யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி

 

உண்ணும்போது ஒரு கைப்பிடி

-----

 

     மனிதர்களில் காது இல்லாத செவிடர்கள் இருக்கலாம்கண் இல்லாத குருடர்கள் இருக்கலாம்.பேச வாய் இல்லாத ஊமைகள் இருக்கலாம். பிற உறுப்புகள் குறைபாடு உடையவராக இருந்தாலும்எல்லோருக்கும்வயிறு உண்டு. உணவுக்கு வழி இல்லை என்றாலும்,வயிறு சும்மா இராது. அது என்றும் துராத குழி ஆகும். பசி எடுக்கும் போது எல்லாம் ஏதாவது கொடுத்துஅந்தக் குழியைத் தூர்த்துக் கொண்டே இருக்கவேண்டும்.

 

     மனித சமுதாயத்தில் எல்லாரும் செல்வராக இருக்க முடியாதுஎல்லாரும் கற்றவராக இருக்க முடியாது. எல்லோரும் ஞானிகளாக இருக்க முடியாது. ஆனால்வயிறு எல்லோருக்கும் இருப்பதால்,எல்லோரும் சாப்பிடுகிறவர்களாக இருக்கிறார்கள். உலகத்தில் பிறந்தவர்கள் யாரும் வயிற்றை நிரப்புவதில் சோம்பல் காட்டுவது இல்லை. பிச்சை எடுத்தாவது உண்கிறார்கள். பெரிய தவமுனிவர்களும் சிலகாலம் உண்ணாமல்விரதம் இருக்கலாம். அவருக்கும் பசி எடுக்கும். சோறு வேண்டி இருக்கும். இதைக் காட்ட"துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றையவர்கள் தவம்"  என்னும் திருக்குறளை அருளிச் செய்தார் நாயனார். இல்லறத்தான் இல்லறத்தை மேற்கொள்வது தன்னுடைய சுகத்திற்காக மட்டும் அல்ல. வயிறு என்பது துறவிகளுக்கும் இருப்பதால்,அவர்களுக்கு வேண்டிய உணவைக் கொடுத்து அவர்களையும் காப்பாற்ற வேண்டும். அவர்களுக்குச் சோறு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தால்தான் இல்லறத்தார் தவத்தை மேற்கொள்ளாமல் இருக்கிறார்களோஎன்று திருவள்ளுவர் கேட்கிறார். 

 

     குழந்தைகளையும்ஏழை உறவினர்களையும் எப்படி இல்லறத்தான் உணவு கொடுத்துக் காப்பாற்றுகிறானோ,அப்படியே கவலை இல்லாத துறவிகளைபற்றை விட்டுப் பரமனின் தியானத்தில் எப்போதும் ஈடுபட்டிருக்கும் ஞானிகளைஅவன் காப்பாற்றக் கடமைப்பட்டிருக்கிறான். தன்னுடைய வயிற்றைப் போலவே துறவிகளுடைய வயிற்றையும் நிரப்பும் காரியத்தை அவன் செய்து வரவேண்டும். அப்போதுதான் துறவியின் துறவறம் ஒழுங்காக நடக்கும். துறவிகள் நன்றாக வாழ்ந்தால் உலகம் ஒழுங்காக வாழும் என்று பழங்காலத்தில் நினைத்தே துறவிகளைக் காப்பாற்றினார்கள்துறவிக்குப் பணம் தேவையில்லை. மற்ற சுகங்கள் தேவை இல்லை. ஆனால்ஒரு வேளை உணவாவது தேவை. இறைவனை நினைப்பதற்கு எனக்கு நேரமே இல்லாமல்ஒய்வு ஒழிவு இல்லாமல் இயந்திரமாக வேலை செய்து கொண்டிருப்பவனும் கூட வயிற்றுக்குச் சோறு இடுவதற்கு நேரத்தை ஒதுக்கியே ஆகவேண்டும். 

