நெடும்பயண ஏற்பாடு
-----
மனிதனுக்கு மரணத்தைவிட மிகத் துன்பமானது எதுவும் இல்லை. "சாதலின் இன்னாதது இல்லை" என்று அருளினார் திருவள்ளுவ நாயனார். சாகிறவன் மரணத் தருவாயில் எப்படித் துன்பப்படுவானோ தெரியாது. செத்தவர்கள் யாரும் தாங்கள் அனுபவித்த மரண வேதனையைத் திரும்பி வந்து சொன்னது இல்லை. ஆனால்,சாகும் தருவாயில் இருக்கிறவன் படுகிற பாட்டைக் கண்ணால் பார்க்கிறவர்களுக்கு மரண அவத்தை எவ்வளவு கொடுமையானது என்பதை ஊகித்து உணர முடியும். அந்த வேதனையைக் கண்டவர்கள் மரணத்தை உண்டாக்கும் ஆற்றலுக்கு, ஓர்உருவம் கொடுத்து இயமன் என்று பெயர் வைத்து, அவன் கையிலும் ஒரு கயிறு இருப்பதாகச் சொல்லி, அவன் அந்தக் கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கிறான் என்று சொன்னார்கள்.
தெரியாத பொருளையும், நுட்பமான பொருளையும் நாம் உணர்ந்து கொள்ளும்படி பருப்பொருளாகச் சொல்வது பெரியவர்கள் வழக்கம். மரணத்தை விளைவிக்கிறவன் இயமன் என்று சொல்வது மரபு. அவனுக்குக் கூற்றுவன் என்றும் ஒரு பெயர் உண்டு. கூறு போடுதல் என்றால் பிரித்து வைத்தல் என்று பொருள். உடம்பிலிருந்து உயிர் போகும் நேரம் வரும் போது, "உயிரே! நீயாக இந்த உடம்பிலிருந்து வெளியே போய்விடு" என்று சொன்னால் போகாது. பழக்கப்பட்ட வீட்டை விட்டு வெளியே போவதற்கு மனம் வராது. ஒருவனுடைய வீட்டில் நான்கைந்து ஆண்டுகள் குடியிருந்துவிட்டாலே, வீட்டுக்காரன் வீட்டைக் காலி பண்ணு என்றால், குடியிருப்பவனுக்கு அந்த வீட்டை விட்டுப் போக மனம் வருவது இல்லை. பல ஆண்டுகள், பிறந்ததிலிருந்தே, இந்த உடம்பில் இருந்து வாழும் உயிரை அதை விட்டுப் போ என்றால் போகுமா? போகாது. அதனை வெளியே வரும்படி செய்ய, ஒருவன் வருகின்றான். அவன் எருமைக் கடாவில் இயமன் என்னும் பெயரில் வந்து, தன் கையிலுள்ள பாசக் கயிற்றால் சுருக்கிட்டு இழுக்கிறான். அவனுக்கு இட்ட வேலையை அவன் ஒழுங்காகச் செய்கின்றான். அதனை அறியாமல் நாம் அவனைப் பாவி என்கிறோம். ஆனால்,பெரியவர்கள் அவனைத் தருமராசன் என்று சொல்வார்கள். கூற்றுவனை "தருமனார்" என்கின்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். "விண்ணிடைத் தருமராசன்" என்றும் "தருமராசற்காய் வந்தகூற்று" என்றும் அப்பர் பெருமான் குறித்தருளுகின்றார். உடம்பில் இருந்து உயிரைப் பிரிக்கும் கடமையை நிறைவேற்றுகின்றவன் என்பதால், மரணத்துக்கு அஞ்சாதவர்கள், "தருமராஜா" என்கிறார்கள். நாமோ மரணத்தைக் கண்டு பயப்படுகிறோம். அதனால் அவனைப் "பாவி" என வைகிறோம்.
