அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சீதமலம் வெப்பு (பொது)
முருகா!
திருவடிப் பேற்றினை அருள்வாய்
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ...... தனதான
சீதமலம் வெப்பு வாதமிகு பித்த
மானபிணி சுற்றி ...... யுடலூடே
சேருமுயிர் தப்பி யேகும்வண மிக்க
தீதுவிளை விக்க ...... வருபோதில்
தாதையொடு மக்கள் நீதியொடு துக்க
சாகரம தற்கு ...... ளழியாமுன்
தாரணி தனக்கு ளாரண முரைத்த
தாள்தர நினைத்து ...... வரவேணும்
மாதர்மய லுற்று வாடவடி வுற்று
மாமயிலில் நித்தம் ...... வருவோனே
மாலுமய னொப்பி லாதபடி பற்றி
மாலுழலு மற்ற ...... மறையோர்முன்
வேதமொழி வித்தை யோதியறி வித்த
நாதவிறல் மிக்க ...... இகல்வேலா
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
மீளவிடு வித்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
சீதமலம்,வெப்பு,வாதம், மிகு பித்தம்
ஆன பிணி சுற்றி,...... உடல் ஊடே
சேரும் உயிர் தப்பி ஏகும் வணம்,மிக்க
தீது விளைவிக்க ...... வருபோதில்,
தாதையொடு மக்கள் நீதியொடு துக்க
சாகரம் அதற்குள் ...... அழியாமுன்,
தாரணி தனக்குள் ஆரணம் உரைத்த
தாள் தர நினைத்து ...... வரவேணும்.
மாதர் மயல் உற்று வாட, வடிவு உற்று
மாமயிலில் நித்தம் ...... வருவோனே!
மாலும் அயன் ஒப்பு இலாதபடி பற்றி
மால் உழலும் மற்ற ...... மறையோர்முன்
வேதமொழி வித்தை ஓதி அறிவித்த
நாத! விறல் மிக்க ...... இகல்வேலா!
மேல் அசுரர் இட்ட தேவர்சிறை வெட்டி,
மீளவிடு வித்த ...... பெருமாளே.
பதவுரை
மாதர் மயல் உற்று வாட--- ஆன்மாக்காளாகிய பெண்கள் எல்லாம் உன்னழகில் மயங்கி காதலுற்று வாடும்படி,
வடிவுற்று--- அழகிய திருவுருக் காட்சி தந்து,
மாமயிலில் நித்தம் வருவோனே--- சிறந்த மயில்மீது நாள்தோறும் வருபவரே!
மாலும் அயன் ஒப்பிலாதபடி பற்றி--- திருமாலுக்கும், பிரமனுக்கும், ஒப்பில்லாதபடி தவநிலையில் உன் மீது அன்பு வைத்து,
மால் உழலும் மற்ற மறையோர்முன்--- அன்பில் மயங்கித் திரியும் மற்றைய மறையவர்களும் காணும்படியாக
வேதமொழி வித்தை ஓதி அறிவித்த நாத--- (அடியேனுக்கு) மறைகளின் உண்மைப் பொருளை உபதேசித்துக் கற்பித்த குருநாதரே!
விறல் மிக்க இகல் வேலா--- வீரமிக்க வலிமை வாய்ந்த வேலை உடையவரே!
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி --- முன்னாள் அசுரர்கள் தேவர்களை அடைத்து வைத்த சிறையைத் தகர்த்து,
மீள விடுவித்த பெருமாளே--- தேவர்கள் மீண்டும் தமது பொன்னுலகில் குடி புகுமாறு விடுவித்த பெருமையில் மிக்கவரே!
சீதமலம்--- சீதபேதி,
வெப்பு--- காய்ச்சல்,
வாதம்--- உடலில் வாயு மிகுதல் ஆகிய நோய்க் கூறு,
மிகு பித்தமான பிணி சுற்றி --- ஈரலில் இருந்து மிகுந்துவரும் பித்தநீரால் உண்டாகும் நோய்கள் ஆகிய இவைகள் சூழ்ந்துள்ள,
உடல் ஊடே சேரும் உயிர் தப்பி ஏகும் வ(ண்)ணம்--- இந்த உடலினுள் இருக்கும் உயிர் பிரிந்து போகும்படி,
மிக்க தீது விளைவிக்க வருபோதில்--- மிகுந்த தீமையை உண்டாக்கும் சமயத்தில்,
தாதையொடு மக்கள்--- தந்தையோடு மக்களும்,
நீதியொடு--- உலக நியதிப்படி
துக்க சாகரம் அதற்குள் அழியாமுன்--- துயரக் கடலுள் அழுந்தி அழியும் முன்பு,
தாரணி தனக்குள் ஆரணம் உரைத்த தாள் தர நினைத்து வரவேணும்--- இந்த உலகத்தில் உள்ளோர் போற்றுகின்ற வேதங்கள் சொல்லும் தேவரீரது திருவடிகளை அடியேனுக்குத் தந்தருள எண்ணி நீ என்முன் வந்தருள வேண்டும்.
