சிவராத்திரி விரதம்

 


இன்று மகா சிவராத்திரி

-----

 

     இன்று சிவராத்திரி. சாதாரண சிவராத்திரி அல்ல. மகா சிவராத்திரி. இனறு விரதம் இருந்து சிவனை வழிபடுவது மரபு.  இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். 

 

     சிவராத்திரி விரதம்,நித்திய சிவராத்திரிமாத சிவராத்திரிபட்ச சிவராத்திரியோக சிவராத்திரிமகா சிவராத்திரி எனஐந்து வகைப்படும்.

 

    ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு,மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார்கள் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.

 

     விரதம் கடைப்பிடிப்போர் முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவு உண்டுசிவராத்திரியன்று உபவாசமாய் இருந்து,காலையில் குளித்து,சிவசிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாமங்களிலும் வழிபாடு செய்யவேண்டும். அடுத்த நாள் காலையில் உடல் அழுக்குப் போகக் குளித்து உள்ளத்தில் உள்ள அழுக்குகள் நீங்கசுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவு அருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

 

     இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று,முத்தி அடைய வேண்டும் என்றும் விரும்பினார். இறைவனும் அம்மை விரும்பியவாறே என்று அருள் புரிந்தார். 

 

     சிவராத்திரி முழுதும் உறங்காமல் கண் விழித்து இருந்துவழிபாடு செய்யவேண்டும்உறக்கம் வராமல் இருக்கவேண்டும் என்பதற்காக பல உத்திகளை மக்கள் கையாண்டு வருகின்றனர்.இவற்றில் பொழுதுபோக்கிற்காகச் செய்கின்ற செயல்களும் உண்டு. மிகப் பலர்உறங்காமல் இருந்துசிவவழிபாடு செய்கின்றனர். முன்னையதை விடஇது சிறந்தது. ஊனக்கண் மட்டும் விழித்து இருந்தால் போதாது. உள்ளம் உறங்காமல் விழிப்பு நிலையில் இருத்தல் வேண்டும். அதுவே சிறந்த வழிபாடு ஆகும்."உள்ளக்கண் நோக்கும் அறிவு ஊறிஉள்ளத்தை நோக்க அருள்வாயே" என்று முருகப் பெருமானை வேண்டினார் அருணகிரிநாதப் பெருமான். "உள்ளத்தை" என்றால், "உள்ளத்தின் உள்ளே நின்ற கரு" என்று அப்பர் பெருமான் கூறிய பரம்பொருளை என்று பொருள் கொள்ளவேண்டும். (உள்ள + அத்தை = உள்ளத்தை)

 

     முகத்தில் உள்ள ஊனக் கண்ணைக் கொண்டு மட்டுமே ஒரு பொருளைத் தெளிபவர்களை "மூடர்கள்" என்று திருமூல நாயனார் காட்டிஅவர்களுக்குப் பின் வரும் பாடலைத் தனது அருளுரையாக வழங்கினார்.

 

"முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்!

அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்"

 

"கண்டுகண்டு உள்ளே கருத்துஉற வாங்கிடில்

கொண்டுகொண்டு உள்ளே குணம்பல காணலாம்"

 

     "கருத்தினை உள்ளே கண்டு கண்டு உற வாங்கிடில்" என மாறிக் கூட்டிப் பொருள் காணவேண்டும்.

