பொது --- 1031. ஏடுமலர் உற்ற

                                                           அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

ஏடுமலர் உற்ற (பொது)

 

முருகா! 

பிறவிப் பெருங்கடலில் இருந்து அடியேனை

அருளால் எடுத்துக்காத்து அருள்.

 

 

தானதன தத்த தானதன தத்த

     தானதன தத்த ...... தனதான

 

 

ஏடுமல ருற்ற ஆடல்மத னுய்க்கு

     மேவதுப ழிக்கும் ...... விழியாலே

 

ஏதையும ழிக்கு மாதர்தம யக்கி

     லேமருவி மெத்த ...... மருளாகி

 

நாடுநகர் மிக்க வீடுதன மக்கள்

     நாரியர்கள் சுற்ற ...... மிவைபேணா

 

ஞானவுணர் வற்று நானெழுபி றப்பும்

     நாடிநர கத்தில் ...... விழலாமோ

 

ஆடுமர வத்தை யோடியுடல் கொத்தி

     யாடுமொரு பச்சை ...... மயில்வீரா

 

ஆரணமு ரைக்கு மோனகவி டத்தில்

     ஆருமுய நிற்கு ...... முருகோனே

 

வேடுவர்பு னத்தில் நீடுமித ணத்தில்

     மேவியகு றத்தி ...... மணவாளா

 

மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி

     மீளவிடு வித்த ...... பெருமாளே.

 

பதம் பிரித்தல்

 

ஏடுமலர் உற்ற ஆடல் மதன் உய்க்கும்

     ஏ அது பழிக்கும் ...... விழியாலே,

 

ஏதையும் அழிக்கு மாதர் தம் மயக்கிம-

     லே மருவி மெத்த ...... மருளாகி,

 

நாடு, நகர், மிக்க வீடு, தனம், மக்கள்,

     நாரியர்கள், சுற்றம், ...... இவைபேணா

 

ஞான உணர்வு அற்று, நான் எழு பிறப்பும்

     நாடி, நரகத்தில் ...... விழல் ஆமோ?

 

ஆடும் அரவத்தை ஓடி உடல் கொத்தி,

     ஆடும் ஒரு பச்சை ...... மயில்வீரா!

 

ஆரணம் உரைக்கு மோன அக இடத்தில்,

     ஆரும் உய நிற்கும் ...... முருகோனே!

 

வேடுவர் புனத்தில் நீடும் இதணத்தில்

     மேவிய குறத்தி ...... மணவாளா!

 

மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி,

     மீள விடுவித்த ...... பெருமாளே.

 

பதவுரை

 

     ஆடும் அரவத்தை ஓடி உடல் கொத்தி ஆடும் --- படம் எடுத்து ஆடுகின்ற பாம்பினைக் கண்டதும் ஓடிச் சென்று அதன் உடலைக் கொத்தி ஒயிலாக நடனம் புரிகின்ற

 

     ஒரு பச்சை மயில்வீரா --- ஒப்பற்ற பச்சை நிறம் பொருந்திய மயிலை வாகனமாக உடைய வீரரே!

 

      ஆரணம் உரைக்கு(ம்) மோன அக இடத்தில் --- வேதங்கள் கூறுகின்ற உரை உணர்வு இறந்த நிலை விளங்குகின்ற இடத்தில்,

 

     ஆரும் உ(ய்)ய நிற்கு(ம்) முருகோனே --- எல்லா உயிர்களும் உய்தியைப் பெற அருள் புரிகின்ற முருகப் பெருமானே!

 

     வேடுவர் புனத்தில் நீடும் இதணத்தில் மேவிய குறத்தி மணவாளா --- வேடர்களின் தினைப்புனத்தில் நீண்ட பரண்மீது வீற்றிருந்த குறத்தியாகிய வள்ளிநாயகியின் மணவாளரே!

 

     மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே --- முன்பு அசுரர்கள் காவலில் இட்ட தேவர்களின் சிறையை நீக்கிஅத்தேவர்களை விடுவித்த பெருமையில் மிக்கவரே!

