அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
எற்றா வற்றா (பொது)
முருகா!
அடியேனுக்கு உற்ற துணை நீயே. அருள் புரிவாய்
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் ...... தனதான
எற்றா வற்றா மட்டா கத்தீ
யிற்காய் செக்கட் ...... பிறைவாளே
யிற்றார் கைப்பா சத்தே கட்டா
டிக்கோ பித்துக் ...... கொடுபோமுன்
உற்றார் பெற்றார் சுற்றா நிற்பா
ரொட்டோம் விட்டுக் ...... கழியீரென்
றுற்றோ துற்றே பற்றா நிற்பா
ரக்கா லத்துக் ...... குறவார்தான்
பற்றார் மற்றா டைக்கே குத்தா
பற்றா னப்பிற் ...... களைவோனே
பச்சே னற்கா னத்தே நிற்பாள்
பொற்பா தத்திற் ...... பணிவோனே
முற்றா வற்றா மெய்ப்போ தத்தே
யுற்றார் சித்தத் ...... துறைவோனே
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
எற்றா வற்றா மட்டாகத் தீ-
யில் காய் செம் கண், ...... பிறை வாள்,
எயிற்றார் கைப் பாசத்தே கட்டு,
ஆடிக் கோபித்துக் ...... கொடுபோமுன்,
உற்றார், பெற்றார், சுற்றா நிற்பார்,
ஒட்டோம், விட்டுக் ...... கழியீர் என்று,
உற்று ஓதுற்றே பற்றா நிற்பார்,
அக் காலத்துக்கு ...... உறவு ஆர் தான்?
பற்றார் மல் தாடைக்கே குத்தா,
பல் தான் அப்பில் ...... களைவோனே!
பச்சு ஏனல் கானத்தே நிற்பாள்
பொன் பாதத்தில் ...... பணிவோனே!
முற்றா வற்றா மெய்ப் போதத்தே
உற்றார் சித்தத்து ...... உறைவோனே!
முத்தா! முத்தீ அத்தா! சுத்தா!
முத்தா! முத்திப் ...... பெருமாளே.
பதவுரை
பற்றார் மல் தாடைக்கே குத்தா பல்தான் அப்பில் களைவோனே --- பகைவர்களின் வலிமை மிக்க தாடையில் குத்தி, பற்களை அம்பினால் தகர்த்து எறிபவரே!
பச்சு ஏனல் கானத்தே நிற்பாள் பொற் பாதத்திற் பணிவோனே --- பசுமையான தினைப்புனத்தினைக் காவல் கொண்டு நிற்கும் வள்ளிநாயகியின் அழகிய திருவடிகளில் பணிபவரே!
முற்றா வற்றா மெய்ப்போதத்தே உற்றார் சித்தத் துறைவோனே --- மெய்யறிவு முற்றி சிறிதும் வற்றாததான மெய்ஞ்ஞான நிலையில் உள்ளவர்களின் உள்ளத்தில் வீற்றிருப்பவரே!
முத்தா --- முத்தி நிலைக்கு அதிபரே!
முத்தீ அத்தா --- ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினம் என்னும் மூன்று வேள்வித் தீக்குத் தலைவரே!
சுத்தா --- தூயவரே!
முத்தா --- பற்று அற்றவரே!
முத்திப் பெருமாளே --- உயிர்களுக்கு முத்தியை அளிக்கும் பெருமையில் மிக்கவரே!
எற்றா வற்றா மட்டாகத் தீயில் காய் செம் கண் --- உதைத்து மோதுபவர்களும், தீயும் ஒளியும் குறைவுறும்படி காய்ந்த சிவந்த கண்களை உடையவர்களும்,
பிறைவாள் எயிற்றார் கைப் பாசத்தே கட்டு --- பிறைச் சந்திரனைப் போல் வளைந்து, வாள் போலக் கூர்மையாக உள்ள பற்களை உடையவர்களுமான இயம தூதர்கள் தங்களுடைய பாசக் கயிற்றால் கட்டி,
ஆடிக் கோபித்துக் கொடுபோமுன் --- எனது உயிரை அலைத்துக் கோபித்துக் கொண்டு போவதற்கு முன்பாக,
உற்றார் பெற்றார் சுற்றா நிற்பார் ஒட்டோம் விட்டுக் கழியீர் என்று --- உற்றாரும், பெற்றோரும், சூழ்ந்து நிற்பவர்களும், “உம்மை விட்டுப் பிரிய மாட்டோம், போகாதீர்” என்று
உற்று ஓதுற்றே பற்றா நிற்பார் --- அருகில் இருந்து கொண்டு கூறி அன்பு காட்டி நிற்பார்கள்.
