உலக நூல் --- அறிவு நூல்.
----
சற்றேறக்குறைய ஐம்பத்துமூன்று ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டுத் தேவைக்கான பொருளை வாங்க நான் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு மளிகைக் கடைக்குச் சென்றேன். வழக்கம் போல, நான் வாங்கிய பொருளை ஒரு பழைய புத்தகத்தில் இருந்து கிழித்த தாளில் வைத்துப் பொட்டலமாக்கிக் கடைக்காரர் என் கையில் கொடுத்தார். இன்னொரு பொருளை வேறொரு புத்தகத்தில் இருந்து தாளைக் கழித்து பொட்டலமாக்கித் தந்தார்.
எப்பொழுதுமே எந்த ஒரு துண்டுச் சீட்டாக இருந்தாலும் கூட, அதில் உள்ளதைத் தவறாமல் படித்துப் பார்க்கும் பழக்கம் எனக்கு உண்டு. "கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆவான்" என்பதற்காக அல்ல. "கண்டு, அத்தைப் படித்தால் ஒருவன் பண்டிதன் ஆவான்" என்பது தான் அது.
இந்த உண்மையெல்லாம் அப்போது எனக்கு நிச்சயமாகத் தெரியாது. எனக்கு உள்ள பழக்கத்தின் காரணமாக, கடைக்காரர் வசமிருந்து பொட்டலம் மூலமாகக் கிடைத்த அந்த இரண்டுத் தாள்ளை வீட்டுக்கு வந்த பிறகு நான் படித்துப் பார்த்தேன். எனக்கு வியப்பிலும் வியப்பாக இருந்தது. ஒரு தாளில் வள்ளல் பெருமான் அருளிய திருவருட்பா பாடல் இருந்தது. மறு தாளில் இப்போது நான் சொல்லப் போகும் தகவல் இருந்தது. இரண்டையும் படித்த பின்னர் எனக்கு உண்டான ஆவல் காரணமாக கடைக்குச் சென்று அந்த இரண்டு தாள்கள் அடங்கிய பழைய புத்தகங்களைக் கேட்டேன். ஒன்று தீர்ந்து விட்டது. இருந்தது வள்ளலார் அருளிய திருவருட்பாத் தொகுப்பு மட்டுமே தான். அதை விலைக்குக் கேட்டேன். கடைக்காரர் இலவசமாகவே தந்தார். நன்றி சொல்லிப் பெற்று வந்தேன்.
அதற்குப் பிறகு கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எத்தனையோ வாடகை வீடுகளை நான் பார்க்க நேர்ந்தது. வீட்டை மாற்றும்போது, சில பொருள்களை தேவையில்லை என்று வீசி விடுவேன். சில பொருள்கள் எப்படியோ எனக்கு அகப்படாமல் போனதும் உண்டு. ஆனால், அந்த அரைத் தாளை மட்டும் இன்னமும் நான் போற்றிப் பாதுகாத்து வருகின்றேன். சில புத்தகங்களை நண்பர்கள் அல்லது உறவினர்கள் என்னிடமிருந்து எடுத்துச் செல்வார்கள். அவை என்னிடம் பெரும்பாலும் திரும்பி வருவது இல்லை. அவ்வப்போது நண்பர்களிடம் நான் போற்றிப் பாதுகாக்கும் துண்டுச் சீட்டைக் காட்டி, கையோடு அதை நான் திரும்பப் பெற்று பாதுகாப்பாக வைத்துக் கொள்வேன்.
சாதாரணமாக ஒரு A4 தாளின் நான்கில் ஒரு பகுதி அளவை உள்ள அதை நான் இன்றளவும் போற்றிப் பாதுகாக்கின்றேன், அதுவும் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக என்னும்போதே, எல்லாருக்கும் அந்தத் துண்டுச் சீட்டிலே அப்படி என்னதான் உள்ளது என்பதை அறிந்துக் கொள்ள ஆவல் மேலிடும் தான். இதோ அந்தத் தாளில் உள்ள செய்தி....