 

     ஏடுமலர் உற்ற ஆடல் மதன் உய்க்கும் ஏ அது பழிக்கும் விழியாலே --- காமப் போர் புரியும் மன்மதன் செலுத்தும் இதழ்களை உடைய மலர்க் கணைகளையும் பழிக்கும்படியான கண்களால்,

 

      ஏதையும் அழிக்கு(ம்) மாதர் தம் மயக்கிலே மருவி மெத்த மருளாகி --- எதையும் அழிக்கவல்ல மாதர்களின் மயக்கிலே நான் சிக்கி,  றிவு மயக்கம் பூண்டு

 

      நாடு நகர் மிக்க வீடு தன மக்கள் நாரியர்கள் சுற்றம் இவை பேணா --- நாடு,  நகரம்நிறைந்த வீடுகள்செல்வம்குழந்தைகள்பெண்கள்சுற்றத்தார் என்னும் இவைகளைப் பேணி நின்று,

 

     ஞான உணர்வு அற்று --- ஞான உணர்வு சிறிதும் இல்லாமல்,

 

     நான் எழு பிறப்பும் நாடி நரகத்தில் விழலாமோ --- அடியேன் எழுவகையான பிறவிகளையே தேடி இருந்துநரகத்தில் விழுவது தகுமா?

 

பொழிப்புரை

 

     படம் எடுத்து ஆடுகின்ற பாம்பினைக் கண்டதும் ஓடிச் சென்று அதன் உடலைக் கொத்தி ஒயிலாக நடனம் புரிகின்றஒப்பற்ற பச்சை நிறம் பொருந்திய மயிலை வாகனமாக உடைய வீரரே!

 

     வேதங்கள் கூறுகின்ற உரை உணர்வு இறந்த நிலை விளங்குகின்ற இடத்தில்எல்லா உயிர்களும் உய்தியைப் பெற அருள் புரிகின்ற முருகப் பெருமானே!

 

     வேடர்களின் தினைப்புனத்தில் நீண்ட பரண்மீது வீற்றிருந்த குறத்தியாகிய வள்ளிநாயகியின் மணவாளரே!

 

     முன்பு அசுரர்கள் காவலில் இட்ட தேவர்களின் சிறையை நீக்கிஅத்தேவர்களை விடுவித்த பெருமையில் மிக்கவரே!

 

      காமப் போர் புரியும் மன்மதன் செலுத்தும் இதழ்களை உடைய மலர்க் கணைகளையும் பழிக்கும்படியான கண்களால்,எதையும் அழிக்கவல்ல மாதர்களின் மயக்கிலே நான் சிக்கிறிவு மயக்கம் பூண்டுநாடு,  நகரம்நிறைந்த வீடுகள்செல்வம்குழந்தைகள்பெண்கள்சுற்றத்தார் என்னும் இவைகளைப் பேணி நின்று,ஞான உணர்வு சிறிதும் இல்லாமல்,அடியேன் எழுவகையான பிறவிகளையே தேடி இருந்துநரகத்தில் விழுவது தகுமா?

 

 

விரிவுரை

 

ஏடுமலர் உற்ற ஆடல் மதன் உய்க்கும் ஏ அது பழிக்கும் விழியாலே ஏதையும் அழிக்கும் மாதர் தம் மயக்கிலே மருவி மெத்த மருளாகி--- 

 

ஆடல் --- போர்அதனால் விளையும் துன்பம்.

 

மதன் --- மன்மதன்.

 

ஏ --- அம்பு. இங்கு மன்மதன் விடுக்கின்ற மலர் அம்புகளைக் குறிக்கும்.

 

ஏதையும் --- "எதையும்" என்னும் சொல் முதல் நிலை நீண்டு வந்தது.

 

மருள் --- அறிவு மயக்கம்.

 

மன்மதன் விடுகின்ற கணைகள் ஆகிய அழகிய மலர்களையும் பழிக்கும் தன்மை உடையன பெண்களின் கண்கள். மலர்கள் போன்று அழகியதும்அம்பு பொன்ற கூர்மை உடையதும் ஆகிய தமது கண்களால் துறவியர் மனத்தையும் சிதைக்கும் வல்லமை உடையவர்கள் விலைமாதர்கள்.

 

மாயா சொரூப முழுச் சமத்திகள்,

     ஓயா உபாய மனப் பசப்பிகள்,

     வாழ்நாளை ஈரும் விழிக் கடைச்சிகள்,.....முநிவோரும்

மால்ஆகி வாட நகைத்து உருக்கிகள்,

     ஏகாசம் மீது தனத் திறப்பிகள்,

     'வாரீர் இரீர்'என் முழுப் புரட்டிகள்,...... வெகுமோகம்

 

ஆயாத ஆசை எழுப்பும் எத்திகள்,

     ஈயாத போதில் அறப் பிணக்கிகள்,

     ஆவேச நீர் உண் மதப் பொறிச்சிகள்,...... பழிபாவம்

ஆமாறு எணாத திருட்டு மட்டைகள்,

     கோமாளம் ஆன குறிக் கழுத்திகள்,

     ஆசார ஈன விலைத் தனத்தியர்,...... உறவுஆமோ?--- திருப்புகழ். 

