வேதத்தை விட்ட அறம் இல்லை



வேதத்தை விட்ட அறம் இல்லை

-----

 

     வேதத்தைவிட்டு விட்டு, அறம் என்ற வார்த்தையைப் பேசிப் பலன் இல்லைவேதமே அறத்தின் இயல்புகளை உணர்த்தி, அதன் வழி உயிரானது இகபர நலன்களைப் பெறுவதற்காகத் தான். அதுதான் உலகியல் ஆகும். உலகியல் என்று நாம் இப்போது சொல்லிக் கொண்டு இருப்பது எல்லாம் பொருளற்றவை. வேதங்களை ஓதுவதே, அதில் கூறப்பட்டுள்ள நீதிநெறி முறைகளை உணர்ந்து கொண்டு, அவற்றின் வழி நின்று நன்னெறியைச் சார்வதற்கு ஆகும்.

 

"வேதத்தை விட்ட அறம் இல்லை, வேதத்தின்

ஓதத் தகும் அறம் எல்லாம் உ(ள்)ள, தர்க்க

வாதத்தை விட்டு, மதிஞர் வளம் உற்ற

வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே". 

 

என்றார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார்.

 

இதன் பொருள் ---

 

     'உலகியல் வேதநூல் ஒழுக்கம்" என்பார் தெய்வச் சேக்கிழார் பெருமான். உலகாசாரமாகிய நடை என்பது வேதநூலில் விதிக்கப்பட்ட ஒழுக்கமே ஆகும். "நடை" என்னும் சொல்லுக்கு, "ஆசாரம்", ஒழுக்கம்" என்னும் பொருள்கள் உண்டு. வேதங்களில் சொல்லப்படாத அறநெறி என்பதே இல்லை. எனவே, வேதத்திற்கு அறநூல் என்னும் சிறப்புப் பெயர் உண்டு. வேதம் அனைத்து மொழிகளிலும் உண்டு. செந்தமிழ்ப் பொது அறநூல் திருவள்ளுவ நாயனார் அருளிய திருக்குறள் ஆகும். அக் காரணம் பற்றியே அதற்குப் "பொதுமறை" என்னும் திருப்பெயரும் வழங்குவதாயிற்று. வீட்டியலுக்கு உரிய அறநூல் என்பது செந்தமிழ்ச் சிறப்புமறை ஆகிய, தேவார முதலிகள் அருளிய தேவாரம் முதலான பன்னிரு திருமுறைகளே. அவையே, "திருநான்மறை முடிவு" என்று அருளினார் ஔவைப் பிராட்டியார். பின்வரும் பாடலால் இது விளங்கும்,

 

"தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்

மூவர் தமிழும், முனிமொழியும் - கோவை

திருவாசகமும், திருமூலர் சொல்லும்,

ஒரு வாசகம் என்று உணர்".

 

இதன் பொருள் ---

 

     தேவர் குறளும் --- திருவள்ளுவ நாயனார் அருளிய திருக்குறளும்திரு நான்மறை முடிவும் --- சிறப்புப் பொருந்திய நான்கு வேதங்களின் முடிவாகிய உபநிடதங்களும்மூவர் தமிழும் --- திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்திருநாவுக்கரசு நாயனார்சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் சமயகுரவர் மூவர்களுடைய அருளிச்செயல்கள் ஆகிய தேவாரம் எனப் பொதுவாக வழங்கப்படுகின்ற தமிழ் வேதமும்முனிமொழியும் --- திருவாதவூர் முனிவராகிய மாணிக்கவாசகர் மொழிந்து அருளியகோவை திருவாசகமும் --- திருக்கோவையார் திருவாசகங்களும்திருமூலர் சொல்லும் --- (நமது கருமூலம் அறுக்க வந்து அவதரித்த) திருமூல நாயனார் அருளிய திருமந்திரமும்ஒரு வாசகம் என்று உணர் --- (ஆகிய இவை யாவும்) ஒரு பொருளையே குறிப்பன என்று அறிவாயாக.