 

     மனிதன் வாழ்வது அவன் முயற்சிக்குள் அடங்கவில்லைஆனால் வயிற்றுப் பசிக்கு உண்பதுஅவன் முயற்சியினால் உண்டாகிறது. நியாயமான முறையில் பொருள் தேடி உண்ணுகின்றான். அல்லது திருடியாவது உண்ணுகின்றான். பிச்சை எடுக்கின்றான். உணவு இல்லையானால்உடம்பு நிலைத்து இராது. உயிர் போன பின்னர்சோற்றுப் பிண்டமான இந்த உடம்பைஎவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் சுடுகாட்டுக்குக் கொண்டுபோய் புதைத்து விடுகின்றார்கள். அல்லது எரித்து விடுகின்றார்கள். அதைக் கொளுத்துகிற வரைக்கும் யாரும் சாப்பிடுவது இல்லை. கொள்ளி வைத்து விட்டுநீருள் மூழ்கிய உடனே இலையில்தான் உட்காருகின்றார்கள். 

 

     பலகாலமாகப் பலப்பல சுவையுள்ள பண்டங்களைப் போட்டு வளர்த்த உடம்பு இறுதியில் வறட்டிச் சாம்பல்விறகுச் சாம்பலோடு கூடச் சாம்பலாகி விடுகிறது. இந்த சாம்பல் நிறைய மலைபோல் இருக்குமா? என்றால்,  "ஒருபிடி சாம்பலும் காணாத மாய உடம்பு இது" என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

     இந்த உடம்பு நமக்கு உரியதுதான். உடம்பைக் கொண்டுதான் வாழ வேண்டும். ஆற்றல் உடையவன் அதை நன்றாக வைத்துக் கொள்வான். உடம்புக்குள் உயிர் இருக்கிறது. உடம்பை விட்டு எளிதில் உயிர் வெளிப்படுவதற்கு விரும்பவில்லை. ஆயினும் வெளிப்படாமல் இருப்பதற்குரிய ஆற்றல் அதற்குக் கிடையாது. உயிரை வெளியே விடாது கட்டி வைத்திருக்கும் ஆற்றல் உடம்புக்கும் இல்லை. உடம்பு வளர்த்துக் கொண்டு இருப்பவனுக்கும் இல்லை.  உயிர் போன பிறகு இந்த உடம்பினால் பயன் இல்லை.  பிராணிகளின் மாமிசத்தை உண்ணுகின்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் மனித உடம்பின் மாமிசத்தை யாரும் உண்பதில்லை. புலாலை உண்ணுகின்ற புலையனும் கூட விரும்பாத புன்புலால் யாக்கை இது. அதனால்தான் இறந்து விட்டால்இந்த உடம்பைப் புதைத்து விடுகின்றார்கள். அது மக்கி மண்ணோடு மண்ணாகின்றது. அல்லது எரித்து விடுகிறார்கள். எரித்துவிட்ட பிறகு ஒரு பிடி சாம்பலும் கூட இந்த உடம்பில் இருந்து கிடைப்பது இல்லை. 

 

     "ஒரு பிடி சாம்பரும் காணாது மாய உடம்பு இதுவே" என்றார் அருணகிரிநாதப் பெருமான். சாதாரண மனிதர்களின் உடம்புதான் ஒரு பிடி சாம்பரும் காணாது பெரிய அரசர்கள்பெரும் செல்வந்தர்கள்பெரிய பதவிகளில் இருந்து ஆடம்பரமான உணவுகளை உண்டுசுகபோகங்களை அனுபவித்துஉம்பை வளர்த்தவர்களுக்கு மலை அளவு சாம்பல் கிடைக்குமாஎன்றால்,

 

"முடிசார்ந்த மன்னரும்,மற்றும் உள்ளோரும் முடிவில் ஒரு

பிடி சாம்பராய் வெந்து மண்ணவதும் கண்டு,பின்னும் இந்தப்

படிசார்ந்த வாழ்வை நினைப்பது அல்லால்,பொன்னின் அம்பலவர்

அடிசார்ந்து நாம் உய்யவேண்டும் என்றே அறிவார் இல்லையே"

 

என்கின்றார் பட்டினத்து அடிகளார்.