 

அரிசன வாடைச் சேர்வை குளித்து,

     பலவித கோலச் சேலை உடுத்திட்டு,

     அலர்குழல் ஓதிக் கோதி முடித்து, ......சுருளோடே

அமர்பொரு காதுக்கு ஓலை திருத்தி,

     திருநுதல் நீவி,பாளித பொட்டு இட்டு,

     அகில் புழுகு ஆரச் சேறு தனத்துஇட்டு,......அலர்வேளின்

 

சுரத விநோதப் பார்வை மை இட்டு,

     தருண கலாரத் தோடை தரித்து,

     தொழில்இடு தோளுக்கு ஏற வரித்திட்டு,.....இளைஞோர்மார்,

துறவினர் சோரச் சோர நகைத்து,

     பொருள்கவர் மாதர்க்கு ஆசை அளித்தல்

     துயர் அறவேபொன் பாதம் எனக்குத் ...... தருவாயே.   ---  திருப்புகழ்.

 

விழையும் மனிதரையும் முநிவரையும் உயிர்துணிய

வெட்டிப் பிளந்துஉ(ள்)ளம் பிட்டுப் பறிந்திடும் செங்கண்வேலும்.....      ---  திருப்புகழ்.                                                                                                                                

 

கிளைத்துப் புறப்பட்ட சூர்மார்புடன் கிரி ஊடுருவத்

தொளைத்துப் புறப்பட்ட வேல்கந்தனேதுறந்தோர் உளத்தை

வளைத்துப் பிடித்துபதைக்கப்பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு

இளைத்துதவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே. ---  கந்தர் அலங்காரம்.

 

"காய்சின வேல் அன்ன மின்னியல் கண்ணின் வலைகலந்து

வீசின போதுஉள்ள மீன் இழந்தார்"     --- திருக்கோவையார்.

 

விசுவாமித்திரர் மேனகையைக் கண்டு மயங்கினார். பலகாலம் செய்த தவம் அழிந்து குன்றினார். காசிபர் மாயையைக் கண்டு மருண்டார். 

 

ஆனால் இவை சிவனருள் இன்றி நிற்கும் முனிவருக்கு உரியவை.

 

காமனை எரித்த கண்ணுதற் கடவுளைக் கருத்தில் இருத்திய நற்றவரைப் பொது மகளிர் மயக்க இயலாது.

 

திருப்பூம்புகலூரில் உழவாரத் தொண்டு செய்து கொண்டிருந்தார் அப்பர் பெருமான்அப்போது அரம்பை முதலிய வான மாதர்கள் வந்து அவர் முன்னே,

 

"ஆடுவார் பாடுவார் அலர்மாரி மேற்பொழிவார்

கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடைநுடங்க

ஓடுவார் மாரவே ளுடன்மீள்வர்ஒளிபெருக

நீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார்". -- பெரியபுராணம்.

 

இந்த சாகச வித்தைகளைக் கண்ட அப்பர் பெருமானுடைய மனம் ஒருசிறிதும் சலனம் அடையவில்லை. உமக்கு இங்கு என்ன வேலைபோமின்” என்று அருளிச் செய்தார்.

 

ஆதலால் சிவனடியார்கள் காதலால் மயங்க மாட்டார்கள்.

 

நாடு நகர் மிக்க வீடு தன மக்கள் நாரியர்கள் சுற்றம் இவை பேணா ஞான உணர்வு அற்று--- 

 

பதியாகிய பரம்பொருளை அறிந்து அடைய ஒட்டாமல் பசுக்கள் ஆகிய ஆன்மாக்களைக் கட்டுப்படுத்தி மயக்குவிப்பது பாசம். பசுக்களுக்குப் பாசம்செம்பில் களிம்பு போல் வேறு காரணமின்றி அநாதியே உடன் இருந்து வருதலின்ஆன்மா தானே உணரும் வல்லமை இல்லை. எனவே,கருவிகளைப் பற்றி நின்று உணர்வதாயிற்று.

