திறங்களும்,பிறங்கு ஞாலத்து
ஆயிரகோடி அண்டத்து அங்கியும் ஒன்றிற்று என்ன
மீஉயர்ந்து ஒழுகி யான்றோர் வெருவருந் தோற்றங் கொண்டு
நாயகன் தனது தெய்வப் படைக்கலம் நடந்தது அன்றே".
மூதண்ட முகடுவரை வளர்ந்தோங்கி கிளைகளை அசைத்து உலகங்களை யெல்லாம் அசைத்தழிக்கின்ற மாமரத்தை இரு கூறாகப் பிளந்தது. அதுகண்ட சூரபன்மன், வேலாயுதத்தினது வெம்மையை ஆற்றாது கடலின் நடுவில் ஒளித்தான்.. வேல் கடலின் அருகில் சென்றவுடன் கடல் வற்றி வறண்டு விட்டது.
திரைக்கடலை உடைத்துநிறை புனல்கடிது குடித்துஉடையும்
உடைப்புஅடைய அடைத்துஉதிரம் நிறைத்துவிளை யாடும்.... --- வேல் வகுப்பு.
வேலாயுதத்தால் மாமரம் பிளக்கப்பட்டதும், மாளா வரம் பெற்ற சூரன் மடிந்திலன் ஆகி, பழைய அசுர வடிவம் கொண்டு, வாள் கொண்டு எதிர்த்துச் சீறினான். ஒப்பற்ற வேற்படை அவனுடைய உடம்பை இருகூறாகப் பிளந்து கடலிடை அவன் அடலை மாய்த்து, வேதங்கள் ஆர்ப்ப, தேவர்கள் துதித்துச் சிந்தும் பூமழைக்கு இடையே சென்று, அங்கியின் வடிவம் நீங்கி, அருள் வடிவைத் தாங்கி, வான கங்கையில் முழுகி கந்தக் கடவுளது கரமலரில் வந்து அமர்ந்தது.
புங்கவர் வழுத்திச் சிந்தும்
பூமழை இடையின் ஏகி
அங்கியின் வடிவம் நீங்கி,
அருள்உருக் கொண்டு, வான்தோய்
கங்கையில் படிந்து மீண்டு,
கடவுளர் இடுக்கண் தீர்த்த
எங்கள்தம் பெருமான் செங்கை
எய்திவீற்று இருந்ததுஅன்றே.
சிவபெருமான் தந்த வர பலத்தால், சூரபன்மன் அழிவில்லாதவன் ஆகி, மீட்டும் எழுந்து ஒரு கூறு சேவலும், மற்றொரு கூறு மயிலுமாகி, மிக்க சினத்துடன் சிறகுகளை வீசி, அதனால் உலகங்களைத் துன்புறுத்தி, முருகவேள் திருமுன் வந்தான்.
தாவடி நெடுவேல் மீளத்
தற்பரன் வரத்தால் வீடா
மேவலன் எழுந்து மீட்டு
மெய்பகிர் இரண்டு கூறும்
சேவலும் மயிலும் ஆகி
சினங்கொடு தேவர் சேனை
காவலன் தன்னை நாடி
அமர்த்தொழில் கருதி வந்தான்.
அவ்வாறு மீட்டும் அமர் புரிய வந்த ஆற்றலின் மிக்க அந்த இரு பறவைகளையும் எம்பெருமான் கருணை நாட்டத்துடன் நோக்கி அருளினார். உடனே சேவலும் மயிலும் போர் புரியும் எண்ணமும் சீற்றமும் செற்றமும் நீங்கி, தெளிந்த உள்ளமும், சிவஞானமும், அன்புருவமும் பெற்றன. செவ்வேள் பரமன் சேவலைக் கொடியாகவும், மாமயிலை வாகனமாகவும் கொண்டருளினார். ஆயிரத்தெட்டு அண்டங்களும் வணங்க வாழ்ந்த சூரபன்மன் சேவலும் மயிலும் ஆகி அகிலாண்ட கோடி எல்லாம் வணங்கி வாழ்த்தும் வரம்பிலாப் பேறு பெற்றான். அவனது தவத்தின் பெருமை அளப்பரியது! முருகப் பெருமானது அருட் பார்வையின் பெருமையும் அளப்பரியது.ஞானிகளது பார்வையால் இரும்பு பொன்னாவது போல், கந்தவேள் கருணை நோக்கால், சூரன் மறவடிவு நீங்கி, அறவடிவு பெற்றான்.
மருள்கெழு புள்ளே போல
வந்திடு சூரன், எந்தை
அருள்கெழு நாட்டம் சேர்ந்த
ஆங்குஅவன் இகலை நீங்கித்
தெருள்கெழு மனத்தன் ஆகி
நின்றனன், சிறந்தார் நோக்கால்
இருள்கெழு கரும்பொன் செம்பொன்
ஆகிய இயற்கை யேபோல்.
தீயவை புரிந்தா ரேனும்
முருகவேள் திருமுன் உற்றால்
தூயவர் ஆகி மேலைத்
தொல்கதி அடைவர் என்கை
ஆயவும் வேண்டும் கொல்லோ,
அடுசமர் அந்நாள் செய்த
மாயையின் மகனும் அன்றோ
வரம்புஇலா அருள்பெற்று உய்ந்தான்.
..... ..... ..... சகம்உடுத்த
வாரிதனில், புதிய மாவாய்க் கிடந்த, நெடும்
சூர்உடலம் கீண்ட சுடர்வேலோய்! - போர்அவுணன்
அங்கம் இருகூறுஆய், அடல் மயிலும், சேவலுமாய்த்
துங்கமுடன் ஆர்த்து, எழுந்து தோன்றுதலும், - அங்குஅவற்றுள்
சீறும் அரவைப் பொருத சித்ரமயில் வாகனமா
ஏறி நடாத்தும் இளையோனே! - மாறிவரு
சேவல் பகையைத் திறல்சேர் பதாகை என
மேவத் தனித்து உயர்த்த மேலோனே! --- கந்தர் கலிவெண்பா.