 

     உணர்வு மூடி இருந்துஊனக்கண் மட்டும் விழித்து இருப்பதால் பெரும்பயன் விளையாது. "ஊன்கண் நோக்கிஉணர்வு எனும் இமை திறந்து விழித்திலேன்" என்பார் அப்பர் பெருமான். சிவராத்திரி என்றால் கண் விழித்து இருக்கவேண்டும் என்று கொண்டுஉறங்காமல் இருப்பதற்கான உபாயங்கள் சிலவற்றைக் கையாள்கின்றோம். எடுத்துக் காட்டாக,பகடை ஆட்டம்திரைப்படம் பார்த்தல் முதலானவற்றில் ஈடுபட்டுமிகவும் சிரமப்பட்டு,கண்விழித்து இருக்கின்றோம். இதுதான் சிவராத்திரியாஎன்றால். அல்ல. பகடை ஆடுவதாலும்பொழுது போக்குகளில் ஈடுபட்டுக் கண் விழிப்பதாலும் இறையருளைப் பெறவே முடியாது. ஊனக் கண்ணை விழித்து இருப்பது அல்ல. உள்ளக் கண்ணை விழிப்பு நிலையில் வைத்திருப்பதே சிவராத்திரி ஆகும் என்பதை அறிதல் வேண்டும். ஊனக் கண்ணினுள் நோக்குவது,உணர்வாகிய ஞானக் கண்கொண்டு நோக்கத் துணை புரிய வேண்டும்.

 

     காய்தல் உவத்தல் இன்றி எப்பொருளையும்அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

 

"காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட் கண்

ஆய்தல் அறிவுடையார் கண்ணதே, - காய்வதன்கண்

உற்ற குணம் தோன்றாதாகும்உவப்பதன்கண்

குற்றமும் தோன்றாக் கெடும்".                 --- அறநெறிச்சாரம்.

 

இதன் பொருள் ---

 

     காய்வதன்கண் உற்ற குணம் தோன்றாதாகும் --- வெறுப்புத் தோன்றும்போது பொருளில் உள்ள குணம் ஆராய்வானுக்குத் தோன்றாது;  உவப்பதன்கண் குற்றமும் தோன்றாக் கெடும் --- விருப்பம் உண்டாகும் போதுபொருளில் உள்ள குற்றமும் தோன்றாது மறையும் (ஆதலால்)காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண் ஆய்தல் --- வெறுப்பு விருப்பு இல்லாமல் ஒரு பொருளிலுள்ள குணங் குற்றங்களை ஆராய்ந்து அறிதல்,  அறிவுடையோர் கண்ணதே --- அறிவுடையார் செயலாகும்.

 

     மனத்தை மயக்குபவை ஐம்புலன்கள். இந்திரியங்கள் வழியாக ஒரு பொருளைஊனக் கண்ணால் கண்டு விருப்பம் கொள்கிறோம். அப்போது "அறிவுக்கண்", "மனக்கண்" "உள்ளக்கண்" செயல்படாமல் போவதைத் தான்மேற்குறித்த முதுமொழி குறிக்கின்றது. அறிவுக்கண் கொண்டு ஆராய்ந்தால்,விரும்பப்படும் பொருளின் தன்மைஅதன் உண்மை நிலைஅதன் அவசியம்அதனால் விளையும் நன்மை தோன்றும். புலன்களால் உண்டான காம உணர்வுமன அறிவை மறைப்பதால், "கண் இல்லை" எனப்பட்டது.

 

     "மாய விளக்கு அது மறைந்து நின்றிடும்" என்றார் திருமூல நாயனார். மாயையானதுஒரு பொருளை நமக்குக் காட்டியது. அதன் உண்மையைத் தெளிய வைப்பதும் அந்த மாயையே என்பதால்,மாயையை "விளக்கு" என்றார். அது விளக்கு என்பதை அறிவால் தெளிந்து கொள்ளவேண்டும். அவ்வாறு தெளிந்து கொண்டால் ஆனந்தம் உண்டாகும். மாயாகாரியம் ஆகிய கருவிகளால் ஆன இந்த உடம்பினுள் ஆன்மா பொருந்தி இருக்கின்றது.

 

     இறைவன் தனது சத்தியோடு இயைந்து நின்றுஉயிர்களை அவற்றின் வினைக்கேற்பச் செயற்படுத்துகின்றான் என்பது உண்மை. அவ்வாறு செயற்படுத்தப்படும் உயிர் எதுஉடம்புதான் உயிராஅல்லது உடம்பின் பகுதிகளுள் ஒன்று உயிராஅல்லதுஇவையனைத்திற்கும் வேறான ஒன்றாஇப்படிப் பலவாறான ஐயங்கள் எழுதல் இயல்பு. 

