மரம் வைத்தவன் தண்ணீர் வார்த்தல் கடன்

 


மரம் வைத்தவன் தண்ணீரும் வார்த்தல் கடன்

----

 

     இக் காலத்தில் மரம் நடுதல் என்பது ஒரு சடங்காகவே ஆகிவிட்டது என்றே தோன்றுகின்றது. நட்ட மரம் என்ன ஆனது என்று பார்க்கின்றார்களா என்றால் சரியான விடை கிடைக்காது. யாராவது ஒர் அதிகாரி அல்லது அதிகார வர்க்கத்தில் உள்ளவர்ஏற்கெனவே நடப்பட்ட மரங்களை நீர் வார்த்துக் காக்க முற்பட்டார், அல்லது தமது கண்ணில் பட்டதொரு மரத்துக்குத் தண்ணீர் வார்த்தார்  என்று சொல்ல வகை இல்லை. ஒன்றை உருவாக்குவது சிறப்புத் தான். என்றாலும்உருவாக்கியது சிறப்பாக இருக்கின்றதா என்று பார்ப்பது சிறப்பு. 

 

     நகராட்சி ஆணையராக நான் இருந்த காலத்தில் மரம் நடச் சொல்லி என்னைத் தூண்டுவார்கள். "இன்று நான் மரத்தை நட்டுப் படம் எடுத்துப் பீற்றிக் கொள்ளலாம். எனக்கு விதிக்கப்பட்டுள்ள கடமை வேறு. அதை நான் ஒழுங்காகச் செய்தாலே போதும். அடுத்த நாளே எனக்கு மாறுதல் வந்துவிட்டால்நான் நட்ட மரத்தைப் புறக்கணிக்காமல் நீர் ஊற்றி வளர்க்க நினைக்க மாட்டீர்கள்" என்பேன். வைத்த மரம் வாடினால் நல்லதாஇது போன்ற சடங்குகளில் எனக்கு ஈடுபாடு இல்லை. எனது நிலையில் முடிந்த வரையில் சமுதாயத்திற்குப் பயன்படும் வகையில் எனக்கென்று விதிக்கப்பட்ட பணிகளை நான் செய்து வருவேன். இதனால், "கிறுக்கன்" என்று என்னைப் புறம் தூற்றியவர்களும் உண்டு. மக்கட்பணி என்பது மரத்தை வைப்பதோடு முடிவதில்லை. தனக்கு உள்ள பணியைப் புறக்கணித்து விட்டுதமது இயல்புக்கு மாறான பணிகளைச் செய்யவேண்டும் என்று எனக்கு எப்போதும் தோன்றியதில்லை. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் திருவருளால் பணி விதிக்கப்பட்டு உள்ளது. அது தமக்கு வாய்க்கும் நிலையைப் பொறுத்து அமையும். "கலக்கு உண்டாகு புவிதனில் எனக்கு உண்டாகு பணிவிடை கணக்கு உண்டாதல் திருவுளம் அறியாதோ" என்பார் அருணகிரிநாதப் பெருமான். விதிக்கப்பட்ட பணிகளை செவ்வனே செய்து வந்தாலே போதும் என்பது எனது கருத்து.

 

     மரம் வளர்த்தல் என்பதும்அதற்கு உண்டான நீரைத் தேக்கக் குளங்கள் அமைப்பதும் தொன்றுதொட்டு நமது முன்னோர்கள் செய்து வந்த அறச்செயல். ஒரு மரத்தை ஒருவன் நட்டான்அது நன்றாக வளரும்படிப் பார்த்துக் கொண்டான் என்றால்அந்த மரத்தால் அவன் வாழும் காலத்தில் அவன் மட்டுமல்லஎல்லோரும் பயன்பெறுவார்கள். அவன் மறைந்த பின்னரும் அந்த மரம் பயன் தந்துகொண்டு இருக்கும். மரங்களின் சிறப்புப் குறித்துநமது முன்னோர் பலபடப் பாடி வைத்துள்ளார்கள்.