 

     பட்டினத்தார்தமது பூர்வத்தில் பெரும் செல்வத்தில் திளைத்து இருந்தவர். அரசனும் கண்டு வியக்கும் செல்வ வாழ்வை வாழ்ந்தவர். அவருக்கு ஞானம் உண்டானது. இப்படிச் சொன்னார்.  அவர் சொன்னதை மக்கள் நாளும் கண்டுகொண்டுதான்கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள். கண்டும்கேட்டும் கூடமக்களுக்கு ஞானம் உண்டாகிறதா?என்றால் இல்லை.  மேலும் மேலும் வாழ்க்கையின் சுகத்தை அதிகப்படுத்திக் கொள்ளவே நினைக்கிறார்கள். பட்டினத்தார் சொன்னபடிபொன்னம்பலத்தில் நடமிடுகிற பெருமானுடைய தூக்கிய திருவடியைச் சார்ந்து உய்வு பெறவேண்டும் என்று நினைக்கிறவர்கள் பெரும்பாலும் இல்லை. இதனால்தான் இவ்வாறு வருந்திப் பாடினார் அடிகளார். 

 

     இந்த உடம்பு முடிவில் அழிந்துபோய் ஒரு பிடி சாம்பரும் இல்லாமல்மண்ணோடு மண்ணாகப் போகும் என்பதை நம்மில் யாரும் உணராதவர்கள் அல்லஅறியாதவர்களும் அல்ல. இந்த அறிவு இருப்பதனால்உடம்போடு வாழும் காலத்திலேயே ஒரு நற்செயலைச் செய்யலாம் என்று ஒரு வழியைக் காட்டுகின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

     இறைவன் திருவருளைப் பெறவேண்டுமானால் உண்ணாதேஉறங்காதே. பட்டினி கிடக்க வேண்டும் என்று யாரும் சொல்லுவதில்லை. "யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி" என்றார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார். எனவேவயிறார உண்ணலாம். உண்பதற்கு வேண்டிய பொருளை மிகுதியாகத் தேடலாம். ஆனால்உண்பதற்கு முன்னர் செய்யவேண்டிய காரியம் ஒன்று உள்ளது. எல்லோருக்கும் "உண்பது நாழிஉடுப்பது நான்கு முழம்". உண்பதும் உடுப்பதும் இல்லாமல் யாரும் வாழமுடியாது. உண்பதற்கு வழி இல்லாமல் ஒருவன் பிறக்கின்றான் என்றால்அது அவன் வேண்டும் என்றேஇப்பிறவியில் தேடிக் கொண்டது இல்லை. முற்பிறப்பில் செய்த வினையின் பயன் இவ்வாறு வந்து விளைகின்றது என்றே நமது முன்னோர் காட்டினார்கள்.

 

"மண்ணார் சட்டி கரத்து ஏந்தி

     மறநாய் கௌவும் காலினராய்

அண்ணாந்து ஏங்கி இருப்பாரை 

     அறிந்தோம்அறிந்தோம்அம்மம்மா!

பண்ணார் மொழியார் பால் அடிசில்

     பைம்பொன் கலத்தில் பரிந்து ஊட்ட

உண்ணா நின்ற போது ஒருவர்க்கு 

     உதவா மாந்தர் இவர்தாமே!"         --- விவேக சிந்தாமணி.