பொழிப்புரை
ஆன்மாக்காளாகிய பெண்கள் எல்லாம் உன்னழகில் மயங்கி காதலுற்று வாடும்படி, அழகிய திருவுருக் காட்சி தந்து, சிறந்த மயில்மீது நாள்தோறும் வருபவரே!
திருமாலுக்கும், பிரமனுக்கும், ஒப்பில்லாதபடி தவநிலையில் உன் மீது அன்பு வைத்து, அன்பில் மயங்கித் திரியும் மற்றைய மறையவர்களும் காணும்படியாக, அடியேனுக்கு மறைகளின் உண்மைப் பொருளை உபதேசித்துக் கற்பித்த குருநாதரே!
வீரமிக்க வலிமை வாய்ந்த வேலை உடையவரே!
முன்னாள் அசுரர்கள் தேவர்களை அடைத்து வைத்த சிறையைத் தகர்த்து,தேவர்கள் மீண்டும் தமது பொன்னுலகில் குடி புகுமாறு விடுவித்த பெருமையில் மிக்கவரே!
சீதபேதி, காய்ச்சல், உடலில் வாயு மிகுதல் ஆகிய நோய்க் கூறு, ஈரலில் இருந்து மிகுந்துவரும் பித்தநீரால் உண்டாகும் நோய்கள் ஆகிய இவைகள் சூழ்ந்துள்ள,இந்த உடலினுள் இருக்கும் உயிர் பிரிந்து போகும்படி, மிகுந்த தீமையை உண்டாக்கும் சமயத்தில், தந்தையோடு மக்களும், உலக நியதிப்படிதுயரக் கடலுள் அழுந்தி அழியும் முன்பு, இந்த உலகத்தில் உள்ளோர் போற்றுகின்ற வேதங்கள் சொல்லும் தேவரீரது திருவடிகளை அடியேனுக்குத் தந்தருள எண்ணி நீ என்முன் வந்தருள வேண்டும்.
விரிவுரை
தாதையொடு மக்கள் நீதியொடு துக்க சாகரம் அதற்குள் அழியாமுன்---
உடலை விட்டு உயிர் பிரியும்போது, உற்றாரர்கள் சுற்றி அழ,பெற்றார்கள் மிக்க அழுது துயரக் கடலில் அழுந்துவார்கள்,
"கூகா என எனி கிளை கூடி அழப்
போகாவகை மெய்ப்பொருள் பேசியவா!"
எனக் கந்தர் அனுபூதியில் அடிகளார் பாடி உள்ளது காண்க.
மாதர் மயல் உற்று வாட வடிவுற்று மாமயிலில் நித்தம் வருவோனே---
தலைவன் ஒருவன் உலாப் போகும் போது, அவனது அழகில் மயங்கி, பேதை முதல் பேரிளம்பெண் வரையில் ஆன ஏழு வகைப் பெண்களும், அவன் மீது காதல் கொண்டதாகப் பாடப்படுவது திருஉலா என்னும் பிரபந்த வகையாகும். ஆன்மாக்கள் அவரவர் பக்குவத்திற்கு ஏற்ப பெண்களாக உருவகிக்கப்பட்டனர். அவரவர் பக்குவத்திற்கு ஏற்ப மயிலின் மீது வந்து அருள் புரிபவர் முருகப் பெருமான்.
சேரமான் பெருமாள் நாயனார் பாடி அருளிய "திருக்கயிலாய ஞான உலா" என்னும் நூல், ஆதி உலா என்று பொற்றப் பெறுவது.
கருத்துரை
முருகா! திருவடிப் பேற்றினை அருள்வாய்
No comments:
Post a Comment