இயமன் எருமைக் கடாவின் மீது ஏறி வருவான். அவனுக்குக் கோரப் பற்கள் இருக்கும். அவன் பார்க்கும் போதே கண்களில் நெருப்புக் கொப்புளிக்கும். புகைவிடும். அவனுக்கு ஏன் கோபம் உண்டாகின்றது? என்றால், இறைவன் கட்டளையை மதிக்காது, இறைவனுக்கு நாம் திரும்பத் திரும்ப வேலையை வைப்பதால். பள்ளிக்குச் செல்லுகின்ற ஒருவன் நன்றாகப் படித்துத் தேறாமல், இருந்த வகுப்பிலேயே பல ஆண்டுகள் இருக்கின்றான் என்றால், யாருக்குத் தான் கோபம் வராது? அதுபோல, பிறவியை எடுத்து வந்து ஆன்மா, வாழவேண்டிய முறையில் வாழ்ந்து, பிறவி அற்ற நிலைக்கு உயரவேண்டும் என்பதற்காக, அத்தனை நலங்களையும் அருளிச் செய்து இருக்கின்றான் இறைவன். பிறவி அற்ற நிலைக்கு உயராமல், பிறவியிலேயே விழுந்து கிடந்தால், கோபம் வராதா? திரும்பத் திரும்பத் தனக்கு வேலையை வைப்பதால், இயமனுக்குக் கோபம் வருகின்றது. அவன் நம் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கப் பாசக் கயிற்றைக் கையில் வைத்திருக்கிறான். சொல்லும்போதே அது நமது உள்ளத்தில் பயம் உண்டாகிறது. மரணம் அச்சத்தைத் தருவது என்று எண்ணுகின்ற நமக்கு, அச்சத்தைத் தரும் கோலத்துடன் இயமன் வருகின்றான். மரணபயம் அற்றவர்களிடத்தில் இயமனுக்கு வேலை இல்லை. காரணம், அவர்கள் இறைவனைத் துணையாகப் பெற்று உள்ளார்கள். "மரண ப்ரமாதம் நமக்கு இல்லை, ஆம். என்றும் வாய்த்த துணை கிரணக் கலாபியும் வேலும் உண்டே" என்றார் அருணகிரிநாதப் பெருமான்.
"மரணத்தைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்? மரணத்தை வரவேற்கும்படியாகச் சொல்லக் கூடாதா?" என்றால், மரணத்தில் பயம் உண்டானால்தான் மரணத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்னும் ஆசையும், அதற்கேற்ற முயற்சியும் தோன்றும். மரண பயத்தில் இருந்து விடுபட வழி எது என்று தேடும். அதை அருள் புரிகின்றவன் இறைவன் என்பதை உணர்ந்து, அவனிடத்தில் பத்தி உண்டாகும். எனவே, மரணத்தால் உண்டாகும் அவத்தையை, காலனால் உண்டாகும் பயமாக உருவகப்படுத்தி,அந்தப் பயத்தைப் போக்குகின்ற இறைவன் என்றும் சொல்லி, இறைவனிடத்தில் பத்தியை உண்டாக்கி வந்தார்கள் நமது அருளாளர்கள். மரண பயம் மனத்தில் தோன்றினால் அழுத்தமான பக்தி உண்டாகும். பத்தி செய்யவில்லையானால், பிறவிக் கடலில் இருந்து கரை ஏற முடியாதே என்னும் பயம் உண்டாகும். அதைப் போக்க உண்டாவதுதான் 'பயபத்தி' . "அச்சமே கீழ்களது ஆசாரம்" என்றார் திருவள்ளுவ நாயனார். அச்ச உணர்வு நம்மை விட்டு நீங்குவது இல்லை. எனவே, மரணத்தைக் கண்டு அஞ்சுகின்றோம்.
ஒரு வீட்டிலே ஒருவர் இறந்து போகிறார். பக்கத்து வீட்டுக் கிழவர் ஒருவர் சுடுகாடு வரையிலும் அந்தப் பிணத்தோடு சென்று வருகிறார். மயானத்திலே அவர், "உம்...எல்லோரும் இப்படிப் போக வேண்டியதுதான். இன்றைக்கு இல்லாவிட்டால் நாளைக்கு எமன் வருவான்" என்று சலிப்போடு சொல்கிறார். ஆனால், நீரில் முழுகி எழுந்தவுடனேயே அந்த நினைவு ஒழிந்து விடுகின்றது. வீட்டுக்குத் திரும்பி வந்தவுடனேயே அவருக்குப் பயம் போய்விடுகிறது. மயானத்தில் தோன்றிய பயம், கல்லை எறிந்த உடன் குளத்தில் பாசி சற்றே விலகி மறுபடியும் நீரை மூடிக் கொள்வது போல, மறைந்து போகிறது. அவருக்கு ஏற்பட்ட வைராக்கியம், மயான வைராக்கியம்.