 

இதன் பொருள் ---

 

      களிமண்ணால் செய்யப்பட்ட பிச்சைப் பாத்திரத்தைக் கையில் எடுத்துக் கொண்டுகோபம் பொருந்திய தெரு நாய்கள் குரைத்துக் கொண்டு வந்து கடிப்பதற்குப் பாய்கின்ற கால்களை உடையவர்களாய்வீதிகள் தோறும் சென்றுதலையினை உயர்த்திப் பார்த்துபசியினால் வாடியாராவது தமக்கு ஏதாவது தருவார்களா என்று ஏக்கத்தோடுஇரந்து நிற்போரை இன்னார் என யாம் அடையாளம் கண்டு கொண்டோம்கண்டு கொண்டோம். அம்மஅம்மா!இவர் யார் என்றால்முற்பிறவியில் இசை ததும்பும்படியான இனிமை தரும் சொற்களைப் பேசுகின்ற தமது மனைவியர்பால் சோற்றை பசுமையான பொன்னால் ஆன கலத்தில் வைத்து அன்போடு தமக்கு ஊட்டஉண்டுகொண்டு இருந்த காலத்தில்முன் சொன்னது போல பிச்சை கேட்டு வந்த ஒருவருக்கும், (தாம் உண்ணுகின்ற சோற்றில் ஒரு பிடியேனும் கொடுத்து) உதவாத மனிதர் தான் இவர்.

 

      எவ்வளவு அருமையான பாடல்!!! மனிதனாகப் பிறந்தால் அவன் ஆறறிவு உடையவனாக இருக்கவேண்டும். ஆறாவது அறிவு மன அறிவு அல்லது உயிர் அறிவு ஆகும். உயிர் அறிவு உள்ளவன் என்றால்பிற உயிர் படும் துன்பத்தைக் கண்டு பொறுத்திருக்க மாட்டான். அப்படிப்பட்ட அறிவு இல்லாத போதுஒருவன் செல்வத்தில் மிதந்து கொண்டு இருப்பதோடு,  

நூல்களைக் கற்று இருந்தாலும் பயனில்லை.  

 

       "அறிவினால் ஆவது உண்டோபிறிதின் நோய் தன் நோய் போற்றாக் கடை" என்றார் திருவள்ளுவ நாயனார். ஒருவனது துன்பத்தைத் தனது துன்பமாக எண்ணும் மனம் இல்லையானால்எத்தனை நூல்களைப் படித்து எவ்வளவுதான் அறிவைப் பெற்றிருந்தாலும் அவற்றால் பயன் ஒன்றும் இல்லை.

 

       பசி என்பது எல்லா உயிர்க்கும் பொதுவானது. நோய்களோடு ஆண்டுக் கணக்கில் போராடி உயிர் வாழலாம். பசி என்னும் தீய நோயோடு சில மணி நேரமும் போராட முடியாது. பசி நோயை அறியாதவர் யாரும் இல்லை. பிறர் பசியால் துன்புறுவதைக்  கண்ணால் பார்த்தும்உள்ளம் பதைத்துஉதவ வேண்டும் என்ற எண்ணம் வராவிட்டால்ஒருவன்  படைத்த செல்வத்தால் என்ன பயன்அவன் கற்ற நூல்களின் அறிவால் என்ன பயன்"நீடிய பசியால் வருந்துகின்றோர் என் நேர் உறக் கண்டு உள்ளம் பதைத்தேன்" என்றார் வள்ளல்பெருமான்.

 

            பசியினால் துன்பப் படுவோருக்கு தன்னால் முடிந்த உதவியைச் செய்து வாழ்வதேஇந்த உடம்பைக் கொண்டு,  உயிரானது பெறுகின்ற பயன் ஆகும். பசித்தோர்க்குச் செய்யும் உதவிஅவரது பசியைத் தணிப்பதே ஆகும். காரணம் பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்.

 

"அற்றார் அழிபசி தீர்த்தல்அஃது ஒருவன்

பெற்றான் பொருள் வைப்புழி.          

 

என்றார் திருவள்ளுவ நாயனார். செல்வத்தை நிரம்பப் படைத்தவன்அதனைச் சேமித்து வைக்கும் இடமே பசித்தவர் வயிறுதான்.

