அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
விட்ட புழுகுபனி (பொது)
முருகா!
விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.
தத்த தனதனன தானத் தான
தத்த தனதனன தானத் தான
தத்த தனதனன தானத் தானத் ...... தனதான
விட்ட புழுகுபனி நீர்கத் தூரி
மொய்த்த பரிமளப டீரச் சேறு
மிக்க முலையைவிலை கூறிக் காசுக் ...... களவேதான்
மெத்த விரியுமலர் சேர்கற் பூர
மெத்தை மிசைகலவி யாசைப் பாடு
விற்கு மகளிர்சுரு ளோலைக் கோலக் ......குழையோடே
முட்டி யிலகுகுமிழ் தாவிக் காமன்
விட்ட பகழிதனை யோடிச் சாடி
மொய்க்கு மளியதனை வேலைச் சேலைக் ......கயல்மீனை
முக்கி யமனையட மீறிச் சீறு
மைக்கண் விழிவலையி லேபட் டோடி
முட்ட வினையன்மரு ளாகிப் போகக் ...... கடவேனோ
செட்டி யெனுமொர்திரு நாமக் கார
வெற்றி யயில்தொடுப்ர தாபக் கார
திக்கை யுலகைவல மாகப் போகிக் ...... கணமீளுஞ்
சித்ர குலகலப வாசிக் கார
தத்து மகரசல கோபக் கார
செச்சை புனையுமண வாளக் கோலத் ...... திருமார்பா
துட்ட நிருதர்பதி சூறைக் கார
செப்பு மமரர்பதி காவற் கார
துப்பு முகபடக போலத் தானக் ...... களிறூரும்
சொர்க்க கனதளவி நோதக் கார
முத்தி விதரணவு தாரக் கார
சுத்த மறவர்மகள் வேளைக் காரப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
விட்ட புழுகு, பனிநீர், கத்தூரி,
மொய்த்த பரிமள படீரச் சேறு
மிக்க முலையை, விலை கூறிக் காசுக்கு ......அளவேதான்,
மெத்த விரியும் மலர் சேர் கற்பூர
மெத்தை மிசை, கலவி ஆசைப் பாடு
விற்கும் மகளிர் சுருள் ஓலைக் கோலக் ......குழையோடே,
முட்டி இலகு குமிழ் தாவிக் காமன்
விட்ட பகழி தனை ஓடிச் சாடி,
மொய்க்கும் அளி அதனை, வேலைச் சேலைக்...கயல்மீனை
முக்கி, யமனை அட மீறிச் சீறு
மைக்கண் விழிவலையிலே பட்டு ஓடி,
முட்ட வினையன், மருள் ஆகிப் போகக் ......கடவேனோ?
செட்டி எனும் ஓர் திரு நாமக் கார!
வெற்றி அயில் தொடு ப்ரதாபக் கார!
திக்கை உலகை வலமாகப் போகி, ......கணம் மீளும்
சித்ர குல கலப வாசிக் கார!
தத்து மகரசல கோபக் கார!
செச்சை புனையும் மணவாளக் கோலத் ......திருமார்பா!
துட்ட நிருதர் பதி சூறைக் கார!
செப்பும் அமரர்பதி காவல் கார!
துப்பு முகபட கபோலத் தானக் ...... களிறு ஊரும்,
சொர்க்க கனதள விநோதக் கார!
முத்தி விதரண உதாரக் கார!
சுத்த மறவர்மகள் வேளைக் காரப் ...... பெருமாளே.
பதவுரை
செட்டி எனும் ஒர் திரு நாமக்கார---செட்டி என்னும் ஒப்பற்ற திருப்பெயரைக் கொண்டவரே!
வெற்றி அயில் தொடு ப்ரதாபக்கார--- வெற்றி வேலைச் செலுத்தும் புகழாளா!
திக்கை உலகை வலமாகப் போகிக் கணம் மீளும் சித்ர குல கலப வாசிக்கார--- உலக முழுதையும் வலமாகச் சென்று மீண்ட குதிரையாகிய அழகிய தோகையினை உடைய மயில்வாகனரே!
தத்து மகர சல கோபக்கார---அலைகள் புரளுவதும் மகர மீன்கள் உலவுவதுமான கடலைக் கோபித்தவரே!
செச்சை புனையும் மணவாளக் கோலத் திருமார்பா--- வெட்சி மாலையினை அணியும் மணவாளக் கோலத்தை உடைய திருமார்பினை உடையவரே!
துட்ட நிருதர் பதி சூறைக்கார--- துட்ட அரக்கரகளுக்குத் தலைவனாகிய சூரபதுமனை அழித்தவரே!
செப்பும் அமரர்பதி காவற்கார--- தேவரீரைப் புகழ்ந்து போற்றுகின்ற தேவலோகத்துக்குக் காவல்காரரே!
துப்பு முகபட கபோலத் தான களிறு ஊரும் --- அழகிய முகபடாத்தை உடையதும் கபோலமதம் ஊற்றெடுக்கின்றதும் ஆகிய அயிராவதம் என்னும் யானை உலவுகின்ற,
சொர்க்க கனதள விநோதக்கார--- சுவர்க்க உலகம் வியக்கின்றவரே!
