தெய்வம் பேணாதார் தெளிவு

 


 

தெய்வம் பேணாதார் தெளிவு

-----

 

             உயிரானது அறிவுப் பொருள். என்றாலும்அதற்கு இயற்கையிலேயே அறியாமை உண்டு. அறியாமைஅவிச்சைஅகங்காரம். அவித்தைஆணவம் என்னும் இவையெல்லாம் ஒரு பொருளனவே.

 

             சைவசித்தாந்தம்என்றும் அழியா உண்மைப் பொருள்களாக மூன்று பொருள்களைக் குறிக்கும். இறைவன்உயிர்தளை என்பன அவை. பதிபசுபாசம் என்றும் சொல்லப்படும் இந்த முப்பொருள்களை,மேற்பொருள்இடைப்பொருள்கீழ்ப்பொருள் என்றும் சொல்லலாம். மேற்பொருளாய் இருப்பது இறைவன். இடைப்பொருளாய் இருப்பவை உயிர்கள். கீழ்ப்பொருளாய் உள்ளவை உயிர்களைப் பற்றியுள்ள மலங்கள்.

 

            இறைவன் எல்லாப் பொருள்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு நிற்கின்ற பெரும் பொருளாக உள்ளான். நமக்குத் தெரிந்த பொருள்களிலே மிகவும் பெரியது வானமே. வானம்தான் எல்லாப் பொருள்களுக்கும் இடம் தந்து நிற்கிறது. நிலம்நீர்தீகாற்று முலியவற்றைத் தன்னகப்படுத்தி நிற்கிறது. எண்ணற்ற கோள்களையும்விண்மீன்களையும் தன்னுள்ளே தாங்கி நிற்கிறது. அந்த வானைப் போல இறைவன் எல்லாவற்றையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு நிற்கின்றான். எல்லாவற்றிற்கும் தானே ஆதாரமாக நிற்கின்றான். எல்லாவற்றையும் அவனே செயற்படுத்துகின்றான். இதனால்அவனே மேற்பொருள் என்பது விளங்கும்.

 

            உயிரை வடமொழியில் சீவன் என்றும்சீவான்மா என்றும் வழங்குவர். உயிர்கள் எண்ணற்றவை. உயிர்கள் இறைவனிடத்தில் அடங்கி இருப்பவை. இறைவனது பெருநிறைவுவியாபகம் எனப்படும். அதனுள் அடங்கி நிற்கும் நிலை வியாப்பியம் எனப்படும். அம்முறையில் இறைவன் வியாபகம்உயிர்கள் இறைவனிடத்தில் வியாப்பியம். உயிர் தனக்குக் கீழ்ப்பட்ட பொருள்களாகிய மலங்களின் தொடர்பினால் அறிவு மயங்கித் துன்புறும்.  பின் அவற்றின் பிடியிலிருந்து விடுபட்டு மேற்பொருளாகிய இறைவனைச் சார்ந்து இன்புறும். இவ்வாறு மேற்பட்ட பொருளுக்கும்கீழ்ப்பட்ட பொருளுக்கும் இடையில் உள்ளதால்உயிர் இடைப்பொருள் ஆகின்றது.

 

            மேற்பொருளாகிய கடவுளும்இடைப்பொருளாகிய உயிரும் அறிவுடைப் பொருள்கள். அவை சித்து எனப்படும். கீழ்ப்பொருளாகிய மலம் என்பதுஆணவம்மாயைகன்மம் என மூவகைப்படும். இவை அறிவற்றவை. இவை சடம் எனப்படும். இம் மூன்றும் உயிரைத் தம் வயப்படுத்தி உயிரின் தூய்மையைக் கெடுத்து நிற்பதாலும்,பின்னர் அகற்றப்படுதலாலும் மலம் எனப்பட்டன. மலம் என்பதற்கு அழுக்கு என்று பொருள்.