அக் காலத்துக்கு உறவு ஆர்தான் --- அந்தக் காலத்தில் அடியேனுக்கு உறவு ஆவார் யார்?
பொழிப்புரை
பகைவர்களின் வலிமை மிக்க தாடையில் குத்தி, பற்களை அம்பினால் தகர்த்து எறிபவரே!
பசுமையான தினைப்புனத்தினைக் காவல் கொண்டு நிற்கும் வள்ளிநாயகியின் அழகிய திருவடிகளில் பணிபவரே!
மெய்யறிவு முற்றி சிறிதும் வற்றாததான மெய்ஞ்ஞான நிலையில் உள்ளவர்களின் உள்ளத்தில் வீற்றிருப்பவரே!
முத்தி நிலைக்கு அதிபரே!
ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினம் என்னும் மூன்று வேள்வித் தீக்குத் தலைவரே!
தூயவரே!
பற்று அற்றவரே!
உயிர்களுக்கு முத்தியை வழங்கும் பெருமையில் மிக்கவரே!
உதைத்து மோதுபவர்களும், தீயும் ஒளியும் குறைவுறும்படி காய்ந்த சிவந்த கண்களை உடையவர்களும், பிறைச் சந்திரனைப் போல் வளைந்து, வாள் போலக் கூர்மையாக உள்ள பற்களை உடையவர்களுமான இயம தூதர்கள் தங்களுடைய பாசக் கயிற்றால் கட்டி, எனது உயிரை அலைத்துக் கோபித்துக் கொண்டு போவதற்கு முன்பாக, உற்றாரும், பெற்றோரும், சூழ்ந்து நிற்பவர்களும், “உம்மை விட்டுப் பிரிய மாட்டோம், போகாதீர்” என்று அருகில் இருந்து கொண்டு கூறி அன்பு காட்டி நிற்பார்கள். அக் காலத்துக்கு உறவு ஆர்தான் --- அந்தக் காலத்தில் அடியேனுக்கு உறவு ஆவார் யார்?
விரிவுரை
முற்றா வற்றா மெய்ப்போதத்தே உற்றார் சித்தத் துறைவோனே ---
இறைவன் மெய்யடியார்களின் உள்ளத்தில் வீற்றிருக்கின்றான். இறைவன் தன்னை அன்போடு வழிபடுபவர் உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு விளங்குவான் என்பதை, "நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்" என்றும், "மறவாதே தன்திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற திறலான்" என்றும் அப்பர் பெருமான் பாடிக் காட்டினார். "அகன்அமர்ந்த அன்பினர் ஆய், அறுபகை செற்று, ஐம்புலனும் அடக்கி, ஞானம் புகல் உடையோர் தம் உள்ளப் புண்டரீகத்து உள் இருக்கும் புராணர்" புறத்தே கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் இடம் திருவீழிமிழலை என்றார் திருஞானசம்பந்தப் பெருமான். இறைவனை “மெய்ப்போதப் போது அமர்ந்தார்” என்று குறிப்பிடுவார் தெய்வச் சேக்கிழா பெருமான்.
புறத்தே கோயில் மற்றும் பிற இடங்களில் நமது வேண்டுதலுக்கு ஏற்ப எழுந்தருளி அருள் புரிகின்ற, பரம்பொருளுக்கு, நிரந்தரமான இடம் உயிர்களின் உள்ளமே ஆகும்.
நஞ்சத்தை உண்டதனால் இருள் ஒத்த செறிந்த அழகினை உடைய கண்டத்தை உடைய எம்பெருமானை, வானோர் உலகத்தான், தேவர் உலகத்தான் என்று சொல்பவர்கள் எல்லாம் அவர்கள் அறிந்தவாறே சொல்லிக்கொள்ளட்டும். ஞானமே வடிவாகிய அவன் என் நெஞ்சத்தான் என்றே நான் சொல்வேன் என்கின்றார் காரைக்கால் அம்மையார்.