முத்தி விதரண உதாரக்கார--- உயிர்களுக்கு முத்திப் பேற்றினை வழங்கும் வள்ளலே!
சுத்த மறவர் மகள் வேளைக்கார பெருமாளே--- தூய வேடர்களின் திருமகளாகிய வள்ளிநாயகியாரோடு போது போக்கிக் களித்த பெருமையில் மிக்கவரே!
விட்ட புழுகு--- விட்டுக் கலந்த புனுகு,
பனி நீர்--- பனிநீர்,
கத்தூரி மொய்த்த பரிமள படீரச் சேறு மிக்க முலையை விலை கூறி ---கத்தூரி ஆகியவை சேர்ந்த நறுமணம் உள்ள சந்தனக் குழம்பினை நிரம்ப அப்பியுள்ள முலைக்கு விலை பேசி,
காசுக்கு அளவே தான் மெத்த விரியு(ம்)--- கொடுக்கின்ற பொருளின் அளவுக்குத் தக்கவாறு நன்றாக விரிக்கப்பட்ட
மலர் சேர் கற்பூர மெத்தை மிசை--- மலர்கள் பரப்பிய, கற்பூர மணம் கொண்ட மெத்தையின் மீது,
கலவி ஆசைப்பாடு விற்கும் மகளிர் --- கலவி இன்பத்தை விற்கின்ற பொதுமகளிரின்,
சுருள் ஓலைக் கோலக் குழையோடே முட்டி--- சுருண்ட காதோலையையும் அழகிய குண்டலங்களையும் தாக்கி,
இலகு குமிழ் தாவி--- விளங்குகின்ற குமிழம் பூ போன்ற மூக்கைத் தாண்டி,
காமன் விட்ட பகழி தனை ஓடிச் சாடி--- காமன் விடுகின்ற மலர்க்கணைகளை ஓடி அழித்து,
மொய்க்கும் அளி அதனை --- மொய்க்கின்ற வண்டுகளையும்,
வேலை--- வேலையும்,
சேலை --- சேல் மீனையும்,
கயல் மீனை முக்கி--- கயல் மீனையும் கீழ்ப்படச் செய்து,
யமனை அட மீறிச் சீறும் மைக் கண் விழி வலையிலே பட்டு ஓடி ---கொல்லும் திறத்தில் மிக்க இயமனும் வருந்தும்படி மேம்பட்டுச் சீறி விளங்கும் மை தீட்டப்பட்ட கண் பார்வையின் வலையில் பட்டு அறிவு கெட்டு ஓடிய
முட்ட வினையன் --- தீவினைக்கு இடமான அடியேன்,
மருள் ஆகிப் போகக் கடவேனோ--- அறிவு மயக்கத்தால் அழிந்து போவேனோ?
பொழிப்புரை
செட்டி என்னும் ஒப்பற்ற திருப்பெயரைக் கொண்டவரே!
வெற்றி வேலைச் செலுத்தும் புகழாளா!
உலக முழுதையும் வலமாகச் சென்று மீண்ட குதிரையாகிய அழகிய தோகையினை உடைய மயில்வாகனரே!
அலைகள் புரளுவதும் மகர மீன்கள் உலவுவதுமான கடலைக் கோபித்தவரே!
வெட்சி மாலையினை அணியும் மணவாளக் கோலத்தை உடைய திருமார்பினை உடையவரே!
துட்ட அரக்கரகளுக்குத் தலைவனாகிய சூரபதுமனை அழித்தவரே!
தேவரீரைப் புகழ்ந்து போற்றுகின்ற தேவலோகத்துக்குக் காவல்காரரே!
அழகிய முகபடாத்தை உடையதும் கபோலமதம் ஊற்றெடுக்கின்றதும் ஆகிய அயிராவதம் என்னும் யானை உலவுகின்றசுவர்க்க உலகம் வியக்கின்றவரே!
உயிர்களுக்கு முத்திப் பேற்றினை வழங்கும் வள்ளலே!
தூய வேடர்களின் திருமகளாகிய வள்ளிநாயகியாரோடு போது போக்கிக் களித்த பெருமையில் மிக்கவரே!
விட்டுக் கலந்த புனுகு, பனிநீர், கத்தூரி ஆகியவை சேர்ந்த நறுமணம் உள்ள சந்தனக் குழம்பினை நிரம்ப அப்பியுள்ள முலைக்கு விலை பேசி, கொடுக்கின்ற பொருளின் அளவுக்குத் தக்கவாறு நன்றாக விரிக்கப்பட்டமலர்கள் பரப்பிய, கற்பூர மணம் கொண்ட மெத்தையின் மீது கலவி இன்பத்தை விற்கின்ற பொதுமகளிரின், சுருண்ட காதோலையையும் அழகிய குண்டலங்களையும் தாக்கி, விளங்குகின்ற குமிழம் பூ போன்ற மூக்கைத் தாண்டி, காமன் விடுகின்ற மலர்க்கணைகளை ஓடி அழித்து,மொய்க்கின்ற வண்டுகளையும்,
வேலையும், சேல் மீனையும், கயல் மீனையும் கீழ்ப்படச் செய்து, கொல்லும் திறத்தில் மிக்க இயமனும் வருந்தும்படி மேம்பட்டுச் சீறி விளங்கும் மை தீட்டப்பட்ட கண் பார்வையின் வலையில் பட்டு அறிவு கெட்டு ஓடிய தீவினைக்கு இடமான அடியேன்அறிவு மயக்கத்தால் அழிந்து போவேனோ?