தழைந்து எழும் தொத்துத் தடங்கை கொண்டு அப்பி,
சலம் பிளந்து எற்றிப் ...... பொருசூர், அத்
தடம் பெரும் கொக்கைத் தொடர்ந்து, இடம் புக்குத்
தடிந்திடும் சொக்கப் ...... பெருமாளே. --- பொதுத் திருப்புகழ்.
கடல் சலம் தனிலே ஒளி சூரனை
உடல் பகுந்து, இரு கூறு எனவே, அது
கதித்து எழுந்து, ஒரு சேவலும் மாமயில் ...... விடும்வேலா! --- அவிநாசித் திருப்புகழ்.
கொடியநெடும் கொக்குக் குறுகு அவுணன் பட்டுக்
குரைகடல் செம்ப, சக்- ...... கரவாளச்
சிலை பக, எண் திக்குத் திகிரிகளும் பத்துத்
திசைகளினும் தத்த, ...... செகம் ஏழும்
திருகு சிகண்டிப் பொன் குதிரை விடும் செட்டி!
திறல! கொடும்பைக்கு உள் ...... பெருமாளே. --- கொடும்பாளூர்த் திருப்புகழ்.
கொலைகாட்டு அவுணர் கெட, மாச் சலதி
குளமாய்ச் சுவற, ...... முதுசூதம்
குறிபோய்ப் பிளவு பட,மேல் கதுவு
கொதிவேல் படையை ...... விடுவோனே! --- திருச்செந்தூர்த் திருப்புகழ்.
"அளப்பில்லா வரங்களைப் பெற்றிருந்த சூரபதுமனை வெற்றி கொள்ளவேண்டுமானால், அது வேலாயுதம் ஒன்றினால்தான் முடியும். ஆலம் உண்ட நீலகண்டரின் திருக்கரத்தில் உள்ள திரிசூலம் வெல்லாது. திருமாலின் திருக்கரத்தில் உள்ள சக்கரப்படை வெல்லாது. இந்திரன் கையில் உள்ள வச்சிராயுதம் வெல்லாது. முருகப் பெருமானே! தேவரீர் திருக்கரத்தில் விளங்கும் வேலாயுதம் ஒன்றே வெற்றிகொள்ளக் கூடியது" என்று பிரமதேவனும், மற்றுள்ள தேவர்கள் அனைவரும் வேண்டிக் கொள்ள, முருகப் பெருமான் வேலை விடுத்து,வேலையில் மரமாய் நின்ற சூரனை வெற்றி கொண்டார்.
"வெங்காள கண்டர் கைச்சூலமும் திருமாயன்
வெற்றிபெறு சுடர் ஆழியும்
விபுதர் பதி குலிசமும் சூரன் குலம் கல்லி
வெல்லா எனக் கருதியே
சங்க்ராம நீசயித்து அருள் எனத் தேவரும்
சதுர்முகனும் நின்று இரப்ப
சயிலமொடு சூரன் உடல் ஒருநொடியில் உருவியே
தனி ஆண்மை கொண்ட நெடுவேல்" --- வேல் விருத்தம்.
இதன் பொருள் ---
கொடிய ஆலகால விடத்தை அடக்கிக் கொண்டிருக்கும் கழுத்தை உடைய சிவபெருமானின் சூலாயுதமும், திருமாலின் வெற்றிச் சின்னமான ஒளி வீசுகின்ற சக்ராயுதமும், தேவர்களின் தலைவனான இந்திரனின் வச்சிராயுதமும்சூரபத்மனின் சுற்றம் முழுவதையும், அடியோடு அழித்து வெற்றி காணும் திறமை உடையன அல்ல, என்று நினைத்து, " வீரத்தில் சிறந்தவரே! தேவரீர் வெற்றி கொண்டு, எங்களுக்கு அருளவேண்டும்" என்றுதேவர்களும் பிரமனும் வேண்ட, கிரவுஞ்ச மலையையும் சூரபதுமனின் உடலையும் ஒரே நிமிடத்தில் உருவி அழித்து வெளி வந்தஒப்பற்ற ஆண்மை கொண்ட நெடிய வேலாயுதம்.
அந்த ஞானசத்தியாகிய வேலாயுதம், உயிருக்கு உள்ள அஞ்ஞானத்தை வெற்றிகொள்ளவேண்டும் என்பது அருணகிரிநாதரின வேண்டுகோள். தனது பிழையைப் பொறுத்து உடனடியாக ஆட்கொண்டு, நன்னெறியில் செலுத்தி அருள்புரிய வேண்டுகின்றார்.
"அஞ்ஞானத்தால் அடியேன் பிழை செய்யினும், ஆரருள்சேர்
மெய்ஞ்ஞானத்தாய் பொறுத்து ஆட்கொள்ள வேண்டும், வியன்மறை தேர்
செஞ்ஞானத்தார் புகழும் போரூர் முருக! செகம் உயிராம்
பொய்ஞ்ஞானக் கூட்டத்தக்கு உட்புறன் ஆகிய பூரணனே!"
என்று திருப்போரூர்ச் சந்நிதி முறையில் சிதம்பர சுவாமிகள் வேண்டியதை அறிக.
கருத்துரை
முருகா! அடியேன் பிழையைக் குறியாது விரைந்து ஆட்கொள்ளுதல் வேண்டும்.
No comments:
Post a Comment