வானத்தான் என்பாரும் என்க; மற்று உம்பர்கோன்
தானத்தான் என்பாரும் தாம் என்க; - ஞானத்தான்,
முன் நஞ்சத்தால் இருண்ட மொய்ஒளிசேர் கண்டத்தான்,
என்நெஞ்சத் தான்என்பன் யான்.
என்பது அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதி.
இறைவனைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னர், பொருளின் இயல்பு பற்றி அறிந்து கொள்ளவேண்டும். எந்தப் பொருளுக்கும் பொது இயல்பு என்றும் சிறப்பு இயல்பு என்றும் இருநிலைகள் உண்டு. இயல்பு என்றாலும் இலக்கணம் என்றாலும் ஒன்றே. ஒரு பொருளுக்கு அதன் தன்மையில் இயல்பாகவே உள்ள இயல்பு "சிறப்பு இயல்பு" என்றும், வேறு ஒரு பொருளின் சார்பினால் உண்டாகி, அந்தச் சார்பு நீங்கியதும், நீங்குகின்ற இயல்புக்கு "பொது இயல்பு" என்றும் பொருள். சிறப்பு இயல்பு என்பது "சொரூப இலக்கணம்" ஆகும். பொது இயல்பு என்பது, "தடத்த இலக்கணம்" ஆகும்.
ஆன்மாவானது, எந்தப் பொருளைச் சார்ந்து இருக்கின்றதோ, அந்தப் பொருளின் தன்மையை அடைந்து நிற்கும். காரணம், அது தற்சுதந்தரம் இல்லாதது. ஆனால், இறைவனோ, வந்தப் பொருளின் சார்பினாலும் மாறுபடாமல் என்றும் ஒரே தன்மையனாய் இருப்பான். இது பற்றியே, இறைவனை "மெய்ப்பொருள்" என்றும் "செம்பொருள்" என்றும் பெரியோர் வழங்குவர். குணம், குறி, பெயர், செயல், ஆகிய ஒன்றும் இல்லாமல், தன் நிலையில் தானாகவே விளங்கும் ஒரு பொருள்தான் இறைவன். அது மெய்ப்பொருளின் சொரூப நிலை ஆகும்.
புற உலகில் மக்களால் அமைக்கப்பட்டு உள்ள குடிசைகள் மட்டுமல்லாது மாடமாளிகைகள் கூட காலவெள்ளத்தில் அழிந்து போகக் கூடியவை. அதுபோலவே, நமது உடலும் நாளடைவில் நைந்து சிதைந்து போகும். உடல் நைந்து போகும் முன், நமது உள்ளம் நைந்து போகவேண்டும். நைந்த உள்ளமே இறைவனுக்கு உகந்த கோயில் ஆகும். "காலையும் மாலையும் கைதொழுவார் மனம் ஆலயம்" என்றார் அப்பர் பெருமான். "காலை எழுந்து் தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக்கண்டா" என்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.
"நகம் எல்லாம் தேயக் கையால், நாள்மலர் தொழுது தேவி,
முகம் எல்லாம் கண்ணீர் சோர, முன்பணிந்து ஏத்தும் தொண்டர்
அகம் அல்லால் கோயில் இல்லை, ஐயன் ஐயாறனார்க்கே"
என்னும் அப்பர் பெருமான் அருட்பாடலின்படி, "காதலாகி, கண்ணீர் மல்கி" வழிபடுகின்ற அடியார்கள் உள்ளமே ஆண்டவன் உறையும் கோயில் ஆகும். பல்லவன் மன்னன் எழுப்பிய அழகான கோயிலுக்கு எழுந்தருளுவதை விடுத்து, பேசலார் நாயனார் எழுப்பிய மனக் கோயிலுக்கே முதலிடம் கொடுத்தார் இறைவர்.
"நெஞ்சமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே
மஞ்சனநீர், பூசை கொள்ள வாராய் பராபரமே"
என்றார் தாயுமான அடிகளார்.