விரிவுரை
பரிமள படீரச் சேறு மிக்க முலையை விலை கூறி ---
பரிமளம் --- நறுமணம்.
பாடீரம் --- சந்தனம். பாடீர சேறு --- சந்தனக் குழம்பு.
முலைவிலை கூறுதல் என்பது அகத்துறையில் சொல்லப்பட்டு உள்ளது.
விலைமாதர் தாம் தருகின்ற இன்பத்துக்குத் தக்க பொருளை வேண்டுவர். அது முலையை விலை கூறுதல் என்று சொல்லப்பட்டது. பிறிதோர் திருப்புகழிலும் முலைவிலை கூறுதல் பற்றி அடிகளார் குறித்துள்ளமை காண்க.
மேகம் ஒத்த குழலார், சிலைப் புருவ,
வாளி ஒத்த விழியார், முகக் கமலம்
மீது பொட்டுஇடு, அழகார் களத்தில் அணி......வடம்ஆட
மேரு ஒத்த முலையார், பளப்பள என
மார்பு துத்தி புயவார், வளைக் கடகம்
வீறு இடத் துவளும் நூலொடு ஒத்த இடை ......உடை மாதர்,
தோகை பட்சி நடையார், பதத்தில் இடு
நூபுரக் குரல்கள் பாட, அகத் துகில்கள்
சோர, நல் தெருவுடே நடித்து, முலை ......விலைகூறி,
சூதகச் சரசமோடெ எத்தி, வரு-
வோரை நத்தி, விழியால் மருட்டி, மயல்
தூள் மருத்து இடு உயிரே பறிப்பவர்கள்......உறவாமோ? --- திருப்புகழ்.
காசுக்கு அளவே தான் மெத்த விரியு(ம்) மலர் சேர் கற்பூர மெத்தை மிசை கலவி ஆசைப்பாடு விற்கும் மகளிர்---
தன்னை நாடி வருகின்ற காமுகர்கள் கொடுக்கின்ற பொருளின் அளவுக்கு ஏற்ப தமது கலவிச் சுகத்தை விற்கின்றவர்கள் விலைமாதர்கள்.
சுருள் ஓலைக் கோலக் குழையோடே முட்டி---
சுருட்டி காதில் அணிந்துள்ள காதோலையையும் தாக்குகின்ற அளவுக்கு பெண்களின் கண்கள் நீண்டு இருப்பதைக் குறிக்கும்.
காமன் விட்ட பகழி தனை ஓடிச் சாடி---
காமன் விடுக்கின்ற மலர்க் கணைகள் காம உணர்வைது தூண்டுவன. அந்த மலர்க் கணைகளை விட விரைவாக காம இச்சையை உண்டாக்குவன விலைமகளிரின் கண்கள்.
மொய்க்கும் அளி அதனை, வேலை, சேலை. கயல் மீனை முக்கி ---
அளி - வண்டு. பெண்களின் கண்களை கருவண்டுக்கு ஒப்பிடுவது மரபு.
வேலைப் போலக் கூர்மையான பார்வையினை உடையவை பெண்களின் கண்கள். அவை காமுகரின் உள்ளத்தில் வேகமாகச் சென்று தைக்கும்.
சேல், கயல் என்பவை மீன் வகைகள். மீனைப் போன்ற கண்கள். இங்கும் அங்குமாக ஓடிக் கொண்டே இருப்பதால், கண்களை மீன் என்றார்.
யமனை அட மீறிச் சீறும் மைக்கண் விழி வலையிலே பட்டு ஓடி ---
கோபமாக வந்து உயிர்களைக் கொன்று செல்பவன் இயமன். இயமனையே சீறும் அளவுக்கு மை தீட்டப்பட்ட பெண்களின் கண்பார்வையில் பட்டு அவதிப்படுபவர் காமுகர்.
இதனை அடிகளார் பிறிதோர் திருப்புகழில் அழகாகப் பாடியுள்ளார்.
மகரம் அது கெட இரு குமிழ் அடைசி
வார்ஆர் சரங்கள் ...... எனநீளும்
மதர்விழி வலைகொடு,உலகினில் மனிதர்
வாழ்நாள் அடங்க ...... வருவார்தம்,
பகர்தரு மொழியில்,ம்ருகமத களப
பாடீர கும்ப ...... மிசை வாவிப்
படி மனது, உனது பரிபுர சரண
பாதார விந்தம் ...... நினையாதோ? --- திருப்புகழ்.
விலைமாதர்கள் தமது கண் வலையை வீசியும், சொல் வலையை வீசியும் காமுகரைத் தன்வசப் படுத்துவார்கள்.
