வாயைப் பெற்ற பயன்
-----
கல்வியைக் கற்பது எப்படி? ஒரு முறை படிப்பது, பலமுறை படித்து மனனம் பண்ணுவது, பொருளைத் தெரிந்து கொள்வது முதலாகக் கற்பதில் பல படிகள் உண்டு. கல்வி அநுபவமாக மாறும் போது தான் அது முற்றுப் பெறும். உண்மையான கற்றல், படித்த உண்மையைத் தெளிந்து அடங்கும்போது தான் நிறைவேறும். இறைவனுடைய புகழைக் கற்று,கேட்டு,உணர்ந்து, அதனால் இன்பத்தை அனுபவிப்பது கல்வியால் ஆன பயன். அந்த அனுபவ நிலை வந்துவிட்டால் கல்வி நிறைவை அடைந்துவிட்டதாகக் கொள்ளலாம்.
"கற்றதனால் ஆய பயன் என்கொல்? வால் அறிவன்
நல்தாள் தொழாஅர் எனின்"
என்றார் திருவள்ளுவ நாயனார்.
கல்லேன் அல்லேன் நின்புகழ், அடிமை
கல்லா தேபல கற்றேன்,
நில்லேன் அல்லேன் நின்வழி, நின்றார்
தம்முடை நீதியை நினைய
வல்லேன் அல்லேன், பொன்அடி பரவ
மாட்டேன் மறுமையை நினைய,
நல்லேன் அல்லேன் நானுனக்கு அல்லால்
நாட்டியத் தான்குடி நம்பீ.
என்பது சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரம்.
"கற்றதும், கேள்வி கேட்டதும், நின்னைக்
கண்டிடும் பொருட்டு அன்றோ காணே".
என்பது தாயுமான சுவாமிகள் அருளிய பாடல் வரி. கற்றதும், கற்றவரை அணுகி, நூல்பொருளைக் கேட்டதும் இறைவனைக் காண்பதற்காகத் தான் என்கின்றார். கல்வியின் குறிக்கோளும் பயனும், உள்ளத்தில் உள்ள கசடு அறும்படியாக, கற்ற வழியில் நின்று ஒழுகுதல் எனக் காட்ட "கற்க கசடு அற, கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" என்றார் திருவள்ளுவ நாயனார். கசடு அறும்படி இல்லாமல்,வருவாய் வருபம்படி கற்பதால் பயன் இல்லை. கற்ற கல்வியால் குற்றம் குறைந்து, நல்ல குணம் மேலிடவேண்டும் என்கின்றார் தாயுமான அடிகளார்.
"கற்றும், பலபல கேள்விகள் கேட்டும், கறங்கு எனவே
சுற்றும் தொழில்கற்று, சிற்றின்பத்து ஊடு சுழலின்என்னாம்,
குற்றம் குறைந்து குணம் மேலிடும் அன்பர் கூட்டத்தையே
முற்றும் துணை என நம்பு கண்டாய் சுத்த மூடநெஞ்சே".
என்பது தாயுமான அடிகளார் பாடிய பாடல்.
நூல்களைக் கற்றதோடு நில்லாமல், கற்றவரைத் தேடிச் சென்று நூல்பொருளைக் கேட்டது, இங்கும் அங்குமாக ஓடி ஓடி, பணம் பண்ணி, சிற்றின்ப வாழ்க்கையில் சுழலுவதற்காக அல்ல. உயிருக்கு உள்ள காமாதி குற்றங்கள் குறைந்து, நல்ல குணம் மேலிடுவதற்காகவே. எனவே, கற்றதன் வழி நிற்கவேண்டுமானால், குற்றம் குறைந்து குணம் நிறைந்து உள்ள மெய்யன்பர் கூட்டத்தையே தமக்கு உற்ற துணை என்று கருதவேண்டும்.
கல்வி அறிவால் உயர்ந்தவர் என்றுமே உயர்ந்து நிற்பர்.. கல்வியால் ஆன பயனைத் தாம் பெற்று மகிழ்வதோடு, பிறரையும் அவர்கள் மகிழப் பண்ணி,அவரை, இறைவனைத் தியானிக்கும் நல்நிலைக்கு உயர்த்துவர். நூல்களைக் கற்று வைத்தும், அறிவால் தாழ்ந்தவர்,ஆணவம் மிகுந்து இருப்பர். உலக வாழ்க்கையையே விரும்பி, அதனை அனுபவித்துக் கொண்டிருந்து,மீண்டும் மீண்டும் பிறவியில் விழுவார்கள்.