 

         கடவுளும் உயிரும் சித்து (அறிவுப் பொருள்) என்ற வகையில் ஓரினம். என்றாலும் அறிவு நிலையில் தம்முள் வேறுபட்டன ஆகும். கடவுளது அறிவு பேரறிவு. உயிரினது அறிவு சிற்றறிவு. கடவுளது அறிவு தானே அறிவதுஉயிரினது அறிவு அறிவிக்கவே அறிவது. கடவுளது அறிவு எல்லாவற்றையும் ஒருங்கே அறிந்து நிற்பது. உயிரினது அறிவு ஒவ்வொன்றாகவே அறிந்து வருவது. கடவுளது அறிவு எதிலும் தோயாமல் தனித்து நின்று அறிவது. உயிரினது அறிவு அறியப்படும் பொருளில் தோய்ந்துஅதிலே அழுந்தி அதன் வண்ணம் ஆவது. இத்தகைய தனித்தன்மைகளால் கடவுளும் உயிரும் ஒப்பு உடையன அல்ல என்பது விளங்கும்.

 

            கடவுட்பொருள் மிக நுண்ணியதாய் இருப்பதால்ஆணவம் முதலிய மலங்களால் பற்றப்படுதல் இன்றிஎன்றும் தூயதாய் நிற்கிறது. கடவுளை நோக்க உயிர் பருமையானது ஆகலின்  அது மலங்களால் பற்றப்படுதற்கு உரியதாக இருக்கின்றது. கடலாகிய இடத்தில் நீர் நிரம்பியிருக்கிறது. அந்நீர் முழுதையும் உப்புப் பற்றியிருக்கிறது. கடல் இடம் என்பது நுண்ணியது ஆகலின் பருமையான உப்பு நுண்ணிய கடல் வெளியைப் பற்றமாட்டாமல்பருமையான நீரையே பற்றுவதாக உள்ளது. அந்த உப்பைப் போன்றவை மலங்கள். கடல் நீரைப் போன்றவை உயிர்கள். கடல் வெளியைப் போன்றவன் இறைவன். மலங்கள் இறைவனைப் பற்ற மாட்டாமல் உயிரையே பற்றியுற்றதற்கான காரணத்தை இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

 

            இறைவன் இல்லாத இடம் எதுவும் இல்லை. பார்க்குமிடம் எங்கும் நீக்கமற்ற நிறைகின்ற பரிபூரணப் பொருள் அவன். இந்த எண்ணம் எழவொட்டாதபாடி ஆன்மாவினது அறிவைத் தடுத்து நிற்பதாகிய பொருள் ஆணவமலம் எனப்படுகிறது. ஆணவம் நீரை மூடும் பாசி போலவும்கண்ணை மறைக்கும் இருள் போலவும்உயிர்களின் அறிவை மறைத்து நிற்பது. கடவுளுக்கு அடுத்தபடியாகப் பெரும்பொருளாய் நிற்கும் உயிரைத் தனது சத்தியால் சிறுமைப்படுத்தி நிற்பது ஆணவமலமே ஆகும். உயிர் அடையும் எல்லாப் பெருங்கேடுகளுக்கும் இதுவே மூலம். எனவே ஆணவமலம் "மூலமலம்" எனப்படும். உயிர் என்று உண்டோ அன்றே அதனோடு இயற்கையாய்க் கலந்து நிற்பதால் "சகசமலம்" என்றும் சொல்லப்படும்.

 

         உயிர்கள் மனிதப் பிறவிக்கு வந்த பிறகுவாழ்க்கை அறியாமையில் தொடங்குகிறது. அறிவை நோக்கிப் பயணம் செய்கிறது. அறியாமை கடலை விடவும் அகலமும்ஆழமும் உடையது. அறிவு வர வரஅறியாமை சற்றே அகலும். அறியாமை முழுதுமாக அகலப் பலகாலம் ஆகும்.  பல பிறவிகள் எடுக்கவேண்டியதும் ஏற்படும். பெற்ற அறிவை மீண்டும் இழக்காமல்இடையீடு இல்லாமல் அறிவை நோக்கிப் பயணம் செய்தால்தான் அறியாமை முழுதுமாக அகலும். அறியாமை முற்றாக அகன்ற உயிர். அறிவு மயமாகிறது ஞானத்தின் வடிவமாகத் திகழ்கின்றது. உயிர்ஞானநிலை எய்திய பிறகு அதற்கு விருப்பு இல்லைவெறுப்பு இல்லைஇன்பமும் இல்லைதுன்பமும் இல்லைபிறப்பும் இல்லைஇறப்பும் இல்லை. ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்ப அன்பில் அது நிலைபெற்று மகிழ்கின்றது.