////தமிழக முதல்வராக அண்ணா அவர்கள் பதவி ஏற்றதும், வெளிநாடுகளுக்குச் சென்றார். அந்த நேரத்தில், பல நிகழ்ச்சிகளில் பேசினார். முடிவில் வெளிநாட்டவர் பலரும் பேரறிஞர் அண்ணா அவர்களை ஒரே நேரத்தில் ஒருசேர எழுந்து, ஒரு கேள்வி கேட்டனர். "ஐயா, தங்கட்கு உண்மையில் உங்கள் உள் உணர்வோடு பிடித்த நூல் எது?"
மக்கள் எல்லாம் அண்ணா அவர்களிடமிருந்து எதிர்பார்த்தது ஒன்று. ஆனால் அண்ணா அவர்கள் சொன்னது, "எனக்கு திருமூலர் திருமந்திரம் நூல் ஒன்றுதான் உயிர்க்கு உறுதுணையாக உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நூல்" என்றதும் மக்கள் எல்லோரும் சொல்லொணா வியப்பில் மூழ்கினார்கள்.////
இதை உங்களில் பெரும்பாலோரால் நம்பமுடியாது.
சாதி, இனம், மதம், மொழி ஆகியவற்றால் மனிதன் வேறுபட்டு விடக் கூடாது என்று நிறையவே பேசுகின்ற,எழுதுகின்ற உலகில், சாதி, இனம், மொழி, சமயக் கொள்கைகள் போன்ற வேறுபாடுகள் மலிந்துள்ள சமுதாயம்தான் நாம் இன்றும் காண்பது. இந்த பேத உணர்வுகளைக் களைந்து ஒரு புதிய சமுதாயம் காண எத்தனையோ பெரியவர்கள் பிறந்த பூமி இது. "சாதி இரண்டொழிய வேறு இல்லை" என்றார் ஔவைப் பிராட்டியார்.
"சாதியிலே, மதங்களிலே, சமய நெறிகளிலே, சாத்திரச் சந்தடிகளிலே, கோத்திரச் சண்டையிலே, ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்! அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகு அல்லவே" என்று கூவினார் வள்ளல்பெருமான். அவர் அருளிய பாடல்களை ஓதிக் கொண்டே இன்னமும் சாதிப் பித்து ஒழியாத நிலையில் மனித சமுதாயத்தின் ஒரு பகுதி, தம்மைச் சன்மார்க்கத்தினர் என்று கூறிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்த மணிவாசகப் பெருமான், "சாதி குலம் பிறப்பு என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதம் இலி நாயேன்" என்றார். அருமையான திருவாசகப் பாடலை ஓதுகின்றவர்களில், சாதி குலம் என்னும் வேற்றுமைகளைக் கருத்தில் கொள்ளாதவர் மிக அருமையே.
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்". "நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்". "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்பதெல்லாம் வீதிக்கு வீதி முழங்கியது ஒருகாலம். என்னைப் போன்றவர்களை, நாங்கள் இளைஞராக இருந்த பொழுது, அதாவது ஒரு அறுபது ஆண்டுகளுக்கு முன்னால்,ஒன்றே குலம் ஒருவனே தேவன், யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று யார் சொன்னது என்று கேட்டால், அறிஞர் அண்ணா என்றுதான் உடனடியாகப் பதில் வரும்.