எற்றா வற்றா மட்டாகத் தீயில் காய் செங்கண்.... அக் காலத்துக்கு உறவு ஆர்தான் ---
மாயையின் காரியமாக உலகத்தில் உடம்பினை எடுத்து வந்த அத்தனை உயிர்களும், படைக்கப்பட்ட அத்தனை உயிரில்லாத பொருட்களும் அழியக் கூடியவையே. நாம் துணை என்று கொண்டாடுகின்ற எதுவும், எப்போதும் உற்ற துணையாக மாட்டா. அவர்கள் யாவரும் நமது வினையின் ஈட்டத்தால், ஈட்டிய வினைகளால் ஆன இன்பத்தையோ துன்பத்தையோ கழிப்பதற்குத் துணைபுரிய இறையருளால் வந்தவர்களே. அவர்கள் மீது பற்றுக் கொள்வதால் வேதனையே மிஞ்சும். பின்வரும் அருட்பாடல்களைச் சிந்திக்கவும்.
“மனைவி தாய் தந்தை மக்கள் மற்று உள சுற்றம் என்னும்
வினை உளே விழுந்து அழுந்தி வேதனைக்கு இடம் ஆகாதே,
கனையுமா கடல்சூழ் நாகை மன்னு காரோணத்தானை
நினையுமா வல்லீர் ஆகில் உய்யலாம் நெஞ்சினீரே.” --- அப்பர்.
“எத்தாயர்? எத்தந்தை? எச்சுற்றத்தார்?
எம்மாடு சும்மாடாம்? ஏவர் நல்லார்?
செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை,
சிறு விறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்,
சித்தாய வேடத்தாய்! நீடு பொன்னித்
திருஆனைக்கா உடைய செல்வா! என்தன்
அத்தா! உன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டம் கொண்டுஅடியேன் என்செய்கேனே.”--- அப்பர்.
“உற்றார் ஆர் உளரோ? - உயிர்
கொண்டு போம்பொழுது,
குற்றாலத்து உறை கூத்தன் அல்லால், நமக்கு
உற்றார் ஆர் உளரோ?” --- அப்பர்.
“கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும், காலத்தச்சன்
வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்,
கொட்டி முழக்கி அழுவார், மயானம் குறுகிய அப்பால்
எட்டி அடி வைப்பரோ? இறைவா! கச்சி ஏகம்பனே!” --- பட்டினத்தார்.
“மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே,
இனமான சுற்றம் மயானம் மட்டே, வழிக்கு ஏது துணை ?
தினையாம் அளவு, எள் அளவு ஆகினும் முன்பு செய்த தவம்
தனை ஆள, என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே.” --- பட்டினத்தார்.
“ஊரும் சதம் அல்ல, உற்றார் சதம் அல்ல, உற்றுப் பெற்ற
பேரும் சதம் அல்ல, பெண்டிர் சதம் அல்ல, பிள்ளைகளும்
சீரும் சதம் அல்ல, செல்வம் சதம் அல்ல, தேசத்திலே
யாரும் சதம் அல்ல, நின்தாள் சதம் கச்சி ஏகம்பனே!” --- பட்டினத்தார்.
இறைவன் என்பது, எங்கு தங்கும் பொருளைக் குறித்தது. இறை, இறைத்தல் என்னும் சொல்லடியாக வந்தது. பெண்டிரையும் மக்களையும் கட்டி அணைப்பது அன்பால். மிக நெருங்கிய உறவு முறை இது. நெருங்கிய உறவினரே சுடுகாடு வரையில் வந்து, அதற்கு மேல் நம்மோடு வரமுடியாது என்னும்போது, அவர்களே அதற்குமேல் உதவ முடியாது என்னும்போது, நாம் தேடிக்கொண்ட ஏனைய உறவினர்கள், நண்பர்கள் எவ்வளவு தூரம் துணை போவார் என்பதையும், நாம் தேடி வைத்த அஃறிணைப் பொருள்கள் எத்துணை உதவி செய்யும் என்பதையும் ஆராய்ந்து தெளிந்துக் கொள்ள வேண்டும்.
கருத்துரை
முருகா! அடியேனுக்கு உற்ற துணை நீயே. அருள் புரிவாய்
No comments:
Post a Comment