பெண்களின் எழிலானது ஆடவரின் உள்ளத்தை மயக்கும். அவர் தரும் இன்பத்திற்காக உள்ளமானது ஏங்கி வருந்தும். இது இறுதியில் துன்பத்திற்கே ஏதுவாகும்.
இந்த மயக்கத்தினால் வரும் துன்பமானது தீரவேண்டுமானால், அதற்கு ஒரே வழி, இறையருள் பெற்ற அடியார்களின் திருக்கூட்டத்தில் இருப்பது தான். பெண்மயலானது எப்பேர்ப் பட்டவரையும் விட்டு வைத்தது இல்லை.
"துறந்தோர் உளத்தை வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு இளைத்துத் தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே" என்று முருகப் பெருமானிடம் அருணையடிகள் கந்தர் அலங்காரத்தில் முறையிடுகின்றார்.
உலகப் பற்றுக்களை நீத்து, இறைவனது திருவடியைச் சார, பெருந்தவம் புரியும் முனிவரும் விலைமாதரின் அழகைக் கண்டு மனம் திகைப்பு எய்தி, அவர் தரும் இன்பத்தை நாடி வருகின்ற மான் போன்றவர்கள் விலைமாதர்கள். விலைமாதரின் மான் போலும் மருண்ட பார்வையானது துறந்தோர் உள்ளத்தையும் மயக்கும்.
துறவிகளுடைய உள்ளமும் நினைந்து நினைந்து உருகி வருந்துமாறு, பொதுமகளிர் நகைத்து கண்பார்வையால் வளைத்துப் பிடிப்பர்.
கிளைத்துப் புறப்பட்ட சூர் மார்பு உடன் கிரி ஊடுருவத்
தொளைத்துப் புறப்பட்ட வேல் கந்தனே! துறந்தோர் உளத்தை
வளைத்துப் பிடித்து, பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு
இளைத்து,தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே?
--- கந்தர் அலங்காரம்.
வேனில்வேள் மலர்க்கணைக்கும், வெண்ணகைச் செவ்வாய், கரிய
பானலார் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ்நெஞ்சே!
ஊன்எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான், இன்றுபோய்
வானுளான் காணாய், நீ மாளா வாழ்கின்றாயே. --- திருவாசகம்.
அரிசன வாடைச் சேர்வை குளித்து,
பலவித கோலச் சேலை உடுத்திட்டு,
அலர்குழல் ஓதிக் கோதி முடித்துச் ...... சுருளோடே
அமர்பொரு காதுக்கு ஓலை திருத்தி,
திருநுதல் நீவி,பாளித பொட்டு இட்டு,
அகில் புழுகு ஆரச் சேறு தனத்துஇட்டு,...... அலர்வேளின்
சுரத விநோதப் பார்வை மை இட்டு,
தருண கலாரத் தோடை தரித்து,
தொழில்இடு தோளுக்கு ஏற வரித்திட்டு,.....இளைஞோர்மார்,
துறவினர் சோரச் சோர நகைத்து,
பொருள்கவர் மாதர்க்கு ஆசை அளித்தல்
துயர் அறவே, பொன் பாதம் எனக்குத் ...... தருவாயே. --- திருப்புகழ்.
மாயா சொரூப முழுச் சமத்திகள்,
ஓயா உபாய மனப் பசப்பிகள்,
வாழ்நாளை ஈரும் விழிக் கடைச்சிகள்,......முநிவோரும்
மால்ஆகி வாட நகைத்து உருக்கிகள்,
ஏகாசம் மீது தனத் திறப்பிகள்,
'வாரீர் இரீர்'என் முழுப் புரட்டிகள்,...... வெகுமோகம்
ஆயாத ஆசை எழுப்பும் எத்திகள்,
ஈயாத போதில் அறப் பிணக்கிகள்,
ஆவேச நீர் உண் மதப் பொறிச்சிகள்,...... பழிபாவம்
ஆமாறு எணாத திருட்டு மட்டைகள்,
கோமாளம் ஆன குறிக் கழுத்திகள்,
ஆசார ஈன விலைத் தனத்தியர்,...... உறவுஆமோ? --- திருப்புகழ்.
பெண்ஆகி வந்து,ஒரு மாயப் பிசாசம் பிடுத்திட்டு, என்னை
கண்ணால் வெருட்டி, முலையால் மயக்கி, கடிதடத்துப்
புண்ஆம் குழியிடைத் தள்ளி, என் போதப் பொருள் பறிக்க,
எண்ணாது உனை மறந்தேன் இறைவா! கச்சி ஏகம்பனே!
சீறும் வினை அது பெண் உருவாகி, திரண்டு உருண்டு
கூறும் முலையும் இறைச்சியும் ஆகி, கொடுமையினால்,
பீறு மலமும், உதிரமும் சாயும் பெருங்குழி விட்டு
ஏறும் கரை கண்டிலேன், இறைவா! கச்சி ஏகம்பனே! --- பட்டினத்தார்.
பால்என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர்கண்
சேல் என்பதாகத் திரிகின்ற நீ, செந்திலோன் திருக்கை
வேல்என்கிலை,கொற்றமயூரம் என்கிலை, வெட்சித்தண்டைக்
கால் என்கிலை, நெஞ்சமே! எங்ஙனே முத்தி காண்பதுவே?. --- கந்தர் அலங்காரம்.