 

            திருக்குறள் முதலிய நூல்கள் அனைத்தும் பொருள்முடிவு வேறுபடாத மெய்ந்நூல்கள் ஆவன.

 

     எனவே, அம் மறைநூல்களை விட்டு வேறாக அறவொழுக்கம் இல்லை. அம் மறைநூல்களில் ஓதத் தகுந்த அற இயல்புகள் அனைத்தும் உள்ளன. அவற்றை ஓதி உணர்ந்து ஒழுகல் வேண்டும். வீணான தருக்க வாதங்களைக் கொண்டு வழக்கிடுகின்ற வல்லாண்மையை விட்டு,நான் எனது என்னும் பற்றுக்கள் அறப்பெற்று, இறைவன் திருவடி உணர்வு கைவந்த நுண்ணறிவு வாய்ந்த நல்லார்காள் எல்லா முறைவளமும் நிரம்பப் பெற்ற வேதங்களை இடையறாது இனிது ஓதித் திருவடிப் பேறாகிய வீட்டினைப் பெற்றார்கள் என்கின்றார் திருமூல நாயனார்.

 

     வேதத்தை எப்பொழுதும் ஓதுபவனாகிய பிரமதேவனும் வேதத்தைச் செய்தவன் இல்லை. ஏனெனில்வேதத்தைச் செய்தவன் முழுமுதற்பரம்பொருள் ஆகிய இறைவனே. அவனை அதனைச் செய்ததுபிரமதேவன் அதனை ஓதி, அறிவு விளங்கப் பெறுதற் பொருட்டும்மற்றும் கன்மத்தில் விருப்பம் உடையவர்க்கு வேள்விகளை உண்டாக்குதற்பொருட்டும்மெய்யுணர்வு பெற விரும்புவோர்க்கு மெய்ப்பொருளை உணர்த்தற் பொருட்டும் ஆகும்.

 

"வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்,

வேதம் உரைத்தானும் வேதா, விளங்கிட

வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்கா

வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே".

 

என்பது திருமூல நாயனார் அருளிய திருமந்திரம்.

 

     எனவே, வேதநூல் ஒழுக்கம் ஆகிய உலகியலை ஒருவன் அறிருந்திருந்தால்தான், அருளியலில் அவன் தலைப்பட முடியும். வேதங்களில் சொல்லப்பட்டுள்ள அறங்களை, ஐயம் திரிபு அற ஓதி உணர்ந்து, பிறர்க்கு உரைத்து, தான் அடங்கி நிற்கவேண்டும் என்பதே உலகியல் ஆகும். அதனை உணர்த்தவே, எல்லாம் வல்ல சிவபரம்பொருள், கல்லால மரத்தின் நிழலில் எழுந்தருளி இருந்து, அரும் தவசிகள் ஆகிய நால்வருக்கும், வேதங்களின் உட்பொருள் என்றும் புருஷார்த்தங்கள் என்றும் சொல்லப்படும் அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றின் உட்பொருளைச் சின்முத்திரையால் காட்டி, அதன் மூலம் அவர்களுக்கு உலக இயற்கை தெரியும்படியாகச் செய்தார்.

 

     இறைவனுடைய இந்த அருட்செயலின் பொருளை உணராதவர்கள் உணர்ந்து கொள்ளும்பொருட்டு, மணிவாசகப் பெருமான், திருவாசகத்தில், திருச்சாழல் என்னும் பகுதியில் வினாவிடையாகப் பின்வரும் பாடலைப் பாடினார்.