ஒருவன் வாழும் வீடு தீப்பற்றிக் கொண்டுவிட்டால், அவன் அந்த நெருப்பை அணைக்க, "எங்கே நீர்? எங்கே நீர்?" என்று தவிதவித்து ஒடுவான். "இந்தா அப்பா, இது மிகவும் சுவையான பால்" என்றால் அவன் அதனை வாங்கிக் குடிக்க நிற்பானா? இலவசமாக வேறு எதையாவது கொடுத்தாலும் வேண்டாம் என்றுதான் சொல்லி ஓடுவான். மரணம் என்கிற துன்பத்தை நினைத்துப் பார்த்து, அது தனக்கு வந்து விடுமே என்னும் உண்மையான பயம் என்னும் தீ ஒருவனைப் பற்றிக் கொண்டுவிட்டால் அதனை அணைக்க, "எங்கே அருள் நீர்? எங்கே அருள் நீர்?" என்று அலறித் தேடி ஒடுவான்.
இயமன் எந்தச் சமயத்திலும் நம்மை விழுங்கிக் கொண்டு போய்விடுவான். அது எந்த சமயம் என்று நமக்குத் தெரியாது. இயமன் முன்னதாகவே எச்சரிக்கை செய்து வருகிறவன் அல்ல.
"இப்பவோ, பின்னையோ, மத்யமகாலத்திலோ,
இரவிபடும் நேரம் அதிலோ,
இரவிலோ, பகலிலோ, உதய காலத்திலோ,
எந்த எந்த நேரம் அதிலோ,
அப்பிலோ, தீயிலோ, நாயிலோ, பேயிலோ,
அரவிலோ, இடி அதனிலோ,
ஆறாத புண்ணிலோ, அடர் நோவு தன்னிலோ,
ஆயுத வகைகள் எதிலோ,
செப்ப அரிய வீட்டிலோ, மேட்டிலோ, காட்டிலோ,
தெருவிலோ, திண்ணை தனிலோ,
செகம் அதனில் எந்தெந்த இடம் அதனிலோ
சீவன் விடுக்கின்ற நேரம்.
எப்போது ஆகிலும் கூற்றுவன் வருவான்,
அப்போது அந்தக் கூற்றுவன்,தன்னைப்
போற்றினும் போகான், பொருளொடும் போகான்,
சாற்றவும் போகான், தமரொடும் போகான்,
நல்லார் என்னான், நல்குரவு அறியான்,
தீயார் என்னான், செல்வர் என்று உன்னான்,
தரியான் ஒருகணம், தறுகணாளன்,
உயிர்கொடு போவான், உடல் கொடு போகான்".
"கபிலர் அகவல்"என்னும்பழையநூல் கூறும் செய்தி இது.