 

     மனிதர்கள் தம்மை எவ்வளவு வெட்டினாலும்மரங்கள் அவர்களுக்குக் குளிர்ச்சியான நிழலைத் தந்து காக்கின்றதைப் போலஅறிவில் சிறந்த பெரியவர்கள்தாம் சாகும் அளவும் கூட ஒருவர் தமக்குத் தீங்குகளையே செய்தனரானாலும்அவரையும் தம்மால் ஆகும் அளவும் காப்பார்கள் என்று ஔவைப் பிராட்டியார் "மூதுரை"என்னும் நூலில் அறிவுறுத்தி உள்ளார்.

 

"சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை

ஆம்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்

குறைக்குந் தனையும் குளிர்நிழலைத் தந்து

மறைக்குமாம் கண்டீர் மரம்".

 

இதன் பொருள் ---

 

     மரங்களானவைமனிதர்கள் தம்மை வெட்டுமளவும்அவருக்கும் குளிர்ச்சியாகிய நிழலைக் கொடுத்து வெயிலை மறைக்கும். அதுபோல,அறிவுடையவர்தாம் இறந்து போகுமளவும்பிறர் தமக்குத் தீங்குகளையே செய்தாராயினும்அவரை வெறுக்காதுஅவரையும் தம்மால் முடிந்த அளவு காப்பார்கள்.

 

    அறிவுடையவர், தமக்குத் தீங்கு செய்வோருக்கும் நன்மையே செய்வார் என்பது கருத்து. அத்தகு பண்பு உள்ளத்தில் விளங்காமல் மரத்தை மட்டும் நடுவதில் என்ன பயன்?

 

    படிக்காசுப் பலவர் பாடிய பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்"என்னும் நூலில் ஒரு பாடல்..

 

ஞாலம்உறு நல்லவர்க்குச் செல்வம் வந்தால்

    எல்லவர்க்கும் நாவ லோர்க்கும்

காலம் அறிந்து அருமையுடன் பெருமை அறிந்து

    உதவிசெய்து கனமே செய்வார்,

மால்அறியாத் தண்டலைநீள் நெறியாரே,

    அவரிடத்தே வருவார் யாரும்,

ஆலமரம் பழுத்தவுடன்பறவையின்பால்

    சீட்டு எவரே அனுப்பு வாரே.

 

இதன் பொருள் ---

 

    திருமாலால் அறிய முடியாதவரும்திருத்தண்டலை நீள்நெறி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருப்பவரும் ஆகிய சிவபெருமானேஉலகத்திலே நல்லவர்களுக்குச் செல்வம் வந்தால்எல்லோர்க்கும்கற்றறிந்தவர்க்கும்அவருக்குத் தேவைப்படும் காலம் அறிந்தும்அவருடைய பெருமையை அறிந்தும் உதவி செய்து பெருமைப்பட வாழ்வார்கள். அப்படிப்பட்ட செல்வர்களிடத்தே எல்லாரும் வருவார்கள். எப்படி என்றால்ஆலமரம் பழுத்தவுடன்,பறவைகளுக்கு யாரும் சீட்டு எழுதி அனுப்புவதில்லையே.

 

    செல்வம் படைத்தவர்கள், அது இல்லாதவர்களைத் தேடி உதவுவார்கள். 

 

    "நாலடியார்"சொல்லும் செய்தி... 

 

     பலராலும் விரும்பப்படும் வள்ளல்கள்ஊரின் நடுவிலே சுற்றிலும் திண்ணை அல்லது மேடையோடு கூடிய காய்த்த பனைமரத்தை ஒப்பர். காய்த்த பனையானது பெண்பனை என்று சொல்லப்படும். தமக்கு செல்வம் நிறைந்துள்ள போதும் ஒருவருக்கும் கொடுத்து உண்ணாத மக்கள்சுடுகாட்டில் உள்ள காய்க்காத பனைமரம் போல்வர். காய்க்காத பனையை ஆண்பனை என்பர்.