மண்காட்டிப் பொன்காட்டி மாயஇருள் காட்டிச்
செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்,
கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கி,மிக
அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே.--- பட்டினத்தார்.
மாதர் யமனாம், அவர்தம் மைவிழியே வன்பாசம்,
பீதிதரும் அல்குல் பெருநகரம், - ஓதில்அதில்
வீழ்ந்தோர்க்கும் ஏற விரகுஇல்லை,போரூரைத்
தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு.---திருப்போரூர்ச் சந்நிதி முறை.
விசுவாமித்திரர் மேனகையைக் கண்டு மயங்கினார். பல காலம் செய்த தவம் அழிந்து குன்றினார்.
காசிபர் மாயையைக் கண்டு மருண்டார்.
ஆனால், இவை சிவனருள் இன்றி நிற்கும் முனிவருக்கு உரியவை. காமனை எரித்த கண்ணுதற் கடவுளைக் கருத்தில் இருத்திய நற்றவரைப் பொது மகளிர் மயக்க இயலாது.
திருப்பூம்புகலூரில் உழவாரத் தொண்டு செய்து கொண்டிருந்தார் அப்பர் பெருமான். அப்போது அரம்பை முதலிய வான மாதர்கள் வந்து அவர் முன்னே,
ஆடுவார் பாடுவார் அலர்மாரி மேற்பொழிவார்
கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடைநுடங்க
ஓடுவார் மாரவே ளுடன்மீள்வர்; ஒளிபெருக
நீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார்.--- பெரியபுராணம்.
இந்த சாகச வித்தைகளைக் கண்ட அப்பர் பெருமானுடைய மனம் ஒருசிறிதும் சலனம் அடையவில்லை. “உமக்கு இங்கு என்ன வேலை? போமின்” என்று அருளிச் செய்தார்.
ஆதலால் சிவனடியார்கள் காதலால் மயங்க மாட்டார்கள் என்பதை அறிக.
முட்ட வினையன் ---
முட்ட --- முழுதும், நிரம்பவும்.
வினையன் என்பது இங்கே தீவினையைக் குறிக்கும்.
மருள் ஆகிப் போகக் கடவேனோ---
மருள் --- மயக்கம். அறிவு மயக்கத்தைக் குறிக்கும்.
செட்டி எனும் ஒர் திரு நாமக்கார---
முருகப் பெருமானுக்கு "செட்டி" என்ற ஒரு பெயர் உண்டு.
முருகவேள் வள்ளிபிராட்டியைக் காத்தருளும் பொருட்டு வளையல் செட்டியாராக வனம் போனார். "காதலால் கடல் சூர் தடிந்திட்ட செட்டி அப்பனை, பட்டனை, செல்வஆரூரானை மறக்கலும் ஆமே”என்று சுந்தரமூர்த்தி நாயனாரும் கூறுகின்றார்.
கடலிலே மரமாக எழுந்திட்ட சூரனைத் தடிந்த செட்டி ஆகிய முருகவேளுக்கு அப்பன் திருவாரூரிலே கோயில் கொண்டு இருக்கும் சிவபிரான் என்னும் முகமாக செட்டி அப்பன் என்கின்றார் சுந்தரமூர்த்தி நாயனார்.
"செட்டி வடிவைக் கொடு தினைப்புனம் அதில் சிறு குறப்பெண் அமளிக்குள் மகிழ் செட்டி! குரு வெற்பில் உறை சிற்பரமருக்கு ஒரு குருக்கள் என முத்தர் புகழ் தம்பிரானே" என்று "சுத்திய நரப்புடன்" எனத் தொடங்கும் திருவேரகத் (சுவாமிமலை) திருப்புகழில் அருணகிரிநாதர் போற்றி உள்ளார்.
.
"செட்டி என்று வனம் மேவி, இன்பரச சக்தியின் செயலினாளை அன்பு உருக தெட்டி வந்து, புலியூரின் மன்றுள் வளர் பெருமாளே”என்று "கட்டிமுண்டக" எனத் தொடங்கும் திருப்புகழில் அருணகிரிநாதர் போற்றி உள்ளார்.
"........ ........ ........ அயில்விடும்
புத்தி ப்ரியத்தன், வெகு வித்தைக் குணக்கடல்,
புகழ்ச் செட்டி, சுப்ரமணியன்,
செச்சைப் புயத்தன், நவரத்ன க்ரிடத்தன், மொழி
தித்திக்கும் முத்தமிழினைத்
தெரியவரு பொதிகைமலை முனிவர்க்கு உரைத்தவன்
சேவல் திருத்துவசமே".
என்று சேவல் வகுப்பிலும் அருணகிரிநார்,முருகப் பெருமானை, "செட்டி" எனப் போற்றி உள்ளார்.