 

அந்தக் கரணம் அவற்றின் ஒன்று அன்றுஅவை

சந்தித்தது ஆன்மா சகச மலத்து உணராது

அமைச்சு அரசு ஏய்ப்ப நின்று அஞ்சு அவத் தைத்தே.

                                                                        --- சிவஞான போதம் 4-ஆம் சூத்திரம்

 

பாச சம்பந்தத்தினால் ஆன்மா பசு எனப்பட்டது. (பதிஞானத்தால்) பாச நீக்கமுற முத்தான்மா பசு எனப்படாது.

 

பாசமற்ற வேதகுருபரனாகிய குமரேசனுடைய திருவடி ஞானத்தாலேபாசத்தை அறுத்து அத்துவித முத்தியை அடைதல் வேண்டும். பாசத்தினால் வந்த மயக்க வுணர்வினால் துணையாகாத உறவினர் மனைவி மகார் முதலியவரைத் துணை என நம்பி,வறிதே நாள்களைக் கழித்து,அவமே கெட்டுஆன்மாக்கள் அல்லற்படுகின்றன.

 

மனைமக்கள் சுற்றம் ...... எ(ன்)னு(ம்) மாயா

   வலையைக்க டக்க ...... அறியாதே,

வினையில் செருக்கி ...... அடிநாயேன்

   விழலுக்கு இறைத்து ...... விடலாமோ?    --- திருப்புகழ்.

 

மனைவிதாய் தந்தை மக்கள்

            மற்றுஉள சுற்றம் என்னும்

வினைஉளே விழுந்து அழுந்தி,

            வேதனைக்கு இடம் ஆகாதே,

கனையுமா கடல்சூழ் நாகை

            மன்னுகா ரோணத் தானை

நினையுமா வல்லீர் ஆகில்

            உய்யலாம் நெஞ்சி னீரே.          --- அப்பர் தேவாரம்.

 

எழு பிறப்பும் நாடி நரகத்தில் விழலாமோ--- 

 

நால்வகைத் தோற்றம்எழுவகைப் பிறவிஎண்பத்துநான்கு நூறு ஆயிர பேதம் உடையது பிறவி.

 

நால்வகைத் தோற்றம் வருமாறு ---

 

அண்டசம் - முட்டையில் தோன்றுவன. (அண்டம் - முட்டைசம் - பிறந்தது) அவை பறவைபல்லிபாம்புமீன்தவளை முதலியன. 

 

சுவேதசம் - வேர்வையில் தோன்றுவன. (சுவேதம் - வியர்வை) அவை பேன்கிருமிகீடம்விட்டில் முதலியன. 

 

உற்பிச்சம் - வித்து. வேர்கிழங்கு முதலியவற்றை மேல் பிளந்து தோன்றுவன (உத்பித் - மேல்பிளந்து) அவை மரம்செடிகொடிபுல்பூண்டு முதலியன.

 

சராயுசம்கருப்பையிலே தோன்றுவன (சராயு - கருப்பாசயப்பை)  இவை தேவர்மனிதர்நாற்கால் விலங்குகள் முதலியன.

 

தேவர்மனிதர்விலங்குபறவைஊர்வனநீர்வாழ்வனதாவரம் என்ற எழுவகைப் பிறப்பு. 

 

இவற்றுள் முதல் ஆறும் இயங்கியல்பொருள். (இயங்குதிணைசங்கமம்சரம்) எனவும்,  இறுதியில் நின்ற ஒன்று நிலையியல் பொருள் (நிலைத்திணைப் பொருள்தாவரம்அசரம்) எனவும் பெயர் பெறும்.

 

பாரிடை வேர்வையில் பையிடை முட்டையில்

ஆருயிர் அமைக்கும் அருட்பெருஞ் ஜோதி

 

ஊர்வன பறப்பன உறுவன நடப்பன

ஆர்வுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

 

அசைவுஇல அசைவு உள ஆர் உயிர்த் திரள்பல

அசல்அற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

 

அறிவு ஒரு வகைமுதல் ஐவகை அறுவகை

அறிதர வகுத்த அருட்பெருஞ் ஜோதி

 

ஓவுறா எழுவகை உயிர்முதல் அனைத்தும்

ஆவகை வகுத்த அருட்பெருஞ் ஜோதி        

         

பைகளில் முட்டையில் பாரினில் வேர்வினில்

ஐபெற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

 

தாய்கருப் பையினுள் தங்கிய உயிர்களை

 ஆய்வுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

 

 முட்டைவாய்ப் பயிலும் முழுஉயிர்த் திரள்களை

 அட்டமே காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

 

 நிலம்பெறும் உயிர்வகை நீள்குழு அனைத்தும்

 அலம்பெறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

 

 வேர்வுற உதித்த மிகும்உயிர்த் திரள்களை

 ஆர்வுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி.     --- திருவருட்பா.