 

"நடுவூருள் வேதிகை சுற்றுக் கோள் புக்க

படுபனை அன்னர் பலர்நச்ச வாழ்வார்,

குடிகொழித்தக் கண்ணும் கொடுத்து உண்ணா மாக்கள்

இடுகாட்டுள் ஏற்றைப் பனை".                --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     ஊருக்குள்ளே ஓர் உயர்ந்த இடத்தில்எல்லோரும் வந்து பயன் பெறுமாறு காய்த்துக் குலுங்கும் பயனுடைய பெண்பனை போன்றவர்கள்பலரும் தம்மை விரும்பி வந்து பயன் பெறும்படி,பிறர்க்கு உதவி புரிந்து வாழுகின்ற பெரியவர்கள். அப்படி இல்லாதுமிகப் பெரிய செல்வச் செழிப்பில் இருந்தும்பிறருக்கு உதவி வாழாதவர்கள்ஒருவருக்கும் பயன்படாது ஊருக்கு வெளியே சுடுகாட்டில் இருக்கும் வெற்றுப் (ஆண்) பனைமரம் போன்றவர்கள்.

 

     இதனை,இருவேறு திருக்குறள்பாக்களால் திருவள்ளுவ நாயனார் காட்டி அருளினார்.

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்து அற்றால்,செல்வம்
நயன் உடையான்கண் படின்.

இதன் பொருள் --- இரக்கம்தயவுமுதலியநற்குணங்கள்பொருந்தியஒருவனிடம்செல்வம்திரண்டுஇருந்தால்,அதுபழங்கள்தருகின்றபயனுள்ளமரம்ஒன்றுஊரின்உள்ளேபழுத்தால்போன்றது.

 

நச்சப் படாதவன் செல்வம்நடு ஊருள்

நச்சு மரம் பழுத்து அற்று.

 

     இதன் பொருள் --- நற்குணங்கள் இன்மையால் ஒரு சிறிதும் பிறரால் விரும்பப்படாதவனுடைய செல்வமானதுஊரின் நடுவில் நஞ்சுமரம் ஒன்று பழுத்து இருத்தலைப் போன்றது.

 

     ஆகதான் படைத்த செல்வத்தைக் கொண்டு தாமே "வல்லாங்கு வாழலாம்" என்று எண்ணி இராதுஇல்லாதவர்க்கும் கொடுத்து உதவி,செல்வத்தால் ஆன பயனை,இறையருளாகபுண்ணியமாக மாற்றிக் கொள்வதே அறிவு உடையார் பண்பு என்பது தெளியப்படும். இப்படிப்பட்டவர்களை, "உத்தம புருடர்" என்றும் "உத்தமர்" என்றும் சொல்வார்கள். 

 

     "உத்தமம்" என்னும் சொல்லுக்குஎல்லாவற்றுள்ளும் சிறந்தது,முதன்மைமேன்மைஉயர்வுநன்மை என்று பொருள் உண்டு. உத்தமபுருடர் அல்லது உத்தமர் என்னும் சொல்லுக்குஉயர்ந்த குறிக்கோள்களை உடையவர்நன்னெறியில் ஒழுகுபவர்நற்குணம் உடையவர் என்று பொருள்.

 

     பிறர்க்கு உதவி வாழுகின்ற நல்லோரிலும்உத்தமர்மத்திமர்அதமர் உண்டு என்று வகைப்படுத்திக் கூறுகின்றது "நீதிவெண்பா"என்னும் நூல். 

 

உத்தமர்தாம் ஈயும்இடத்து ஓங்குபனை போல்வரே,

மத்திமர்தாம் தெங்குதனை மானுவரே, - முத்துஅலரும்

ஆம்கமுகு போல்வர் அதமர்அவர்களே

தேம்கதலியும் போல்வார் தேர்ந்து.

 

இதன் பொருள் ---       

 

     தமது செல்வத்தைப் பிறருக்குஅவரது குறிப்பினை அறிந்து கொடுத்தலில்தலையாயவர் ஓங்கி வளரும் பனைமரத்துக்கு ஒப்பாவார்கள். இடைப்பட்டவர்கள்தென்னை மரத்துக்கு ஒப்பாவார்கள். கடைப்பட்டவர் முத்துப் போலப் பூக்கும் பாக்கு மரத்துக்கும்இன்சுவை மிக்க பழங்களைத் தரும் வாழை மரத்துக்கும் ஒப்பாவார்கள்.