"வல்லவர்பால் கல்வி மதம் ஆணவம்போக்கும்,
அல்லவர்பால் கல்வி அவைஆக்கும், - நல்லிடத்தில்
யோகம் பயில்வார் உயர்ந்தோர், இழிந்தோர்கள்
போகம் பயில்வோர் புரிந்து".
"நீதிவெண்பா" என்னும் நூலில் சொல்லப்பட்டுள்ள இப் பாடலின் பொருள் ---
உயர்ந்தவரிடத்தில் உண்டான கல்வியானது, அறியாமையையும் ஆணவத்தையும் ஒழிக்கும். கல்வியில் சிறந்தோர் நல்ல இடங்களில் இருந்து இறைவனை வணங்குவர். நல்லவர் அல்லாத தாழ்ந்தோரிடத்து உள்ள கல்வியானது, அறியாமையையும், ஆணவத்தையும் மிகுவிக்கும். ஆதலால், அக் கீழோர் கீழான உலக வாழ்க்கையினை விரும்பி அதனை அனுபவித்துக் கொண்டு இருப்பார்கள்.
உலகில் மிகப் பெரிய ஞானிகள் பலர் இருந்திருக்கின்றார்கள். பழங்காலத்தில் சனகர் முதலான நான்கு ஞானிகள் இருந்தார்கள். அவர்கள் கல்லாதது, கேளாதது ஒன்றுமே இல்லை. நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள், அறுபத்துநான்கு கலைகள் என்று சொல்லும் எல்லாவற்றையும் கற்றவர்கள். அப்படியிருந்தும் அவர்களுக்கு ஐய உணர்வு நீங்கினபாடில்லை. கற்ற கல்வியால் உள்ள நிறைவு பெறவில்லை.அனுபவ நிறைவு ஏற்படவில்லை.
அவர்களுக்கு உண்டான ஐயத்தைப் போக்குவதற்கு வழி என்ன? எல்லாவற்றையும் அறிவித்த இறைவனையே அவர்கள் சரணடைந்தார்கள். இறைவன் கல்லால மரத்தின் அடியில் அமர்ந்து, அவர்களுடைய ஐயத்தை சின் முத்திரையினால் விளக்கிப் போக்கினான். பேசாத பேச்சினாலே அந்த முனிவர்களுடைய ஐயம் தீர்ந்தது. சொல்லுக்குள் அகப்பட்ட எல்லாவற்றையும் கல்வி கேள்வியால் உணர்ந்திருந்த அந்த நால்வரும், வாக்கு இறந்த மோன உபதேசத்தால் தெளிவு பெற்றார்கள்.
"கல்லாலின் புடைஅமர்ந்து,நான்மறை, ஆறங்கமுதல்
கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கு இறந்த பூரணமாய்,
மறைக்கு அப்பாலாய்,
எல்லாமாய் அல்லதுமாய் இருந்த தனை இருந்தபடி
இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்துபவத்
தொடக்கை வெல்வாம்"
என்று பரஞ்சோதி முனிவர் அந்தத் திருக்காட்சியை நமது மனக்கண் முன்னர் கொண்டு வந்து நிறுத்துகின்றார்.
கேள்வி எப்பொழுது முடிவு பெறும்? கேளாத நிலையில் தான் முடிவு பெறும். வாக்கு எப்பொழுது முடிவு பெறும்? வாக்கு இல்லாத இடத்திலேதான் முடிவு பெறும். ஆகவே, அந்த நிலையை அடைகின்ற வரையிலும் நாம் கற்கின்ற கல்வியும், கேட்கின்ற கேள்வியும் ஆகிய எல்லாம் முடிவு பெறவில்லை என்றே கொள்ள வேண்டும்.
இறைவன் கல்வியினால் அறிய முடியாத பரம்பொருள். அறிந்தேன் என்பவர்களாலும் அறிய முடியாத, அறியப்படாத பொருள். அறிய முடியவில்லையே, அறிய முடியவில்லையே' என்று ஏங்கி, அவனை அறிய வேண்டுமென்ற ஆர்வத்தோடு அலைந்து கொண்டிருக்கிறவர்களுடைய அறிவுக்குப் புலனாகின்றவன் இறைவன். எவன் எல்லாவற்றையும் நன்றாகப் படித்து விட்டேன் என்று சொல்லுகிறானோ,அவன்தான் உண்மைப் பொருளை அறியாதவன். அறிந்தபோது அனுபவம் உண்டாகி, பேசாத மோனம் தலைப்படும். ஆசை என்னும் விலங்கு அறுபட்டு, இறைவன் அருளால் உண்மை ஞானத்தை உணர்ந்த பின்னர் தான் அந்த நிலை உருவாகும் என்பதைக் காட்ட,
"தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா! முருகா! நினது அன்பு அருளால்
ஆசா நிகளம் துகள் ஆயினபின்,
பேசா அனுபூதி பிறந்ததுவே"
என்று அருளினார் அருணகிரிநாதப் பெருமான்.