 

எண்பத்துநான்கு இலட்சம் யோனி போதங்கள். "உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம் நிரைசேரப் படைத்து அவற்றின் உயிர்க்கு உயிராய் அங்கங்கே நின்றான்" என்பது திருஞானசம்பந்தப் பெருமானார் திருவீழிமிழலைத் தேவாரத்தின் மூலம் நமக்கு அறிவுறுத்துவது.

 

யோனி - கருவேறுபாடுகள். 

 

         தேவர் -      14 இலட்சம்,

         மக்கள் -     9 இலட்சம்,

         விலங்கு -    10 இலட்சம்

         பறவை -     10 இலட்சம்,

         ஊர்வன -     11 இலட்சம்

         நீர்வாழ்வன – 10 இலட்சம்

         தாவரம் -     20 இலட்சம்,

        

ஆக84 இலட்சம் பேதம் ஆகும்இதனை,

 

         ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானிடம்

         நீர்பறவை நாற்கால் ஒர் பப்பத்தாம் - சீரிய

         பந்தமாம் தேவர் பதினால் அயன்படைத்த

         அந்தமில் தாவரம் நால்ஐந்து.

 

என்னும் பழம் பாடலால் அறியலாம்.

 

முன் பிறவியில் இழைக்கப்பட்ட வினைகளால்,இப் பிறவியும்இப் பிறவியில் இழைக்கப்போகும் வினைகளால்இனி வரும் பிறவியும்ஆகதொன்று தொட்டுகாரண காரியத் தொடர்ச்சி உடையதாய்பிறவியானது முடிவில்லாமல் வருவதால்அது "பிறவிப் பெருங்கடல்" எனப்பட்டது.

 

இன்பத்தைத் தருவது போல் அமைந்து துன்பத்தையே தருவது எழுபிறவி என்னும் கடல் என்று அடிகளார் பொருந்தக் கூறும் பொருள் நிறைந்த அருள்வாக்கை எண்ணி ஈடேற முயலுதல் நலம்.

 

நிகழ்த்தும் ஏழ்பவ கடல் சூறை ஆகவெ,

     எடுத்த வேல் கொடு பொடித்தூள் அதா எறி,

    நினைத்த காரியம் அநுக்கூலமே புரி ...... பெருமாளே.

 

என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில்.

 

நிருதரார்க்கு ஒரு காலா! ஜே ஜெய,

     சுரர்கள் ஏத்திடு வேலா! ஜே ஜெய,

     நிமலனார்க்கு ஒரு பாலா! ஜே ஜெய, ...... விறல்ஆன

நெடிய வேல்படையானே! ஜே ஜெய,

     என இராப்பகல் தானேநான் மிக

     நினது தாள் தொழுமாறே தான்,இனி ...... உடனேதான்

 

தரையின் ஆழ்த் திரை ஏழே போல்,எழு

     பிறவி மாக்கடல் ஊடே நான்உறு

     சவலை தீர்த்துஉன தாளே சூடி,உன் ...... அடியார்வாழ்

சபையின் ஏற்றிஇன் ஞானா போதமும்

     அருளிஆட்கொளுமாறே தான்அது

     தமியனேற்கு முனே நீ மேவுவது ...... ஒருநாளே?

 

என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில்.

 

பின்வரும் மேற்கோள் பாடல்களையும் எண்ணுக.

 

புற்றுஆடு அரவம் அரைஆர்த்து உகந்தாய்

         புனிதா பொருவெள்விடை ஊர்தியினாய்

எற்றேஒரு கண்இலன் நின்னை அல்லால்

         நெல்வாயில் அரத்துறை நின்மலனே

மற்றேல் ஒரு பற்றுஇலன் எம்பெருமான்

         வண்டார்குழலாள் மங்கை பங்கினனே

அற்றார் பிறவிக் கடல் நீந்தி ஏறி

         அடியேன் உய்யப்போவதோர் சூழல் சொல்லே.--- சுந்தரர்.