 

"உளதுஇலது என்றலின்எனது உடல் என்றலின்,

ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின்கண்படில்,

உண்டிவினை இன்மையின்உணர்த்த உணர்தலின்,

மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா".

 

என்பது "சிவஞானபோதம்" மூன்றாம் சூத்திரம்.

 

இதன் பதவுரை ---

 

     இலது என்றலின் ஆன்மா உள்ளது --- ஆன்மா என்பது ஒன்று இல்லை என்று கூறும்போதுஅவ்வாறு ஆராய்ந்து, "இல்லை" கூறும் அறிவு ஒன்று இருப்பதாலும்அவ்வறிவே ஆன்மா ஆகும். ஏனவேஆன்மா என்பது சூனியம் எனப்படும் இல்லாத பொருள் அல்ல.

 

     எனது உடல் என்றலின் ஆன்மா உள்ளது --- உடம்பை நான் என்று சொல்லாமல்எனது உடம்பு என வேறாகச் சொல்லுவதால்உடம்புக்கு வேறாக ஆன்மா உள்ளது.

 

     ஐம்புலன் அறிதலின் ஆன்மா உள்ளது --- ஐம்பொறிகளுக்கு வேறாய் ஒரு பொருள் இருந்து அவ் ஐம்பொறிகளையும் கருவியாகக் கொண்டு ஓசை முதலிய ஐந்து புலன்களையும் அறிந்து வருதலால் அவ்வாறு அறிகின்ற அதுவே ஆன்மா ஆகும்.

 

     ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உள்ளது --- ஐம்பொறிகளும் செயற்படாது ஒடுங்கி நிற்கும் கனவு நிலையில் நடந்தவற்றை விழித்து எழுந்தபின் தெளிவாக அறியமுடியாமல்,கனவில் இப்படிக் கண்டோமாஅப்படிக் கண்டோமா எனப் பலவாறு குழம்பி அறிதலினால்கனவு நிலையில் சூக்கும உடம்பில் இருந்துகொண்டுகனவினால் உண்டாகும் அனுபவங்களை அறிந்துபின் விழிப்பு நிலையில் தூல உடம்பிற்கு வந்த பிறகுகனவில் கண்டதை மறந்துபோவதும்அல்லது மயங்கி அறிவதும் செய்வதினால்சூக்கும உடம்பிற்கு வேறாக ஆன்மா உள்ளது.

 

     கண்படில் உண்டிவினை இன்மையின் ஆன்மா உள்ளது --- கண்ணை மூடி உறங்குகின்றபோதுஉணவு உண்பது இல்லை. இன்பதுன்ப நுகர்ச்சி இல்லை. செயல்கள் ஏதும் நிகழ்வது இல்லை. பிராண வாயு மட்டும் இயங்குகின்றது. எனவேபிராணவாயுவுக்கு வேறாகவும் ஆன்மா உள்ளது. 

 

     உணர்த்த உணர்தலின் ஆன்மா உள்ளது --- தானே தனித்து நின்று எதையும் உணரும் தன்மையில்லாமல்அறிவிக்கும் கருவிகளோடு கூடி நின்று உணர்த்தஉலகப் பொருள்களை உணர்ந்து வருதலினால்அவ்வாறு அறிவிக்கின்ற பரம்பொருளுக்கு வேறாக ஆன்மா உள்ளது.

 

     (இத்தகைய ஆன்மா எங்கேதான் உள்ளதுஎன்றால்அது)

 

     மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா உள்ளது ---  மாயா காரியமாகிய கருவிகளால் கட்டி அமைக்கப்பட்ட இயந்திரம் போன்றுள்ள உடம்பில்தான்அறிவுப் பொருளாகிய ஆன்மா சடமாகிய கருவிக் கூட்டத்திற்கு வேறாய் உள்ளது.