... ... ... ... ... ... ... “வள்ளி
கை வளையல் ஏற்றி, இரு காலில் வளைந்து ஏற்றி,
மை வளைய நெஞ்ச மயல் ஏற்றி - வெய்ய
இருட்டு விடியாமுன் இனத்தவர் காணாமல்
திருட்டு வியாபாரம் செய் செட்டி, - வெருட்டி
ஒரு வேடுவனாய் ஓர் புலவன் வெண்பாவைக் கைக்கொண்டு
கோடு திரியும் குறச்செட்டி, - பாடாநல்
கீரனைப் பூதத்தால் கிரிக் குகையுள் கல்சிறை செய்து
ஓர் அரிய பாவை உகந்து அணைந்து - கீரனுக்கு
வீட்டுவழி காட்டியிடும் வேளாண்மையாம் செட்டி,
ஆட்டில் உவந்து ஏறும் அன்ன தானசெட்டி, -ஈட்டுபுகழ்
தேவேந்திரன் மகள்பால் சிந்தைகுடி கொண்ட செட்டி,
நாவேந்தர்க்கே இன்பம் நல்கு செட்டி, - பூ ஏந்திக்
கண்டு பணிபவர் தம் காசு பறிக்கும் செட்டி,
பண்டு அறுவர் ஊட்டு தனபால் செட்டி, - தொண்டர்
மதுரையில் சொக்கப்ப செட்டி மைந்தன், இளம் செட்டி,
குதிரை மயில் ஆம் குமர செட்டி, சதிர் உடனே
சீவ பர ஐக்கியம் செய்திடு கந்தப்ப செட்டி,
மூவர் வணங்கும் முருகப்ப செட்டி - பாவனைக்கும்
அப்பாலுக்கு அப்பாலாம் ஆறுமுக செட்டி, இவன்
தப்பாமல் கண்டால் உன் தன்னை விடான், - இப்போதுஎம்
வீட்டில் அவல் வெல்லம் வேணது உண்டு வா எனச் சீர்
ஆட்டி அனைமார் அகம் புகுந்தார்”
என்று தணிகை உலா என்னும் நூலில் முருகப் பெருமான் புகழப்பட்டு உள்ளார்.
"இனம் எனத் தொண்டரோடும் இணக்கிடும் செட்டி" என்று தாம் பாடியருளிய "சண்முக கவசம்" என்னும் நூலில், பாம்பன் சுவாமிகள் முருகப் பெருமானைப் போற்றி உள்ளார்.
இருபொருள் பட, சிலேடையாகப் பாடல்கள் இயற்றுவதில் வல்லவர் காளமேகப் புலவர்.
திருவேரகம் (திரு + ஏர் + அகம்) என்னும் சுவாமிமலையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் சுவாமிநாதப் பெருமானை, "திருவேரகச் செட்டி" என்று விளித்து, இந்த (காயம்) உடம்பை ஒழித்து, இனிப் பிறவாமல் இருக்கும் பெருவாழ்வை அருளுமாறு ஒரு வெண்பாவைப் பாடினார்.
அது வருமாறு...
வெங்காயம் சுக்கு ஆனால், வெந்தயத்தால் ஆவது என்ன?
இங்கு ஆர் சுமந்து இருப்பார் இச் சரக்கை? -- மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்,
ஏரகத்துச் செட்டியாரே".
இப் பாடலின் முதற்பொருள் (உலகியல் பொருள்) வருமாறு ---
திரு ஏரகம் என்ற ஊரில் உள்ள செட்டியாரே!,வெங்காயம் சுக்குப் போல உலர்ந்து வற்றி விடுமானால், வெறும் வெந்தயம் என்னும் ஒரு பொருளால் மட்டும் ஆவது என்ன? இந்தச் சரக்கை எவர் சுமந்து இருப்பார். மங்குதல் இல்லாத சீரகத்தைத் தந்தால், நான் பெருங்காயத்தைத் தேட மாட்டேன்.
விளக்கம் ---
வெங்காயம், சுக்கு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்பவை உணவுப் பொருள்கள்.
ஏரகத்துச் செட்டியார் - திரு ஏரகம் என்னும் சுவாமிமலையில் வணிகம் செய்கின்றவர்.
இப் பாடலுக்கு இரண்டாவதாகக் கூறப்படும் (அருளியல்) பொருள் ---
திரு ஏரகம் என்னும் (சுவாமிமலை) திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு வீற்றிருக்கும் முருகப் பெருமானே! கொடிய வினைகளால் ஆன இந்த உடல், வெறும் உடல் (இன்பத்தை மட்டுமே கருதி, உணவு வகைகளை உண்டு கொழுத்துப் பெருக்காமல், உண்டி சுருக்குதல் முதலான தவத்தால்) சுக்குப் போல வற்றிப் போகுமானால், கொடிய வினைகளால் வரக் கூடிய துன்பம் ஏதும் இல்லை. வினைகளால் வரக் கூடிய துன்பங்கள் நீங்கிவிட்டால், இந்த உடலை யார் சுமந்து இருப்பார்கள்? பெருமைக்கு உரிய வீடுபேறு என்னும் மோட்சத்தை எனக்கு அருளிச் செய்தால், இனிப் பலவாகிய உடல்களைத் தேடிப் பிறக்க மாட்டேன்.