 

     (உத்தமர் --- தலையாயவர்மேலானவர். மத்திமர் --- இடைப்பட்டவர். தெங்கு --- தென்னை. மானுவர் --- ஒப்பர். அலர்தல் --- விரிதல்பூத்தல். கமுகு --- பாக்கு. அதமர் --- கடைப்பட்டவர்கீழோர். அவர்கள் --- கடைப்பட்டவர்கள் எனப்படுவோர். தேம் --- இனிமை. கதலி --- வாழை. தேர்ந்து --- ஆராய்ந்துகுறிப்பறிந்து.)

 

     பனைமரம் நீர் ஊற்றிக் காக்காமலே வளர்வது. பனங்கிழங்குபனஞ்சாறுபனையோலைபனங்காய்பனம்பழம்வயிரமுள்ள பனங்கட்டை முதலிய எல்லா உறுப்புக்களாலும் எல்லோருக்கும் பயன்படுவது.தென்னைமரம்,நீர் ஊற்றிக் காவல் காத்து வளர்த்த பின்னரே பயன்படக் கூடியது.பாக்குமரம் நெடுங்காலம் காத்து வளர்த்தால்தான் பயன் தரக் கூடியது. சிறிய பயனையே தரவல்லது.வாழைமரம் ஒருமுறைக்கு மேல் மறுமுறை குலை ஈன்று பயன் தராது. இதற்குக் காவலும் நீரும் வேண்டும்.

 

     தலையாயவர்,முன்னால் தமக்கு எந்தவிதமான உதவியும் செய்யாதவர்க்கும் போதுமான அளவு கொடுத்துப் பேருதவி செய்வர்.இடைப்பட்டவர்முன் உதவி செய்யாதவர் கேட்ட பின்பு சிறிது கொடுத்து உதவுபவர்.கடைப்பட்டவர் சிறிதே உதவி செய்வர். கைம்மாற்றை எதிர் நோக்குவர். ஒருமுறைக்கு மேல் மறுமுறை எவ்வளவு வருந்திக் கேட்டாலும் கொடுக்கமாட்டார்.

 

     "மரம் தனை வைத்தவர் நாளும் வாடாமல் தண்ணீரும் வார்ப்பர் தாமே" என்பது தண்டலையார் சதகம் சொல்லும் செய்தி. எனவேதண்ணீர் வார்த்தலும் மரம் வைத்தவரின் கடன் ஆகின்றது. வைத்த மரம் வாடாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். பெற்ற பிள்ளையைப் பேணி வளர்க்காத தாய்தந்தை உண்டா?

 

     மாமன்னர் அசோகர் போர் செய்து பலரைக் கொன்றார் என்பதை விட,அவர் சாலை ஓரங்களில் மரங்களை வைத்து வளர்க்கச் செய்தார்அதற்காக குளங்களையும் வெட்டினார் என்பதையே சரித்திரம் புகழ்கிறது. எல்லா மதங்களும் மரம் வளர்த்தலைத் தலையாய அறங்களில் ஒன்று என்று சொல்கின்றன.

 

     ஊழ்வினையை மாற்றுதற்கு உய்வினை உண்டு என்கின்றார் திருஞானசம்பந்தப் பெருமான். திருநீலகண்டத் திருப்பதிகம் நாயனாரால் அருளப் பெற்ற அருமையான திருப்பதிகம். இதில் "அவ்வினைக்கு இவ்வினை" என்பது "ஊழ்வினை" என்றும்அதனை மாற்றுதற்கு உரிய "உய்வினை" நாடாது இருப்பது நமக்கு உள்ள ஊனம் என்றும் குறித்து அருளுகின்றார். அந்த "உய்வினை" என்னவென்றால்"கைவினை" என்று வழிகாட்டுகின்றார். "கைவினை" செய்தால், "செய்வினை" நம்மை வந்து வருத்தாது என்கின்றார்.