 

         அறிவின் இயற்கை,அது வளரவளர அறியாமையின் வன்மையைக் காட்டுவதுகுழப்பத்தைத் தரக் கூடியது. இதுவோ அதுவோ என்று ஆராய்ந்து கொண்டிருப்பவன் அறிவின் தொடக்கத்தில் இருக்கிறான். தெளிவாகச் சொன்னால் மனிதன் ஒரு குழப்பவாதி. அவன் ஒரு பொழுதும் முடிவுக்கு வரமாட்டான். ஐயம்திரிபுமயக்கம் காரணமாக வினாக்கள் எழுந்துகொண்டு இருக்கும்வரைஅறியாமையின் இருப்பதாகவே பொருள். அறியாமைக்கு இடம் தந்து கேட்கப்படும் வினாக்கள் பயன் தராதவை. சிலர் தங்களை அறிவு உள்ளவராகக் காட்டிக் கொள்வதற்கே வினாக்களை எழுப்புவர். அதுவே அவர்கள் அறிவில்லாதவர் என்பதைக் காட்டும். அறிவுக்கு ஆக்கம் கருதி எழுப்பப்படும் வினாக்கள் பயன் உள்ளவை. இங்கே வாதம் இல்லை. விவாதம் இல்லை.

 

         அறியாமை அகலஅறிவு பெறப் பல முயற்சிகள் தேவை. முதல் முயற்சி சிந்தித்தல். இன்றுசிந்தனைப் பழக்கம் பலருக்கு இல்லை. இன்று பலருடைய மூளை சத்திரம் போலத்தான் இருக்கிறது. அதாவதுவீடு என்றால் அங்கேயே சிலர் வாழ்வர். சத்திரம் என்றால் வருவோரையும் போவோரையுமே பார்க்கலாம். அதுபோல்இன்று பலரும் நூல்களைப் படிப்பதுமூளையில் ஏற்றிக்கொள்வதுதிரும்ப ஒப்புவிப்பது என்ற பணிகளையே செய்வர்.  பிறரை அவ்வாறே செய்விக்கவும் தூண்டுவர். அதை ஒரு சாதனையாகவும் காட்டிக் கொள்வர். கற்றதைச் சிந்திப்பதே இல்லை. சிந்திக்கின்ற மனிதன்வாழ்க்கையில் சிக்கல்களுக்கு ஆளாக மாட்டான். அவனுடைய அறிவுநிலையானபடி முறையில் வளர்ந்து வரும். கற்றவன் சிந்திக்க வேண்டும். பிறரைச் சிந்திக்க விடவேண்டும்.

 

     சிந்தனையைத் தொடர்ந்து மேலும் அறிவு நூல்களைக் கற்றல்அடுத்து அறிவு பெறும் முயற்சி ஆகும். கற்பது என்பது ஒருவனுக்கு இன்றியமையாத கடமை. கற்கும் முயற்சிக்குத் தானே கண்கள் தரப் பெற்றன. கற்றலை அடுத்து வரும் முயற்சிகேட்டல். "செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்" என்றார் திருவள்ளுவ நாயனார். அறிவுநூற் பொருளைக் கற்ற அறிவுடையார் பால்கேட்பதுஉயிரின் அறிவாக்கத்திற்குத் துணை புரியும். அது  ஒரு சிறந்த முயற்சி. எளிய முயற்சியும் கூட ஆனால்யாரிடம் கேட்கவேண்டுமோஅவரிடம் கேட்காது போனால் அறிவு நலத்திற்குப் பதில் அறியாமையும் குழப்பமும் விஞ்சி நிற்கும். அறியாமையையே அறிவு என்று அயருகின்ற நிலையும் உண்டாகும். இது தடுமாற்றத்தையே தரும். உணவு வகைகளைச்  சுவை பார்த்து உண்பதைப் போலஅறிவு நூல்களை சுவை பார்த்துக் கேட்கவேண்டும். கற்றலும் கேட்டலும் மாணவர்கள் கடமை மட்டுமல்ல. பெரியவர்களும் செய்ய வேண்டிய கடமை என்பதனைத் திருஞானசம்பந்தர்"கற்றல் கேட்டல் உடையார் பெரியார்"என்று காட்டுவார். 