விளக்கம் ---
வெங்காயம் --- வெம்மை + காயம்.
வெம்மை --- கொடிய.
காயம் --- உடல். வெங்காயம். கொடிய இந்த உடல். வெந்து போகப் போகின்ற உடல் என்றும் பொருள் கொள்ளலாம்.
"வினைப் போகமே ஒரு தேகம் கண்டாய், வினைதான் தீர்ந்தால் தினைப் போது அளவும் நில்லாது" என்று பட்டினத்தடிகள் பாடி உள்ளார்.
வினைகளை அனுபவித்தற்கு இந்த உடல் இறையருளால் நமக்கு வந்தது. வினைகள் துன்பத்திற்கு இடமாக அமைவதால் கொடியவை ஆயிற்று. துன்பத்திற்குக் கொள்கலமாக இந்த உடல் இருப்பதால் கொடிய உடல் எனப்பட்டது.
சுக்கு - வற்றிய பொருள்.
விரதம், தவம் முதலியவற்றால் உடம்பு இளைக்க வேண்டும். உணவு முதலியவைகளால் கொழுப்பதால் ஒரு பயனும் இல்லை.
"திருத்தணிகைத் திருமாமலை வாழ் தேவா! உன் தன் சந்நிதிக்கு வில்வக் குடலை எடுக்காமல் வீணுக்கு உடலை எடுத்தேனே" என்றும், "கொழுத்த உடலை எடுத்தேனே" என்றும் வள்ளல் பெருமான் பாடி உள்ளார்.
உடம்பு கொழுத்தால் உள்ளமும் கொழுக்கும். உடம்பு இளைத்தால், உள்ளம் உருகும்.
வெந்த + அயம், வெந்தயம் என்று ஆனது.
அயம் என்றால் பஸ்பம் என்று பொருள்.
வெந்த பின் கிடைப்பது அயம்.
அயம் என்பது இங்கு, அயச் செந்தூரப் பொடியைக் குறிக்கும்.
உடம்பு நோயால் இளைத்தால் செந்தூரம் என்னும் மருந்து வேண்டும். தவத்தால் இளைத்தால் அம் மருந்து தேவை இல்லை. இதை உணர்த்த, "வெந்தயத்தால் ஆவது என்ன" என்று பாடினார்.
சரக்கு --- பொருள். இங்கே உடலைக் குறித்தது.
"சரக்கு அறைத் திருவிருத்தம்" என்று ஒரு திருப்பதிகத்தையே பாடி உள்ளார் அப்பர் பெருமான்.
தவம் முற்றிய பிறகு, இந்த உடலைச் சுமந்து இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதால், "இங்கு ஆர் சுமந்து இருப்பார் இச் சரக்கை" என்று பாடினார். "இந்த உடலோடு இருப்பது அருவருப்பே" என்றார் பட்டினத்தார்.
சீரகம். சீர் + அகம். சிறந்த வீடாகிய மோட்சத்தை இது குறிக்கும்.
தமிழில் வீடுபேறு எனப்படும். வீடு பேற்றினை இறைவன் அருள் புரிந்தால், இந்தப் பெரிய உடம்பு (பெரும் + காயம். காயம் = உடம்பு) என்பதை ஆன்மா தேடவேண்டிய அவசியம் இல்லை என்பதைக் குறிக்க, "சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்" என்று பாடினார்.
ஏரகத்துச் செட்டி --- முன்னர்ப் பலவாறாக அருளாளர்கள் பலரும் துதித்து வணங்கியபடி, ஏரகத்துச் செட்டி என்பது திரு ஏரகம் என்னும் சுவாமிமலையில் திருக்கோயில் கொண்டு இருக்கும் முருகப் பெருமான்.
வெற்றி அயில் தொடு ப்ரதாபக்கார---
அயில் --- வேல். ப்ரதாபம் --- புகழ்.
திக்கை உலகை வலமாகப் போகிக் கணம் மீளும் சித்ர குல கலப வாசிக்கார---
வாசி --- குதிரை. வேகமாகச் செல்லவல்லது.
குதிரையைப் போல் வேகமாகச் செல்லுகின்ற மயிலின் மீது இவர்ந்து முருகப் பெருமான் உலகம் முழுதையும் வலமாக வந்தார். கனிக்காக வலமாக வந்தார். சூரபதுமனை வெற்றி கொண்ட பிறகும் உலகை வலமாக வந்தார்.
முருகப்பெருமான் கனி காரணமாக அகில உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்து எங்கும் தான் நிறைந்துள்ள இயல்பை உலகிற்கு உணர்த்தியருளினார்.
இலகு கனி கடலைபயறு ஒடியல் பொரி அமுது செயும்
இலகு வெகு கடவிகட தடபார மேருவுடன்
இகலிமுது திகிரிகிரி நெறியவளை கடல் கதற
எழுபுவியை ஒரு நொடியில் வலமாக ஓடுவதும்.... ---சீர்பாத வகுப்பு.
நாரத முனிவர் ஒரு சமயம் பெருந்தவம் புரிந்தனர். அத் தவத்துக்கு இரங்கிய பிரமதேவர் ஒரு மாதுளங் கனியைத் தந்தனர். அக்கனியை நாரதமுனிவர் சிவபெருமானுடைய திருவடியில் வைத்து வணங்கினார்.