எனவே, நூல்களைக் கற்றதால் உண்டான அறிவும், நூற்பொருளைக் கற்று உணர்ந்த சான்றோர்பால் கேட்டுப் பெற்ற அறிவும், நான் கற்றவன் என்று ஆரவாரம் செய்வதற்காக அல்ல. உயிருக்கு உள்ள குற்றங்கள் ஆகிய ஐய உணர்வு, திரிபு உணர்வு, மயக்க உணர்வு ஆகியவை நீங்கி, கல்லால நிழலில் இருந்து பெருமான் உணர்த்தியதன் பொருளை உணர்ந்து, குணம் குறி ஆகியவற்றை விட்டு, இன்ப நிட்டையில் இருப்பதற்குத் தான் பயன்பட வேண்டும் என்கிறார் தாயுமான அடிகளார். அதுவே கல்வியின் பயன் ஆகும்.
"கற்றதும் கேட்டதும் தானே ஏதுக்காக
கடபடம் என்று உருட்டுதற்கோ, கல்ஆல் எம்மான்
குற்றம் அறக் கைகாட்டும் கருத்தைக் கண்டு
குணம்குறி அற்று இன்பநிட்டை கூட அன்றோ".--- தாயுமானார்.
சிறந்த நூல்களைக் கற்பதனால் மட்டும் அடையும் பயன் என்ன? அந்நூல்களில் சொல்லிய சொற்களால் பேரின்பம் உண்டாகுமா? என்றால், இல்லை என்கின்றார் தாயுமான அடிகளார். நூல்களில் சொல்லப்பட்டு உள்ள நெறிமுறையை விடாது கைப்பற்றி ஒழுகி உறுதியாக நிற்றல் வேண்டும். அப்பொழுதுதான் பேரின்பப் பெரும்பேறு கைகூடும்.
"கற்றும் என்பலன், கற்றிடும் நூல்முறை
சொற்ற சொற்கள் சுகஆரம்பமோ, நெறி
நிற்றல் வேண்டும், நிர்விகற்பச் சுகம்
பெற்றபேர் பெற்ற பேசாப் பெருமையே".--- தாயுமானார்.
கற்றதனால் ஆய பயன் என்ன? இறைவன் நற்றாள் தொழுவது தானே? கற்க வேண்டும். அது இன்றியமையாதது தான். அதைவிட முக்கியமானது, கசடறக் கற்றபின், அதற்குத் தக நிற்பது. அதாவது, அனுபவத்தில் இன்பத்தைப் பெறுவது. ஆகவே, அந்த மேலான இன்பத்தை அருளுகின்ற, இறைவனுடைய கவியை அன்பால் கற்றுக் கொள்ள வேண்டும். அநுபவ முதிர்ச்சி உண்டாகும்படி கற்க வேண்டும். பிழையில்லாமலும் கற்றுக் கொள்ள வேண்டும். "சொல் பிழை வராமல் உனைக் கனக்கத் துதித்து" என்பார் அருணகிரிநாதப் பெருமான்.
இறைவனிடத்து உண்டாக வேண்டியது இறவாத இன்ப அன்பு. அது வளரத் துணையாக இருப்பது இறைவன் புகழைப் பாடுவது. அந்தப் பாட்டைப் பிழை இல்லாமல் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக் கொள்ள எத்தனையோ கவிகள் உண்டு. ஆனால் அன்போடு கற்றுக் கொள்ள வேண்டுமானால் ஆண்டவனைப் பற்றிய கவியாக இருக்க வேண்டும்.