 

     அடுத்துஅறிவைப் பெருக்கி வளர்த்துக் கொள்ளும் நெறிபெற்ற அந்தச் சிறு கூறாகிய அறிவை வாழ்க்கையில் வாழ்ந்து காட்டுதலாகும். சிந்தனைஅறிவைப் பெறும் வாயிலே தவிர சிந்தனையே அறிவாகாது. கல்விஅறிவைப் பெறும் வாயிலே தவிரகல்வியே அறிவாகாது. கல்விகேள்விசிந்தனைகளால் பெற்ற கருத்தை நல்ல அறிவாக்கி உயிர்க்குத் தரவல்லது வாழும் முறையே ஆகும். அறிவியல் கூடத்துச் சோதனைகளில் விஞ்ஞான அறிவு கிடைப்பதைப் போல,வாழ்க்கைச் சோதனைகளில் அறிவு கிடைக்கிறது. சோதனைக்கு ஆட்படவும்வாழ்க்கையைச் சோதனைக்கு ஆளாக்கவும் திறமை தேவை. கோழைஒரு பொழுதும் அறிவுடையவனாக முடியாது. இங்ஙனம்,வாழ்க்கை அனுபவத்தின் மூலம்அறிவு முழுமை நலம் பெறுதற்குரிய தகுதியை எய்துகிறது. ஆனாலும் முழுமை அடைந்து விடுவதில்லை. அறிவு நலம் முழுமை அடைய அல்லது முழுமை அடைந்தது என்பதை அறிந்துகொள்ளத் துணை செய்வது இறைவழிபாடே ஆகும். இறைவன் நிறை அறிவினன்.அவன் வாலறிவன். ஆதலால்அறிவு நலம் பெற்ற உயிர்மேலும் முழுமை நலம் எய்தவாலறிவு என்னும் ஞானத்தைப் பெற இறைவழிபாடு துணை நிற்கிறது. மேலும்தெளிவாகச் சொன்னால் இந்த நிலை எய்திய உயிர்கள் செய்யும் வழிபாடே வழிபாடு. எனவேதான், "கற்றதனால் ஆய பயன் என்கொல்வாலறிவன் நல்தாள் தொழாஅர் எனின்" என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     அறிவின் வாசனையே இல்லாத மனிதர்கள் செய்யும் இறைவழிபாடு இறைவன் திருவடியைக் கருதியது அல்லதமது தேவைகளைக் கருதியது. தேவைகள் நிறைவு பெறவேண்டுமானால்இறைவன் திருவடிப் பற்று மிக வேண்டும். பொருட்பற்று அறவேண்டும். இதை அறியாதவர்கள் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்கே இறைவன் உள்ளான் என்று கருதிதமது தேவைகளுக்காகவே வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். தேவைகள் நிறைவேறாதபோது நாத்திகம் பேசுகின்றனர். நாத்திகம் பேசுவதால்நாக்குத் தழும்பு ஏறும். "நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்" என்றார் மணிவாசகப் பெருமான்.