 

      யாராய் இருந்தாலும்தாம் உண்ணுகின்ற வெந்த சோற்றில் ஒரு கைப் பிடியாவது பசித்தவர்க்குக் கொடுத்து உதவ வேண்டும். "யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி" என்றார் திருமூல நாயனார். "பிடி சோறு கொண்டு இட்டு உண்டு இருவினையோம் இறந்தால்ஒரு பிடி சாம்பரும் காணாதுமாய உடம்பு இதுவே" என்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

      இன்று பிச்சை எடுப்பவர் யார் என்றால்முற்பிறவியில் பசித்தவர்க்குதாம் உண்ணுகின்ற அன்னத்தில் ஒரு பிடியாவது கொடுத்து உதவாதவர் தான். எனில்இன்று பசித்தோர்க்கு அன்னமிடாதவர் மறுபிறவியில்பிச்சை எடுக்கவேண்டி வரும் என்பது சொல்லாமலே விளங்கும்.

 

      மாடமாளிகைபொன் பொருள் எல்லாவற்றிலும் மிதந்து கொண்டு இருப்பர். ஒன்றும் இல்லாத வறுமையில் உள்ளவர்அதுவும் தவத்தைப் புரிபவர் ஒருவர்பசிக்கு உணவு என்று தமது வாயிலில் வந்து நின்று, "ஐயாபசிக்கிறது. சிறிது அன்னம் படையும்" என்று கேட்டவுடன்மிகவும் தாராளமாக "மேல் வீட்டில் போய்க் கேள்,கீழ் வீட்டில் போய்க் கேள்" என்று கூறி அவனை விரட்டி அடிப்பர். தனக்கு உண்டான பசியைப் பொறுக்கமாட்டாமல், "ஐயா! எல்லா இடங்களிலும் கேட்டேன்ஒன்றும் கிடைக்கவில்லை. பசி மிகவும் வாட்டுகிறது. ஏதாவது கொடுங்கள்" என்று கூறி சிறிது படி ஏறிவீட்டிற்குள் நுழைய முயலுமுன்அவனது எதிரில் முடுகிப் போய்நாய்போல் சீறி விழுந்து விரட்டி அடிப்பர். ஆனால்வீணாக வாழ்நாளைக் கழித்து விணாகப் போகின்றவருடைய சொல்லை வேதவாக்காக எடுத்துக் கொள்வர். இவர்கள் படைத்துள்ள செல்வம் எல்லாம் ஒருநாளில் வற்றிப் போய்விடும் என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

"வெறுமிடியன் ஒருதவசி அமுதுபடை எனும் அளவில்,

            மேலை வீடுகேள்கீழை வீடுகேள்,

திடுதிடு எனநுழைவதன்முன்,   எதிர்முடுகி,  அவர்களொடு

            சீறிஞாளிபோல் ஏறி வீழ்வதாய்,

விரகினொடு வருபொருள்கள் சுவறிஇட,  மொழியும் ஒரு 

             வீணியார் சொ(ல்)லே மேலது ஆயிடா ---  விதிதனை நினையாதே"

                                                                                                              --- திருப்புகழ்.

 

          பொருள் உள்ளபோதே பொருளற்ற ஏழைகளுக்குக் கொடாதவர்கள்தாம் நேர்மையற்ற வழியில் தேடிய செல்வத்தை மண்ணில் புதைத்து ஒளித்து வைத்திருந்த போதுஅப்பொருளைத் திருடர்களிடம் பறிகொடுத்து விட்டுதிகைத்துஉடல் மெலிந்துமனம் வாட்டமுற்றுதுக்கப்பட்டு தம் வாழ்நாளை வீணாக அழிப்பவர்களே இவர் ஆவர் என்றும் பாடுகின்றார்அருணையடிகள் கந்தர் அலங்காரத்தில்.

 

"வேடிச்சி கொங்கை விரும்பும் குமரனை மெய் அன்பினால்

பாடிக் கசிந்துஉள்ளபோதே கொடாதவர்பாதகத்தால்

தேடிப் புதைத்துத் திருட்டில் கொடுத்துத் திகைத்து இளைத்து

வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே".