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பதும் "நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்" என்பதும் பன்னிரு திருமுறைகளில் ஒன்றான திருமந்திரம் என்ற நூலை அருளிய திருமூல நாயனாரின் அருள்வாக்கு என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பது புறநானூற்றுப் புலவர்களில் ஒருவராகிய கணியன் பூங்குன்றனார் என்பதும் அந்தக் காலத்தில் பாமர மக்கள் பலருக்கும் தெரிந்திருக்க முடியாதுதான். யார் சொன்னது? என்றால் அண்ணா சொன்னார் என்றுதான் அப்போதைய இளைஞர்கள் சொல்லுவார்கள். அண்ணா அவர்கள் சொன்னார் என்பதற்காகவே சாதி மறுப்புத் திருமணம் புரிந்து கொண்டவர்கள் அக்காலத்தில் உண்டு. சாதி வேறுபாடு கொள்ளமால் ஒருமை மனதுடன் வாழ்ந்தவர்களும் அக்காலத்தில் உண்டு. அண்ணா அவர்கள் நல்லநூல்களைத் தேர்ந்து படித்துச் சொன்ன சொற்கள் பலன் தராமல் போயின என்று சொல்லுவதற்கு இல்லை.
காய்தல் உவத்தல் இன்றி நூல்களைப் படித்துத் தெளியும் ஆற்றல் படைத்தவர் என்பதால், உண்மையிலேயே அண்ணாதுரை அவர்கள் ஓர் அறிஞர் தான். ஓர், ஒரு என்பதற்கு "ஒப்பற்ற" என்று பொருள். எனவே, அண்ணா அவர்கள் "ஒப்பற்ற அறிஞர் " என்பதில் ஐயமில்லை.
நூலக வசதிகளும், அச்சிட்ட புத்தகங்களும் அருகி இருந்த காலம் அது. இப்போது போல் பட்டனைத் தட்டினால் எந்த நூலையும் பெறலாம் என்ற தொழில்நுட்ப வசதியெல்லாம் இல்லாத காலம் அது.
கற்றல் குறித்துச் சொன்ன திருவள்ளுவ நாயனாரும், "கற்பவை கசடு அறக் கற்க" என்றும், "கற்ற பின் நிற்க அதற்குத் தக" என்றும் தான் அறிவுறுத்தினார்.
அதாவது, அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் உணர்த்தும் நூல்களை அன்றி, சிற்றின்பம் தரும் நூல்களைப் பயிலுதல் கூடாது. உயிர்கள் தமது வாழ்நாளில் சிலவே பிழைத்து இருப்பன. அவற்றுள்ளும் பல,நோய்களை அடைந்து துன்றுபுவனவாக உள்ளன. உயிர்களுக்குச் சிற்றறிவும் உள்ளதால், சிற்றின்பத்தைப் பயக்கும் நூல்களில் மனம் செல்லுமாயின், கிடைத்தற்கு அரிய வாழ்நாள் பயனற்றுக் கழிந்து,பிறப்பின் பயனை அடைய முடியாமல் போகும்.
"அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே" என்று நன்னூல் கூறும். அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்களைப் பயக்கும் நூல்களையும் ஆசிரியரிடத்தில் கற்குங்காலையில்,நூல்களின் பொருளை ஒன்றை ஒன்றாக எண்ணிக் கொள்ளுகின்ற விபரீதமும், இதுவோ அதுவோ என்னும் ஐயப்பாடும் நீக்கி, உண்மைப் பொருளை உணர்ந்து, உணர்ந்த வழியில் நிற்கின்ற பலரோடும் பல காலமும் பழகி வந்தால்,உள்ளத்தில் உள்ள குற்றம் அகலும்.
கற்ற வழியில் நிற்றல் என்பது,இல்லறத்தில் வழுவாது நின்று, மனைவியோடு போகம் புசித்து, கெடுதல் இல்லாத அறங்களைச் செய்து வருதல் ஆகும். இல்லறத்தில் இருந்து நீங்கி, துறவறத்தில் நின்றவரானால், தவத்தினால் மெய்ப்பொருளை உணர்ந்து, அவா அறுத்து, சிறிதும் குற்றப்படாமல் ஒழுகுதல் வேண்டும்.
இந்தப் பிறவியில் ஒருவன் அடைய வேண்டிய சுவர்க்க இன்பம் ஒன்று உள்ளது என்றால், அது கற்ற பலரோடும் கூடி நல்ல நூல்களைப் பியன்று வருதலே ஆகும் என்கின்றது, "விவேக சிந்தாமணி" என்னும் நூல்.