 

     உடம்பில் பொருந்தி உள்ள ஆன்மாவின் ஈடேற்றத்திற்காகச் செய்வதே சிறந்த வழிபாடு ஆகும். எந்தவிதமான வழிபாட்டையும் செய்யாமலேஇன்பங்கள் அனைத்தும் வந்து பொருந்தவேண்டும் என்று எண்ணுகின்ற இழிநிலையை விடுத்துஉலகியல் இன்பங்களை வேண்டிச் செய்யும் வழிபாடு சிறந்ததுதான். 

விழிப்போடு இருப்பதோடுவிழிப்புணர்வு நிலையில் இருந்து வழிபாடு செய்தல் வேண்டும். அதுவே உயிருக்கு ஆக்கத்தைத் தரும்.

 

     அறிவு என்னும் செம்மை இல்லாமல்அறிந்ததையே அறிவு என்று கொண்டுமனம்போன போக்கில் எதையும் உணர்ந்துதக்கது இது,தகாதது இது என்று தெளிந்து அறியாமல்யாரும் அறிவுறுத்தினாலும்நாம் கொண்டுள்ள காமம் (விருப்பு) காரணமாகஅவற்றைப் புறந்தள்ளிநமது மனம் போன போக்கில் செயல்படுகின்றோம்.

 

     நல்ல வியாபாரிகள் சரக்குக் கொள்ளப் போனல்கிடைப்பதை மூட்டை கட்டிக்கொண்டு வருவதில்லை. சரக்கின் தரத்தை ஆராய்ந்து,நல்லவற்றையே தேர்ந்தெடுப்பார்கள். வியாபார நுட்பம் அறியாதவர்கள்வியாபாரம் செய்யப் புகுந்தால் கண்டகண்ட சரக்குகளை எல்லாம் வாங்குவார்கள். நாம் நம் அறியாமை தோன்றும்படி பாவம் என்னும் சரக்கையே ஈட்டிக்கொள்கிறோம்.

 

"கழித்திலேன் காம வெந்நோய்,

     காதன்மை என்னும் பாசம்

ஒழித்திலேன்ன்கண் நோக்கி 

     உணர்வு எனும் இமை திறந்து

விழித்திலேன்,வெளிறு தோன்ற 

     வினை எனும் சரக்குக் கொண்டேன்,

அழித்திலேன் அயர்த்துப் போனேன் 

     அதிகைவீ ரட்ட னீரே".

 

என்று காட்டுகின்றார் அப்பர் பெருமான்.

 

இதன் பொருள் --- 

 

     திரு அதிகை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமானே! என்னிடத்துள்ள ஆசாபாசம்காமம் என்ற கொடிய நோய் நீங்கப்பெறவில்லை. ஆசை என்னும் பற்றினையும் நான் விடவில்லை.  உடலுயிர் வாழ்கையையே நோக்குபவனாய் இருக்கின்றேன். அவ்வாறு இருத்தற்குக் காரணமாகிய ஆணவ மறைப்பு விலகவிழிக்கும் மெய்யுணர்வாகிய விழி விழிக்கும் நிலையை நான் பெறவில்லை. அதற்குத் தடையாகிய வினை என்னும் சரக்கையும் நிரம்பக் கொண்டுள்ளேன். அதே வேளைஇவற்றின் விருத்திக்கு ஊக்குவிக்கின்ற இழிதகவு உடையோர் சார்பை விலக்கிக் கொள்ளவும் மறந்து போனேன். (நான் என்ன செய்வேன்?)