எனவே, அயில் வேலன் கவியை அன்பால் கற்கவேண்டும். அதுவும் எழுத்துப் பிழை அறக் கற்கவேண்டும் என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான். இப்படி அவர் சொல்லுவதன் மூலம் முருகன் கவியை மட்டும் கற்கவேண்டும் என்று கொண்டால், அது அறியாமை. அருணகிரிதாநர் வாழை அடி வாழை என வந்த திருக்கூட்ட மரபில் ஒருவர். அவருக்கு முன்னர் தோன்றிய நக்கீரர் முதலிய பெரியார்கள் முருகப் பெருமானைப் பற்றியும், ஆழ்வாராதிகள் திருமாலைப் பற்றியும், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மணிவாசகப் பெருமான் முதலியவர்கள் சிவபரம்பொருளைப் பற்றியும் பாடி இருக்கின்றார்கள். இந்த அருளாளர்கள் அனைவரும் இறைவனுடைய திருவருளிலே ஈடுபட்டுப் பலப்பல பாடல்கள் பாடியிருக்க, அவற்றை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளாமல் வீணே வாழ்நாளைக் கழிக்கின்ற மக்களை நினைந்து இரங்கி, பின்வரும் பாடலைப் பாடினார்.
"அழித்துப் பிறக்க ஒட்டா அயில் வேலன் கவியை,அன்பால்
எழுத்துப்பிழை அறக் கற்கின்றிலீர்! எரி மூண்டது என்ன
விழித்துப் புகை எழப் பொங்கு வெம் கூற்றன் விடும் கயிற்றால்
கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே?".
இதன் பொருள் ---
தீவினைகளை அழித்து இவ்வுலகில் மீண்டும் பிறவி எடுக்காமல் பேரின்ப வீட்டை வழங்க வல்ல, கூர்மையான வேலினைத் தாங்கிய முருகப்பெருமானைப் புகழும் திருப்புகழ்ப் பாடல்களை இன்றே மெய்யன்புடன் எழுத்துப் பிழைகள் சிறிதுமின்றி கற்றுக் கொள்ளாமல் இருக்கின்றீர்களே! நெருப்பு மூண்டு எரிவதைப் போல கண்களை உருட்டிப் பார்த்துப் புகை எழுமாறு சீறுகின்ற கொடிய இயமன் வீசுகின்ற பாசக் கயிற்றினால் உங்கள் கழுத்திலே சுருக்குப் போட்டு உங்கள் உயிரைப் பற்றி இழுக்கின்ற அந்த நாளிலா உங்களால் கற்க இயலும்?
சாகின்ற காலத்தில் உங்களால் இறைவன் திருப்புகழைக் கூறும் அருட்பாடல்கள் கற்று ஓத முடியாது என்று அருணகிரிநாதப் பெருமான் சொல்கின்றார். அப்படி என்றால், இளமைக் காலத்திலேயே கற்கத் தொடங்க வேண்டும் என்று பொருள். சாகின்ற காலத்தில் சங்கரா என்று சொல்லலாம் என்று எண்ணினால், அப்போது நாக்கு எழாமல் போகும். நினைவு தடுமாறும். "புலன் ஐந்தும் பொற கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழிந்திட்டு, ஐ மேல் உந்தி அலமருகின்ற" நிலை நிச்சயம் உண்டாகும். எனவே, இளமையிலேயே கற்கவேண்டும்.
"ஊன்அமர் ஆக்கை உடம்புதன்னை
உணரில் பொருள்அன்று,
தேன்அமர் கொன்றையி னான்அடிக்கே
சிறுகாலை ஏத்துமினோ."
என்கின்றார் திருஞானசம்பந்தப் பெருமான். சிறுகாலை என்பது இளவயதைக் குறிக்கும். "காலம் உண்டாகவே காதல் செய்து உய்ம்மின்" என்றார் மணிவாசகப் பெருமான்.
தமிழுக்கும் பாட்டுக்கும் தொடர்பு அதிகம். பழந்தமிழ் நூல்கள் யாவுமே பாடல்களால் அமைந்தவை. "பாட்டியல் தமிழ் உரை பயின்ற எல்லை" என்பது பெரியபுராணம். தமிழ் நாட்டில் பாட்டுக்குப் பெருமை அதிகம். மனிதனுடைய வாழ்நாளில் பல வகையில் பாட்டுக் கலந்திருக்கிறது. குழந்தை பிறந்தால் தாலாட்டுப் பாட்டு. குழந்தைக்குத் தொட்டில் போட்டால் பாட்டு. குழந்தை நடக்க ஆரம்பித்தால் பாட்டு. குழந்தை விளையாடும் விளையாடல்களுக்கு ஏற்ற பாட்டு. கலியாணம் வந்தால் நலுங்குப் பாட்டு, ஊஞ்சல் பாட்டு. கடைசியில் இறக்கும்போது ஒப்பாரிப் பாட்டு. இப்படித் தம் வாழ்வைப் பாட்டினாலேயே அளந்தவர்கள் நமது முன்னோர். அந்தப் பாட்டுக்களை எல்லாம் மனிதர் கற்றுக் கொள்ளலாம். அவை யாவும் அவ்வப்போது இன்பம் தந்து ஒரளவு மனத்திலே அமைதியைத் தரத் தக்கன.