எந்த சமயத்திலும் உயிரைக் கொண்டு போக, கூற்றுவன் என்பான் வருவான். அந்த சமயத்தில், அந்தக் கூற்றுவனைப் புகழ்ந்து துதித்தாலும் போகமாட்டான். வேண்டிய பொருளைத் தருகின்றோம், விட்டுவிடு என்று மிகுதியாகப் பொருளைக் கொடுத்தாலும், அதைப் பெற்றுக் கொண்டு போகமாட்டான். (கருமமே கண்ணாக உள்ளவன் என்பதால், அவன் இலஞ்சம் வாங்க மாட்டான்). உபசாரமான வார்த்தைகளைக் கூறினாலும் வந்த வேலையை முடிக்காமல் போகமாட்டான். நமது சுற்றத்தார்களை நாளடைவில் பிடித்துச் சென்று இருந்தாலும், நம்மை மட்டுமாவது விட்டுவிடலாம் என்ற எண்ணமும் அவனுக்கு உண்டாகாது. ஆகையினால், நமது சுற்றத்தாரைப் பிடித்துச் செல்வதோடு போய்விட மாட்டான். தன்னால் பிடிக்கப்படுபவர் நல்லவர் என்று பார்க்கமாட்டான். தன்னால் பிடிக்கப்படுபவர் வறுமையில் உள்ளவராயிற்றே என்பதையும் உணரமாட்டான். தன்னால் கொண்டு செல்ல உள்ளவர் தீயவர் என்று கருதி விரைந்து கொண்டு போகமாட்டான். மிகுந்த செல்வம் படைத்தவர் என்று விட்டுவிட மாட்டான். ஒருவனுடைய வாழ்நாள் முடிந்துவிட்டால், ஒரு கணப் பொழுதும் தாமதிக்கமாட்டான், அவன் அஞ்சா நெஞ்சம் படைத்தவன், இரக்கம் இல்லாதவன். உயிரைத் தன்னோடு கொண்டு போவான். உடம்பைக் கொண்டு போக மாட்டான். அது பயனற்றது என்று தள்ளி விடுவான்.
எனவே, மரணம் என்னும் தவிர்க்க முடியாத ஆபத்து எப்போதும் நம்மை எதிர்நோக்கி இருக்கின்றது. இந்தப் பேராபத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள ஓர் உத்தியைத் திருஞானசம்பந்தப் பெருமான் நமக்கு அருளிச் செய்து உள்ளார்.
"நீ நாளும் நன்னெஞ்சே! நினைகண்டாய்,யார் அறிவார்
சாநாளும் வாழ்நாளும்?சாய்க்காட்டு எம் பெருமாற்கே
பூநாளும் தலைசுமப்ப,புகழ்நாமம் செவிகேட்ப,
நாநாளும் நவின்று ஏத்தப் பெறலாமே நல்வினையே".
இதன் பொருள் ---
நல்ல நெஞ்சமே! நீ நாள்தோறும் இறைவனை நினைப்பாயாக. சாகும் நாளையும் உயிர் வாழும் நாளையும் யார் அறிவார்கள்? ஆதலின், திருச் சாய்க்காடு என்னும் திருத்தலத்தை அடைந்து, அங்குத் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ளஎம்பெருமானுக்கு நாளும் பூக்களைத் தலையில் சுமந்து சென்று அருச்சித்தும், செவிகளால் அவன் புகழ் மொழிகளைக் கேட்டும், நாள்தோறும் நாவினால் அவன் திருப்பெயரை நவின்று ஏத்தியும் செயற்படுவாயானால், நீநல்வினைப் பயனைப் பெறலாம்.
திருச்சாய்க்காடு என்னும் திருத்தலத்துக்கு எழுந்தருளிய போது, திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல் இது. திருச்சாய்க்காட்டுக்குச் சென்றுதான் வழிபடவேண்டும் என்று எண்ணிவிட வேண்டாம். இருக்கும் இடத்திலேயே இறைவன் திருக்கோயில் கொண்டு உள்ளான். அவனை வணங்க வேண்டிய முறைப்படி வணங்கவேண்டும் என்பதுதான் குறிப்பு.
ஒருவன் ஒர் ஊருக்குப் போகவேண்டும். அந்த ஊர் போகும் வண்டி எத்தனை மணிக்குக் கிளம்புகிறது என்று ஒருவரைக் கேட்கிறான். அவர் பத்து மணிக்கு என்கிறார். மற்றொருவரைக் கேட்கிறான். அவர் பதினோரு மணிக்கு என்கிறார். இவன் ஒன்பது மணிக்கே நிலையத்தில் போய் உட்கார்ந்து கொள்கிறான். "எந்தச் சமயத்தில் வண்டி கிளம்பும் என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. எதற்கும் முன்னாடியே போய்விட்டால் நல்லதென்று வந்து விட்டேன்?"என்று சொல்கிறான். அதைப்போலவே மரணம் என்பது எப்போது வரும் என்று நிச்சயமாகத் தெரியாததாலே, அதிலிருந்து தப்ப வேண்டுமானால், அது வருவதற்கு முன்னரே இறைவனை வாழ்த்தத் தொடங்க வேண்டும்.