நற்குணம் உடைய வேந்தை
நயந்து சேவித்தல் ஒன்று;
பொற்புடை மகளிரோடு
பொருந்தியே வாழ்தல் ஒன்று;
பற்பலரோடு நன்னூல்
பகர்ந்து வாசித்தல் ஒன்று;
சொல்பெறும் இவைகள் மூன்றும்
இம்மையில் சுவர்க்கமாமே. --- விவேகசிந்தாமணி.
இதன் பொருள் ----
நற்குணம் உடைய வேந்தை நயந்து சேவித்தல் ஒன்று--- நல்ல குணங்கள் பொருந்தப் பெற்ற அரசனை விரும்பி, அவருக்குப் பணி புரிதல் என்பது ஒன்றும்,பொற்புடை மகளிரோடு பொருந்தியே வாழ்தல் ஒன்று--- நற்குண நற்செய்கைகள் பொருந்தி உள்ள பெண்ணை மணம் செய்துகொண்டு, அவளோடு சேர்ந்து வாழ்தல் என்பது ஒன்றும்,பற்பலரோடு நன்னூல் பகர்ந்து வாசித்தல் ஒன்று--- பலப்பல அறிவு நூல்களைக் கற்று வல்லவர்களோடு கூடி இருந்து, அந்த நூல்களைச் சொல்லிப் படித்தல் என்பது ஒன்றும், சொற்பெறும் இவைகள் மூன்றும் இம்மையில் சொர்க்கம் தானே ---புகழ்ந்து கூறப்பெறும் இந்த மூன்று செயல்களும் இந்தப் பிறவியில், சுவர்க்க இன்பத்தைப் போன்று இனிமை தருவன ஆகும்.
விளக்கம்--- உடம்பை விட்டபின் சென்று அனுபவிக்கத் தக்கது சுவர்க்க இன்பம். சுவர்க்கத்தில் இன்ப அனுபவத்தைத் தவிர, துன்பம் என்பது சிறிதும் இல்லை. அத்தகைய இன்பத்தை, இப் பாடலில் கூறிய செயல்கள் இந்தப் பிறவியிலேயே தரும்.
எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு
மக்கட் பிறப்பில் பிறிதில்லை --- அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின். --- அறநெறிச்சாரம்.
இதன் பொருள் ---
எப்பிறப்பு ஆயினும் --- வேறு எந்தப் பிறப்பானாலும், மக்கட்பிறப்பின் --- மக்கட் பிறப்பினைப் போல, ஒருவற்கு ---ஒருவனுக்கு, ஏமாப்பு --- இன்பம் செய்வது, பிறிது இல்லை--- வேறு ஒன்று இல்லை, அப்பிறப்பில் --- அம் மக்கட் பிறப்பில், கற்றலும் --- கற்பதற்கு உரியவற்றைக் கற்றலும், கற்றவை கேட்டலும் --- கற்றவற்றைப் பெரியோர்பால் கேட்டுத் தெளிதலும், கேட்டதன்கண் நிற்றலும் --- கேட்ட அந்நெறியின்கண்ணே நிற்றலும், கூடப்பெறின் --- கூடப் பெற்றால்.
தேசும், திறன் அறிந்த திட்பமும் தேர்ந்து உணர்ந்து
மாசு மனத்தகத்து இல்லாமை, --- ஆசு இன்றிக்
கற்றல்,கடன் அறிதல்,கற்றார் இனத்தராய்
நிற்றல் வரைத்தே நெறி. --- அறநெறிச்சாரம்.