 

பாடலைப் பார்ப்போம்.... 

 

அவ் வினைக்கு இவ் வினைஆம்” என்று சொல்லும் அஃது அறிவீர்!

உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே?

கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும்நாம் அடியோம்;

செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறாதிருநீலகண்டம்!

 

     "கைவினை" என்றால்கைகளைக் கூப்பிஇறைவனைத் தொழுவது மட்டுமாஎன்றால்இல்லை. இறைவனைத் தொழுவதோடுஇறைவன் தந்த கைகளைக் கொண்டு சமுதாயப் பணியும் செய்ய வேண்டும் என்கின்றார்.

     

"காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்

ஏவினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இருபொழுதும்

பூவினைக் கொய்து மலரடி போற்றுதும்நாம் அடியோம்

தீவினை வந்நு எமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்"

 

இதன் பொருள் ---

 

     நாம் இறைவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோநந்தவனம் சோலை முதலியவற்றை வளர்த்தும்,குளங்கள் பல தோண்டியும்,நல்லறங்கள் பலவற்றைச் செய்துகனிந்த மனத்தோடு `கணை ஒன்னிறால் முப்புரங்களை எரித்தவனேஎன்று காலை மாலை இருபொழுதும் பூக்களைக் கொய்து வந்து அணிவித்துச் சிவபிரானுடைய மலர்போலும் திருவடிகளைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் கொடிய பழவினைகள் நம்மைத் தீண்ட மாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.

 

     "எவ்வுயிரும் தன் உயிர்போல் எண்ணி இரங்கவும் நின் தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே" என்பார் தாயுமான அடிகளார். உயிர்கள் அவைகளது அறிவு நிலையில் ஆறு என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளன. ஓரறிவு உள்ள தாவரம் தொடங்கி ஆறு அறிவு உள்ள மனிதன் வரை யாவும் ஏகதேசம் உயிர்களே. "எல்லா உயிரும் பொது" என்றார் வள்ளல்பெருமான். "பொது" என்றால் திருச்சபைதிருச்சிறம்பலம் என்று பொருள்படும். எல்லா உயிர்களும் இறைவன் திருநடனம் புரிகின்ற இடம். 

 

     நமது முன்னோர்கள் தாம் வாழும் இடங்களைச் சுற்றியும்ஊர்ப் பொது இடங்களிலும்திருக்கோயில்களை ஒட்டியும் மரம்,செடிகொடிகளை வைத்துச் சாலைகளை உருவாக்கினர். தூரத்தே தெரிகின்ற வானுற வளர்ந்த சோலைகளை வைத்தேஇது இந்த ஊர் என்று சொல்லிவிடும் அளவுக்குநமது முன்னோர் ஆற்றிய சமுதாயப் பணி அமைந்து இருந்தது.

 

     திருஞானசம்பந்தர்தில்லையில் இருந்து புறப்பட்டுதிருஎருக்கத்தம்புலியூர் அருகில் சென்றபோதுதிருநீலகண்ட யாழ்ப்பாணர்திருஞானசம்பந்தரை வணங்கி, "கார் நெருங்கு சோலை சூழ் இப்பதி அடியனேன் பதி" என்று கூறினார் என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் பாடியதன் மூலம் இந்த உண்மை விளங்கும். திருநாவக்கரசு நாயனாரும்தமது இளமைக் காலத்தில் இப்படிப்பட்ட சமுதாயப் பணிகளை ஆற்றிக் கொண்டுகடமை தவாறமல் வாழ்ந்துகொண்டு இருந்தார் என்கின்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.

 

"கா வளர்த்தும்,குளம் தொட்டும்கடப்பாடு வழுவாமல்

மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்து அளித்தும்,விருந்து அளித்தும்,

நாவலர்க்கு வளம்பெருக நல்கியும்நால் நிலத்து உள்ளோர்

யாவருக்கும் தவிராத  ஈகைவினைத் துறைநின்றார்".