 

 

 

     நோய் காரணமாகத் துன்பம் உண்டாகின்றது. நோயை ஒழிப்பதை விடவும்நோயின் மூலத்தை அறிந்து அதனை ஒழித்தால்நோய் ஒழிந்து மீண்டும் வராது. "நோய் நாடிநோய் முதல் நாடிஅது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்" என்று இதற்கான வழியைக் காட்டி அருளினார் திருவள்ளுவ நாயனார். இது உடலில் உண்டாகும் நோய்க்கு மட்டும் அல்லாமல்உள்ளத்தில் உண்டாகும் நோய்க்கும் பொருந்துவது. காமம் முதலாகிய குற்றங்களால்உயிருக்குத் துன்பம் உண்டாகின்றது. துன்பத்தைத் துடைப்பதை விடதுன்பத்திற்குக் காரணமானதை அழித்து ஒழிப்பது சிறந்தது. 

 

     எனவேஅப்பர் பெருமான்காமம் என்னும் கொடியநோயை உண்டாக்குகின்ற காதன்மை என்று சொல்லப்படுகின்ற ஆசாபாசங்களை ஒழிக்கவில்லை என்றார். "ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்ஆசை விடவிட ஆனந்தம் ஆமே" என்பது திருமந்திரம். ஆசையால் உண்டான துன்பத்தைஅதற்கு அடிப்படையான பற்றை அடியோடு ஒழிக்கவேண்டும். பற்றை நம்மால் அறத் துறக்கமுடியாது. அதற்கு ஒரு பற்றுக்கோடு வேண்டும். "பற்றுக பற்று அற்றான் பற்றினைஅப் பற்றைப் பற்றுக பற்று விடற்கு" என்றார் திருவள்ளுவ நாயனார். உலகப் பற்றை ஒழிப்பதற்குஅருட்பற்று உண்டாகவேண்டும். 

 

பெற்றி பிறர்க்கு அரிய பெம்மான் பெருந்துறையான்

கொற்றக் குதிரையின்மேல் வந்தருளி,தன்னடியார்

குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச்

சுற்றிய சுற்றத் தொடர்வு அறுப்பான் தொல்புகழே

பற்றிஇப் பாசத்தைப் பற்று அறநாம் பற்றுவான்

பற்றிய பேரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய்.

 

என்று திருவள்ளுவ நாயனார் காட்டியதைத் திருவாசகத்திலும் காட்டினார் மணிவாசகப் பெருமான்.

 

       இறைவன் மீது பற்று வைத்தால்,உலகப் பற்றுகள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும். நாம் விடமுடியாமல் தவிக்கின்விடவேண்டிய பற்றுக்களை அறுக்கத் துணை புரிவது இறையருள். எனவேநம்மைச் சுற்றி உள்ள,"சுற்றத் தொடர்வு அறுப்பான் தொல்புகழே பற்றி இப் பாசத்தைப் பற்று அறநாம் பற்றுவான் பற்றிய பேரானந்தம்"என்றார். ‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு’ என்ற திருவள்ளுவ நாயனார் வாக்கையும் காண்க. பாசம் அற்ற பின்பு இறைவனிடத்திலிருந்து நீங்காது இருக்கச் செய்வது,அவனது திருவடி இன்பம் என்பதால் ‘நாம் பற்றுவான் பற்றிய பேரானந்தம்’ என்றார். இதனால்பாசப்பற்று அற்றவர்க்கே இறைவன் இன்பம் உண்டாகும் என்பது கூறப்பட்டது.     

     பாசப்பற்று அற்றுஉலகியல் துன்பங்களில் இருந்து நீங்கிஇறைவனைப் பற்றி நின்றுஆனந்தமாக வாழஊனக்கணை விழிப்போடு வைத்து இருந்து வழிபடுவதோடுஉள்ளக் கண்ணையும் விழிப்பு நிலையில் வைத்து இருக்கப் பழகிக் கொள்வதே "சிவராத்திரி" வழிபாடு ஆகும்.   

No comments:

Post a Comment

கச்சித் திரு அகவல்

பட்டினத்து அடிகளார் அருளிய கச்சித் திரு அகவல் திருச்சிற்றம்பலம் ----- திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து ...