 

       "செருப்பாலே அடிப்பவர்க்குவிருப்பாலே கோடி செம்பொன் சேவித்து இடுவர்"என்று இந்தக் கயவர்களை அடையாளம் காட்டுகின்றது "விவேக சிந்தாமணி" என்னும் நூல்.

 

        இனிஇப்போது பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளானவர் யார் என்று பட்டினத்தடிகள் காட்டுகின்றார்.

 

"ஆற்றோடு தும்பை அணிந்து ஆடும் அம்பலவாணர் தமைப்

போற்றாதவர்க்கு அடையாளம் உண்டே இந்தப் பூதலத்தில்,

சோற்றாவி அற்றுசுகம் அற்றுசுற்றத் துணியும் அற்றே,

ஏற்றாலும் பிச்சை கிடையாமல் ஏக்கற்று இருப்பர்களே"

 

இதன் பொருள் ---

 

       கங்கை நதியுடன் தும்பை மலரையும் தரித்துஆனந்தத் திருநடனம் புரிகின்ற அம்பலவாணப் பெருமானைத் துதிக்காதவர்க்கு இந்த உலகத்தில் அடையாளம் உண்டு. (அது என்னவென்றால்)இந்தப் பூமியில் சோற்று வாசனை ஒழிந்துசுகம் ஒழிந்துஅரையில் உடுத்துக் கொள்ள ஆடையும் இல்லாமல்,  யாசித்தாலும் பிச்சை கிடைக்காமல் ஏக்கத்தோடு இருப்பார்கள்.

 

       ஒன்றுக்குப் பத்தாகக் கிடைக்கவேண்டும் என்று இறைவனை நினைந்து பொருளை ஈட்டுங்கள். அது நல்வழியில் வரும் பொருளாக இருக்கும். இறைவனை நினைந்துஉண்ணுங்கள்ஈட்டுவதும்வயிறார உண்ணுவதும் எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை. இறையருள் இருக்கவேண்டும். இந்த இரண்டுக்கும் இடையில் ஒன்று உள்ளது. இவையெல்லாம் இறையருளால் வாய்த்தது என்று எண்ணுங்கள்.

 

"பிறக்கும் பொழுது கொடுவந்தது இல்லை;பிறந்துமண்மேல்

இறக்கும் பொழுது கொடு போவது இல்லை;இடை நடுவில்

குறிக்கும் இச் செல்வம் சிவன் தந்தது என்று கொடுக்க அறியாது

இறக்கும் குலாமருக்கு என் சொல்லுவேன் கச்சி ஏகம்பனே!"

 

என்று அறிவுறுத்துகின்றார் பட்டினத்து அடிகளார்.

 

     ஈட்டுவதற்கும் உண்பதற்கும் இடையில்,இறைவனை நினைந்து கொடுக்கவும் கொடுங்கள். கொடுக்கவேண்டியதன் அவசியத்தை உணர்ந்துஈட்டிய பொருளைக் கொண்டு அறத்தைச் செய்துபோகின்ற வழிக்குத் துணையாக அருளைத் தேடிக் கொள்ளாது இறந்து போகாதீர்கள்.

 

     ஒருமூட்டை அரிசி வாங்கிப் போடுகிறோம். "உடம்பின் நிலையாமையை உணராது வாங்கிப் போட்டேன் என்று நினைக்கலாமாநாம் உயிரோடு இருந்தால் உண்ணப் போகின்றோம்.  இல்லாவிட்டால் இன்னொருவன் உண்ணப் போகின்றான். உடம்புக்குள் உயிர் தங்கும்படியாகச் செய்தவன் இறைவன். உண்ண வாயும்கேட்கக் காதும்சுவைக்க நாவும் தந்தவன் அவன். தொழில் செய்யக் கைகளைக் கொடுத்து இருக்கிறான். கண்களுக்குள் விழி கொடுத்து அவற்றை இமையாக இருந்து காப்பாற்றுகிறான். மூச்சுக் காற்றாக இருந்து காப்பாற்றுகிறான். தங்குவதற்கு மண்ணாகபருகும் நீராக,உயிர்க்கக் காற்றாக இருப்பவன் அவன்தான். தொழில் செய்ய அறிவாக இருப்பவனும் அவனே. இந்த நிலைஇறைவன் அருளால் நாம் வாழ்கின்றோம்.தொழில்படுகின்றோம்பொருளை ஈட்டுகின்றோம்இல்லாதவர்க்குக் கொடுக்கிறோம்உயிர்களுக்கு உதவினால்அந்த உதவி இறைவனைச் சாரும் என்கின்றார் திருமூல நாயனார்.