 

இதன் பொருள் ---

 

     பூஞ்சோலைகளை வளர்த்தும்குளங்களைத் தோண்டியும்நேர்மையில் தவறாது ஒழுகி வருவார்க்கு வேண்டும் பொருள்களைத் தந்தும்விருந்தினரைப் பேணியும்நாவலர்களுக்கு வளம் பெருகுமாறு செல்வம் முதலியவற்றைக் கொடுத்தும்இன்னும் இவ்வுலகில் உள்ளார் யாவர்க்கும் பாகுபாடின்றித் தவிராத ஈகைச் செயலில் காணும் துறைதொறும் ஒழுகி மாறாது நின்றார்.

 

     ஒரு சிவனடியார் இன்னொரு சிவனடியாருக்குத் தான் உதவ வேண்டும் என்று எண்ணுதல் கூடாது என்பதை அறிவுறுத்த "யாவருக்கும் தவிராத ஈகை வினை" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.

 

     மனிதன் வாழும் காலத்தில் ஆற்றவேண்டிய நல்லறங்கள் இவை என்பதால்,அவ்வாறு செய்து வந்தார் என்றும்  காரணத்தைக் கூறுகின்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.

 

"மாசுஇல் மனத் துயர்ஒழிய மருணீக்கி யார்நிரம்பித்

தேசநெறி நிலையாமை கண்டுஅறங்கள் செய்வாராய்க்

காசினிமேல் புகழ்விளங்க நிதிஅளித்துக் கருணையினால்

ஆசுஇல்அறச் சாலைகளும் தண்ணீர்ப்பந் தரும்அமைப்பார்".

 

இதன் பொருள் ---

 

     குற்றமற்ற தம் உள்ளத்தின் துன்பம் நீங்கபின் மருணீக்கியார் (திருநாவுக்கரசர்) வயது நிரம்பி வளர்ச்சி பெற்ற அளவில்உலக வாழ்க்கை நிலையாமையுடையது என்பதை உணர்ந்துஅறங்களைச் செய்வாராய்உலகில் புகழ் விளங்குமாறு செல்வத்தைத் தந்துகுற்றமற்ற அறச்சாலைகளையும் தண்ணீர்ப் பந்தலையும் அருளுடன் அமைப்பாராகி.

 

     நிலையாமை உடைய உடம்பைக் கொண்டுநிலையாமை உடையஉலகில் நாம் வாழும் காலத்தில்உயிருக்கு உறுதியைத் தருகின்ற நிலையான அறங்களைச் செய்து வருதல் வேண்டும். மக்களில் பலர் அறம் செய்வது பற்றி நினைக்கவும் இல்லை என்கின்றார் திருமூல நாயனார்.

 

"ஒழிந்தன காலங்கள்,ஊழியும் போயின,

கழிந்தன கற்பனை,நாளுங் குறுகிப்

பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை

அழிந்தன கண்டும் அறம்அறி யாரே".   --- திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     உலகில் பல்லுயிர்கட்கும் அவை வாழுங் காலம் நிலைபெறாது ஒழிதலையும்உலகம் நிலைபெறும் காலமாகிய ஊழிகளும் நில்லாது பல நீங்குதலையும்தாம் எண்ணிய எண்ணங்களும் கைகூடாது கனவுபோலக் கழிந்து ஒழிதலையும்பசி பிணி பகை முதலியவற்றால் பெருந் துன்பத்தை எய்துகின்ற தங்கள் உடம்பும் இறுதி நாள் நெருங்கசாறு பிழியப்பட்ட கரும்பின் கோது போலாகிவலி அழிதலையும் கண்டு வைத்தும் மக்களில் பலர் அறத்தைச் செய்ய நினைப்பதில்லை.

 

     அறம் செய்யாதவர்அறியாமை மிகுதி உடையவர் என்கின்றார் திருமூல நாயனார். அறம் செய்யாது போனால்நரகத்தில் நிற்க வேண்டி வரும் என்கின்றார்.