கவிகளைக் கற்றுச் சுவை காண்பதால் ஒருவகை அமைதி உண்டாகிறது. மீட்டும் பிறவாத இன்ப நலம் மிக்க அமைதி வேண்டுமென்றால்,எந்தக் கவியைக் கற்றுக் கொள்ள வேண்டும்? அயில்வேலன் கவியைக் கற்றுக் கொள்ள வேண்டும். எப்படிக் கற்றுக் கொள்ள வேண்டும்? அன்பால் கற்றுக் கொள்ள வேண்டும். அவனைத் தியானிக்க அன்பு இருந்தால் போதும். அந்தத் தியானம் மனத்திலே நிலைக்க,அவனைப் பாடித் துதிக்க வேண்டும். எழுத்துப் பிழை இல்லாமல் கற்கவேண்டும். அதற்குத் தமிழறிவு வேண்டும். தமிழ் அறிவு எப்படிப் புலப்படும்? பாடும்போது நன்றாக உச்சரிக்கும் வாக்கினாலே புலப்படும். பாடலைப் பாடும்போது எழுத்துப் பிழை இல்லாமல் சொல்ல வேண்டும். எழுத்து ஒவ்வொன்றையும் சரியாக உச்சரிக்காவிட்டால் பயன் இல்லை. ஒவ்வொரு எழுத்தும் இறைவனிடம் இருந்து தோன்றியது. 51எழுத்துக்களுக்கும், 51விதமான தத்துவங்கள் இருக்கின்றன. தனித்தனித் தேவதைகள் உண்டு என்று சாத்திரங்கள் கூறுகின்றன. ஏதேனும் ஒர் எழுத்தைத் தவறாக உச்சரித்தால் அந்த எழுத்துக்குரிய தேவதைக்கு அபசாரம் உண்டாகும். ஒரு பெரிய அதிகாரியின் பெயரையோ, முகவரியையோ தவறாகச் சொன்னால் அவருக்குக் கோபம் வராதா? அதுபோலவே நம் நாவிலிருந்து நடமாடுகிற தேவதைகள் தங்களுக்கு உரிய எழுத்தைச் சரியாக உச்சரிக்காவிட்டால் கோபம் அடைகின்றன. சரியாக உச்சரித்தால், அவற்றுக்குரிய இலக்கண அமைதி இருந்தால், அதனால் கிடைக்கும் நன்மையைப் பெறலாம்; தேவதைகளும் மகிழ்ச்சி அடைவார்கள்.
அழுகையையே தன் மொழியாகக் கொண்டு பிறக்கும் குழந்தை, பின்பு மழலை பேசுகிறது. வளர வளர நன்றாகப் பேசக் கற்றுக் கொள்கிறது. குழந்தைகளின் மழலைச் சொல் இசைக் கருவிகளை விட இனிமையானது என்று திருவள்ளுவர் சொல்கிறார். இளங்குழந்தை மழலை பேசினால் அது குறைபாடு ஆகாது. எழுத்தைத் தவறாக உச்சரித்ததாகவும் ஆகாது. குழந்தை சோறு என்பதை, 'சோச்சி' என்கிறது. பழம் என்பதைப் 'பயம்' என்கிறது. காபி என்பதை 'காவி' என்கிறது. அவை எழுத்து குறைபாடு உடையவை; ஆனாலும் இனிமையை உடையன.
"குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளாதவர்"
என்றார் திருவள்ளுவ நாயனார். சொல்கிறார்.