 

தனியேனன் பெரும் பிறவிப் பௌவத்து எவ்வத்

      தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றிக்

கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால்

      கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு

இனி என்னே உய்யும் ஆறு என்று என்று எண்ணி

      அஞ்சுஎழுத்தின் புணை பிடித்துக் கிடக்கின்றேனை

முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லல்

     கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே.   --- திருவாசகம்.

 

அருள்பழுத்து அளிந்த கருணை வான்கனி,

ஆரா இன்பத் தீராக் காதல்

அடியவர்க்கு அமிர்த வாரிநெடுநிலை

மாடக் கோபுரத்து ஆடகக் குடுமி

மழைவயிறு கிழிக்கும் கழுமல வாண,நின்

 

வழுவாக் காட்சி முதிரா இளமுலைப்

பாவையுடன் இருந்த பரம யோகி,

யான்ஒன்று உணர்த்துவன்எந்தைமேனாள்

அகில லோகமும்அனந்த யோனியும்,

நிகிலமும் தோன்றநீ நினைந்த நாள் தொடங்கி,

 

எனைப்பல யோனியும்நினைப்பு அரும் பேதத்து

யாரும்யாவையும்எனக்குத் தனித்தனி

தாயர் ஆகியும்தந்தையர் ஆகியும்,

வந்து இலாதவர் இல்லையான்அவர்

தந்தையர் ஆகியும்தாயர் ஆகியும்,

 

வந்து இராததும் இல்லைமுந்து

பிறவா நிலனும் இல்லைஅவ்வயின்

இறவா நிலனும் இல்லைபிறிதில்

என்னைத் தின்னா உயிர்களும் இல்லையான் அவை

தம்மைத் தின்னாது ஒழிந்ததும் இல்லைஅனைத்தே

 

காலமும் சென்றதுயான் இதன் மேல்இனி

இளைக்குமாறு இலனே நாயேன்,

நந்தாச் சோதிநின் அஞ்செழுத்து நவிலும்

தந்திரம் பயின்றதும் இலனேதந்திரம்

பயின்றவர்ப் பயின்றதும் இலனேஆயினும்

 

இயன்றது ஓர் பொழுதின் இட்டது மலராச்

சொன்னது மந்திரமாகஎன்னையும்

இடர்ப் பிறப்பு இறப்பு என்னும் இரண்டின்

கடல்படா வகை காத்தல் நின்கடனே.    ---  திருக்கழுமல மும்மணிக்கோவை.                        

 

அறிவுஇல் ஒழுக்கமும்பிறிதுபடு பொய்யும்

கடும்பிணித் தொகையும்இடும்பை ஈட்டமும்,

இனையன பலசரக்கு ஏற்றிவினைஎனும்

தொல் மீகாமன் உய்ப்பஅந் நிலைக்

கரு எனும் நெடுநகர் ஒருதுறை நீத்தத்து

புலன் எனும் கோள்மீன் அலமந்து தொடர,

பிறப்புஎனும் பெருங்கடல் உறப் புகுந்து அலைக்கும்

துயர்த் திரை உவட்டின் பெயர்ப்பிடம் அயர்த்துக்

குடும்பம் என்னும் நெடுங்கல் வீழ்த்து,

நிறை எனும் கூம்பு முரிந்துகுறையா

உணர்வு எனும் நெடும்பாய் கீறிப் புணரும்

மாயப் பெயர்ப்படு காயச் சிறைக்கலம்

கலங்குபு கவிழா முன்னம்அலங்கல்

மதியுடன் அணிந்த பொதிஅவிழ் சடிலத்துப்

பையரவு அணிந்த தெய்வ நாயக.....

 

நின் அருள் எனும் நலத்தார் பூட்டித்

திருவடி நெடும்கரை சேர்த்துமா செய்யே.   --- கோயில் நான்மணி மாலை.