 

     அருணகிரிநாதப் பெருமான் நமக்கு அருளிய உபதேசம் ஒன்று உண்டு. அது மிகவும் அற்புதமான உபதேசம். பின்பற்றுவதற்கு எளிமையான உபதேசம். "முருகா! என்று சொல்லிக் கொண்டு நாளும் இரு. அதற்காக உண்ணாமல் இருக்கவேண்டாம். உண்ணுகின்ற சோற்றில் ஒருபிடியை பசித்து வந்தவர்க்கு இட்டுஅதன்பிறகு நீ உண்டு மகிழ். இது போதும். இதுவேஒரு பிடி சாம்பலும் கூடக் காணாமல் அழிந்து போகக் கூடிய இந்த உடம்பை எடுத்து வந்ததன் பயன் ஆகும்" என்கின்றார் நமது அருட்குருநாதர் ஆகிய அருணை வள்ளலார்.

 

"பொரு பிடியும் களிறும் விளையாடும் புனச்சிறுமான்

தரு பிடி காவல! சண்முகவா! எனச் சாற்றி நித்தம்

இருபிடிசோறு கொண்டு இட்டுஉண்டு,இருவினையோம்  இறந்தால்

ஒருபிடி சாம்பரும் காணாது மாய உடம்பு இதுவே"--- கந்தர் அலங்காரம்.

 

     "இருவினை நீண்ட காயம்ஒருபிடி சாம்பல் ஆகி விடலாமோ?" என்று ஒரு திருப்புகழில் வினவுகின்றார் அடிகளார். பிறவிகள் தோறும் ஈட்டிய நல்வினை என்னும் புண்ணியம்தீவினை என்னும் பாவம் ஆகிய இருவினைகளின் பயனாக இந்த உடம்பானது இறைவனால் படைத்தளிக்கப்படுகின்றது. இருவினைகளை அனுபவித்துக் கழித்துமேலும் வினைகள் சாராமல் வாழ்ந்துஇறைவன் திருவடியைச் சார்வதற்காக வந்த இந்த அருமையான உடம்பு நிலையில்லாதது. மாற்றத்திற்கு உரியது. "வேற்று விகார விடக்கு உடம்பு" என்றார் மணிவாசகப் பெருமான். பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆனது. 

 

.    "நீ சம்பாதித்த பொருளைப் பிறருக்குக் கொடுத்துவிடு" என்று சொன்னால்அது உபதேசம் ஆகாது. உலகம் அந்த உபதேசத்தை ஏற்காது. "தனக்கு மிஞ்சித் தான தருமம்என்று வழங்கப்படுகின்ற பழமொழியைச் சொல்லி, "எனக்குப் போக மிஞ்சினால் அல்லவா உனக்குக் கொடுக்க"என்று சொல்லி இரப்பவரை விரட்டுகின்றார்கள். "தலைக்கு மிஞ்சிப் போய்விட்டான்"என்றால், "என்னைக் காட்டிலும் அவன் உயர்ந்துவிட்டான்என்று பொருள். தனக்கு மிஞ்சித் தான தருமம் என்றால்தன்னைக் காட்டிலும் உயர்வாக இருப்பது தான தருமம் என்று கொள்ள வேண்டும். ஒரு பிடி சோறுதான் இருக்கிறது. நமக்குப் பசிக்கிறதுஅப்போது வேறு ஒருவன் வந்து கேட்கிறான் என்றால்அவனுக்கு அதைக் கொடுத்துவிட வேண்டும். தன்னையும் மிஞ்சியது தருமம். 