குழல் ஒலி இனிமையானது அல்ல, யாழ் ஒலி இனிமையானது அல்ல என்பது கருத்து அல்ல. ஒருவன் முயற்சி செய்தால் சில ஆண்டுகளிலே குழலை மிக இனிமையாக வாசிக்கக் கற்றுக் கொள்ளலாம். வீணையும் சில ஆண்டுகளில் கற்றுக் கொள்ளலாம். எவ்வளவு பெரிய நாடகத்தில் நடிக்கும் நடிகனாக இருந்தாலும் சின்னஞ்சிறு குழந்தையைப் போலப் பேச வராது. விகடம் பண்ணுகிறவர்கள் ஆடு மாதிரிக் கத்தலாம். யானை மாதிரி பிளிறலாம். நாயைப் போலவும் குரைக்கலாம். பிற மனிதரைப் போலப் பேசலாம். ஆனால் குழந்தையைப் போல மழலை மொழியைப் பேச முடியாது. முழு வார்த்தையையும் பேசத் தெரியாத குழந்தை மழலை பேசுகின்றது. அதைக் கேட்டுக் களிப்படைகின்றோம். எழுத்து அறியாத மழலையில் இன்பம் இருக்கிறதென்றால், அந்தக் குழந்தை பதினாறு ஆண்டுகள் நிரம்பப் பெற்ற பிறகும் மழலையாகவே திக்கித் திணறிப் பேசினால் யாரும் மகிழ்ச்சி அடைவதில்லை. பயந்து கொண்டு மருத்துவரிடம் அழைத்துப்போய்த் தொண்டை, நாக்கு இவற்றைப் பார்க்கச் சொல்கிறார்கள். திருவள்ளுவர் தான் சொல்லியிருக்கிறாரே என்று எண்ணிப் பதினாறு வயதில் தம் மகன் மழலையாகப் பேசினால் பெற்றோர்கள் மகிழ மாட்டார்கள். அதனை ஒரு நோயாகவே கருதித் துடித்துப் போவார்கள்.
மனிதன் வளர வளர மழலை மாறிப் பேசக் கற்றுக் கொள்கிறான். மழலை நிலை மாறிப் பேச்சு நிலை வருவதுதான் வளர்ச்சிக்கு அறிகுறி. பேச்சு என்பது மனிதன் பெற்ற பெரும் வரம் ஆகும். பிறருக்குத் தன் கருத்தைத் தெரிவிப்பதற்காக ஒருவன் வாயிலிருந்து வருகின்ற ஒலியே அது. வாயிலிருந்து வரும் ஒலி பொருளுடையதாக இருந்தால்தான் பேச்சு. ஊமையின் ஒலி பிறருக்கு எந்தக் கருத்தையும் தெரிவிக்காது. அவன் கா..கூ.. என்று உண்டாக்கும் ஒலி அவன் வாயிலிருந்து பிறந்தாலும் அது பேச்சல்ல.
இறைவன் உள்ளம் குளிரும்படி பேசுவதற்கு நமக்கு என்ன தெரியும் என்று கேட்கலாம். "நான் உனக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன்" என்று ஒருவர் சொன்னால் அந்தப் பேச்சினாலே ஒருவருடைய உள்ளம் குளிருகின்றது. அந்தப் பேச்சினாலே தனக்கு வரும் பெரிய ஊதியத்தை எண்ணியே அவன் மனம் குளிருகின்றது. ஆனால் இறைவனுக்கு நாம் எதைத் தருவதாகச் சொல்லலாம்? நம்மிடம் அவனுக்கு அளிக்கத் தக்க பொருள் என்ன இருக்கிறது? இறைவன் நம்மால் பெறுவது ஒன்றும் இல்லை. அவன் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்துக் கொண்டிருக்க, நாம் அவனுக்குக் கொடுப்பது எது?
பலவகையான பொன் அணிகலன்களை அணிந்து கொள்கிறோம். அந்தப் பொன்னாலே நமக்குப் பலவிதமான பயன்கள் இருக்கின்றன. நம்மால் பொன்னுக்கு என்ன பயன்? இறைவன் பொன்னைப் போன்றவன். "பொன் ஆனாய்" என்று அப்பர் பெருமான் போற்றி உள்ளார். இறைவனுடைய அருளினாலே நாம் தனுகரணபுவன போகங்களைப் பெற்றிருக்கிறோம். ஆனால் நம்மாலே இறைவனுக்கு ஏதாவது உபகாரம் உண்டா? என்றால் இல்லை என்றுதான் விடை வரும்.
"பொன்னால் பிரயோசனம் பொன்படைத்
தாற்கு உண்டு,பொன்படைத்தோன்
தன்னால் பிரயோசனம் பொன்னுக்கு அங்கு
ஏது உண்டு? அத்தன்மையைப் போல்
உன்னால் பிரயோசனம் வேணது எல்
லாம் உண்டு, உனைப் பணியும்
என்னால் பிரயோசனம் ஏது உண்டு?
காளத்தி ஈச்சுரனே"
என்பது பட்டினத்தடிகள் பாடி அருளிய பாட்டு..