                                                                          

இப்பிறவி என்னும்ஓர் இருள்கடலில் மூழ்கி,நான்

                  என்னும் ஒரு மகர வாய்ப்பட்டு

         இருவினை எனும் திரையின் எற்றுஉண்டுபுற்புதம்

                  எனக் கொங்கை வரிசைகாட்டும்

துப்புஇதழ் மடந்தையர் மயல் சண்டமாருதச்

                  சுழல் வந்து வந்து அடிப்ப,

         சோராத ஆசையாம் கான்ஆறு வான்நதி

                  சுரந்தது என மேலும் ஆர்ப்ப,

கைப்பரிசு காரர்போல் அறிவான வங்கமும்

                  கைவிட்டு மதிமயங்கி,

         கள்ள வங்கக் காலர் வருவர் என்று அஞ்சியே

                  கண்அருவி காட்டும் எளியேன்

செப்பரிய முத்தியாம் கரைசேரவும் கருணை

                  செய்வையோசத்து ஆகி என்

         சித்தமிசை குடிகொண்ட அறிவுஆன தெய்வமே

                  தோஜோமய ஆனந்தமே.        --- தாயுமானவர்.

 

இல்லை பிறவிக் கடல் ஏறல்இன் புறவில்  

முல்லை கமழும் முதுகுன்றில் ---  கொல்லை

விடையானைவேதியனைவெண்மதிசேர் செம்பொன்

சடையானைச் சாராதார் தாம்.  --- பதினொராம் திருமுறை.

 

துவக்கு அற அறிந்து பிறக்கும் ஆரூரும்,

         துயர்ந்திடாது அடைந்து காண் மன்றும்,

உவப்புடன் நிலைத்து மரிக்கும் ஓர் பதியும்

         ஒக்குமோநினைக்கும் நின் நகரை;

பவக்கடல் கடந்து முத்தி அம் கரையில்

         படர்பவர் திகைப்பு அற நோக்கித்

தவக்கலம் நடத்த உயர்ந்து எழும் சோண

         சைலனே கைலை நாயகனே.   --- சோணசைலமாலை.

 

தோற்றிடும் பிறவி  எனும் கடல் வீழ்ந்து

         துயர்ப்பிணி எனும் அலை அலைப்ப

கூற்று எனும் முதலை விழுங்குமுன் நினது

         குரைகழல் கரை புக விடுப்பாய்

ஏற்றிடும் விளக்கின் வேறுபட்டு அகத்தின்

         இருள் எலாம் தன்பெயர் ஒருகால்

சாற்றினும் ஒழிக்கும் விளக்கு எனும் சோண

         சைலனே கைலை நாயகனே.    --- சோணசைலமாலை.

 

மனம் போன போக்கில் சென்றான் ஒருவன்கண்ணை இழந்தான். கடலில் விழுந்தான். கரை தெரியவில்லை. கலங்குகிறான். நீருள் போகிறான். மேலே வருகிறான். திக்கு முக்காடித் திணறுகிறான். அபாயச் சூழ்நிலை. உடல் துடிக்கிறது. உள்ளம் பதைக்கிறது. அலறுகிறான். அழுகிறான். எதிர்பாராத ஒரு பருத்த மரம்அலைமேல் மிதந்துஎதிரே வருகிறது. காண்கிறான். நம்பிக்கை உதிக்கிறது. ஒரே தாவாகத் தாவிஅதைத் தழுவிக் கொள்கிறான். விட்டால் விபரீதம். இனி யாதாயினும் ஆக என்று அதையே இறுகப் பற்றியிருக்கின்றான்.

 

எதிர்பாராது எழுந்தது புயல். அலைவு அதிகரிக்கும் அது கண்டு அஞ்சினான். பயங்கரமாக வீசிய புயல் காற்றுஅவனை ஒரே அடியாகக் கரையில் போய் வீழச் செய்தது. அந்த அதிர்ச்சியில்தன்னை மறந்தான். சிறிது பொறுத்து விழித்தான். என்ன வியப்பு! தான் கரையில் இருப்பதை அறிந்தான். மகிழ்ந்தது மனம். கட்டையை வாழ்த்தினான்கரையில் ஒதுக்கிய காற்றையும் வாழ்த்தினான். ஆன்மாவின் வரலாறும்,ஏறக்குறைய இதைப் போலவே இருக்கிறது பாருங்கள்!

 

இருண்ட அறிவால்ஒளிமயமான உணர்வை இழந்தது.  அதன் பயனாகஆழம் காண முடியாதமுன்னும் பின்னும் தள்ளித் துன்புறுத்தும் வினை அலைகள் நிறைந்தஅநியாயப் பிறவிக்கடலில் வீழ்ந்தது ஆன்மா.