 

"அருந்தவருக்கு ஆலின்கீழ் அறம்முதலா நான்கினையும் 

இருந்தவருக்கு அருளுமதுஎனக்கறிய இயம்பு ஏடி, 

அரும்தவருக்கு அறம் முதல்நான்கு அன்று அருளிச் செய்திலனேல்

திருந்த அவருக்கு உலக இயற்கை தெரியாகாண் சாழலோ"

 

இந்த வினாவிடைப் பாடலின் பொருள். --- 

 

     ஏடீ --- தோழியேஅருந்தவருக்கு --- அருமையான தவத்தினை உடையவர்கள் ஆகிய சனகாதி முனிவர்க்கு,ஆலின்கீழ் இருந்து --- கல்லால மரத்தின் கீழ் இருந்துஅறம் முதலாம் நான்கினையும் --- அறம் முதலாகக் கூறப்படும் நாற்பொருள்களையும்அவர்க்கு அருளும் அது --- அவர்களுக்கு உரைத்தருளிய காரணத்தைஎனக்கு அறிய இயம்பு --- எனக்குத் தெரியும்படி தெளிவாகக் கூறுவாய்.

 

            அருந்தவருக்கு --- அருந்தவத்தினை உடைய சனகாதி முனிவர்கட்குஅறம் முதல் நான்கும் --- அறம் முதலாகிய நாற்பொருள்களையும்அன்று அருளிச் செய்திலனேல் --- இறைவன் அந்நாளில் உணர்த்தி அருளிச் செய்யாவிடில்,திருந்து அவருக்கு --- திருந்திய உள்ளத்தினை உடைய அந்த சனகாதி முனிவர்க்குஉலகு இயற்கை தெரியா காண் --- உலகின் இயல்புகள் புலப்படாமல் போயிக்கும் என்பதை அறிவாயாக.

 

     எனவே, இறைவன் வேதங்களின் பொருளை உணர்த்தியதே, உலகியல் பற்றி அறிந்து கொள்வதற்காகத் தான். உலக இயற்கை தெரியாமல், அருளியல் பற்றி ஏதும் அறிந்து தலைப்பட முடியாது. எழுத்துக்களை அறியாமல், சொற்களை அறிய முடியாது. எழுத்துப் பிழை அறச் சொற்களை அறிந்துகொள்ளாமல், அவற்றின் பொருளை உணர்ந்து கொள்ள முடியாது. "சொல்பாவும் பொருள் நோக்கித் தூங்காதார் மனத்து இருளை வாங்காதான்" என்று அருளினார் அப்பர் பெருமான்.

 

     பொறிபுலன்களில் வழிப்பட்டவர்க்கு, மெய்ப்பொருளை உபதேசிப்பது பயன் தராது. ஆசிரியர் மாட்டுத் தனது கருத்தை வைத்து, தன்னை மறந்து கேட்பவர்க்கே பயன் விளையும். எனவே, ஐம்புலன்களும் அழிந்த சிந்தையினை உடைய,எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகும் அந்தணாளர்க்கு அறம், பொருள்,இன்பம், வீடு என்னும் நாற்பொருளையும் மொழிந்து அருளினான் என்பதை, "ஐம்புலனும் அழிந்த சிந்தை அந்தணாளர்க்குஅறம்பொருள் இன்ப வீடு மொழிந்த வாயான் முக்கண் ஆதி" என்றும், "அறம் கிளரும் நால்வேதம் ஆலின்கீழ் இருந்து அருளிஎன்றும் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் குறிப்பிட்டு அருளினார்.

 

     "ஒன்றாக நல்லது கொல்லாமை" என்றார் திருவள்ளுவ நாயனார். "கொல்லா நெறியே குருவருள் நெறி" என்றார் வள்ளல்பெருமான். "கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க எல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே" என்றார் தாயுமான அடிகளார்.

 

     வேதங்களில் ஊன் வேள்வி சொல்லப்பட்டு இருக்கின்றதே என்னும் ஐயம் உண்டாகலாம். வேதம் பல்வேறு திறத்தார்க்கும் அவரவர்க்கு ஏற்புடைய அறங்களைக் கூறுவதாகலின்அதனுள் கூறப்பட்ட அறங்கள் அவ்வத்திறத்தார்க்கே உரியன. அல்லாமல்அதனுள் கூறப்பட்டுள்ள எல்லா அறங்களும் எல்லார்க்கும் உரியன அல்ல. ஊன் வேள்வி அல்லாமல், தூய நோன்புகளும் வேதங்களில் கூறப்பட்டு உள்ளது. எனவே, "வேதத்தை விட்ட அறம் இல்லை" என்றார். வேதத்தின் சிறப்பை வலியுறுத்த வந்த திருவள்ளுவ  நாயனார். 