 

"பரவப் படுவான் பரமனை ஏத்தீர்

இரவலர்க் கீதலை யாயினும் ஈயீர்

கரகத்தால் நீர் அட்டிக் காவை வளர்க்கீர்

நரகத்தில் நிற்றிரோ நாள்எஞ்சி னீரே". --- திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     வாழ்நாள் வாளா குறையப்பெற்ற மக்களேநீங்கள் யாவராலும் போற்றப்படுகின்ற சிவபெருமானைத் துதிக்கவும் இல்லை;இரப்பார்க்கு ஈதலும் இல்லைகுடத்தால் நீர் முகந்து ஊற்றிச் சோலைகளை வளர்க்கவும் இல்லை;ஆகவேஇறந்த பின் நரகத்தில் நீங்காதிருக்கப் போகின்றீர்களோ?

 

     "தானே மரங்களை வைத்தாயினும்முன்பு உள்ள மரங்கட்கு நீர் ஊற்றியாயினும் வளர்த்தலே அறம்என்பதால் "கரகத்தால் நீர் அட்டிஎன்றார். இக்காலத்தார் இவற்றைச் செய்யாது ஒழிந்தாலும்,வளர்ந்துள்ள மரங்களை வெட்டாமலேனும் இருப்பார்களா என்பது தெரியவில்லை.

 

     ஆமரம் வைத்தல் என்பது ஒரு சடங்கு அல்ல. வைத்த மரத்தை வளர்க்க வழி இருந்தால் ஒழியமரம் நடுதல் கூடாது.  சாலை ஓரங்களில் மரங்களை வைத்து வளர்த்த பெருமை நமது முன்னோர்களுக்கு உண்டு. இதன் விளைவாகச் சாலைகள் மழையால் அரிக்கப்படாமல் இருந்தன. சாலையில் செல்வோருக்கும்வண்டிகளை இழுத்துச் செல்லும் மாடுகளுக்கும் குளிர்ச்சியான நல்ல நிழல் கிடைத்தது. பறவைகள் தங்கி இளைப்பாறவும் வாய்ப்பாக இருந்த்து. பறவைகளுக்குத் தேவையான கனி முதலிய உணவுப் பொருள்கள் மரங்கள் கொடுத்தன. இன்றைய விஞ்ஞான உண்மைகளை எல்லாம்தெய்வீகக் கோட்பாடுகளில் அடக்கிநமது முன்னோர்மரங்களின் பயனை நன்கு உணர்ந்துஅவற்றை வைத்து வளர்த்ததோடுஅவற்றுக்குத் தெய்வத் தன்மையையும் கூட்டிப் போற்றினர்.

 

     எனவேநாம் வளரநமது சமுதாயம் வளரமரம் நடுவதோடு அவற்றை வளர்க்கவும் வகை செய்யவேண்டும். வளர்க்க வழிவகை இல்லாத நிலையில் மரத்தை நடுவது பாவம். இருக்கின்ற மரங்களைப் பாதுகாப்போம். தன்னலம் கருதிமுன்னோர் செய்து வைத்த நல்லறங்களைச் சிதைத்துப் பாவத்தை ஈட்டிக் கொள்ள வேண்டாம்.

 

     மரம் நடுவது ஒரு தெய்வீகப் பணியாகக் கருதப்படவேண்டும். மரம் வளர்ப்பதைப் போன்ற சிறந்த நல்லறம் ஏதும் இல்லை என்பதும்அவ்வாறு செய்ய வாய்ப்பு இருந்தும் செய்யத் தவறியவர் நரகத்தில் புகுவது உண்மை என்றும் திருமூலர் கூற்றால் அறிந்தோம்.

 

     தாவிப் படரக் கொழுகொம்பு இல்லாமல் தவித்த முல்லைக் கொடிக்குத் தனது தேரையே தந்தார் பாரிவள்ளல். "வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம் வாடினேன்" என்றார் வள்ளல் பெருமான். வாடுகின்ற மரம்செடிகொடிகளைக் கண்டால் நீர் ஊற்றி வளர்க்க முயலவேண்டும்.

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...