இதன் பொருள் ---
தேசும் --- கீர்த்தியும், திறன் அறிந்த திட்பமும் --- நன்மை தீமைகளின் கூறுபாடுகளை அறிந்த மனவுறுதியும் உடையராய், தேர்ந்து உணர்ந்து --- மெய்ப்பொருளை ஆராய்ந்து அறிந்து, மனத்தகத்து மாசு இல்லாமை --- மனத்திடைக் குற்றமில்லாமல், ஆசு இன்றிக் கற்றல் --- மெய்ந்நூல்களைப் பிழையறக் கற்றலும், கடன் அறிதல் --- தனது கடமையை அறிதலும், கற்றார் இனத்தராய் நிற்றல் --- கற்றவர்களைச் சேர்ந்து நிற்றலுமாகிய, வரைத்தே நெறி --- எல்லையினை உடையதே கற்றவர்க்குரிய ஒழுக்கம் ஆகும்.
கற்றாங்கு அறிந்துஅடங்கி, தீதுஒரீஇ, நன்றுஆற்றிப்
பெற்றது கொண்டு மனம் திருத்திப் - பற்றுவதே
பற்றுவதே பற்றி, பணிஅறநின்று, ஒன்றுஉணர்ந்து
நிற்பாரே நீள்நெறிச் சென றார். --- நீதிநெறி விளக்கம்.
இதன் பொருள் ---
கற்று ஆங்கு அறிந்து --- அறிவுநூல்களைக் கற்று அவற்றின் மெய்ப்பொருளை உணர்ந்து, அடங்கி --- அவற்றிற்கேற்ப அடக்கமாய், தீது ஒரீஇ --- (அந் நூல்களில் விலக்கிய) தீய காரியங்களைக் கைவிட்டு, நன்று ஆற்றி --- (அந்நூல்களில் விதித்த) நற்காரியங்களைச் செய்து,பெற்றது கொண்டு மனம் திருத்தி --- கிடைத்ததைக் கொண்டு மனம் அமைந்து அதனை ஒரு வழிப்படுத்தி, பற்றுவதே பற்றுவதே பற்றி --- தாம் அடைய வேண்டிய வீட்டு நெறியையும் அந் நெறிக்குரிய முறைகளையும் மனத்திற் கொண்டு, பணி அற நின்று --- சரியை முதலிய தொழில்கள் மாள அருள்நிலையில் நின்று, ஒன்று உணர்ந்து --- தனிப்பொருளாகிய இறைவனை அறிந்து, நிற்பாரே --- நிற்கின்ற ஞானியரே, நீள்நெறி சென்றார் --- வீட்டையும் வழியில் நின்றவராவர்.
அறிவு நூல்கள் உள்ளத்தில் உண்டாகும் தடுமாற்றத்தைப் போக்க வல்லவை. அல்லாத நூல்கள் எல்லாம் ஆரவாரத் தன்மையை வளர்ப்பவை என்கின்றது நாலடியார்.
அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது,
உலகநூல் ஓதுவது எல்லாம், - கலகல
கூஉம் துணை அல்லால், கொண்டு தடுமாற்றம்
போஒம் துணை அறிவார் இல். --- நாலடியார்.
இதன் பொருள் ---
ஆராய்ந்து அறிந்து, நல்ல அறிவு நூல்களைக் கல்லாது, இந்த உலக வாழ்க்கைக்குத் தேவையான நூல்களைப் படிப்பது எல்லாம், உலகில் கலகல என்று கூவித் திரியும் ஆரவார வாழ்க்கைக்குப் உதவலாம். அவையெல்லாம் பிறவித் துயரில் தடுமாறும் உயிர்களுக்குத் துன்பத்தில் இருந்து விடிபடத் துணையாக மாட்டா.
பல கற்றோம் என்று கூறிக் கொண்டு தம்மைத் தடுமாற்றத்துக்கு உள்ளாக்குவதோடு, பிறரையும் அறிவு மயக்கத்தில் ஆழ்த்தும் செயல் கூடாது. அறிவு நூல்களைப் பயின்று, நல்லறிவு பெற்று, பிறரையும் நல்வழிப்படுத்துதல் வேண்டும்.
No comments:
Post a Comment