 

அகங்கார மமகாரங்கள்மாயைகாமக் குரோத லோப மோக மத மாற்சரியங்கள்பின்னி அறிவைப் பிணைத்தன. இவைகளால்கடுமையாக மோதியது கவலைப் புயல். வாழ்க்கையாம் வாழ்க்கை! கண்ணீர் வெள்ளத்தில் மிதந்தது தான் கண்ட பலன். அமைதியை விரும்பிஎப்புறம் நோக்கினாலும் இடர்ப்பாடுகற்றவர் உறவில் காய்ச்சல்மற்றவர் உறவில் மனவேதனை. இனிய அமைதிக்கு இவ்வுலகில் இடமே இல்லை. அவதி பல அடைந்துபொறுக்க முடியாத வேதனையில்இறைவன் திருவடிகளைக் கருதுகிறது.

 

நினைக்க நினைக்கநினைவில் நிஷ்காமியம் நிலைக்கிறது. அந்நிலையிலிருந்து,  இறைவனை வேண்டிப் பாடுகிறது. உணர்வு நெகிழ்ந்து உள்ளம் உருகிப் பாடும் பாக்களை,பாக்களில் உள்ள முறையீட்டைகேட்டுக் கேட்டு இறைவன் திருவுளம் மகிழ்கிறது. அருளார்வ அறிகுறியாக அமலனாகிய இறைவனுடைய திருச்செவிகள் அசைகின்றன. அந்த அசைவிலிருந்து எழும் பெருங்காற்றுஎங்கும் பரவிபிறவிக்கடலில் தத்தளிக்கும் ஆன்மாவைவாரிக் கரையில் சேர வீசி விடுகிறது. அந்நிலையில்முத்திக் கரை சேர்ந்தேன் என்று தன்னை மறந்து தனி இன்பம் காண்கிறது அந்த ஆன்மா.

 

இந்த வரலாற்றை,

 

மாற்றரிய தொல்பிறவி மறிகடலின் இடைப்பட்டுப்

போற்றுறுதன் குரைகழல்தாள் புணைபற்றிக் கிடந்தோரைச்

சாற்ற அரிய தனிமுத்தித் தடம் கரையின் மிசைஉய்ப்பக்

காற்றுஎறியும் தழைசெவிய கடாக்களிற்றை வணங்குவாம்'

 

என்று கனிவொடு பாடுகின்றது காசிகாண்டம்.

 

தனியேனன் பெரும் பிறவிப் பௌவத்து எவ்வத்

      தடம் திரையால் எற்றுண்டுபற்று ஒன்று இன்றி,

கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால்

      கலக்குண்டுகாம வான் சுறவின் வாய்ப்பட்டு,

இனி என்னே உய்யும் ஆறு என்று என்று எண்ணி

      அஞ்சுஎழுத்தின் புணை பிடித்துக் கிடக்கின்றேனை,

முனைவனே! முதல் அந்தம் இல்லா மல்லல்

     கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே.

                                                     

என்கிறது திருவாசகம்.

 

இறப்பு எனும் மெய்ம்மையை இம்மை யாவர்க்கும்

மறப்பு எனும் அதனின்மேல் கேடு மற்று உண்டோ,

துறப்பு எனும் தெப்பமே துணை செயாவிடின்

பிறப்பு எனும் பெருங்கடல் பிழைக்கல் ஆகுமோ.

                                                     

என்கிறது கம்பராமாயணம்.

 

நீச்சு அறியாது ஆங்கு ஓய் மலைப்பிறவி ஆர்கலிக்கு ஓர் வார்கலமாம் ஈங்கோய் மலைவாழ் இலஞ்சிமே

                                        

என்கிறது திருவருட்பா.

 

  வேதன்நெடுமால்ஆதி விண்நாடர்,

         மண்நாடர்விரத யோகர்,

மாதவர் யாவரும் காண மணிமுறுவல்

         சிறிது அரும்பிமாடக் கூடல்

நாதன் இரு திருக்கரம் தொட்டு அம்மியின் மேல்

     வைத்த கயல் நாட்டச் செல்வி

பாதமலர்எழுபிறவிக் கடல் நீந்தும்

            புணை என்பர் பற்று இலாதோர்.    

                      

என்கிறது திருவிளையாடல் புராணம்.

 

கருத்துரை

 

முருகா! பிறவிப் பெருங்கடலில் இருந்து அடியேனைஅருளால் எடுத்துக்காத்து அருள்.

 

 

 

No comments:

Post a Comment

கச்சித் திரு அகவல்

பட்டினத்து அடிகளார் அருளிய கச்சித் திரு அகவல் திருச்சிற்றம்பலம் ----- திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து ...