விநாயகமூர்த்தியும், முருகமூர்த்தியும் தாய் தந்தையரை வணங்கி அக்கனியைக் கேட்டார்கள். “அகில உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்தவர்க்கு இக் கனி தரப்படும்” என்று கூறியருளினார் சிவபெருமான்.
முருகவேள் மயில் வாகனத்தின் மீது ஊர்ந்து அகில உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்தார். விநாயகப் பெருமான், அகில உலகங்களும் சிவத்துக்குள் அடங்கி நிற்றலால்,சிவமூர்த்தியை வலம் வந்தார். “தேவரீருக்கு அன்னியமாக உலகம் இல்லையே” என்று கூறி வணங்கினார். பரமசிவன் விநாயகருக்குப் பழத்தை தந்தருளினார்.
உலகங்களை வலம் வந்த வடிவேற்பெருமான் தனக்குக் கனி தராமையால் வெகுள்வார் போல் வெகுண்டு, சிவகிரியின் மேற்றிசை நோக்கித் தண்டாயுதபாணியாக நின்றார். சிவமூர்த்தியும் உமாதேவியாரும் கணங்கள் புடை சூழச்சென்று முருகவேளை எடுத்து அணைத்து, “கண்மணி! அரும்பு-சரியை; மலர் கிரியை; காய்-யோகம்; பழம்-ஞானம். நீ ஞானபண்டிதன். ஞானமாகிய பழம் நீதான். பழநி நீ” என்றார். அதனால் அப்பதிக்கும் பழநி என நாமம் ஏற்பட்டது.
இந்த வரலாற்றின் உட்பொருள்
(1) கணேசமூர்த்தி கந்தமூர்த்தி என்ற இருவரும் கனி கேட்டபோது சிவபெருமான் அப்பழத்தைப் பிளந்து பாதி பாதியாகத் தரலாம்.
(2) மற்றொரு பழத்தை உண்டாக்கிக் கொடுத்திருக்கலாம். காரைக்கால் அம்மையார் வேண்ட மாங்கனியைத் தந்தவர் தானே சிவபெருமான்.
(3) எல்லா உலகங்களையும் ஒரு நொடிப்பொழுதில் வலம் வரும் ஆற்றல் வல்லமை கணபதிக்கும் உண்டு.
(4) உலகங்கள் யாவும் சிவத்துக்குள் ஒடுங்கியிருக்கின்றன என்ற உண்மையை ஞானபண்டிதனான முருகவேளும் அறிவார்.
ஆகவே, இவ்வரலாற்றின் உள்ளுறை தான் யாது? சிவத்துக்கு இரு தன்மைகள் உண்டு. ஒன்று எல்லாவற்றிலும் சிவம் தங்கியிருக்கிறது. மற்றொன்று எல்லாப்பொருள்களும் சிவத்துக்குள் ஒடுங்கி நிற்கின்றன.
இந்த இரு கடவுள் தன்மைகளையும் உலகவர் உணர்ந்து உய்யும் பொருட்டு, விநாயகர் சிவத்துக்குள் எல்லாவற்றையும் பார்த்தார். முருகர் எல்லாப் பொருள்களிலும் சிவத்தைப் பார்த்தார்.
இதனையே தாயுமானவர் முதற் பாடலில் கூறுகின்றார்.
“அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி
அருளோடு நிறைந்ததெது?”
இது எங்கும் நிறைந்த தன்மை.
“தன்னருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடி யெல்லாம்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த் தழைத்ததெது?”
இது எல்லாம் சிவத்துக்குள் அடங்குந் தன்மை. இந்த அரிய தத்துவத்தை இவ் வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.
சுத்த மறவர் மகள் வேளைக்கார பெருமாளே---
வேடர்கள் பக்குவப்பட்ட ஆன்மாக்கள். எனவேதான்,வள்ளிநாயமியார் அவர்களிடத்தில் வளர்ந்தார். அடிகளார் "சுத்த மறவர்" என்று போற்றி இருப்பதுக் காண்க.
வள்ளிமலையில் இருந்த தினைப்புனத்தைக் காவல் கொண்டு இருந்த, பக்குவ ஆன்மாவாகிய வள்ளிநாயகியாருக்குத் திருவருள் புரிய வேண்டி, முருகப் பெருமான் அவர் இருக்கும் இடம் தேடி வந்து, போது போக்கிக் களித்தி இருந்து தக்க வேளை பார்த்து ஆட்கொண்டார். "விந்தை குறமாது வேளைக்கார" என்றும், "சுத்த மறவர் மகள் வேளைக்கார" என்றும் முருகப் பெருமான் அருணகிரிநாதப் பெருமான் தமது திருப்புகழ்ப் பாடல்களில் போற்றி உள்ளார். "திருவேளைக்காரன் வகுப்பு" என்னும் திருவகுப்பு ஒன்றையும் அருளி உள்ளார்.
கருத்துரை
முருகா! விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.
No comments:
Post a Comment