 

     ஞான நிலையில் ஞானிகள் தொழுவதே வழிபாடு. "உலகியல் வேதநூல் ஒழக்கம்" என்பார் தெய்வச் சேக்கிழார் பெருமான். வேதங்களில் விதிக்கப்பட்டபடி வாழ்ந்து ஒழுகுவதே உலகியல் ஆகும். எனவே, "உலகியல்" என்பதை உணர்ந்து"அருளியல்" என்ன என்பதைத் தெளிந்துஇறைவன் திறம் நினைந்து வழிபடாதார் எவ்வளவு கற்றாலும்,எவ்வளவு கேட்டாலும் அவர்கள் எவ்வளவுதான் தெளிவாக விரிவுரைகள் செய்தாலும் பயன் இல்லை. அவை எல்லாம் மீண்டும் மீண்டும் சேற்றிற்குள் இழுத்து அமிழ்த்தும் செயல் முறையாகவே முடியும். "ஐம்புலன் ஆகிய சேற்றில் அழுந்தாச் சிந்தை செய்துசிவன் எம்பெருமான் என ஏத்திஊற்று மணல் போல் நெக்கு நெக்கு உள்ளே உருகிப் போற்றி நிற்கவேண்டும்" என்கின்றார் மணிவாசகப் பெருமான். அவ்வாறு வழிபடாதவர்களுடைய அறிவைத் தெளிந்த அறிவாக மதித்து ஏற்றுக்கொள்ள முடியாது என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். 

 

     பூம்புகார்ச் சாய்க்காடு என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள ஈசனையே தெய்வம் என்று தெளிந்து வழிபடுவாரே வழிபடுபவர். அவர்களே கற்றல் கேட்டலுடைய பெரியார். அங்ஙனம் வழிபடத் தெரியாதவர்களின் தெளிவைத் தெளிவாக நாம் கொள்ளமாட்டோம் என்கின்றார். உண்மைப் பொருளை உண்மை என்று உணராதவர் அறிவு எப்படிப்பட்டதாக இருக்கும்?

 

"வையநீர் ஏற்றானும்,மலர் உறையும் நான்முகனும்,

ஐயன்மார் இருவர்க்கும் அளப்பு அரிதால் அவன்பெருமை,

தையலார் பாட்டு ஓவாச் சாய்க்காட்டு எம் பெருமானைத்

தெய்வமாப் பேணாதார் தெளிவுடைமை தேறாமே".

 

என்பது திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய தேவாரப் பாடல்.

 

     மாவலியிடத்து வாமனவடிவோடு சென்ற திருமால் தனது திருவடியால் மூன்றடி மண்ணைக் கேட்டார். மாவலி நீர் வார்த்துத் தரவும்இந்த உலகைத் தனது ஓரடியால் ஏற்றார் திருமால். இந்த நிகழ்வை, "வையம் நீர் ஏற்றானும்" என்றார். தாமரை மலரில் உறைபவன் நான்முகன் ஆகிய பிரமதேவன். முன்னவன் காத்தல் தொழிலை ஏற்றவன். பின்னவன் படைப்புத் தொழிலை ஏற்றவன். இருவராலுமேசிவபரம்பொருளின் பெருமையை அளந்துகாண முடியவில்லை. அப் பரம்பொருள் திருச்சாய்க்காடு என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ளான். அவனை இன்னிசையால் மகளிர் புகழ்ந்து பாடும் பாடலோசை எப்போதும் கேட்டுக் கொண்டு இருக்கின்றது. அப்படிப்பட்ட பெருமானைத் தெய்வமாக விரும்பி வழிபடாதவரை தெளிந்த அறிவினைப் பெற்றவராக நாம் கொள்ளமாட்டோம் என்கின்றார் திருஞானசம்பந்தப் பெருமான்.

 

     "அத் தேவர் தேவர்அவர் தேவர் என்று இங்ஙன் பொய்த்தேவு பேசிப் புலம்புதலை விடுத்துநமது உலகப் பற்றுக்கள் அறும்வண்ணம் நாம் பற்ற வேண்டியது மெய்த்தேவர் (உண்மைத் தேவர்) ஆகிய சிவபரம்பொருளையே. அதுவே, "கற்றதனால் ஆய பயன்" ஆகும்.

 

No comments:

Post a Comment

கச்சித் திரு அகவல்

பட்டினத்து அடிகளார் அருளிய கச்சித் திரு அகவல் திருச்சிற்றம்பலம் ----- திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து ...