 

"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின், ஒன்றன்

உயிர் செகுத்து உண்ணாமை நன்று"

 

என்று அருளினார்.

 

     வேதம் அறத்தைக் கூறும் பொதுநூல் ஆகும். பொதுநூலில் பொதுவாக எல்லோருக்கும் உரிய அறம் கூறப்பட்டது. ஊன்வேள்வியே முழுப் பலனையும் தந்துவிடுமா? என்னும் வினா எழும்புமானால், எண்ணலங்காரமாக சில வாழ்வியல் முறைகள் நூல்களில் சொல்லப்பட்டு உள்ளவை பற்றிக் காண்போம்....

 

1.   குறிக்கோள் ஒன்று. "ஒன்று புரி கொள்கை" என்று திருமுருகாற்றுப்படையில் சொல்லப்பட்டு இருக்கும். அதாவது விடு பேற்றினை அடைவது. அது ஒன்றுதான் கொள்கை ஆக இருக்கவேண்டும். அதற்கு இருபிறப்பு நிலையை ஒருவன் அடைதல் வேண்டும்.

 

2.   இரு பிறப்பு என்பது உபநயனத்திற்கு முன் ஒரு பிறவி,அதற்குப் பின் இரண்டாவது பிறவி என்று அந்தணர்களை இருபிறப்பாளர்கள் என்று குறிப்பிடுவார்கள். 

 

3.   முத்தீ என்பது மூன்று தீயைக் குறிக்கும். வேள்விக்கு உரிய ஆகவனியம்காருக பத்தியம்தக்கினாக்கினி ஆகிய மூன்று யாகங்களை நாளும் வளர்த்தல்.

 

4.   இருக்குயஜீர்சாமம்அதர்வணம் என்னும் நான்கு வேதங்களை ஓதுவது. 

 

5.   ஐந்து பெரும் வேள்விகளைச் (யாகங்களைச்) செய்தல். 

 

6.   அறுதொழில் என்பது ஒதல் ஒதுவித்தல்வேட்டல்வேட்பித்தல்,ஈதல் ஏற்றல் ஆகியவை. அந்தணர்களை அறுதொழிலாளர் என்று நூல்கள் கூறும்.

 

     இவையனைத்தும்வைதிக நெயைப் பின்பற்றுவோர் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டியவை. 

 

     இறுதியாகக் குறிப்பட்டி ஆறுதொழில்களில் வேட்டல் என்பது விருப்பம் என்னும் பொருளைத் தந்துவிரும்பிச் செய்யவேண்டியது, வேள்வி என்றும் யாகம் என்றும் சொல்லப்படும்.

 

     இதில் இல்லறத்தார் தினமும் செய்யவேண்டிய ஐந்து வேள்விகள்: கடவுள் வேள்வி,பிரமவேள்வி,  பூதவேள்விமானிடவேள்வி,பிதிர்வேள்வி.

 

1.   கடவுள் வேள்வி எனப்படுவது தேவவேள்வி என்றும் தேவயாகம் என்றும் சொல்லப்படும். இத் கடவுளரை வழிபாடு செய்வதைக் குறிக்கும். (வீட்டிலும்திருக்கோயில்களிலும்மற்ற பொது இடங்களிலும் கடவுளரை வழிபடுதல்)

 

2.   பிரமவேள்வி என்பதுபிரமயாகம் எனப்படும் வேதம் ஓதுதல் ஆகும். (வேதம் என்பது தமிழ்வேதத்தையும் குறிக்கும்.)

 

3.   பூதவேள்வி என்பதுபூதயாகம் என்றும் உயிர்வேள்வி என்றும் சொல்லப்படும். இது உயிர்களுக்கு உணவு இடுதல் ஆகும்.