நமக்கு எல்லா இன்ப நலங்களையும் அளிக்கின்ற கடவுளுக்கு நம்மால் உபகாரம் ஒன்றும் இல்லை என்று அவர் சொல்கிறார். அபகாரம் தான் உண்டாகிறது. இறைவன் கொடுத்த நாக்கினைக் கொண்டு அவன் நாமத்தை நவிலவேண்டும். வாய் கூசாது கடவுள் இல்லை என்று சொல்லித் தவறு செய்கிறோம். இறைவனைத் திட்டுகிறோம், அவன் குழந்தைகளாகிய மக்களை வஞ்சிக்கின்றோம்,வைகின்றோம். இப்படி அவனுக்கு நாம் அபசாரமே செய்கிறோம். "கேடு என் தனக்கே சூழ்ந்தேனே" என்றும், "சூழ்கின்றாய்,கேடு உனக்குச் சொல்கின்றேன்" என்றும் மணிவாசகப் பெருமான் அருளியதுபோல, நமக்கு நாமே கேடு சூழ்ந்து கொள்ளுகின்றோம். அப்படி யாராவது அறிவுறுத்தினால், அவர்க்கும் கேடு செய்கின்றோம்.
குழந்தை தத்தித் தத்திக் கீழே விழாமல் நடக்கத் தெரிந்து கொண்டால், தாய் மகிழ்ச்சி அடைகிறாள். மழலைச் சொல்லாலே அம்மா என்று கூப்பிட்டால், அதனைக் கேட்டு எல்லையில்லாத ஆனந்தம் எய்துகிறாள். பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தவுடன் வகுப்பிலேயே முதலாக இருக்கிறான் என்று சொல்லக் கேட்டால் அவள் உள்ளமெல்லாம் குளிர்ந்து போகிறாள். அந்தக் குழந்தை படித்து விட்டு நல்ல உத்தியோகத்திற்குப் போய்விட்டால் அவள் அடைகின்ற மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போய் விடுகின்றது. தன் குழந்தை நல்லவன் என்று பிறர் கூறக் கேட்கும் பொழுதெல்லாம் அவள் அடைகிற இன்பம், அக்குழந்தையைப் பெற்ற காலத்தில் அடைந்த இன்பத்தையும் விட மிக அதிகமானது என்று திருவள்ளுவர் சொல்கிறார்.
அதைப்போன்று எல்லா உலகத்திற்கும், எல்லாக் காலத்திற்கும், எல்லா உயிர்களுக்கும் தாயாகவும் தந்தையாகவும் விளங்குகிறவன் இறைவன். இந்த உலகத்தில் எல்லா உயிர்களும் எந்த வகையில் முடியுமோ அந்த வகையில் சிறந்து விளங்கினால் அது அவனுக்குப் பேருவகையைக் கொடுக்கும். அதனால் அவன் உள்ளம் குளிரும். "இவன் மிகவும் நன்றாகப் பேசுகிறான். இவனுக்கு மேலும் மேலும் நன்றாகப் பேசக் கற்றுக் கொடுக்க வேண்டும்"என்று தோன்றும். நமக்கு மேலும் நல்லுணர்வை நல்க ஞானாசிரியனாக எழுந்தருளி வருவான்.
இறைவன் நமக்கு நல்ல வாயைக் கொடுத்து, பேசும் ஆற்றலையும் கொடுத்து அனுப்புகிறான். அந்த நாக்கை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டால் அவன் மிகவும் மகிழ்ச்சி அடைவான். மேலும் மேலும் நன்றாகப் பேச்சு வளரும்படி செய்வான். தாய் கைச் செல்லவுக்குக் காசு கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய பிள்ளை, ஊசல் கடலையை வாங்கித் தின்று உடம்புக்குத் தீங்கு தேடிக் கொண்டான். இனிமேல் தாய் அவனுக்குக் காசு கொடுத்து அனுப்பமாட்டாள். அதுபோல, ஆண்டவன் நமக்குக் கொடுத்தனுப்பிய நாவைக் கொண்டு அவனுடைய திருநாமத்தைப் பேசாமல், பேசத் தகாதன எல்லாம் பேசிக் கொண்டிருந்தால், அவன் நம்மை ஊமையாக்கி விடுவான்.
"வாழ்த்த வாயும், நினைக்க மடநெஞ்சும்,
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை,
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா வினையேன் நெடுங் காலமே"
என்று அப்பர் பெருமான் இரங்குகின்றார். "வாயே வாழ்த்து கண்டாய்" என்றும் அறிவுறுத்துகின்றார். வாழ்த்துவதற்கு அருமையான அருட்பாடல்கள் உள்ளன. அவற்றைப் பாடி வழிபட்டாலே போதும். புதுப்புதுப் பாடல்கள் அவசியம் இல்லை.