எனவே, மரண பயத்தை ஒழித்து, மீட்டும் பிறவாத நிலை தந்து, நம்மை எல்லாம் ஆட்கொள்ளுகிற இறைவனைப் பாட வேண்டும். அவன் ஒருவன்தான் உண்மையான புகழுக்கு உரியவன். அவனது புகழே "பொருள்சேர் புகழ்". மற்றவை எல்லாம் இருள்சேர் புகழ். பொருள்சேர் புகழுக்கு உரியவனாக அவன்தான், அவனைப் புகழ்வதற்குரிய நாக்கை நமக்குத் தந்தவன். நமது கடமை, நன்றி உணர்வோடு, நாக்கைத் தந்தவனைப் புகழ்வது. புகழ்வதால் அவனுக்கு ஏதும் நன்மை இல்லை. நமக்குத் தான் நன்மை.
"பேச்சு என்ற பெருவரத்தைப் பெற்ற மக்கள் நாம். ஆதலால் நல்ல பேச்சைப் பேசவேண்டும். இறைவன் பேச்சைப் பேசவேண்டும். அயில்வேலன் கவியைக் கற்றுக் கொள்ளவேண்டும். அன்பால் எழுத்துப் பிழையறக் கற்றுக் கொள்ளவேண்டும். கூற்றன் வந்து கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும்போது அந்தக் கவி வந்து உதவும். அந்தச் சமயத்தில் கற்றுக் கொள்ளலாம் என்று இருப்பீர்களானால் நிச்சயமாக உங்களால் அப்போது கற்றுக் கொள்ள முடியாது" என்று நமக்கு உறைக்கும்படியாக உபதேசம் செய்கிறார் அருணகிரிதாநப் பெருமான்.
அழித்துப் பிறக்க ஒட்டா அயில்
வேலன் கவியை, அன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி-
லீர்! எரி மூண்டது என்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங்
கூற்றன் விடும் கயிற்றால்
கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்-
றோ கவி கற்கின்றதே? --- கந்தர் அலங்காரம்.
நோய் தீரவேண்டிப் பத்தியம் இருப்பவனுக்கு, தான் முன்னர் உண்டு அனுபவித்த சுவையான உணவு வகைகளைப் பார்த்த உடனே, வாசம் மூக்கில் பட்டவுடனே, அவற்றின் மீது நாட்டம் உண்டாகும். பழைய வாசனை காரணமாகப் பத்தியத்தைக் கைவிட்டான் என்றால், நோய் முற்றும். அதுபோலவே, இறைவனுடைய திருப்புகழை, அருட்பாடல்களை ஓதிக் கொண்டு இருக்கின்ற நமக்கு, பழைய வாசனை காரணமாக மற்ற பாடல்களில் நாட்டம் உண்டாகும். அவை யாவும் இழியும் கவிகள். அருணகிரிநாதப் பெருமான். "கிழியும்படி அடல் குன்று எறிந்தோன் கவி கேட்டு உருகி, இழியும் கவி கற்றிடாது இருப்பீர்" என்று நம்மை எச்சரிக்கை செய்கின்றார்.
உடம்பெடுத்து வாழ வந்த நாம், உடம்பை விட்டுப் போகத்தான் போகின்றோம். நெடுநாளைக்கு இங்கேயே இருந்து விடவும் முடியாது. வாழ்நாள் கால எல்லைக்கு உட்பட்டது. அது கருவிலேயே வரையறை செய்யப்பட்டு விட்டது. வாழ்நாள் முடிவில் ஒரு நெடிய யாத்திரையை மேற்கொள்ளப் போகின்றோம். யாத்திரை எப்போது தொடங்கும் என்பது தெரியாது. யாத்திரை உண்டு என்பது மட்டும் நிச்சயம். அந்த யாத்திரைக்கு உரிய நல்ல ஏற்பாடு அறச்செயல் ஆகும். அதனை இப்போதே செய்துகொண்டு, போகும்போது புண்ணியத்தை எடுத்துக் கொண்டு யாத்திரையை இனிமையாக்கிக் கொள்ளுவோம். பாவ மூட்டையைச் சுமக்கவேண்டாம்.
No comments:
Post a Comment