 

4.   மானிட வேள்வி என்பதுமானுடயாகம் என்றும்மனிதவேள்வி என்றும்சொல்லப்படும் விருந்தோம்பல் ஆகும்.

 

5.   பிதிர்வேள்வி என்பதுபிதிர் யாகம் என்றும்தென்புலத்தார் கடன் தீர்த்தல் என்றும் சொல்லப்படும். இது திதி கொடுத்தல்தர்ப்பணம் கொடுத்தல் என்று இருவகைப்படும்.

 

     இந்த பஞ்சமகா யாகங்கள் அல்லது ஐம்பெரும் வேள்விகள்சைவமுறையில் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது.

 

1.   கன்மவேள்வி --- வைதிக முறையில் மேலே சொல்லப்பட்ட ஐந்து பெருவேள்விகளும் கருமயாகம் அல்லது கருமவேள்வி ஆகும்.

 

2.   தவவேள்வி --- சமயம்விசேடம் என்று சைவமுறையில் விதிக்கப்பட்ட தீக்கைகளின்படி (தீக்ஷைகளின்படி) சரியைகிரியையோகம் என்னும் மூவகை நெறிகளில் நின்று ஒழுகுதல்.

 

3.   செபவேள்வி --- மேற்சொன்ன தீக்கைகளில் உபதேசமாகப் பெற்ற மந்திரத்தை உருவேற்றுதல்.

 

4.   தியான வேள்வி --- செபத்தின் வழிசரியைகிரியையோகம் எனப்படும் மூன்று வழிகளிலும்இறைவனைமுறையே உருவம்அருஉருவம்அருவம் என்னும் மூவகைத் திருமேனிகளைத் தியானித்தல்.

 

5.   ஞானவேள்வி --- இறைவனின் இயல்புகள்அவனுக்கு அடிமை ஆன உயிர்களின் இயல்புகள்உயிர்களைப் பற்றி உள்ள ஆணவம்மாயைகன்மம் என்பனவற்றின் இயல்புகள் ஆகியவற்றை உள்ளவாறு உணர்த்தும் ஞானநூல்களை ஓதுதல்ஓதுவித்தல்கேட்பித்தல்நல்லாசிரியரிடம் நூல்களின் பொருளை இனிது கேட்டல்கேட்டதைச் சிந்தித்தல்.

 

     இன்னும் விரித்தால் மிகப் பெருகும். இந்த வைதிக முறையிலான வேள்விகளையும்சைவ முறையிலான வேள்விகளையும்ஒருவன் தனக்காகச் செய்வது மட்டும் அல்லாமல்பிறருக்காகவும் செய்தல் வேண்டும். "சர்வே ஜனா:சுகினோ பவந்து" என்பதும், "வையகமும் துயர் தீர்கவே" என்பதும், "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க" என்பதும் இந்தக் கருத்தில் சொல்லப்படுபவையே.

 

     ஆகவேள்விகளிலேயே மிக உயர்ந்த்து "ஞானவேள்வி" ஆகும். இது "ஞானயக்ஞம்" என்று வடமொழியில் கூறப்படும். உயர்ந்ததான இந்த ஞானவேள்வியினைத் தலைப்படுவதற்கே, வேதங்களில் அறம் குறித்துக் கூறபட்டது. எனவே, "வேதத்தை விட்ட அறம் இல்லை" என்று சொல்லப்பட்டது. அறவாழ்வில் தலைப்படுவதே உலகியல் ஆகும். அதை அறிந்துகொள்வதே உலக இயற்கை ஆகும். இந்த உலக இயற்கையை சனகாதி முனிவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே, கல்லால மரத்தின் நிழலில் இறைவன் குருமுகமாக எழுந்தருளி இருந்து வேதங்களை உட்பொருளை உணர்த்தினான்.

 

     இவற்றை எல்லாம் விட்டுவிட்டு, உலகியல் என்று எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றோம்.

No comments:

Post a Comment

கச்சித் திரு அகவல்

பட்டினத்து அடிகளார் அருளிய கச்சித் திரு அகவல் திருச்சிற்றம்பலம் ----- திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து ...