இறைவன் அருட்பாடல்களை எழுத்துப் பிழை இன்றிக் கற்கவேண்டும் என்பது அருணகிரிநாரின் அருள் உபதேசம். சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லவேண்டும் என்பது மணிவாசகரின் அருள் உபதேசம். தாய்மொழியில் உள்ள பாடல்களையே எழுத்துப் பிழை இல்லாமல் கற்க முடியவில்லை என்றால், வேறு என்னதான் நாம் செய்யப் போகின்றோம்?
பழுத்த அடியார்கள் சிலருக்கு, பிழை இல்லாமல் ஓதவேண்டும் என்று சொன்னால் கடுகடுப்பு உண்டாகின்றது. ஓதுவதே போதும். இதில் பிழை இல்லாமல் வேறு ஒதவும் வேண்டுமா? என்பது அவர்களது எண்ணம் போலும். அருளாளர்கள் பாடல்களை அவர்கள் சொன்ன நெறியிலே நின்று ஓதுதல் வேண்டும்.
இதை நான் சொல்லவில்லை. அருணகிரிநாதரே சொல்லுகின்றார். காலமெல்லாம் எழுத்துப் பிழையோடே ஓதிக் கொண்டு இருக்கின்றீர்களே. எமன் வருகின்ற நாளிலா எழுத்துப் பிழை இல்லாமல் கற்கப் போகின்றீர்கள் என்று கேட்கின்றார். எழுத்துப் பிழை இல்லாமல் கற்றால்தான் பொருளை உணர முடியும். "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர்" என்றார் மணிவாசகப் பெருமான். தாய்மொழியையே பிழை இல்லாமல் கற்க முடியவில்லை என்பது வருந்தவேண்டியது.
நமக்கு வாய் தந்திருப்பது சுவைபட உண்பதற்காக மாத்திரமா? அப்படியானால் எல்லா உயிர்களுக்கும் வாய் இருக்கிறது. நம்மைக் காட்டிலும் யானைக்கு மிகப் பெரிய வாய் இருக்கிறது. ஆனால்,அதை "வாயில்லாப் பிராணி" என்றுதான் சொல்கிறோம். நாம் ஒரு கவளம் சாப்பிட்டால், யானை நூறு கவளத்தை ஒரே வாயில் சாப்பிட்டுவிடும். பெரிய பிராணி அல்லவா? ஆனாலும், அதனை நாம் வாயில்லாப் பிராணி என்றே சொல்கிறோம். சாப்பிடுகின்ற வாய் வாயாகாது. பேசும் வாய்தான் வாய். யானைக்குப் பேசத் தெரியாது. ஆகையால் அது வாயில்லாப் பிராணி ஆயிற்று. நாம் பேசும் வாய் படைத்ததன் பயன் என்ன? "வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும், தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை சூழ்த்த மாமலர் தூவித் துதி"என்று அப்பர் பெருமான் அருளியிருக்கிறார். அவ்வாறு வாய் படைத்தவர்கள் எல்லோரும் அவனை வாழ்த்தாவிட்டால் இறைவன் என்ன செய்வான்? "போன பிறப்பில் இவனுக்கு அழகாகப் பேசக் கூடிய வாயைக் கொடுத்தோம். இவன் அதை நன்கு பயன்படுத்தாமல் இன்னாதன கூறி, பிறர் மனத்தைப் புண்படுத்தி வாழ்ந்தான். புறங்கூறிப் பெரிய பெரிய சண்டைகளைக் கிளப்பி விட்டான். பொய் கூறினான். வழவழவென்று பயனற்ற வம்புப் பேச்சைப் பேசினான். விதவிதமாக உண்டு, உடல் மட்டும் கொழுத்தது. அந்தக் கொழுப்பு வாய்ச்சொல்லாக வெளிப்பட்டது. இவனுக்கு வாய் கொடுத்துப் பயன் இல்லை. இவன் வாயில்லாப் பிராணியாகவே போகட்டும்" என்று செய்து விடுவான்?
இறைவன் அருட்பாடல்களைப் பிழை இன்றி ஓதி, பொருள் உணர்ந்து உய்தி பெறுவோம். வாயைப் பெற்றதன் பலன் அதுவே.
No comments:
Post a Comment