 

     பாண்டி நாட்டின் பெருமையைப் பேச வந்த பரஞ்சோதி முனிவர்பின்வருமாறு திருவிளையாடல் புராணத்தில் கூறுகின்றார்...

 

வெம்மையால் விளைவு அஃகினும்,வேந்தர்கோல் கோடிச்

செம்மை மாறினும்,வறுமைநோய் சிதைப்பினும்,சிவன்பால்

பொய்ம்மை மாறிய பத்தியும்பொலிவும் குன்றாவாத்

தம்மை மாறியும் புரிவது தருமம் அந் நாடு.

 

இதன் பொருள் ---

 

     மழை வறந்து கோடை மிகுந்ததால் விளைவு குன்றினாலும்அரசர் செங்கோல் திறம்பிநடுவுநிலைமை மாறிகொடுங்கோல் மிகுந்தாலும்வறுமைப் பிணி வந்து வறுத்தினாலும்சிவபரம்பொருளினிடத்தில் வைத்த உண்மையான பத்தியில் நின்றுசைவ வளமும் குன்றாத நிலையில்தங்களை விற்றாவது அறத்தைச் செய்து வரும் மக்களைக் கொண்டது பாண்டி நாடு.

 

     "இரந்தோர்க்கு எந்நாளும் காலம் பகராதார் காழிந் நகர்தானே" என்று சீகாழியில் வாழ்ந்திருந்த சிவனடியார்களைப் பற்றிக் கூறுகின்றார் திருஞானசம்பந்தர். இரந்து வந்தவர்க்கு, "நாளை வா" என்று காலம் சொல்லாமல்உள்ளதைக் கொடுத்து மகிழ்ந்தவர்கள் சிவனடியார்கள்.

 

"விலங்கல்அமர் புயல்மறந்து மீன்சனிபுக்கு

     ஊன்சலிக்கும் காலத்தானும்

கலங்கல்இலா மனப்பெரு வண்கை உடைய

     மெய்யர்வாழ் கழுமலமே".

 

என்று அடியார்கள் அறம் புரியும் சிறப்பைக் கூறுகின்றார் திருஞானசம்பந்தர். "மலைகள் மீது தங்கி மழை பொழியும் மேகங்கள் மழை பொழிவதை மறத்தற்கு உரியதான மகரராசியில் சனி புகுந்துஉணவு கிடைக்காமல் மக்கள் உடல் இளைக்கும் பஞ்ச காலத்திலும் மனம் கலங்காது பெரிய வள்ளன்மையோடு மக்களைக் காக்கும் உண்மையாளர் வாழும் கழுமலம்" என்று, தான் அவதரித்த திருத்தலத்தில் வாழும் அடியார்களின் பெருமையைக் கூறுகின்றார்.

 

     இந்த உடம்பு இறைவன் கருணையால் வந்தது. செம்மையாக உடம்பில் பொருந்தி உள்ள கருவி கரணங்கள் இறைவன் கருணையால் வந்தவை. இந்த உலகமும்,உலகத்துப் பொருள்களும் நமக்காக இறைவனால் படைக்கப்பட்டவை. இறைவன் செய்த நன்றியை மறவாமல்எல்லா உயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுதல் வேண்டும். பசியோடு வந்தவர்க்கு நம்மிடம்உண்பதற்குத் தயாராக உள்ள சோற்றில் ஒருபிடியைக் கொடுத்து உதவவேண்டும். இது எல்லோராலும் செய்யக் கூடிய தருமம் என்றார் அருணை வள்ளலார். இதையே இரத்தினச் சுருக்கமாக, "யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்படி" என்றார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார்.

 

No comments:

Post a Comment

கச்சித் திரு அகவல்

பட்டினத்து அடிகளார் அருளிய கச்சித் திரு அகவல் திருச்சிற்றம்பலம் ----- திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து ...